இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 மே, 2016

திருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வேறுபாடுகள்

திருக்குர்ஆன் என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக அவனது தூதர் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக அனுப்பிய அறிவுரைகளின் தொகுப்பாகும். இந்தக் குர்ஆனில் இறைவன் அவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு அவனது வாழ்வின் நோக்கம், மனிதனுடைய வாழ்வில் அவன் கடந்து செல்ல இருக்கின்ற கட்டங்கள் இறுதி விசாரணை, மறுமை வாழ்க்கை, சொர்க்கம், நரகம் என  மனிதனுக்கு தொடர்புடைய விடயங்களை இறைவன் நாடிய விதத்தில் தனது தூதர் மூலமாகத் தெரிவித்துள்ளான். மனிதர்கள் இயற்றிய மற்ற புத்தகங்களோடு ஒப்பிடும்போது திருக்குர்ஆன் ஒரு தனித் தரத்தில் இருப்பதை வாசகர்கள் கவனிக்கலாம். இதற்கு முக்கிய காரணம் இதை இயற்றியவனுக்கும் வாசகர்களுக்கும் இடையேயுள்ள மிகப்பெரிய வேறுபாடாகும்.
ஆசிரியரின் தன்மைகள்
திருக்குர்ஆனை இயற்றியவன் எப்படிப்பட்டவன்? திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் பல்வேறு இடங்களில் இறைவன் தன் தன்மைகளைக் குறிப்பிடுகிறான். உதாரணமாகக் கீழ்கண்ட வசனங்களை கவனியுங்கள்:
= 2:255. அல்லாஹ் - அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
= 3:6. . அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
வாசகர்களின் உண்மை நிலையும் அறிவும்
திருக்குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் வாசகர்களாகிய  நாம் நமது நிலையைப் பற்றி சற்று நினைவுகூர வேண்டும்:
= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே.
= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை.
= மட்டுமல்ல, நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.
நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் நம் விருப்பப்படி நடப்பது அல்ல.
= நமது அறிவு என்பது நமது முன்னோர்கள் இதுவரைத் திரட்டித்தந்தவை, மனிதகுலம் இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக பகுத்தறிந்தவை, மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்டவை, நாம் சுயமாக ஐம்புலன்களின் வாயிலாக அறிந்த தகவல்களை வைத்து பகுத்தறிந்தவை என பலவும் அவற்றில் அடங்கும். இவை ஒட்டுமொத்தத்தையும் ஒரே இடத்தில் திரட்டினாலும் அது இப்பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான அறிவு என்று கூற சற்றும் வாய்ப்பே இல்லை.

அறிவியலின் உண்மை நிலை
= இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் அறிவியலின் சக்திவாய்ந்த உபகரணங்கள் ஒரு  எல்லைவரைதான்  சென்றடைய சக்தியுள்ளவை என்பதை அறிவோம். அவற்றிற்கு அப்பால் உள்ளவற்றை ஓரளவுக்குத்தான் பகுத்தறிய முடியுமே தவிர முழுமையாக  அறிவேன் என்ற வாதத்தை எந்த மனிதரும் முன்வைக்க முடியாது. அதே போல இவ்வுலகத்தில் அனைத்தையும் முழுமையாக அறிவோம் என்று எந்த மனிதர்களும் அல்லது மனிதர்களின் குழுக்களும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் கூறமுடியாது. அவ்வாறு யாராவது கூறினால் மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அது பொய் என்பதும் அறியாமையின் வெளிப்பாடு என்பதும் தெளிவு! நாம் பெறும் அறிவின் வரையறை குறித்து மேலே எடுத்தாளப்பட்டுள்ள திருக்குர்ஆன் (2:255) வசனத்தில் இறைவன் கூறுவதைக் காணலாம்:
“....(படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது;....”  

= அறிவியல் அவ்வாறு தன் எல்லைக்கு உட்படாதவற்றை அறியாதது என்று ஒப்புக்கொண்டு அவற்றை கரும் சக்தி (black /dark energy என்றும் கரும் பொருள் (black /dark matter) என்றும் பெயரிட்டு அழைக்கிறது. அறிவியலின் ஆராய்ச்சி எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சத்தில் சுமார் 96 % இடத்தை கரும்சக்தியும் (74%) கரும்பொருளும் (22%) தக்க வைத்துள்ளன. ஏனைய பொருட்களைப் பார்த்தால் அண்டங்களுக்கு இடையேயுள்ள வாயுப் படலம் 3.6% வீதத்தையும் பிரபஞ்சத்தில் உள்ள ஒளி வீசிடும் பொருட்களும் நட்சத்திரங்களும் 0.4% வீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளன.
ஜப்பானில் உள்ள டோக்கியோ வானியல் ஆய்வுக்கூட இயக்குனர் யுஷிதி கூஷன் (Yushidi Kusan) அவர்களின் கூற்று இங்கு கவனத்திற்குரியதே:
குர்ஆனில் வானியல் தொடர்பான உண்மைகள் இருப்பதைக் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். கவரப்படுகிறேன். நவீன வானியல் ஆராய்ச்சியாளர்களாகிய நாங்கள் இப்பிரபஞ்சத்தின் மிகச்சிறிய பகுதியைத்தான் ஆராய்ந்து வருகிறோம். ஒரு சிறிய பகுதியைப் புரிந்துகொள்வதன்மீதுதான் நாங்கள் எங்கள் முயற்சிகளையெல்லாம் குவிக்கிறோம். ஏனெனில் தொலைநோக்கிகள் வழியாக வானத்தின் ஒரு சில பகுதிகளைத்தான் எங்களால் பார்க்க முடியும். முழு பிரபஞ்சத்தையும் பற்றியெல்லாம் நினைக்கவே முடியாது. குர்ஆனைப் படிப்பதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் காணுவதன் மூலமும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய எனது ஆராய்ச்சியின் எதிர்கால வழியை என்னால் காணமுடியும் என்று கருதுகிறேன்.
ஆக, நம்மை மீறிய நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது என்பதை நேர்மையான பகுத்தறிவாளர்கள் உணர்வார்கள். அந்த சக்தியையே இறைவன் அல்லது கடவுள் என்று அழைக்கிறோம். திருக்குர்ஆன் அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறுவது அந்த இறைவனைத்தான்.

 எனவே முதலாவதாக அவனே எஜமானன் நாமோ அடிமைகள் என்பதால் அவனைக் கேள்விகள் கேட்கவோ அவனது திட்டங்களுக்கு மாற்றாக வேறு ஒன்றைப் பரிந்துரைக்கவோ நமக்கு துளியும் அதிகாரமும் இல்லை அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் நம்வசம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும். இந்த உண்மைகளைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் தனது பலவீனத்தையும்  அற்பநிலையையும் உணராமல் தன்னைத்தானே உயர்வாகக் கருதுவோரை அகங்காரமே ஆட்கொள்கிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் திருக்குர்ஆனை அணுகும்போது அந்த இறை அருட்கொடையில் இருந்து பயன்பெறுவதில்லை. படைத்தவனின் வழிகாட்டுதலை மறுப்பதால் இவர்கள் வாழ்க்கை என்ற பரீட்சையில் வெற்றி பெறுவதில்லை!
= அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். (திருக்குர்ஆன் 6: 21)

= எவன் அல்லாஹ்வின் வசனங்களை புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகி விடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்?  நம்முடைய வசனங்களை விட்டு விலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.” [திருக்குர்ஆன் 6:157]
==================== 

அற்பமான மனிதனும் ஒப்புவமை இல்லா இறைவனும்

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும் http://quranmalar.blogspot.com/2012/09/100.html

வியாழன், 26 மே, 2016

உண்மை இறைவன்பால் திரும்புவோம்


உண்மை இறைவன்பால் திரும்புவோம்

= உங்கள் இறைவன் கூறுகிறான்: என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.(திருக்குர்ஆன் 40:60)
சர்வவல்லமையும் நுண்ணறிவாளனும் ஆகிய இறைவன் மட்டுமே நம் பிரார்த்தனைகளுக்கு பதில்கூறும் ஆற்றல் கொண்டவன். அவன் அல்லாதவற்றுக்கு பிரார்த்தனையை செவிமடுக்கவும் பதிலளிக்கவும் இயலாது. இறைவனுக்குச் சொந்தமான பூமியில் அவனது அருட்கொடைகளை அயராது அனுபவித்துவிட்டு அவனை வணங்காமல் அவன் அல்லாதவற்றை வணங்குவது இறைவனுக்கு செய்யும் நன்றிகேடாகும். இவ்வாறு அகங்காரத்தோடு நடப்பவர்களுக்கு மறுமை வாழ்வில் வாய்க்க இருக்கின்ற தண்டனையை மேற்படி வசனத்தின் மூலம் எச்சரிக்கிறான்.

பலதெய்வ வழிபாட்டின் தீய விளைவுகள்
படைத்த இறைவனை நேரடியாக வணங்குவது என்பது எளிதானது, பொருட்செலவில்லாதது. ஆனால் அவன் அல்லாதவற்றை கடவுளாக பாவித்து வணங்கும்போது மனிதகுலம் பல குழப்பங்களுக்கும் மோசடிக்கும் ஆளாகிறது. படைப்பினங்களையும் உயிரும் உணர்வும் அற்ற பொருட்களை கடவுளாக பாவிக்கும்போது இறைவனைப்பற்றிய மதிப்பு அல்லது மரியாதை மரியாதை உணர்வு (seriousness) அகன்று போவதால் இறையச்சம் என்பது மக்களிடையே இல்லாமல் போய்விடுகிறது. அதனால் சமூகத்தில் பாவங்கள் மலிகின்றன. இடைத்தரகர்கள் பலர் கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்கும் அவர்களிடையே மூட நம்பிக்கைகள் பரவுவதற்கும் வழிகோலுகிறது. கடவுளை பலரும் பல்வேறுவிதமாக சித்தரிக்கும்போது அதன் அடிப்படையில் ஒரே மனிதகுலம் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அவர்களிடையே கலகங்கள் உருவாகக் காரணமாகிறது. 
இவ்வுலகின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்து சென்ற இறைவனின் தூதர்கள் அனைவரும் படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும் படைப்பினங்களை எக்காரணத்தைக் கொண்டும் வணங்கக் கூடாது என்பதை மிக்க கண்டிப்போடு மக்களுக்கு போதனை செய்தார்கள். இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக அருளப்பட்ட திருக்குர்ஆனும் அதையே பறைசாற்றி நிற்பதை நாம் காணலாம்:

நன்றிகேடு
அவ்வாறு போலியான தெய்வங்களை வணங்குவோர் இறைவன் வழங்கியுள்ள அருட்கொடைகளைப் பற்றி சற்று சிந்தித்தாலே அவர்களுக்கு உண்மை விளங்கிவிடும். இவர்களின் படைப்பிலும் இவர்களைச் சூழவுள்ள படைப்பினங்களின் படைப்பிலும் பரிபாலனத்திலும் இவர்கள் அன்றாடம் அனுபவித்து வரும் அருகொடைகள் எதிலும் இவர்கள் எடுத்துக் கொண்டுள்ள போலி தெய்வங்களின் பங்களிப்பு சிறிதும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டாமா?

40:61நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)

40:62- 63 அவன்தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை; எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்? அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்களும் இவ்வாறே திசை திருப்பப்பட்டனர்.
பூமியெங்கும் பரவிக்கிடக்கும் இறைவனின் படைப்பினங்கள் அனைத்தும் அவனது உள்ளமையையும் அவன் மனிதர்கள் மீது கொண்ட கருணையையும் பறை சாற்றி நிற்பதை நாம் காணமுடியும். மனிதன் என்ற ஒரு ஜீவி இந்த பூமியில் வாழ்கின்றான் என்பதற்காகவே இவை அனைத்தும் படைக்கப்பட்டு அவனது வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கும் வகையிலும் அவனுக்கு இடையூறு நேராத வகையிலும்  இயக்கப்பட்டு வருவதை சற்று சிந்தித்தாலே உணரலாம்.

40:64அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன்தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
அப்படிப்பட்ட உண்மை இறைவன்பால் அவன் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றியறிதலோடு அவனுக்கு அடிபணிந்தவர்களாக தூய உள்ளத்தோடு அவன்பால் திரும்புவதே அறிவுடைமை! அந்தக் கருணை மிக்க நம் இரட்சகனே நமது பிரார்த்த்னைகளுக்கு பதிலளிக்கக் கூடியவனும் ஆவான்.

40:65அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

புதன், 25 மே, 2016

தோல் எனும் உயிர்த்தோழன்!


தோல் படுத்தும் பாடு!
மனித உடலில் தோல் வகிக்கும் பங்கு அலாதியானது. அதற்கு அழகைக் கொடுப்பது அதுதான், மனிதனுக்கு சமூகத்தில் மதிப்பைப் பெற்றுத்தருவதற்கும், அழகன், அழகி என்றெல்லாம் போற்றப்படுவதற்கும் அடுத்த பாலினத்தவரை கவருவதற்கும், அந்த கவர்ச்சியை மூலதனமாக வைத்தே விளம்பரம், வியாபாரம், சினிமா என பல துறைகள் செழிப்பதற்க்கும் காரணமாக அமைகிறது தோல்! அதே கவர்ச்சி பலரை உழைப்பின்றியே கோடீஸ்வரர்களாக ஆக்கியுள்ளது. பலரை மக்கள் போற்றும் நாயகர்களாகவும் இஷ்ட தெய்வங்களாகவும் ஆக்கியுள்ளது. தகுதியே இல்லாத  சிலரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகுபார்க்கவும் காரணமாக அமைகிறது!

 உடலியல் ரீதியாகவும் தோலின் பங்கு மிக முக்கியமானது. குளிர், வெப்பம், வலி, சுகம், மென்மை, கடினம் போன்ற பலவற்றையும் உணர்ந்து மூளைக்கு அறிகுறிகள் அனுப்பி உடலின் பாதுகாப்புப் பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது தோல். உடலை நோக்கி வரக்கூடிய எந்த ஆபத்தையும் உடலை அண்டவிடாமல் வலி என்ற முன்னெச்சரிக்கை ஏற்பாட்டினால் பாதுகாக்கிறது தோல்!
வலியின் உறைவிடம்
 வலி என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். போக்குவரத்து நெரிசல் நிறைந்த ஒரு வீதியில் உங்கள் டூ வீலரில் பயணித்து விட்டு வீடு வந்து சேர்ந்திருப்பீர்கள். வீடு வந்து சேர்ந்ததும்தான் காண்பீர்கள், உங்கள் காலின் ஒரு சுண்டு விரல் மிஸ்ஸிங் என்பதை! வழியில் எவ்வளவு இரத்தம் வழியில் கொட்டிப் போயுள்ளது என்பதையும் அறிந்திருக்க மாட்டீர்கள்!  
அவ்வளவு ஏன்? வலி என்ற ஒன்று இல்லாவிட்டால் சாலைப் போக்குவரத்து தாறுமாறாகப் போய்விடும். சட்டம், நீதி, நியாயம் என்பவை மட்டுமல்ல, மனிதவாழ்வே  அர்த்தமற்றாதாகிப் போய்விடும். அனைத்தும் வலி என்ற உணர்வையே மையம்கொண்டுள்ளன. ஆம், அந்த வலி மையம்கொண்டு இருப்பது இந்தத் தோலில்தான்! வலி உணரும் நரம்புகளைத் (pain receptors)  தாங்கி நிற்பது இந்தத் தோல்தான்!
தோல் என்ற அற்புதத்தைப் படைத்த இறைவன் தன் திருமறையில் வெளிப்படுத்தியுள்ள பிரபஞ்ச இரகசியங்களில் இதுவும் ஒன்று என்பது வேறு விடயம்.
 4:56யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்களின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

காட்டிக்கொடுக்கும் தோல்
இப்போது நாம் கூறவந்த விடயத்திற்கு வருவோம்.  மனித உடலை இவ்வுலகத்தின் தீமைகளில் இருந்து பாதுகாக்க எவ்வாறு தோலை முக்கிய பங்கு வகிப்பதாக இறைவன் ஆக்கியுள்ளதை அறிந்தோம். அதே தோலின் மற்றொரு முக்கிய பங்கையும் அறிந்து கொண்டால் மறுமை ஆபத்துகளில் இருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

