நம்நாடு ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்த பின் இன்று வரை
இதைத்தான் மாறி மாறி அனுபவித்து வருகிறது. ஜனநாயகம் என்ற பெயரில் நம் மனதுக்கு
விருப்பமானவர்களை ஆட்சித்தலைவர்களாகத்
தேர்ந்தெடுக்கிறோம். சுயநலம் அற்றவர்கள், நாட்டுக்காக அனைத்தையும் தியாகம்
செய்பவர்கள், பொறுப்புணர்வு மிக்க
தொண்டர்கள் என்றெல்லாம் அவர்கள் கூறும் வாய்வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு
வாக்களிக்கிறோம். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்றபின் அனைத்தும் பொய் என்பது
புலனாகிறது.
இவ்வாறு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் நமக்களித்த வாக்குறுதிகளை மீறுவதோடு
மட்டுமல்லாமல் தாங்கள் ஏற்றெடுத்த பொறுப்பை நிறைவேற்றாததோடு நமக்குப்
பலவிதத்திலும் மோசடி செய்கிறார்கள். அவர்களின் முழு நோக்கமும் பணமும் பதவியும்தான்
என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை அவர்கள் நிரூபிக்கிறார்கள். தங்களின்
மற்றும் தங்கள் வாரிசுகளின் பொருளாதார மேம்பாடு மற்றும் புகழ் என்பவை மட்டுமே
இவர்களின் குறிக்கோளாக இருந்து வருகிறது
இது நமது கண்முன்னே காலாகாலமாக நடைபெற்று வரும் நாடகம். எந்த ஒரு கட்சி
ஆட்சிக்கு வந்தாலும் இந்த நடைமுறையில் மாறுதல் இல்லை என்பதை நாம் பல காலமாகக்
கண்டு வருகிறோம். ஆட்சிக் கட்டிலை அடைவதற்காக எல்லா குறுக்கு வழிகளையும்
அக்கிரமங்களையும் எவ்வித தயக்கமும் இன்றி கைகொள்கின்றனர். மதம், இனம் ஜாதி, மொழி,
இடம் இவற்றின் அடிப்படையில் கட்சிகள் அமைத்துக் கொண்டும் மக்களின் இன
உணர்வுகளையும் மத உணர்வுகளையும் தூண்டி கலவரங்களும் கலகங்களும் உண்டாக்கி அவற்றால்
தங்கள் வாக்கு வங்கிகளை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். சட்டம் ஒழுங்கு நீதி இவற்றை
கட்டிக்காக்க வேண்டிய இவர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக இவற்றை அப்பட்டமாக
மீறுகிறார்கள். இவற்றை வைத்துக்கொண்டே அப்பாவி குடிமக்கள் மீது அடக்குமுறைகளை
கட்டவிழ்த்து விடுகிறார்கள். இவர்கள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்தாலும்
இல்லாவிட்டாலும் இவர்களின் போக்கு இதுதான். நாட்டு மக்கள் இவர்களின்
அராஜகங்களுக்கு பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். வேறு வழிகள் ஏதும் இல்லாத
காரணத்தால் இக்கொடுமைகளை நாம் சகித்தே வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
ஒரு கொடுங்கோலனிடம் இருந்து விடுதலை பெற இன்னொரு கொடுங்கோலனிடம் அபயம் தேடும்
அவலம்! ஆளுவதற்கு அறவே தகுதி இல்லாத திரைப்படக் கலைஞர்களிடமும்
கொள்ளைக்காரர்களிடமும் கொலைகாரர்களிடமும் நாடு மாறி மாறி ஒப்படைக்கப் படும்
அவலம்! மக்களின் உழைப்பின் கனிகளை எல்லாம்
வரிகளாகக் கறந்து அவற்றை வைத்துக் கொண்டே அவர்களை அடக்கியாளும் கொடுமை!
செழிப்பான நாட்டு வளங்களும் மனித வளங்களும் அறிவு வளமும் பாரெங்கும் காணாத
அளவு நம் நாட்டில் இருந்த போதும் இவை அனைத்தும் இன்று நடக்கும் அரசியல்
சூதாட்டத்துக்கு பலியாகும் நிலை. தொடர்ந்து மக்கள் வறுமையிலும் அச்சத்திலும்
நீடிக்கும் நிலை. கொலை கொள்ளை விபச்சாரம் சூதாட்டம் மது போதைப்பொருள் போன்ற
தீமைகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது
மட்டுமல்ல, இவற்றை சட்டபூர்வமாக்கி இவற்றைக் கொண்டே நாட்டின் வருவாயையும்
ஆளுபவர்களின் வருவாயையும் பெருக்கிக்கொள்ளும் அவலம். அவலங்களின் பட்டியல் இன்னும்
நீளும் என்பது யாரும் அறிந்த உண்மை!
ஏன் இந்த அவலங்கள்? ஏன் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் படுகிறோம்?
இந்த அவலங்களை நாடு தொடர்ந்து அனுபவிப்பதற்குக் அடிப்படைக் காரணங்களில் சிலவற்றை
முதலில் காண்போம்...
அ) தனிநபர் ஒழுக்கம் இல்லாமை
நாட்டில் குற்றங்களும் பாவசெயல்களும் மோசடிகளும் நாளுக்கு நாள் பெருகுவதற்குக்
காரணம் மக்களிடையே பாவங்களைப் பற்றிய குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இல்லாமையே. தனி
நபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதி கெடுவதற்கு முக்கிய
காரணம் தன் செயல்களுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு
இல்லாமல் போவதும் அதுபற்றி மக்களுக்கு போதிக்கப் படாமையுமே. இதன் காரணமாக
மக்களிடையே சுயநலமும் வெட்கமின்மையும் வரம்புமீறி வளர்கின்றன.
ஆ) சரியும் தவறும் வரையறுக்கப்படாமை
மக்களின் செயல்பாடுகளில் சரி எவை தவறு எவை நல்லவை எவை தீயவை எவை என்றோ
நாட்டில் நியாயம் எது அநீதி எது என்பதையோ தீர்மானிக்க தெளிவான உறுதியான எந்த
அளவுகோலும் இல்லாதது நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்படாமல் இருப்பதற்கு முக்கிய
காரணமாகும். சட்டத்தை எப்படியும் வளைக்கலாம் என்ற நிலையும் என்பது ஆளுக்கு ஒரு
நீதி, நாளுக்கு ஒரு நீதி என்று சட்டம் கேலிக்குள்ளாக்கப்படுவது இதன்
காரணத்தினால்தான்!
இ) மிக பலவீனமான தொலைநோக்கு இல்லாத சட்டங்கள்
= பலவீனமானவையும் சிறிதும் தொலை
நோக்கில்லாதவையும் ஆன சட்டங்கள் நடைமுறையில் இருப்பதன் காரணமாக விபச்சாரம், மது, சூதாட்டம்,
ஓரினச்சேர்க்கை போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் குற்றங்கள் கூட சட்ட
அங்கீகாரத்தோடு நடைபெறவும் நாளுக்கு நாள் பெருகவும் செய்கின்றன. இவற்றைத் தொடர்ந்து
திருட்டும் கொள்ளையும் கற்பழிப்புகளும் கூட எதிர்காலத்தில் சட்ட அங்கீகாரம்
பெறக்கூடிய அபாயமும் நாட்டில் உள்ளது.
ஈ) கற்பனைப் பாத்திரங்களின் ஆதிக்கம்
= நாட்டின் சுமார் நாற்பது சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழே வாழ்ந்துவரும்
நிலையில் நாட்டுக்கு அறவே பயனில்லாத பல கற்பனைப் பாத்திரங்களுக்காக நாட்டின்
செல்வங்கள் கொள்ளை போகின்றன. தலைவர்களின் சிலைகளுக்கும் மொழித்தாய்களுக்கும்
நினைவிடங்களுக்கும் இவற்றைத் தொடரும் மூடநம்பிக்கைகளுக்கும் வீண்சடங்குகளுக்கும்
பெருவாரியான செல்வம் அரசால் செலவிடப்படுகிறது. இவற்றின் பெயரால் மூளும்
கலவரங்களும் உயிர் மற்றும் உடமை சேதங்களும் பாமரர்களை தொடர்ந்து வறுமையிலும் வாட்டத்திலும் நீடிக்க
வைக்கின்றன.
உ) தகுதியற்றவர்களிடம் ஆட்சிப் பொறுப்பு
= நாட்டின் உற்பத்திக்கோ மேம்பாட்டுக்கோ எந்தவித பங்களிப்பும் செய்யாததும்
நாட்டு மக்களை சோம்பேறிகளாக்கவும் செய்கின்ற திரைப்படம் மற்றும் கிரிக்கெட் போன்ற
கேளிக்கைகளுக்கு ஊடகங்களும் அரசும் வீண் முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிப்பதால்
நாட்டு மக்கள் இதன் பெயரால் வெகுவாக கொள்ளை அடிக்கப் படுகிறார்கள். இவர்கள் நாட்டு
மக்களின் உழைப்பின் கனிகளை சுரண்டி வாழ்கிறார்கள். அவர்களின் நேரங்களை
பாழ்படுத்துகிறார்கள். ஆனால் மக்களின் அறியாமையால் நாட்டை ஆள்வதற்கு அறவே தகுதி
இல்லாத நடிக நடிகையர்களின் காலடிகளில் நாட்டின் ஆட்சி பீடமும் ஒப்படைக்கப்
படுகிறது.
ஊ) ஆன்மீகத்தின் பெயரால் கொள்ளை
இறைவழிபாடு என்ற பெயரில் எல்லா
மதங்களையும் சார்ந்த இடைத்தரகர்கள் நாட்டு மக்களிடையே மூடநம்பிக்கைகள் பலவற்றைப்
பரப்பி இவற்றின் பெயரால் நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கிறார்கள். இதன்மூலம்
பொருட்செலவு இல்லாத எளிமையான வழிபாடு வியாபாரமாக்கப்படுகிறது. நாட்டுமக்களின்
சேமிப்பும் உழைப்பும் இவர்களால் கறக்கப்பட்டு இவர்கள் நடத்தும் நிறுவனங்களிலும்
ஆசிரமங்களிலும் பதுக்கப்படுகிறது.
எ) கடவுளின் பெயரால் மனிதகுலத்தில் பிரிவினைகள்
= மதங்களின் பெயரால் திணிக்கப்படும் மூடநம்பிக்கைகளின் விளைவாக மனித இனம் கூறுபோடப்பட்டு மனித சகோதரத்துவமும்
சமத்துவமும் மறுக்கப்படுகிறது. அதனால்
மனிதகுலத்தில் தீண்டாமையும் வெறுப்பும் விதைக்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு
சுயநலமிகள் அரசியல் ஆதாயங்கள் தேடுவதால் இனக் கலவரங்களும் மதக்கலவரங்களும்
கற்பழிப்புகளும் படுகொலைகளும் தொடர்கதைகளாகின்றன.
ஐ) முறையற்ற பொருளாதாரக் கொள்கை:
முறையற்ற வரிவிதிப்பு, வட்டி சார்ந்த வங்கி முறை, அரசியல் வாதிகளின்
குறுக்கீடு போன்றவற்றின் காரணமாக நாட்டின் தொழில் வளர்ச்சியும் வணிகமுறைகளும்
விபரீதமான முறையில் பாதிக்கப்படுகின்றன. அதனால் கறுப்புப்பணம், பதுக்கல், வரி
ஏய்ப்பு இலஞ்ச ஊழல்கள் மலிந்து நாட்டை குட்டிச்சுவராக்குகின்றன.
ஒ) குறைபாடுகள் மலிந்த கல்வித் திட்டம்
கல்வியின் முதல் நோக்கம் மனிதனை பண்புள்ளவனாக ஆக்குவதே. அதற்கான எந்த
பாடத்திட்டங்களும் நமது கல்வி முறையில் இல்லை. பொருள் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே
குறிக்கோளாக கொண்டு கல்வி கற்பிக்கப்படுவதால் தங்களுக்காக உழைத்த பெற்றோர்களைப்
புறக்கணிக்கவும் முதியோர் இல்லங்களில் சேர்க்கவும் செய்கிறார்கள் அவர்களின்
மக்கள். மேலும் வாழ்க்கையில் எந்தவகையிலும் பயன்படாத பலவற்றையும் பாடத்திட்டத்தில்
உட்படுத்தி மாணவர்களின் நேரங்கள் கணிசமான அளவில் வீணடிக்கப்படுகிறது.
இந்த தொடரும் கொடுமைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவது எவ்வாறு? இனியோர்
விடுதலை என்று பிறக்கும்? ஏங்காத உள்ளங்கள் கிடையாது என்பதை அறிவோம்.
சரி.... இந்நிலை மாற வழியுண்டா?
கண்டிப்பாக உண்டு! ஆம் அன்பர்களே இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன்
இதற்கோர் தீர்வை கூறாமல் இருப்பானா?
வாருங்கள் அதை அறிய முற்படுவோம்....
நாம் இவ்வுலகில் அமைதியாக வாழ நம்மைப் படைத்தவன் வழங்கிய வாழ்க்கைத்
திட்டம்தான் இஸ்லாம் என்று அரபு மொழியில். அறியப்படுகிறது. இவ்வார்த்தைக்கு அமைதி
என்றும் கீழ்படிதல் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு.இறைவனின் கட்டளைகளுக்கு
கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியைக் காண முடியும். மறுமையிலும் அமைதியை
–மோட்சத்தை- அடைய முடியும் என்பது இஸ்லாம் முன்வைக்கும் தத்துவமாகும்.
பாரதத்தைக் காப்போம்!
இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மற்றும் இறுதி இறைத்தூதர் முஹம்மது
நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி இவ்விரண்டையும் அடிப்படையாகக்கொண்டு
மேற்படி அவலங்களில் இருந்து பாரதத்தைக் காப்பாற்ற நாம் மேற்கொள்ளவேண்டிய
சீர்திருத்தங்களைப் பற்றி அறிவோம்.
இஸ்லாம் முன்வைக்கும்
சில அடிப்படை சீர்திருத்தங்கள்
= தனிநபர் நல்லொழுக்கம்- இதை அடிப்படையாகக் கொண்டுதான் எந்த ஒரு
சீர்திருத்தத்தையும் கொண்டு வர முடியும். அதற்கு ஒன்றே மனித குலம் ஒருவனே நம் இறைவன்
என்ற உண்மையை ஆழமாக மனித உள்ளங்களில் விதைத்து அந்த இறைவனிடம் இவ்வாழ்க்கைக்குப்
பிறகு மீளுதல் உள்ளது, அவனிடம் நம் வினைகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற
பொறுப்புணர்வை எல்லோரிடமும் வளர்க்க வேண்டும். இறைவனின் இறுதிவேதம்
திருக்குர்ஆனும் இறுதி இறைதூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளும் மனிதனை
பகுத்தறிவு பூர்வமாக இந்த நம்பிக்கையை விதைத்து நல்லொழுக்கம் வளர்க்க துணை
செய்கின்றன. நபிகள் நாயகத்துக்கு முன்னர் வந்த இறைதூதர்களும் இதே அடிப்படைகளைத்
தான் மனித மனங்களில் விதைத்து தத்தமது சமூகங்களை சீர்திருத்தி தர்மத்தை
நிலைநாட்டிச் சென்றார்கள். இனத்தின், நிறத்தின், குலத்தின், மொழியின் பெயரால்
பிரிந்து கிடக்கும் மக்களை இஸ்லாம் இவ்வாறுதான் இணைத்து முதலில் மனித
சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுகிறது. இந்த அடிப்படையைத்தான்
மற்றெல்லா சீர்திருத்தங்களுக்கும் முதல்படியாக இஸ்லாம் முன்வைக்கிறது. நமது
நாட்டிலேயே இக்கொள்கை பெருவாரியான மக்களை ஜாதிக் கொடுமைகளில் இருந்தும்
தீண்டாமையில் இருந்தும் காப்பாற்றியுள்ளதை நாம் அறிவோம். அவர்கள் இன்று தோளோடுதோள்
நின்று தொழுகை நடத்துவதில் இருந்தும் ஒரே தட்டில் தீண்டாமை மறந்து பகிர்ந்து
உண்ணுவதில் இருந்தும் இது ஒரு வேற்று கோஷம் அல்ல என்பது புலனாகும்.
= நன்மை தீமைகளைப் பிரித்தறியும் அளவுகோல்
மனிதனுக்கும் மற்ற ஜீவிகளுக்கும் எது நல்லது எது தீயது என்பதை முழுமையாக
அறிந்தவன் அவர்களைப் படைத்த இறைவன் மட்டுமே. அவன் மட்டுமே அனைத்தின் உரிமைகளையும் தேவைகளையும்
மிக நுண்ணியமாக ஒருசேர அறிந்தவன். அவன் மட்டுமே அவற்றை மிகப் பக்குவமாக பங்கீடு
செய்யத் தெரிந்தவன். நன்மை தீமையைப் பிரித்தறிய அவன் தரும் அளவுகோலே நீதிமிக்கது. மற்றவை
அனைத்தும் மாறுபடக்கூடிய மனித இச்சைகளை அடிப்படையாகக் கொண்டவை ஆதலால்
குறைபாடுள்ளவை ஆகும். நாட்டை ஆளும் சட்டங்கள் இந்த அடிப்படையை கொண்டு வடிவமைக்கப்
படுமானால் நாட்டில் அமைதியையும் நீதியையும் அனைவரும் பெற முடியும். மேலும் அந்த
இறைவன்தான் இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியும் ஆக இருக்கிறான். அவன் எவுவதை
செய்வதே புண்ணியம் அவன் தடுத்ததை செய்தால் அதுவே பாவம்.
=சட்டங்கள் சாசனங்கள் திருத்தம்
மனிதனுக்கு தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் அந்த
இறைவன் பரிந்துரைக்கும் சட்டங்களே குறைகள் அற்றவையாகும். தொலைநோக்கும் நீதியும்
நிறைந்ததாகும். அவை இறைத்தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் வழங்கப்பட்டு
தூதர்களின் முன்மாதிரி வாழ்க்கை மூலமாக நிரூபிக்கப்பட்டவை ஆகும். ஆகவே அவற்றை
அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் சட்டங்கள், குடும்பவியல் சட்டங்கள், குற்றவியல் சட்டங்கள்
போன்றவை நிர்ணயிக்கப்பட்டு நாட்டின் நீதித்துறையும் அரசியல் சாசனங்களும்
திருத்தப்பட்டு அவை பேணப்பட்டால்
இவ்வுலகிலும் அமைதியான வாழ்க்கை அமையும். மறுமையிலும் அமைதியின் இருப்பிடமான
சொர்க்கத்தை அடையலாம்.
= ஆட்சிப்பொறுப்பு என்பது அமானிதம்
ஆட்சிப் பொறுப்பு என்பது இறைவன் வழங்கும் அமானிதம் ஆகையால் அவர்கள் இறைவனால்
விசாரிக்கப்படுவார்கள் என்ற பொறுப்புணர்வோடு ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். குடிமக்களின்
குறைகள் நியாயமானதாக இருக்கும்பட்சம் அவை நிவர்த்தி செய்யப் படாமல் இருந்தால்
ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் இறைவன் முன் குற்றவாளிகளே. இந்த அச்சம் ஆட்சியாளர்களை
பொறுப்புணர்வு மிக்கவர்களாக ஆக்குகிறது. அதனால் சரித்திரத்தில் பல இஸ்லாமிய
ஜனாதிபதிகள் இரவுபகலாக கண்விழித்து மக்கள் சேவையாற்றினார்கள். காந்தியடிகள் கலீபா
உமரின் ஆட்சி போன்று இந்தியாவில் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது இதனால்தான்.
= பொருளாதாரக் கொள்கை
செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது என்பதும் அது இந்த வாழ்க்கையில்
இறைவனால் மனிதனுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் ஒரு அமானிதப் பொருள் என்பதும்
இஸ்லாம் மனிதனுக்கு உணர்த்தும் உண்மைகளாகும். அந்த அடிப்படையில் இஸ்லாமிய முறையில்
செல்வந்தர்கள் பொருளீட்டுவதற்கு சுதந்திரம் வழங்கப்படும் அதேவேளையில் அவர்கள்
ஈட்டும் செல்வத்தின் ஒரு பகுதி அரசால் வசூலிக்கப்பட்டு அது ஏழைகளிடையே
பங்கிடப்படும். இஸ்லாம் பரிந்துரைக்கும் ஜக்காத் என்ற கட்டாய தானம் ஒரு மிதமான
வரிவிதிப்பு போன்றது சமூகத்தில் தகுதி உள்ளவர்களுக்கு வறியோர்க்கு அது பகிர்ந்து
அளிக்கப்படுவதால் வறுமை நடைமுறையில் ஒழிக்கப் படுகிறது. அதேவேளையில் இன்று
நம்நாட்டில் காணப்படும் வரம்புக்கு மீறிய வரிவிதிப்பால் (உதாரணமாக 40%) உண்டாகும் கருப்புப்பணம்,
வெளிநாடுகளில் பணம் பதுக்குதல் போன்ற விபரீதங்களையும் மோசடிகளையும் இலஞ்ச
நடைமுறையையும் தவிர்த்து உள்நாட்டிலேயே அப்பணம் சுதந்திரமாகப் புழங்க வழிவகை
செய்கிறது இஸ்லாம்.
மேலும் வட்டியை இஸ்லாம் அடியோடு தடை செய்வதால் அங்கு போலியான பொருளீட்டலும் ஊகவணிகங்களும்
அதைத் தொடர்ந்த பொருளாதார மோசடிகளும் பணவீக்கம் போன்றவைகளும் இல்லாமல் போகின்றன.
= கல்வி முறை
நாட்டின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் வளரும் தலைமுறைகளுக்கு கொடுக்கப்படும்
கல்வியும் பயிற்சியும் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது.
குழந்தைகளுக்குக் கல்வியைக் கற்பிப்பதன் தலையாய நோக்கம்
மனிதனை சீர்படுத்தி அவனை பண்புள்ளவனாக ஆக்கவேண்டும் என்பதாக இருக்கவேண்டும்.
மாறாக உணவை சம்பாதிப்பதற்கான வழிகளைத்
தேடுவது இரண்டாவது இடத்தில்தான் இருக்க வேண்டும். உண்மையில் அதற்குக் கல்வி
கற்பதன் அவசியமும் இல்லை. காரணம் மனிதனை விட அறிவு குறைந்த விலங்கினங்களும்
பறவைகளும் மீன்களும் எல்லாம் தங்களின் உணவை எளிதாகவே அடைவதைப் பார்க்கிறோம்.
மனிதன் தன்
பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தவும் அதைக்கொண்டு இவ்வுலகை ஆராயவும் அதன் விளைவாக
இவ்வுலக வளங்களை மனிதகுலத்துக்கு பயன்படும் வண்ணம் ஆக்கபூர்வமான செயல்களுக்கு
தூண்டுகோலாக பாடத் திட்டங்கள் அமைய வேண்டும். அத்துடன்
படைத்த இறைவனைப் பற்றியும் இந்தத் தற்காலிக உலகில் மனித
வாழ்வின் நோக்கம் பற்றியும் அறிவூட்டும் கட்டாயப் பாடங்கள் மனிதனின் பகுத்தறிவு
ஏற்றுக்கொள்ளும் வண்ணம் போதிக்கப் படவேண்டும். அப்போதுதான் மனிதன் தன்
செயல்களுக்கு இறைவனிடம் விசாரணை உண்டு என்பதையும் மரணத்திற்குப் பிறகு தனக்கு
சொர்க்கம் அல்லது நரகம் உண்டு என்பதையும்
அறிந்து பொறுப்புணர்வோடு வாழ்வான். அதேவேளையில்
நீதிபோதனைகள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை போதித்தால் குழந்தைகளிடம் கடவுள்
நம்பிக்கை வளராது. நாத்திகமும் போலி பக்தியும்தான் வளரும். நன்னடத்தை வளராது,
சுயநலம்தான் வளரும், நாட்டில் பாவங்கள் மலியும்!
= உண்மையான இறையச்சத்தைப் வளர்ப்பதற்கு
அடுத்தபடியாக குழந்தைகளுக்கு போதிக்கப் படவேண்டியது நன்மை எது தீமை எது என்பது
பற்றிய கல்வியாகும்.. அதாவது இறைவனின் பார்வையில் எது பாவம் எது புண்ணியம் என்பதை
அறிந்தால்தான் மனிதனால் இறைவனின் ஏவல் விலக்கல்களை அறிந்து கொண்டு
செயல்படமுடியும். இப்படிப்பட்ட
நீதிபோதனைகளை கட்டாயப் பாடமாக்கி அத்துடன் மற்ற பாடங்களை போதிக்கும்போதுதான்
மனிதன் தான் பெற்ற கல்வியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவான். இல்லையேல்
அது அழிவுக்குத்தான் பயன்படும். அதைத்தான் இன்று வல்லரசுநாடுகளின் செயல்பாட்டில்
காண்கிறோம்.
= தன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் ஒரு
மாணவனுக்கு தன் வாழ்வாதாரங்களை தேடும்
திறமை மட்டும் இருந்தால் போதாது. அவன் தன் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும்
ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் சமூகத்தை பாதிக்கக் தீமைகள் குறித்தும் அறிவும்
விழிப்புணர்வும் அவனுக்கு மிகமிக அவசியம். மேலும் அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகள்
மற்றும் நடைமுறைகள் பற்றியும் அறிவும் தேவை அப்போதுதான் சமூகத்தில் நன்மைகளை ஏவி
தீமைகளைத் தடுக்கும் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள்.
= ஒரு ஆரோக்கியமான சமூகம் அமையவேண்டுமானால் அதில்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் உடல் இயற்கைக்கும் சக்திக்கும் ஏற்றவாறு
கடமைகளும் உரிமைகளும் வேறு வேறு என்பதை நாம் இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும்.
இறைவன் எவற்றை ஆண்களுக்கு கடமையாக்கி இருக்கிறானோ அதற்கேற்ற படிப்பை ஆண்களுக்கும்
எவற்றை பெண்களுக்குக் கடமையாக்கி இருக்கிறானோ அதற்கேற்ற படிப்பை பெண்களுக்கும்
புகட்ட வேண்டும். இன்று பள்ளிகளில் நாம் கண்டுவரும் அவலங்கள் – அதாவது கர்ப்பிணிக்
குழந்தைகளும் கள்ளக்காதல்களும் கொலைக் கலாசாரமும் - ஒழிய வேண்டுமானால் இனிமேலாவது
இறைவன் நமக்கு விதித்த வரம்புகளை மீறக்கூடாது. பத்து வயதுக்கு மேறப்பட்ட ஆண்களும்
பெண்களும் தனித்தனி பள்ளிகளில்தான் பயிற்றுவிக்கப் படவேண்டும். சிரமங்கள் பல
இருந்தாலும் இதை மேற்கொண்டால் சமூகமும் நாடும் சமூகச் சீர்கேடுகளில் இருந்தும்
இன்னபிற நாசங்களிலிருந்தும் இறைவனின் தண்டனைகளில் இருந்தும் காப்பாற்றப் படும்.
===================
சுருக்கமாக கூறுவதென்றால் இஸ்லாம் முன்வைக்கும் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு
வருமானால் கீழ்கண்டவை இங்கே நடைபெறும்....
மனித இதயங்களில் இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் முறையான நம்பிக்கை
விதைக்கப் படுவதால் பாவங்கள் விலகும். மனிதனை சுயக்கட்டுப்பாடு மிக்கவனாக கடமை
உணர்வு மிக்கவனாக அது வார்த்தெடுக்கும்.
அநீதியும், அக்கிரமங்களும் மோசடிகளும் அழிந்து அங்கே தர்மங்களும், நல்லறங்களும் நீதியும்
நேர்மையும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் பண்பும் நாட்டுவளங்களை நெறியோடு
பங்கிட்டுக் கொள்ளும் மனப்பாங்கும் மக்களிடையே வளர்ந்து வரும்.
மனித உள்ளங்களில் உண்மையான இறை உணர்வும் பக்தியும் மறுமை உணர்வும் விதைக்கப்
படுவதாலும் அவனோடு நேரடித் தொடர்பு ஏற்படுவதாலும் தனி நபர் வாழ்வில் தன்னம்பிக்கை,
சுயமரியாதை உணர்வு,
வீரம், பாவங்களில் இருந்து விலகியிருத்தல், தியாகமனப்பான்மை, பொறுமை, பிற உயிர்களிடம் அன்பு, பணிவு போன்ற நற்பண்புகள் மக்களின் வாழ்வில் தழைக்கும்.
பொய்க் கடவுளர்களும் போலி தெய்வங்களும் இடைத்தரகர்களும் ஒழிந்தால் கடவுளின்
பெயரால் சுரண்டப்படுதலும் கொள்ளைகளும் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கவழக்கங்களும்
வீண்சடங்குகளும் ஒழியும். பொருட்செலவின்றி நேரடியாக இறைவனை வழிபடுவார்கள். இந்த
நிமிடம் வரையும் அயராமல் நடைபெறும் பகல் கொள்ளைகள் முடிவுக்கு வரும். தொடர்ந்து நாட்டில் செல்வ வளம் செழித்தோங்கும்,
ஆக்கபூர்வமான
வழிகளில் நாட்டின் செல்வம் செலவிடப்படும்.
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற
கொள்கை மேலோங்க ஜாதிகளும் தீண்டாமையும்
ஏற்றதாழ்வுகளும் இனவெறியும் நிறவெறியும் ஒழியும். இனத்துக்கு ஒரு நீதி, நாட்டுக்கு ஒரு நீதி
மாநிலத்துக்கு ஒரு நீதி என்னும் நிலைமாறி அனைத்து மக்களுக்கும் ஒரே நீதி என்பது
நடைமுறைக்கு வரும். மனித சமத்துவமும் சகோதரத்துவமும் சுயமரியாதையும் பரஸ்பர
அன்பும் மலரும்.
. பகுத்தறியும் பண்பு தூண்டப்படுவதால் அங்கு அறியாமை அகன்று மனிதகுலத்துக்கு
பயனுள்ள கல்வியும் அறிவியலும் வளரும். இறையச்சத்துடன் இணைந்து கற்கப்படும்
கல்வியும் அறிவியலும் மனித இனத்தை அழிக்கவோ அதன்மேல் ஆதிக்கம் செலுத்தவோ
பயன்படுத்தப்பட மாட்டாது. மாறாக ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தப்படும்.
இறைவனின் வல்லமையையும் மறுமையின் உள்ளமையையும் உணரவும் இறையச்சத்தை வளர்க்கவும்
பயன்படும்.
பகைமைகளும் மோசடிகளும் அகன்று போவதால்
பாதுகாப்பும் அமைதியும் சூழ ஒரு புத்துலகு பூத்து வரும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற கோட்பாடு உண்மையாகப்
பின்பற்றப்படும். நாடுகளைப் பிரித்து நிற்கும் எல்லைகள் மறையும், நாடுகளின் மூன்றில் ஒரு
பங்கு பொருளாதாரத்தை விழுங்கி நிற்கும் இராணுவங்கள் மறையும்.
இறை நேசத்துக்காகவும் மறுமை
இன்பங்களுக்காகவும் வேண்டி எதையும் தியாகம் செய்யும் தன்னலமில்லாத சான்றோர்களால்
அவ்வுலகு நிறைந்திருக்கும்!