இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 நவம்பர், 2012

இறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்!


படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் – படைப்பினங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல – என்ற ஏக இறைக்கொள்கையை பூமியில் நிலைநாட்ட இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்டவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர் உயிரோடு இருந்தபோது மக்கள் தன்னை வணங்குவதற்கோ தன்  காலில் விழுவதற்கோ சற்றும் அனுமதிக்கவில்லை. ஏன், தனக்காக எழுந்து நிற்பதையும் தன்னை அளவுக்குமீறி மக்கள் புகழ்வதையும் கூட தடைசெய்தார்.
  சரி, தான் இறந்தபின்னர் மக்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? ஆம், அதையும் செய்துவிட்டுத்தான் சென்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). இறந்தபின்னர் தான் வழிபாட்டுப் பொருள் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அதற்கான வாசல்கள் அனைத்தையும் இறுக அடைத்துவிட்டு மரணித்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே! இன்று அதற்கு நீங்களே சாட்சியாக இருந்துக்கொண்டு இருக்கிறீர்கள்! உலகில் இன்று கோடிக்கணக்கான மக்களால் உயிருக்குயிராக நேசிக்கப் படுபவர் நபிகள் நாயகம். ஆனாலும் இந்த பூமியின் மேற்பரப்பில் எங்குமே அவரது சிலையோ உருவப் படமோ காணக் கிடைப்பதில்லை! மிகப்பெரிய ஆச்சரியம் அல்லவா இது?
தனது மரணத் தருவாயிலும் மக்களை இதுகுறித்து எச்சரித்தார்கள்.
 இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திருந்து விலக்கி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, "யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! தம் இறைத்தூதர்கன் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்'' என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 436)
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், "அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்'' என்று கூறுவதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: முஸ்லிம்

 புகழாசை காரணமாக உயிரோடிருக்கும்போதே தங்களுக்காக சிலைகளும் நினைவுச் சின்னங்களும் நிறுவிவிட்டுச் செல்லும் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்களை நாம் கண்டுவருகிறோம். ஆனால் உலகளாவிய மற்றும்  காலங்களைக் கடந்து மக்கள் உள்ளங்களில் ஆட்சி செலுத்திவரும் இத்தலைவரை அல்லவோ நாம் நம் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக