இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 ஜூன், 2022

திருக்குர்ஆன் நற்செய்திமலர் - ஜூலை 2022 இதழ்


திருக்குர்ஆன் நற்செய்திமலர் – ஜூலை 2022 - மாத இதழ்

பொருளடக்கம்:
இளமையை எவ்வாறு கழித்தாய்? -2
இறையச்சம் இல்லா இளைஞர்களின் கதி? -4
இளைஞர் சீர்திருத்தம் எவ்வாறு?-6
இளம் மனங்களில் இறையச்சம் விதைப்போம்-8 8
இறைவனைக் கற்பித்தலே சீர்திருத்தத்தின் முதல்படி -9
ஏனிங்கு வாழ்கிறோம் என்றறிவது அவசியம்!-1 2 12
தனிமையிலே  இனிமை  காணும்  நேரமா?-15
பாவம்  செய்தாயிற்று.. இனி  என்ன  நடக்கும்? -1 17
பெரியார்தாசனைத் திசை மாற்றிய கேள்வி! 18
மனம்போன போக்கில் மனிதன் போவதில் தவறுண்டா? - 19
நாத்திகம் அறியாமையும் வழிகேடுமே! -22
நாத்திகத்தால்  சமூகத்திற்கு  ஏதேனும்  பயனுண்டா?-23
இறை தண்டனைக்குள்ளாக்கும் ஓரினச்சேர்க்கை – 24

புதன், 15 ஜூன், 2022

நபிகளாரைப் பரிகசித்தோர் நிலை- அன்றும் இன்றும்!

அன்று மக்காவில் பரிகசித்தவர்கள் நிலை: 

இஸ்லாம் என்பது ஒரு இறைதந்த வாழ்வியல் கொள்கை. அண்ணல் நபியவர்கள் இஸ்லாத்தைத் தான் பிறந்த மக்கா மண்ணில் மக்களிடையே போதித்த போது சத்தியத்தைப் புரிந்து கொண்டவர்கள் இந்த உயர்ந்த கொள்கையில்  தங்களை இணைத்துக் கொண்டார்கள். முழுமூச்சாக அண்ணலாரோடு இணைந்து பாடுபட்டார்கள். கொண்ட கொள்கைக்காக தங்களின் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் துணிந்தார்கள். படைத்த இறைவனுக்காக அனைத்தையும் இழந்தாலும் நஷ்டம் ஏதும் இல்லையல்லவா? மறுமையில் சொர்க்கமல்லவா காத்திருக்கிறது!

ஆனால் இக்கொள்கையின் அருமையைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் அங்கு பெரும்பான்மையாக இருந்தார்கள். இந்த கொள்கை வெற்றி பெற்றால் அனைவரும் சுபிட்சமாக வாழலாம் என்பதைப் புரிந்து கொள்வதிலிருந்து சிலரை அவர்களுடைய தற்பெருமையும் சிலரை சுயநலமும் சிலரை ஆதிக்கபலமும் தடுத்தது. பெரும்பாலோரை முன்னோர்கள் எது செய்தாலும் சரியே என்ற குருட்டு நம்பிக்கை தடுத்தது! தங்கள் ஆதிக்கம் பறிபோய்விடும் என்று பயந்த குறைஷித் தலைவர்கள் நபிகளாரை நேரடியாகப் பரிகசிக்கவும் தாக்கவும் முற்பட்டனர்.

நபிகளாரின் மீது ஒட்டகக் கழிவை கொட்டுதல்

நபிகளார் கஅபா ஆலய வளாகத்தில் சென்று தொழுவது வழக்கம். ஒருநாள் நபியவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது, இன்று முஹம்மதுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள் எதிரிகள். நபியவர்கள் நெற்றியை தரையில் வைத்து சாஷ்டாங்கம் செய்தபோது (இதை ஸஜ்தா என்று இஸ்லாமிய வழக்கில் கூறப்படும்) தாங்கள் மறைத்து வைத்திருந்த பாரமான ஒட்டகக் குடலை நபியவர்களின் பிடரியின் மீது போட்டு எள்ளிநகையாடினர்.  இந்த சம்பவத்தை நேரடியாக கண்டு நின்ற இளவயது நபித்தோழர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறக் கேட்போம்:

  நபி (ஸல்) அவர்கள் இறை இல்லம் கஅபாவில் தொழுது கொண்டிருந்தபோது இஸ்லாத்திற்கு பெரும் விரோதியாக இருந்த அபூஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து "இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப் பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும் போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?' என்று கேட்டனர்.

அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால் அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த சத்தியமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள்.

அப்போது தகவல் அறிந்த ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள்.

பொறுமையும் பிரார்த்தனையுமே ஆயுதங்கள்:

பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி "யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள்.

அவர்களுக்குக் கேடு உண்டாக வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், "அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்' என அவர்களும் நம்பியிருநார்கள்.

 பின்னர் நபி (ஸல்) அவர்கள்  (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, "யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!' என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன்.

என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல) அவர்க்ள குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் "கலீப்' என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்''  என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

(நூல்: புகாரி )

(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)

இன்றைய நாள் எதிரிகளுக்கும் இறை எச்சரிக்கை

அண்ணல் நபிகளாரை இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனே தனது தூதராக அனுப்பி உள்ளான். பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி! அந்த மாமனிதரை கேலி செய்தவர்கள் உடனடியாக இல்லாவிட்டாலும் இவ்வுலகிலேயே தண்டனையை அடைகிறார்கள் என்பது நபிகளாரின் வாழ்நாள் நிகழ்வுகளில் இருந்து தெளிவாகிறது. இறைவனையும் அவன் வழங்கிய நேர்வழியை மறுத்ததற்கும் அதைப் பரவ விடாமல் தடுத்ததற்கும் இன்னும் கொடிய தண்டனைகளை மறுமையில் கண்டிப்பாக அவர்கள் அடைந்தே தீருவார்கள் என்கிறது திருக்குர்ஆன்:

= இன்னும் கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், இறைவனைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான். (அவன்) இறைவனின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம். (திருக்குர்ஆன் 22: 8- 9)

 = எவர்கள் சத்தியத்தை மறுத்துக் கொண்டும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக்கொண்டும், இருந்தார்களோ அவர்களுக்கு - (பூமியில்) குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்ததற்காக - நாம் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்போம். (திருக்குர்ஆன் 6:88)

 தண்டனை ஏன் உடனடியாகக் கொடுக்கப்படுவது இல்லை?

இந்த வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவுமே இறைவன் படைத்துள்ளான். ஒரு பரீட்சைக் கூடத்தில் தவறான விடை எழுதிக் கொண்டு இருக்கும் மாணவனை ஆசிரியர் உடனடியாக தண்டித்தால் அது பரீட்சையின் நோக்கத்திற்கு எதிரானது. எனவேதான் தவறிழைக்கும் குற்றவாளிகள் விட்டுவைக்கப் படுகிறார்கள். பரீட்சை முடிந்ததும் அவர்கள் அவர்களின் குற்றத்திற்கான தண்டனையை அடைவார்கள்.

= உம் இறைவன் பெரும் மன்னிப்பாளனும் கருணையுடையோனுமாய் இருக்கின்றான். இவர்கள் சம்பாதித்த தீவினைகளுக்காக இவர்களை அவன் தண்டிக்க நாடியிருந்தால் வேதனையை விரைவில் இவர்களுக்கு அனுப்பிவைத்திருப்பான்! ஆனால் இவர்களுக்கென வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதை விட்டுத் தப்பி ஓடுவதற்கு எந்த வழியையும் இவர்கள் காண மாட்டார்கள். (திருக்குர்ஆன் 18:58)

= இவ்வாறு அவர்களை நாம் (உடனடியாகத் தண்டிக்காமல்) விட்டு வைப்பது தங்களுக்கு நன்மையாகும் என நிராகரிப்பவர்கள் எண்ணிவிட வேண்டாம்! அவர்களை நாம் விட்டு வைப்பதெல்லாம் பாவச் சுமையை அவர்கள் அதிகமாக்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான்! பின்னர் அவர்களுக்கு இழிவு மிக்க வேதனை இருக்கிறது. (திருக்குர்ஆன் 3:178)

 ========================= 

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html       

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

செவ்வாய், 14 ஜூன், 2022

மனிதகுலத்தையே பாதுகாக்கும் மாமனிதர்!

