இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 ஜூலை, 2019

திருக்குர்ஆனில் வன்முறையைப் புகுத்தும் முயற்சி


Image result for highlight scriptures இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைப்பவர்கள் பலர் திருக்குர்ஆனில் முஸ்லிம் அல்லாதவர்களை  தாக்கத் தூண்டும் பல வசனங்கள் இருப்பதாக வாதிடுகிறார்கள்.  அதற்காக அவர்கள் திருக்குர்ஆனிலிருந்து சில வசனங்களை எடுத்துக் காட்டுகிறார்கள். உதாரணமாக:

= "ஆகவே அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள்." (திருக்குர்ஆன் 2:191)
= "சிறப்புற்ற (இந் நான்கு) மாதங்கள் சென்றுவிட்டால் இணைவைப்பவர்களைக் கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள்; அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காக நீங்கள் பதுங்கியிருங்கள். அவர்கள் பாவத்திலிருந்து விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்." (திருக்குர்ஆன் 9:5)

வசனங்களும் சந்தர்ப்ப சூழல் ஒப்பீடும்
எந்த ஒரு வசனத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்த வசனம் பயன்படுத்தப்பட்ட  சந்தர்ப்ப சூழலை அறிவது மிகவும் அவசியமாகும். உதாரணமாக 'நான் உன்னை கொன்னுடுவேன்'  என்று ஒருவர் சொல்வதாக வைத்துக் கொள்வோம். இந்த வாசகம் நகைச்சுவையாக சொல்லப்பட்டதா அல்லது சீரியஸாக சொல்லப்பட்டதா என்பதை அறிய, இந்த வாசகம் யார் யாரைப் பார்த்து சொன்னார்கள், எப்போது சொன்னார்கள் என்ற சந்தர்ப்ப சூழ்நிலை (context)  அறிவது மிக மிக முக்கியம் ஆகும்.
 எந்த ஒரு புத்தகம் ஆனாலும் அது மத நூலே ஆனாலும் சரி இல்லாவிடினும் சரி,  சந்தர்ப்ப சூழலை ஒப்பிடாமல் வாசித்தால் தவறான பொருளையே தரும் அல்லது தவறாகவே புரிந்து கொள்ளப்படும். இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சில உதாரணங்களை இங்கு கவனிப்போம்:
பைபிள்:
பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன். 
50 ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். 
51 நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 
52 எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். 
53 தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார் இயேசு.  லூக்கா 12:49-53
"யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்." லூக்கா 14:26
"அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய விரோதிகளை  இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்றார்" லூக்கா 19:27
ஒருவர் மேல் உள்ள வசனங்களை மட்டும் வாசிப்பதாக இருந்தால், இயேசு அனைவர் மீதும் வெறுப்பையும் வன்முறையையும் ஊக்குவித்ததாகவே புரிந்து கொள்வார். கிறிஸ்தவர்கள் இந்தப் புரிதலை ஒப்புக் கொள்வார்களா?
பகவத் கீதை:
"ஆத்மா நிலையானது, அழியாதது! உடல் வடிவம் தான் முடிவடையும். ஆதலால் பாரதா, போர் செய்!" 2:18
"(போரில்) கொல்லப்பட்டால் சொர்க்கம் செல்வாய், வென்றால் உலகம் ஆள்வாய். ஆதலால் போர் செய்ய துணிந்து எழுந்து நில்."  2:37
"வேத வன்னியே! வேதங்களை விமர்சிப்போரை, வெட்டி, கிழித்து, தீயால் சுட்டெரித்து தீக்கிரைக்காக்கி சாம்பலாக்கு!" அதர்வ வேத மந்திரம்  12/5/62
யாராவது மேல் உள்ள வசனத்தை மட்டும் படித்தால், கிருஷ்ணன் போரையும் வன்முறையையும் ஊக்குவித்ததாகவே புரிந்து கொள்வார்.  இந்துக்கள் இந்தப் புரிதலை ஒப்புக் கொள்வார்களா?
கார்ல் மார்க்ஸ் எழுதிய தாஸ் காப்பிடல்
கார்ல் மார்க்ஸ் எழுதிய தாஸ் காப்பிடல் (மூலதனம்) ஒரு மத நூல் அல்ல. கம்யூனிச சித்தாந்த நூல். அந்த நூலில், கார்ல் மார்க்ஸ் இவ்வாறு எழுதுகிறார்:
"வன்முறைதான் புதிய சமூகத்தை பிரசவிக்கப் போகும் பழைய சமூகத்தின் மகப்பேறு மருத்துவர்." அத்தியாயம் 31, பக்கம் 534 (ஆங்கில பதிப்பு).
யாரேனும் மேல் உள்ள வசனத்தை மட்டும் வாசித்தால் காரல் மார்க்ஸ் வன்முறையைத் தூண்டினார் என்று புரிந்து கொள்வார்கள். ஒரு கம்யூனிஸ்ட் இதை ஒப்புக் கொள்வாரா?

சரி இனி திருக்குர்ஆனுக்கு வருவோம்.
மற்ற புத்தகங்களைப் போலவே திருக்குர்ஆனையும் சந்தர்ப்ப சூழல் ஒப்பீடு செய்து வாசித்தால் மட்டுமே அவற்றின் சரியான விளக்கங்களைப் பெற முடியும். ஒரு சில உதாரணங்கள் மூலம் இதைப் புரிந்து கொள்ள முயல்வோம்.
ஒரு முஸ்லிம் ஐவேளை தொழுகை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
திருக்குர்ஆனில் உள்ள ஒரு வசனம்:
"தொழுபவர்களுக்கு நாசம் தான்!" 107:4 
யாராவது  மேலுள்ள வசனத்தை மட்டும் வாசித்தால் தொழுகை செய்பவர்களுக்கு நாசம் காத்திருக்கிறது. அதனால் யாரும் தொழக் கூடாது என்ற தவறான முடிவுக்குத்தான் வருவார்.

இந்த வசனமும் சந்தர்ப்ப சூழல் ஒப்பீடும்
"தொழுபவர்களுக்கு நாசம் தான்! அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள், அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே தொழுகின்றார்கள்." (திருக்குர்ஆன் 107:4,5, 6)
4,5,6 வசனங்களை சேர்த்து பார்க்கும் போது, அலட்சியமாய் பிறருக்குக் காட்டுவதற்காகவே தொழுகின்றவர்களை பற்றித் தான் நான்காம் வசனம் பேசுகிறது என்பது நமக்கு நன்றாக விளங்கும்.

திருக்குர்ஆனும் வன்முறையும்
எந்த புத்தகத்தை வாசித்தாலும், அந்த வசனங்களின் சந்தர்ப்ப சூழல் ஒப்பீட்டை  பார்க்காமல், நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆனும் இதற்கு விதிவிலக்கு அல்ல. போர் தொடர்பான எல்லா திருக்குர்ஆன் வசனங்களுக்கும் இந்த விதி பொருந்தும். உதாரணமாக சில வசனங்களை காண்போம்.
ஆகவே அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். (திருக்குர்ஆன் 2:191)

சந்தர்ப்ப சூழல் ஒப்பீடு
இந்த வசனத்தின் சந்தர்ப்ப சூழலை அறிய வேண்டுமானால், நாம் இந்த வசனத்தின் மேலேயும், கீழேயும் உள்ள வசனங்களை பார்க்க வேண்டும்.
உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் எல்லை கடந்துவிட வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 2:190)
ஆகவே அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையை விட மிகக் கொடியது. ஆனால் (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிய முற்படும் வரையில் நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இதுவே! (திருக்குர்ஆன் 2:191)
(இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்து போர் புரியாது) விலகிக்கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 2:192)
மேல் உள்ள வசனங்களை வாசிக்கும் எவரும் திருக்குர்ஆன் உண்மையில் முஸ்லிம்களை எதிர்த்தும் அவர்களின் வீடுகளை விட்டு துரத்தியும், கொன்றும் துன்புறுத்திய இறைமறுப்பாளர்களைப் பற்றியே இது பேசுகிறது என்பதை அறியலாம். மேலும் இறைமறுப்பாளர்கள் போரை நிறுத்தி விட்டால் முஸ்லிம்களும் போரை நிறுத்தி விட வேண்டும் என்றும், முஸ்லிம்கள் வரம்பு மீறக் கூடாது என்றும் இந்த வசனம் எடுத்துச் சொல்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

முஸ்லீமல்லாதவர்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறை பற்றி திருக்குர்ஆன்:
இஸ்லாம் என்பது இறைவன் பரிந்துரைக்கும் ஒரு வாழ்வியல் கொள்கை. ஒன்றே மனித குலம் ஒருவனே இறைவன் என்பதையும் யாதும் ஊரே யாவரும் உறவே என்பதையும் இஸ்லாம் அடிப்படையாக போதிக்கிறது. இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாம் எப்போதும் எதிரியாக பாவிப்பதில்லை.  சக மனிதனோடு உள்ள சகோதர உறவு என்றுமே முறிவதில்லை என்று போதிப்பது இஸ்லாம். இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்களோடும் சரி, அல்லாதவர்களோடும் சரி நல்லிணக்கத்துடன் நடந்துகொள்ளவே திருக்குர்ஆன் கூறுகிறது:
"(நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான்." (திருக்குர்ஆன் 60:8)

அரவணைக்கும்  அன்பு காட்டு
மேலே உள்ள வசனத்தில் 'நன்மை' என்பதைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட அரபி வார்த்தை "தபர்ருஹும்" என்பது. இதற்கான மூல அரபி வார்த்தை 'பிர்'.  பிர் என்ற சொல் பெற்றோர்களிடம் காண்பிக்கும் மிக உயர்ந்த நன்னடத்தையை குறிக்கும். உதாரணமாக: பெற்றோரை அரவணைத்தல் என்பதற்கு 'பிர்ருல் வாலிதைன்' என்று நபிமொழிகளில் குறிப்பிடப்படுகிறது.
நபித்தோழர் இப்னு மஸ்ஊத் ரவி அவர்கள் கூறினார்கள்:  இறைத்தூதர் அவர்களிடம்  "இறைவன் உங்களுக்கு நல்லருள் புரிவானாக.  இறைவனின் தூதரே, செயல்பாடுகளில் மிகச் சிறந்தது எது?' என்று கேட்டேன்.
' தொழுகையை அதன் நேரத்தில் சரியாக தொழுவது' என்றார்கள்.
'அடுத்தது எது?' என்று கேட்டேன்.
' பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது (பிர்ருல் வாலிதைன்)' என்று கூறினார்கள்
(நபிமொழி நூல்: புஹாரி, முஸ்லீம்)
முஸ்லிம் அல்லாதவர்களுடன், பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது போன்று நன்னடத்தையோடும் நேர்மையாகவும், முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதை திருக்குர்ஆன் மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. இதுவே, இஸ்லாத்தின் நிலைப்பாடு.
முடிவுரை
1. எந்தவொரு புத்தகத்திலும் ஏதேனும் ஒரு தனி வசனத்தை அல்லது வாசகத்தை எடுத்து சந்தர்ப்ப சூழல் ஒப்பீடு பார்க்காமல்  மேற்கோள் காட்டுவது அந்த புத்தகத்தை தவறாகவே சித்தரிக்கும். திருக்குர்ஆனும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
2. சந்தர்ப்ப சூழல் ஒப்பீட்டோடு திருக்குர்ஆனை படிக்கும் எவரும், வன்முறையை தூண்டும் வகையிலோ முஸ்லிமல்லாதவர்களுடன்  வெறுப்பைக் காட்டும் வகையிலோ திருக்குர்ஆனில் ஒரு வசனம் கூட இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்வார்கள்.
3. முஸ்லிம் அல்லாதவர்களுடன் பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது போன்று நன்னடத்தையோடும் நேர்மையாகவும், முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளை இடுகிறது.
4. திருக்குர்ஆன் என்பது நம்மைப் படைத்த இறைவன் வழங்கிய வாழ்வியல் வழிகாட்டி நூல் என்பதையும் இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்க அல்லது உயர்த்த வந்ததல்ல என்பதையும்,  தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதையும் உணர்ந்துவிட்டால், மேற்படி குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவை என்பது எளிதாக விளங்கிவிடும்.
==================
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

வியாழன், 11 ஜூலை, 2019

இயற்கையைக் காப்பதும் இறைவழிபாடே!

Related image நம்மில் ஒவ்வொருவரும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட தவணையில் இந்த பூமியின் மீது தோன்றி மறைகிறோம். இந்த குறுகிய தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இந்த பூமியை  அதற்கான பரீட்சைக் கூடமாகவும் நம்மைப் படைத்தவன் ஆக்கியுள்ளான் என்பது பகுத்தறிவு கொண்டு ஆராய்வோர் அனைவருக்கும் புலப்படும். இங்கு நாம் நம்மைப் படைத்த இறைவனின் ஏவல்-விலக்கல்களை ஏற்று அதன்படி வாழ்கிறோமா என்பதுதான் இந்தப் பரீட்சை. இந்தப் பரீட்சையில் வெல்பவர்களுக்கு – அதாவது இறைவனின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப வாழ்ந்தவர்களுக்கு- மறுமையில் சொர்க்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது. மாறாக தோல்வியுறுபவர்களுக்கு – அதாவது இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் புறக்கணித்துத் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தவர்களுக்கு – தண்டனையாக நரகமும் கிடைக்கும் என்பதை இறைவனின் வேதங்கள் நமக்குச் சொல்கின்றன. இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
=  திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம்,  இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக! (திருக்குர்ஆன்; 18:7)
 இயற்கை என்ற மாபெரும் பொக்கிஷம்.
பூமியின் மீதான இந்த வாழ்வை மனிதகுலம் செவ்வனே வாழவேண்டும் என்பதற்காக எண்ணற்ற அற்புதமான அருட்கொடைகளை அளவிலாக் கருணைகொண்ட இறைவன் வழங்கியுள்ளான். அந்த இறைவனின் அருட்கொடைகளில் மிக முக்கியமானது இயற்கை என்ற மாபெரும் பொக்கிஷம்.
= இறைவன்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன்தான் உங்களை உருவாக்கி உங்கள் உருவங்களை அழகாக்கி  சிறந்த உணவு வசதிகளையும் அளித்தான்.  அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன். (திருக்குர்ஆன் 40:64) 
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
 = நிச்சயமாக இறைவன் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும் இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும் அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? (திருக்குர்ஆன் 31:20) 

சுற்றுப்புறச்சூழல் காக்கும் பொறுப்பு

இந்த பூமியில் அந்த இறைவனின் பிரதிநிதியாக நாம் நியமிக்கப் பட்டுள்ளோம் என்றும் திருக்குர்ஆன் நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே நம்மை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொக்கிஷமாக இயற்கை வளங்களையும் வசதிகளையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்ட பொறுப்பாக இருக்கிறது. இறைவன் இன்று நம் கைவசம் ஒப்படைத்துள்ள இயற்கை அருட்கொடைகளை யாரும் சுயநல நோக்கோடு சொந்தம் கொண்டாடி தான்தோன்றித்தனமாக பயன்படுத்த முடியாது. ஏனெனில் நம்மில் எவருமே இவற்றின் உரிமையாளர்கள் கிடையாது. இவற்றின் உண்மை உரிமையாளன் இறைவன் மட்டுமே! நாம் இவற்றைக் கடந்து செல்லும் வெறும் பயனாளிகள் மட்டுமே. இவை அனைத்து மனித குலத்துக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இனி எதிர்காலத்தில் இங்கு வாழவிருக்கும் நமது தலைமுறையினருக்கும் சொந்தமானது என்ற பொறுப்புணர்வோடு நடந்துகொள்வது மிகமிக அவசியமாகும்.

இறைவன் கண்டிப்பாக விசாரிப்பான்
வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந்நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன். (திருக்குர்ஆன் 24:64) 
ஆம் மறுமை நாளில் இவற்றை நாம் பயன்படுத்தியது பற்றி விசாரிக்கப்படுவோம் என்பது உறுதி!
= இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே. உங்கள் ஒவ்வொருவரின் பொறுப்புக்கள் பற்றியும் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்... (புகாரி, முஸ்லிம்)
எனவே இந்தப் பொறுப்புணர்வோடு சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் பேணுவது இந்த பூமியின் மீது இன்று வாழ்வோருக்கும் நலம் பயப்பதாக அமையும். எதிர்கால தலைமுறைகளுக்கும் பயனளிக்கும். மட்டுமல்ல இறைவனின் ஏவலுக்கேற்ப இவற்றைக் கட்டுப்பாட்டோடு பயன்படுத்தியதற்காக அவனது தரப்பிலிருந்து புண்ணியத்தையும் அதன்வழி அச்செயல் மறுமையில் சொர்க்கத்தையும் பெற்றுத்தரும்.
இயற்கை வளங்களை சிதைப்பது யார்?
இந்த பூமியையும் அதைச் சூழவுள்ள வானமண்டலங்களையும் அழகிய முறையில் படைத்து பரிபாலித்து வருபவன் இறைவன். ஆனால் மனிதர்கள் இறைவனின் வழிகாட்டுதலை மீறி தான்தோன்றித்தனமாகவும் சுயநல அடிப்படையிலும்  இந்த அருட்கொடைகளை பயன்படுத்துவதன் காரணமாக இயற்கை வளங்கள் அநியாயமாக அழிக்கப்படுகின்றன. இவற்றின் சமநிலை  குலைகிறது. நீரும் காற்றும் உணவும் நஞ்சாக மாறுகிறது. இவற்றின் விளைவாக உலகெங்கும் – குறிப்பாக நலிந்த நாடுகளில் – கொடிய நோய்களும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடுகின்றன.. நாளுக்குநாள் நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது.
= “மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன” (திருக்குர்ஆன் 30:41) 
தேவை ஒரு தீர்வு
இந்தக் அராஜகத்தையும் குழப்பத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்து இவ்வுலகில் இயற்கை வளங்களையும் அவற்றின் செழுமையையும் மீட்டெடுக்க வேண்டுமானால் இறைவன் பாலும் அவனது வழிகாட்டுதலின் பாலும் நாம் திரும்ப வேண்டும். அந்த இறைவன் நமக்குக் கற்பிக்கும் ஏவல்- விலக்கல்களை பேணி வாழவேண்டும். அவ்வாறு இறைவனின் வழிகாட்டுதல்களுக்கேற்ப வாழும் வாழ்க்கை நெறிதான் இஸ்லாம் (கீழ்படிதல்) என்று அழைக்கப்படுகிறது.
= மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ..... நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
அதாவது ஒன்றே மனித குலம், ஒருவனே இறைவன், அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம், நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்பவே இஸ்லாம் விழைகிறது. அந்த வகையில் மனித உள்ளங்களைப் பண்படுத்தி கொலை, கொள்ளை, விபச்சாரம், மது, சூதாட்டம், மூடநம்பிக்கைகள், தீண்டாமை, மனித உரிமை மீறல்கள் போன்ற கொடுமைகளை விலக்கி புத்துலகு சமைக்க முயற்சிக்கிறது. அங்கு இன, நிற, மொழி,நாடு போன்ற வேற்றுமைகளைக் கடந்து மனித சமத்துவமும் சகோதரத்துவமும் பேணக்கூடிய தனி மனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும் பேணக்கூடிய, தீமைகளில் இருந்து விலகி வாழக்கூடிய, ,பரஸ்பர அன்பு, தியாகம் கூட்டுறவு போன்ற அழகிய பண்புகள் அமைந்த சமூகம் உருவாக வழிவகுக்கிறது இஸ்லாம்.
சுற்றுப்புற சூழல் பாதுகாக்க இஸ்லாம்
எந்த ஒரு உயிரினத்தையும் அநியாயமாகக் கொல்வதை இஸ்லாம் தடை செய்கிறது. உணவுக்காக இறைவன் படைத்துள்ள பிராணிகளைக் கூட கேளிக்கைக்காகக் கொல்வது தடை செய்யப்பட்டதே. தாவரங்களை அநியாயமாக அழிப்பதையும் நீர்நிலைகளை மாசு படுத்துவதையும் இஸ்லாம் அறவே தடுக்கிறது. போர்களின் போது கூட இவற்றுக்கு இஸ்லாம் அனுமதிப்பதில்லை. போர்களின் போது பொதுவாக எதிரி நாட்டு நீர்நிலைகளை யானையை விட்டுக் கலக்குவதும் மரங்களை வெட்டி சாய்ப்பதும் பயிர்களையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்துவதும் மன்னர்களின் வழக்கம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட தற்காப்புப் போர்களின் போது இவற்றையெல்லாம் முழுமையாகத் தடை செய்தார்கள்.  தமது படை வீரர்களுக்கு பயிர்களை, உணவினைத் தரும் கனி வர்க்க மரங்களை, நீர் நிலைகளை, குடியிருக்கும் வீடுகளை சேதப் படுத்தக் கூடாது என்றும் முதியோர்,நோயாளிகள், பெண்கள், குழந்தைகளை, புறமுதுகிட்டு ஒடுவோர்களையும், வளர்ப்பு பிராணிகளையும் கொல்லவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்றும் கட்டளை இட்டார்கள்.
மரம் நடுதல்:
​சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்க காடுகள் அழிக்கப்படுவதைத் தவிர்ப்பதுடன் மரங்களை நடுவது காலத்தின் கட்டாயமாகும். இஸ்லாம் மரம் நடுவதை புண்ணியம் தரும் ஒரு  வணக்க வழிபாடாகப் போதிக்கின்றது.
= இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” (நூல்: புகாரி)
நீர் நிலைகள் பாதுகாப்பு
சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பில். நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், நீர் வளத்தைப் பாதுகாப்பதும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் அவசியமாகும். நிலையான நீரில் சிறுநீர் கழிப்பதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள்.
= ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி)
அதேபோல நீரை வீண்விரையம் செய்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது:
= உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து  விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.(திருக்குர்ஆன் 7:31)
= “ஓடுகின்ற ஆற்றில் தொழுகைக்காக அங்கத்தூய்மை செய்தாலும் அளவோடு நீரை பயன்படுத்துங்கள். வீண்விரயம் கூடாது” என்று அறிவுறுத்தினார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.  ( அஹ்மத்)
பொது இடங்களில் தூய்மை பேணுதல்
பொது இடங்களான சாலை ஓரங்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களை அசுத்தப்படுத்துவதன் மூலம் பலர் மக்களின் சாபத்திற்கு ஆளாகிறார்கள்.
= பாதையோரங்களிலும் நிழல் தரும் இடங்களிலும் மலஜலம் கழித்து மக்களின் சாபத்தைப் பெறுவதையிட்டும் நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
பொது இடங்களில் குப்பை மற்றும் நாற்றம் வீசும் கழிவுப்பொருள்களைக்  கொட்டுவோருக்கும், காற்றை மாசுபடுத்தி அண்டை அயலாருக்கு தொல்லை கொடுப்போருக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என்பது தெரிந்ததே.
தனி நபர் உடல் தூய்மையும் முக்கியம்
சாலை ஓரங்களிலும் சுவர்களிலும் சிறுநீர் கழித்தாலோ அவற்றை யாரும் பொருட்படுத்தப்படாத நிலை தொடர்கிறது. சிறுநீரும் கழித்த பின் கழுவி சுத்தப்படுத்தப் படவேண்டிய விஷயமே என்பதை மக்கள் உணராததன் காரணமாக சாலைகளில் சிறுநீரின் நாற்றத்தையும் அதன்மூலம் உண்டாகும் சுகாதார சீர்கேடுகளையும் நாம் சகித்துக் கொண்டே வாழவேண்டியுள்ளது.  ஆனால் இஸ்லாம் வழிபாட்டின் ஒரு முக்கியப் பகுதியாக சிறுநீர் சுத்தம் பற்றிய பேணுதலைக் கற்பிக்கிறது.   குழந்தைகள் ஏழு வயதில் இருந்தே அந்தப் பேணுதலுக்குப் பழக்கப்படுத்தப் படுகிறார்கள். 
 "சுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும் என்று இறைதூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(நூல் : முஸ்லிம்)
அசுத்தம் நீக்குதலும் வழிபாடே!
= “தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
---------------- 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
உணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா? 
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_5399.html

