நபிகள் நாயகம் அவர்களுக்கு நாட்டின் ஆட்சித் தலைமையும் ஆன்மீகத் தலைமையும் கைவந்திருந்த நேரம் அது!
ரோமானிய தேசத்தின் பாரசீக சாம்ராஜ்யத்தின் வெளிப்பகட்டு அரண்மனை அலங்காரங்கள், அரசவை பந்தோபஸ்துகள் போன்ற வற்றை எல்லாம் பார்த்து அதே போன்ற அலங்காரமும், ஆடம்பரமும் இஸ்லாமிய அரசுக்கும் தேவை என்கிற சிந்தனை நபித்தோழர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. ஆகையால், தம்முடைய எளிமையான, உலகப்பற்றற்ற ஆடம்பரத்தை விரும்பாத பணிவான வாழ்க்கைக்குப் பதிலாக இறைத் தூதர் ரோமானிய கைசர்களைப் போன்று பாரசீகப் பேரரசர்களைப் போன்று நல்லதொரு வசதியான வாழ்க்கையை மேற்கொள்ளக் கூடாதா? என்று அடிக்கடி சிந்திக்கத் தலைப்பட்டார்கள் நபித்தோழர்கள்.
ஏதோ ஒரு காரியத்திற்காக ஒரு முறை நபிகளாரின் நெருங்கிய தோழர் உமர் இப்னு ஃகக்தாப் இறைத்தூதரின் அறைக்குள் நுழைந்தார்கள்...
உள்ளே பார்த்தால், தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவைகளுக்கான ஒரு சில பொருட்கள் மட்டுமே காணப்பட்டன. பேரீச்ச மரத்து இலைகள் நிரப்பப்பட்ட தோலினாலான தலையணை ஒன்றின் மீது இறைத்தூதர் சாய்ந்தி ருந்தார்கள். கிழிந்து போயிருந்த ஈச்ச மரத்துப்பாய் ஒன்றின் மீது படுத்திருந்தார்கள். பட்டை பட்டையாக பாயின் சுவடுகள் முதுகில் படிந்திருந்தன. தன்னுடைய கண்களை அங்குமிங்குமாக உமர் ஓட்டிப் பார்த்தார். காய்ந்து போன ஒன்றிரண்டு தோல் உறைகளைத் தவிர்த்து வேறு எந்தவிதமான வீட்டு உபயோகப் பொருட்களும் அங்கு காணப் படவில்லை. ஓரிடத்தில் ஒரு மூலையில் கொஞ்சம் கோதுமை குவிந்து கிடந்தது.
உமருடைய கண்கள் கசிந்து கண்ணீரை உகுக்கலாயின
. "எதற்காக கண்ணீர் சிந்துகிறீர்கள்?" என்று இறைத்தூதர் கேட்டார்கள்.
'இறைத்தூதர் அவர்களே! அழாமல் எப்படி இருக்க முடியும்? படுக்கை யில்லாததால் தாங்கள் பாயில் படுத்துள்ளீர்கள். பாயின் சுவடுகளோ தங்கள் முதுகில் பளிச்சிடுகின்றன. இதோ தங்களிடம் இருக்கின்ற ஒட்டுமொத்தப் பொருட்களையும் என் கண்களால் பார்த்துக் கொண்டுள்ளேன். இன்னொரு பக்கம் அங்கே கைசரும், கிஸ்ராவும் வசதியோடும், ஆடம்பரமாகவும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண் டுள்ளார்கள். தாங்களோ இறைவனின் தூதராகவும் இருக்கிறீர்கள்!" என்றார் உமர்.
"அவர்கள் உலகைப் பெற்றுக் கொள்ளட்டும். நாம் மறுமையை அனுபவிப்போம் என்கிற உணர்வு உங்களுக்குத் தோன்றவில்லையா உமரே!” என்று இறைத்தூதர் கேட்டார்கள்.
இன்னோர் அறிவிப்பின் படி ‘இறைவனின் தூதரே!’ ரோமா னியர்கள் பாரசீகர்கள் போல தங்களுடைய சமூகத்தினர்களும், எல்லா வகையான வாழ்க்கை வசதிகளையும் பெற்றுத் திகழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அவர்களோ இறைவனை ஏற்கவும் இல்லை; வழிபடவும் இல்லை. இருந்த போதிலும் வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் பெற்றுள்ளார்கள் என்று உமர் அவர்கள் கூறினார்கள்.அதற்குப் பதிலாக இறைத்தூதர் “நீங்கள் இப்படியா சிந்திக்கிறீர்கள் உமரே! ஈரானியர்களுக்கும், ரோமர்களுக் கும் எல்லா இன்பங்களும் இந்த உலகத்திலேயே கொடுக்கப்பட்டு விட்டன” என்று கூறினார். (ஆதாரநூல்கள்:புகாரி, முஸ்லிம்)
இறைத்தூதர் நல்லதொரு வாழ்க்கையை வாழக் கூடாதா? என்று ஏக்கத்தோடு தன்னுடைய எதிர்பார்ப்பை வெளியிட்ட இதே உமர் தான் பிற்காலத்தில் தன்னுடைய ஆட்சிக் காலத்தில், ஒட்டுப் போடப்பட்ட மேலாடையை அணிந்து கொண்டு ஓலைக்குடிசையில் வாழ்க்கை நடத்திக் கொண்டு எளிமைக்கே அடையாளமாக திகழ்ந்து கொண்டிருந்தார். அட்டகாசமான ஆடம்பர மாளிகைகளில் சர்வ பலத்தோடு வீற்றிருந்த ரோம தேசத்து ஈரானிய பேரரசின் மன்னர்களெல்லாம் இந்த உமரைப் பார்த்துத் தான் குலை நடுங்கிக் கொண்டிருந்தார்கள். காரணம் எல்லாப் போர்க் களங்களிலும் வெற்றி முஸ்லிம்களின் கைகளுக்கேப் போய் சேர்ந்து கொண்டிருந்தது.
தங்களுடைய வழிகாட்டியும் மற்ற மன்னர்கள், ஆட்சியாளர் களைப் போல அலங்காரத்தோடும், ஆடம்பரமாகவும் விளங்க வேண் டும் என்று அரபு மக்கள் ஆசைப்பட்டிருப்பதையே இந்த அறிவிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் தம்முடைய போதனைகள், வாழ் வியல் நடைமுறைகள், தூய நெறி காட்டுதல் போன்றவற்றின் மூலமாக அற்புதமானதோர் எடுத்துக்காட்டை இவ்வுலகிற்கு இறைத்தூதர் வழங் கியுள்ளார்கள். ஆணவச் செருக்கு,ஆடம்பரப் பெருமை, அலங்கார வாழ்வு போன்றவற்றை இறைவன் நேசிப்பதில்லை. இஸ்லாமியக் கண் ணோட்டத்தில் சிறப்பானதும் கிடையாது. நுரையை விடவும் நீர்க் குமிழிகளை விடவும் இந்த உலக வாழ்க்கை அற்பமானது. தன்னுடைய வான்மறை குர்ஆனின் மூலமும், இந்தப் பேருண்மையை இறைவன் பல்வேறு தருணங்களில் உணர்த்தியுள்ளான். அழகான முன்மாதிரியாக வாழ்ந்து இறைத்தூதரும் இதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். இதே முன்மாதிரியைத் தான் இறைத்தூதருக்குப் பின்னால் வந்த நேர்வழி நின்ற ஃகலீஃபாக்கள் நால்வரும் பின்பற்றி நடந்தார்கள். இந்த எளிமையே இஸ்லாமிய அருஞ்செயலாகவும் மாறி நின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக