இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 மார்ச், 2024

ஐந்து கடமைகளில் சமத்துவமும் சகோதரத்துவமும்


இஸ்லாத்தை ஒரு மதம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் ஒரு கொள்கை சார்ந்த வாழ்வியல் என்று பார்க்கும்போதுதான் இன்று பரவலாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள காழ்ப்புணர்வுகள் அகலும். இதன் அருமை பெருமைகளும் இதன் தேவையும் புரியும். இன்று மனிதகுலத்திற்கு பெரிதும் தேவைப்படும் அமைதி என்பது இறைவன் வழங்கும் இந்த வாழ்வியலை மக்கள் ஏற்று வாழ முற்படும்போதுதான் ஏற்பட வழியுள்ளது. ஏனெனில் மனிதர்களுக்கிடையே சகோதரத்துவமும் சமத்துவமும் நிலைநாட்டப் படாதவரை அமைதி என்பது எட்டாக்கனியே!

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதும் வெற்று முழக்கங்களாக இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டுமானால் அதற்கான அஸ்திவாரம் ஏக இறைக் கொள்கையே! இறைவன் ஒருவன் மட்டுமே என்பதை உறுதியாக மக்கள் ஏற்றால் மட்டுமே மனித குல சமத்துவமும் சகோதரத்துவமும் சாத்தியப்படும். அதனால்தான்  இஸ்லாத்தின் தூண்கள் என்று அறியப்படும் ஐம்பெரும் கடமைகளில் முதல் கடமையாக இதை ஆக்கியுள்ளது.

1. சமத்துவம் பேணுவேன் என்பதற்கான உறுதிமொழியே கலிமா 

 ஒருவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமானால் “லா இலாஹ இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற கலிமாவை (உறுதிமொழியை) மனதார ஏற்று வாயால் மொழிய வேண்டும், அவ்வாறு மொழிந்த பின்னர்தான்  அவர் “முஸ்லிம்”  என்று அறியப்படுகிறார். இந்த உறுதிமொழியின் பொருள் “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை மற்றும் முகமது நபி அவனுடைய திருத்தூதர்” என்பதாகும்.  இந்த வாசகத்தை மொழிவதன் மூலம் இனம், நிறம், இடம், மொழி போன்ற வேற்றுமைகளைக் கடந்து அனைத்துலகுக்கும் இரட்சகனான ஏக இறைவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாகவும் அவனது தூதரை என் வாழ்க்கை வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதை அவர் உறுதிபட ஏற்கிறார்.

இதை ஏற்ற மாத்திரத்திலேயே அவர் பலதெய்வ வழிபாடு, ஆள் தெய்வ வழிபாடு, உருவ வழிபாடு போன்ற அனைத்துக் வித வழிபாடுகளில் இருந்தும் அவற்றோடு இணைந்த மூட நம்பிக்கைகளில் இருந்தும் சடங்குகளில் இருந்தும் இடைத்தரகர்களின் பிடியில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விலகி பரிசுத்தமாகி விடுகிறார்.

கலிமா என்ற இந்த உறுதிமொழிக்கு அடுத்ததாக ஐவேளைத் தொழுகை நிறைவேற்றல் இஸ்லாமிய மார்க்கத்தில் அடுத்த கடமையாகும்.

2. சமத்துவத்தில் சகோதரத்துவத்தில் தொழுகையின் பங்கு  

இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதில் மனிதன் தன் ஆசாபாசங்களுக்கும் மனோ இச்சைக்கும் உட்பட்டு காலப்போக்கில் கொண்ட கொள்கையில் இருந்து விலகிவிட வாய்ப்புகள் தாராளம் உள்ளன. எனவே இஸ்லாம் என்ற கொள்கையில் நிலைத்து நிற்க இறைவனால் ஏவப்பட்ட கடமையே தொழுகை என்பதை ஆராய்வோர் அறியலாம். அன்றாடம் ஐவேளை இறைவனின் தொடர்பையும்  நினைவையும் புதுப்பிக்கும் நடவடிக்கை தொழுகை. உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் மூலம்  இறை உணர்வும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது. இந்தத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றும் போது சமூகத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் வலுவடைகிறது.   தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நெருக்கமாக அன்றாடம் தொழுகைக்காக நிற்கும்போது தீண்டாமை, தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, செருக்கு போன்ற தீய பண்புகள் மனித உள்ளங்களில் இருந்து களையப்படுகின்றன.

3. நோன்பின் மாண்பு

நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. சக நோன்பாளிக்கு உணவளிப்பது அந்த நோன்பாளி பெறும் நற்கூலிக்கு சமமான கூலியைப் பெற்றுத்தரும் என்பது நபிமொழி. இதன் காரணமாக ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் செல்வந்தர்கள் முன்வந்து ஏற்பாடு செய்யும் நோன்புக் கஞ்சி விருந்தும் இப்தார் உணவுவிருந்துகளும் சகஜமாக நடைபெறுவதைக் காணலாம். இந்த விருந்துகளில் ஏழை பணக்காரன், மொழி வேற்றுமை போன்றவை மறந்து அனைவரும் சமபந்திகளில் அமர்ந்து உணவுண்பதும் நடைபெறுகின்றன.

4. வறுமை ஒழிப்பில் ஜகாத்

செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது, அது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத் என்ற கட்டாய தர்மம். இதை இஸ்லாமியர்கள் கூட்டுமுறையில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். உண்மையில் சமூகத்தில் குற்றங்கள் பெருகக் காரணங்களில் ஒன்று வறுமை. ஜகாத் விநியோகம் நிறைய ஏழைகளின் வறுமை நீங்க ஏதுவாகிறது. செல்வந்தர்கள் தமக்கு வாய்த்த செல்வத்தின் மூலம் சக மனிதனின் துயர் துடைக்கும் நடவடிக்கையே ஜகாத்!

5. ஹஜ் என்ற உலக முஸ்லிம்கள் சங்கமம்!

போதிய பொருள் வசதியும் ஆரோக்கியமும் கொண்ட முஸ்லிம்கள் மீது வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் என்ற புனித யாத்திரை மேற்கொள்வது கடமையாக்கப்பட்டுள்ளது. உலக முஸ்லிம்கள் இனம், நிறம், மொழி, இடம் போன்ற வேற்றுமைகள் மறந்து சகோதரர்களாக சங்கமிக்கும் நிகழ்வே வருடாவருடம் மக்காவில் நடைபெறும் ஹஜ்.  இஹ்ராம் என்ற வெள்ளை சீருடை அணிந்து மக்காவில் அமைந்துள்ள கஅபா என்ற புனித ஆலயத்தை வலம் வருதல், சஃபா மற்றும் மர்வா என்ற குன்றுகளுக்கு இடையே ஓடுதல், மினா என்ற பள்ளத் தாக்கில் தங்குதல், அரபா பெருவெளியில் ஒன்று கூடுதல், தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நிறைவேற்றுதல் போன்ற பல சடங்குகள் ஹஜ்ஜ் என்ற கடமையின் அம்சங்களாகும். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ் என்ற கடமை!

===================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்


வெள்ளி, 29 மார்ச், 2024

தொழுகைக்கான அழைப்பின் அற்புதங்கள்


அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் 

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் 

ஒரு நாளைக்கு ஐந்து முறை, உங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். இதை அரபு மொழியில் அதான் என்பார்கள். தமிழ் இஸ்லாமிய வழக்கில் இது 'பாங்கு' என்று சொல்லப்படும். ஐவேளைத் தொழுகை இஸ்லாத்தில் கடமை என்பதையும் அவற்றை இஸ்லாமியர்கள் அந்தந்த நேரங்களில் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களில் கூட்டாக நிறைவேற்றுவதையும் அறிவீர்கள். உண்மையில் அதான் அல்லது பாங்கு என்பது பள்ளிவாசலில் நடைபெற உள்ள அந்த நேரத் தொழுகைக்கான அழைப்பே.

அதான் எப்படி தொடங்கியது?

இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில், தொழுகைக்கு மக்களை எப்படி அழைப்பது என்பது குறித்து தன் தோழர்களோடு கலந்தாலோசனை நடத்தினார்கள்.  நபித்தோழர்கள் பலரும் பல ஆலோசனைகளை முன்வைத்தார்கள்.  சிலர் மணி அடிக்க வேண்டும் என்றும், சிலர் சங்கு ஊதலாம் என்றும், சிலர் தீ மூட்டி மக்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனைகள் தந்தனர். இறைவனின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து நபிகளார்  “மனித குரலை” தொழுகைக்கான அழைப்பிற்கு  பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தார். 

நபிகளார் மனிதக் குரலை விட அதிக சத்தமாக ஒலிக்கும் மணியையோ, சங்கையோ அல்லது தூரத்தில் இருந்தே கண்ணிற்கு தெரியும் நெருப்பையோ தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நீங்கள் இங்கு கவனிக்கலாம். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார் என்று நீங்கள் கேட்கக்கூடும். மனிதக் குரல் மூலம் கொடுக்கப்படும் தொழுகைக்கான அழைப்பு என்பது அதைச் சொல்பவருக்கும் (அழைப்பவருக்கும்)  அதைக் கேட்பவருக்கும் (அழைக்கப் படுபவருக்கும்) ஒரு மிகப் பெரிய ஆன்மீக அனுபவமாக அமைவதை நீங்கள் பார்க்கலாம்.

பாங்கு வாசகங்களின் பொருள்:

அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் (நான்கு முறை)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பதை அறிவீர்கள்)

அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனே அனைத்துக்கும் மேலானவன் என்கிறது இந்த முழக்கம். அனைத்துலகும் அவற்றில் உள்ள படைப்பினங்களும் நமக்கு உணவளித்துக் கொண்டிருக்கும் வாழ்வாதாரமும் என அனைத்தும் அந்த வல்லோனுக்கே சொந்தம், எனவே அவனது அழைப்பான இந்த அதானுக்கு அல்லது பாங்குக்கு பதிலளிப்பீராக என்ற நினைவூட்டுகிறது இந்த வாசகம். 

அவனுக்கு அடிபணிந்து வாழ்வதே நம் வாழ்வின் தலையாய நோக்கம் என்ற உணர்வைப் பெறுவோர் உடனடியாக தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலையும் வியாபாரத்தையும் தற்காலிகமாக இடைவெளி கொடுத்துவிட்டு தொழுகையில் பங்கு பெறுகிறார்கள். 

கீழ்கண்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் இருமுறை சொல்லப்படும்:

அஷ்ஹது  அன் லா இலாஹ இல்லல்லாஹ் -  வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.

அதாவது நான் அவனது படைப்பினங்களையோ மனிதர்களையோ மனிதர்கள் சமைத்த சிலைகளையோ உருவங்களையோ அல்லது சமாதிகளையோ வணங்க மாட்டேன். மாறாக படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்குரியவன் என்று உறுதி கூறுகிறேன் என்பதாக இதன் பொருள் விரியும். 

அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - முஹம்மது இறைவனின் இறுதித்தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்

படைத்த இறைவன் யாரை இந்தக் காலத்துக்கு தன் தூதராக அனுப்பியுள்ளானோ அவரை என் வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறேன் என்று இதன் பொருள் விரியும். 

மேற்கண்டவை இரண்டும் இஸ்லாத்தின் கொள்கைப் பிரகடன வாசகங்களாகும். ஐவேளையும் இந்த உறுதிமொழி நமக்கு நினைவூட்டப்படுகிறது. இஸ்லாம் 

ஹய்யா அல்-ஸலாஹ் - தொழுகைக்கு வாருங்கள்

ஹய்யா அல் ஃபலாஹ் - வெற்றிக்கு வாருங்கள்

உண்மையில் இவை இரண்டும்தான் தொழுகைக்கான அழைப்பு வாசகங்களாகும். அதாவது இந்தப் பரீட்சை வாழ்வில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்வோர்தான் வெற்றி ஈட்டுவார்கள். அவ்வாறு கட்டுப்பட்டு வாழ்தலே இஸ்லாம் எனப்படும். நீங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறீர்களா இல்லையா என்பதை உரசிப் பார்க்கும் செயல்தான் ஐவேளைத் தொழுகை. 

அல்லாஹு அக்பர் – இறைவன் மிகப்பெரியவன்.

லா இலாஹ இல்லல்லாஹ்- வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவன் அல்லாஹ் மட்டுமே. – (இந்த வாசகம் ஒரு முறை மட்டுமே சொல்லப்படும்)

பாங்கின் முக்கியத்துவம்:

பாங்கின் முக்கியத்துவம் அறிய சமூகத்தில் தொழுகையை நிலைநாட்டுவதன் அவசியம் பற்றி அறிவது நலம்.

இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை என்றும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடம் என்றும் இஸ்லாம் கற்பிக்கிறது. இதில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு இந்த உலக வாழ்கையும் அமைதிகரமாக அமைகிறது. மறுமையில் அவர்களுக்கு சொர்க்கமும் பரிசாகக் கிடைக்கிறது. இதை மறுப்பவர்களுக்கு இவ்வுலகில் அமைதியின்மையும் மறுமையில் நரகமும் வாய்க்கிறது என்பது இஸ்லாமிய போதனை.

அந்த வகையில் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ முற்படுபவர்களுக்கு இறைவன் ஐந்து வேளைத் தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளான். அந்தத் தொழுகைகளை முடிந்தவரையில் கூட்டாக நிறைவேற்றவும் இஸ்லாம் பரிந்துரைக்கிறது. இதன்மூலம் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் பற்பல  நன்மைகள் உண்டாகின்றன.

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். (திருக்குர்ஆன் 23:1,2,9)

தனி நபர்களை ஆன்மீக அடிப்படையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் பேணுபவர்களாக ஆக்குகின்றன.

நேரக்கட்டுப்பாடு (punctuality) உணர்வுடன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை முன்னதாகவே திட்டமிட முடிகிறது.

கூட்டாகத் தொழும்போது சகோதரத்துவ மற்றும் சமத்துவ உணர்வு வலிமையாகத் தூண்டப்படுவதால் தீண்டாமை நிறபேதம், இனபேதம் மொழி பேதம் போன்றவை அடியோடு ஒழிகின்றன.

சமூகத்தில் ஏழைகளும் பணக்காரர்களும் அன்றாடம் ஓரணியில் சங்கமிப்பதால் ஏழைகளின் துயர் துடைப்பு, இன்ன பிற நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.

தொழுகை பேணும் சமூகம் உருவாகும்போது மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகள் அங்கு வேரூன்ற விடாமல் தடுக்கப்படுகின்றன.

================ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

இனவெறிக்கு துணைநின்ற நாத்திகம்!

 = மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும்தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)

ஒரே ஒரு மனித ஆண்-பெண் ஜோடியில் இருந்துதான் மனித குலம் உருவாயிற்று என்ற உண்மையை இஸ்லாம் உறுதிபடச் சொல்கிறது. உலகில் பரவியுள்ள அனைத்து மனிதர்களும் ஒரே போல உடலமைப்பையும் இயற்கையையும் பெற்றிருப்பதே இதற்கு மாபெரும் சான்றாக விளங்குகிறது. இதுதான் மனித சமத்துவத்துக்கும் உலகளாவிய சகோதரத்துக்கும் அடிப்படை ஆதாரம்.

ஒருபுறம் கடவுளின் பெயரால் சிலர் இனவெறியும் தீண்டாமையும்  விதைத்துக்கொண்டிருக்க மறுபுறம் நாத்திகமும் தன் அறியாமைக் கொள்கைகளின் காரணமாக மனித சமத்துவத்தை மறுத்தது. உறுதியான ஆதாரங்கள் அறவே ஏதும் இல்லாத  பரிணாமவியல் என்ற ஊகக் கோட்பாட்டை அறிவியல் என்ற பெயரில் போதித்தது அது. அதன்படி இவ்வுண்மையை மறுத்து குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்ற ஆதாரமற்ற ஊகத்தைப் பரப்பியது.

கொடூர விளைவுகள்:


 அதனால்  வரலாற்றில் உண்டான விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! ஒவ்வொரு இனத்துக்கும் மூதாதையர் குரங்குகள் வேறுவேறு என்ற காரணம் காட்டி மனிதனின் தோற்றம், நிறம், கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வழக்கமும் உருவானது. பல்லாயிரக்கணக்கான மக்களை அது காவுகொண்டது. உதாரணமாக ஹிட்லர் தன் நாஜி இனமே உலகில் மற்றெல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று கூறி மற்ற நாடுகளை அடிமைபடுத்தவும் மக்களைக் கொன்று குவிக்கவும் செய்தார். கருப்பர்கள் (நீக்ரோக்கள்) ஒருபோதும் வெள்ளை இனத்தாருக்கு சமமாக முடியாது என்று சொல்லி அவர்களை தாழ்த்தி வைக்கவும் செய்தார்.

கொஞ்சநஞ்சம் மக்களிடம் இருந்து வந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வை அறவே துடைத்தெறிந்தது நாத்திகம். யாருக்கு எந்தக் கொடுமைகள் செய்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வை ஆதிக்க சக்திகளுக்குள் அது புகுத்தியது. ஆயுத ஆதிக்கம் வாய்த்த  வெள்ளையர்கள் அவர்கள் பிடித்தெடுத்த கண்டங்களில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினரை ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பதற்கும் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த கறுப்பின


மக்களை ஆயுத முனையில் கீழடக்கி அமேரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச்சென்று அடிமை வாணிபம் செய்ததற்கும் நாத்திகக் கொள்கை உருவாக்கிய மனோநிலை பெரிதும் துணைபோயிருக்கிறது என்பதே உண்மை.

இறைவனின் எச்சரிக்கை

இறைவனின் பெயரால் இனவெறி கடைபிடித்த ஆத்திகர்களாயினும் சரி இறைமறுப்பை கைகொண்டு இனவெறி பாராட்டிய நாத்திகர்களாயினும் சரி அவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி இறுதித் தீர்ப்பு நாளன்று இறைவன் முன்னால் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்பது மட்டும் உறுதி. இறைவன் கற்பித்த மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மறுத்து சக மனிதனின் உரிமைகளை சூறையாடிய ஆத்திகர்களுக்கும் நாத்திகர் களுக்கும் கடுமையான தண்டனைகள் இறைவனிடம் உள்ளன.

= வரவிருக்கும் அந்நாளில் (ஏற்படக்கூடிய அவமானத்திலிருந்தும் தண்டனைகளிலிருந்தும்) நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்! அன்று இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்தவற்றிற்கான (நன்மை அல்லது தீமைக்கான) கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும் எவர் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. (திருக்குர்ஆன் 2:281)

= “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).

= “மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (திருக்குர்ஆன் 21:47)

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

புதன், 27 மார்ச், 2024

வணக்கத்துக்குரியவன் இறைவன்றி வேறு யார்?

இஸ்லாம் என்ற இறைதரும் வாழ்வியல் கொள்கையின் முக்கிய அடிப்படை இதுதான். மக்கள் படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனது படைப்பினங்களையோ அல்லது மனிதர்களாகவே உருவாகிக் கொண்ட கற்பனை உருவங்களையோ வணங்கக் கூடாது. அவ்வாறு வணங்கும்போது ஏற்படும் குழப்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல..
- இறைவனைப் பற்றிய மரியாதை உணர்வு அகன்று விடுவதால் இறையச்சம் என்ற பொறுப்புணர்வு மனித மனங்களில் இல்லாமல் ஆகி விடுகிறது. சமூகத்தில் பாவங்கள் அதிகரிக்க இது முக்கிய காரணியாகி விடுகிறது. 
- பல்வேறு கடவுளர்கள் கற்பிக்கப்படுவதால் அதைப் பொறுத்து ஒரே மனித குலத்தில் பிளவுகள் உண்டாகுதல், ஜாதிகள் மற்றும் தீண்டாமை போன்றவை உருவாகுதல். 
- கடவுளின் பெயரால் மூட நம்பிக்கைகள், சுரண்டல்கள் போன்றவை உருவாகுதல். 