இன்று காவல்துறையினர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  முன்னேற்றத்தின் காரணமாக குற்றவாளிகளை உடனுக்குடன் பிடிப்பதைக் கண்டு வருகிறோம். இன்றைய மொபைல் போன் மற்றும் cctv கேமராக்கள் பயன்பாடுகள், வாய்ஸ் ட்ராக்கிங் போன்ற பலவும் குற்றவாளிகளைக் கையும்களவுமாக அடையாளம் காட்டிவிடுகின்றன.
 இறைவன் மனிதனுக்காகப் படைத்த பொருட்களின் இயல்புகளை மனிதன் சிறுகச்சிறுக ஒவ்வொன்றாகக் கண்டறிந்து அதைத் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும்போது உண்டாகும் நேட்டங்களையே அறிவியல் வளர்ச்சி என்கிறோம். உண்மையில் பொருட்களின் இயல்புகளும் அவை இயங்கும் விதிகளும் அவை படைக்கப்படும்போது இருந்தே இருந்து வருகின்றன. மனிதன் அவற்றைக் கண்டுபிடிக்கவும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் இவ்வளவு காலமாயிற்று என்பதே உண்மை!
அந்த வகையில் நமது தோலுக்கு இருக்கும் ஒரு சிறப்புத் தன்மையை இறைவன் இன்றே எடுத்துக் கூறுவதை கீழ்காணும் திருக்குர்ஆன் வசனங்களில் .காண்கிறோம். அந்த வசனங்களைக் காணும் முன் இவ்வாழ்க்கை பற்றிய சில உண்மைகளை இங்கு நினைவு படுத்துவது அவசிய,மாகிறது.
வாழ்க்கையும் நோக்கமும்
இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒவ்வொருவரும் புற்றீசல்களைபோல் வந்து செல்வதை அறிவோம். இந்த குறுகிய தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையாகும். இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமும் ஆகும். இங்கு நமது ஒவ்வொருவரதும் செயல்கள் பல வழிகளில் பதிவாகின்றன. இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்ட பின் இறைவனின் கட்டளை வரும்போது முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை இங்கு வாழ்ந்து மறைந்த அனைவரும் நீதி விசாரணை செய்யப்படுவதற்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள்.. விசாரணையன்று நாம் இந்த பூமியில் செய்த புண்ணியங்கள் மற்றும் பாவங்கள் அனைத்தும் நமக்கு முன் எடுத்துக்காட்டப்படும். அதாவது இறைவன் எந்த செயல்களை ஏவினானோ அவையே புண்ணியங்கள் மற்றும் எதைவிட்டும் தடுத்தானோ அவையே பாவங்கள். விசாரணையின் முடிவில் யாரிடம் புண்ணியங்கள் மிகைக்குமோ அவர்களுக்கு சொர்க்கமும் யாருடைய பாவங்கள் மிகைக்குமோ அவர்களுக்கு நரகமும் விதிக்கப்படும்.
ஆக, யார் இறைவன் கூறும் எவல்விலக்கல்களுக்கு ஏற்ப வாழ்ந்தார்களோ அவர்களே இந்தப் பரீட்சையில் வெற்றி அடைகிறார்கள். இறைவனின் ஏவல் விலக்கல்களை அடிப்படையாகக்கொண்ட வாழ்க்கைத் திட்டமே இஸ்லாம் என்று அறியப்படுகிறது.  
நமக்கெதிரான சாட்சிகளாக நம் அவையவங்கள்
சரி, இந்த வாழ்க்கைப் பரீட்சைக்கும் தோலுக்கும் என்ன தொடர்பு? ஆம், பிறப்புமுதல் இறப்புவரை மனிதனோடு ஒட்டி உறவாடும் இந்தத் தோலில் மனிதனின் அனைத்து செயல்களின் பதிவுகளும் காணப்படுகின்றன என்பதே நாம் சிந்திக்க வேண்டிய விடயமாகும். மேற்கூறப்பட்ட நீதிவிசாரணையின் போது நமது தோலே நமக்கு எதிரியாக சாட்சி சொன்னால் எப்படியிருக்கும்? ... இதோ அந்தக் காட்சியை திருமறை படம்பிடித்துக் காட்டுகிறது:

41:19. மேலும், இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.
41:20இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
ஆம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவை அவனுடைய காதுகளும் கண்களும் தோல்களும். ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும் ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும் அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும் இன்றைய அறிவியல் நமக்கு  சொல்லித் தருகிறது. இவற்றோடு தோல்களும் நம்  செயல்பாடுகளின் பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன என்பது மேற்படி வசனம் எச்சரிக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணையின்போது அவை மனிதனைக் காட்டிக்கொடுக்கும்போது அங்கு நடக்கும் உரையாடலைப் படம்பிடித்துக் கட்டுகிறான் இறைவன்:
41:21அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்என்று கூறும்.
41:22உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
41:23ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).
41:24ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.

இன்று நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் காது, கண், தோல் இவற்றை மறைத்துக்கொண்டு செய்ய முடியாது. இந்த உணர்வு நம்மில் எப்போதும் இருக்குமானால் நம்மைப் பாவங்கள் அண்டாது.