இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

வேட்பாளர் பெருமக்களின் கட்டாய கவனத்திற்கு...


 இந்த நாடு, நாட்டு மக்கள், நாட்டின் வளங்கள் இவற்றின் பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும் ஐந்து வருடங்களுக்கு பொறுப்பு ஏற்க உள்ளவர்கள் சில முக்கியமான விடயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. இறைவனையும் மறுமை வாழ்வையும் நம்புபவர்கள் என்ற அடிப்படையில் இவற்றை பகிர்ந்துக்கொள்ள விழைகிறோம். இவை பேணப்படும் பட்சம் இறைநம்பிக்கையாளர்களின் ஒத்துழைப்பும் பிரார்த்தனையும் மட்டுமல்ல இறைவனின் பொருத்தமும் ஆசியும் நீங்கள் பொறுப்பேற்கவுள்ள அரசுக்கு அமையும் என்றும் நம்புகிறோம்.

1) நாடும் அதில் உள்ளதும் இறைவனுடையதே!

நாட்டுக்கும் நாட்டு வளங்களுக்கும் மக்களுக்கும் உரிமையாளன் இறைவனே. இவ்வுலகில் காணப்படும் அனைத்துக்கும் சொந்தக்காரன் நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனே. ஆகவே நம் ஒவ்வொரு செயலுக்கும் அந்த இறைவனுக்கு நாம் பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வோடு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செயல்பட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும்.

=வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன். (திருக்குர்ஆன் 24:64)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

2) குடிமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு:

மனித குலம் அனைத்தும் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியிலிருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்ற அடிப்படையில் இங்கு வாழும் குடிமக்கள் யாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற அடிப்படையை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

= மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்  கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (திருக்குர்ஆன் 49: 13)

அவர்களின் மதம், நிறம், மொழி, பொருளாதார நிலை போன்றவை வேறுபட்டாலும் அவர்கள் யாவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்பதையும் அவர்கள் அனைவருக்கும் இந்நாட்டு வளங்களிலும் அரசு வழங்கும் வசதிகளிலும் நியாயமான உரிமைகள் உண்டு என்பதையும் மறக்கக்கூடாது. முக்கியமாக குடிமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். இதை சரிவர நிறைவேற்றா விட்டாலோ ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டாலோ அத்துமீறினாலோ அவற்றுக்கான தண்டனைகள் நிச்சயமாக இறைவனிடம் கிடைக்கும்.

3) ஏற்றுக்கொண்ட பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவீர்கள்!

ஆட்சிப்பொறுப்பு என்பது இறைவன் வழங்கும் அமானிதம் ஆகும். நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சொந்தமாக முன்வந்து இப்பொறுப்பை ஏற்க இருப்பதால் அதிகம் அதிகமாக இப்பொறுப்பு பற்றி இறைவனால் விசாரிக்கப்படுவீர்கள்.

= நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப் படுவார்..." (நபிமொழி நூல்: புகாரி )

4) பொது சொத்துக்கள் கையாளுதல்:

நாட்டு வளங்களும் அரசின் வருமானங்களும் மக்களின் பொதுச் சொத்தாக இருக்கும் நிலையில் இவற்றை முறையாக கையாண்டால்  கண்டிப்பாக அதற்கான நற்கூலி இறைவனிடம் உண்டு. மாறாக சுயநலத்துக்கு ஆட்பட்டு இவை வீண்விரையமோ அபகரிப்போ செய்யப்படுமானால் மோசடி செய்யப்பட்ட அந்த பொருட்கள் சகிதம் இறைவனின் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி) என்று கூறப்படும்.

(அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள் நூல் : புகாரி)

============= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

கரு வளர்ச்சிப்பற்றி அல் குர்ஆன்

கரு வளர்ச்சிப்பற்றி அல் குர்ஆன்கி.பி.15 ம் நூற்றாண்டு வரை “மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைகிறது” என்பதைப் பற்றி எவரும் பேசவோ நிரூபிக்கவோ இல்லை, திருக்குர்ஆனைத் தவிர!

கனடா நாட்டில் இருக்கும்Torontoநகரில் வாழும் மிகப்புகழ் பெற்ற கரு வளர்ச்சி நிபுணர்Dr.Keith L.Mooreஎன்பவர் நயாகரா நீர் வீழ்ச்சி பகுதியில் நடை பெற்ற இஸ்லாமிய மருத்துவர் சபையின் 18 வது ஆண்டு கூட்டதில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர் மனிதக் கரு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய புனித திருக்குர்ஆனின் வசனங்களை விளக்கினார்.

‘திருமறை நெடுகிலும் மனித வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தைப் பற்றிய வசனங்கள் காணக்கிடக்கின்றன” என அப்போது குறிப்பிட்டார். சமீபகாலமாக திருமறையின் ஒரு சில திரு வசனங்களின் பொருள் முழுமையாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றார். அவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களையும், அவர் தரும் விஞ்ஞான விளக்கங்கள் வியக்க வைக்கிறன.

‘உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்! அவனுக்கே ஆட்சி அதிகாரம் (முழுதும் உரித்தாகும்) அவனைத் தவிர வேறு நாயன் இல்லை! அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படித் திருப்பப்படுவீர்கள்?’ (அல்குர்ஆன் 39: 6)

கருப்பயில் உள்ள சிசுவைப் பற்றிய முதல் படம் கி.பி.15 ம் நூற்றாண்டில் வாழ்ந்தLeonardo da vinchiஎன்ற இத்தாலியரால் வரையப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தGalenஎன்பவர் தன்னுடைய “கரு உருவாக்குதல்” என்ற நூலிலும் (Placenta),கருவை மூடியிருக்கும் மெல்லிய சவ்வைப்பற்றியும், விளக்கியிருந்தார். “மனிதக்கரு கருப்பையில் வளர்ந்தது என்பது பற்றி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர்கள் அறிந்திருந்தனர்” என்பதர்கான சாத்தியக்கூறே கிடையாது. (ஏழாம் நூற்றாண்டில் தான் குர்ஆன் அருளப்பட்டது )

அப்படி இருக்கையில், குர்ஆன் இறங்கி மனிதக் கரு வளர்ச்சிப்பற்றி கூறக் கூடிய காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள் மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை அறிந்திருக்க சாத்தியமே இல்லை! இன்னும் சொல்லப்போனால் கி.பி.15 ம் நூற்றாண்டு வரை “மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைகிறது” என்பதைப் பற்றி எவரும் பேசவோ நிரூபிக்கவோ இல்லை!

கி.பி.16ம் நூற்றாண்டுக்குப்பிறகு Microscope கருவியை Leewenhook என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதான் கோழிக் கருவின் ஆரம்ப நிலைகள் பற்றிய விளக்கங்கள் கிடைக்க ஆரம்பித்தன . அப்போது கூட மனிதக் கரு வளர்ச்சி பற்றி எவரும் விளக்கிடவில்லை!

கி.பி.20ம் நூற்றாண்டில்Streeter(1941)என்பவரும் முதன் முதல் கரு நிலைகளைப் பற்றிய முறையான விளக்கத்தை தந்தனர். அதற்குமுன் எவரும் மனித கரு வளர்ச்சிப்பற்றிய முறையான விளக்கத்தை விளக்க இயலவில்லை! ஆனால் திருக்குர்ஆன் எழாம் நூற்றாண்டிலேயே மிகத் துல்லியமாக இந்த உண்மைகளை விளக்கி, இறை மறை என்பதற்கு சான்றாகத் நிகழ்கின்றது.

இப்போது மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்! ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்.” என்ற சொற்றொடரைக் கவனியுங்கள்! வயிற்றுச்சுவர் கருப்பையின் சுவர் கருவின் மீது போர்த்தி இருக்கும் மெல்லிய சவ்வு ஆகிய மூன்று இருள்களுக்குள் மனிதனை வைத்துப் படைத்ததை அல்லாஹ் அழகாக விளக்குகிறான்.

‘பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்தோம்! பின்னர் அந்த இந்திரியத் துளியை “அலக்” என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:13,14)

‘கலப்பான் இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைதோம். (அல்குர்ஆன் 76:2)

முதல் வசனத்தில் இந்திரியத்துளியிலிருந்து படைத்ததாகவும், இரண்டாம் வசனத்தில் கலப்பான இந்திரியத் துளியிலிருந்து படைத்ததாகவும் அல்லாஹ் கூறுகிறான். கலப்பான இந்திரியதுளி என்பதன் பொருளை பல நூற்றாண்டுகளுக்கு முன்வரை மனிதன் அறிந்த்திருக்கவில்லை .

ஆணுடைய இந்திரியத்துளி பெண்ணிடம் தயாராக உள்ள முட்டையுடன் கலந்து (zygote)என்ற கரு உருவாகுகின்றது. பின் அது பிரிந்து (Blastocyst)என்ற நுண்ணுயிராக மாறி கருப்பையில் விதைக்கப்படுகிறது என்பதை சமீப காலத்தில் தான் மனிதனால் கண்டுபிடிக்க முடிந்தது .இந்த பேருன்மையை திருக்குர்ஆன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக்கிவிட்டது.

மேற்கூறிய 23:14 வசனத்தில் “அலக்” என்ற இரண்டாம் நிலையை மனிதக்கரு அடைவதாகக் கூறப் படுகிறன்றது. அலக் என்ற சொல்லுக்கு இரத்தக்கட்டி என்றே கடந்த காலங்களில் பொருள் செய்யப் பட்டுள்ளது. அந்த வார்த்தைக்கு அப்படி ஒரு பொருள் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனாலும் மனிதக்கரு இரத்தக்கட்டி என்ற நிலையை அடைவதில்லை என்பது விஞ்ஞானிகளின் முடிவு. எனினும் அலக் என்ற சொல்லுக்கு வேறு பொருளும் உண்டு என்பதை மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் அலக் என்ற சொல் அட்டைப்பூச்சியையோ குறிக்கும். இந்த பொருள் இன்றைய விஞ்ஞான முடிவுக்கு ஒத்துவருமா என்று பார்போம் .

கலப்பான விந்துத் துளியாகிய கருப்பையில் நுழைந்த மனிதக்கரு அட்டைப்பூச்சி தோலின் மீது கடித்துக் கொண்டு தொங்குவதைப் போல் கருப்பையின் உட்சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். 7ல் இருந்து 24 நாட்கள் வரை வளர்ச்சி நிலையில் இருக்கும் மனிதக் கருவைக் குறிக்க இதைவிடச் சிறந்த வார்த்தை இருக்க முடியாது. அட்டைப்பூச்சி தனக்கு வேண்டிய ச்த்தை ஒட்டிக் கொண்டிருக்கும் பிராணியிலிருந்து எவ்வாறு உறிஞ்சிக் கொள்கிறதோ அவ்வாறே மனிதக் கருவும் தனக்கு, வேண்டிய சத்தை கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டு அங்கிருந்து உரிஞ்சிக் கொள்கிறது. மனிதக் கருவின் இரண்டாம் நிலயை அட்டைப் பூசிக்கு ஒப்பிட்டது மிகப் பொருத்தமே!

7ல் இருந்து 24 நாட்கள் வரை உள்ள மனிதக் கருவை கருவிகளின் உதவியால் பெரிதாக்கிப் பார்த்தால் அது ஒரு அட்டைப் பூச்சி வடிவத்திலிருப்பது ஆச்சிரியமானது. மைக்ரோஸ்கோப் போன்ற எந்தக் கருவிகளும் இல்லாத 7 ம் நூற்றாண்டில் மனிதக்கரு அட்டைப் பூச்சியைப் போலிருகிறது .

அதே 23:14 வசனம் “அலக்” என்ற நிலையிலிருந்து தசைக்கட்டியாக மாறுவதாகக் குறிப்பிடுகின்றது. அதில் தசைக்கட்டி என்பதைக் குறிக்க முழ்கத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லுக்கு “மெல்லப்பட்ட சதைத்துண்டு” என்பது பொருள். இப்போது இதுபற்றி விஞ்ஞானிகளின் முடிவைக் காண்போம்!

கரு உண்டாண நான்காவது மாத இறுதியில் கரு ஏறத்தாழ மெல்லப்பட்ட சதைத்துண்டைப் போல் தோற்றமளிக்கின்றது .தலைப் பகுதி, மார்பு,வயிறு, கால்கள் இவை எல்லாம் பிரிக்கப்பட்டு வளர்வதற்கு முன்னால் இவற்றின் சுவடு கருவில் உருவாக ஆரம்பிக்கும். முன்னால் இவற்றின் சுவடு கருவில் உருவாக ஆரம்பிக்கும். அந்த சுவடுகள் தான் பல்லால் சதைத் துண்டைத்மென்றால் ஏற்படும் பற்குறிகளைப் போன்ற தோற்றத்தை அந்தக் கருவிற்கு ஏற்படுத்தி விடுகின்றது .

கருவளர்ச்சியில் மூன்று அடுக்குகளாக உருப்புக்கள் உருவாகின்றன. (Ectoderm)என்ற மேல் அடுக்கிலிருந்து தோல் பகுதிகளும், நரம்பு மண்டலமும் மற்றும் தனிப்பட்ட உனர்வுகளை அறியக்கூடிய இன்ன பிற உறுப்புகளும், சுரப்பிகளும் உருவாகின்றன.(Endo derm)என்ற கீழ் அடுக்கில் இருந்து உட்புற செல், திசு அடுக்கு உண்டாகிறது. (Mesoderm)என்னும் மத்திய அடுக்கிலிருந்து தான் மென்மையான எலும்பு முதலில் உருவாக்கப்பட்டு அதன் மீது சதை போர்த்தப்படுகின்றது. எட்டாவது வாரத்தை பல்வேறு வளர்ச்சி மாற்றங்களையும், நிலைகளையும் கடந்து கரு, மற்ற பிராணிகளைப் போன்றிருக்கிறது. எட்டாவது வாரத்தை ஒட்டித்தான் அந்தக்கரு மனிதப் பண்புகளை அடைகின்றது. இந்தப் பேருண்மையை மேற்கூறிய திருவசனம் 23:14 எவ்வளவு தெளிவாக விளக்கி விடுகின்றது!

‘மனிதர்களே! இறுதித் தீர்ப்புக்காக் நீங்கள் மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தால் அறிந்துக் கொள்ளுங்கள்! நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு இரத்தக் கட்டியிலிருந்தும், பின்பு உருவாக்கப்பட்டதும் உருவாக்கப்படாததுமான சதைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்.’ (அல்குர்ஆன் 22:5)

இந்த வசனத்தில் (பகுதி)உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான சதைக்கட்டி என்று கூறப்படுகின்றது. இதன் பொருள் என்ன? இப்படி ஒரு நிலை கருவளர்ச்சியில் உண்டா என்று ஆராய்ந்தால் நாம் வியப்படையும் பேருண்மைதான் நமக்கு வெளிப்படுகின்றது.

பகுதி உருவான, பகுதி உருவாகாத என்பது, வித்தியாசப்படுத்த முடிகின்ற வித்தியாசப்படுத்த முடியாத திசுவைக்குறிக்கும். இந்த இரண்டு நிலைகளும் கருவளர்ச்சியில் இருப்பதை விஞ்ஞானம் தெளிவாக ஒப்புக் கொள்கிறது. மென்மையான எலும்புகளும், கெட்டியான எலும்புகளும் உர்வாக்கப்படும்போது பகுதி உருவான இணைப்புத் திசுக்களையும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பிறித்தரிய முடியாது.இன்னும் சிறிது காலம் சென்றபின் அவை தசைப்பகுதியாகவும், எலும்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும் நார் போன்ற இனைப்புத் தசையாகவும் பிரித்துவிடுகின்றது . இதைப் தான் 22:5 வசனம் தெளிவாகக் குறிப்பிடுன்றது.

கேட்கும், பார்க்கும், மற்றும் தொடு உணர்ச்சிகள், திருக்குர்ஆனின் 32:9 வசனத்தில் சொல்லப் பட்டிருக்கும் அதே வரிசைக்கிரமத்தில்தான் உருவாகின்றன என்பது அதைவிட ஆச்சரியமானதே! பகுத்து புரியச் செய்யும் மூளை உருவாவதற்கு முன்பு உள் செவி, மற்றும் கண்களின் ஆரம்பச் சுவடுகள் தோன்றுகின்றன.திருக்குர்ஆன் இந்த பேருண்மையைகளை ஜயத்த்திற்கிடமின்றி தெளிவாக்குகின்றன.

22:5 வசனத்தில் எந்தக்கருக்கள் கர்ப்பப் பையில் முழுமையான காலம் தங்கி இருக்கும் என்பதை இறைவன் ஒருவனே நிர்ணயிக்கிறான் என்ற கருத்தை இந்தத்திருவசனம் உணர்த்துகின்றது. அநேக கருக்கள் முதல் மாத வளர்ச்சியின் போதே சிதைந்து விடுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே! சுமார் 80% கருக்கள் தான் சிசுவாகி பிறக்கும் வரை உயிருடன் இருக்கின்றன.

ஏழாம் நூற்றாண்டில் மக்கள் பெற்றிருந்த மருத்துவ அறிவைக்கொண்டு மேற்குறிப்பிட்டுள்ள மனித வளர்ச்சி பற்றிய திருவசனங்களின் பொருளை முழுமையாக உணரமுடியாது. கருவளர்ச்சியைப் பற்றிய ஆழ்ந்த விளக்கம் நமக்கே கடந்த 50 ஆண்டுகளில் தான் அதுவும் மைக்ரோஸ்கோப் போன்ற பல விஞ்ஞான கண்டு பிடிப்புக்களுக்குப் பிறகுதான் கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் முன்பே எழாம் நூற்றாண்டிலேயே இந்த உண்மையைத் தெளிவாக விளக்கி குர்ஆன், இறைமறை என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது. 

“Jazaakallaahu khairan”-The Muslim World League Journal May-June 1987

H.F.Nagamia M.D

Pof: Thajudeen M.A in Tamil

மேலும் படியுங்கள்: 

நூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்? - மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர்h

ttps://www.facebook.com/100050161758499/posts/pfbid0QBhtv5vDJuECc4qSrp2Ji7pBFY4P3vQcbrHMAGGJJ98qJM6dvMDyTJTkgDwp6Liul/?app=fbl


பகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை!

ஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவும் பாடங்களும்
https://www.quranmalar.com/2018/03/blog-post.html

நாத்திகப் பேராசிரியருக்கு நேர்ந்தது என்ன?
https://www.quranmalar.com/2022/05/blog-post_22.html

அடிப்படையில்லா நாத்திகம் 
https://www.quranmalar.com/2022/07/blog-post_15.htmlவியாழன், 18 ஏப்ரல், 2024

இஸ்லாமிய வரலாற்றில் முதல் அறப்போர் (பத்ருப்போர்)

 (382) புனிதமான பத்ருப்போர்

**********************************************
அனஸ்(ரலி) அறிவித்தார். ஹாரிஸா இப்னு சுராகா(ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவரின் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வோன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் “ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றார்” என்று பதிலளித்தார்கள்.
ஷஹீஹ் புகாரி 2809
அபூ உஸைத்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது நாங்கள் குறைஷிகளுக்கெதிராகவும் குறைஷிகள் எங்களுக்கெதிராகவும் (போர் வியூகம் அமைத்து) அணிவகுத்து நின்றபோது நபி(ஸல்) அவர்கள், “(குறைஷிகள்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி .2900
. நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, “இறைவா! நான் உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகிறேன். இறைவா! உன்னுடைய நாட்டம் (முஸ்லிம்களாகிய) நாங்கள் தோற்றுப் போக வேண்டும் என்று) இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வணங்குவது நின்று போய் விடும். (மக்கள் கற்பனையான பொய்க் கடவுள்களையே வணங்கிக் கொண்டிருப்பார்கள்)” என்று (முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி) மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, “போதும், இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடி விட்டீர்கள்“ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள். பிறகு “இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; மேலும், இவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களின் (கணக்கைத் தீர்த்திட) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும்” என்னும் திருக்குர்ஆன் வசனத்தை (திருக்குர்ஆன் 54:45, 46) ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில், “பத்ருப் போரின் போது” என்னும் வாசகம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
ஷஹீஹ் புகாரி 2915
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூ ஜஹ்லும் குறைஷிகளில் சிலரும் (ஒட்டகத்தின் கருப்பைச் சவ்வுகளைக் கொண்டு வரும்படி) உத்தரவிட்டார்கள். அப்போது மக்காவின் ஒரு பகுதியில் ஒட்டகம் ஒன்று அறுக்கப்பட்டிருந்தது. (அதை எடுத்து வர அவர்கள்) ஆளனுப்பினார்கள். பின்னர், அதன் கருப்பைச் சவ்வை எடுத்து நபி(ஸல்) அவர்களின் (தோள்) மீது போட்டார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) வந்து, அதை நபி(ஸல்) அவர்களின் மீதிருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள், “இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். ஹாஷிமின் மகன் அபூ ஜஹ்லையும் உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உபை இப்னு கலஃப் மற்றும் உக்பா இப்னு அபீ முஐத் ஆகியோரையும் (நீ தண்டித்து விடு)” என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள். இவர்களை நான் (பின்னாளில்) பத்ரின் ஒரு பாழுங் கிணற்றில் கொல்லப்பட்டவர்களாக (எறியப்பட்டிருக்க)க் கண்டேன். அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரஹ்), “நபி(ஸல்) அவர்கள் கேடு நேரப் பிரார்த்தித்த ஏழாமவனின் பெயரை நான் மறந்து விட்டேன்” என்று கூறுகிறார்கள். அபூ இஸ்ஹாக்(ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், “அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா(ரஹ்), “உமய்யா அல்லது உபை“ என்று (ஐந்தாமவனின் பெயரை) சந்தேகத்துடன் குறிப்பிடுகிறார். ஆயினும், (அந்த ஐந்தாமவனின் பெயர்) “உமய்யா“ என்பதே சரியானதாகும்.
ஷஹீஹ் புகாரி 2934
அலீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் “நீங்கள் “ரவ்ளத்து காக்“ என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் “ரவ்ளா“ எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), “கடிதத்தை வெளியே எடு” என்று கூறினோம். அவள், “என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று கூறினாள். நாங்கள், “ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்” என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “ஹாத்திபே! என்ன இது?“ என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி), “இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்ட படி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். உமர்(ரலி), “இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், “இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, “நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்“ என்று கூறி விட்டிருக்கலாம்” என்றார்கள். ”என்ன (பலமான) அறிவிப்பாளர் தொடர் இது!” என்று இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரைக் கண்டு இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) (வியந்து) கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3007
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது போர்க் கைதிகள் (கைது செய்யப்பட்டுக்) கொண்டு வரப்பட்டனர். (அப்போது எதிரணியில் இருந்த நபி(ஸல்) அவர்களின் பெரியதந்தை) அப்பாஸ்(ரலி) அவர்களும் (கைதியாகக்) கொண்டு வரப்பட்டார்கள். அவரிடம் அணிவதற்கு ஆடை எதுவும் இல்லாதிருந்தது. நபி(ஸல்) அவர்கள் ஒரு சட்டையைத் தேடினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபையின் சட்டை அவர்களுக்கு அளவில் பொருத்தமாக அமைந்திருப்பதைக் கண்டார்கள். அதையே அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அணிவித்தார்கள். இதன் காரணத்தால் தான் அப்துல்லாஹ் இப்னு உபை (இறந்த பின்பு அவனு)க்கு நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையைக் கழற்றி அணிவித்தார்கள். ”அப்துல்லாஹ் இப்னு உபை, நபி(ஸல்) அவர்களுக்கு இந்த வகையில் ஓர் உபகாரம் செய்திருந்தான். நபி(ஸல்) அவர்கள் அதற்குப் பிரதியுபகாரம் செய்ய விரும்பினார்கள்” என்று அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.
ஷஹீஹ் புகாரி 3008
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 3026
அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவனுக்கு உணவளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3046
. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (புனிதப் போரிலிருந்து) திரும்பிச் செல்லும்போது மூன்று முறை “அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்“ என்று கூறிவிட்டு, “இறைவன் நாடினால் நாங்கள் பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும் வணக்கம் புரிபவர்களாகவும், (அவனைப்) புகழ்ந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்கே (நெற்றியை நிலத்தில் வைத்துச்) சிரம் பணிந்தவர்களாகவும் திரும்பிச் செல்கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிக் காட்டிவிட்டான்; தன் அடியாருக்கு உதவி புரிந்துவிட்டான்; தன்னந் தனியாக (அனைத்துக்) குலங்களையும் தோற்கடித்துவிட்டான்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3084
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பத்ருடைய தினத்தன்று (மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட தம் படையினரையும் மிகப்பெருந்தொகையினரான எதிரிகளையும் கண்ட) நபி(ஸல்) அவர்கள், “இறைவா! (மறுப்பாளர்களுக்கெதிராக எங்களுக்கு நீ வெற்றியளிப்பதாக நீ அளித்த) உன்னுடைய உறுதி மொழியையும், வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) கோருகிறேன். (இறைவா! இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இல்லாமல் போய்விடுவர்” என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக் கொண்டு, “போதும் (இறைத்தூதர் அவர்களே!)” என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தாம் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து)” அந்தப் படையினர் தோற்கடிக்கப்படுவர். அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவர்” என்று (திருக்குர்ஆன் 54:45-வது குர்ஆன் வசன வாசகத்தைக்) கூறிக் கொண்டே வெளியேறி வந்தார்கள்.
ஷஹீஹ் புகாரி 3953
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நானும் இப்னு உமர்(ரலி) அவர்களும் பத்ருப்போரின்போது சிறுவர்களாகக் கருதப்பட்டோம். பத்ருப்போரில் அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரண்டு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர்.
ஷஹீஹ் புகாரி 3956
3957. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரில் பங்கெடுத்த நபித்தோழர்கள் என்னிடம் கூறினார்கள்: தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்றவர்களான முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலான அவர்களின் தோழர்களின் எண்ணிக்கையில் நாங்கள் இருந்தோம். மேலும், பராஉ(ரலி) கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! தாலூத் அவர்களுடன் இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64.
(நபிகளார் காலத்துப்)போர்கள்
3959. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். ”முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ருப் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களின் தோழாகளின் எண்ணிக்கையேயாகும். இறை நம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் அவர்களுடன் ஆற்றைக் கடக்கவில்லை” என்று நாங்கள் பேசிக்கொள்வது வழக்கம்.
ஷஹீஹ் புகாரி 3959
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை நோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் போன்ற சிலருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் (நால்வரும்) சூரிய வெப்பத்தால் (உடல் உப்பி, நிறம் மாறி) உருமாறி (பத்ருப் போர்க்களத்தில்) மாண்டு கிடந்ததை கண்டேன். அன்றைய தினம் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது.
ஷஹீஹ் புகாரி 3960
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ”அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?“ என்று நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, “அபூ ஜஹ்ல் நீ தானே!” என்று கேட்டார்கள். ”நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?“ என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.
ஷஹீஹ் புகாரி 3962
அபூ தர்(ரலி) அறிவித்தார். குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா உபைதா இப்னு ஹாரிஸ்(ரலி) ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே “இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்” என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் அருளப்பட்டது.
ஷஹீஹ் புகாரி 3966
கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார். ”இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 22: 19, 20, 21) பத்ருப் போரின்போது (முன்னின்று போரிட்ட) ஆறு பேர்கள் குறித்து அருளப்பட்டன...” என்று அபூ தர்(ரலி) (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3968
. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) “அந்நஜ்ம்“ என்னும் (53-வது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) உடன் நபி(ஸல்) அவர்கள் “ஸஜ்தா“ செய்தார்கள். அங்கிருந்த ஒரு கிழவனைத் தவிர மற்ற அனைவரும் நபி(ஸல்) அவர்களுடன் “ஸஜ்தா“ செய்தனர். அவன் ஒரு கை மண்ணை அள்ளித் தன்னுடைய நெற்றிக்குக் கொண்டு சென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (ஸஜ்தாவைக் கேலி செய்து) சொன்னான். பிறகு, அந்த மனிதன் இறைமறுப்பாளனாகவே (பத்ரில்) கொல்லப்பட்டதை கண்டேன்.
ஷஹீஹ் புகாரி 3972
அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார். பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி(ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி(ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாள்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி(ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?“ என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர்(ரலி), “இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?“ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை” என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா(ரஹ்) கூறினார்கள்: அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி(ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான்.
ஷஹீஹ் புகாரி 3976
அபூ உஸைத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பத்ருப் போரின்போது எங்களிடம், “(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் - அதாவது அதிக எண்ணிக்கையில் உங்களை அவர்கள் சூழ்ந்து கொண்டால் - அம்பெய்யுங்கள். (எதிரிகளை அம்பு தாக்காது என்றிருப்பின், வீணாக்கிவிடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
புகாரி 3985
. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர். அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், “என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார். அப்போது நான், “என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்?“ என்று கேட்டேன். அதற்கு அவர், “அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொலை செய்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன்” என்றார். அப்போது மற்றொரு வரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலமாவரைப் போன்றே கூறினார். அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் “அஃப்ரா“வின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர்.
ஷஹீஹ் புகாரி 3988
நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, “உங்களிடையே பத்ருப்போரில் பங்கெடுத்தவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?“ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “(பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்” என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல்(அலை) அவர்கள், “இவ்வாறுதான் வானவர்களில் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான ரிஃபாஆ இப்னு ராஃபிஉ அஸ்ஸுரகீ(ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் இப்னு ரிஃபாஆ(ரஹ்) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 3992
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், “இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3995
ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார். பத்ருப்போரின்போது நான் உபைதா இப்னு ஸயீத் இப்னி ஆஸ் என்பவனைச் சந்தித்தேன். அவன் தன்னுடைய இரண்டு கண்களைத் தவிர வேறெதுவும் வெளியில் தெரியாத விதத்தில் தன் உடல் முழுவதையும் ஆயுதங்களால் மூடி மறைத்திருந்தான். அவன் “அபூ தாத்தில் கரிஷ்“ (மக்கள் பலம் மிக்கவன்) என்னும் குறிப்புப் பெயரால் அறியப்பட்டு வந்தான். (போர்க்களத்தில் அவன்) நான் “அபூ தாத்தில் கரிஷ்“ (என்று பெருமையாகச்) சொன்னான். நான் அவன் மீது ஈட்டியைப் பாய்ச்சி அவன் கண்களில் தாக்கினேன். உடனே அவன் இறந்துவிட்டான். ”நான் அவன் மீது என்னுடைய காலை வைத்து மிதித்து மிகவும் சிரமப்பட்டு அந்த ஈட்டியை இழுத்தெடுத்தேன். அதன் இரண்டு ஓரங்களும் வளைந்து போயிருந்தன” என்று ஸுபைர்(ரலி) சொன்னதாக ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அறிவித்தார். அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்: அந்த ஈட்டியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களிடம் (இரவலாகக்) கேட்கவே, ஸுபைர்(ரலி) அதைக் கொடுத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது ஸுபைர்(ரலி) அதை (திரும்ப) எடுத்தார்கள். பிறகு அதை அபூ பக்ர்(ரலி) (இரவலாகக்) கேட்க, அதை அவர்களுக்கு ஸுபைர்(ரலி) கொடுத்தார்கள். அபூ பக்ர்(ரலி) இறந்தபோது, அதனை உமர்(ரலி) (இரவலாகக்) கேட்டார்கள். அதனை ஸுபைர் அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர்(ரலி) இறந்தபோது அதை ஸுபைர் அவர்கள் எடுத்து (தம்மிடம் வைத்து)க் கொண்டார்கள். பிறகு அவர்களிடம் உஸ்மான்(ரலி) அதைக் கேட்க, அவர்களுக்கும் அதை ஸுபைர்(ரலி) கொடுத்தார்கள். உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டபோது, அந்த ஈட்டி அலீ(ரலி) அவர்களி(ன் குடும்பத்திரி)டம் வந்தது. அதனை, ஸுபைர்(ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ், (அலீ - ரலி அவர்களின் பிள்ளைகளிடம்) கேட்டார்கள். அப்துல்லாஹ்(ரலி) கொல்லப்படும் வரையில் அது அவர்களிடமே இருந்து வந்தது.
ஷஹீஹ் புகாரி 3998
. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார். பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒன்றுக்கு, தீனார்ஃதிர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர்(ரலி) (தம் ஆட்சிக் காலத்தின் போது), “(உதவித் தொகையை) மற்றவர்களை விட இவர்களுக்கு அதிகமாக்கித் தருவேன்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 4022.
உவைஸ் மஸ்லஹி 🌹

ஞாயிறு, 31 மார்ச், 2024

ஐந்து கடமைகளில் சமத்துவமும் சகோதரத்துவமும்


இஸ்லாத்தை ஒரு மதம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் ஒரு கொள்கை சார்ந்த வாழ்வியல் என்று பார்க்கும்போதுதான் இன்று பரவலாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள காழ்ப்புணர்வுகள் அகலும். இதன் அருமை பெருமைகளும் இதன் தேவையும் புரியும். இன்று மனிதகுலத்திற்கு பெரிதும் தேவைப்படும் அமைதி என்பது இறைவன் வழங்கும் இந்த வாழ்வியலை மக்கள் ஏற்று வாழ முற்படும்போதுதான் ஏற்பட வழியுள்ளது. ஏனெனில் மனிதர்களுக்கிடையே சகோதரத்துவமும் சமத்துவமும் நிலைநாட்டப் படாதவரை அமைதி என்பது எட்டாக்கனியே!

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதும் வெற்று முழக்கங்களாக இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டுமானால் அதற்கான அஸ்திவாரம் ஏக இறைக் கொள்கையே! இறைவன் ஒருவன் மட்டுமே என்பதை உறுதியாக மக்கள் ஏற்றால் மட்டுமே மனித குல சமத்துவமும் சகோதரத்துவமும் சாத்தியப்படும். அதனால்தான்  இஸ்லாத்தின் தூண்கள் என்று அறியப்படும் ஐம்பெரும் கடமைகளில் முதல் கடமையாக இதை ஆக்கியுள்ளது.

1. சமத்துவம் பேணுவேன் என்பதற்கான உறுதிமொழியே கலிமா 

 ஒருவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமானால் “லா இலாஹ இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற கலிமாவை (உறுதிமொழியை) மனதார ஏற்று வாயால் மொழிய வேண்டும், அவ்வாறு மொழிந்த பின்னர்தான்  அவர் “முஸ்லிம்”  என்று அறியப்படுகிறார். இந்த உறுதிமொழியின் பொருள் “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை மற்றும் முகமது நபி அவனுடைய திருத்தூதர்” என்பதாகும்.  இந்த வாசகத்தை மொழிவதன் மூலம் இனம், நிறம், இடம், மொழி போன்ற வேற்றுமைகளைக் கடந்து அனைத்துலகுக்கும் இரட்சகனான ஏக இறைவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாகவும் அவனது தூதரை என் வாழ்க்கை வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதை அவர் உறுதிபட ஏற்கிறார்.

இதை ஏற்ற மாத்திரத்திலேயே அவர் பலதெய்வ வழிபாடு, ஆள் தெய்வ வழிபாடு, உருவ வழிபாடு போன்ற அனைத்துக் வித வழிபாடுகளில் இருந்தும் அவற்றோடு இணைந்த மூட நம்பிக்கைகளில் இருந்தும் சடங்குகளில் இருந்தும் இடைத்தரகர்களின் பிடியில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விலகி பரிசுத்தமாகி விடுகிறார்.

கலிமா என்ற இந்த உறுதிமொழிக்கு அடுத்ததாக ஐவேளைத் தொழுகை நிறைவேற்றல் இஸ்லாமிய மார்க்கத்தில் அடுத்த கடமையாகும்.

2. சமத்துவத்தில் சகோதரத்துவத்தில் தொழுகையின் பங்கு  

இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதில் மனிதன் தன் ஆசாபாசங்களுக்கும் மனோ இச்சைக்கும் உட்பட்டு காலப்போக்கில் கொண்ட கொள்கையில் இருந்து விலகிவிட வாய்ப்புகள் தாராளம் உள்ளன. எனவே இஸ்லாம் என்ற கொள்கையில் நிலைத்து நிற்க இறைவனால் ஏவப்பட்ட கடமையே தொழுகை என்பதை ஆராய்வோர் அறியலாம். அன்றாடம் ஐவேளை இறைவனின் தொடர்பையும்  நினைவையும் புதுப்பிக்கும் நடவடிக்கை தொழுகை. உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் மூலம்  இறை உணர்வும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது. இந்தத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றும் போது சமூகத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் வலுவடைகிறது.   தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நெருக்கமாக அன்றாடம் தொழுகைக்காக நிற்கும்போது தீண்டாமை, தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, செருக்கு போன்ற தீய பண்புகள் மனித உள்ளங்களில் இருந்து களையப்படுகின்றன.

3. நோன்பின் மாண்பு

நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. சக நோன்பாளிக்கு உணவளிப்பது அந்த நோன்பாளி பெறும் நற்கூலிக்கு சமமான கூலியைப் பெற்றுத்தரும் என்பது நபிமொழி. இதன் காரணமாக ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் செல்வந்தர்கள் முன்வந்து ஏற்பாடு செய்யும் நோன்புக் கஞ்சி விருந்தும் இப்தார் உணவுவிருந்துகளும் சகஜமாக நடைபெறுவதைக் காணலாம். இந்த விருந்துகளில் ஏழை பணக்காரன், மொழி வேற்றுமை போன்றவை மறந்து அனைவரும் சமபந்திகளில் அமர்ந்து உணவுண்பதும் நடைபெறுகின்றன.

4. வறுமை ஒழிப்பில் ஜகாத்

செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது, அது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத் என்ற கட்டாய தர்மம். இதை இஸ்லாமியர்கள் கூட்டுமுறையில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். உண்மையில் சமூகத்தில் குற்றங்கள் பெருகக் காரணங்களில் ஒன்று வறுமை. ஜகாத் விநியோகம் நிறைய ஏழைகளின் வறுமை நீங்க ஏதுவாகிறது. செல்வந்தர்கள் தமக்கு வாய்த்த செல்வத்தின் மூலம் சக மனிதனின் துயர் துடைக்கும் நடவடிக்கையே ஜகாத்!

5. ஹஜ் என்ற உலக முஸ்லிம்கள் சங்கமம்!

போதிய பொருள் வசதியும் ஆரோக்கியமும் கொண்ட முஸ்லிம்கள் மீது வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் என்ற புனித யாத்திரை மேற்கொள்வது கடமையாக்கப்பட்டுள்ளது. உலக முஸ்லிம்கள் இனம், நிறம், மொழி, இடம் போன்ற வேற்றுமைகள் மறந்து சகோதரர்களாக சங்கமிக்கும் நிகழ்வே வருடாவருடம் மக்காவில் நடைபெறும் ஹஜ்.  இஹ்ராம் என்ற வெள்ளை சீருடை அணிந்து மக்காவில் அமைந்துள்ள கஅபா என்ற புனித ஆலயத்தை வலம் வருதல், சஃபா மற்றும் மர்வா என்ற குன்றுகளுக்கு இடையே ஓடுதல், மினா என்ற பள்ளத் தாக்கில் தங்குதல், அரபா பெருவெளியில் ஒன்று கூடுதல், தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நிறைவேற்றுதல் போன்ற பல சடங்குகள் ஹஜ்ஜ் என்ற கடமையின் அம்சங்களாகும். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ் என்ற கடமை!

===================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்


வெள்ளி, 29 மார்ச், 2024

தொழுகைக்கான அழைப்பின் அற்புதங்கள்


அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் 

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் 

ஒரு நாளைக்கு ஐந்து முறை, உங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். இதை அரபு மொழியில் அதான் என்பார்கள். தமிழ் இஸ்லாமிய வழக்கில் இது 'பாங்கு' என்று சொல்லப்படும். ஐவேளைத் தொழுகை இஸ்லாத்தில் கடமை என்பதையும் அவற்றை இஸ்லாமியர்கள் அந்தந்த நேரங்களில் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களில் கூட்டாக நிறைவேற்றுவதையும் அறிவீர்கள். உண்மையில் அதான் அல்லது பாங்கு என்பது பள்ளிவாசலில் நடைபெற உள்ள அந்த நேரத் தொழுகைக்கான அழைப்பே.

அதான் எப்படி தொடங்கியது?

இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில், தொழுகைக்கு மக்களை எப்படி அழைப்பது என்பது குறித்து தன் தோழர்களோடு கலந்தாலோசனை நடத்தினார்கள்.  நபித்தோழர்கள் பலரும் பல ஆலோசனைகளை முன்வைத்தார்கள்.  சிலர் மணி அடிக்க வேண்டும் என்றும், சிலர் சங்கு ஊதலாம் என்றும், சிலர் தீ மூட்டி மக்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனைகள் தந்தனர். இறைவனின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து நபிகளார்  “மனித குரலை” தொழுகைக்கான அழைப்பிற்கு  பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தார். 

நபிகளார் மனிதக் குரலை விட அதிக சத்தமாக ஒலிக்கும் மணியையோ, சங்கையோ அல்லது தூரத்தில் இருந்தே கண்ணிற்கு தெரியும் நெருப்பையோ தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நீங்கள் இங்கு கவனிக்கலாம். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார் என்று நீங்கள் கேட்கக்கூடும். மனிதக் குரல் மூலம் கொடுக்கப்படும் தொழுகைக்கான அழைப்பு என்பது அதைச் சொல்பவருக்கும் (அழைப்பவருக்கும்)  அதைக் கேட்பவருக்கும் (அழைக்கப் படுபவருக்கும்) ஒரு மிகப் பெரிய ஆன்மீக அனுபவமாக அமைவதை நீங்கள் பார்க்கலாம்.

பாங்கு வாசகங்களின் பொருள்:

அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் (நான்கு முறை)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பதை அறிவீர்கள்)

அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனே அனைத்துக்கும் மேலானவன் என்கிறது இந்த முழக்கம். அனைத்துலகும் அவற்றில் உள்ள படைப்பினங்களும் நமக்கு உணவளித்துக் கொண்டிருக்கும் வாழ்வாதாரமும் என அனைத்தும் அந்த வல்லோனுக்கே சொந்தம், எனவே அவனது அழைப்பான இந்த அதானுக்கு அல்லது பாங்குக்கு பதிலளிப்பீராக என்ற நினைவூட்டுகிறது இந்த வாசகம். 

அவனுக்கு அடிபணிந்து வாழ்வதே நம் வாழ்வின் தலையாய நோக்கம் என்ற உணர்வைப் பெறுவோர் உடனடியாக தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலையும் வியாபாரத்தையும் தற்காலிகமாக இடைவெளி கொடுத்துவிட்டு தொழுகையில் பங்கு பெறுகிறார்கள். 

கீழ்கண்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் இருமுறை சொல்லப்படும்:

அஷ்ஹது  அன் லா இலாஹ இல்லல்லாஹ் -  வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.

அதாவது நான் அவனது படைப்பினங்களையோ மனிதர்களையோ மனிதர்கள் சமைத்த சிலைகளையோ உருவங்களையோ அல்லது சமாதிகளையோ வணங்க மாட்டேன். மாறாக படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்குரியவன் என்று உறுதி கூறுகிறேன் என்பதாக இதன் பொருள் விரியும். 

அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - முஹம்மது இறைவனின் இறுதித்தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்

படைத்த இறைவன் யாரை இந்தக் காலத்துக்கு தன் தூதராக அனுப்பியுள்ளானோ அவரை என் வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறேன் என்று இதன் பொருள் விரியும். 

மேற்கண்டவை இரண்டும் இஸ்லாத்தின் கொள்கைப் பிரகடன வாசகங்களாகும். ஐவேளையும் இந்த உறுதிமொழி நமக்கு நினைவூட்டப்படுகிறது. இஸ்லாம் 

ஹய்யா அல்-ஸலாஹ் - தொழுகைக்கு வாருங்கள்

ஹய்யா அல் ஃபலாஹ் - வெற்றிக்கு வாருங்கள்

உண்மையில் இவை இரண்டும்தான் தொழுகைக்கான அழைப்பு வாசகங்களாகும். அதாவது இந்தப் பரீட்சை வாழ்வில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்வோர்தான் வெற்றி ஈட்டுவார்கள். அவ்வாறு கட்டுப்பட்டு வாழ்தலே இஸ்லாம் எனப்படும். நீங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறீர்களா இல்லையா என்பதை உரசிப் பார்க்கும் செயல்தான் ஐவேளைத் தொழுகை. 

அல்லாஹு அக்பர் – இறைவன் மிகப்பெரியவன்.