 


அண்ணல் நபிகளாரின் இலக்கு அனைத்துலக மக்களையும் அவர்கள் இவ்வுலகில் அவர்களைப் பீடித்துள்ள அடிமைத்தளையில் இருந்தும், அவர்கள் படும்  துன்ப துயரங்களில் இருந்தும் சீர்கேடுகளில் இருந்தும் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அதேவேளையில் மறுமையில் நரகத்தில் இருந்து மீட்டு அவர்களை சொர்க்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. அதாவது  அவர்களின் இம்மையும் மறுமையும் செம்மையாக அமையவேண்டும் என்பதே இலக்கு! அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறையே இஸ்லாம் என்ற இறை மார்க்கம். இதை மக்களுக்கு போதிக்கவே அவர் இறைத் தூதராக அனுப்பட்டார்.  

எதிலிருந்தெல்லாம் பாதுகாப்பு?

கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக அவரைப் பின்பற்றியவர்களும் சரி இன்று பின்பற்றிக்கொண்டு இருக்கக்கூடிய உலகின் நான்கில் ஒரு பங்கு மக்களும் சரி கீழ்கண்ட தீங்குகளில் இருந்து பாதுகாக்கப்பட்டார்கள் அல்லது பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் அறியலாம்:

= படைத்தவனை நேரடியாக வணங்கக் கற்றுக் கொண்டதால் கடவுளின் பெயரால் மக்களை சுரண்டும் இடைத்தரகர்களின் தீமையில் இருந்து பாதுகாப்பு.

= இஸ்லாம் கற்றுத்தந்த மனித சமத்துவக் கொள்கையை பின்பற்றுவதால் குல மேன்மை இன மேன்மை பாராட்டும் சுயநல ஆதிக்கவாதிகளின் தீங்கிலிருந்தும் தீண்டாமைக் கொடுமையில் இருந்தும் விடுதலை.

= அனைத்து மனிதகுலமும் ஒரு ஆண்-பெண் ஜோடியில் இருந்து உருவானதே என்று நம்புவதால் நிறவெறி, இன வெறி, மொழிவெறி, ஜாதிவெறி இவற்றில் இருந்து விடுதலை! இவற்றின் காரணமாக உண்டாகும் சண்டைகளில் இருந்து பாதுகாப்பு!

= வரதட்சணைக் கொடுமை, கட்டாயத் திருமணம், பெண்ணுரிமைகள் மறுப்பு, பெண் சிசுக்கொலை, பெண் கருக்கொலை, சொத்துரிமை மறுப்பு போன்றவற்றில் இருந்து பெண்ணினத்திற்கு பாதுகாப்பு..

= குடும்ப அமைப்பு பேணுதல், ஆடைக் கட்டுப்பாடு, அந்நிய ஆண்-பெண் கலந்துறவாடத் தடை போன்ற கட்டுப்பாடுகள் மூலம் பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு.. சமூக சீரழிவில் இருந்து பாதுகாப்பு.

= வட்டி, ஊக வாணிபம், மோசடி வியாபாரம் போன்றவற்றின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு! ஜகாத் மூலம் வறுமையில் இருந்து விடுதலை!

= இறைவனையும் மறுமையையும் பற்றிய நம்பிக்கைகள் ஆழமாக விதைக்கப்படுவதால் தனி நபர் ஒழுக்க சீர்கேடு, மது மற்றும் போதைப்பொருள், விபச்சாரம் போன்ற தீங்குகளில் இருந்து பாதுகாப்பு. 

மனித மனங்களை சீர்திருத்தி அவர்களின் கரங்களைக் கொண்டே நடத்தப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் இவை. மற்ற சித்தாந்தங்களைப் போல் மக்களின் மீது ஆதிக்கம் பெற்று அரசாட்சியைக் கைப்பற்றி நடத்தப்படும் சமூக மாற்றங்களல்ல இவை.

இறைவன் இந்த தூதரைப்பற்றி திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்:

= எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர் அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.  (திருக்குர்ஆன் 7:157)

மக்களின் துன்பப்படுவது கண்டு வருந்துபவர்:

அகிலத்தின் அருட்கொடையாக வந்த அந்த அண்ணல் மக்களின் உணர்வுகளோடு உணர்வுகளாகக் கலந்தவர். அகிலத்தின் இறைவனே சான்று வழங்குவதைக் காணுங்கள்:

= (இறை விசுவாசிகளே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் இறைநம்பிக்கையாளர்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். (திருக்குர்ஆன் 9:128) 

======================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html       

ஞாயிறு, 12 ஜூன், 2022

இறைத்தூதர்கள் ஏன் வரவேண்டும்?


இறைத்தூதர்கள் ஏன் வரவேண்டும்? - 
இக்கேள்விக்கு விடை அறிய மனித வாழ்க்கைக்கு இறை வழிகாட்டல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிய வேண்டும்.

 1. ஒழுங்கின்றி அமையாது மனித வாழ்க்கை!

ஏதேனும் ஒரு பெரிய நகரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு சாலை விதிகளை யாரும் பேண வேண்டியதில்லை, எவ்வளவு பெரிய ஆக்சிடென்டை நீங்கள் அந்த இரண்டு மணி நேரத்தில் செய்தாலும் உங்கள் மீது எந்த வழக்கும் போடப்படமாட்டாது என்ற அறிவிப்பு செய்யப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்...... என்ன நடக்கும்?

விளைவை நாம் அனைவரும் அறிவோம். பலரும் பயம் காரணமாக வாகனத்தையே வெளியில் எடுக்க மாட்டோம். ஏன்,  சாலையில்கூட  நடமாட மாட்டோம். எவ்வளவுதான் அவசர வேலை இருந்தாலும் அந்த இரண்டு மணி நேரம் முடியக் காத்திருந்து விட்டே புறப்படுவோம். ஆம்புலன்ஸ் உட்பட எதுவும் வீதியில் ஓடாது! அனைத்துமே ஸ்தம்பித்துவிடும்! இது எதை நமக்கு உணர்த்துகிறது?

ஆதிமுதலே இருந்தது ஒழுங்கு!

சட்டம், ஒழுங்கு, பரஸ்பர புரிதல் போன்றவை இல்லையென்றால் ஒரு சமூகம் மட்டுமல்ல ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து வாழ்வதும் அந்த வாழ்க்கை நீடிப்பதும் சாத்தியமில்லை என்பதைத்தானே அறிகிறோம். எனவே முதல் மனித ஜோடி இங்கு வாழத் துவங்கிய நாள்  முதலே அவர்களுக்கு ஒழுங்கும் வாழ்க்கை வழிகாட்டுதல்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியமும் கற்பிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது திண்ணம். மாறாக சட்டம் ஒழுங்கு வரையறைகள் என்பவை செயல்களின் விளைவுகளைக் கண்டு பாடம் படித்தல் (trial and error) மூலம் உருவானவை அல்ல என நாம் புரிந்து கொள்ளலாம். ஆக ஆதி முதலே மனிதர்களைப் படைத்தவன் அவர்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்ததனால்தான் உலகம் உயிர்வாழ்கிறது!

ஒரு மனிதனுக்குள் தன் வினைகளுக்கு மறுமையில் கேள்விக் கணக்கும் விசாரணையும் உள்ளது என்ற உணர்வு வளர்க்கப்பட்டால் அங்கு ஒழுங்கும் (order)   கட்டுப்பாடும்(discipline)  உண்டாகும். இந்த இறையச்சம் குறையும்போது அல்லது அறவே இல்லாமல் ஆகும்போது அங்கு தான்தோன்றித்தனமும் குழப்பமும் மட்டுமே பெருகும். இப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற போக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்குமானால் உலகம் என்றோ அழிந்துபோயிருக்கும்.

2.  படைத்தவனே பயன்பாடு அறிவான்: 

இன்று உலகில் நாம் காணும் அல்லது புழங்கி வரும் இயந்திரங்களோடு ஒப்பிட்டால் மனித உடலே அனைத்திலும் அதி நவீனமான தொழில் நுட்பமும் சிக்கல்களும் கொண்ட இயந்திரம்  என்பதை மறுக்க மாட்டோம். ஏனைய இயந்திரங்களுக்கு இல்லாத அறிவாற்றலும், உணர்ச்சிகளும் மனிதனுக்கு உள்ளன. அந்த இயந்திரங்களின் விடயத்தில் அவற்றின் தயாரிப்பாளர் கூறுவதை அப்படியே பின்பற்றுவது இன்றியமையாதது என்பதை அறிவோம். உதாரணமாக நாம் பயன்படுத்தும் ஸ்கூட்டர் அல்லது காரின்  டயருக்கு காற்றடிக்கும் போது, அந்த வாகனத்தை தயாரித்தவர் எவ்வளவு காற்றழுத்தம் இருக்க வேண்டும்  என்று சொல்கிறாரோ அந்த அளவிற்குத்தான் நாம் காற்றடிப்போம். மாறாக, நம் வாகனம் என்பதற்காக, நம் இஷ்டம் போல காற்றடிப்பதில்லை. இப்படி ஒரு சாதாரணமான விடயத்திற்கே வாகனத்தை தயாரித்தவரின் வழிகாட்டல் தேவைப்படுகிறது என்றால், எண்ணற்ற சிக்கல்களும் நுட்பமும் நிறைந்த மனிதன் என்ற இந்த  இயந்திரத்திற்கு அதை உண்டாக்கியவனின்  வழிகாட்டல் தேவையில்லை என்று எண்ணுவது பகுத்தறிவாகுமா? நாம் சொந்தம் கொண்டாடும் ஒரு பொருளையே நம் விருப்பப்படி உபயோகிப்பது சரியல்ல எனும்போது நமக்கு இரவலாகத் தரப்பட்ட பொருளை அவ்வாறு பயன்படுத்த முடியுமா? சிந்தியுங்கள்.

3. சட்டம் ஒழுங்கு உருவாக இறைவழிகாட்டுதல் அவசியம்:

மனிதர்களிடையே நிறம், இனம், நாடு, மொழி போன்ற பல்வேறு வேற்றுமைகள் இயல்பானவை. ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சமூகமாக வாழ்வதற்கு அங்கு சட்டங்களும் ஒழுங்குகளும் நிலைநாட்டப்படவேண்டும். அதற்கு சரி எது தவறு எது, நியாயம் எது அநியாயம் எது, பாவம் எது புண்ணியம் எது என்பதைப் பிரித்தறிவிக்கும் ஒரு பொதுவான அளவுகோல் இருந்தால்தான் அனைவருக்கும் பொதுவான சட்டங்களை இயற்ற முடியும். இப்பிரபஞ்சத்தில் மிகவும் அற்பமான அறிவும் ஆயுளும் கொண்ட மனிதர்கள் சொந்த அறிவை அல்லது அனுபவத்த்தை வைத்துக்கொண்டு இயற்றும் சட்டங்கள் ஒருதலைப்பட்சமானதாகவும் குறைகள் உள்ளவையாகவும் இருக்கும்.

மாறாக இவ்வுலகையும் அதில் உள்ளவற்றையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு மட்டுமே தனது படைப்பினங்கள் பற்றிய முழுமையான அறிவு உள்ளது. மனிதனுக்கும் மனித குலத்துக்கும் மட்டுமல்ல மற்ற அனைத்து ஜீவாராசிகளுக்கும் படைப்பினங்களுக்கும் எது நல்லது எது கெட்டது என்பதை மிக மிகப் பக்குவமாக அறிபவன் அந்த இறைவன் மட்டுமே. அவன் வழங்கும் அளவுகோல் அல்லது சட்டங்கள் மட்டுமே மிகவும் உன்னதமானவை. எனவே இந்த விடயத்திலும் இறைவழிகாட்டுதல் மிகவும் அவசியமானது என்பதை அறியலாம்.

இறைவனே இதைக் கூறுகிறான்:

''நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது. அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.'  (திருக்குர்ஆன் 92:12-13)

இறுதி இறைத்தூதரே முஹம்மது (ஸல்)

அந்த இறைவழிகாட்டுதலை தங்கள் வாழ்க்கை முன்னுதாரணம் மூலம் மக்களுக்கு போதித்து அவர்களை நல்வழிப்படுத்த வந்தவர்களே இறைத்தூதர்கள்! அவர்கள் மூலம் அனுப்பப்படுபவையே இறைவேதங்கள். அந்த இறைத்தூதர்களின் வரிசையில் இந்த பூமிக்கு இறுதியாக வந்தவரே நபிகள் நாயகம் என்று அறியப்படும் முஹம்மது நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் – பொருள்: அவர் மீது இறைசாந்தி உண்டாவதாக). அவர் மூலம் அருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்று அறியப்படுகிறது. 
================ 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திங்கள், 6 ஜூன், 2022

உலக அழிவுக்கு முன் அறிகுறிகள்!


நமக்கு எப்படி மரணம் நிச்சயமோ அதிப் போலவே இவ்வுலக்த்துக்கும் ஒரு நாள் அழிவுண்டு. உலக அழிவு நாளுக்கு முன் தோன்றும் சில அறிகுறிகளைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். இந்த அறிவிப்புகளில் பலதும் இன்று உண்மையாகி வருவதை வைத்தே நபிகளாரின் மொழிகளின் நம்பகத்தன்மையை உணரலாம். அவைப் பொய்க்காதவை என்றும் இறைவனிடம் இருந்து வந்தவையே என்பதையும் நாம் அறியலாம். கீழே அப்படிப்பட்ட நபிமொழிகள் எடுத்தாளப்பட்டுள்ளன அவற்றின் இறுதியில் நபிமொழித் தொகுப்பு நூல்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.  
கீழ்கண்ட நபிகளாரின் மொழிகள் 1440 வருடங்களுக்கு முன்னால் சொல்லப்பட்டவை என்பதையும் இவை அன்றைய மக்களுக்கும் இன்றைய மக்களுக்கும் நாளைய மக்களுக்கும் பொதுவாக சொல்லப்பட்டவை. என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இவர்களுக்கிடையே உள்ள அறிவு வளர்ச்சியின் வேறுபாட்டையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இவற்றின் உண்மையான விளக்கத்தை அவை நடக்கப் போகும் காலகட்டம் வரும்போதுதான் முழுமையாகப் பெறமுடியும். 

உதாரணமாக கீழ்கண்ட நபிமொழியைப் பாருங்கள்:
பெண் எஜமானியைப் பெற்றெடுத்தல்:
 • ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. (நூல்: புகாரி)
இந்த நபிமொழி இன்று இரண்டுவிதமாகப் புரிந்து கொள்ளப் படுகிறது. 
 1. பெண்கள் தம் தாயை அடிமைகளாக நடத்துவார்கள்.
 2. தங்கள் வேலைக்காரிகளோடு எஜமானர்கள் உறவு கொண்டு அதன்மூலம் அவர்கள் எஜமானர்களின் பிள்ளைகளைப் பெற்றேடுப்பார்கள்
மேற்கண்ட எந்த விளக்கத்தை நாம் எடுத்துக்கொண்டாலும் இரண்டுமே இன்று நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம். நபிகளாரின் காலத்தில் இருந்த அடிமைத்தளை இன்று இல்லை. ஒருவேளை எதிர்காலத்தில் மீண்டும் அப்படியொரு நிலை வந்து அங்கு நடக்கப் போவதையும் இந்நபிமொழி எடுத்துச் சொல்வதாக இருக்கலாம். எந்த சாத்தியக்கூறுகளையும் நாம் தள்ளுபடி செய்ய இயலாது. இறைவனே முழுமையாக அறிந்தவன்.

தகுதியற்றவர்களிடம் ஆட்சி இருக்கும்
 • "நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமை நாளை எதிர்பார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "நம்பகத்தன்மை பாழ்படுவது என்றால் என்ன? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்டார் “பொறுப்பு, தகுதியற்றவனிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (புஹாரி).
தகுதியற்றவர்களிடம் ஆட்சியும் அதிகாரமும், நீதி நிர்வாகமும் ஒப்படைக்கப்படும் அவலத்தை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஆள்வதற்கு எந்த தகுதியும் இல்லாத திரைப்பட நடிகர்களிடமும் நடிகைகளிடமும் முன்னாள் ஆட்சியாளர்களின் மனைவிமார்களிடமும் பிள்ளைகளிடமும் ஆட்சிப்பொறுப்புகள் ஒப்படைக்கப்ப்படுவதும் நாம் கண்டுவருகிறோம்.

வாழும் ஆசை அற்றுப் போய் விடும்:
 • ஒரு மனிதர், மற்றொரு மனிதரின் மண்ணறையைக் கடந்து செல்லும் போது, அந்தோ நான் அவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருந்திருக்க வேண்டாமா? என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல் – புஹாரி)
விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்:
 • விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்சம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்தான் (நூல்:புஹாரி 5577, 5580)
 • யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231
பாலைவனம் சோலைவனமாகும்:
 • செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தை (எழைவரியை)ப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது (நூல் : முஸ்லிம்)
காலம் சுருங்கும்:
 • “காலம் சுருங்கும் வரை மறுமை நாள் ஏற்படாது. ஒரு வருடம், ஒரு மாதம் போன்றும், ஒரு மாதம் ஒரு வாரம் போன்றும், ஒரு வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு நாள் ஒரு மணி போன்றும், ஒரு மணி நேரம் என்பது உலர்ந்த பேரீச்ச மர இலை எரியும் நேரம் போன்றதாகவும் இருக்கும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல் அஹ்மத்.)
 • (மறுமை நாள் வரும் முன்) காலம் சுருங்கி விடும். செயல்பாடு குறைந்து போகும். மக்களின் உள்ளங்களில் கஞ்சத்தனம் உருவாக்கப்படும். குழப்பங்கள் தோன்றும். ஹர்ஜ் (கொலை) பெருகிவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள் (புஹாரி)
நிர்வாணி மக்கள் தலைவராக ஆகுதல்:
 • ‘செருப்பணியாத, நிர்வாணமாகத் திரிவோர், மக்களின் தலைவர்களாக ஆவதும், மறுமைநாளின் அடையாளங்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
கொலை அதிகரித்தல்:
 • ‘மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலகட்டம் வரும். அப்போது, கல்வி மறைந்து போய் அறியாமை வெளிப்படும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல் – புகாரீ)
 • எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். ((முஸ்லிம்)
 பூகம்பங்களும் அதிகரித்தல்:
 • நில அதிர்வுகளும், பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி)
எப்படியாவது சம்பாதித்தல்:
 • ‘ஒரு காலம் வரும், அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா ஹராமா? (அனுமதிக்கப்பட்டவையா இல்லையா?) என்பதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் (நூல் – புகாரீ.)
நெருக்கமான கடை வீதிகள்:
 • கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அஹ்மத்)
பின் தங்கியவர்கள் உயர்ந்த நிலையை அடைதல்:
 • 'வறுமை நிலையில் நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர். (நூல்: புகாரி)
 • ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். (நூல்: புகாரி)
 • ‘ஆடுகள் மேய்க்கும் ஏழைகள், நிர்வாணமாகத் திரிவோர், செருப்பணியாதவர்கள் மிக உயர்ந்த மாளிகைகளை எழுப்புவதும், மறுமை நாளின் அடையாளங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
செல்வம் பெருகும்:
 • இப்பூமி தனது ஈரல் துண்டை தங்கம், வெள்ளியை தூண்களைப் போல் வாந்தியெடுக்கும் (வெளிப்படுத்தும்) ஒரு திருடன் இதற்காகத்தான் என் கை வெட்டப்பட்டது’ என்பான். கொலைக்காரன் வந்து, ‘இதற்காகத்தான் நான் கொலை செய்தேன்’ என்பான். உறவுகளைப் பிரிந்து வாழ்பவன் வந்து, ‘இதற்காகத்தான் என் உறவுவினர்களைப் பகைத்தேன்’ என்பான் (இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என) அவர்களை அழைத்தாலும் அவற்றில் எதனையும் எடுக்க மாட்டார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம், திர்மிதீ.)
 • யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. (நூல் : புகாரி)
 • ’நீங்கள் தர்மம் செய்யுங்கள். மக்களிடையே ஒரு காலம் வரும். தன் தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு செல்வான், ஆனால் அதை வாங்குவோர் எவரும் இருக்கமாட்டார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரீ)
பேசாதவை பேசும்:
 • விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. (நூல்: அஹ்மத்)
ஆடை அணிந்தும் நிர்வாணம்:
 • ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.( நூல் : முஸ்லிம்)
பேச்சைத் தொழிலாக்கி சம்பாதித்தல்:
 • தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்:
 • ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. (நூல்: புகாரி 3609, 7121)
 • எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணைவைப்பர்களுடன் சேராத வரை அவர்களின் சிலைகளை வணங்காதவரை மறுமை நாள் ஏற்படாது. மேலும் எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை இறைவனின் தூதர்கள் என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரையாவேன். நிச்சயமாக எனக்குப்பின் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல் : திர்மிதீ,, அபூதாவூத்.)
மாபெரும் யுத்தம்:
 • இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள். (நூல் : புகாரி)
அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
 • ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி. (நூல் : முஸ்லிம் )
வாரி வழங்கும் மன்னர்
 • கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி. (நூல் : முஸ்லிம்)
மதீனா தூய்மையடைதல்:
 • துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி. (நூல் : முஸ்லிம்)
மாபெரும் பத்து அடையாளங்கள்:
மேலே கூறப்பட்ட அடையாளங்களில் சிலவற்றை நாம் இன்றே நாம் கண்டு கொண்டிருக்கிறோம். மற்றவை இனி நடைபெற உள்ளன. ஆனால் கீழே சொல்லப்படுபவை அனைத்தும் இறுதிநாளுக்கு முன் நடைபெற உள்ள பெரிய நிகழ்வுகள் ஆகும். இவற்றை மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள்.
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.

இந்த பத்து அடையாளங்களில் மிகப் பிரதானமான மூன்று அடையாளங்கள் ஏற்படுமாயின் இறைநம்பிக்கை கொள்வது கூட பயனளிக்காது என்றும் நபிகளார் கூறியுள்ளார்கள்.
'சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், அதிசயப் பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றி விடுமாயின், அவற்றுக்கும் முன் இறைநம்பிக்கை கொண்டிருந்தால் தவிர, எவருக்கும் அவரது இறை நம்பிக்கை பயனளிக்காது' என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல்கள் - முஸ்லிம், இப்னுமாஜா.)

'சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை அந்த நாள் வராது. அவ்வாறு உதிப்பதை மக்கள் காணும்போது இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால் அது எவருக்கும் இறைநம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். நூல்கள் - புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா.
------------------------------- 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!