இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 மே, 2014

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்

நாம் ஒவ்வொருவரும் பலருடைய அன்புக்கும் பாசத்திற்கும் பாத்திரமாகிறோம். முதன்மையாக நமது தாய். நம்மைப் பெற்றெடுத்தது முதல் நமக்காக அவர் பட்ட படும் கஷ்டங்கள் எழுத்தில் கொண்டுவர முடியாது. அதே போல நமது தந்தையும் நமக்காக செய்யும் தியாகங்களையும் குறைவாக மதிப்பிட முடியாது. நம் உடன்பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், என பலரிடமிருந்தும் அன்பின் வெளிப்பாடுகளை அனுபவித்தவர்களாக வாழ்கிறோம்.
இவ்வாறு மனிதர்கள் தங்களுக்குள் காட்டும் அன்பு என்பது இல்லையென்றால் என்னவாகி இருக்கும்? சிந்தித்தோமா? அது கற்பனை செய்து பார்க்கவே கடினமான ஒன்று!
தாய் மனதில் தன் குழந்தையின் மீது பாசமென்ற ஒன்று இல்லாதிருந்தால் அவள் என்ன செய்திருப்பாள்? ... பெற்ற குழந்தையை அப்பாடா, பத்து மாதம் பீடித்திருந்த சனியன் தொலைந்தது’ என்று சொல்லி அக்குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி எறிந்திருப்பாள். நமக்கேன் வீண்சுமை? என்று சொல்லி தந்தையும் அதற்கு உடந்தையாய் இருந்திருப்பார். இவ்வாறே பிள்ளைகள், பெற்றோர், சகோதர சகோதரிகள், மற்ற உறவினர்கள் என ஒவ்வொரு உறவுகளுக்கும் இடையில் அன்பும் பாசமும் இல்லாதிருப்பின் அங்கு என்ன மீதமிருந்திருக்கும்? சுயநலம் ஆதிக்கம் கொண்டு ஒருவரை ஒருவர் மாய்த்துக்கொள்ளும் நிலை அல்லவா இருந்திருக்கும்? ஆக, நம்மை அப்படி ஒரு அவல நிலையில் இருந்து காப்பாற்றி மனித உறவுகளைப் பிணைத்து உயிர்பித்து வைக்கும் அன்பையும் பாசத்தையும் உருவாக்கியவன் யார்? அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய நமது இறைவனன்றி வேறு யார்?
இதோ அந்த இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் கேளுங்கள்:

= இறைவன் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது பாகங்களைத் தன்னிடமே வைத்துக்கொண்டான். (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றன் மீதொன்று பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடுவோமா என்ற அச்சத்தால் பிராணி தனது குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது.
இதை நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 5311 )

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்பின் நூறு பாகங்களும் இறைவனுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன்,மிருகங்கள், ஊர்வன ஆகிய வற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கி னால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை இறைவன் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி5312) 

= உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களி டம் கொண்டுவரப்பட்டார்கள். அந்தக் கைதி களில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தை யைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,)கைதிகளிடையே எந்தக் குழந்தையைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து, தனது வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். (தனது குழந்தை கிடைத்ததும் அதையும் நெஞ்சணைத்துப் பாலூட்டினாள்.)
அப்போது எங்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எறிவாளா, சொல்லுங்கள்?'' என்றார்கள். நாங்கள், "இல்லை; இறைவன்வின் மீதாணையாக! எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது'' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட இறைவன் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (புகாரி 5315) 

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் -மே 2014

திங்கள், 19 மே, 2014

இறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி அமைய..

இந்த நாடு, நாட்டு மக்கள், நாட்டின் வளங்கள் இவற்றின் பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும்  ஐந்து வருடங்களுக்கு பொறுப்பு ஏற்க உள்ளவர்கள் சில முக்கியமான விடயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. இறைவனையும் மறுமை வாழ்வையும் நம்புபவர்கள் என்ற அடிப்படையில் இவற்றை பகிர்ந்துக்கொள்ள விழைகிறோம். இவை பேணப்படும் பட்சம் இறைநம்பிக்கையாளர்களின் ஒத்துழைப்பும் பிரார்த்தனையும் மட்டுமல்ல இறைவனின் பொருத்தமும் ஆசியும் அரசுக்கு அமையும் என்றும் நம்புகிறோம்.

1) நாடும் அதில் உள்ளதும் இறைவனுடையதே!
   நாட்டுக்கும் நாட்டு வளங்களுக்கும் மக்களுக்கும் உரிமையாளன் இறைவனே. இவ்வுலகில் காணப்படும் அனைத்துக்கும் சொந்தக்காரன் நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனே. ஆகவே நம் ஒவ்வொரு செயலுக்கும் அந்த இறைவனுக்கு நாம் பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வோடு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செயல்பட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும்.

2) குடிமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு 
    மனித குலம் அனைத்தும் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியிலிருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்ற அடிப்படையில் இங்கு வாழும் குடிமக்கள் யாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற அடிப்படையை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் மதம், நிறம், மொழி, பொருளாதார நிலை  போன்றவை வேறுபட்டாலும் அவர்கள் யாவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்பதையும் அவர்கள் அனைவருக்கும் இந்நாட்டு வளங்களிலும் அரசு வழங்கும் வசதிகளிலும் நியாயமான உரிமைகள் உண்டு என்பதையும் மறக்கக்கூடாது. முக்கியமாக குடிமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். இதை சரிவர நிறைவேற்றா விட்டாலோ ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டாலோ அத்துமீறினாலோ அவற்றுக்கான தண்டனைகள் நிச்சயமாக இறைவனிடம் கிடைக்கும். 

