இறந்தபின்னர் மீண்டும் விசாரணைக்காக எழுப்பப்படுவோம் என்ற உண்மையை மறுப்போரைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு கூறுகிறது: 6:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
36:79. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
கடவுள் வழிபாடு என்பதை ஒரு தனி சடங்காகக் கற்பித்து வாழ்வின் மற்ற
துறைகளில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று கற்பிப்பவை மனிதர்களால்
உண்டாக்கப்பட்ட மதங்கள். கடவுளுக்கென்று சில சடங்குகளையும் காணிக்கைகளையும் செய்தால் எப்படிப்பட்ட பாவங்களுக்கும் பரிகாரம்
ஆகிவிடும் என்று மூடமாக அவை கற்பிப்பதால் மனிதர்கள் மேலும்மேலும் பாவங்களில் ஈடுபட
அவை ஏதுவாகின்றன. கடவுளின் பெயரால் ஏய்த்துப் பிழைக்கும் இடைத்தரகர்களையும் அவை
வளர்த்து விடுகின்றன.
ஆனால் உண்மை இறை மார்க்கம்
என்பது மதங்கள் என்று அறியப்படும் வீண்சடங்குகளின் தொகுப்பு அல்ல,
இடைத்தரகர்களுக்கு இடமளிப்பதும் அல்ல. ஆன்மீகத்தை மனித வாழ்விலிருந்து பிரிப்பதும்
அல்ல. மாறாக அது படைத்த இறைவனின்
வழிகாட்டுதலின் படி அமைந்த ஒரு முழுமையான வாழ்க்கை நெறி. மனித வாழ்வின் அனைத்து
துறைகளுக்கும் வழிகாட்டுவது. மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிப்பதோடு
அனைத்துத் தரப்பினரதும் உரிமைகளை நிலைநாட்டக் கூடிய சாசனங்களையும்
அறிவுறுத்தல்களையும் உட்கொண்டது. வாழ்க்கை முழுக்க இறைவனின் எவல்விலக்கல்களைப்
பேணி வாழ்வதே இறைபொருத்தத்தைப் பெற்றுத்தரும் என்றும் அவற்றை மீறுவோருக்கு
மறுமையில் இறைவனிடம் தண்டனைகள் காத்திருக்கின்றன என்றும் இம்மார்க்கம்
கற்பிப்பதால் மக்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல்கள், வியாபாரம், ஒப்பந்தங்கள்,
உறவுகள் அனைத்திலும் நேர்மை பேணும் பண்பு அங்கு உடலெடுக்கிறது.
கொடுக்கல் வாங்கல்களில் வியாபாரங்களில் உடன்படிக்கைகளில் அளவு மோசம்
செய்பவர்களை நோக்கி விடுக்கப்படும் இறைவனின் எச்சரிக்கைகளைப் பாருங்கள்:
83:1-3 அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்!அவர்கள் எத்தகையோர் என்றால், மக்களிடமிருந்து அளந்து
வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றார்கள்.அவர்களுக்கு
அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக்
கொடுக்கின்றார்கள்.
83:4.-6 திண்ணமாக, அவர்கள் ஒரு மாபெரும் நாளில்
எழுப்பிக் கொண்டுவரப்படவிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லையா? ... ஒரு மாபெரும்
நாளில்,அந்நாளில், அனைத்துலகின் அதிபதியின் முன்னால் மாந்தர்கள் அனைவரும்
நின்றுகொண்டிருப்பார்கள்.
தொழுகை நோன்பு போன்ற
ஆன்மீக சடங்குகளை எவ்வளவுதான் பக்குவமாக ஒரு மனிதன் நிறைவேற்றினாலும் அவனது
கொடுக்கல் வாங்கல்களில் நேர்மை பேணப்படவில்லை என்றால் அவனுக்கு அந்த ஆன்மீக சடங்குகளால் பயனில்லை. மறுமையில்
இறுதித்தீர்ப்பு நாளன்று இறைவனிடம் என் அத்துமீறல்களுக்கு பதில் சொல்லியாக
வேண்டும் என்ற பொறுப்புணர்வை உண்டாக்குவது தொழுகையின் நோக்கங்களில் முக்கியமான
ஒன்றாகும்.
நபிகளாரின்
முன்மாதிரி நடவடிக்கைகள்
நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் வெறும் போதனைகளோடு நிறுத்திவிடாமல் தான் போதிப்பதை தனது வாழ்க்கையில்
நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். நேர்மை பேணக்கூடிய ஒரு சமுதாயத்தையே
உருவாக்கவும் செய்தார்கள். மோசடி எந்த உருவத்தில் வந்தாலும் அதை உடனடியாகக்
கண்டித்துத் திருத்தினார்கள்.
=
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன்
கையை நுழைத்தார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப்
பார்த்து) ”உணவுக்குச்
சொந்தக்காரரே! இது என்ன?” என்று
கேட்டார்கள். அதற்கு அவர், ”இறைத்தூதரே!
மழை நீர் இதில் விழுந்து விட்டது” என்று கூறினார். அதற்கு
அவர்கள், ”மக்கள்
பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ
அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 164
=
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை
வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நாட்டப்பட்டு, ‘இது இன்னாருடைய மகன்
இன்னாரின் மோசடி’ என்று
கூறப்படும்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்:
புகாரி 6177
வியாபாரிகள்
மற்றும் குடிமக்களிடம் மட்டுமல்ல, அரசு அதிகாரிகள் தவறு செய்யும்போதும் தவறாமல்
கண்டித்தார்கள்.
= ‘நபி (ஸல்)
அவர்கள் ‘அஸ்த்’ என்னும்
குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத்
வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது
உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின்
வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு
அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று
பார்க்கட்டுமே! என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில்
யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில்
இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில்
சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள்
பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி ‘இறைவா!
(உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 2597, 6636,
6679)
நேர்மையாளருக்கு இறைவனே கூட்டாளி!
=
இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு கூட்டாளிகளில் ஒருவர்
தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி)
ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன்.அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)நூல்: அபூதாவூத் 2936
வாழ்க்கைப்
பருவங்களின் பல படித்தரங்கள் கடந்து தற்போது ஒரு முழு மனிதனாக நீங்கள்
உருவெடுத்திருக்கக் கூடும். உங்கள் தற்போதைய முகவரி என்ன என்று கேட்டால் தங்களின்
பெயர், வீடு, தெரு,ஊர் விவரங்களைக் கூறுவீர்கள்தானே?
உதாரணத்துக்கு
இதுதான் உங்கள் முகவரி..
ராஜா, 13, சந்நிதி தெரு, கருமத்தம்பட்டி, கோவை 641659, தமிழ்நாடு
அதே
சமயம் முகவரியைக் கேட்டவர் இன்னொரு நாட்டிலேருந்து கேட்டால் கூடுதலாகஇந்தியா என்று நாட்டையும்
சேர்ப்போம். அவ்வளவுதான் நாமறிந்தது. அதை மீறி நம்மில் பெரும்பாலோரது கவனம்
செல்வதில்லை.
உண்மையில்
இவ்வளவுதான் நம் முகவரியா? நம் முகவரிக்கு எல்லை அவ்வளவுதானா?
நமது முகவரியின் விசாலத்தைப் பற்றிய அறியாமையும் கவனமின்மையும்
மனிதனை குறுகிய சிந்தையுள்ளவனாக ஆக்குகிறது. நம்மைப் படைத்தவனின் உள்ளமையையும்
வல்லமையையும் பறைசாற்றும் சான்றுகளின்பால் கவனத்தை செலுத்தினாலே மனிதனின்
அகங்காரமும் அகந்தையும் அறியாமையும் அகலும். இறைவனுக்கு தன் செயல்களுக்காக பதில்
சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவனை ஆட்கொள்ளும்.
= நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின்
படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி
வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற
நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில்
(சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;
வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப்
பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ
வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்று கூறுவார்கள்)(திருக்குர்ஆன் 3:190,191)
வாருங்கள்
நம் முகவரி இன்னும் எவ்வளவு விசாலமானது என்பதைக் கண்டுவர முயல்வோம்...
பூமி
என்ற உருண்டை
இந்தியா
என்கிற இந்த நாட்டை அடுத்து தொடர்வது.. ஆசியாக் கண்டம்... தொடர்ந்து இந்த பூமி என்ற உருண்டை. பாமரர்களில்
பெரும்பாலானோருக்கு இன்னும் இதை கற்பனை செய்து கூட பார்க்க முடிவதில்லை.
இன்று
நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் குறுக்களவு
அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர். இதன்
பரப்பளவு 510,10,00,000 சதுர கிலோமீட்டர்கள். இதிலும்
மூன்றில் ஒரு பங்குதான் நிலம். மீதியோ கடலால் சூழப் பட்டுள்ளது.
சூரியக்
குடும்பம்
அடுத்து
நம் முகவரியில் தொடர்வது நம் சூரிய குடும்பம். சூரிய குடும்பம் என்பது சூரியன் என்ற ஒரு நட்சத்திரத்தையும்
அதனை வட்ட பாதையில் சுற்றிவரும் அனைத்து பொருள்களையும் குறிக்கும். நம்முடைய சூரியகுடும்பத்தில்சூரியன்நமதுநட்சத்திரமாகஉள்ளது - 8 கிரகங்களும், அதனதன்துணைக்கோள்களும், குள்ள கிரகம் எனப்படும் (dwarf planet) புளூட்டோ ஒரு Dwarf Planet. மேலும் Ceres என்ற குள்ள கிரகங்கள் உள்ளன. இன்னும் asteroids எனப்படும்
எரிகற்களும்மற்றும் Comets எனும்வால் நட்சத்திரங்களும்மற்றும் Meteoroids எனப்படும் வின்வீழ் கற்களும் நமது சூரிய குடும்பத்தில் உள்ளன.(சூரியன் என்பது நாம்
விண்ணில் காணும் நட்சத்திரங்களில் ஒன்றுதான். நமக்கு அருகாமையில் உள்ளதால் அது
நமக்கு பெரிதாகத் தெரிகிறது.)மேற்கண்ட
படத்தில்சூரியனிலிருந்து மூன்றாவதாகத் தென்படும் பட்டாணி போன்ற உருவமே
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி.
ஒளியாண்டு
நம் சூரியனுக்கு அடுத்தது என்ன என்பதை அறியும்
முன் ஒளியாண்டு பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம். நாம் பொதுவாக தூரங்களை
கிலோமீட்டரில் அளக்கிறோம்.(நமக்குத் தெரியும் 1 கி.மீ. – 1,000 மீட்டர்)
விண்வெளியில் தூரம் அதிகம்
என்பதால் கிலோமீட்டரில் சொல்ல இயலாது. கோடி, கோடி, கோடி என்று சொல்லவேண்டி இருக்கும்
என்பதால் ‘ஒளி ஆண்டு’ என்ற அளவையை பயன்படுத்துகிறார்கள்.
ஒலி-(சப்தம்) 1வினாடியில்பயணம்
செய்யும் வேகம் 340 மீட்டர்
ஆனால் ஒளி-(வெளிச்சம்) 1வினாடியில்பயணம்
செய்யும் வேகம் 3,00,000 கிலோமீட்டர். (3 லட்சம்
கி.மீ). அப்படியென்றால் ஒரு வருடத்திற்கு (3,00,000
X 60 X 60 X 24 X 30 X12) கிமீ. இந்த பெருக்குத்தொகைதான்ஒரே
ஒருஒளி ஆண்டு. (ஏறக்குறைய 10 லட்சம் கோடி
கிலோமீட்டர்)
=
நமது சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரக்குழு (Inter Stellar
Neighborhood). ஆல்பா செந்தௌரி (Alpha Centauri) தான் சூரியனிலிருந்து அருகில்
உள்ள நட்சத்திரம். சூரியனிலிருந்து ஆல்பா உள்ள தூரம் 4.24 ஒளி
ஆண்டுகள். அதாவது இந்த ஆல்பா நட்சத்திரத்திலிருந்து புறப்படும் வெளிச்சம் நமது
பூமிக்கு வந்து நம் கண்ணுக்கு தெரிய வேண்டும் என்றால் 4 வருடம்
3 மாதம் ஆகும். நாம் இங்கு காணும் அந்த
நட்சத்திரத்தின் ஒளி 4.24 வருடத்திற்கு முன்
புறப்பட்ட ஒன்றுதான். (சூரியனிலிருந்து வரும் ஒளி நம்
பூமிக்கு 8 நிமிடத்தில் வருகிறது. நமக்கும் சூரியனுக்கும் 15
கோடி கிலோமீட்டர் தூரம்தான்.)
பால்வெளி
அண்டம் (Milky Way galaxy) விண்மீன் திரள்
நம்
சூரியன் போல 40,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளதுதான் நமது அடுத்த பெரிய குடும்பம். இதையே “பால்வெளி அண்டம் ” (Milky
Waygalaxy) என்று அழைக்கிறோம். இக்குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும் மொத்தம்
ஒரு லட்சம் ஒளி ஆண்டு தூரம் வரை பரவி இருக்கின்றன. 40,000 கோடி
நட்சத்திரங்களில் ஒன்றே ஒன்றுதான் நம் சூரியன். அம்புக்குறி காட்டும் ஒரு சிறு
புள்ளிதான் நம் கிழக்கே உதிக்கும் சூரியன். அதற்க்குள்தான் நாம் வாழும் இப்பூவுலகும்!
உங்கள் முகவரி எப்படி விரிவாகி உள்ளது என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்!
=
இந்த சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்திலிருந்து 28,000 ஒளி
ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த மையத்தை ஒரு முறை நம் சூரியன் குடும்பம் சுற்றிவர
25 கோடி வருடங்கள் ஆகும்!
=
பால்வெளி அண்டத்தில் உள்ள 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்று V Y Canis Majoris. நம்
பூமியில் இருந்து 5,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது
சூரியனைவிடப் பன்மடங்கு பெரியது.
=
நம் பூமியின் குறுக்களவு அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர்.
= நம்ம சூரியனின் குறுக்களவு-ஏறக்குறைய 14 லட்சம் கிலோமீட்டர். சூரியனிலிருந்து
கிளம்பும் தீச்சுவாலையின் நீளம் மட்டுமே இரண்டரை லட்சம் கிலோமீட்டர்.
=
‘Canis Majoris’ நட்சத்திரத்தின் குறுக்களவு198
கோடி கிலோமீட்டர்!
பால்வெளி
அண்டத்திற்கு அருகில் உள்ள அண்டங்கள் (Local Galactic Group)
=
நம் குடும்பத்துக்கு மிக அருகில் இருக்கக்கூடிய ஒரு சில குடும்பங்களை (அதாவது, விண்மீன் திரள்களை) இணைத்து ஒரு குழு ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதற்குப்
பெயர் “Local Galactic Group”
=
நமது பால்வெளி திரள் தவிர்த்து, மிக அருகில் உள்ள வேறு
விண்மீன் திரள் குடும்பங்களில் M 32 என்ற இலக்கம் கொண்ட
விண்மீன் திரள் அண்ட்ரோமேடா ‘Andromeda’ முக்கியமானது. நமது
பால்வெளி அண்டத்தைவிட “அண்ட்ரோமேடா” மிகப்பெரியது.
=
நமது பால்வெளி அண்டத்தின் குறுக்களவு 1 லட்சம் ஒளி ஆண்டு தூரம். நட்சத்திரங்களின் எண்ணிக்கை 40,000 கோடி. (400 பில்லியன்)
=
அண்ட்ரோமேடா விண்மீன் திரளின் குறுக்களவு 25 லட்சம்ஒளி ஆண்டுகள் தூரம். நட்சத்திரங்களின்
எண்ணிக்கை 1 லட்சம் கோடி. (1 ட்ரில்லியன்)
விர்கோ
அண்டங்களின் தொகுப்பு (Virgo Super Cluster)
=
சுமார் 1 கோடி ஒளி ஆண்டுகள் இடைவெளியில் உள்ள நம் பால்வெளி
அண்டம் போல உள்ள 100 விண்மீன் திரள்களின் தொகுப்பே விர்கோ
அண்டங்களின் தொகுப்பு.
=
இந்த இரண்டு தொகுப்புகளையும், இன்னும் பிறவையையும் உள்ளடக்கிய
ஒரு மிகப்பெரிய தொகுப்பின் பெயர் “அண்மையிலுள்ள அண்டங்களின்
பெருந் தொகுப்பு” (Local Super Clusters)
=
இதுவரை நமது மனிதகுல வானியல் அறிவால் கண்டுபிடிக்க முடிந்த அண்டங்களின் ஒட்டுமொத்த
தொகுப்பு. (Observable Universe)9300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தை உள்ளடக்கியது.
=
இவ்வளவு அண்டங்களின் தொகுப்பும் (Observable Universe)
ஒட்டு மொத்த பேரண்டத்தில் எத்தனை சதவிகிதம் தெரியுமா? வெறும் 0.4 சதவிகிதம் மட்டுமே. முழுமையாக ஒரு
சதவீதம் கூட இல்லை. அண்டங்களுக்கிடையேயான
வாயு வெற்றிடம் வெளி 3.6 சதவீதமாகும். மீதி 96 சதவீதமும் அறிவியல் அறிவுக்குத் தட்டுப்படாத
கரும்பொருளும் (23%dark matter) கருஞ்சக்தியும் (73% dark energy) ஆகும்.
இவ்வ்வளவும் மனிதன் என்ற அற்ப ஜீவியின் பார்வைக்கு எட்டிய பிரபஞ்சத்தின் நிலை! இந்த அறிவியலின் அறிவுக்கு எட்டிய அண்டங்களின் தொகுப்பானது (Observable universe) இறைவன் தன் திருமறையில் கூறும் முதல் வானத்தின் எல்லைக்குள் மிக மிக அற்பமான ஒன்று. இதற்கப்பாலும் வானங்கள் இருப்பதாக இறைவன் கூறுகிறான்:
67:3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?
67:4. பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.
இந்த வீடியோவில் இருந்து எவ்வளவு
விசாலமானது உங்கள் முகவரி என்பதை அறிந்திருப்பீர்கள். நீங்களோ உங்கள் கருமத்தம்பட்டிதான் எல்லாம் என்று
நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்! இனி நாம் சிந்திக்க வேண்டிய விடயம்..
இப்பேரண்டத்தை பக்குவமாகப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவ்வளவு பிரம்மாண்டமானவன்!
அவன் நம்மை வீணுக்காகப் படைத்திருப்பானா?
51:47.நம்முடைய சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கின்றோம்.
இறைவனை மறுக்கும் நாத்திகர்களைப் பார்த்து
இறைவன் கேட்கும் கேள்வி இங்கு கவனத்திற்குரியது:
52:35.படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள்
பிறந்துவிட்டார்களா? அல்லது
இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா?
52:36.அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள்
படைத்துள்ளார்களா? உண்மை
யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை!
மறுமையில் மனிதனை இறைவன் மீண்டும்
உயிர்கொடுத்து எழுப்புவான் என்பதை நம்பாதவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வி
இங்கு கவனத்திற்குரியது.
அமெரிக்க நகரம் ஒன்றில் அன்று ஒரு
கருத்தரங்கு... “தூய்மையான ஒரு
சமுதாயத்தை உருவாக்க இறைவன், மதம் ஆகியவற்றின் அவசியம்” என்னும் தலைப்பில் ஒரு பாதிரியார்
மாணவர்களிடம் உரையற்றிக் கொண்டிருந்தார்.
துடிப்புள்ள ஒரு மாணவன் எழுந்து
பின்வரும் கேள்வியை வீசினான்,
“ஐயா, நான் ‘மதச்சார்பற்ற மனிதத்தன்மை’ எனும் தத்துவத்தில்
நம்பிக்கை கொண்டுள்ளேன். மனித குலத்துக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். எல்லா
விதமான தீமைகளிருந்தும் விலகி நிற்கின்றேன்; எவருக்கும் தொல்லை கொடுபதில்லை; யாரையும் மோசடி
செய்வதில்லை; பொய்யுரைபதில்லை;
திருடுவதில்லை; இயன்றவரை
மற்றவர்களுக்கு உதவி செய்கின்றேன்,
பலவீனமானவர்களுக்கு ஆறுதல்
அளிக்கின்றேன், சுருக்கமாகக் கூறினால் நன்மையை விரும்புகிறேன்; தீமையை
வெறுக்கிறேன்; நற்செயல்களைப் புரிய, தீமைகளைத் தடுக்க, மனிதர்களிடம்
உயர்ந்த பண்புகளை தோற்றுவிக்க,
ஒரு சிறந்த தூய்மையான சமுதாயத்தை உருவாக்க
என்னுடைய நடைமுறையும், கொள்கையும் போதுமானவையாகும். இதற்காகக் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள
வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
மாணவனின் இக்கேள்விக்கு பாதிரியார் பல
பதில்கள் தந்தார். இறைவன் இருக்கிறான் என்பதைப் பற்றியும், அவன் மீது திடமான
நம்பிக்கை கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் பல ஆதாரங்களை
எடுத்துரைத்தார். ஆயினும் பாதிரியார் கூறிய பின்வரும் உவமானம் மிகவும் சிந்தனைக்குரியதாக
அமைந்தது:
இரண்டாம் உலகப் போரின்போது பனாமாக்
கால்வாயின் வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்குப் பருத்தி போககூடாது என்று அமெரிக்க
அரசு தடை விதித்திருந்தது. அங்கு சாவடிகளையும் அமைத்து, இந்தத் தடையை
யாரும் மீறாதிருக்க அதிகாரிகளையும் நியமித்திருந்தது.
வடபகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த
பருத்தி தடை செய்யப்பட்டு விட்டதால் , தென்பகுதியில் பருத்தியின் விலை
கிடுகிடுவென பலமடங்கு உயர்ந்து விட்டது. பனாமாக் கால்வாயின் இருபகுதியுலும்
பருத்தியின் விலையில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது. இதைப் பார்த்த சில வியாபாரிகளுக்கு
பேராசை உண்டாயிற்று. ‘திருட்டுத்தனமாகப் பருத்தியைப் பனாமாக் கால்வாய் வழியாக
கடத்திச் செல்லலாம்; அரசு அதிகாரிகள் பிடித்தால் இலஞ்சம் கொடுத்து அவர்களை விலைக்கு
வாங்கிக் கொள்ளலாம்’என்று அவ்வியாபாரிகள் திட்டமிட்டனர்.
திட்டத்தின்படி வியாபாரிகளின் ஒரு
குழு படகில் பருத்தியை ஏற்றிக்கொண்டு தென்திசையை நோக்கிச் சென்றது. இந்தக் குழு
சோதனைச் சாவடியை நெருங்கியது,
அதிகாரிகளிடம் பேசி விவகாரத்தை
முடித்துக் கொள்ள சாவடிக்குள் வியாபாரிகள் சென்றனர்.
அப்பொழுது அங்கு நியமிக்கப்படிருந்த
அதிகாரி மிகவும் நேர்மையானவர்;
சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்; வாய்மையுடன்
சட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்; அதை நடைமுறையுலும்
பின்பற்றுபவர்.
வியாபாரிகள் அவரைச் சந்தித்து “ நாங்கள் இவ்வழியில்
தடை விதித்திருப்பதை அறியாமல் பருத்தியைக் கொண்டுவந்து விட்டோம்; இதை எடுத்துச்
செல்ல அனுமதி தாருங்கள்” என்று கெஞ்சினார்கள்.
“கண்டிப்பாக அனுமதியளிக்க முடியாது!” என்று அதிகாரி பதில் கூறிவிட்டார் .
பிறகு அவர்கள் அதிகாரிக்கு ‘ஏதேனும்’ தருவதாக
ஆசைகாட்டினார்கள். ஆனால் தங்களின் இம்முயற்சிகள் பலிக்கப் போவதில்லை என்பதை
உணர்ந்த அவர்கள் பேரம் பேசத் தொடங்கினார்கள். ஏலத்தில் விலை குறிப்பதைப் போல
அவர்கள் படிப்படியாக பேரத்தை அதிகப்படுத்திக் கொண்டே வந்தார்கள்.
பேரம் மேலும் சூடு பிடித்தது. 6000, 10,000, 20,000, 40,000
என்று பேரம் தொடர்ந்தது. அதிகாரி
கண்டிப்பு காட்டக் காட்ட , ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் பேரம் ஏறிக் கொண்டே சென்றது . 5௦,௦௦௦ டாலர்கள்
தருகிறோம் என்றார்கள். வியாபாரி ஒருவர் துணிந்து, ஒரு இலட்சம் டாலர் தருவதாக
ஒரேயடியாகத் தாவி விட்டார் .
மனப்போராட்டம்
இதைக் கேட்டதும் சுங்க அதிகாரியின்
உணர்ச்சிகள் பொங்கின; பலவிதமான சிந்தனைகள் அவர் உள்ளத்தில் உதித்தன . “வாழ்நாள் முழுவதும்
நேர்மையில் நிலைதிருந்தாய்; சட்டத்துக்கு உட்பட்டிருந்தாய்! இன்று அந்தத் தூய வழிமுறையைக்
கைவிட்டு விடப் போகிறாயா?” என்று அவர் மனசாட்சி இடித்துரைத்தது.
“இன்று உன்னுடைய ஊதியம்தான் என்ன என்பதை எண்ணிப் பார்! இப்பொழுது
உன்னை எந்த மேலதிகாரி பார்த்துக் கொண்டிருக்கிறார்? “சரி” என்று ஒரு வார்த்தை சொல்லி இலட்சம்
டாலர்களின் உரிமையாளனாக மாறி விடு. அது மட்டுமல்ல , நாளை மேலும் பல வாய்புகள் வரலாம்.
உன்னுடைய கையில் மேலும் செல்வம் குவிந்து கொண்டே வரும்! அந்தச் செல்வமோ மிக அதிகமாகும்.
கற்பனையிலும் நினைத்துக்கூடப் பார்க்க
முடியாத அளவுக்கு செல்வம் உன் காலடியில் வந்து விழும். உன் வாழ்நாள் முழுவதும் நீ
சம்பாதிக்கும் வருமானத்தை விட,
பல மடங்கு அதிகமான இந்தத் தொகையைச்
சில வினாடிகளில், சில நாட்களில் நீ அடைந்து விடலாம். வறட்டுத் தத்துவத்தில் உழலாதே; இந்தப் பொன்னான
வாய்ப்பை நழுவ விடாதே!” என்று பல ஆசைகளைக் காட்டி அவருடைய மன இச்சைகளும் ஷைத்தானும் அவரை
மயக்கி மறுதிசையில் இழுத்தன.
இவ்வாறு மனசாட்சிக்கும் மன
இச்சைக்கும் இடையில் அவரின் உள்ளத்தில் கடும் போர் நிகழ்ந்தது. அவருடைய மூச்சு
திணறத் தொடங்கியது. “பாவிகளே, நீங்கள் என்னை விலை கொடுத்து வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே” என்று முழங்கிக்
கொண்டே வியாபாரிகளை அறையிலிருந்து வெளியே தள்ளிக் கதவுகளை ஓங்கி அடைத்துவிட்டார் அந்த அதிகாரி.
இதைச் சொல்லிய பாதிரியார் , மதசார்பற்ற
மனிதத்தன்மையில் நம்பிக்கை கொண்டு கேள்வி கேட்ட அந்த மாணவரை நோக்கிப் பின்வருமாறு
கூறினார் :
“நேர்மையான , சட்டத்துக்குட்பட்ட
அதிகாரியின் நாவு முழங்கிய வாக்கியங்களைக் கவனித்தீர்களா? ‘ நீங்கள் என்னை விலை
கொடுத்து வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே’.
மனிதன் எத்துணை வாய்மையான பண்புகளைக்
கொண்டவனாயிருந்தாலும் சரியே – ஓர் எல்லையைக் கடக்கும் போது அவனுக்கும் ஒரு “விலை” ஏற்படுகிறது.
குறிப்பாக கொடுக்கப்படும் விலை அவனுடைய தகுதிக்கு அதிகமாக இருந்தால் அவன்
உள்ளத்தில் உணர்ச்சிப் புயல் தோன்றுகிறது; மயக்கத்தினால் தலைசுற்றித்
தொடங்குகிறது. இதற்கு நேர்மாறாக,
இறைவன் மீது திடமான நம்பிக்கை
கொண்டபின், இறை உவப்பைப் பெறுவதே தனக்குரிய விலை என்று மனிதன் கண்டு
கொண்டுவிட்டால் படைத்தவனைத் தவிர படைப்பினங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து
முயன்றாலும் இந்த விலையை வழங்க முடியாது. எனவேதான் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை
வைக்கும் மனிதனை விலைக்கு வாங்க எந்தப் படைப்பினங்களாலும் முடியாது!.
அவனுடைய விலையை நிர்ணயிப்பதற்கு
எந்தப் படைப்பினத்திற்கும் வலிமையில்லை. உண்மையான இறை நம்பிக்கையாளன் எப்பொழுதும் விற்கப்படுவதில்லை.
ஊழலின் நிழல் அவன் மீது சிறிதும் படுவதில்லை . நேர்மை நீதி ஆகியவற்றின் மீது
உறுதியாக நிலைத்து நிற்க , படைப்பினங்களைவிட,
மேன்மை வாய்ந்த , வலிமை வாய்ந்த , மிக உன்னதமான, உயர்ந்த பண்புகளைக்
கொண்ட ஓர் இறைவன் மீது திடமான நம்பிக்கை கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்”.