இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 மே, 2013

தன்னம்பிக்கை ஊட்டப்படாத பிள்ளைகள்!



இது தற்கொலைகளின் சீசன்!
கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகளை வளர்க்க படாதபாடு படுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னேறவேண்டும் என்பதற்காக கடன் வாங்கியாவது பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைக் கட்டி  அவர்களைப் படிக்க வைக்கிறார்கள். ஆனால் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது .... இடிபோன்ற நிகழ்வுகள்! ... யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்? அதுவரை வளர்த்த ஆசைகளில் எதிர்பார்ப்புகளில் மண்ணை வாரிப்போட்டது போன்று பிள்ளைகளின் தற்கொலைகள்! .... என்ன காரணம்? .... சிலருக்கு தேர்வில் தோல்வியால் அவமானம், சிலருக்கு வகுப்பில் மற்ற மாணவனைவிட மதிப்பெண் குறைந்ததால் அவமானம்! சிலருக்கு ஒரு பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைந்ததால் அவமானம்! ... இப்படி பல காரணங்கள்! வாழ்வென்றால் அவ்வளவுதானா? அவ்வளவு அலட்சியம்!! அவ்வளவு காலம் இராப்பகலாக படித்ததும் பாடுபட்டதும் இந்த ஒரு முடிவிற்காகவா?

பிள்ளைகளுக்கும் சரி, பெற்றோருக்கும் சரி, ஏன் வாழ்கிறோம் எதற்காக வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லை. அதை அறிய அவர்கள் முற்பட்டதும் இல்லை. கல்விக்கூடங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் அதுபற்றிய கவலைகள் சிறிதும் இல்லை! ... தங்கள் வருமானம் பாதிக்கப் படாதவரை.... தங்கள் ஆட்சிக் கட்டில் ஆட்டம் காணாதவரை ... அவர்கள் கவலைப்படப் போவதும் இல்லை!

உங்கள் பிள்ளைகள் அல்லது வேண்டியவர்களுக்கு இது போன்றவை நேராமல் இருக்கவேண்டுமானால் வாருங்கள் இதைத் தொடர்ந்து படியுங்கள். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் இறைவன் அனுப்பிய இறுதி வேதம் திருக்குர்ஆன் மற்றும் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுக்களை ஆதாரமாகக்கொண்டு சொல்லப்படுபவை. இவற்றை அனைத்து மதத்தைச் சார்ந்த அன்பர்களும் தங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்த கையாளலாம். இவற்றுக்குப் பகரமான மாற்றுத் திட்டம் கைவசம் இல்லாத பட்சத்தில் தங்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்ட நாத்திகர்களும் இன்ன பிற கொள்கைவாதிகளும் இதைப் பற்றி ஆராயலாம்!

கல்வி கற்பிப்பதோடு நாம் அடிப்படையாக இவ்வுலகைப் பற்றிய உண்மைகளையும் குழந்தைகளுக்கு உரிய பருவத்தில் உணர்த்தவேண்டும். தவறினால் மேற்கூறப்பட்ட விளைவுகள் ஏற்படுவது இயல்பே!
= மனித வாழ்வின் உண்மை நிலை
மனித வாழ்வு இன்பம், துன்பம் என்ற இரு பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இரு பகுதிகளும் மாறி மாறி வருவது பிரபஞ்ச விதியும் கூட. மனிதன் இயல்பிலேயே இன்பத்தை விரும்புகிறான். துன்பம் கஷ்டம் பிரச்சினைகளை வெறுக்கிறான். எனினும் பிரபஞ்ச விதிக்கு அவன் உட்பட்டே வாழவேண்டியிருக்கிறது.
இன்று வாழும் வாழ்வு மட்டுமே வாழ்வு, இதுதான் எல்லாமே, இதற்குப் பிறகு ஒன்றும் இல்லை மனித வாழ்க்கைக்குப் பின்னால் எந்த நோக்கமும் இல்லை என்ற குறுகிய மனப்பான்மையில் வாழ்வோருக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிவு இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் பிரச்சினைகளும் துன்பங்களும் தன்னை சூழ்ந்து கொள்கின்றபோது மனமுடைந்து போகிறார்கள். தற்கொலைகளில் தஞ்சம் புகுகிறார்கள்.

ஆனால் இன்று நாம் வாழும் பூமி என்பது பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு துகள் போன்றது. இதன்மேல் ஒரு உயர்ந்த நோக்கத்துக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று விரிவாக சிந்திப்பவர்கள் இறைவன் கூறும் உண்மைகளைக் கண்டறிகிறார்கள். சோதனைகளும் துன்பங்களும் இவ்வாழ்வின் இன்றியமையாத பகுதிகளே என்பதை உணர்கிறார்கள் அதனால் தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்கிறார்கள்.

= வாழ்வது எதற்காக?
இவ்விஷயத்தில் பலரும் பல கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் பலவாறு ஊகித்தாலும் இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உண்மை, மற்றவை அனைத்தும் ஊகங்களே! அவன் கூறுவது என்னவென்றால், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு புதிய வாழ்வின் துவக்கமே என்பதே! தக்க காரணத்துடனேயே அன்றி இவ்வுலகைப் படைக்கவில்லை என்கிறான் இறைவன்.
 நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?”  (திருக்குர்ஆன் 23:115) 

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)
அதாவது மறுமை என்ற முடிவில்லாத வாழ்க்கையில் நமது இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு பரீட்சைக் கூடமே இந்த தற்காலிக இவ்வுலகம் என்பதை நாம் முதன்மையாக அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாழ்வில் இறைவன் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிகூறும் முகமாக அவனுக்குக் கீழ்படிகிறோமா இல்லையா என்பதே இங்கு பரீட்சிக்கப்படுகின்றது. இப்பரீட்சையில் கீழ்படிபவர்களுக்குப் பரிசாக சொர்க்கமும் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தோருக்கு நரகமும் மறுமை வாழ்வில் வழங்கப்பட உள்ளன. இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்பட்டு பிறகு அனைத்து மனிதர்களும் இறுதித் தீர்ப்புநாள் அன்று மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவர். அன்று முதல்தான் நமது நிரந்தர வாழ்வு ஆரம்பமாகிறது. பாவிகளுக்கு நரகவாழ்வும்  புண்ணியவான்களுக்கு சொர்க்க வாழ்வும் ஆரம்பிக்க உள்ளன.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
இந்த தற்காலிக உலகம் என்பது ஒரு பரீட்சைக் கூடம் என்பதால் இங்கு இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும், சோதனைகள் இங்கு சகஜமே என்று கூறுகிறான் இறைவன்:
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
ஆம், இங்கு சந்திக்கும் சோதனைகளுக்குப் பகரமாக இறைவனிடம் வெகுமதி காத்திருக்கிறது என்ற உணர்வும் பொறுமை மீறி இறைவன் தடுத்த காரியங்களில் ஈடுபாட்டால் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற உணர்வும் மனித மனங்களில் விதைக்கப்பட்டால் அந்த மனங்கள் தோல்விகளைக் கண்டோ துன்ப துயரங்களைக் கண்டோ சோர்ந்து போவதும் இல்லை, தற்கொலை போன்ற இறைவன் தடுத்த வழிகளை நாடுவதும் இல்லை. மாறாக இந்தப் பரீட்சையை முடித்துக்கொண்டு நம் இறைவனிடம் திரும்ப இருக்கிறோம் என்ற உணர்வில் அவற்றை பொறுமையோடு எதிர்கொள்வார்கள். தன்னம்பிக்கையோடு வாழ்வைத் தொடர்வார்கள்.
2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரியவர்கள்;  நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.
2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள்.
இவ்வுலக இன்பங்களைவிட பன்மடங்கு மதிப்புள்ள சொர்க்கச் சோலைகளும் பூங்காவனங்களும் தெவிட்டாத உணவும் பானங்களும் தேனாறும் பாலாறும் அங்கே காத்திருக்கின்றன. பிணியும் மூப்பும் சோர்வும் இல்லாத இளமை வாய்ந்த உடலோடும் நல்லோரின் சகவாசத்தொடும் அமைதி மாறா சூழலோடும் அனுபவிக்க இருக்கின்ற சொர்கத்து இன்பங்கள் ஏராளம் ஏராளம்! இவையெல்லாம் வெறும் கற்பனைகள் அல்ல, மாறாக இவற்றை பகுத்தறிவு பூர்வமாக எடுத்துரைத்து நம்பிக்கை ஊட்டுகிறது இறைவனின் திருமறை.
மறுமையில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு மனிதன் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப் படுவான் எனும் உண்மையை மறுப்போரைப் பார்த்து இறைவன் திருக்குர்ஆனில் பின்வருமாறு கேட்கிறான்:
46:33. வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
மீணடும் நாம் விசாரணைக்காக எழுப்பபடுவோம் எனபதை நம்பாதவர்களைப் பார்த்து இறைவன் கேட்கிறான்:
36:77-82.. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான். அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்
 “முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக!. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.
 வானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.
 ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.


இறுதியாக, தற்கொலை பற்றி இறைவன் என சொல்கிறான்?
உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் !  (அல்குர்ஆன் 2:195)
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!- (குர்ஆன் 4:29)     
"ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்து கொண்டவர் (மறுமையில்) தீசூழ் நரகிலும் தமது கையில் அந்தக் கூராயுதத்தை வைத்துக் கொண்டு, அதனால் தமது வயிற்றில் தாமே என்றென்றும் முடிவின்றிக் குத்திக் கொண்டே இருப்பார். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகிலும் என்றென்றும் முடிவின்றி விஷத்தைக் குடித்துக் கொண்டேயிருப்பார். மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகில் (மீண்டும் மீண்டும்) தள்ளப் பட்டு, மேலும் கீழும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புஹாரி

இஸ்லாம் என்றால் என்ன?

திங்கள், 6 மே, 2013

ஏன் விமர்சிக்கிறார்கள் இந்த மாமனிதரை?


பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்டு இன்று அதர்மவாதிகளும் ஆதிக்கசக்திகளும் பயப்படுகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி வாழும் இடைத்தரகர்களும் போலி ஆன்மீகவாதிகளும் அமைதி இழக்கிறார்கள். வல்லரசுகள் வலிமையை இழக்கின்றன. உலக சரித்திரம் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டு வருகிறது.

அவர் போதித்த அறிவார்ந்த கொள்கையின் தாக்கம் உலகெங்கும் பரவப் பரவ அதன் காரணமாக இந்த மண்ணில் தங்களுக்கு பறிபோன மனித உரிமைகளைக் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். அதுகாறும் தங்களை மதத்தின் பெயராலும் மூடநம்பிக்கைகளின் பெயராலும் வீண்சடங்குகளின் பெயராலும் பிணைத்து வைத்திருந்த  அடிமைத்தளைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஆதிக்க சக்திகளின் அநியாயங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இப்புரட்சியின் விளைவாக தங்கள் ஆதிக்கம் பறிபோவதை உணரும் சுயநல சக்திகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்வது என்று வழியறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை பாமரர்களையும் உலகத்தின் நலிந்த நாடுகளின் செல்வங்களையும் கொள்ளை அடித்துக்கொண்டு சுகம் கண்டிருந்த இந்தக் சுயநலக் கூட்டத்தால் இந்தப் பேரிடியைத் தாங்கிக் கொள்ள முடியுமா?
அப்படி என்னதான் போதித்தார் இம்மாமனிதர்? அதை சற்று அறிவோம் வாருங்கள்:
அவர் போதித்த கொள்கை அல்லது கோட்பாட்டின் பெயர்தான் இஸ்லாம் என்பது. இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இக்கோட்பாடு முன்வைக்கும் தத்துவம் ஆகும்.
அதாவது இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது. எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச் செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம் அல்லது அதர்மம் என்பது. யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிராரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (தமிழில் கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.
 இது அனைவருக்கும் பொதுவான ஓர் கொள்கை!
.இக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும் அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கோட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இன்று இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்யப்பட்டது.
தலைசிறந்த வாழ்க்கை இலட்சியம்
  யாரெல்லாம் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதாவது நன்மைகளைச் செய்து தீமைகளில் இருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்கள் மறுமை வாழ்வில்  சொர்க்கத்தை அடைகிறார்கள். யார் இறைவனையும் அவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டையும் உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் நரகத்தை அடைகிறார்கள்.
சுயமரியாதை இயக்கம்
 இக்கோட்பாட்டின் முக்கியமான அடிப்படை என்னவென்றால் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன். அவனால்லாத எவரையும் அவர்கள்  மிகப்பெரிய மனிதர்கள் ஆனாலும் சரி, அரசர்கள் ஆனாலும் சரி, ஆன்மீகத் தலைவர்கள் அனாலும் சரி அவர்களைக் கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. இறந்துபோன மனிதர்களின் சமாதிகளையோ அல்லது உருவச்சிலைகளையோ கற்களையோ மரங்களையோ மனிதன் வணங்கக் கூடாது. இறைவனை நேரடியாக எந்த இடைத் தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கவேண்டும்.
மனிதகுல ஒற்றுமையும் சகோதரத்துவமும்
   இக்கோட்பாட்டின் இன்னொரு அடிப்படை மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியாவர்களே. மனிதர்கள் அனைவரும் - அவர்கள் எந்த மதத்தவர் ஆனாலும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனாலும், எந்த மொழியைப் பேசினாலும், எந்த நிறத்தவர் ஆனாலும் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே. எனவே அனைவரும் சமமே! அவர்களுக்கிடையே நாடு, இனம், மொழி, குலம், ஜாதி போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கக் கூடாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் உயர முடியும் என்கிறது இஸ்லாம்.
நன்மையை எவுதலும் தீமையைத் தடுப்பதும்
இக்கொட்பாட்டின்படி இதனை ஏற்றுக்கொண்டவர்கள் இவ்வுலகில் இறைநம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்மையை செய்யவும் ஏவவும் வேண்டும் தீமைகளிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும், தீமைகளைக் கண்டால் எவ்வாறு இயலுமோ அவ்வாறெல்லாம் தடுக்கவும் வேண்டும்.
இப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏன் இஸ்லாம் என்ற இக்கொள்கை எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்றும் ஏன் இந்த மாமனிதரை இவர்கள் கடுமையாக அவதூறுகள் கூறி விமர்சிக்கிறார்கள் என்றும்!
 = தர்மம் பரவும்போது அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டு வயிறு வளர்ப்பவர்கள் வெகுண்டெழுகிறார்கள். விபச்சாரம், கொலை, கொள்ளை, வட்டி, இலஞ்சம், ஊழல் பேர்வழிகளுக்கு தங்கள் தொழிலைத் தொடர்வதற்கு இது இடையூறாகிறது.
= இறைவனை நேரடியாக அணுக முடியும் என்று மக்கள் உணரும்போது இடைத்தரகர்களை அது அமைதி இழக்கச் செய்கிறது! மூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக் கொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்காது!
= நிறத்தின் இனத்தின் மொழியின் ஜாதியின் மேன்மைகளைக் கூறி மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து வாழ்வோருக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்க வாய்ப்பில்லை.
=  மனிதனை இக்கொள்கை சுயமரியாதை உணர்வோடு வாழத் தூண்டுவதால் அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.
இவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு இக்கொள்கை வயிற்றில் புளியைக்  கரைத்து வருகிறது. எனவேதான் அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். நாடெங்கும் உலகெங்கும் தங்களால் எப்படியெல்லாம் தரக்குறைவாக விமர்சிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் விமர்சிக்கிறார்கள்
ஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.'
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – இறைவனுக்கு இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.) (அல்-குர்ஆன் 9:32,33)
இந்த இறைவாக்குகள் சந்தேகத்திற்கு இடமின்றி புலர்ந்தது வருவதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம்.
அந்த இறைத்தூதரிடம் பாடம் பயின்றவர்கள் பூமியில் வாழும் வரை அதர்மவாதிகளால் மக்களை ஏய்த்துப் பிழைக்க முடியாது, தங்கள் சுயநல சுரண்டல் திட்டங்களை செயல்படுத்த முடியாது. அந்த உத்தமர் அன்று கற்றுக் கொடுத்த கல்வி தலைமுறை தலைமுறையாகத் தன் விழிப்புணர்வுப் பணியைத் தொடருமானால் சகிக்க முடியுமா இவர்களால்? காலம்காலமாக இவர்களால் வழிகேடுக்கப் பட்ட மக்கள் இவரது உபதேசத்தைக் கேட்டபின் சத்தியத்தை உணர்ந்து இவர்களைக் கைவிட்டுவிட்டால் எவ்வளவு நாள்தான் பொறுத்துக் கொள்ள முடியும்
இந்த உயர்ந்த போதனைகள் தங்களின் ஆதிக்கத்தில் உள்ள மக்களை வந்தடைந்தால் நம்மையும் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற பயம் இவர்களை வெகுவாக கவ்விக்கொண்டுள்ளது. எனவே தங்களிடம் எஞ்சியுள்ள ஆதிக்க பலத்தினால இந்தப் புரட்சியை எப்படித் தடுப்பது என்று இரவுபகலாக யோசிக்கிறார்கள். சதித்திட்டங்கள் தீட்டுகிறார்கள். அவற்றின் வெளிப்பாடுதான் இன்று நாம் காணும் நபிகளாரைப் பற்றிய இழிவான விமர்சனங்களும் தவறான சித்தரிப்புகளும்!
 நபிகளார் கொண்டுவந்த இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்திற்கும் உறுதியான சித்தாந்தத்திற்கும் ஒரு மாற்று இருந்தால் அதை முன்வைத்து வாதாடி இந்த மக்களை தடுத்திடலாம். அவ்வாறு ஒரு மாற்றுத் திட்டம் எதுவும் தங்கள் கைவசம் இல்லாத நிலையில் இவர்களிடம் உள்ள ஒரே ஆயுதம் இதுதான்! கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள திராணியற்றவர்களிடம் உள்ள ஒரே குறுக்கு வழி வசைபாடுவதும் கேலி செய்வதும் அவதூறு கூறுவதும்தான்!
உலகெங்கும் கோடானுகோடி மக்கள் முன்மாதிரியாகப் பின்பற்றும் அளவுக்கு அப்பழுக்கற்ற வாழ்வு வாழ்ந்த அவரை காமவெறியன் என்றும் அயோக்கியன் என்றும்  வாய்கூசாமல் வசை பாடுகிறார்கள். அவரை ஆபாசத் திரைப்படம் மூலமும் கார்டூன்கள் மூலமும் சித்தரித்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இணையதளம், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, இன்னபிற ஊடகங்கள் மூலமாகவும் எப்படியெல்லாம் அவரை தவறாக இட்டுக்கட்டி சித்தரிக்க முடியமோ அவ்வாறெல்லாம் சித்தரித்தும் இவர்களின் வெறி அடங்குவதில்லை!
ஆனால் இவர்களின் இந்த சதித்திட்டங்கள் மக்களிடம் எடுபடுவதில்லை என்பதையே உலகம் நமக்குப் பாடமாக போதிக்கிறது. இந்த மாமனிதர் மறைந்து நூற்றாண்டுகள் பதினான்கு கடந்து விட்டன. இவர் போதித்த மார்க்கத்தின் வளர்ச்சி என்றும் எறுமுகத்தையே கண்டு வருகிறது, உலக மக்கள் தொகையின் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியை இன்றுவரை ஈர்த்துள்ளது எனும் உண்மையே அதற்கு சான்றாக நிற்கிறது! தொடர்ந்து இது உலகின் எந்த ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளுக்கும் அடங்காமல் அபரிமிதமான வேகத்தில் வளர்ந்து வருவதை நாம் கண்டுவருகிறோம். காரணம் இது இவ்வுலகின் உரிமையாளனும் பரிபாலகனும் ஆகிய இறைவனின் மார்க்கம்!
ஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள். அதைத்தான் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மலர்ந்து வரும் மாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
 ஆனால் அதேவேளையில் பரிகாச செயல்கள் கண்டு துவண்டு விடக்கூடாது, ஏனெனில் தர்மத்தை நிலைநாட்டும் போராட்டத்தில் இது வழமையானது. இப்பரீட்சையை ஏற்படுத்திய இறைவன் நபிகளாரைப் பார்த்து கூறுவதை கவனியுங்கள்:
நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். எனினும் அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி வடுகிறோம்.. (திருக்குர்ஆன் 15:10-12)