3) ஏற்றுக்கொண்ட பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவீர்கள்! 
     ஆட்சிப்பொறுப்பு என்பது இறைவன் வழங்கும் அமானிதம் ஆகும். இவ்வளவு பெரிய நாட்டை ஆள இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பு பல விதமான உழைப்புக்கும் முயற்சிகளுக்கும் பொருள் விரயத்திற்கும் பிறகு வாய்த்துள்ளது என்றாலும் இதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நல்லது. நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சொந்தமாக முன்வந்து இப்பொறுப்பை ஏற்றிருப்பதால் அதிகம் அதிகமாக இப்பொறுப்பு பற்றி இறைவனால் விசாரிக்கப்படுவீர்கள்.

4)    பொது சொத்துக்கள் கையாளுதல் 
நாட்டு வளங்களும் அரசின் வருமானங்களும் மக்களின் பொதுச் சொத்தாக இருக்கும் நிலையில் இவற்றை முறையாக கைகாரியம் செய்தால் கண்டிப்பாக அதற்கான நற்கூலி இறைவனிடம் உண்டு. மாறாக சுயநலத்துக்கு ஆட்பட்டு இவை வீண்விரையமோ அபகரிப்போ செய்யப்படுமானால் மோசடி செய்யப்பட்ட அந்த பொருட்கள் சகிதம் இறைவனின் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இறைவனின் எச்சரிக்கைகள் 
மேற்கூறப்பட்டவை இறைநம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் பொதுவான அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இனி இறைவனிடமிருந்து வந்துள்ள இறுதிவேதம் என்று நாங்கள் நம்பும் திருக்குர்ஆனின் அடிப்படையிலும் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அறிவுரைகளின் அடிப்படையிலும் மேலும் சில விடயங்களை உங்களோடு சகோதர உணர்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.
நீங்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்  நாளில் இருந்து நீங்கள் நாட்டுக்கு செய்யக்கூடிய ஒவ்வொரு தன்னலமற்ற சேவைகளும் நன்மைகளாக அல்லது புண்ணியங்களாக உங்கள் கணக்கில் இறைவனால் பதிவு செய்யப்படுகின்றன. அதே வேளையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு மனித உரிமை மீறல்களும் அநியாய செயல்பாடுகளும் அரசின் தரப்பில் இருந்து ஏற்படும் அத்துமீறல்களும் என ஒவ்வொன்றும் தீமைகளாக அல்லது பாவங்களாகப் பதிவாகின்றன.
 நமது செயல்கள் அனைத்தும் அணுவணுவாக இங்கேயே பதிவாகின்றன என்ற உண்மை அறிவியல் வளர்ந்த நிலையில் அனைவரும் உணர்ந்த ஒன்று. ஊடகங்களும் தொடர்புள்ளவர்களும் இவற்றைப் பதிவு செய்யத் தவறினாலும் ஒன்றுவிடாமல் அனைத்து நிகழ்வுகளும் அவற்றோடு தொடர்புள்ள மனிதர்களின் மூளைகளிலும் பதிவாகின்றன என்பதும் அங்கு எழும் ஒலி ஒளி அலைகள் சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மூலமும் பதிவாகின்றன என்பதும் நாம் யாரும் மறுத்துவிடமுடியாது. அதேபோல நம் ஒவ்வொருவருக்கும் மரணம் என்பது உண்டு என்பதும் தொடர்ந்து இவ்வுலகம் ஒரு நாள் முழுமையாக அழிக்கப்படும் என்பதும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மைகள். தொடர்ந்து மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது மனிதர்கள் அனைவரும் நீதிவிசாரணைக்காக எழுப்படுவோம் என்பது இஸ்லாத்தின் உறுதியான நம்பிக்கைகளில் ஒன்று. அதை இங்கு முக்கியமாக பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம்.
இவ்வுலகில் பதிவாகும் நமது வினைகள் அனைத்தும் நமது ஒவ்வொருவரது வாழ்வின் அம்சங்களும் அணுவணுவாக அன்று இறுதித்தீர்ப்பு நாளன்று வெளியிடப்படும்.
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:7,8)
நமது செயல்கள் பதியப்பட்ட புத்தகம் நம் முன்னே கொண்டுவரப்படும். அன்று அநீதி இழைத்தோருக்கும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் நீதி பாலித்தவர்களுக்கும் நீதி பாலிக்காதவர்களுக்கும் முழுமையான முறையில் நியாயம் வழங்கப்படும். வழக்குரைஞர்களோ வாதாடுதலோ அங்கு இல்லை.

அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)
தீர்ப்பு வழங்கப்பட்டபின் ஒவ்வொருவரது நிலையான தங்குமிடம் தீர்மானிக்கப்படும். அவரவர் செயல்களின் எடைக்கேற்ப அவர் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப்படுவார்.

101:6-9 எனவே, (அந்நாளில்) எவருடைய நன்மையின் நிறை கனத்ததோ- அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். ஆனால் எவனுடைய நன்மையின் நிறை இலேசாக இருக்கிறதோ- அவன் தங்குமிடம் ''ஹாவியா'' (எனும் தீக்கிடங்கு)தான்.
தீர்ப்புநாள் அன்று சத்தியத்தை மறுத்தோரின் நிலை
64:7. (மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று சத்திய மறுப்பாளர்கள் எண்ணிக் கொண்டனர்; ''அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது இறைவனுக்கு மிகவும் எளிதேயாகும்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.

அந்நாளில் தீங்குசெய்தவர்கள் தங்களின் நிலைகுறித்து துக்கத்தில் ஆள்வார்கள்.
25:27.
அந்நாளில் அநியாயக்காரன் தனது இரு கைகளையும் கடித்துக்கொண்டு; ''அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?"" எனக் கூறுவான்.

78:40. நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் சத்தியத்தை மறுத்தவன்  ''அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!'' என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
= நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)

= நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நபிமொழி நூல்: புகாரி 7138)
எல்லாம் வல்ல இறைவன் ஆட்சிப்பொறுப்பை ஏற்பவர்களை நேர்வழியில் செலுத்துவானாக! இறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி தர அவர்களை வழிநடத்துவானாக! நாட்டுமக்கள் உள்ளங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவானாக! அனைவருக்கும் இம்மையும் மறுமையும் செம்மையாய் அமைய அருள்புரிவானாக!

 (நபியே!) நீர் கூறுவீராக:  இறைவா! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; (இப்படி செய்வதன் மூலம்) நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய். (குர்ஆன் 3:26)

வெள்ளி, 16 மே, 2014

நாம் ஏன் பிறந்தோம்?

நமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா? நோக்கமற்றதா?

இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்போம் என்பதும் உண்மையே! அப்படியெனில், நம் வாழ்வும் மரணமும் எதற்காக? இவ்விரண்டின் பிண்ணனியில் ஏதேனும் காரணங்கள் உள்ளனவா ?

இக்கேள்விக்கான விடையை வேறெங்கும் தேடவேண்டியதில்லை.... நம்மைச் சுற்றி நடப்பவற்றை சற்று ஆராய்ந்தாலே போதும். இதோ, நமது சுற்றி  நடைபெறும் விஷயங்களை சற்று பாருங்கள்... இரவு பகல் மாற்றம், மழை, விளைச்சல், சாலையில் பேருந்துகள் ஓட்டம், நம் உடலின் இயக்கம்... இவற்றில் எதுவும் காரணமின்றி நடைபெறுகிறதா?  இல்லைதானே.... ஒவ்வொரு நிகழ்விற்கும் காரணம் உண்டு, ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தமுண்டு என்று நாம் காணும்போது மனித இனமும் காரணமின்றியோ நோக்கமின்றியோ படைக்கப்படவில்லை என்றல்லவா பகுத்தறிவு நமக்குச் சொல்கிறது? சரி, அந்த நோக்கம்தான் என்ன? அதைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருக்க முடியுமா?
இங்கு எந்த மனிதரும் தனது சுய விருப்பத்தினால் பிறப்பதோ அல்லது இறப்பதோ இல்லை என்பது தெளிவு. இது நமக்கு அப்பாற்பட்ட ஒரு அறிவார்ந்த சர்வவல்லமை கொண்ட அளவிடமுடியாத சக்தி இருப்பதை நமக்கு உறுதிப்படுத்துகிறது. அந்த சக்தியே நம்மையும் நம்மைச்சுற்றி உள்ள அனைத்தயும் படைத்து பரிபாலித்து வருகிறது. நம்மை மரணிக்கச் செய்வதும் அதுவே! அந்த சக்தியையே நாம் தமிழில் இறைவன் என்கிறோம். அவனையே ஆங்கிலத்தில் ‘காட்’ என்றும் அரபு மொழியில் ‘அல்லாஹ்’ என்றும் அழைக்கிறோம்.
அந்த இறைவன் இவ்வுலக வாழ்வின் நோக்கம் என்ன என்பதைப பற்றி அறிவித்துத் தந்தால் அதுவே உண்மையாகும். மற்றவை அனைத்தும் ஊகங்களாகும். நம் வாழ்வின் நோக்கம் பற்றி இறைவன் தனது வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் மனிதகுலத்துக்கு அறிவித்து வந்துள்ளான். இந்தத் தூதர்கள் மனிதகுலம் தோன்றிய நாள் முதற்கொண்டு பல்வேறு காலகட்டங்களில் பூமியின் பல்வேறு பாகங்களுக்கும் வந்துள்ளனர். இவர்கள் இஸ்லாமிய வழக்கில் நபிமார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பண்டைய இந்தியாவில் இவர்களையே  "ரிஷிகள்"  என்று அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் அடிப்படையில் ஒரே செய்தியைத்தான் தத்தமது மக்களுக்கு தெரிவித்தனர், இறைதூதர்களின் வரிசையில் இறுதியாக வந்ததவர்தான் முஹம்மது நபி (அல்) அவர்கள். அவர் மூலமாக அருளப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் என்பது.

ஏன் திருக்குர்ஆனைப் பின்பற்றவேண்டும்?

