= நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!
(திருக்குர்ஆன் 33:70)
= யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் இறைவனுக்கே உரியது. தூய
சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில்
சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும். (திருக்குர்ஆன்
(35:10)
= ஒருவன்
தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள்
ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின்
மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின்
மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில்
ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர்
தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும்
பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி),
நூல்: புகாரி (2989)
= நல்ல பேச்சுக்கள்
கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாக பயன்படும். நல்ல
பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம்
செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும்
இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி (6023)
= நம்முடைய
முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று
நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம்
செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”இறைத்தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம்
மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப்
பற்றியும் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர்கள் ”அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ”எந்த காரியத்தை நான் செய்தால்
சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கூறினேன். ”சலாமைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை
இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன்
சொர்க்கத்தில் நுழைவாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் (9996)
(சலாம் என்றால் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ – உங்கள் மீது இறைவனின் சாந்தி
உண்டாகட்டும் என்ற வாழ்த்துரையைக் கூறுதல்)
= தெருக்களில்
அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம்
கட்டளையிடுகிறது.
நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இறைத்
தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ”பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன
செய்கிறீர்கள்?
பாதையோரங்களில்
அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். ”தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை.
பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்” என்று கூறினோம். அதற்கு அவர்கள், ”அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து
விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில்
பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி), நூல்: முஸ்லிம் (4020)
இறைவன் கற்றுத்தரும் பேச்சின் ஒழுங்கு முறைகளை கடைபிடித்து இம்மை மறுமை
நன்மைகளை பெறுவோமாக!……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக