#நாட்டுப்பற்று_என்பது_என்ன?
பொதுமக்கள்
காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள் இயற்றிய பாடல்களை
உருவிடுவதும், தேசத்தின் கொடியை பலர் காண வணங்குவதும் எல்லாம் ஊடகங்களில் நாட்டுப்பற்றாக
சித்தரிக்கப் படுகிறது. இவற்றில் எந்த அளவுக்கு ஆத்மார்த்தம் உள்ளது என்பதையும்
இவற்றில் பெரும்பாலானவை
புறக்கவர்ச்சிக்காக செய்யப்படுபவையே என்பதையும் நாம் அறிவோம்.
உண்மை
நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பதைவிட அதிகமாக அந்நாட்டைச் சேர்ந்த மக்களை நேசிப்பதுதான். நாட்டு மக்களின் நலன் கருதி
அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக
வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான தேசப்பற்று. நாட்டில் ஆரோக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும்
அவர்களை ஒரு பண்பாடு மிக்க குடிமக்களாக வார்த்தெடுக்க தன்னால் ஆன ஒத்தாசைகளை
செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும்.
#உச்சகட்ட_நாட்டுப்பற்று
நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ
அநியாயத்துக்கோ அல்லது கொரோனா போன்ற கொள்ளை நோய்க்கோ இயற்க்கை சீற்றங்களுக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல்
அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் இடுக்கண்ணை விடுவிக்கப் பாடுபடுவது என்பது உண்மை நாட்டுப்பற்றின் உச்சகட்டம்
எனலாம்!
இப்படிப்பட்ட
ஆத்மார்த்தமான நாட்டுப்பற்று மனித உள்ளத்தில் வரவேண்டுமானால் அங்கு சகமனித நேசமும் இறைநம்பிக்கையும் இறையச்சமும் அடிப்படைத்
தேவைகளாகும். இதையே இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை நமக்குக்
கற்றுத்தருகிறது.
இஸ்லாம் என்றால் ‘இறைவனுக்கு கீழ்படிந்து
வாழுதல்' என்று பொருள். அதை வாழ்க்கை நெறியாக ஏற்றவர்கள் அவர்கள் வாழும் நாட்டை
அதாவது நாட்டு மக்களை நேசிக்காமல் இருக்கமுடியாது.
இன, மொழி, நிற, மத
வேற்றுமைகளை மறந்து மனிதகுலம் அனைத்தையும் தங்களுக்கு சரி சமமாக மற்றும் சகோதரர்களாக பாவிக்கவேண்டும்
என்பது இங்கு இறைவன் கற்பிக்கும் அடிப்படைப் பாடமாகும்.
“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம்.
பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்
கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம்.
உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர்
உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (திருக்குர்ஆன் 49:
13)
நாட்டுமக்களை நேசிப்பதும் இறைவழிபாடே:
மேலும்
நாட்டு
மக்களை நேசிப்பதை வழிபாடாகக் கற்பிக்கிறது இஸ்லாம்.
“மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணில்
உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்” என்பதும் “மனிதர்கள் மீது கருணை காட்டாதவர்
இறைவனால் கருணை காட்டப்பட மாட்டார்” என்பதும் நபிமொழிகள்.
இஸ்லாம்
முன்வைக்கும் மறுமை நம்பிக்கை – அதாவது இறைவனின் கட்டளைகளை பூமியில் நடப்பாக்க செய்யப்படும்
எந்த ஒரு செயலும் வீண்போவதில்லை. அவற்றிற்கு இறைவனிடம் மறுமையில் அதாவது சொர்க்க
வாழ்வில் நற்கூலி உண்டு என்ற உறுதியான நம்பிக்கை – இஸ்லாத்தைப் பின்பற்றி
வாழ்பவர்களுக்கு அலாதியான துணிச்சலையும் வீரத்தையும் தருகிறது. நாட்டு மக்களை
அநியாயத்தில் இருந்தும் அக்கிரமங்களில் இருந்தும் அந்நியர்களின் தாக்குதல்களில்
இருந்தும் பாதுகாக்க சொந்த உயிரையும் உடமைகளையும் அர்பணிக்க மாபெரும்
உந்துசக்தியாக இந்த நம்பிக்கை செயல்படுகிறது. வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி உயிர்துறந்த திப்புசுல்தான், குஞ்சாலி மரைக்காயர் போன்ற தியாகிகளை இதற்கு சில உதாரணங்களாகக் கூறலாம்.
தீமைகளில் இருந்து நாட்டைக் காப்பதும் கடமை
தாய் நாட்டை வெளியில் இருந்து வரும் ஆபத்துக்களை விட்டும் காப்பது எவ்வாறு முக்கியமோ அதைப் போலவே முக்கியமானது நாட்டுக்குள் நடக்கும் அக்கிரமங்களில் இருந்தும் அநியாயங்களில் இருந்தும் சமூகக்
கொடுமைகளில் இருந்தும் நாட்டுமக்களைப் பாதுகாப்பது என்பது. அப்போதுதான்
நாடு என்பது அமைதியான வாழுமிடமாக இருக்கும். ஆனால் நாடு இன்று மக்கள் வாழ்வதற்கே வெறுக்கத்தக்க இடமாக மாறிவரும் நிலையில் உள்ளதை நமது தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் (NCRB) அளிக்கும் தகவல்கள் எச்சரிக்கின்றன.
இன்று நாளொன்றுக்கு 371 தற்கொலைகளும் 106 கற்பழிப்புகளும் 8136 பொதுவான குற்றங்களும் நம் நாட்டின் காவல் நிலையங்களில் பதிவாகின்றன. காவல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படாத குற்றங்கள் இவற்றைவிட ஐந்து மடங்கு அதிகம் என வேறு ஒரு கணக்கெடுப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. குற்றவிகிதங்கள் நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிந்தும் அனுபவித்தும் வருகிறோம்.
நாட்டைக் காப்பது நம் கடமை
இஸ்லாம் என்பது வெறும் தொழுகை, தியானம், தானம், விரதம் மற்றும் இன்னபிற
சடங்குகளுக்குப் பெயரல்ல. மாறாக நம்மைச்சுற்றி நன்மைகளை வளர்க்க வேண்டும்.
நடக்கும் தீமைகளைத் தடுக்கவும் ஆவன வேண்டும்.
இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரேனும் தீமையைக்
கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும்
இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும்.
(நூல்: முஸ்லிம் 78)
ஆக, ஒரு
இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை அவன் தீமைகளை எதிர்த்து எவ்வாறெல்லாம் முடியுமோ
அவ்வாறு எதிர்ப்பைக் காட்ட கடமைப்பட்டிருக்கிறான். எனவே
இன்று நாம் உள்ள நிலையில் எந்தத் தீமைகளை நாம் கையினால் நேரடியாகத் தடுக்க
முடியமோ அந்தத் தீமைகளை நேரடியாகத் தடுக்கவேண்டும். நமது நாடு இன்று ஜனநாயக நாடாக
உள்ளது. அரசியல் சாசனங்களுக்கு உட்பட்டு நாம் காணும் தீமைகளுக்கு எதிராகக் களம்
இறங்க வேண்டும். ஆனால் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு தரும்
அல்லது பொதுசொத்துக்களைப் பாழ்ப்படுத்தும் செயல்களை இறைவன் ஒருபோதும்
அனுமதிப்பதில்லை என்பதையும் அவ்வாறு செய்தால் அது நமக்கு பாவமாகப் பதிவு
செய்யப்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எவ்வாறு தீமைகளைக் களைவது?
தீமைகளை எவ்வாறு
சமூகத்தில் இருந்து களைவது என்பதையும் அதை மீறி அந்தத் தீமைகள் சமூகத்தில்
உடலெடுத்து தலைவிரித்து ஆடும்போது அவற்றை எவ்வாறு கட்டுக்குக் கொண்டுவருவது
என்பதையும் எல்லாம் வல்ல இறைவனே நமக்குக் கற்றுத் தருகிறான்.
ஒழுக்கம்
விதைப்பது முதல் படி!
தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு மக்களிடையே மேலோங்கி இருப்பதால் நாட்டில் ஒழுக்க சீர்கேடுகளும் குற்றங்களும் கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன. இலஞ்சம், ஊழல், மோசடி, கொள்ளை, பாலியல் வன்முறைகள், சிசுக்கொலைகள், முதியோர் கருணைக் கொலைகள், நம்பிக்கை துரோகம், போன்ற அனைத்து தீமைகளையும் ஒழிக்க தனிமனிதன் திருந்தினால்தான் முடியும். தனிமனிதன்
திருந்தவேண்டும் என்றால் மனிதனுக்குள் உண்மையான இறைநம்பிக்கை விதைக்கப்பட
வேண்டும். படைத்த இறைவனைப் பற்றிய உண்மையான நம்பிக்கையை பகுத்தறிவு
ஏற்றுக்கொள்ளும் விதத்தில் விதைக்க வேண்டும்.
அதாவது இவ்வுலகத்தைப் படைத்து பரிபாலித்து வரும்
அந்த சர்வவல்லமை கொண்ட அந்த இறைவன் ஒரே ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு
உரியவன். அவன் இவ்வுலகை ஒரு பரீட்சைக் கூடமாக ஆக்கியுள்ளான் இந்த தற்காலிக
வாழ்வில் மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்குப்
பரிசாக சொர்க்கமும் மறுமையில் கிடைக்கும் என்ற உண்மையை மக்களுக்கு சிறுவயது முதலே
ஊட்டி வளர்க்க வேண்டும். அப்போதுதான்
உண்மையான இறையச்சம் உருவாகும்.
இறையச்சம் உண்டாக இறைவனை அறிவோம்
படைத்த இறைவனைத் தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. இறைவன் அல்லாதவற்றைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று கற்பித்தால் இறைவனைப் பற்றிய மரியாதை உணர்வு மனித மனங்களில் இருந்து போய்விடுகிறது. தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு மேலிடுவதற்கு இது முக்கியமான காரணம் ஆகும். இதனால் குற்றங்கள் செய்ய அஞ்சாத
தலைமுறைகள்தான் உருவாகின்றன. இந்நிலை மாற
படைத்த இறைவனின் உண்மைப் பண்புகளைக் கற்றுக் கொடுத்து அவனை நேரடியாக வணங்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
= சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்கு சம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல் அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம். படைத்த இறைவன் நம்மை சதா கண்காணிக்கிறான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப்படுமானால் அவன் வெளிப்படையான மற்றும் மறைவான பாவங்களில் இருந்து விலகி நிற்பான். குறைந்த பட்சம் அவற்றை செய்வதற்குத் தயங்குவான். உதாரணமாக இந்த உணர்வு நம் இளைஞர்களிடம் வந்து விட்டால் இரவில் இருளில் தனிமையில் ஆபாச வீடியோக்களை பார்க்க மாட்டார்கள்.
இறைவனின் பரிந்துரைகளை அமுல்படுத்துவோம்!
தீமைகள் பெருகுவதற்கு அடுத்த காரணம் படைத்த
இறைவன் வகுத்துத் தரும் வாழ்க்கைத் திட்டங்களையும் சட்டங்களையும் புறக்கணித்துவிட்டு
மனிதன் மனம்போன போக்கில் உருவாக்கியவற்றை செயல்படுத்துவதுதான். மனிதனின் இயற்கையை
நன்கறிந்தவன் இறைவன் மட்டுமே. அவன் நமக்கு வகுத்தளித்துள்ள வாழ்வியல்
சட்டங்களையும் குற்றவியல் சட்டங்களையும் அமுல்படுத்தினாலே நாட்டில் குற்றங்கள்
வெகுவாகக் குறைந்துவிடும். உதாரணமாக, இலஞ்ச ஊழல் மற்றும் விபச்சாரம் தொடர்பான இரு
சட்டங்களை மட்டும் இங்கு காண்போம்.
