இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஜூலை, 2015

பொருள் போதையால் அழிந்த நண்பன்!

பொருள் போதையால் அழிந்த நண்பன்!
 இவ்வுலகில் செல்வம் என்பது முழுக்க முழுக்க இறைவனுக்கு சொந்தமானது. மனிதனின் உண்மை நிலையை பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும் எவரும் அது மனிதனிடம் தற்காலிகமாக வந்து செல்வது என்பதை உணர்வார்கள். செல்வம் என்பது இறைவனால் மனிதனுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் சோதனைப் பொருளாகும் என்பதை உணர்ந்த உண்மையான இறைவிசுவாசிகள் அவற்றை முறைப்படி கையாண்டு மறுமையில் சொர்க்கத்தைப் பெற முயற்சிப்பார்கள். ஆனால் இதை உணராத அறிவீனர்கள் இம்மையிலும் நிம்மதியை இழக்கிறார்கள். மறுமையிலும் நரக வேதனையை அடைகிறார்கள்.
 அவ்வாறு தங்களுக்கு வழங்கப்பட்ட செல்வத்தைப் பற்றி இருவேறு கண்ணோட்டம் கொண்ட இரு நண்பர்களின் சரிதையைத் திருக்குர்ஆன் தனது பதினெட்டாம் அத்தியாயத்தில் கூறுகிறது.
18:32. (நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.
18:33. அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.
சற்று கற்பனை செய்து பாருங்கள்...
 இரண்டு மிகப்பெரிய திராட்சைத் தோட்டங்கள்.. அவ்விரண்டையும் பேரீத்தமர தோட்டங்கள் சூழ்ந்திருக்கின்றன. இப்படிப்பட்ட பெரும் தோட்டங்களின் நடுவே தானியங்களை உற்பத்தி செய்யும் வயல். இவற்றின் நடுவே சதா ஒலித்தோடிக் கொண்டிருக்கும் ஒரு ஆறு! அங்கு விளைச்சலுக்குப் பஞ்சமில்லை. இவற்றைப் பராமரிக்க ஏராளமான பணியாளர்கள். இவைபோக அவனுக்கு இன்னும் பல வருமானங்களும் இருந்தன.
 அந்த இரு நண்பர்களில் ஒருவன் இப்படிப்பட்ட பெரும் செல்வந்தன். அவனுக்கு தன் செல்வம் சேரச்சேர, விளைச்சல்கள் வெகுவாக அதிகரிக்க அவனுக்கு செல்வச்செருக்கு என்ற போதை தலைக்கேறியது. மனித வாழ்வு என்பது தற்காலிகமானதே, விவசாயமும் விளைச்சலும் இறைவன் தருவதே, மரணமும் அதைத் தொடர்ந்து மறுமையும் வர உள்ளன, இறைவனிடம் தனக்கு வழங்கப்பட்ட செல்வம் பற்றி விசாரணை உள்ளது என்ற உண்மைகளையெல்லாம் அவனுக்கு ஷைத்தான் மறக்கடித்தான்.
 தன்னிலை மறந்து தன் தோழனிடம் தன் செல்வநிலை பற்றி பெருமை பாராட்டினான் இவன்.

18:34. இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன; அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக: நான் உன்னை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்என்று கூறினான்.
18:35. (பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லைஎன்றும் கூறிக் கொண்டான்.
18:36. (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்என்றும் கூறினான்.

செல்வச்செருக்கு அவனை எப்படியெல்லாம் பிதற்ற வைக்கிறது பாருங்கள்! ஷைத்தானின் தாக்கம் அப்படிப்பட்டது. அவனது தோழனோ நேர் எதிரான கருத்தைக் கொண்டிருந்தான். அவனது உண்மை நிலை பற்றியும் இவற்றின் பின்னணியில் அனைத்துக்கும் காரணமாக இருக்கும் இறைவனைப் பற்றியும்  நினைவூட்டினான்:
18:37. அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.
18:38. ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்:) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் –
செல்வச்செருக்கு எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்யத் தூண்டுகிறது! நேற்றுவரை ஒன்றுமே இல்லாமல் இருந்து, பின்னர் ஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து படிப்படியாக வளர்த்து மனிதனாக உருவாக்கி அவனுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்துப் பரிபாலித்து வருபவனை மறுத்து, தன் செல்வமே எல்லாம் அதுவே கடவுள் என்று வழிபடும் நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்கிறது. படைத்த இறைவனுக்கு பதிலாக மற்றவர்களையோ, உயிரற்ற உணர்வற்ற பொருட்களையோ வணங்குவதே இணைவைத்தல் என்று அறியப்படுகிறது. இப்பாவத்தை இறைவன் மன்னிக்காத பாவம் என்றும் இதைச் செய்பவர்களுக்கு மறுமையில் தண்டனை நிரந்தர நரகம் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

