இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 ஏப்ரல், 2020

ஜனாதிபதி மாளிகையில் பாமரர்கள்!

The Madina I Collection இன்று சாதாரண பிரஜைகள் மட்டுமல்ல, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ளவர்களும் கூட ஒரு நாட்டின் அதிபரை அல்லது பிரதமரை சந்திப்பது என்பது கற்பனைக்கு எட்டாத விஷயம். அதிலும் சமூகத்தின் கடைநிலையில் உள்ளவர்கள் - பிறரிடம் தேவைக்காக கரம் நீட்டும் பிச்சைக்காரர்கள் - ஒரு நாட்டின் அதிபரை நேரடியாக சந்திப்பது என்பது சாத்தியமான ஒன்றா?  இன்று ஏன் அது சாத்தியமில்லை என்பதற்கு காரணங்கள் பல்வேறு இருக்கலாம்.

அது சாத்தியமாயிருந்த காலகட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வை நாம் இங்கு காண்போம். இங்கு நாம் காண இருக்கும் அதிபர் யார் தெரியுமா? ஆம், அவர்தான் உலகின் கால்வாசி மக்களால் உயிருக்குயிராக நேசிக்கப்படும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அவரிடம் ஆட்சியாளர்களுக்கும் பிரஜைகளுக்கும் முன்மாதிரி உண்டு. நபிகளாரிடம் நாட்டின் தலைமையும் ஆன்மீகத் தலைமையும் ஒருசேர கைவந்திருந்த நேரம் அது. அப்போது நடந்த ஒரு நிகழ்வைப்பற்றி  நபித்தோழர் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா நகரில்  நபிகளாரின் வீட்டோடு ஒட்டி ஓலைக் கூரை வேயப்பட்டுக் கட்டப்பட்டிருந்த அந்த  பள்ளிவாசலில் ஒரு நாள் நாங்கள் முற்பகல் நேரத்தில் அவர்களோடு  இருந்தோம். (மஸ்ஜிதுன்னபவி (நபிகளாரின் பள்ளி) என்று அழைக்கப்படும் அந்தப் பள்ளிவாசலின் இன்றைய காட்சியைத் தான் நீங்கள் மேலே படத்தில் காண்கிறீர்கள்)
அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அக்காலத்தில் பயணிகள் தற்காப்புக்காக வாட்களையும் தங்களோடு எடுத்துச் செல்வது வழக்கம்.  அவர்களில் பெரும்பாலானோர் "முளர்" என்ற குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். நபிகளாரைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருப்பார்கள் போலும்.

 அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருவிதத் தவிப்பு நிலையுடன் வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தார்கள். தோழர் பிலால் (ரலி) அவர்களிடம் தொழுகைக்காக மக்களை அழைக்க உத்தரவிட்டார்கள்.
அவ்வாறே பிலால் (ரலி) அவர்கள் "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்" என்று தொழுகைக்காக வழக்கமாக அழைக்கும் வாசகங்களால்  மக்களைக் கூவி அழைத்தார்கள். இஸ்லாமிய வழக்கில் இதை 'பாங்கு' அல்லது 'அதான்' என்று சொல்வார்கள். இதையே இன்று பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகள் மூலம் அழைத்து வருவதை  நீங்கள் காண்கிறீர்கள்.
அந்த பாங்கோசையைக் கேட்ட மக்களும் உடனே அனைத்து காரியங்களையும் நிறுத்திவிட்டு தொழுகைக்காக ஆயத்தமானார்கள்.  தொழுகைக்கு முன் வழக்கமாக செய்யும் அங்கத்தூய்மை - அதாவது கை,கால், முகம், போன்றவற்றை நீரால் கழுவி - சுத்தம் செய்து மக்கள் வழக்கம்போல பள்ளிவாசலை அடைந்தார்கள். அங்கு பள்ளிவாசலில் அமர வைக்கப்பட்டு இருந்த ஏழை மக்களை அனைவரும் கண்டார்கள். எல்லோர் முகங்களிலும் வியப்பு மேலிட்டது.

தொடர்ந்து தொழுகை  அணிவகுப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டதும்  மக்கள் வரிசைகளில் அணிவகுத்து நின்றார்கள். யார் முதலில் வந்தாரோ அவர்கள் முதல் வரிசையில் நின்றார்கள். தொடர்ந்து வந்தவர்கள் அடுத்தடுத்த வரிசைகளில் நின்றார்கள். ஒரு காலத்தில் தங்களுக்குள் பகைமை பாராட்டி வந்தவர்களும் குலபெருமை பேசி தாழ்ந்த குல மக்களோடு தீண்டாமை பாராட்டி வாழ்ந்தவர்களும் இன்று தோளோடு தோள் சேர்த்து சீரான வரிசைகளில் நேராக நின்று அணிவகுத்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  இன, நிற, மொழி, செல்வநிலை போன்ற வேற்றுமைகளைக் கடந்து நிற்கும் மனித சமத்துவ மற்றும் சகோதரத்துவ அணிவகுப்பு  அல்லவாஅது. அன்று -பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் - அவர்கள் அணிவகுத்ததைப் போன்றே உலகெங்கும் பரவியுள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர் ஐவேளையும்  அதை நடத்தி வருவதைத்தான்   இன்றும் நீங்கள் காண்கிறீர்கள்.

நபிகளார்  தலைமை தாங்கி தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்தபின் தன் இருப்பிடத்தில் இருந்து எழுந்து அமர்ந்துள்ள  தோழர்களை நோக்கித்  திரும்பி உரை நிகழ்த்தினார்கள். கீழ்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை அவர்களுக்கு முன்னால் ஓதினார்கள்:
 மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்' என்பது பொருள்)
  மனிதகுல சகோதரத்துவத்தை பறைசாற்றும் இந்த இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். உதவிகோரி வந்திருப்பவர்கள் வேற்று நாட்டவர் ஆயினும் வேற்று குலத்தவர் ஆயினும் தங்களின் உடன்பிறப்பே என்றல்லவா  மனித குலத்தை படைத்தவன் இந்த வசனத்தில் கூறுகிறான்! மக்களின் மனங்கள் சகோதரத்துவ உணர்வு பூண்டன.
தொடர்ந்து,
"இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான். "(திருக்குர்ஆன் 59:18) 
என்ற இறை வசனத்தையும் ஓதிக்காட்டி முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறினார்கள் நபிகளார்.
நம்மைப் படைத்த இறைவனின் நேரடி வார்த்தைகளல்லவா திருக்குர்ஆன் என்பது! அந்த இறைவனே நம்மை எச்சரிக்கும்போது அதை அலட்சியம் செய்ய முடியுமா? நம்மிடம் உள்ள செல்வம் என்பது இறைவன் நம்மிடம் தந்த அமானிதப் பொருள் என்றல்லவா இஸ்லாம் கற்பிக்கிறது! மட்டுமல்ல, தங்கள் செல்வத்தில் ஒரு பகுதியை ஏழைகளோடு பங்கு வைப்பதை - அதாவது ஜகாத் கொடுப்பதை- தொழுகையைப் போன்றே கடைமயான ஒன்று என்று இஸ்லாம் கூறும்போது அதை தவிர்க்க முடியுமா?
நபிகளார் தொடர்ந்தார்கள்: "சகோதரர்களே, உங்களில் ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு சில கைப்பிடிகள் கோதுமை, சில கைப்பிடியளவு பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்" என்று கூறினார்கள்.  "அதற்கு முடியாதவர்கள் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்" என்று வலியுறுத்தினார்கள்.

உடனே நபித்தோழர்களில் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குச் சென்று திரும்பினார்கள். தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் கோதுமையிலிருந்தும்  பேரீச்சம் பழத்திலிருந்தும் தங்களால் ஆனதைக் கொண்டுவந்து தர்மம் செய்தார்கள். அப்போது மதீனா வாசிகளில் உள்ள ஒருவர் ஒரு பை நிறைய பொருட்களைக் கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது.
 பின்னரும் தொடர்ந்து மக்கள் தங்களின் தர்மப் பொருட்களுடன் வந்து கொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன்.
அப்போது  நபிகளாரின்  முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அது பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். 'உலகோருக்கு ஒரு அருட்கொடை' என்று சும்மாவா கூறினான் இறைவன்!
தங்களை நாடி வந்த ஏழைகளுக்கு அந்த தர்மப் பொருட்களை வழங்கினார்கள் நபிகளாரும் அவரது தோழர்களும். வயிறார பசியாறினார்கள் வந்தவர்கள். கந்தைகளை மாற்றி புதுத்துணி உடுத்து மகிழ்ந்தார்கள். மனமார வாழ்த்தினார்கள் வழங்கியவர்களை.
நாட்டு மக்களை நேசிப்பதையும் அவர்களின் பசி தீர்ப்பதையும் அவர்கள் ஆபத்துக்கு உள்ளாகும்போது கூட நின்று அம்மக்களை காப்பதையும் வழிபாடாக கற்பிக்கிறது இஸ்லாம். 'பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்' என்கிறது ஒரு நபிமொழி. நபிகளாரும் தோழர்களும் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் காட்டித் தந்த நடைமுறையை இன்றும் உண்மை இறைவிசுவாசிகள் உலகெங்கும் நடைமுறைப் படுத்திக் காட்டுகிறார்கள் என்பதற்கு நீங்களும் காலமுமே சாட்சி.
நம்பி வந்த ஏழைகளின் துயர் துடைத்து அனுப்பியதன் பின்னர்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன் தோழர்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கினார்கள்:
"யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு" என்று கூறினார்கள்.
இறுதியாக ...
மேற்படி நிகழ்வில் இருந்து இன்றைய இஸ்லாமியர்களும் பாடம் பெற்று அதை நடைமுறைப் படுத்தினால் அரசாங்கத்தின் உதவி இல்லாமலே வறுமையில்லா நாடாக நம் நாட்டை நாம் மாற்ற முடியாதா?  சிந்தியுங்கள்!

(மேற்படி வரலாற்று நிகழ்வின் தகவல்கள் ஸஹீஹ் முஸ்லிம்  (1848) என்ற நூலில் இருந்து பெறப்பட்டவை )
===========
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2020 இதழ்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2020 இதழ் 
இந்த இதழை உங்கள் இல்லங்களில் பெற உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு sms செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். 
பொருளடக்கம்:
கொரோனோ உண்டாக்கிய அதிர்வலைகள் -2;
நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ? -3
உங்கள் பரீட்சைக் கூடத்தைப் புரிந்து கொள்ளுங்கள் -5
கொள்ளை நோயே கருணையாக வந்தால்? -7
நோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்! -6
கருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை -10
நோய் நிவாரணப் பிரார்த்தனைகள் -12
நோய் - இறைவன்பால் திரும்புவதற்கான அழைப்பு! -13
காய்ச்சல் என்பது நோயல்ல, சிகிச்சை! -15
நோய் நிவாரணம் பெற பிரார்த்தனை -17
மருத்துவம் மேற்கொள்ள வேண்டும் -18
நோயும் பாவ நிவாரணமும் -19
நோயின்போது பொறுமை -20
நோய் பரவலைத் தடுக்கும் இஸ்லாமிய வழிமுறைகள் -21

கொள்ளைநோய் பரவும்போது வழிகாட்டுதல்கள் -24