புதன், 3 ஜூலை, 2019

காலனி ஆதிக்கம் என்ற ரவுடி சாம்ராஜ்ஜியம்


#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_4
Related image


 கட்டை ராஜாவின் சாம்ராஜ்ஜியம்
கட்டை ராஜா... இவன் ஒரு வலுவான பேட்டை ரவுடி... அவனையும் அவனது அடியாட்களின் கும்பலையும் தட்டிக்கேட்க அவ்வூரில் யாரும் இல்லை. பெயரால் மட்டுமல்ல அவன்தான் அந்தப் பேட்டைக்கு ராஜாவைப் போல. காவல்துறையும் கூட அவன் ஏவலுக்குக் கட்டுப்பட்ட நிலை. தனது கையாட்களைக் கொண்டு ஆயுத பலத்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றல் கொண்டவன். அவன் நினைத்த சொத்துக்களை அவ்வூர் மக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு விலை பேசி தனது கைவசமாக்குகிறான். அவ்வூரில் தான் விரும்பிய பெண்களை அனுபவிக்கவும் செய்கிறான்.
அவனது தொல்லைகளில் இருந்து தப்பிக்க அவனுக்கு தவறாமல் அவ்வூர் மக்கள் தங்கள் உழைத்து சம்பாதிப்பவற்றில் இருந்தும் தங்கள் பெண்களின் கற்பை அடகு வைத்தும் கப்பம் கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள். அவர்களது கண்ணீரும் கவலைகளும் அவனுக்கும் அவனது கும்பலுக்கும் ஒரு பொருட்டேயல்ல. காவல்துறை உட்படயாரும் அவனது செயல்பாடுகளில் குறுக்கிட முடியாத அளவுக்கு வலுவான ஆதிக்கம் அவனுடையது. 
இவ்வாறிருக்கும்போது கட்டை ராஜாவுக்கு ஒரு தவிர்க்கமுடியாத சூழ்நிலை அங்கே உருவானது. அதனால் அவன் அவ்வூரை விட்டு விலகி வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும் அவனுக்கு சேரவேண்டிய வசூலைச் சேர்ப்பிக்க அடியாட்களின் கும்பல் வலுவாக உள்ளது.  அதற்கான ஒரு பலமான நெட்வொர்க்கை அமைத்த பின்னர் அவ்வூரை விட்டு தலைமறைவானான்.

இப்போது சிந்தித்துப் பாருங்கள்.... இப்படிப்பட்ட அந்த ரவுடி அவ்வூரை விட்டு விலகிச் செல்லும்போது 'மக்களே இன்று முதல் நீங்கள் சுதந்திரமாக இருக்கலாம். இனி நீங்கள் எனக்கு கப்பம் கட்டத் தேவையில்லை!' என்று அறிவித்து விட்டா செல்வான்? .....அப்படி ஒன்றைக் கற்பனை செய்துகூட
பார்க்க முடியாதல்லவா?
ஒரு சிறு பேட்டை ரவுடியின் நிலையே இது என்றால் ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய  கண்டங்களின் பெரும் நிலப்பரப்புகளையும் நாட்டு வளங்களையும் தவறாமல் கொள்ளை அடித்து அனுபவித்து வாழ்ந்த காலனி ஆதிக்க சக்திகள் தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளை முற்றிலும் துறந்துவிட்டா செல்வார்கள்?  அதுவும் தங்களைத் தட்டிக்கேட்க உலகில் யாரும் இல்லை என்ற அளவுக்கு பொருளாதாரம் ஆயுத பலம், ஊடக பலம் போன்ற வலுவான நிலையில் இருக்கும் ஆதிக்க சக்திகளிடம் இதை சற்றேனும் எதிர்பார்க்க முடியுமா?
உலக மகா ரவுடிகள் யார்?
இதைப் புரிந்துகொண்டால் இன்று உலகில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்குப்  பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். சரித்திரத்தையும் இன்று நடக்கும் நிகழ்வுகளையும் நடுநிலையோடு ஆராயும்போது  உலக பயங்கரவாதம் பற்றிய உண்மைகள் உங்களுக்குப் புரியவரும்.
========================
காலனி ஆதிக்கம் என்ற ரவுடி சாம்ராஜ்ஜியம்
·  ஐரோப்பிய நாடுகளில் வங்கிகளை அமைத்து அதன் மூலம் அந்நாடுகளின் பொருளாதாரத்தையும் பணப்புழக்கத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்த ஒரு தனியார் கம்பெனிதான் காலனி ஆதிக்கத்தைத் துவங்கியது. இங்கிலாந்து அல்லது ஆங்கிலேயர் என்று இவர்களைக் குறிப்பிட்டாலும் இவர்கள் பின்னால் ஒளிந்திருப்பது ஒருதனியார் வியாபாரக் கம்பெனி என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். இவர்களின் தலையாய நோக்கம் பூமியின் பொருளாதாரத்தை  சுரண்டுவது அல்லது கொள்ளை அடிப்பது மட்டுமே.
கொள்ளையும் சுரண்டலுமே நோக்கம் 
·  வியாபாரிகள் என்ற பெயரில்தான் நம் நாட்டில் இவர்கள் நுழைந்தார்கள். தங்கள் ஆயுத பலத்தால் அனைத்து மன்னர்களையும் கீழடக்கிய கிழக்கிந்திய கம்பெனியின் (East India Company) முக்கிய நோக்கம் நாட்டின் நிலத்தடி வளங்களையும் விவசாய வளங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பது மட்டுமல்ல, நாட்டின் வருமானம் வரும் அனைத்து துறைகளையும் கீழடக்கி அவற்றை சுரண்டுவது என்பதே.
ஈவிரக்கமற்ற படுகொலைகள் 
·  நம் நாட்டைப் போலவே ஆப்ரிக்கா, அமேரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களும் ஆயுத முனையில் இவர்களால் கைப்பற்றப்பட்டு தங்கள் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்தக் கண்டங்களில் வாழ்ந்து வந்த அப்பாவிப் பழங்குடியின மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தார்கள். கறுப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து கடல்வழியாகக் கடத்தி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விற்று பொருளீட்டினார்கள். (Atlantic slave trade என்று கூகுளில் தேடிப்பாருங்கள்.)
விடுதலைக்குப் பின்னும் தொடரும் சுரண்டல்கள்
·  மேலே உதாரணத்தில் கட்டை ராஜா தனது ஊரைவிட்டு வெளியேறும்போது ஊரில் தான் நடத்திவந்த வசூலை தொடர்ந்து பெறுவதற்காக தன் கையாட்களின் நெட்வொர்க்கை எப்படி பலமாக அமைத்துவிட்டுச்  சென்றானோ அதைப்போலத்தான் இவர்கள் தாங்களின் ஆக்கிரமிப்பு  நாடுகளுக்கு பெயரளவில் வழங்கியுள்ள சுதந்திரத்தில் நிலையும் உள்ளது. இந்த நாடுகளில் தங்கள் கைப்பாவைகளை  ஆட்சிப் பொறுப்பில் இருத்தி தங்கள் கொள்ளைகளைத் தொடருகிறார்கள் என்பதே உண்மை.  நமது இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது என்பதையும் இன்றும் அவர்களாலேயே கட்டுப்படுத்தப் படுகிறது என்ற உண்மையை சற்று சிந்தியுங்கள்.