நமது
நாட்டில் இலஞ்சம், மோசடி, திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள்
போன்றவை கட்டுக்கடங்காது பெருகுவதற்கு நமது நாட்டின் குற்றவியல் சட்டங்கள் மிகவும்
துணை போகின்றன. திருடனுக்கும் மோசடிக்காரர்களுக்கும் காமுகர்களுக்கும் கருணை
காட்டும்விதம் அவை அமைந்துள்ளதால் திருடர்கள் மீண்டும் மீண்டும் திருடுகிறார்கள்,
கற்பழிப்போர் அச்சமின்றி நடமாடுகிறார்கள் என்பது மட்டுமல்ல சிறைச்சாலைகளில்
இருந்து வெளியே வரும்போது புதுப்புது கலைகளையும் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.
ஆனால் இறைவன் வழங்கும் குற்றவியல் சட்டம் திருடனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால்
அவனது முன்கையை வெட்டிவிடச் சொல்கிறது. அதே போல் விபச்சாரக் குற்றவாளிகளை
சாட்டையடி அல்லது மரணதண்டனைக்கு உட்படுத்தச் சொல்கிறது. இந்த தண்டனைகளை பொதுமக்கள்
சாட்சியாக நிறைவேற்றச் சொல்கிறது!
இவற்றை நடைமுறைப்படுத்தி இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் என்ன
நடக்கும்?..... சற்று யோசித்துப் பாருங்கள்! திருடர்களும் காமவெறியர்களும்
உண்மையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது மட்டுமல்ல நாட்டுமக்களுக்கும் ஒரு பாடமாக
அமையும். இச்சட்டம் அமலுக்கு வந்தால் இன்று நீங்கள் காண்பதுபோல் குற்றங்கள்
மலிந்து தலைவிரித்தாடும் நிலையையோ குற்றவாளிகளும் ஊழல்களில் ஊறித்திளைத்தவர்களும் நாட்டு மக்களை மிரட்டி வாழும் நிலையையோ காணமுடியாது.
ஆக, இஸ்லாம் என்பது நம்மைப்படைத்த இறைவன் இந்த பூமியில் நாம் அமைதியாக வாழவேண்டும் என்பதற்காக அவனே வகுத்தளிக்கும் வாழ்வியல் கொள்கை. தனி நபர் ஒழுக்கத்தை இது அடிப்படையாகக் கொண்டது. இந்த மண்ணில்
அமைதியையும் தர்மத்தையும் மக்கள் தாங்களாகவே நிலைநாட்ட உதவும் அருமையான அற்புதமான பரிந்துரைகளை இறைவன் அவனது இறுதி வேதம் திருக்குர்ஆன் மூலமும் அவனது தூதர் முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கை நடைமுறை மூலமும் உலகோருக்கு வழங்கியுள்ளான் என்பதை ஆராய்வோர் அறியலாம்! நம்மை அடக்கி ஆண்ட அந்நியர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த நன்னாளில் ஒழுக்க வீழ்ச்சியில் இருந்து பாரதத்தைக் காத்து உண்மையாகவே நன்மை வாய்ந்த நாடாக மாற்ற சபதம் ஏற்போம்.
===============
#படைத்தவனை_அறிவதற்கே_பகுத்தறிவு
http://quranmalar.blogspot.com/2016/09/blog-post_12.html #இஸ்லாம்_என்றால்_என்ன? #முஸ்லிம்_என்றால்_யார்?
#அல்லாஹ்_என்றால்_யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html