ஆனால் உண்மைக் கடவுளை எவ்வாறு அறிவது? 

அதற்கு இறைவேதம் திருக்குர்ஆன் படைப்பினங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும், நாம் அன்றாடம் அனுபவிக்கும் அத்தியாவசியமான அருட்கொடைகளையும்  பகுத்தறிவு கொண்டு சிந்தித்து படைத்தவனை அறிந்து அவனுக்கு நன்றி கூறும் முகமாக அவனை வணங்குமாறு கற்பிக்கிறது. அப்படிப்பட்ட ஏராளமான வசனங்களை நீங்கள் திருக்குர்ஆனில் காணலாம். உதாரணமாக கீழ்கண்ட வசனங்களை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்: 

 வானங்கள், பூமி, மழை, மரங்கள், தோட்டங்கள்:
27:60. அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
பூமி, ஆறுகள், மலைகள், கடல்கள்,தடுப்பு 
27:61. இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
பிரார்த்தனைக்கு பதில், துன்பம் நீக்குதல்
27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
இருள்களில் வழிகாட்டல், மழைக்கு முன் நற்செய்தி கூறும் காற்று: 
27:63. கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
இல்லாமையில் இருந்து படைபைத் துவங்குதல், இனப்பெருக்கம், படைப்பினங்களுக்கு உணவளித்தல்,  
27:64. முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.”

பகுத்தறிவு கொண்டு நேர்மையாக சிந்திக்கும் போது இவ்வுலகைப் படைத்த அந்த ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் எந்த சக்தியும் இவற்றை நிகழ்த்தவில்லை என்பதை அறியலாம். உண்மை இப்படி இருக்க படைத்தவன் அல்லாதவற்றை இறைவன் என்று சொல்வதும் அவற்றை வணங்குவதும் முற்றிலும் அறியாமையே! இது படைத்தவனுக்கு செய்யும் மாபெரும் நன்றிகேடாகும். 
"நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” (திருக்குர்ஆன் 31:13)
இந்த நன்றிகேட்டிற்கு இறைவனிடம் கடுமையான தண்டனை உண்டு என்கிறது திருக்குர்ஆன். 
இறைமறுப்பாளர்களின் அறிவற்ற வாதம் 
ஆனால் இந்த அப்பட்டமான உண்மையை பகுத்தறிவு என்ற பெயரில் மறுக்கும் செயல்தான் ஆச்சரியமானது. 
சில "பகுத்தறியா வாதிகள்" இயற்கைதான் இதைச் செய்கிறது என்று காரணம் கூறுவதை நீங்கள் காணலாம். ஆனால் இயற்கை என்ற கற்பனைப் புனைவுக்கு சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பகுத்தறிவோ ஆற்றலோ கூட எதுவும் கிடையாது என்பதை சிந்தித்தாலே இது ஒரு பொய்யான வாதம் என்று உணரலாம். இவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்விகள் இவை: 
52:35. அல்லதுஅவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனராஅல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
52:36. அல்லதுவானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? ......
--------------------------------------------------
56:57. நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களாஅல்லது நாம் படைக்கின்றோமா?
56:60. உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்எனவே நம்மை எவரும் மிகைக் முடியாது.
56:61. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

திங்கள், 25 மார்ச், 2024

சமத்துவம் பூக்கும் சோலைகளே பள்ளிவாசல்கள்


 ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தையும் யாதும் ஊரே யாவரும் உறவே என்ற முழக்கத்தையும் பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல்கள் மட்டுமே!   உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர், எளியவர், வெள்ளையர், கறுப்பர் என்ற வேறுபாடின்றி தீண்டாமை எழுவதற்கு வழியின்றி எல்லோரும் வரிசையில்  நின்று தொழும் இடம் பள்ளிவாசல். படைத்தவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை மக்கள் உள்ளங்களில் ஆழமாக விதைக்கும் இடம் அதுவே!

பள்ளிவாசல்கள் என்றால் என்ன?

படைத்த இறைவனை பலரும் கூட்டாக சேர்ந்து நின்று தொழுவதற்காக காட்டப்படும் ஆலயமே  பள்ளிவாசல் என்பது. அங்கு வருவோர்  கை,  கால், முகம் இவற்றை கழுவுவதற்கு வசதியாக தண்ணீர் தொட்டியோ குழாய்களோ முன்னால் காணப் படும். உள்ளே நீங்கள் சென்று பார்த்தீர்களானால், உருவப் படங்களோ, சிலைகளோ எதுவுமே இராது. தரையில் பாய் விரிக்கப் பட்டு இருக்கும், சுவர்களில் எந்த வகையான சித்திரங்க இல்லாமல் காலியாக இருக்கும். 5 வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு  ஒலிபெருக்கி மூலம் விடப்படுகிறது.   இதைச் செவியுறும் ஆங்காங்கே உள்ள முஸ்லிம்கள் உடனடியாக தொழுகைக்கு விரைவார்கள். அனைவரும் வந்ந்து சேர்ந்ததும் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் அணிவகுத்து நிற்பார்கள்.

தொழுகையாளிகளில் குரான் அதிகம் அறிந்தவர் அணிவகுப்பில் தளபதியைப்  போல் முன் நின்று தொழுகையை நடத்துவார். அவருக்கு அரபு மொழியில் இமாம் என்று கூறுவர். மற்றவர்கள் அவர் செய்வதைப் போலவே செய்து தொழுகையை நிறைவு செய்வார்கள். தொழுகை முடிந்ததும் தத்தமது இருப்பிடங்களுக்கும் அலுவல்களுக்கும் திரும்புவார்கள். இங்கு காசு, பணம், காணிக்கை,பழம், பூ போன்ற எந்த செலவுகளுக்கும் இடமில்லை. பொருட்செலவு இல்லாத சடங்குகள் இல்லாத - இறைவனை நேரடியாக வணங்குவதற்கு உரிய இடம் பள்ளிவாசல்

சமத்துவமும் சகோதரத்துவமும்

சமூகத்தில் செல்வாக்குள்ளவர், அந்தஸ்துள்ளவர்,  படிப்பால் உயரந்தவர், செல்வம் படைத்தவர் என்ற  கௌரவம் பெற்றவர்கள் கூட பள்ளிவாசலுக்குள் வந்து விட்டால், தொழுகைக்காக நின்று விட்டால்  இறைவனின் அடிமைகள் என்ற நிலைப்பாட்டிலேதான் நிற்க வேண்டும். ஜனாதிபதியாக இருந்தாலும், மந்திரிகளாக இருந்தாலும் அவர்களும் சாதாரண குடிமக்களோடு தோளோடுதோள் இணைந்து வரிசைகளில் அணிவகுத்து நின்றே தொழுகை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கான பிரேத்தியகமான இடமோ கவனிப்போ கிடையாது. ஒரு நாளைக்கு ஐந்து நேர தொழுகையின் பயிற்சி இதுதான். இந்தப் பயிற்சியினை பெற்றவர்களால் மட்டும்தான் உலகில் தீண்டாமையை ஒழிக்க முடியும். சகோரத்துவத்தை வளர்க்க முடியும். சமூகத்தை சீரமைக்க முடியும்.

நபிகள் நாயகம் இஸ்லாத்தை போதிக்க ஆரம்பித்ததன் பின் உலகில் நடந்துள்ள மாற்றங்களைப் பாருங்கள். உலகெங்கும் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள், உதாரணமாக இந்திய முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நபிகள் நாயகத்தின் வாரிசுகளோ அல்ல. இவர்கள் இதற்கு முன் இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ இருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டவர்களின் தலைமுறையினர்தான். இவர்கள் இந்த ஏக இறைகொள்கையை ஏற்றுக் கொண்டபின் என்னென்ன புரட்சிகள் நடந்துள்ளது பாருங்கள். இன்று இவர்களுக்கு ஜாதிகள் இல்லை. இவர்களிடையே தீண்டாமை இல்லை. ஒரு காலத்தில் தீண்டாமையால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று சிதறுண்டு கிடந்தார்கள். இம்மக்களை இன்று பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒரே அணியில் தோளோடு தோள் நிற்க வைப்பதும் ஒரே தட்டில் பாகுபாடின்றி உண்ண வைப்பதும் இந்த ஓரிறைக்கொள்கை நிகழ்த்தி வரும் அற்புதங்களே!

தனிநபர் நல்லொழுக்கமும் பள்ளிவாசல்களும்

மக்கள் அங்கத் தூய்மை பேணி தினசரி ஐந்து வேளைகள் இறைவன் முன்னால் பயபக்தியோடு நின்று தொழும்போது இறை உணர்வு அவ்வப்போது புதுப்பிக்கப்படுவதால் மது போதை மட்டுமல்ல, மற்றெந்த பாவங்களின் பக்கமும் மனம் ஈர்க்கப்படுவதில்லை. மேலும் இந்தத் தொழுகைகளை அவ்வப்போது பள்ளிவாசல்களில் ஒன்று கூடி நிறைவேற்றும்போது ஏனைய மக்களோடு ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் தொடர்ச்சியான நல்லோர் சகவாசமும் பாவங்களில் இருந்து பாதுகாக்கும் வலுவான அரணாக அமைகின்றன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குளிப்பதையும் அன்று மதியம் பள்ளிவாசல்களில் ஜும்ஆ எனப்படும் கூட்டுதொழுகையில் கலந்து கொள்வதையும் கட்டாயமாக்கி உள்ளது இஸ்லாம். தொழுகைக்கு முன் நடத்தப்படும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி போதனையும் மனிதனை நல்வழிப்படுத்துபவையாக உள்ளன.

-------------------- 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?

ஞாயிறு, 24 மார்ச், 2024

இறைவனே தீண்டாமைக்கு சாவுமணி அடித்த தருணம்!

 


மனித வரலாற்றை திருத்தி எழுதிய நிகழ்வு அது! உண்மையில் அதுவே வரலாற்றின் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையும் கூட!

மனிதன் சக மனிதனைப் பார்க்கும் பார்வையை மாற்றி அமைத்த நிகழ்வு அது!

உலகெங்கும் மானிடப் பூங்காக்களில் சமத்துவப் பூக்கள் துளிர்விடத் துவங்கிய நாளேன்றே அந்நாளைக் கூறலாம்!

இனம், நிறம், மொழி, குலம், கோத்திரம் ஜாதி இவற்றின் பெருமைகளைக் கூறி மனிதர்களின் மத்தியில் வேறுபாடுகளை விதைத்து அதன் மூலம் பிற மனிதர்களின் உரிமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு இருந்த தீய பழக்கத்திற்கு சாவுமணி ஒலிக்கத் துவங்கியது அதற்குப் பிறகுதான்!

இஸ்லாம் என்பது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழுதல் என்ற கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை. இதை நோக்கியே ஒவ்வொரு காலகட்டங்களிலும் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் வந்த இறைவனின் தூதர்கள் தத்தமது மக்களை அழைத்தார்கள். இதை இறுதியாக மறு அறிமுகம் செய்ய வந்தவரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

அனாச்சாரங்களில் மூழ்கியிருந்த மக்கா!

நபிகளார் பிறந்த மண்ணான மக்கா நகரத்தில்  அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள்   முன்னோர்கள் விட்டுச்சென்ற மூடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். அறிமுகமே இல்லாதவர்களுக்கெல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், அற்ப விஷயத்திற்காக பல ஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர்,  நிறவெறி,  கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

இறைத்தூதராக நபிகளார்

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நபிகள் நாயகம் அவர்களது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப் படுகிறார்கள்.

அமைதியின்மை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்த அந்நாட்டில் நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாம் என்ற சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன்பால் மக்களை அழைத்தார்கள்.

இக்கொள்கையின் முக்கிய போதனை படைத்த இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதும் அவனை நேரடியாக இடைத் தரகர்கள் இன்றியும் வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றியும் வணங்க வேண்டும் என்பதும் ஆகும். அது மட்டுமல்ல இறைவன் அல்லாத எதனையும் அதாவது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ அல்லது உயிரும் உணர்வுமற்ற கற்களையோ உருவங்களையோ வணங்குவதும் அவற்றைக் கடவுள் என்று அழைப்பதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பெரும் பாவமாகும் என்றும் இக்கொள்கை கூறுவதை நபிகளார் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

ஆனால் முன்னோர்களின் பழக்கவழக்கங்களே  சரி என்று மூடமாக நம்பியிருந்தவர்களும் கடவுளின் பெயரால் மக்களைச்  சுரண்டிக் கொண்டிருந்தவர்களும் இதைப் பொறுத்துக்கொள்வார்களா? கற்பனை செய்து பாருங்கள்! நம்நாட்டுச் சூழலில் ஏதேனும் ஊரில் பெரும்பான்மை மக்கள் ஒரு தேர்த்திருவிழாவை நடத்திக்கொண்டு இருக்கும்போது அம்மக்களிடம் சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்துப் பேசினால் என்ன நடக்கும்?  யோசித்துப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

ஆம், நபிகளாரும் அவரோடு  சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களும் பயங்கரமான எதிர்ப்புகளையும் சித்திரவதைகளையும் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் இறைவனின் உதவியாலும் நபிகளாரின் துவளாத பிரச்சாரத்தினாலும் கொள்கை உறுதிப்பாட்டினாலும் இஸ்லாம் தடைகளை மீறி வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது.

சத்தியத்தின் வளர்ச்சி

நாட்கள் செல்லச்செல்ல இஸ்லாத்தின் கொள்கைகளை தங்களின் சூழ்ச்சிகளால் வென்றெடுக்க இயலாது என்பதை மக்கத்து (இறை) நிராகரிப்பாளர்கள் உணர்ந்தனர்.  முஹம்மது (ஸல்) அவர்கள் இறைசெய்தி என்று கூறுவது அனைத்தும் அவர்களின் சொந்த கருத்தல்ல மாறாக அனைத்துலகையும் படைத்த இறைவனால் அருளப்படும் இறைச்செய்தியே என்பதை அறிந்து கொண்ட அக்குறைஷித் தலைவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒரு நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். நிபந்தனை என்னவெனில் அக்குறைஷித் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்றபின் அவர்கள் இருக்கும் அவையில் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் அவர்களோடு அமர்ந்துவிடக்கூடாது என்கின்றனர். முதலில் இந்நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அக்குறைஷித் தலைவர்களை இஸ்லாத்தை ஏற்கச்செய்யலாம், பின்னர் இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளை அறிந்தபின் தங்களின் நிபந்தனையின் தவறை தாங்களாகவே உணர்ந்து விளங்கிக் கொள்வார்கள் என்ற முடிவு நபி (ஸல்) அவர்களின் எண்ண ஓட்டத்தில் இருந்தது.

சமத்துவத்தில் சமரசமில்லை!

அந்த தருணத்தில் குறைஷிகளின் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றிருந்த  அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) என்ற கண்பார்வையற்ற ஒரு நபித்தோழர் அந்த அவைக்கு வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைக்கிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் போன்றவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் சபைக்கு வரக்கூடாது என்ற நிபந்தனையைப் பற்றித்தானே குறைஷித்தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறனர். இந்த நேரத்தில் இவர் அவைக்கு வருகிறாரே என்று முகம் சுளிக்கின்றனர்.

உதாரணமாக, நாட்டின் ஜனாதிபதியிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு இனப்போராளித் தலைவனை அந்நேரம் பார்த்து ஓர் அடிமட்டத் தொண்டன் தொடர்ந்து செல்பேசியில் அழைத்தால் அத்தலைவனின் நிலையை நீங்கள் கற்பனை செய்யமுடியும். இங்கு நபிகளார் சுயலாபத்துக்கான பேச்சுவார்த்தை அல்ல. பொது நலனுக்கான ஒரு சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் நடந்த இந்த எதிர்பாராத குறுக்கீடு நபிகளாரை அதிருப்தி கொள்ள வைத்தது.

ஆதிக்க சக்திகளுக்கு இறைவனின் எச்சரிக்கை!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்தது கண்பார்வையற்ற அந்நபித்தோழருக்கு தெரியாது. இருப்பினும் இறைவன் புறத்திலிருந்து கடுமையான வாசகங்களோடு எச்சரிக்கை வருகிறது. 'அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்' என்று துவங்கும் 'அபஸ' என்ற 90 ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை இறைவன் உடனடியாக அருளினான். அக்குறைஷித் தலைவர்களுக்காக ஒரு பாமர இறைவிசுவாசியிடம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறீர். இஸ்லாத்தை புறக்கணிக்கும் அந்நிராகரிப்பாளரை நேசங்கொண்டு ஒரு இறைவிசுவாசியை புறக்கணிக்கிறீர் என்று நபி (ஸல்) அவர்களைக் கண்டிக்கின்றான். தங்களின் திட்டத்தை உடனடியாகக் கைவிடுகிறார்கள் நபிகளார்! அன்று முதல் மனித உறவுகளில் புது நடைமுறை அமுலுக்கு வருகிறது. மனித வரலாற்றை திருத்தி எழுதிய அந்த திருமறை வசனங்கள் இவையே:

80:1,22. தன்னிடம் பார்வையிழந்தவர் வந்ததற்காக- (நமது நபியாகிய) அவர் கடுகடுத்தார்; மேலும், புறக்கணித்தார்.

80:3. (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக ஆகிவிடக் கூடும் என்பதை உமக்கு எது அறிவித்தது?

80:4. அல்லது அவர் (உம்முடைய உபதேசத்தை) நினைவுபடுத்திக் கொள்பவராகலாம்; அப்போது அவ்வுபதேசம் அவருக்குப் பயனளிக்கும்.

80:5,66. ஆகவே, எவன் பொருளாதார மேம்பாடு உடையவனோ- அவனுக்காக நீர் செவிமடுக்கிறீர்.

80:7. மேலும், அவன் (இஸ்லாத்தை ஏற்காது) பரிசுத்தம் அடையாவிட்டால் உம்மீது குற்றமில்லை.

80:8. இன்னும், எவர் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ அவர்,

80:9,10 அவரோ (அல்லாஹ்வைப்) பயந்த நிலையில் (உம்மிடம் வர) அப்போது அவரை விட்டும் நீர் அசட்டை செய்கிறீர்.

80:11,12 அவ்வாறன்று! நிச்சயமாக (குர்ஆனாகிய) இது உபதேசமாகும். எனவே, எவர் (இதனைக்கொண்டு நேரான வழியில் செல்ல) நாடுகின்றாரோ அவர் இதனை நினைவு கொள்வார்.

இஸ்லாத்தின் உறுதியான நிலைப்பாடு

இந்த சம்பவம் மூலமாக இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தின் உறுதியான தெளிவான நிலைப்பாடு உலகறிய பறைசாற்றப் படுகின்றது. இது உலகைப் படைத்தவன் வழங்கும் வாழ்க்கைத் திட்டம். கெஞ்சிக்கூத்தாடி இதை யார் காலடியிலும் சமர்பிக்க வேண்டியதில்லை.

எந்த ஒரு மனிதனுக்காகவும் குலத்துக்காகவும் நாட்டுக்காகவும் தலைவர்களுக்காகவும் இஸ்லாம் என்ற கொள்கை வளைந்து கொடுக்காது. சந்தர்பவாதத்திற்கு இங்கு இடம் கிடையாது! இதை ஏற்போர் ஏற்கட்டும். மறுப்போர் மறுக்கட்டும். இனம், நிறம், குலம், ஜாதி, செல்வம், செல்வாக்கு, ஆதிக்கம் போன்ற எந்த அடிப்படையிலும் மனிதன் பிற மனிதனை விட உயர்வு பெற முடியாது.

இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் மற்றவரை விட உயர முடியும் என்கிறான் இறைவன்!

 மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)
============== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?