18:39. மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” – அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று நீ கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -
18:40. உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.
18:41. அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்என்று கூறினான்.
 அறிவும் விவேகமும் நண்பனின் அறிவார்ந்த வார்த்தைகள் அவனைத் திருத்தவில்லை. இறுமாப்பு அவனை சுயநினைவுக்கு மீளாமல் தடுத்தது!
நண்பனின் கூற்று போல இறைவன் அந்த அகங்காரிக்கு வழங்கியவற்றைப் பின்வாங்கிக் கொள்ள தீர்மானித்தான் போலும்! அவனுக்குத்தான் அது எளிதாயிற்றே. அவனைப் பொறுத்தவை ‘ஆகுக’ என்று கட்டளையிட்டால் எக்காரியமும் ஆகிவிடுமே!
18:42. அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!என்று கூறினான்.
18:43. மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை; ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.
18:44. அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.
இந்த இரு நண்பர்களின் சரிதையைக் கூறிய இறைவன் தொடர்ந்து வாழ்வின் உண்மை நிலையைப் பற்றி சிந்திக்க அழைகிறான்:

18:45. மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன; ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.

சனி, 25 ஜூலை, 2015

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

Related image

அண்மையில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு இருந்த திருக்குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளை ரேடியோகார்பன்' பரிசோதனைக்கு உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இது கி.பி. 568 மற்றும் 645-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என 95.4 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கணித்துள்ளனர். (ஆதாரம்: http://www.birmingham.ac.uk/news/latest/2015/07/quran-manuscript-22-07-15.aspx
(மேலே படத்தில் அந்த கையெழுத்துப் பிரதிக்குப் பக்கத்தில் இருப்பது இன்றிய கம்ப்யூட்டர் பிரதி. இரண்டும் அட்சரம் பிசகாமல் அப்படியே இருப்பதைக் காணலாம்.)
உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இது ஆச்சரியத்துக்குரிய ஒரு செய்தி அல்ல என்ற கூறலாம். ஏனெனில் அருளப்பட்ட காலம் முதல் இது இன்றுவரை திருக்குர்ஆனை மூல மொழியில் ஓதிவருவது அவர்களின் பழக்கமாக உள்ளது. ஒலிவடிவிலேயே முழுக் குர்ஆனும் உலகெங்கும் பிரபலமாகி இருப்பதால் அதை யாரும் சிதைக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
 இதைப் பற்றி இறைவனும் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம்” (திருக்குர்ஆன் 15:9)
இப்படியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்- இன்று உலகில் காணும் குர்ஆன் உள்ளிட்ட எல்லா மத வேதபுத்தகங்களையும் மற்ற புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் எல்லாம் திரட்டி ஒரு மூலையில் இட்டு தீக்கிரையாக்கினாலும் மறுபடியும் திரும்ப எழுதப் படக்கூடிய ஒரே புத்தகம் திருக்குர்ஆன் மட்டுமே! காரணம் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும்! மேற்படி இறைவனின் வாக்குறுதி புலர்ந்து வருவது புலப்படுகிறது அல்லவா?
முந்தைய வேதங்கள் ஏன் பாதுக்காக்கப்படவில்லை?
இப்போது உங்கள் மனங்களில் எழும் ஒரு சந்தேகத்தை ஆராய்வோம். முந்தைய இறைவேதங்களும் இறைவனால் அருளப் பட்டவைதானே , அவை ஏன் பாதுகாக்கப்படவில்லை?
அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்காக குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டவையாக இருந்தன என்பதே அதற்குக் காரணம். உதாரணமாக ஒரு நாட்டின் அரசியல் சாசனம் புதுப்பிக்கப் படும்போது பழையது காலாவதியாகி மதிப்பற்றவையாகி விடுகிறதல்லாவா? அதேபோலத்தான் முந்தைய வேதங்கள் காலாவதியாகிப் போனதனால் அவை பாதுகாக்கப் படவில்லை.
மாறாக திருக்குர்ஆன் ஏன் பாதுகாக்கப் படுகிறது?
இது இறைவனின் இறுதிவேதம். இறுதிநாள் வரை இனி வரப்போகும் மக்களுக்கு இதுதான் இறை வழிகாட்டுதல். இதன் அடிப்படையிலேயே மறுமை நாளில் நம் பாவபுண்ணியங்கள் தீர்மானிக்கப்படும்.
திருக்குர்ஆனின் தனித்தன்மைகள்
முந்தைய வேதங்களின் இன்று கிடைக்கும் பிரதிகளோடு ஒப்பிடும்போது திருக்குர்ஆனின் கீழ்கண்ட தனித்தன்மைகளை நீங்கள் உணரலாம்:
அ) மூலமொழியில் பாதுகாக்கப் படுதல் : இன்று உலகில்  திருக்குர்ஆனுக்கு முன்னர் அருளப்பட்ட இறைவேதங்களின் மொழிபெயர்ப்புகளை மட்டுமே காணமுடிகிறது. அவற்றின் மூல வசனங்களைக் காண முடிவதில்லை. இதுதான் அவ்வேதத்தின் மூலம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறப்படும் எதையும் நீங்கள் தேடினாலும் காணமுடியாது.
     ஆனால் திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் மூலவசனங்கள் அருளப்பட்ட நாள் முதல் இன்றுவரை வருடங்கள் 1430 ஆகியும் அட்சரம்பிசகாமல் அப்படியே பாதுகாக்கப் படுவதை நீங்கள் காணலாம். அருளப்பட்ட நாள் முதல் அதிகமதிகமான முஸ்லிம்களின் தொடர்ந்த ஓதுதலின் காரணமாக அது ஒலிவடிவிலேயே உலகெங்கும் பிரபலாமாகி இருப்பதும் இதற்கு ஒரு காரணம் எனலாம்.
ஆ) நூறு சதவீதம் இறைவனின் வார்த்தைகள் மட்டுமே: வானவர் ஜிப்ரீல் மூலமாக இறைவன் அருளிய வேத வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன். இதில்  முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளோ அல்லது வேறு எந்த மனிதர்களின் வார்த்தைகளோ சிறிதும் இடம்பெறவில்லை. முஹம்மது நபி அவர்களின் உபதேசங்களும் அவரைப் பற்றிய குறிப்புகளும் அல்லது அவரது வாழ்க்கைக்  குறிப்புகளும் ஹதீஸ் என்ற பெயரில் தொகுக்கப்பட்டு தனியாகப் பாதுகாக்கப் படுகின்றன, ஆக திருக்குர்ஆனில் முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகள் மட்டுமே உள்ளன. ஆனால் இன்று கிடைக்கும் முந்தைய வேதங்களின் பிரதிகளில் இந்தத் தனித்தன்மையைக் காண முடியாது.
உதாரணமாக பைபிளில் இறைவார்த்தைகளும் உள்ளன. இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளும் உள்ளன. மேலும் பிற்காலத்தில் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு அப்போஸ்தலர்கள் இயேசுவைக் குறித்து எழுதிய சம்பவக் குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன என்பது கிருஸ்துவ உலகமே ஒப்புக்கொள்ளும் உண்மையாகும்.  
இ) சந்தேகங்களுக்கு இடமேயில்லை
2:2. இது திரு வேதமாகும்;. இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
இப்படியொரு வாசகத்தை நீங்கள் எந்த மனித ஆக்கங்களிலாவது காண முடியுமா? அதாவதுநான் சொல்லப் போவது நூறு சதவிகிதமும உண்மை, இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.என்று எந்த மனிதராவது தனது ஆக்கத்தில் சொல்லத் துணிவாரா? இதுவே திருக்குர்ஆன் இவ்வுலகைப் படைத்தவனின் – சர்வஞானம் கொண்டவனின் – ஆக்கம் என்பதை நிரூபிக்கிறது.
ஈ) சந்தேகம் கொள்வோருக்கு அறைகூவல் !
இவ்வேதத்தைப் பற்றி சந்தேகம் கொள்வோரைப் பார்த்து இறைவன் விடுக்கும் அறைகூவலையும் எச்சரிக்கையையும் பாருங்கள்:
2:23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (காப்ரியேல்) மூலம் அருளப்பட்ட இந்த வேதவசனங்களில் உங்களில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் இது போன்றதொரு அத்தியாயத்தையேனும் கொண்டுவருமாறு மனிதகுலத்தை நோக்கி சவால் விடுக்கிறான் இவ்வுலகின் அதிபதி!
 2:24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! மனிதர்களும் கற்களுமே அதன் எரி பொருட்கள். (இவ்வேதத்தை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.
உ) இறைவனுக்கே உரிய அதிகார தோரணை!
 மேற்படி சவாலை எதிர்கொள்ள முடியாத சத்திய மறுப்பாளர்களுக்கு தொடர்ந்து அவர்களுக்குக் காத்திருக்கும் தண்டனையைக் குறித்து எச்சரிக்கையும் விடுக்கிறான். 
 2:24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! மனிதர்களும் கற்களுமே அதன் எரி பொருட்கள். (இவ்வேதத்தை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வசனங்கள் மூலம் இறைவன் அகல உலக மக்கள் அனைவரையும் நோக்கி விடுக்கும் செய்தி இதுதான்:
இதோ இந்தத் திருக்குர்ஆன் என்பது எனது கட்டளைகளைக் கொண்ட இறுதிவேதம். அகில உலகிலும் இனி இறுதிநாள் வரை வரப்போகும் அனைத்து மக்களுக்காகவும் வழிகாட்ட இது அருளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நீங்கள் வாழக் கடமைப்பட்டுள்ளீர்கள். இதைப் பின்பற்றி வாழ்ந்தால் உங்களுக்கு மோட்சம் உண்டு. மாறாக யார் இதை மறுத்து இதில் சந்தேகம் கொள்கிறார்களோ அவர்கள் தங்கள் கூற்றை நிரூபிப்பதற்காக இது போன்ற ஒரு அத்தியாயமேனும் இயற்றிக் காட்டட்டும். அதற்காக அகில உலக மக்களையும் அனைத்து சக்திகளையும் வேண்டுமானால் உதவிக்கு அழைத்துக் கொள்ளட்டும்.
அந்த முயற்சியில் நீங்கள் தோல்விகண்டால் - நிச்சயமாக அது நீங்கள் தோல்வி காண்பீர்கள் என்பது திண்ணம் - உங்கள் இயலாமையை ஒப்புக்கொண்டு இறைவனிடம் திரும்புங்கள். அவ்வாறு திரும்ப மனம் இல்லையானால் இறைவனையும் அவன் வேதத்தையும் மறுப்போருக்காக தயார் செய்யப்பட்டுள்ள நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள். அது எப்படிப்பட்ட கடுமையான நெருப்பு என்றால் தீய மனிதர்களும் கற்களுமே அதன் விறகுகளாக எரிந்துகொண்டிருக்கும்.
அதாவது இவ்வுலகின் அதிபதி தன் அடிமைகளை நோக்கி திருக்குர்ஆனைக் காட்டி இதை ஏற்றுக் கொள்ளுங்கள்! இல்லையேல் உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்று கூறும் பாணியில் அமைந்துள்ளன இவ்வசனங்கள்! 
ஊ) முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது இவ்வேதம்
ஒன்றை இறைவேதம் என்று சொல்வதாக இருந்தால் அதில் எவ்வித முரண்பாடும் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் மனிதனின் வார்த்தையில் தான் முரண்பாடுகள் வரும். ஏக இறைவனின் வார்த்தையில் முரண்பாடுகள் வருவதற்கு அறவே வாய்ப்பிருக்காது. அப்படி இருந்தால் அது மனிதனின் வார்த்தையாகத் தான் இருக்குமே தவிர இறைவேதமாக இருக்க முடியாது.
இவ்வுலகில் காணப்படும் நூல்களில் பல முன்னுக்குப்பின் முரண்படுவதைக் காணலாம். அதாவது அந்நூலின் பக்கங்களுக்குள் காணப்படும் முரண்பாடு. உதாரணங்கள் பல இருந்தாலும் இதைப் புரிந்து கொள்வதற்காக ஒன்றை மட்டும் இங்கு  காண்போம்:
பைபிளின் எஸ்றா 2 வது அதிகாரத்திற்கும், நெகேமியா 7 வது அதிகாரத்திற்குமிடையே உள்ள காணப்படும் முரண்பாடு
ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். (நெகேமியா 7:10)
ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.(எஸ்றா 2:5)
எ) காலப்போக்கில் உண்டாகும் முரண்பாடு :
உதாரணமாக  ஐம்பது வருடம் முன்பு எழுதப்பட்ட ஒரு நூலை எடுத்து இன்று வாசித்துப் பாருங்கள். அது அறிவியல் நூலேயானாலும் சரி, ஆன்மீக அல்லது சட்ட நூல்களானாலும் சரி. இன்றைய மனிதனின் அறிவு வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சியின் பின்னணியில் ஏராளமான முரண்பாடுகளை நீங்கள் காண முடியும்.
ஆனால் திருக்குர்ஆனின் அற்புதம் என்னவென்றால் மேற்படி இரண்டு முரண்பாடுகளும் எள்ளளவும் இல்லை. இறைவன் கூறுகிறான் 
4:82    அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா(இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
அருளப்பட்ட காலம் தொட்டு சுமார் 1430 வருடங்கள் கடந்தாலும் இன்று வரை எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் வெற்றிநடை போடுகிறது திருக்குர்ஆன்!
திருக்குர்ஆனில் முன்னுக்குப்பின் முரண்பாடுகளும் இல்லை. கால வளர்ச்சியின் மூலம் உண்டாகும் மனித ஆக்கங்களில் காணப்படும் முரண்பாடுகளும் அறவே இல்லை. காரணம் இது முக்காலத்தையும் அறிந்தவனும் நுண்ணறிவாளனும் ஆகிய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டது!

39:1(யாவரையும்) மிகைத்தவனும் ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறங்கியருளப் பெற்றுள்ளது.
விஞ்ஞானமும் மனித அறிவும் வளர வளர புதுப் புது ஞானங்கள் மனிதனுக்குப் புலப்படும்போது எந்த மனித ஆக்கங்களும் காலமாற்றத்தால் ஏற்படும் முரண்பாடுகளுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. ஆனால் திருக்குர்ஆன் இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளோடும் சரித்திர உண்மைகளோடும் சிறிதும் முரண்படாமல் தொடர்கிறது! உண்மையில் நவீன விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் இறைவனின் படைப்பினங்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்போதுதான் திருக்குர்ஆன் உள்ளடக்கி வைத்திருக்கும் அறிவின் புதையல்களும் நமக்குப் புலப்படுகின்றன. 

 இவைபோக இலக்கியத்தில் திருக்குர்ஆனின் உன்னத நிலைமை, அனைத்து உலக  மக்களையும் கவரும் இசைநயம், முக்காலத்து மக்களுக்கும் அற்புதமாக பொருந்திப் போவது, மனிதனின் அனைத்து வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு போன்ற பல சிறப்புகள் திருக்குர்ஆனை ஒப்பற்ற உயர்வுக்குக் கொண்டு செல்கின்றன.

http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html 
நாம் ஏன் பிறந்தோம்?

வியாழன், 23 ஜூலை, 2015

மெய் வருத்தத்தில் ஆன்மீக நேட்டம் இல்லை!


= உதாரணம் ஒன்று
நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!'' என்று கேட்டார்கள். நான் "ஆம்! இறைத்தூதரே!''  என்றேன். நபி (ஸல்) அவர்கள் "இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அதுபோன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள்.
நான் சிரமத்தை வலிய ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! '' அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று நான் கூறினேன்.
 அதற்கு நபி (ஸல்) அவர்கள் "தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள். "தாவூத் நபியின் நோன்பு எது?' என்று நான் கேட்டேன். "வருடத்தில் பாதி நாட்கள்!''  என்றார்கள்.
 "அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் "நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய் விட்டேனே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!''  என அபூசலமா  அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: புகாரி (1975)

மேற்படி உதாரணத்தில் இருந்து அதிகமாக நோன்பு என்ற வணக்கத்தை செய்தவரை அழைத்து நபி ஸல் அவர்கள் பாராட்டவில்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணக்கத்தின் பெயரால் தன்னுடைய ஆரோக்கியத்தை கெடுத்து விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த மற்றொரு நிகழச்சியும் கவனிக்கத்தக்கது.
 உதாரணம் இரண்டு
நபி (ஸல்) அவர்கள் (வெள்üக்கிழமை) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஒரு மனிதர் வெயிலில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், "(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் எனவும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) எனவும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் எனவும் நேர்ந்து கொண்டுள்ளார்'' என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும். நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி (6704)

ஆரோக்கியத்தை கெடுக்கும் விதமாக நேர்ச்சை செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள் என்பதை இந்த நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

“வலிமையானவனாக இரு இறைவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன் பலமான இறைநம்பிக்கையாளனே! எனவே பலமான இறை நம்பிக்கையாளனாக இருப்பதற்கு ஆரோக்கியம் அவசியம். அந்த ஆரோக்கியத்திற்கு ஆசைப்படவேண்டும். அதற்காக முயற்சிக்க வேண்டும்.
 பலமான இறை நம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரைவிடச் சிறந்த வரும் இறைவனுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்து விடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!'' என்று (அங்கலாய்த்துக்) கூறாதே.
மாறாக, "இறைவனின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்''  என்று சொல். ஏனெனில், ("இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே' என்பதைச் சுட்டும்) "லவ்' எனும் (வியங்கோள் இடைச்) சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :முஸ்லிம் (5178)
================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் -ஆகஸ்ட் 2015


செவ்வாய், 21 ஜூலை, 2015

இஸ்லாமிய பண்டிகைகளின் தனிச்சிறப்புகள்

உலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏதாவது சிறப்பு நிகழ்வுகள் நடந்த நாட்களையோ கொண்டாடவே செய்கின்றனர்.
இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கமும் அதனைப் பின்பற்றுவோருக்கு இரண்டு பண்டிகைகளைக் கற்பிக்கிறது.
  1. ஈகைத் திருநாள் எனும் ரம்ஜான் பண்டிகை
  2. தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை

மற்ற பண்டிகைகளுக்கும் இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் இடையே பல வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும்.

1.பண்டிகைகளுக்கும் கொண்டாடுவோருக்கும் உள்ள தொடர்பு:
உலகின் பெரும்பாலான பண்டிகைகளைக் கொண்டாடுவோரிடம் எதற்காக நீங்கள் இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால், “நாங்கள் எங்களின் மூதாதையர்கள் இதைக் கொண்டாடினார்கள், அதனால்தான் கொண்டாடுகிறோம்” என்று கூறுவார்கள். பண்டிகை தொடர்பான நபர்களோடும் சம்பவங்களோடும் அவர்களுக்கும் தொடர்பைக் காண்பது அரிதே.
ஆனால் இஸ்லாமியப் பண்டிகைகள் இதில் வேறுபட்டு நிற்பதைக் காணலாம்.
முக்கியமான இஸ்லாமியக் கடமைகளை ஒட்டியே இஸ்லாமிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
 ஈகைத் திருநாள் எனும் ரம்ஜான் பண்டிகை
திருக்குர்ஆன் என்ற அற்புத வாழ்வியல் வழிகாட்டி நூலை தந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறும் முகமாக ரமலான் மாதம் பகல் முழுக்க உண்ணாமல் விரதம் இருந்தும் இரவில் நின்று வணங்குவதிலும் வழிபாடுகளிலும் முஸ்லிம்கள் ஈடுபடுகிறார்கள். இந்த மாதத்தை நிறைவு செய்யும்போது இயற்கையான சந்தோஷத்தை வெளிப்படுத்தும் நாளாக ஈதுல் பித்ர் என்ற ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.



 தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை

சுமார் 5000 வருடங்களுக்கு முன் ஒரு முன்மாதிரி வழிகாட்டியாகவும் இறைத்தூதராகவும் திகழ்ந்த இப்ராஹீம் என்பவரின் தியாகத்தை நினைவுகூரும் முகமாகவும் அதில் இருந்து பெறும் படிப்பினையை வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் ஒவ்வொரு முஸ்லிம்களும் பணிக்கப்படுகிறார்கள். எனவே வசதியுள்ள ஒவ்வொருவரும் ஒரு பிராணியை கூட்டாகவோ தனித்தோ பலியிட்டு அதை ஏழைகளோடு பங்கிட்டு பகர்ந்து உண்பதே பக்ரீத் பண்டிகை. அதேபோல் பொருள் வசதியும் உடல்நலமும் கொண்டோர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஹஜ் என்ற கடமையின் முடிவும் இதையொட்டியே அமைகிறது. எனவே இதற்கு ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் கூறுவர்.  

2.அனைவரையும் அரவணைத்துக் கொண்டாடுதல்
இஸ்லாமியப் பண்டிகைகளை யாரும் தனித்துக் கொண்டாட முடியாது.
= ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும்போதும் ஏழைகளை அரவணைத்தே நோன்பை அனுஷ்டிக்க இஸ்லாம் வலியுறுத்துகிறது, யாராவது நோன்பை அனுஷ்டிப்பவருக்கு நோன்பு திறக்க உண்ணக் கொடுத்தால் அவரது நோன்பின் நற்கூலி போன்றே கொடுப்பவர்களுக்கும் எழுதப் படும் என்பது நபி மொழி. இதன் காரணமாக தினமும் பள்ளிவாசல்களில் கூட்டாக நோன்பு திறப்பதையும் பகிர்ந்து உண்ணுவதையும் நீங்கள் காண்கிறீர்கள்.
அதேபோல் நோன்பு மாதத்தை நிறைவு செய்யும் நாளான ரம்ஜான் பண்டிகையின் அன்று ஏழைகளை அவர்களின் வீடுதேடிச் சென்று நாம் உண்ணும் அதே உணவுதானியங்களை வழங்கிவிட்டே பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்லாம் கற்பிக்கிறது. இதற்கு ஃபித்ரா என்று பெயர். அதாவது சமூகத்தில் நலிந்தவர்களோடு பெருநாளின் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள செல்வந்தர்களைக் கட்டாயப்படுத்துகிறது இஸ்லாம்.
= பக்ரீத் பண்டிகை அன்று பலியிடப்படும் பிராணிகளின் மாமிசத்தின் மூன்றில் ஒரு பகுதியை உறவினர்களோடும் இன்னொரு பகுதியை  சமூகத்தில் உள்ள ஏழைகளோடும் பகிர்ந்து உண்ணுமாறு கற்பிக்கப்படுகிறது.

= பொதுவாகவே எல்லாத் தொழுகைகளையும் பள்ளிவாசல்களில் கூட்டாக தோளோடு தோள் சேர்ந்து அணிவகுத்துத் தொழ வலியுறுத்தும் இஸ்லாம், இந்த பெருநாள் தொழுகைகளை பெரும் திடல்களில் ஊர்  மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நிறைவேற்றப் பணிக்கிறது.

3.ஒழுக்கமும் கட்டுப்பாடும் பேணுதல்  


பண்டிகை, கொண்டாட்டம் என்ற பெயரில் மதுவருந்துதல், வீண் விரயங்கள் செய்தல், பட்டாசு வெடித்தல், சுற்றுப் புற சூழலை மாசுபடுத்துதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் அந்நிய ஆண்களும் பெண்களும் ஆடல் பாடல்கள் என்று வரம்புகள் மீறி கலத்தல் போன்ற அனைத்தையும் இஸ்லாம் தடை செய்கிறது. வரம்புகள் மீறாத விளையாட்டுகளுக்கும் பொழுதுபோக்குகளுக்கும் அன்று தடை இல்லை.
 ஒழுக்கம் பேணுதலை எந்த சூழலிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. மேலும்  இஸ்லாமிய பண்டிகைகள் இறைவணக்கத்தை கொண்டே ஆரம்பிக்கப்படும். பெருநாள் அன்று முதல் வேலை தொழுகையே. பண்டிகைகள் அன்று அதிகமாக தக்பீர் (இறைவனின் பெருமையை) முழங்குவது வலியுறுத்தப்படுகிறது:
நீங்கள் (ரமளானின்) எண்ணிக்கையை நிறைவு செய்யுங்கள்; உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் (தக்பீர் முழக்கத்தினால்)பெருமைப்படுத்துங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக திகழலாம். (அல்குர்ஆன் 2:185)


ஆக, இறைவனின் தூய மார்க்கமான இஸ்லாம் ஒன்றே மனிதகுலம், ஒருவனே இறைவன் என்னும் தனது கொள்கையை பண்டிகைகளின் போது இன்னும் வீரியமாக வலியுறுத்தி மக்களை செயல்பட வைப்பதை ஆராய்வோர் காணலாம்.