லா இலாஹ இல்லல்லாஹ்- வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவன் அல்லாஹ் மட்டுமே. – (இந்த வாசகம் ஒரு முறை மட்டுமே சொல்லப்படும்)

பாங்கின் முக்கியத்துவம்:

பாங்கின் முக்கியத்துவம் அறிய சமூகத்தில் தொழுகையை நிலைநாட்டுவதன் அவசியம் பற்றி அறிவது நலம்.

இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை என்றும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடம் என்றும் இஸ்லாம் கற்பிக்கிறது. இதில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு இந்த உலக வாழ்கையும் அமைதிகரமாக அமைகிறது. மறுமையில் அவர்களுக்கு சொர்க்கமும் பரிசாகக் கிடைக்கிறது. இதை மறுப்பவர்களுக்கு இவ்வுலகில் அமைதியின்மையும் மறுமையில் நரகமும் வாய்க்கிறது என்பது இஸ்லாமிய போதனை.

அந்த வகையில் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ முற்படுபவர்களுக்கு இறைவன் ஐந்து வேளைத் தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளான். அந்தத் தொழுகைகளை முடிந்தவரையில் கூட்டாக நிறைவேற்றவும் இஸ்லாம் பரிந்துரைக்கிறது. இதன்மூலம் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் பற்பல  நன்மைகள் உண்டாகின்றன.

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். (திருக்குர்ஆன் 23:1,2,9)

தனி நபர்களை ஆன்மீக அடிப்படையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் பேணுபவர்களாக ஆக்குகின்றன.

நேரக்கட்டுப்பாடு (punctuality) உணர்வுடன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை முன்னதாகவே திட்டமிட முடிகிறது.

கூட்டாகத் தொழும்போது சகோதரத்துவ மற்றும் சமத்துவ உணர்வு வலிமையாகத் தூண்டப்படுவதால் தீண்டாமை நிறபேதம், இனபேதம் மொழி பேதம் போன்றவை அடியோடு ஒழிகின்றன.

சமூகத்தில் ஏழைகளும் பணக்காரர்களும் அன்றாடம் ஓரணியில் சங்கமிப்பதால் ஏழைகளின் துயர் துடைப்பு, இன்ன பிற நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.

தொழுகை பேணும் சமூகம் உருவாகும்போது மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகள் அங்கு வேரூன்ற விடாமல் தடுக்கப்படுகின்றன.

================ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

இனவெறிக்கு துணைநின்ற நாத்திகம்!

 = மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும்தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)

ஒரே ஒரு மனித ஆண்-பெண் ஜோடியில் இருந்துதான் மனித குலம் உருவாயிற்று என்ற உண்மையை இஸ்லாம் உறுதிபடச் சொல்கிறது. உலகில் பரவியுள்ள அனைத்து மனிதர்களும் ஒரே போல உடலமைப்பையும் இயற்கையையும் பெற்றிருப்பதே இதற்கு மாபெரும் சான்றாக விளங்குகிறது. இதுதான் மனித சமத்துவத்துக்கும் உலகளாவிய சகோதரத்துக்கும் அடிப்படை ஆதாரம்.

ஒருபுறம் கடவுளின் பெயரால் சிலர் இனவெறியும் தீண்டாமையும்  விதைத்துக்கொண்டிருக்க மறுபுறம் நாத்திகமும் தன் அறியாமைக் கொள்கைகளின் காரணமாக மனித சமத்துவத்தை மறுத்தது. உறுதியான ஆதாரங்கள் அறவே ஏதும் இல்லாத  பரிணாமவியல் என்ற ஊகக் கோட்பாட்டை அறிவியல் என்ற பெயரில் போதித்தது அது. அதன்படி இவ்வுண்மையை மறுத்து குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்ற ஆதாரமற்ற ஊகத்தைப் பரப்பியது.

கொடூர விளைவுகள்:


 அதனால்  வரலாற்றில் உண்டான விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! ஒவ்வொரு இனத்துக்கும் மூதாதையர் குரங்குகள் வேறுவேறு என்ற காரணம் காட்டி மனிதனின் தோற்றம், நிறம், கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வழக்கமும் உருவானது. பல்லாயிரக்கணக்கான மக்களை அது காவுகொண்டது. உதாரணமாக ஹிட்லர் தன் நாஜி இனமே உலகில் மற்றெல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று கூறி மற்ற நாடுகளை அடிமைபடுத்தவும் மக்களைக் கொன்று குவிக்கவும் செய்தார். கருப்பர்கள் (நீக்ரோக்கள்) ஒருபோதும் வெள்ளை இனத்தாருக்கு சமமாக முடியாது என்று சொல்லி அவர்களை தாழ்த்தி வைக்கவும் செய்தார்.

கொஞ்சநஞ்சம் மக்களிடம் இருந்து வந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வை அறவே துடைத்தெறிந்தது நாத்திகம். யாருக்கு எந்தக் கொடுமைகள் செய்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வை ஆதிக்க சக்திகளுக்குள் அது புகுத்தியது. ஆயுத ஆதிக்கம் வாய்த்த  வெள்ளையர்கள் அவர்கள் பிடித்தெடுத்த கண்டங்களில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினரை ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பதற்கும் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த கறுப்பின


மக்களை ஆயுத முனையில் கீழடக்கி அமேரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச்சென்று அடிமை வாணிபம் செய்ததற்கும் நாத்திகக் கொள்கை உருவாக்கிய மனோநிலை பெரிதும் துணைபோயிருக்கிறது என்பதே உண்மை.

இறைவனின் எச்சரிக்கை

இறைவனின் பெயரால் இனவெறி கடைபிடித்த ஆத்திகர்களாயினும் சரி இறைமறுப்பை கைகொண்டு இனவெறி பாராட்டிய நாத்திகர்களாயினும் சரி அவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி இறுதித் தீர்ப்பு நாளன்று இறைவன் முன்னால் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்பது மட்டும் உறுதி. இறைவன் கற்பித்த மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மறுத்து சக மனிதனின் உரிமைகளை சூறையாடிய ஆத்திகர்களுக்கும் நாத்திகர் களுக்கும் கடுமையான தண்டனைகள் இறைவனிடம் உள்ளன.

= வரவிருக்கும் அந்நாளில் (ஏற்படக்கூடிய அவமானத்திலிருந்தும் தண்டனைகளிலிருந்தும்) நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்! அன்று இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்தவற்றிற்கான (நன்மை அல்லது தீமைக்கான) கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும் எவர் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. (திருக்குர்ஆன் 2:281)

= “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).

= “மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (திருக்குர்ஆன் 21:47)

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்