திருக்குர்ஆன் என்பது இன்று வாழும் மக்களுக்காக இறுதியாக வந்துள்ள வேதமாகும். இதற்கு முன்னர் இறைவனிடம் இருந்து பல நாடுகளில் வாழ்ந்த தூதர்கள் மூலமாக வெவ்வேறு வேதங்கள் வந்திருந்தாலும் அவை அனைத்தும் இன்று சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. மேலும் அவை அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக அருளப்பட்டிருந்தன. ஆனால் திருக்குர்ஆன் என்பது இனி இறுதிநாள் வரையும் வரவிருக்கின்ற மக்களுக்கும் வழிகாட்டியாக இருப்பதால் அது எந்த மாற்றங்களுக்கோ சிதைவுகளுக்கோ இடம்கொடாமல் நிலைத்து நிற்கிறது. சுமார் 1430 வருடங்கள் ஆகியும் அது இன்றும் நபிகள் நாயகம் அவர்களுக்கு அருளப்பட்ட அதே நிலையில் அதே மொழியில் உலகெங்கும் உலா வருகிறது. இதைப்பற்றி இறைவனே கூறுவதைக் கேளுங்கள்:

15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
மேலும் சந்தேகத்துக்கு இடம்கொடாத மிக உறுதியான மொழிகளில் இறைவன் இதன்மூலம் பேசுவதை நீங்கள் பார்க்கலாம்:
2:2. இது, (இறைவனின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
45:2. இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய இறைவனிடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
தனது புத்தகம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது என்று அறைகூவல் விடுக்கும் பாணியில் இருந்தே இது இறைவனின் வார்த்தைகளே என்பதை அறியலாம். அப்படிப்பட்ட தெளிவான இறைவேதம் மனித வாழ்க்கையைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை அறிவோம் வாருங்கள்....
வாழ்க்கையின் நோக்கம்
அந்த திருக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான்:
67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
18:7. (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.

ஆம், அன்பு சகோதர, சகோதரிகளே...  இந்த தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு தேர்வு எனவும் இவ்வுலகம் என்பது அதற்கான தேர்வுக்கூடம் எனவும் மேற்படி இறைவசனங்களில் இருந்து தெளிவாகிறது. இங்கு இறைவன் எதையெல்லாம் நம்மிடம் செய் என்று சொல்கிறானோ அவையே நன்மை அல்லது புண்ணியம் என்றும் எவற்றையெல்லாம் செய்யாதே என்று தடுக்கிறானோ அவையே தீமை அல்லது பாவம் என்றும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். அந்த அடிப்படையில் நமது செயல்பாடுகள் புண்ணியங்களாகவும் பாவங்களாகவும் பதிவாகும் பரீட்சைகளமே இவ்வுலகம்.  அதில் நாம் வெற்றியடைவதே நம் வாழ்வின் நோக்கமாகும். அதற்காக இறைவன் தந்த கையேடுதான் திருக்குர்ஆன் ஆகும்.

தீர்ப்பு நாள்
தேர்வு என ஒன்று நடத்தப்பெற்றால் அதற்கான தீர்ப்பு என்று ஒன்று உண்டல்லவா... அத்தீர்ப்பு பற்றி இவ்வாறு கூறுகிறான்:
3:185.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

ஆம், மரணத்தில் இருந்து எப்படி யாரும் தப்பமுடியாதோ அதைப் போலவே அதற்குப்பின் வருவதில் இருந்தும் யாரும் தப்பமுடியாது. இங்கு வினைகளை விதைத்த நாம் அவற்றின் விளைவுகளை அனுபவிக்காமல் போய்விடுவோமா? இவ்வுலகில் அநியாயங்கள் செய்தவர்கள் அதற்குரிய தண்டனைகள் பெறாமலே தப்பித்து விடுவதையும் பிறருக்காக தியாகங்கள் செய்தவர்கள் அதற்குரிய பரிசைப் பெறாமலே மறைந்து விடுவதையும் நாம் காண்கிறோம். இறைவன் அவற்றை அப்படியே விட்டு விடுவானா?
ஆம் அன்பர்களே, நீதியின் வேட்கையை நிறைவு செய்வதற்காகவே வருகிறது இறுதித்தீர்ப்பு நாள்! நாமும் நமக்கு முன்சென்றோரும் நமது பின்தோன்றல்களும் என அனைவரும் மரணத்திற்குப் பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவோம். அதிலிருந்து யாரும் தப்பமுடியாது.
78:17,18.
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரம் குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
அந்நாளில் பயங்கரமான நிகழ்வுகள் நடக்கும் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.
.தன் பெற்றோர்பிள்ளைகள்,  உறவினர்,  வாழ்க்கைத்துணைகள், நண்பர்கள் என பலரும் இருந்தாலும் யாரும் யாருக்கும் உதவி செய்யமாட்டார்கள். அந்நாளின் அமளியில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்வதிலேயே ஈடுபட்டிருப்பார்கள்.
80:33.ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
80:34.அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:35.தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36.தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37.அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.


பதிவேடுகள் சாட்சி கூறும் நாள்
நமது செயல்கள் அனைத்தும் இன்று பதிவாகின்றன. நம்மைச்சுற்றி எழும் ஒலி, ஒளி அலைகள் ஏற்படுத்தும் பதிவுகள் ஒருபுறம், நம்மைக் கேட்காமலே நமது மூளை செய்யும் பதிவுகள் ஒருபுறம் என பதிவுகளுக்குப் பஞ்சமில்லை என்பது தெளிவு. நமது ஒவ்வொருவரது வாழ்வின் அம்சங்களும் அணுவணுவாக அன்று வெளியிடப்படும்.
99:7,8. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவர் கண்டு கொள்வார். 
நமது செயல்கள் பதியப்பட்ட புத்தகம் நம் முன்னே கொண்டுவரப்படும். அன்று அநீதி இழைத்தோருக்கும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் நீதி பாலித்தவர்களுக்கும் நீதி பாலிக்காதவர்களுக்கும் முழுமையான முறையில் நியாயம் வழங்கப்படும். வழக்குரைஞர்களோ வாதாடுதலோ அங்கு இல்லை.

36:65.
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
தீர்ப்பு வழங்கப்பட்டபின் ஒவ்வொருவரது நிலையான தங்குமிடம் தீர்மானிக்கப்படும். அவரவர் செயல்களின் எடைக்கேற்ப அவர் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப்படுவார்.

101:6-9 எனவே, (அந்நாளில்) எவருடைய நன்மையின் நிறை கனத்ததோ- அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். ஆனால் எவனுடைய நன்மையின் நிறை இலேசாக இருக்கிறதோ- அவன் தங்குமிடம் ''ஹாவியா'' (எனும் தீக்கிடங்கு)தான்.
தீர்ப்புநாள் அன்று சத்தியத்தை மறுத்தோரின் நிலை
64:7. (மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று சத்திய மறுப்பாளர்கள் எண்ணிக் கொண்டனர்; ''அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது இறைவனுக்கு மிகவும் எளிதேயாகும்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.

அந்நாளில் தீங்குசெய்தவர்கள் தங்களின் நிலைகுறித்து துக்கத்தில் ஆள்வார்கள்.

25:27.
அந்நாளில் அநியாயக்காரன் தனது இரு கைகளையும் கடித்துக்கொண்டு; ''அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?"" எனக் கூறுவான்.

78:40. நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் சத்தியத்தை மறுத்தவன்  ''அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!'' என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
சொர்க்கத்திலும் நரகத்திலும் என்ன உள்ளது?
இறைவன் இவற்றைப்பற்றி அடிக்கடி தனது இறுதி வேதத்தில் குறிப்பிட்டுள்ளான். 

32:17. அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.

98:8. அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.

69:22-24. உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார். அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும். சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நற்செயல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்).
இவற்றிலிருந்தும் இன்னும் பல நபிமொழிகளில் இருந்தும் நாம் அறிந்துகொள்வது, சொர்க்கவாழ்வு என்பது நிரந்தரமானது; அங்கு பிணி, மூப்பு, இறப்பு போன்றவை இராது; சொர்க்கவாசிகள்  அனைவரும் மாறா இளமையுடனும் அழகுடனும், துன்பதுயரங்கள் இன்றி மகிழ்ச்சியுடனும்  இருப்பர். அங்கு காணப்படுவதெல்லாம் அன்பு, அமைதி, அச்சமின்மை, உறவுபாராட்டுதல், தூய்மையான வாழ்க்கைத்துணைகள், சுவையான திகட்டாத, ஆரோக்கியமான உணவுவகைகள், இப்படி நமது மனம் விரும்பும் அனைத்தும் என நம்மால் எண்ணிப்பார்க்கமுடியாத இன்பங்களை அங்கு இறைவன் நமக்காகப் படைத்திருக்கிறான் என்பதே. 

சொர்க்கத்தை வாக்களிக்கும் குர்ஆன், தீமைகள் செய்தவர்களுக்கு வாய்க்க இருக்கும் நரகத்தைப் பற்றியும் கூறகிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:
4:56 நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். இறைவன் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். 
78:21-26 வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர. இது செயலுக்கேற்ற கூலி!
இவை போன்ற பல வர்ணனைகள் குர்ஆனிலும் முஹம்மது (ஸல்) அவர்களின் மொழிகளிலும் இடம்பெற்றுள்ளன.
நிச்சயமாக நடந்தேறக்கூடிய உண்மைகள்
சகோதர சகோதரிகளே.... தீர்ப்பு நாள், சொர்க்கம், நரகம் ஆகியவை எல்லாம் கற்பனையோ கட்டுக்கதைகளோ அல்ல... இல்லாமையில் இருந்து இந்திரியத் துளியாக உருவானது உண்மை. அதே இந்திரியத் துளிதான் இன்று மனிதனாக உருவாகி நடமாடிக்கொண்டு இருக்கிறது என்பதும் உண்மை! தொடர்ந்து வரும் மரணம் என்பதும் உண்மை! அதேபோல அடுத்த கட்டமான மறுமையும் உண்மையே! நற்கூலிகளோ தண்டனைகளோ அவற்றிற்குத் தகுதியானவர்கள் நிச்சயம் அனுபவிப்பார்கள். நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கைக்காக எத்தனையோ சிரமங்கள் மேற்கொள்ளூம் நாம் நமது நிரந்தர வாழ்விடத்தை தீர்மானிக்கும் விடயத்தில் அலட்சியம் காட்டலாமா?

அறிகுறிகளைக் கொண்டு பகுத்தறிவோம்!
இன்று நம்மால் இறைவனையோ தீர்ப்பு நாளையோ சொர்க்கம் நரகத்தையோ காண முடியாது. ஆனால் மறுமையில் அவற்றைக்  காணும்போது இறைவனையும் மறுமையயும் அனைவரும் நம்புவர். ஆனால் அப்போது அந்த நம்பிக்கை ஒருவருக்கும் பயனளிக்காது. தேர்வு எழுதுவதற்கான நேரம் முடிந்த பின் எப்படி தேர்வு எழுத முடியும்? இறைவனைக் காணமுடியாதபோது அவனை நம்ப வேண்டும் என்பதில்தான் நாம் சோதிக்கப்படுகிறோம்.
எப்படி நம்புவது?
புலன்களுக்கு எட்டும் தகவல்களை ஆய்வு செய்து புலன்களுக்கு எட்டாத விடயங்களை அறிவதற்கே பகுத்தறிவு எனப்படும். இன்று நம்மால் இறைவனையும் மறுமையையும் காண முடியாவிட்டாலும் நம்மைச் சுற்றி அவற்றை நிரூபிக்கும் அத்தாட்சிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவ்வாறு இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் பகுத்தறியச் சொல்கிறது திருக்குர்ஆன்.
3:190. நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.

36:77-79. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.  முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்என்று (நபியே!) நீர் கூறுவீராக!
தேர்வில் வெல்வது எப்படி?
நமக்குத் தேர்வு நடந்து கொண்டிருப்பதையும் அதில் வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தையும் புரிந்து கொண்டோம். வெற்றியாளர்களுக்குக் கிடைக்கவிருக்கும் எண்ணிப்பார்க்கவியலாத அருட்கொடைகளைப் பற்றியும் அறிந்து கொண்டோம். ஆனால் தேர்வில் எவ்வாறு வெல்வது?  அதற்கான வழி எளிமையானது... நாம் செய்ய வேண்டியது இதுதான்... நாம் அன்றாடம் அனுபவித்துவரும் அளவில்லாத அருட்கொடைகளுக்கு நன்றிக் கடனாக அந்த இறைவனுக்கு நாம் கீழ்படிந்து வாழவேண்டும். உதாரணமாக உங்களுக்கு நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் முதலாளி உங்களுக்கு உங்களுக்கு தாராளமாக சம்பளம் தருகிறார்.....  மட்டுமல்ல உங்கள் போக்குவரத்துக்கு ஒரு காரும் ஓட்டுனரும் உங்களுக்கு எடுபிடி வேலைக்கு ஒரு பணியாளையும் தன் செலவில் தருகிறார். உங்களை மனமார நேசிக்கவும் செய்கிறார். சாதாரண நிறுவனங்களில் கிடைக்காத பல சலுகைகளையும் இங்கு தருகிறார்.... என்றால் நீங்கள் அவரிடம் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்?
அவருக்கு அதிகமதிகம் விசுவாசத்தோடு சேவை செய்வீர்கள்தானே! இப்போது அந்த முதலாளியின் ஸ்தானத்தில் உங்கள் மீது தன் அளவில்லா அருட்கொடைகளை சொரிந்து வரும் உங்கள் இரட்சகனை வைத்துப்பாருங்கள்.... இயற்கையாகவே இன்னும் அதிகமதிகம் விசுவாசமும் கீழ்படிதலும் வெளிப்பட வேண்டும்தானே! ஆம் அன்பர்களே..... இந்த கீழ்படிதலையே ஒற்றை வார்த்தையில் இஸ்லாம் என்கிறோம்.

துறவறம் கூடாது
அடிபணிதல் என்றால் உலக வாழ்க்கையைத் துறந்து ஆன்மீகத்தில் முழுக்க மூழ்குவது என்ற அர்த்தம் இல்லை. மாறாக நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கையை இறைவன் கற்பிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாழ்வதே இஸ்லாம்! கல்வி, தொழில், வணிகம், குடும்பம், இல்லறம், சமூக வாழ்க்கை, ஆன்மிகம் போன்ற அனைத்திலும் சரளமாக ஈடுபட்டு சக மனிதர்களின் உரிமைகளை மதித்து பொறுப்புணர்வோடு வாழ்வதே இஸ்லாம்! ஆம், இஸ்லாத்தைப் பொறுத்தவரை வாழ்க்கையே வழிபாடு, வழிபாடே வாழ்க்கை!
அவ்வாறு கட்டுப்பாடோடு வாழ்வதால் நமக்கு விளைவது மென்மேலும் நன்மையே! தனிநபர் வாழ்விலும் குடும்ப அங்கத்தினர் மத்தியிலும் சமூக வாழ்விலும் ஒழுக்கம் பேணப்படும். செய்யும் நன்மைகளுக்கு இங்கில்லாவிடினும் மறுமையில் சொர்க்கம் வாய்க்கும் என்ற நம்பிக்கை மனிதனை சுயநலம் மறந்து பிறர்நலம் பேணவும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கவும் தியாகங்கள் மேற்கொள்ளவும்  தூண்டுகிறது. அவ்வாறு மக்கள் வாழத் தலைப்பட்டால் நமது பூமி எவ்வளவு மகிழ்ச்சிகரமான வாழ்விடமாக மாறும் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்!
ஆக, கரும்பு தின்னக் கூலி கிடைப்பது போலத்தான் இது. இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்து வாழும்போது இவ்வுலக வாழ்விலும் அமைதியைப் பெறுகிறோம். அவ்வாறு வாழ்ந்ததற்குப் பரிசாக மறுமையில் தீராத இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தையும் அடைகிறோம்!
இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் என்ன?

இஸ்லாம் எதையும் குருட்டுத்தனமாக நம்பச் சொல்லவில்லை. மனிதன் மறுக்கவே முடியாத சில அடிப்படை உண்மைகளை பகுத்தறிவை பயன்படுத்தி அவற்றை உணர்ந்து அதில் நிலைத்திருக்கச் சொல்கிறது இஸ்லாம். அவை இவையே:
1)     ஒன்றே மனிதகுலம்- அதாவது உலகின் அனைத்து மனிதர்களும் ஒரே ஆண் ஒரே பெண் ஜோடியில் இருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. எனவே நிறம், இனம், இடம், மொழிகள் மாறுபட்டாலும் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.
2)     ஒருவன் மட்டுமே இறைவன்: அனைத்து மனித குலத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவன் மட்டுமே வணங்குவதற்கும் பிரார்த்திப்பதற்கும் தகுதியானவன். அவன் அல்லாத எதற்கும் யாருக்கும் கடவுள் அந்தஸ்து என்பது கிடையாது. அவன் அல்லாதவற்றை கடவுள் என்று அழைப்பதும் வணங்குவதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் வீணும் மோசடியும் ஆகும். உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுள் என்று கற்பிக்கும்போது மனித மனங்களில் இருந்து இறையச்சம் அகன்று போகிறது. அதனால் சமூகத்தில் பாவங்களும் மூடநம்பிக்கைகளும் மலிகின்றன. கடவுளின் பெயரால் மக்களை சுரண்ட இடைத்தரகர்களுக்கு இது வழியாகிறது. மேலும் படைத்தவனுக்கு பதிலாக படைப்பினங்கள் வணங்கப்படும்போது மனிதகுலம் அவர்கள் வணங்கும் கடவுளர்களின் அடிப்படையில் பிளவுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கி அழித்துக் கொள்ளும் நிலையும் உண்டாகிறது. எனவே இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும்.
4:116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

3)     இறைவனிடமே மீளுதல்: இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டு இறைவனிடம் மீள வேண்டும். நம் செயல்களுக்கு இறைவனிடம் விசாரணையும் அதைத் தொடர்ந்து சொர்க்கமோ அல்லது நரகமோ கிடைக்கவுள்ளது.

இறைவன் தரும் வழிகாட்டுதலைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்?

இன்று பலரும் தங்கள் மூதாதையர் பின்பற்றிய மார்க்கங்களையும் துறவறத்தை போதிக்கும் மார்க்கங்களையும்  இறைமறுப்புக் கொள்கைகளையும் மனிதர்கள் உணர்ச்சி வசத்தால் தூண்டப்பட்டு அவர்களாகவே உருவாக்கிய கொள்கைகளையும் அடிப்படையாகக்கொண்டு பல்வேறு வாழ்க்கை நெறிகளை வகுத்துக்கொண்டு வாழ்கின்றனர். இன்னும் சிலர் எதுவுமே எங்களுக்குத் தேவை இல்லை என்று மனம்போன போக்கில் வாழ்கின்றனர். இறைவனின் பார்வையில் இவை அனைத்துமே தவறு என்கிறது திருக்குர்ஆன்!
இவ்வுலகுக்கு சொந்தக்காரனான இறைவன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக இவ்வுலகைப் படைத்துள்ளான் என்பதை மேலே தெளிவு படுத்தியுள்ளோம். அவன் நடத்தும் பரீட்சையில் தனது அடியார்கள் வெற்றி அடைவதற்காக ஒரு தெளிவான வாழ்க்கை நெறியை வகுத்து அதைத் தனது வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் மக்களுக்கு அறிவித்தும் வந்துள்ளான். அதைப் புறக்கணித்து தன்னிச்சையாக உருவாக்கிய மார்க்கங்களை அவன் எப்படி ஏற்றுக்கொள்வான்? இதோ அதை தனது இறுதி வேதத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறான் பாருங்கள்:

3:83. இறைவனின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.

3:85.
 இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்.
ஆம் அன்பர்களே இது இறைவனுடைய பூமி. நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அவன் வழங்கும் அமைதியான வாழ்க்கை நெறியைப் புறக்கணித்து சர்வ வல்லமை கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆகிய அவனுக்குப் போட்டியாக சிற்றறிவு கொண்ட பலவீனமான மனிதர்கள் புனைந்து வழங்கும் மார்க்கங்கள் எப்படி வெற்றியைத் தரும்? அவை மோட்சம் தராது என்பது மட்டுமல்ல, இந்த பூமி வாழ்க்கையையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

முன்னோர்களின் மார்க்கத்தை பின்பற்றலாமா?

இவ்வுலகுக்கு இறுதித்தூதராக நபிகள் நாயகம்  அனுப்பப்பட்ட நிலையில் அவரது வருகைக்குப் பிறகு வாழ்வோர் அனைவரும் அவர் மூலமாக அனுப்பப்பட்ட இஸ்லாத்தையே ஏற்று வாழ கடமைப்பட்டுள்ளோம். முந்தைய தூதர்கள் மூலமாக அனுப்பப்பட்ட வேதங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டவை என்பதால் அவை இறைவனிடம் காலாவதியாகி உள்ளன. மேலும் அவை இன்று மனித கரங்களால் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளன. அவை ஏற்கப்படாது என்று இறைவன் எச்சரிக்கிறான்:

3:19. நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; முன்னாள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

முஹம்மது நபி அவர்கள்தான் இறுதித் தூதரா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்னால் உலகின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்த இறைத்தூதர்களும் மேற்கூறப்பட்ட இஸ்லாத்தின் அடிப்படைகளையே தத்தமது மக்களுக்கு போதித்து அவர்களிடையே முன்மாதிரிகளாக வாழ்ந்து காட்டிச் சென்றார்கள். ஆனால் அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஷைத்தானின் தூண்டுதலால் சிலர் அத்தூதர்களுக்கு நினைவுச் சின்னங்களும் சிலைகளும் எழுப்பி அவற்றையே வழிபட ஆரம்பித்தார்கள். இடையிடையே இடைத்தரகர்களும் புகுந்துகொண்டு அத்தூதர்கள் கொண்டுவந்த வேதங்களையும் திரித்து மக்களை கடவுளின் பெயரால் சுரண்டினார்கள். இவ்வாறு வழிகேட்டில் சென்ற மக்களைத் திருத்துவதற்காக இறைவன் அவ்வப்போது தன்  தூதர்களை அனுப்பி வந்துள்ளான். இந்த தூதர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்தான் முஹம்மது நபி அவர்கள். இன்னும் இவர் உலகம் முழுமைக்குமாக அனுப்பப்பட்ட தூதர் ஆவார்.
முக்கியமாக சில விடயங்களை கவனித்தால் நீங்கள் இதை அறிந்து கொள்ளலாம்:
1)     படைத்த இறைவனை நேரடியாக உருவமின்றி வணங்குவது எப்படி என்பதை இவர் கற்றுக்கொடுத்தார். உலக மக்கள்தொகையின் சுமார் கால்வாசி பேர் இதைக் கடைபிடித்து வருவது.
2)     அவ்வளவு மக்கள் இவரை உயிருக்குயிராக நேசித்தாலும் பூமிப்பந்தில் எங்குமே இவரது உருவச்சிலையோ படமோ காணப்படுவது இல்லை.
3)     இவர் மூலம் அனுப்பப்பட்ட குர்ஆன் என்ற வேதம் சிதையாமல் மூல மொழியிலேயே பாதுகாக்கப்படுவது. மனித வாழ்வின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தருவது.
4)     இவரது வாழ்க்கை முன்மாதிரியும் இவரது போதனைகளும் மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் மக்களுக்கு பின்பற்றப்படுவதற்கு எளிதான முறையில் அமைந்திருப்பது.
5)     இவர் போதித்த கொள்கை பரவப்பரவ மக்களைப் பிரித்து வைத்திருக்கும் ஜாதிகள், தீண்டாமை போன்றவை மறைந்து மனித சமத்துவமும் உலகளாவிய சகோதரத்துவமும் மலர்ந்து வருவது. இது நுழையும் இடங்களில் எல்லாம் மனித உரிமைகள் மீட்கப்படுவது.
இன்னும் இவர் போதித்த கொள்கை உலகில் இன்று அநீதியாளர்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் சவாலாக அமைந்திருப்பதும் நபிகளார்தான் இன்றைய காலகட்டத்துக்காக அனுப்பப்பட்ட தூதர் என்பதை உணர்த்துகின்றன.

உண்மையை பரிசோதித்து அறியுங்கள்
ஆக, அன்பு சகோதர, சகோதரிகளே... திருக்குர்ஆன் என்பது  எந்த மனிதருடைய கூற்றும் அல்ல!. நம் அனைவரையும் படைத்தவனாகிய இறைவனே நம்மோடு இதில் பேசுகிறான். அவனது வழிகாட்டுதலையும் எச்சரிக்கைகளையும் இன்று நம்மிடையே தாங்கி நிற்கிறது இறுதிவேதம் திருக்குர்ஆன். இதை ஏற்போருக்கு நன்மாராயமும் மறுப்போருக்கு எச்சரிக்கையும் விடுக்கிறான் இவ்வுலகின் அதிபதி! அதேவேளையில் இதை ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ளவும் குறைகளைக் கண்டுபிடிக்கவும் அறைகூவல் விடுக்கிறான். ஏற்காதோரின் நிலை என்னவாகும் என்பது பற்றியும் கூறுகிறான்:
4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
2: 23,24. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக..... நமக்கு கிடைத்திருப்பது ஒரே ஒரு வாய்ப்பு. மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதும் தீர்ப்பு நாளும் சொர்க்கம் நரகமும் உண்மையானவை. ஆகவே வாருங்கள் அன்பர்களே, விழிப்புணர்வோடு  நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவோம். தேர்வில் வெற்றி பெறுவோம்.....  நம் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றுவோமாக, காலம் கடந்துபோகும் முன்னே!
இந்த வாய்ப்பு எப்போது முடியும்? மரணம் வரும் வரை என்பதை நாம் அறிவோம். ஆனால் அந்த மரணம் என்பது தினமும் நமக்கு வாய்க்கிறது என்பதை அறிவீர்களா? ஆம் அன்பர்களே உறக்கத்தின் போதும் நம் உயிர்கள் இறைவனால் கைப்பற்றப்படுகிறது என்பதை அவனே அறிவிப்பதைப் பாருங்கள்:

39:42. இறைவன் உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன.

http://holyqurantamil.blogspot.com
திருக்குர்ஆன் தமிழாக்கம்