உலகளாவிய பொருளாதார அடிமைத்துவம்
·  இன்று உலகவங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைமை வங்கிகளும் இதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.  இணையத்தில் இதற்கான ஆதாரங்களை நீங்கள் காணலாம் (The Rothschild-Owned Central Banks of the World...  https://shar.es/1IU7u4 ). கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியதுதான் நமது இந்திய ரிசர்வ் வங்கி என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? இன்று உலகின் அனைத்துப் பணப்புழக்கமும் இவர்கள் மூலமாகத்தான் நடைபெறுகிறது என்பதை அறியும்போது இவர்களின் சுரண்டல்கள் எவ்வளவு பூதாகரமானவை என்பதை நீங்கள் உணரலாம்.
·  இன்று உலகின் எண்ணெய்க் கிணறுகள், பெட்ரோலிய வளங்கள், நிலத்தடி வளங்கள்,  விளைபொருட்கள், இயற்கைவளங்கள், உலகக் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள், நுகர்வுப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அவற்றை விற்கும் வாங்கும் பெரும்பெரும் வணிக அமைப்புகள், உலகை அச்சுறுத்தும்  பேரழிவு ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்துக் கம்பெனிகள், பத்திரிகைகள், டிவிக்கள், ஊடகங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் என உலகில் எங்கெல்லாம் எதிலெல்லாம் கொழுத்த வருமானம் வருமோ அவற்றில் பெரும்பாலானவற்றை அந்த நிறுவனங்களின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள்
கொள்ளைக் கூட்டத்தின் இராணுவக்கரம் அமெரிக்கா
·   பணம், ஆயுதம், அரசாங்கம், ஊடகம், மாஃபியாக்கள்  இவை அனைத்தும் ஒரே கைகளில் ஒன்று சேருமானால் அதை மிஞ்சும் சக்தி எதுவும் உலகில் இருக்க முடியுமா? உலகத்தின் மொத்தப் பொருளாதாரத்தையும் வளங்களையும் நிறுவனங்களையும் பணம் கொழிக்கும் துறைகளையும் ஊடகங்களையும் தங்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்துள்ள இந்த கொள்ளைக் கூட்டம் தங்களின் அடங்காத பொருளாசையை நிறைவேற்றும் பொருட்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். உலக அரசியலை தம் விருப்பப்படி நடத்துகிறார்கள்.  அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டே இவர்கள் செயல்பாடுகள் அமைந்திருப்பதைக் காணமுடியும். அமெரிக்காவை இராணுவக் கரமாக பயன்படுத்தி தங்களின் வஞ்சகத் திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.
·   அமெரிக்க உளவு நிறுவனமான CIA -யில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற John Perkins தான் எழுதிய Confessions of an economic hit man” என்ற புத்தகத்தில் அவர் தன்னுடைய பணிகாலத்தில் எப்படி தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் உலக அளவில் செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். நலிந்த நாடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவில் கடன் வழங்கி அவைகளை கொத்தடிமைகள் போல் ஆக்கி அவர்களின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்தல், அமெரிக்காவின் இராணுவதளம் அமைத்தல், ஐநாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஓட்டு போட வைத்தல், நிர்பந்தத்திற்கு வழங்காத ஆட்சியாளர்களை இராணுவப் புரட்சி மூலம் அகற்றுதல் அல்லது தீர்த்துக் கட்டுதல் போன்ற சதி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஜான் கூறுகிறார்.
---------------------
பணம் வந்த கதை
http://www.quranmalar.com/2019/06/blog-post.html 

வங்கி என்ற பேரழிவு ஆயுதம்!

https://www.quranmalar.com/2019/07/blog-post_2.html
உலகளாவிய வங்கி ஆதிக்கக் கொடுமை!
www.quranmalar.com/2019/07/blog-post_71.html
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்