இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 நவம்பர், 2012

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை!


இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது எனக் கூறுவோர் அதற்குச் சான்றாக,
 • ஆண்கள் பல பெண்களை மணந்து கொள்ளலாம்; பெண்கள் அவ்வாறு மணந்து கொள்ளக் கூடாது;
 • மனைவியைப் பிடிக்காத கணவன் தலாக்' கூறி அவளை விலக்கி விடலாம்;
 • தலாக்' கூறும் உரிமை பெண்களுக்கு இல்லை;
 • விவாகரத்துச் செய்யப்படும் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க இஸ்லாம் மறுக்கிறது;
 • ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் என இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் கூறுகிறது;
 • பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆண்களை விட அதிகப்படியான உடைகளை அணிய வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது;
 • இரண்டு பெண்கள் சாட்சியம் கூறுவது ஒரு ஆணுடைய சாட்சியத்துக்குச் சமமானது என்று இஸ்லாம் கூறுகிறது;
 • அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் தாராளமாக அனுமதி வழங்கியுள்ளது
என்று குற்றம் சாட்டுகின்றனர். 

இந்தக் குற்றச் சாட்டுக்கள் ஏற்கக் கூடியவை தாமா? என்பதைத் தனித்தனியாக ஆய்வு செய்வதற்கு முன்னால் இக்குற்றச்சாட்டுக்கள் எழுவதற்கான காரணம் என்ன என்பதையும் அக்காரணம் சரியானது தானா என்பதையும் ஆராய வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமமா? 'ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்' என்ற தத்துவத்திற்கு எதிராக இச்சட்டங்கள் அமைந்துள்ளன என்று கருதுவதே இந்தக் குற்றச் சாட்டுக்களுக்கு அடிப்படைக் காரணமாகும். சில விஷயங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியான சட்டங்கள் இருப்பது இதனால் தான் சிலருக்கு ஆச்சரியத்தைஏற்படுத்துகின்றது. இதன் காரணமாகவே இரு பாலருக்கும் சட்டங்களில் எந்த விதமான வித்தியாசமும் இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கின்றனர்.

முதலில் இந்தத் தத்துவம் அறிவுக்கு ஏற்புடையது தானா? என்பதை ஆராய்வோம்.
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்' என்ற சித்தாந்தத்தை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த வாதம் கேட்க இனிமையாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தாததால் இதனை இஸ்லாம் அடியோடு நிராகரிக்கின்றது.

ஆண் வேறு! பெண் வேறு! இரு பாலரின் உடற்கூறுகளும், அவர்களின் இயல்புகளும், குண நலன்களும் வேறு வேறு!

இப்படி வேறுபட்டிருப்பதால் தான் ஆண், ஆணாகவும் பெண், பெண்ணாகவும் இருக்க முடிகின்றது.

எந்தெந்த அம்சங்களில் ஆணும், பெண்ணும் உண்மையிலேயே சம நிலையில் இருக்கின்றார்களோ அந்த அம்சங்களில் அவ்விருவரையும் இஸ்லாம் சமமாகவே கருதுகிறது. அந்த அம்சங்களில் ஒரே விதமான சட்டங்களையே இருவருக்கும் இஸ்லாம் விதிக்கின்றது.
 
எந்தெந்த அம்சங்களில் ஆணும், பெண்ணும் சமமாக இல்லையோ, இருக்க முடியாதோ அந்த அம்சங்களில் இருவரையும் இஸ்லாம் சமமாகப் பாவிப்பதில்லை.

பெண்களிடம் இல்லாத சிறப்புத் தகுதி ஆண்களுக்கு மட்டும் இருந்தால் அந்த வகையில் ஆண்கள் உயர்ந்து விடுகிறார்கள். ஆண்களிடம் இல்லாத சிறப்புத் தகுதி பெண்களிடம் இருந்தால் அந்த வகையில் பெண்கள் சிறந்து விடுகிறார்கள். இப்படித் தான் இஸ்லாம் கருதுகிறது.

ஆண்களின் உடற்கூறுகளைக் கவனித்து அவர்களுக்குச் சில சலுகைகளையும், கடமைகளையும் ஏற்படுத்திய இஸ்லாம், பெண்களின் உடற்கூறுகளைக் கவனித்து அவர்களுக்கு வேறு விதமான கடமைகளையும்,சலுகைகளையும் வழங்குகின்றது.

இரு பாலரும் எல்லா வகையிலும் சமமாக இல்லை என்பது சராசரி மனிதனுக்கும் பளிச்சென்று தெரிகின்றது. எனவே இரு பாலரும் முழுக்க முழுக்கச் சமமானவர்கள் என்று கூறுவது தவறாகும். போலித் தனமான இந்த வாதத்தை இஸ்லாம் அங்கீகரிக்க மறுக்கின்றது.

ஒரு பெண்ணுக்கு 15 வயதில் ஒரு புதல்வனும் ஒரு வயதிற்குட்பட்ட ஒரு புதல்வனும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இரு புதல்வர்களும் அவளது பிள்ளைகள் தாம். இரு பிள்ளைகளையும் குறிப்பிட்ட காலம் வரை அவள் தான் கருவறையில் சுமந்தாள். அவளது பிள்ளைகள் என்ற முறையில் இருவருமே அவளுக்குச்சமமானவர்கள் தாம்.

அதே நேரத்தில் மூத்த புதல்வனுக்கு அந்தப் பெண் கடினமான உணவுகளை வழங்குகிறாள். அவன் விரும்பும் நல்ல உணவுகளை எல்லாம் கொடுக்க மறுப்பதில்லை. ஒரு வயதுக்கு உட்பட்ட மகனுக்கும் அதே உணவை வழங்க மாட்டாள். அப்படி வழங்கினால் அவள் தாயாக இருக்கத் தகுதியற்றவள் ஆகிறாள். மாறாக எளிதில் ஜீரணமாகும் உணவை மட்டுமே அவனுக்கு வழங்குகிறாள். மூத்தவனுக்கு வழங்கிய அதே உணவை இளையவனுக்கு வழங்காததால் அவள் பாரபட்சமாக நடந்து விட்டாள் என்று எவரும் கூற மாட்டார்கள்.

இந்தச் சமயத்தில் இளையவனை விட மூத்தவனுக்கு அதிகச் சலுகை காட்டி விட்டதாக எவரும் கூற மாட்டார்கள்.

இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம். ஒரு வயதுக்குட்பட்ட பையனுக்கும், பதினைந்து வயதுப் பையனுக்கும் ஒரே நேரத்தில் பசிக்கிறது. சிறியவனின் பசியைத் தீர்ப்பதற்கே அந்தத் தாய் முதலிடம் தருவாள். அதன் பின்பே மூத்தவனைக் கவனிப்பாள்.

இந்தச் சமயத்தில் மூத்தவனை விட இளையவனுக்கு அதிகச் சலுகை காட்டி விட்டதாக எவரும் கூற மாட்டார்கள்.

இரண்டு புதல்வர்களின் ஜீரண சக்தியிலும், பசியைத் தாங்கும் சக்தியிலும் வித்தியாசம் இருப்பதால் அந்தத் தாய் இருவரையும் வித்தியாசமாக நடத்துவதை நமது அறிவு ஏற்றுக் கொள்கிறது.

இரண்டு புதல்வர்களுக்கும் உடல் அமைப்பில் உள்ள வித்தியாசத்தை விட ஆணுக்கும், பெண்ணுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. ஜீரண சக்தியில் உள்ள வித்தியாசம், நாளடைவில் மறைந்து விடும் தன்மை வாய்ந்தது. ஆண், பெண் உடல் அமைப்பில் உள்ள வித்தியாசங்கள் நிரந்தரமானவை; காலப் போக்கில் மாறாதவை.

எனவே, நிரந்தரமான வித்தியாசங்களின் அடிப்படையில் சில விஷயங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித் தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பது பாரபட்சமாகாது.
ஒரு மனிதனுக்கு அவனது தாயும், தந்தையும் சமமானவர்களா என்றால் ஒருக்காலும் சமமாக மாட்டார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

'நான் அதிகம் கடமைப்பட்டிருப்பது யாருக்கு?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தாயாருக்கு' என்றார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்டார்.அப்போதும் 'தாயாருக்கு' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்ட போதும் அதே பதிலையே கூறினார்கள். 'அடுத்தது யார்?' என்று அவர் மீண்டும் கேட்ட போது 'தந்தைக்கு'என்றார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5971.

தாயாருக்கு அடுத்த இடத்தில் கூட தந்தை இல்லை என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களின் சிறப்பை உயர்த்திக் கூறுகிறார்கள்.

எல்லா வகையிலும் ஆண்கள் தான் சிறந்தவர்கள் என்பது இஸ்லாத்தின் நிலையாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.

ஆண்களை உயர்த்தும் இடத்தில் தக்க காரணம் கொண்டே இஸ்லாம் அவர்களை உயர்த்துகிறது. பெண்களை உயர்த்தும் இடத்தில் தக்க காரணம் கொண்டே அவர்களை உயர்த்துகிறது. 
 • எல்லா வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களுமல்லர்.
 •  எல்லா வகையிலும் பெண்கள் தாழ்ந்தவர்களுமல்லர்.
 • எல்லா வகையிலும் இருவரும் சமமானவர்களும் அல்லர்.
காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவராக இருக்கிறார் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. இது தான் அறிவுப்பூர்வமான நிலைப்பாடு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
நன்றி: பிஜே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக