இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

எளியோர் வறியோர் பற்றிய கவலை

Related image
வாரம் ஒருமுறை வெற்று அறிவுரைகளை மேடைகளில் நின்று தேனொழுக அல்லது வீராவேசமாக போதிப்பது... அதை மக்கள் காதுகுளிரக் கேட்டு ரசிப்பது..... தொடர்ந்து போதித்தவரும் சரி, கேட்டு ரசித்தவர்களும் சரி... இல்லம் சென்று சுவையான உணவருந்தி சுகமாக உறங்கி எழுகிறார்கள். மீண்டும் அடுத்த வாரம் இதே போதனைகளும் ரசிப்பும் உணவும் உறக்கமும் சுகமும் தொடர்கிறது. போதகர் சற்று குரல் வளமும் கவிநயமும் கொண்டவராக இருந்து விட்டால் அவர் அந்த ரசிகர்களின் ஹீரோ ஆகி விடுகிறார். இது போன்ற ஒரு கலாச்சாரம்  எப்படி இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களிடையே அமைய முடியும்?
உதாரணமாக பள்ளிவாசலில் மிம்பர் (சிறு மேடை) மீது நின்று உரை நிகழ்த்துபவர், “அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது வயிறார உண்பவன் இறைவிசுவாசி அல்ல!”  என்ற நபிமொழியை  (முஸ்னத் அபூயஃலா) எடுத்துரைக்கிறார். கீழே அமர்ந்து கேட்பவர்களும் கேட்டுவிட்டு உரை முடிந்ததும் பிரிந்து போகிறார்கள். பள்ளிவாசலைச் சுற்றியும் இவர்கள் தாங்கும் வீடுகளைச் சுற்றியும் பல எழைவீடுகள் இருக்கவே செய்கின்றன வறுமையும் இருக்கத்தான் செய்கிறது என்பதை போதித்தவரும் போதனையைக் கேட்டவர்களும் நன்கறிவார்கள். ஆனால் இவர்கள் இந்த  நபிமொழியை செயல்படுத்துவதற்கான வழிகளைப் யோசிக்கவோ கலந்தாலோசிக்கவோ அறவே முயலவில்லை என்றால் அந்த போதனையால் என்ன பயன்? இதுதான் இன்று நாட்டில் சகஜமாக நடந்து கொண்டிருக்கிறது. நமது சமூகப் பொறுப்புணர்வு என்பது அவ்வளவுதானா?    
இன்று நாம் வாழும் நாட்டில் நமக்கு இருக்கும் பொறுப்பை வசனம் எடுத்துச் சொல்கிறது கீழ்கண்ட வசனம்:
 மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; ....  (திருக்குர்ஆன் 3:110)
வெற்று சடங்குகளைக் கொண்டது அல்ல இஸ்லாம். மாறாக இறைவனின்  போதனைகளை போதிப்பதும் சரி, அவற்றைக் கேட்பதுவும் சரி, மக்களிடையே அவை செயல் வடிவம் பெற வேண்டும் என்பதற்காகவே இருக்கவேண்டும். நம்மைச்சுற்றி ஏழைகளும் தேவைகள் உடையவர்களும் நிறைந்திருக்கிறார்கள் என்பதை பிறர்சொல்லி நாம் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அவர்களைப்பற்றிய கவலை நம்முள் எழவேண்டும். நமது இறைநம்பிக்கைக்கான ஒரு உரைகல் அதுவாகும்.  
 (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும்ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும்அசிரத்தையாக)வும் இருப்போர்.  அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.  மேலும்அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள் (திருக்குர்ஆன் 107:1-7)
நமது தொழுகைகளும் குர்ஆன் ஓதுதலும் உபதேசங்களைக் கேட்டலும் நம்மை நற்செயல்கள் செய்வதற்குத் தூண்டவில்லையாயின் நமது இறைநம்பிக்கையை மறுபரிசோதனை செய்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
மக்கள் சேவை இறைவனை அஞ்சுவோர் மீது கடமை
மேலும்அல்லாஹ்வையே வழிபடுங்கள்அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும்,தாய் தந்தையர்க்கும்நெருங்கிய உறவினர்களுக்கும்அநாதைகளுக்கும்ஏழைகளுக்கும்அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம்தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும்வழிப்போக்கர்களுக்கும்உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராகவீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 4:36)
மேலும்அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும்அநாதைகளுக்கும்,சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். (திருக்குர்ஆன் 76:8)
இஸ்லாம் இயம்பும் சமூக சேவையின் கோட்பாடு  (The Concept of Social Work in Islam).
கீழ்க்கண்ட வசனத்தில் பயபக்தியுடையவர்களின் குணநலன்களை இறைவன் தெளிவாக விளக்கியுள்ளான்:
= புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோமேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும்இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும்மலக்குகளின் மீதும்,வேதத்தின் மீதும்நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாகபந்துக்களுக்கும்அநாதைகளுக்கும்மிஸ்கீன்(ஏழை)களுக்கும்,வழிப்போக்கர்களுக்கும்யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள்கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்). இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், (வறுமைஇழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும்யுத்த சமயத்திலும்உறுதியுடனும்பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள். இன்னும் அவர்கள்தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). ( திருக்குர்ஆன்2:177)
தனக்கு விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்புவது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார்.” (புகாரீ)
= இறைத்தூதரின் இன்னொரு கூற்று: சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும்இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்து வைப்பது தர்மமாகும். ஒருவரை அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன் மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும். நல்ல வார்த்தைகளைக் கூறுவதும் தர்மமாகும். தொழுகைக்கு செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். இடையூறு அளிப்பவற்றை பாதையிலிருந்து அகற்றுவதும் தர்மமாகும்.” (புகாரீமுஸ்லிம்).

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

திக்கற்றோர்க்கு ஒரு வாசல் பள்ளிவாசல்!


 மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; ....  (திருக்குர்ஆன் 3:110)
இன்று நாம் வாழும் நாட்டில் நமக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை மேற்படி இறைவசனம் எடுத்துச் சொல்கிறது. ‘சிறந்த சமுதாயம்’ என்ற அந்தஸ்தை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் நம்மீது சுமத்தப்பட்ட பொறுப்பை நிறைவேற்றியாக வேண்டும். தொழுகை நோன்பு என்ற ஆன்மீகக் கடமைகளை தவறாமல் நிறைவேற்றும் அதேவேளையில் நற்காரியங்கள் செய்வதிலும் நன்மை வளர்ப்பதிலும் நாம் ஈடுபட்டே ஆகவேண்டும். நம்மைச்சுற்றி – நாம் தொழும் பள்ளிவாசல்களைச் சுற்றி – ஏழைகளும் வறியவர்களும் இன்ன பிற தேவை உடையவர்களும் வாழ்ந்துகொண்டு இருக்கும் போது அவர்களை நாம் அலட்சியப் படுத்த முடியுமா? அன்றாடம்  வீட்டிலிருந்து தொழுகைக்காக செல்லும் வழியில் காணும் அவர்களின் நிலைபற்றி நாம் – குறிப்பாக தொழுகையாளிகள் பொருட்படுத்தாமல் இருக்க முடியுமா?  
(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும்ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.  இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும்அசிரத்தையாக)வும் இருப்போர்.  அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.  மேலும்அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள் (திருக்குர்ஆன் 107:1-7)
அரசியல்வாதிகளும் ஏனையவர்களும் அவர்களைப்பற்றி கவலைப் படாதபோது நாம் மட்டும் எதற்காக கவலைப் படவேண்டும் என்று நம்மால் இருக்க முடியுமா? அவர்களைப் பொறுத்தவரையில் இவ்வுலகத்தோடு அனைத்தும் முடிந்துவிடுகிறது என்று நம்பி வாழ்கிறார்கள். ஆனால் நாம் அப்படியல்லவே! உண்மையான நிலையான வாழ்க்கை மறுமையில்தான் என்பதும் நன்மை செய்வோருக்கு சொர்க்கமும் அல்லாதவர்களுக்கு நரகமும் காத்திருக்கிறது என்பதல்லவா நமது நம்பிக்கை?
நமது தலைவர் – நமக்கு வழிகாட்டி – நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது வயிறார சாப்பிடுபவன் முஃமின் (இறைவிசுவாசி) அல்ல!” (முஸ்னத் அபூயஃலா)என்று கூறியிருப்பதை நாம் அலட்சியம் செய்ய முடியுமா?
உணவு விஷயத்தில் அவர்கள் அதிக தேவையில்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் வேறு பல விடங்களில் அவர்கள் தினமும் துன்பத்தில் உழல்பவர்களாக உள்ளார்கள். உதாரணமாக அங்கு குடிசைகளில் வாழும் பெண்களைப் பொறுத்தவரையில் கழிப்பிடம் செல்வது என்பது மிகவும் கடினமான காரியம். அதிகாலையிலோ அல்லது இரவு இருட்டும் வரையிலோ காத்திருந்து அருகாமையில் உள்ள வெட்ட வெளிகளுக்கோ புதர்களுக்கோ சென்றுதான் இயற்கைத் தேவைகளை அப்பெண்கள் நிறைவேற்ற முடியும். அதுவும் மிக ஆபத்து நிறைந்த ஒன்று. அதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்திதான் பாலியல் வல்லுறவுகள் கூட நிகழ்கின்றன. நமது குடும்பப் பெண்களுக்கு அப்படி ஒரு நிலை என்றால் நம்மால் உணர்வற்று இருக்க முடியுமா?
பள்ளிவாசல்கள் நலிந்தோரை அரவணைக்கும் தளங்களாக..
மேற்படி திருக்குர்ஆன் வசனத்தில் கூறப்பட்ட மனிதர்களுக்காகத்  தோற்றுவிக்கப்பட்ட  சிறந்த சமுதாய மக்கள் அடிக்கடி கூடும் இடம் பள்ளிவாசல்கள். நம்மைப் படைத்த இறைவனின் பொருத்தம் நாடி அங்கு கூடும் தொழுகையாளிகள் நினைத்தால் பள்ளிவாசல்களை அருமையான சமூகசேவை மையங்களாக மாற்ற முடியும். நம்மைச் சுற்றி வாழும் நலிந்தோரை அரவணைக்கும் தளங்களாக பள்ளிவாசல்கள் மாறும்போது அங்கு பல சமூகப் புரட்சிகள் நடைபெறும். நமக்கு இறைவன் வழங்கியுள்ள பொருளாதாரம், கல்வி அறிவு, கணினி அறிவு, தொழில் அறிவு, சட்ட அறிவு, தொழில் அனுபவங்கள், இன்ன பிற திறமைகள் போன்ற பலவற்றையும் ஒருங்கிணைத்து பயன்படுத்த பள்ளிவாசல்களை அருமையான தளங்களாக அமைகின்றன. 
= ஏழைகளுக்கு உணவளித்தல், குழாய்க் கிணறுகள் தோண்டி நீர் வழங்குதல், முதியோர் மற்றும் விதவைகள் ஆதரவு, நோயுற்றோருக்கு மருத்துவ உதவி, மருந்து உதவி, வீடற்றவர்களுக்கு வீடுகள் கட்டுதல், பள்ளிக்கு செல்ல ஏழைக் குழந்தைகளை ஊக்குவித்தல், உதவுதல், வேலைவாய்ப்பு வழிகாட்டல்கள், ஏற்பாடுகள், தொழில் பயிற்சி, அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்ய முயலுதல்,  தொழில் அல்லது வியாபாரம் தொடங்க வட்டியில்லா கடன் ஏற்பாடுகள் போன்ற பலவற்றையும் நாம் செய்ய முடியும். இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்பதில்லை. படிப்படியாக நம்மால் எவை முடியுமோ அவற்றை தக்க கலந்தாலோசனைகளோடும் தகுதியான தலைமையின் கீழும் நாம் செய்ய முடியும்.
.நாம் செய்ய முனையும் சேவைக்கான பொருளாதாரத்தை பள்ளிவாசல்களில் அறிவிப்பு செய்தும் வாட்சப் குழுமங்களில் பகிர்வதன் மூலமும் திரட்ட முடியும். பெரும்பாலான சேவைகளுக்கு அரசாங்கத்திலேயே சிறுபான்மைப் பிரிவுக்கான மானியங்கள் உள்ளதாக அறிகிறோம். இவற்றை  உரிய முறையில் விண்ணப்பிப்பதன் மூலமும் சேவைகளைத் துவங்க முடியும்.
பள்ளிவாசல்களில் நீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்தல்
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும். 1.நிலையான தர்மம்  2.பயனுள்ள கல்வி  3.இறைவனிடம் பிரார்த்திக்கும்  குழந்தைகள். (அபூஹூரைரா(ரலிமுஸ்லிம்) இந்த நபிமொழியை நம்மில் அனைவரும் கேட்டிருப்போம்.மரணத்திற்குப் பின்னும் நற்கூலி கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற நாட்டம் கொண்ட  நம்மில் செல்வந்தர்கள் குழாய்க் கிணறுகளை பள்ளிவாசல் வளாகங்களிலோ அருகாமையிலோ உரிய அனுமதியோடு தோண்டி ஏழைகளுக்கு நீர் விநியோகம் செய்யலாம்.
இன்று பல பள்ளிவாசல்களில் தேவைக்கு அதிகமான பொருளாதாரம் குவிவதை நாம் அறிவோம். அவை பள்ளிவாசல்களை மென்மேலும் மெருகூட்டவும் ஆடம்பர செல்வினங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதை கண்டு வருகிறோம். இப்படிப்பட்ட பொருளாதாரங்களை பள்ளிவாசல்களை ஒட்டியே ஒருசிலக் கழிப்பிடங்களைக் கட்டிப்  பராமரித்தால் அப்பாவி ஏழைப் பெண்களின் துயர் தீரும். அவர்கள் அன்றாடம் சந்திக்கும் துன்பத்தில் இருந்தும் மனப்புழுக்கத்தில் இருந்தும் காப்பாற்றப்படுவார்கள். இந்த வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுத்தவர்களுக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் நற்பேறுகளைப் பற்றி நாம் கூறவும் வேண்டுமா?
பிறர் துன்பம் நீங்க உதவுவோருக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பம் ஏற்படாமல் அல்லாஹ் காப்பாற்றுகிறான். ஒருவன் மற்றவர்களுக்கு உதவும் காலம் வரை அல்லாஹ்வும் அவனுக்கு உதவுவான்” – நபிமொழி (அறிவிப்பு: ஹழ்ரத் அபூஹுரைரா(ரலி) - முஸ்லீம்)
= விதவைகள்ஏழைகளுக்காக பாடுபடுபவர் இறைவழியில் அறப்போர் செய்பவரைப் போன்றவர் ஆவார். மேலும்இரவு காலங்களில் நின்று வணங்கிபகல் நேரங்களில் நோன்பு நோற்றவரைப் போன்றவர் ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) - புகாரி)
யாதும் ஊரே யாவரும் கேளிர்!

சனி, 26 ஆகஸ்ட், 2017

இறைவனை அலட்சியம் செய்வோரின் மறுமை நிலை


உடல், பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இவ்வுலகுக்கு அனுப்பியுள்ள உண்மை இறைவனை - இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவனை- கண்டுகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக அவன் அல்லாதவர்களையும் அல்லாதவற்றையும் கடவுளாக பாவித்து வணங்கும் செயல் பூமியில் பல குழப்பங்களுக்கும் தீய விளைவுகளுக்கும் பாவங்கள் பெருகுவதற்கும் காரணமாகிறது. இவ்வாறு படைத்த இறைவனை விட்டுவிட்டு அவன் அல்லாதவர்களை வணங்கும் செயல் இணைவைத்தல் எனப்படும். 
= உண்மை இறைவனைப்பற்றிய மரியாதை உணர்வு (seriousness) மனித உள்ளங்களில் இருந்து அகன்றுபோவதால் இறையச்சம் –அதாவது இறைவனுக்கு நான் பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வு மறைந்து போகிறது. அதனால் பாவங்களில் மக்கள் துணிந்து ஈடுபடுகிறார்கள். சமூகத்தில் பாவங்கள் பெருகவும் அதர்மம் ஆளவும் இது முக்கிய காரணம் ஆகிறது.
= படைத்த இறைவனை நேரடியாக வணங்குவது என்பது எளிதானது, பொருட்செலவு இல்லாதது. ஆனால் அவன் அல்லாதவற்றை மக்கள் வணங்க முற்படும்போது இடைத்தரகர்கள் எளிதாக அங்கு நுழைந்து விடுகிறார்கள். அவரவர் கற்பனையில் உருவானவற்றைக் காட்டி இதுவே கடவுள் என்று கற்பித்து அதன்மூலம் மக்களை சுரண்ட இச்செயல் காரணமாகிறது..
= பல்வேறு மக்கள் அவரவர் கற்பனைக்கேற்ப கடவுளை சித்தரித்து வணங்கும்போது அதற்கேற்ப அவற்றை வழிபடுவோரும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஏற்றதாழ்வு பாராட்டுவதற்கும் அடித்துக் கொள்வதற்கும் காரணமாகிறது.
= இன்னும் அகிலங்களின் அதிபதியும் சர்வவல்லமை கொண்டவனுமாகிய இறைவனை சிறுமைப்படுத்தும் செயலும் அவனுக்கு செய்நன்றி கொல்லும் செயலும் பொய்யுரைத்தலும் ஆகும்.
இதை மிகப்பெரிய பாவம் என்று கூறுகிறது குர்ஆன். மேலும்,
= அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
= நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம்புகுவார்.
அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

இணைவைப்போரின் மறுமை?
இப்பாவத்தை செய்வோரின் நிலை மறுமையில் எவ்வாறு இருக்கும்?
மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று இந்த பூமியில் வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அதில் இணைவைத்து வணங்கியவர்களும் இருப்பார்கள். யாரை இவர்கள் கடவுளாக பாவித்து அவர்களின் உருவச்சிலைகளை வைத்து வணங்கினார்களோ அவர்களும் அங்கு இருப்பார்கள். இன்னும் சிலர் இறந்துபோன நல்லடியார்களின் சமாதிகள் (உதாரணமாக தர்கா) அருகே நின்று அவர்களை அழைத்துப் பிரார்த்தித்து இருக்கலாம்  அவர்கள் யாவரும் அன்று விசாரணையின்போது வருவார்கள். இன்ன பிற இணைவைக்கப்பட்ட மற்ற அனைத்தும் விசாரணையின்போது ஆஜர். அப்போது என்ன நடக்கும் என்பதை இறைவன் தன் திருமறையில் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறான்:
10:28. (இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி: நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள் நீங்கள் எங்களை வணங்கவேயில்லைஎன்று கூறிவிடும்.
10:29. நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்” (என்றும் அவை கூறும்).
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் என்பது பொருள்)
இவ்வுலகில் வாழ்ந்திருந்தபோது கண்மூடித்தனமாக நம்பியிருந்த கடவுளர்களின் உண்மை நிலை அவர்களுக்குப் புரியவரும். இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது என்பதும் மறுமை என்பதே உண்மையானது நிலையானது என்பதும் தெளிவாகப் புரியவரும். இனி மீதமிருப்பது பாவிகளுக்கு விதிக்கப்படும் நரகமோ அல்லது புண்ணியவான்களுக்கு விதிக்கப்படும் சொர்க்கமோ மட்டும்தான் என்பதும் புரியவரும். ஆனால் அப்போது புரிந்துகொள்வது காலம்கடந்த பயனளிக்காத செயலாக இருக்கும். இவ்வுலகில் மக்கள் உண்மை இறைவனது வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப செய்த தங்கள் செயல்கள் நன்மைகளாகவும் அதற்கு மாறாக செய்த செயல்கள் தீமைகளாகவும் பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் காண்பார்கள்.
= 10:30அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்களுடைய உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.
இவ்வுலகிலேயே திருந்துவோம்
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது சுட்டு விரலைக் கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு அற்பமானதேயாகும்.) அறிவிப்பு : முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி)  நூல் :முஸ்லிம் (5490)

அதாவது மறுமை என்பது முடிவில்லாதது அதனோடு இவ்வுலக வாழ்வை ஒப்பிடும்போது இம்மை வாழ்வு என்பது மிக மிக மிக அற்பமானது என்பதைத்தான் மேற்படி நபிமொழி நமக்கு எடுத்துரைக்கிறது. படைப்பினங்களைப் பற்றி சிந்தித்து அவனது வல்லமையையும் உள்ளமையையும் உணரச் சொல்கிறது குர்ஆன். மேலும் அன்றாடம் மனிதன் அனுபவிக்கும் அருட்கொடைகளைப் பற்றி நினைவூட்டி படைத்தவன்பால் மனம்திருந்தியவர்களாக திரும்பச் சொல்கிறான் இறைவன்:

= 10:31. உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் அல்லாஹ்என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் இதழ்

இந்த இதழின் மின்பதிப்பை கீழ்கண்ட இணைப்பிலும் வாசிக்கலாம்:
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusU0VHYWppNHh0dU0/view?usp=sharing
பொருளடக்கம்
ஏழையின் சிரிப்பில் இறைதிருப்தி காண்போம்! -2
மக்கள் சேவையே  இங்கு இறைவழிபாடு -4
எளியோர் பற்றிய கவலை -5
திக்கற்றோர்க்கு ஒரு வாசல் பள்ளிவாசல்! -7
சமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி! -10
வாசகர் எண்ணம் -12
சமூக புனரமைப்புத் தளங்கள் பள்ளிவாசல்களே! -13
வறியோரை அரவணைத்த நபிகளாரின் பள்ளிவாசல் -16
மதீனாப் பள்ளிவாசலில் வறியோர் நிவாரணம் -19
நாட்டுப்பற்றுக்கான அளவுகோல் -21
உறவிலார்க்கு உறவாகும் உத்தமர்கள் -23

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

சமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி!

Related image
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல்.   உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர், ஏளியவர், வெள்ளையர், கறுப்பர் என்ற வேறுபாடின்றி தீண்டாமை எழுவதற்கு வழியின்றி எல்லோரும் வரிசையில்  நின்று தொழும் இடம் பள்ளிவாசல்.  படைத்தவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை மக்கள் உள்ளங்களில் ஆழமாக விதைக்கும் இடம் அதுவே!
சமூகத்தில் செல்வாக்குள்ளவர், அந்தஸ்துள்ளவர்,  படிப்பால் உயரந்தவர், செல்வம் படைத்தவர் என்ற  கௌரவம் பெற்றவர்கள் கூட பள்ளிவாசலுக்குள் வந்து விட்டால், தொழுகைக்காக நின்று விட்டால்  இறைவனின் அடிமைகள் என்ற நிலைப்பாட்டிலேதான் நிற்க வேண்டும். ஜனாதிபதியாக இருந்தாலும், மந்திரிகளாக இருந்தாலும் அவர்களும் சாதாரண குடிமக்களோடு தோளோடுதோள் இணைந்து வரிசைகளில் அணிவகுத்து நின்றே தொழுகை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கான பிரேத்தியகமான இடமோ கவனிப்போ கிடையாது. ஒரு நாளைக்கு ஐந்து நேர தொழுகையின் பயிற்சி இதுதான். இந்தப் பயிற்சியினை பெற்றவர்களால் மட்டும்தான் உலகில் தீண்டாமையை ஒழிக்க முடியும். சகோரத்துவத்தை வளர்க்க முடியும். சமூகத்தை சீரமைக்க முடியும்.
மக்கா தலைவர்களின் பேரம்
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு ஓரிறை கொள்கையின் பால் அழைப்பு விடுத்த போது மக்காவின் தலைவர்களில் சில முக்கியமானவர்கள்  முஹம்மத் நபி(ஸல்) அவர்களிடம் வந்து பின்வருமாறு முறையிட்டார்கள்.
“முஹம்மதே! இதோ உம்முடன் சாதாரண மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் எமக்கு இருக்க முடியாது எமக்கு தனி இடம் வேண்டும் அவர்களுடன் சேர்ந்து இருப்பதை அவமானமாக கருதுகிறோம். நாம் வந்தால் அவர்கள் எழுந்து சென்று விட வேண்டும் என்று நீர் உத்தரவு இட வேண்டும்” என்று கோரினர். இவர்களின் கோரிக்கையை ஏற்றால் மக்காவில் உயர் குலத்தாரும் பிரமுகர்களும் இஸ்லாத்திற்கு வந்து விட வாய்ப்புண்டு. எதிர்ப்புகள் மறையக்கூடும்.  இஸ்லாமும் வளர்ந்து விடக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு பேரம் இஸ்லாம் என்ற மக்கள் இயக்கத்திற்கு அறவே தேவையில்லை என்பது இறைவனின் முடிவாக இருந்தது. உடனடியாக  இவர்களின் கோரிக்கையை நிராகரித்து இறைவன் கீழ்கண்ட எச்சரிக்கை வசனத்தை இறக்கி வைத்தான்:
= எவர்கள் தங்கள் இரட்சகனின் (சங்கையான) முகத்தை நாடி காலையிலும் மாலையிலும் அவனை பிரார்த்தனை செய்கின்றார்களோ, அவர்களை நீர் விரட்ட வேண்டாம். அவர்கள் பற்றிய விசாரணையில் உம்மிடமோ உம்மை பற்றிய விசாரணையில் அவர்களிடமோ எந்தப் பொறுப்பும் இல்லை. அப்படி அவர்களை நீர் விரட்டினால் அநியாயக் காரர்களில் உள்ளவராக ஆகிவிடுவீர் (திருக்குர்ஆன் 6:52)
எந்த வழியிலும் மக்களிடையே பாகுபாடு காட்டுகின்றவர்களுக்கு இஸ்லாத்தில்  இடமில்லை. அவர்களின் தயவும் இந்த இயக்கத்திற்கு அறவே தேவையில்லை. ஏக இறைவனை ஏற்றுக் கொண்டால் அவர்கள் ஒரே இனமாகவே ஐக்கியமாக வேண்டும் என்பது இங்கு விதி! சமூக சீரமைப்புக்கு அடித்தாளமிடும் இக்கொள்கையில் விட்டு கொடுப்புக்கு இடமேயில்லை என்பதை இறைவன் இங்கே மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.
இன்னொரு தருணத்தில் மக்காவின் பெரும் தலைவர்களின் குழு ஒன்று  நபிகளாரிடம் வந்து இதுபோன்றதொரு பேரத்தைப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது   குறைஷிகளின் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றிருந்த அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) என்ற கண்பார்வையற்ற ஒரு நபித்தோழர் அந்த அவைக்கு வந்து நபியவர்களுக்கு ஸலாம் உரைக்கிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நபிகள் நாயகம் (ஸல்) இந்த நேரத்தில் இவர் அவைக்கு வருகிறாரே என்று முகம் சுளிக்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்தது கண்பார்வையற்ற அந்நபித்தோழருக்கு தெரியாது. இருப்பினும் இறைவன் புறத்திலிருந்து கடுமையான வாசகங்களோடு எச்சரிக்கை வருகிறது. 'அவர் கடுகடுத்தார்மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்என்று துவங்கும் அபஸஎன்ற 90 ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை இறைவன் உடனடியாக அருளினான். அக்குறைஷித் தலைவர்களுக்காக ஒரு பாமர இறைவிசுவாசியிடம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறீர். இஸ்லாத்தை புறக்கணிக்கும் அந்நிராகரிப்பாளரை நேசங்கொண்டு ஒரு இறைவிசுவாசியை புறக்கணிக்கிறீர் என்று நபி (ஸல்) அவர்களைக் கண்டிக்கிறான். தங்களின் திட்டத்தை உடனடியாகக் கைவிடுகிறார்கள் நபிகளார்!
மக்கத்து பிரமுகர்கள் கோரியது போல் சமான்ய மக்களை ஒதுக்கி வைத்தால்  பள்ளிவாசலி லிருந்து பாதையோரம் வரை ஏன் சுடுகாடு வரை அனைத்திலும் ஒதுக்கி வைத்திட வேண்டி வரும். இது சமூக சாபகேடாக அமையுமே தவிர முன்னேற்றமாக அமையாது.
புனித ஆலயமான கஃபாவை சாமானிய மக்களும் மற்றும் அடிமைகளும் அணுக முடியாதவாறு மக்கத்து இணைவைப் பாளர்கள் நிர்வாகம் செய்து வந்தார்கள். இஸ்லாம் பரவி மக்கா நகரம் இஸ்லாமியர்களின் ஆளுகைக்குக் கீழ் வந்தபோது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இந்நிலையை முற்றிலுமாக மாற்றிய மைத்தார்கள்.
மக்காவில் அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்ற அபீசீனாவைச் சார்ந்த பிலால் என்பவர் சாமானிய மனிதர். அவரை தொழுக்கான அழப்பு விடுக்கும் அழைப்பாளராக நியமித்து நபி (ஸல்) அவர்கள் கௌரவப் படுத்தினார்கள். இறையச்சம் மட்டுமே உயர்வுக்கான அளவுகோலாக மாறியது.
இதுபோன்ற சம்பவங்கள் மூலமாக இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தின் உறுதியான தெளிவான நிலைப்பாடு உலகறிய பறைசாற்றப் படுகின்றது. இது உலகைப் படைத்தவன் வழங்கும் வாழ்க்கைத் திட்டம். கெஞ்சிக்கூத்தாடி இதை யார் காலடியிலும் சமர்பிக்க வேண்டியதில்லை. எந்த ஒரு மனிதனுக்காகவும் குலத்துக்காகவும் நாட்டுக்காகவும் தலைவர்களுக்காகவும் இஸ்லாம் என்ற கொள்கை வளைந்து கொடுக்காது. சந்தர்பவாதத்திற்கு இங்கு இடம் கிடையாது! இதை ஏற்போர் ஏற்கட்டும். மறுப்போர் மறுக்கட்டும். இனம், நிறம், குலம், ஜாதி, செல்வம், செல்வாக்கு, ஆதிக்கம் போன்ற எந்த அடிப்படையிலும் மனிதன் பிற மனிதனை விட உயர்வு பெற முடியாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் மற்றவரை விட உயர முடியும் என்கிறான் இறைவன்!


= மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (குர்ஆன் 49: 13) 

புதன், 16 ஆகஸ்ட், 2017

ஏழையின் சிரிப்பில் இறைதிருப்தி காண்போம்!

Image may contain: one or more people and outdoor

"அண்டை வீட்டுக் காரன் பசியோடு உறங்கும் போது தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவன் முஸ்லீம் அல்ல" என்ற நபிமொழியை நினைவூட்டிய வண்ணம் விடிந்தது ஆகஸ்ட் பதினைந்து!
ஆம், நேற்று விடியற்காலை 2மணியில் இருந்து 5.30 வரை பெய்த கனமழையில் மாடிவீடுகளுக்குள்ளேயே மழை வெள்ளம் புகுந்திருக்கும் போது அருகாமையில் உள்ள குடிசை வாசிகளின் நிலை என்ன? ஆராயப் புறப்பட்டது எங்கள் ஹவுஸ் ஆப் பீஸ் (House of Peace, Bangalore) சகோதரர்களின் படை.
Image may contain: one or more people, sky, outdoor and nature
எதிர்பார்த்த மாதிரியே வெள்ளம் புகுந்த குடிசைகள். ஒழுகும் கூரைகள். வெளியேயும் வெள்ளம் உள்ளேயும் வெள்ளம். உறங்க முடியுமா?
சொகுசு வீடுகளில் சுகம் காணும் இறைவிசுவாசிகள் இவற்றை நேரில் கண்டால்தான் நாம் அனுபவித்து வரும் இறை அருட்கொடைகளின் அருமையை உணர்வோம். குடிசைகளுக்குள் உங்களை ஒருகணம் கற்பனை செய்து பாருங்கள்.
தொடர்ந்து நடந்த ஆலோசனையில் இக்குடிசை வாசிகளுக்கு நம்மால் ஆன உதவி என்ற அடிப்படையில் மதிய உணவை சமைத்து வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. (சில காலங்களுக்கு முன் இவர்களுக்கு மேற்கூரைக்காக பிளாஸ்டிக் தார்ப்பாய்களையும் உடைகளையும் கூட வழங்கியுள்ளோம், எல்லாப் புகழும் இறைவனுக்கே)
வாட்ஸாப்பில் மேற்படி ஆலோசனை வெளியிடப்பட அதற்கான பொருளாதாரம் ஏற்பாடானது.
மதியம் உணவு பொட்டலங்களை அந்தக் குடிசை மக்களுக்கு விநியோகம் செய்யும் காட்சிகளைத்தான் இங்கு படங்களில் காண்கிறீர்கள்.
Image may contain: 5 people, people sitting and outdoor
Image may contain: 8 people, people sitting, crowd, child and outdoor
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார்கள் சிலர். அவர்கள் கண்டார்களோ இல்லையோ ஆனால் எங்களுக்கு அந்த ஏழைகளின் முகமலர்ச்சி ஒரு இறைகட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியைத் தந்தது.
= (நபியே!) 'அகபா' என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்? (அது) ஓர் அடிமையை விடுவித்தல்- அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
உறவினனான ஓர் அநாதைக்கோ, அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
(திருக்குர்ஆன் 90:12- 16)
= மேலும், (சொர்க்கம் செல்ல இருப்போர்) அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், இறைவனின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்). (திருக்குர்ஆன் 76:8-9)
நரகவாசிகளைப் பற்றி இறைவன் கூறும்போது, “அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.”(திருக்குர்ஆன் 69:34.)
ஊரெங்கும் மழை வெள்ளத்தால் சேறாகிப் போன மண்ணில் எப்படி மார்ச் பாஸ்ட் செய்வது, எப்படி கொடியேற்றுவது என்ற கவலையில் மூழ்கியிருந்தது. கொடியற்றமும் கோஷங்களும் ஆடல்களும் பாடல்களும் கற்பனை உருவங்கள் சமைத்து அவற்றை வழிபடுவதும் எல்லாம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதற்கான செயல்கள் என்று மக்களை நம்பவைத்துள்ளனர் அரசியல்வாதிகளும் ஊடகங்களும். ஆனால் நாட்டில் வாழும் மக்களைப் பற்றிப் பற்றி அவர்கள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை..
ஆனால் உண்மையில் நாடு என்பது அதன் மண்ணோ எல்லைக்கோடுகளோ அல்ல, மாறாக அங்கு வாழும் மக்களே என்பதை எப்போதுதான் இவர்கள் உணருவார்களோ?
மக்களை இனம், ஜாதி, மதம், நிறம் போன்ற பாகுபாடுகள் கடந்து நேசிப்பதும் அவர்களுடைய நலனுக்காக வேண்டிய சேவைகள் செய்வதும், அவர்களுக்கு ஆபத்துகள் வரும்போது காப்பாற்றுவதும் அவர்களின் துயர் துடைப்பதும்தான் உண்மையான நாட்டுப்பற்று என்பதை எந்த அரசியல்வாதிகளும் மறந்தும் கூடப் பேசுவதில்லை.
இன்னும் சிலர் வந்தேமாதரம் பாடாதவன் தேசதுரோகி என்று சொல்லிக் கொண்டு அதை நாட்டுப்பற்றுக்கு அளவுகோலாகக் கொண்டுள்ளார்கள். அரசியல் ஆதாயமும் தேடிக் கொள்கிறார்கள்.
எது எப்படியோ, இதையெல்லாம் நினைக்கும்போது நாங்கள் செய்தது மிகச் சிறிய ஒரு செயலானாலும் உண்மையான நாட்டுப்பற்றின் ஒரு அம்சம் என்பதை நினைக்கும்போது மகிழ்வு கொள்ளாமல் இருக்க முடிவதில்லை.
மேலும் இந்த மாதிரி சேவைகளை செய்யும் வாய்ப்புகள் ஆகஸ்ட் பதினைந்து அன்று மட்டும் வருவதில்லை. எப்போது வேண்டுமானாலும் வாய்ப்புகள் நம்மை அழைக்கலாம். அந்த வகையில் வருடமெல்லாம் நமக்கு நாட்டுப் பற்றுக்கான நாட்களே. இறைவனின் உவப்பைப் பெறுவதற்கான நாட்களே...
Image may contain: 1 person, standing and outdoor
இதை இங்கு பகிர்வதன் நோக்கம் எங்களைப்பற்றி விளம்பர படுத்திக் கொள்வதற்காக அல்ல. மாறாக இன்று அடக்குமுறைக்கும் வீண் பழிகளுக்கும் ஆளாகியுள்ள இஸ்லாமிய சமூகம் இதுபோன்று தங்களாலான எளிய மக்கள் சேவைகளை மேற்கொண்டு இறைப் பொருத்தத்தைத் தேடக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்தான் இது பகிரப்படுகிறது.
நாங்கள் ஒரு சிறு அமைப்புதான். பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு இப்பணிகளை மேற்கொள்ளும்போது இன்னும் சிறப்பாகவும் எளிதாகவும் செய்யமுடியும் இறைவன் நாடினால்...
= மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்'என்பதும் 'மனிதர்கள் மீது கருணை காட்டாதவர் இறைவனால் கருணை காட்டப்பட மாட்டார்'என்பதும் நீங்கள் அறிந்த நபிமொழிகளே!