இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூலை, 2024

நம் குடும்பத்தில் ஒரு முஸ்லிம்!


நம் குடும்பத்தில் ஒரு முஸ்லிம்!  

  
இஸ்லாமை தமது வாழ்க்கை நெறியாக ஏற்க விரும்பும் ஒருவர் முஸ்லிமாக மாறும் வழிமுறை மிக எளிதானது. ஷஹாதா எனப்படும் நம்பிக்கை உறுதிமொழியை மனதால் ஏற்று வாயால் மொழிந்தால் போதும். பிற மதங்களில் இருப்பதுபோல வெற்றுச் சடங்குகள் தேவையில்லை. முஸ்லிமாக ஒருவர் மாறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் செல்வீர்களென்றால் வீடியோ கேமராவெல்லாம் எடுத்துச் செல்லத் தேவையிருக்காது. கேமராவின் மூடியை நீங்கள் திறக்குமுன்பே நிகழ்ச்சி முடிந்து விடக்கூடும்!

முஸ்லிமாக மாற விரும்புபவர் மிக எளிமையாக, இரு முஸ்லிம்களின் சாட்சியுடன் ‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உலகிற்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்’ என்ற உறுதிமொழியை மொழியவேண்டும். அவ்வளவுதான். அதற்குமேல் எந்தச் சடங்குமில்லை.

ஆனால், அந்தப் புதிய முஸ்லிம்களுக்கு ‘ஷஹாதா’ சொல்வது ஒரு புதிய வாழ்க்கை முறையின் துவக்கம்தான். இது ஒரு முன்னுரை மாதிரி. அல்லது அவர்கள் வாழ்வில் ஒரு அத்தியாயம் முடிந்து இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது என்றும் சொல்லலாம்.

ஒருவகையில் இது அவர்கள் வாழ்வை முழுவதுமாக மாற்றி அமைக்கப்போகும் அனுபவம். கார்களை சுத்திகரிப்புச் செய்வது போல, இது ‘ஆன்மீக சுத்திகரிப்பு’ என்று சொல்லலாம். சுத்திகரிப்புச் செய்யப் பட்ட கார் வழுக்கள் நீக்கப்பட்டுப் பளபளப்பது போல அவர் பாவங்கள் நீக்கப்பட்டு, வாழ்வதன் நோக்கம் தெளிவாகி புதிய மனிதராக வாழ்க்கையைத் தொடர்கிறார். இன்னொரு வகையில் பார்த்தால், அடிப்படையில் அவர் அதே மனிதர்தான். ஒரு ஃபோர்டு கார் சுத்திகரிப்புச் செய்யு முன்னரும் ஃபோர்டு காராகத்தானே இருந்தது?.

சில புதிய முஸ்லிம்களின் குடும்பத்தினருக்கு இதைப் புரிந்து கொள்வதுதான் சிரமமாக இருக்கிறது; உண்மையைச் சொல்வதென்றால், சில புதிய முஸ்லிம்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் தொழுகை, நோன்பு போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு, பெயர், தாடி, ஆடை போன்ற புறத் தோற்ற மாறுதல்களிலும் அவசரம் காட்டுவது வழக்கிலிருக்கிறது.

இந்த மாறுதல்களிலும் தவறேதுமில்லைதான்! இஸ்லாம் சிலவற்றைக் கடமையாக்கியிருக்கிறது. சிலவற்றை முஸ்லிம்களுக்குப் பரிந்துரைத்திருக்கின்றது. ஆனால் பரிந்துரைக்கப்பட்டவற்றையும் செய்தால்தான் ஒருவர் முழு முஸ்லிமாக இருக்க முடியும் என்பதல்ல. சில சமயங்களில் ஒரு புதிய முஸ்லிம் தன் புறத் தோற்றங்களை மாற்றிக் கொள்வதில் காட்டும் அவசரம் அவரது முஸ்லிமல்லாத பிற குடும்ப உறுப்பினர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்குகிறது. இதனால் அவர்கள் மனம் புண்படவும் வாய்ப்பிருக்கிறது.

“உன் பெயரை ஏன் ஒரு அரேபியப் பெயராக மாற்றிக் கொண்டிருக்கிறாய்? நாங்கள் உனக்கு வைத்த பெயரில் என்ன குறை கண்டு விட்டாய்?”

“ஏன் இப்படி வித்தியாசமான உடைகளை அணியத் தொடங்கி விட்டாய்?”

“முக்காடு அணிய வேண்டியத் தேவை திடீரென்று உனக்கு ஏன் ஏற்பட்டது? நான் பார்க்கும் ஆசிய முஸ்லிம் பெண்களில்கூட பாதிப் பேர் இதை அணிவதில்லையே?”

“இப்படி எல்லா நேரங்களிலும் பள்ளிவாசலே கதி என்று கிடந்தால், உன்னை யாராவது மூளைச் சலவை செய்துவிடுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. என் குடும்பத்தில் ஒரு பயங்கரவாதியைச் சேர்த்து வைத்துக் கொள்ள என்னால் முடியாது”

இப்படியெல்லாம் கேள்விகள் பிறக்கலாம்.

ஒருவகையில் பார்த்தால், இது போன்ற எதிர்வினைகளை எதிர்கொள்வது கூட ஆரோக்கியமானதொரு விஷயம்தான். முஸ்லிமல்லாத குடும்ப உறுப்பினர்கள் இஸ்லாம் பற்றிச் சரியான முறையில் அறிமுகம் செய்விக்கப் படாததால்தான் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்கள். புதிய முஸ்லிம் தமது குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவேனும் தாம் புதிதாக ஏற்றுக் கொண்ட கொள்கைகளைத் தொடர்ந்து சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகளுக்குத் தகுந்த முறையில் பதில் சொல்ல வேண்டும். இது இரு தரப்பினருக்குமே நன்மை தரக்கூடியதுதான்.

இஸ்லாம் பற்றி இன்றையச் சூழலில் நிலவும் எதிர்மறைப் பிம்பங்களுக்கு காரணம், அதன் கொள்கைகளைப் பற்றி சரியான முறையில் அறியாமல் இருத்தல் அல்லது இனம்புரியாத ஓர் அச்சம்தான். புதிய முஸ்லிம்கள் இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, இஸ்லாம் பற்றித் தம் குடும்பத்தினருக்குத் தகுந்த முறையில் விளக்கலாம்.

“இல்லை அம்மா! இஸ்லாம் அப்படிப்பட்டதல்ல. நான் இஸ்லாத்தில்தான் இணைந்திருக்கிறேன்; அல்-கொய்தாவில் அல்ல.”

“இஸ்லாம் அமைதியை வலியுறுத்தும் மார்க்கம்; வன்முறையைத் தூண்டும் மார்க்கமல்ல. இஸ்லாமின் பெயரால் அக்கிரமமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் இம்மார்க்கத்தின் மீது வீண்பழிச்சொல் விழக் காரணமாகிறார்கள்”

“அப்பா..! குர்ஆன், பெண்களை அடிமைப் படுத்துவற்கான கையேடு அல்ல. இந்த உலகில் முதன் முதலாகப் பெண்களுக்கான உரிமைகளையும் கண்ணியத்தையும் பிரகடனப்படுத்திய ஆவணமே அதுதான்!”

இப்படியெல்லாம் இஸ்லாம் பற்றிச் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன! அதிலும் இந்தக் கருத்துகளை புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்கள் உரக்கச் சொல்லும்போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு அது கூடுதல் தெளிவைக் கொடுக்கலாம். அது மட்டுமல்லாமல், பல்வேறு கலாச்சாரங்களின் தாக்கத்தினால் குர்ஆனின் வழிகாட்டல்களை விட்டு விலகி வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் அவை நினைவூட்டலாக அமையும்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு புதிய முஸ்லிம்களும் இஸ்லாமைத் தழுவுவதற்குமுன் இம்மார்க்கத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாகத்தான் இருந்தார்கள். இஸ்லாமைத் தழுவுவது பற்றி தங்கள் குடும்பத்தினரிடம் அவர்கள் தெரிவித்தபோது, சந்தேகப் பார்வைகளையும் அச்ச உணர்வையும் மனக்கசப்புகளையுமே அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது.

யுவான் ரிட்லி

ஒரு பத்திரிகையாளரான யுவான் ரிட்லி, செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு ஒரு முஸ்லிம் பெண் போன்ற வேடத்தில் ஆப்கானிஸ்தானில் நுழைந்து, தான் பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகைக்காகச் செய்திகள் திரட்டிக் கொண்டிருந்தபோது, தாலிபான் படையினரால் பிடிக்கப் பட்டார்.

உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர், ‘தாம் கல்லாலடித்துக் கொல்லப் படுவோமோ’ என்று பயந்து கொண்டிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாற்றமாக, சிறைப்பிடிக்கப் பட்டிருந்த அவர் மிக மரியாதையாக நடத்தப் பட்டார். குர்ஆனைப் படிக்கப் போவதாகவும் இஸ்லாமைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு அவர் விடுவிக்கப் பட்டார்.

பெண்களை அடக்கி, ஒடுக்கி, துன்புறுத்துவது பற்றிய உபதேசங்கள் இருக்கும் என எதிர்பார்த்துக் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த அவருக்கு, அதில் அப்படி எதுவும் இல்லை என்பதே ஆச்சரியத்தை அளித்தது!. “இது பெண்ணுரிமைக்கான பிரகடனம்” என்று வியக்கிறார் யுவான் ரிட்லி.

2003-ல் யுவான் இஸ்லாமைத் தழுவினார். இஸ்லாம் அவருக்கு அளித்த தன்னம்பிக்கையும் கவுரவமும் பிரச்னைகள் நிரம்பியிருந்த அவரது கடந்த கால வாழ்க்கையை மறக்கடிக்கச் செய்தது. ஆனால் அவரது மனமாற்றத்தைப் பற்றி அவரது தாயை மட்டும் இன்னும் அவரால் புரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை.

ஜான் ஸ்டாண்டிங்

ஜான், தனது முஸ்லிம் பெண் தோழி நசிராவை இஸ்லாமிலிருந்து வெளியேற்ற முயன்றார். நசிரா தனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பது தெரிந்த பிறகே, குர்ஆனைத் தானே படித்துப் புரிந்து கொள்ள ஜான் முடிவு செய்தார். சில மாதங்களுக்குள்ளாகவே அவர் இஸ்லாமைத் தழுவினார்.

அவர் முஸ்லிமாக ஆனதிலிருந்து மிக அமைதியான, கனிவான மனிதராக இருக்கிறார் என ஜானின் தந்தை டோனி ஒப்புக் கொள்கிறார். இருந்தாலும், ஜான் மூளைச் சலவை செய்யப் பட்டிருப்பாரோ எனத் தனக்கு இன்னும் ஐயம் இருப்பதாகவும் அவர் சொன்னார். ஜான் ஏதாவது வன்முறை தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார் எனத் தெரிந்தால் அவரை தமது குடும்பத்தை விட்டும் விலக்கிவிடுவதாகவும் அவரது தந்தை எச்சரித்திருக்கிறார். அவர் அப்படி எதையும் செய்துவிட மாட்டார் என்ற நம்பிக்கையும் அவரது குடும்பத்தினருக்கு இருக்கிறது.

ஜான் ஏன் தனது பெயரை ஜமாலுத்தீன் என மாற்றிக் கொள்ள வேண்டும்? நல்ல எதிர்காலமுள்ள இசைக்கலை தொடர்பான தொழிலை ஏன் அவர் கைவிட வேண்டும்? (இஸ்லாம் இசையைத் தடை செய்திருக்கிறது என்பது ஜானின் நம்பிக்கை). மேலும், ஒரு இஸ்லாமிய நாட்டிற்குக் குடிபெயர்வது பற்றி அவர் ஏன் யோசிக்க வேண்டும்? என்பதெல்லாம் ஜானின் தந்தைக்கு இன்னும் புரியாத புதிர்தான்.

இஸ்லாம் உண்மையில் இது போன்ற மாற்றங்களை கட்டாயமாக்கியிருக்கிறதா?

அகீல் பர்ட்டன்

அகீல், ஜமைக்காவைச் சேர்ந்த தன் கிருஸ்துவப் பெற்றோருடன் மான்செஸ்டர் நகரில் வளர்ந்தவர். தமது பெற்றோர் பின்பற்றிய கிருஸ்துவ மதம் அகீலுக்குப் பிடிக்கவில்லை. அது வெள்ளை இனத்தவருக்கான மதம் என்று அகீலுக்குத் தோன்றியது. இஸ்லாம் இதிலிருந்து மாறுபட்டது என்றும் அவருக்குத் தோன்றவில்லை. பள்ளிப் பருவத்தில் அவர் அறிந்திருந்த முஸ்லிம்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். ஆனால், அவரைப் போன்றே ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு நண்பர் முஸ்லிமானது, அகீலுக்கும் இஸ்லாம் மீது ஆர்வம் ஏற்படக் காரணமான அமைந்தது. அவர் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்தார். பதில் கிடைக்காமல் அவரது மனதில் சுழன்று கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் இஸ்லாமில் பதில் இருக்கிறது என்பதை அவர் கண்டு கொண்டார்.

ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்த அகீல், முஸ்லிமாக ஆனதிலிருந்து சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஒரு பயிற்சியாளராகத் தொடர்கிறார். குத்துச்சண்டைக்காக அவர் பெற்ற கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைப் பயிற்சிகள், தமது புதிய இஸ்லாமிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பதற்கும் துணைபுரிவதாக அகீல் உணர்கிறார்.

ஷஹ்நாஸ் மாலிக்

வெள்ளை இனக் குடும்பம் ஒன்றைச் சார்ந்த ஷஹ்நாஸ் அவரது ஆசிய ஆண் நண்பர் நசீரைத் திருமணம் முடித்தபோது இஸ்லாமைத் தழுவினார். அப்பொழுதெல்லாம் வெறும் பெயரளவில் மட்டும் முஸ்லிமாக இருந்த நசீரை கடந்த ஆறு ஆண்டுகளில் ஷஹ்நாஸ்தான் மார்க்கத்தில் பிடிப்புள்ளவராக மாற்றினார். முதலில் ஷஹ்நாஸ் ஹிஜாப் அணியத் தொடங்கினார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து, நசீரின் தூண்டுதல் எதுவுமின்றியே முழு புர்கா அணிய ஆரம்பித்தார்.

உறவினர்கள், நண்பர்கள் சிலரின் கிண்டலும் கேலியும் ஷஹ்நாஸை தைரியமிழக்கச் செய்யவில்லை. மாறாக, அழகிப் போட்டியில் பங்கு கொள்வது போன்று ஆடை அணியும் மேற்கத்தியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெற்றதாகவே அவர் உணர்கிறார்.

இந்த நான்கு புதிய முஸ்லிம்களும் வெவ்வேறு வழிகளில் தங்களது மனமாற்றத்திற்கு முந்தைய மேற்கத்திய கலாச்சார வாழ்க்கை முறைகளிலிருந்து இஸ்லாம் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு மாறியவர்களாவர். வழிமுறைகள் வேறாக இருந்தாலும், ‘மாற வேண்டும்’ என்ற உறுதி இவர்கள் அனைவரிடமும் இருக்கிறது. 

மாற்றங்களைத் தேடும் இவர்களின் வாழ்க்கைப் பயணத்தை உற்று நோக்கினால் அதில் இஸ்லாமிற்கும் மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கும் இடையிலான ஒரு தொடர்புப் பாலத்தை ஒருவேளை நாம் காணக்கூடும்.
----------------------------------- 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

வியாழன், 25 ஜூலை, 2024

உறவுகளைப் பேணுதல் என்ற வழிபாடு


இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இறைவனின் பொருத்தம் கருதி உண்டாகும் அனைத்து நல்லெண்ணங்களும் செய்யப்படும் நற்செயல்களும் வழிபாடாகவே கருதப்படும். அவை அனைத்துமே புண்ணியங்களாக கணக்கிடப்படும். இவை எவையுமே வீண்போவதில்லை. இவை அனைத்தும் இறைவனிடம் பதிவு செய்யப்பட்டு இறுதித்தீர்ப்பு நாளன்று இவற்றுக்கான நற்கூலியை நமக்குப் பெற்றுத்தரும்.
  

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:7,8) 

அந்த வகையில் இறைவனின் கட்டளைப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வழிபாடு ஆகிறது. ஆக இந்த  இறைமார்க்கம்  வலியுறுத்தும் சமூக உறவு சம்பந்தப்பட்ட வழிபாடுகளில்  குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும்.

சுயநல தனிநபர் கலாச்சாரம்

முக்கியமாக இன்றைய நவீன  கலாச்சாரத்தின் மத்தியில் ஆணும் பெண்ணும் போட்டிபோட்டுக் கொண்டு செல்வம் திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதால் நெருங்கிய உறவுகளுக்குக்கூட  அறவே மதிப்பும் இல்லை மரியாதையும் இல்லை. அதற்கு நேரமும் இல்லை. ஒவ்வொருவரும் உறவுகளைப் புறக்கணித்துவிட்டு தனிக்கட்டைகளாக வாழ்ந்து வருவதை நாம் காணமுடிகிறது. உணவும் பாலியல் தேவைகளும் தன்னிச்சையாக நிறைவேற்றுதல்...  திருமணம் அல்லது பிள்ளைப்பேறு இவற்றில் அறவே நாட்டமின்மை...  இந்நிலை தொடருமானால் இன்றைய இளைஞர்கள் நாளை முதியவர்களாகும்போதும் நோய்வாய்ப்ப்படும்போதும் இதே தனிக்கட்டைகளாய் ஐசியுவில் இருக்கும் போதும் துணைக்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்ற விழிப்புணர்வும் இவர்களுக்கு இல்லை.

இதை ஒருகால் பேஸ்புக்கிலோ வாட்சாப்பிலோ இன்ஸ்டாவிலோ படித்தால் கூட லைக் போட்டுவிட்டு இவர்கள் கடந்து போய் விடுவார்கள். அப்படி மாறியுள்ளது நவீன கலாச்சாரம்!

சம்பந்தப்பட்டவர்கள் விழிப்புணர்வு பெறுகிறார்களோ இல்லையோ, சமூகத்தை விழிப்புணர்வு ஊட்டி சீர்திருத்த வேண்டியது நம் கடமை. எனவே கவனியுங்கள்...

உறுதிமிக்க சமூக உருவாக்கம் எனும் இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தேர்வு செய்பவையாகும். இரத்த உறவு இறைவனின் தேர்வாகும். இந்தத் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நமது கடமையாகும்.

இறைநம்பிக்கையின் அம்சம் :

 “யார் இறைவனையும்மறுமை நாளையும்நம்பிக்கை  கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: புகாரிமுஸ்லிம்

(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

படைத்தவனோடு தொடர்பு :

இரத்த உறவு என்பது இறைவனின் தெரிவு என்பதால் இந்தத் தெரிவை ஏற்று மதிப்பதன் மூலமாக நமக்கு அவனுடன் தொடர்பு உண்டாகின்றது.

இறைவன்  இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

சுவனத்தில் நுழைவிக்கும்:

இரத்த உறவுகளுடன் இங்கிதமாகவும்இதமாகவும் நடந்து கொள்வதும் சுவனத்தில் நுழைவிக்கத்தக்க சிறந்த செயல்பாடாகப் போற்றப்படுகின்றது.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “இறைவனின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு செயலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்துஜகாத்தும் கொடுத்துவாகுடும்ப உறவைப் பேணிக்கொள்” என்றார்கள்.

 அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி)

ஆதாரம் : புகாரிமுஸ்லிம்

இரண விஸ்தீரனம் :

இரத்த உறவைப் பேணுவதால்மறுமைப் பேறுகள் மட்டுமன்றி இம்மையிலும் இனிய பயன்களுள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது.

யார் தனக்கு வாழ்வாதாரங்களில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் தன் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி) நூல் : புகாரிமுஸ்லிம்

 வெட்டுபவரோடும் ஒட்டி வாழ வேண்டும்

 தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுபவனே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்(ரலி),

ஆதாரம் : புகாரி

இதே நிலையை ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.

 “எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார். அதற்கு நபியவாகள்நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல் : முஸ்லிம்

-------------------------- 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?

புதன், 10 ஜூலை, 2024

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 24 இதழ்

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 24 இதழ் 

பொருளடக்கம்:

மனித வாழ்வை பயனுள்ளதாக ஆக்கும் நூல்! - 2

சபரிமாலா இஸ்லாத்திற்கு மாறியது ஏன்? -5

மதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்! -7

ஹாஜிகளை இறைவன் கைவிட்டு விட்டானா? - 12

வாழ்க்கைக்குப் பின் ஏதேனும் நோக்கம் உள்ளதா? -14

மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா? -16

யார் குழந்தையை ஓநாய் தின்றது? -19

கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிக்கும் பண்டிகை! -21

திமிங்கலம் பாலூட்டும் அற்புதம் -24

========== 

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் சந்தா செலுத்தி சந்தாதாரராக விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://tayyib-hope.in/product/30713872/Thiru-Quran-Narcheithi-Malar-1-Year-Subscription.

ஆண்டு சந்தா ரூ. 180- 


புதன், 3 ஜூலை, 2024

அரைகுறை ஆடை- பாலியல் விருந்துக்கான அழைப்பு


ஒரு ஆய்வின் முடிவு:

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த  கிளினிக்கல் மனோதத்துவ நிபுணரும் டெல்ஹாய் கல்லூரியின்  பெண்  கல்வித்துறைத் தலைவருமான அவிகைல் மூர் (Avigail Moor, Clinical psychologist and head of the Women Studies program at Tel Hai College in Israel.) 

என்பவர் “பெண்ணின் ஆடைக்கும், பாலியல்வன்முறைகளுக்கும் இடையிலான தொடர்பைக்
குறித்து ஓர் ஆய்வை நடத்தினார்.

 உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி ஆடை அணியும் பெண்களைக் காணும் போது ஆண்களுக்கு உண்டாகும்
பாலியல் உணர்வு எவ்வளவு என்று கண்டுபிடிப்பதுதான் அந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். அவர் ஆய்வை நடத்தி முடித்த பின்னர் மக்கள் மன்றத்தில் தம்  ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். ஆய்வறிக்கையின் தலைப்பு: அவள் கவரவே ஆடை அணிகிறாள்.. அவன் காமத்திற்கு தூண்டப்படுகிறான்’

= ஆய்வில் பங்கெடுத்த ஆண்களில் 29.8 சதவீதம்  பேருக்கு பெண்களை அரைகுறை  ஆடைகளில்  பார்க்கும் போதெல்லாம் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர்.

= 58.1 சதவீதம் பேருக்கு பெரும்பாலான சமயங்களில் உடல் பாகங்கள்  வெளியில்  தெரியும்படி  ஆடை  அணியும் பெண்களைக்  கண்டால் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர்.  (Journal Of International Women`s Studies, Vol. II 4 May 2010) 

அதாவது, அரைகுறை ஆடைகளை  அணியும் பெண்களைக் காண்கிற 88 சதவீத  ஆண்களுக்கு  பாலியல் தூண்டல் (காம உணர்வு) உணர்வு  ஏற்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

( தகவல்: https://vc.bridgew.edu/jiws/vol11/iss4/8 )

 பெண்கள் தங்கள் உடலின் மறைக்கப் பட வேண்டிய  பாகங்களை அந்நிய ஆண்களுக்கு காட்சிப் பொருளாக  வைக்கும்போது பொது  இடங்களில் பாலுணர்வு தூண்டப்படுகிறது என்பது எந்த ஒரு ஆய்வும் தேவை இல்லாமலேயே அனைவரும் அறிந்த உறுதியான உண்மை இது. 

இச்செயல்  சமூகத்தில் பல சீர்கேடுகள் நிகழ இச்செயல் ஏதுவாகின்றதுதேசிய குற்றவியல் ஆவணக்காப்பக (NRCB) அறிக்கைப்படி நாட்டில் நாளொன்றுக்கு 90 பெண்கள் கற்பழிக்கப்படுவதாக இந்திய காவல் நிலையங்களில் பதிவாகின்றன. (பதிவாகாதவை இன்னும் ஆறு மடங்கு என்கிறது இன்னொரு புள்ளிவிவரம்.  இந்தக் கற்பழிப்பு மட்டுமல்லாமல் காதல்கள்ளக்காதல் விபச்சாரம்,   அநியாயமாக அந்நியனின் கற்பம் சுமத்தல் பெற்று வளர்த்தவர்களுக்கு  நன்றிகேடு,  குடும்பத்தில் டென்ஷன், கருக்கொலைசிசுக்கொலை, கொலைதற்கொலைகுடும்ப அங்கத்தினர்  மத்தியில்  கலகம் போன்ற பலதும்  இதைத்  தொடருகின்றன.

இவ்வளவுக்கும் காரணமாகும் இந்த பாவச் செயல் முற்போக்குத்தனம் என்ற போர்வையில் எவ்வளவு முரட்டுத்தனமாக முன்னேறுகிறது பாருங்கள். பெரும்பான்மையினர் செய்கிறார்கள் என்பதற்காக கண்டிக்கப்படுவதேயில்லை! என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள். 

 விருந்துக்கான அழைப்பு 

பெண்களின்  ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை அந்தப் பெண்களின் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் படைக்கின்றன. ஆண்களின் கழுகுக் கண்களை அந்த ஜன்னல்கள் கவரும்போது அவர்களில் சிலர் அதை ஒரு விருந்துக்கான அழைப்பாக எடுத்துக் கொள்கின்றனர். இனிப்புக் கடைகளில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக அவை ஷோ கேஸ்களில் கவர்ச்சிகரமான வெளிச்சம் போட்டு வைக்கப் படுவதுபோல் பெண்களின் அங்க அழகு அவர்களை ஈர்ப்பதற்காகப் பிரதர்சனம் செய்யப்படுகிறது என்பதாக அவர்கள் உணர்கிறார்கள். இந்த விருந்து அழைப்பு விபரீதமாக மாறுவதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். கடந்த இதழ்களில் கொடுக்கப்பட்ட தகவல்களின் படி நாளொன்றுக்கு  600 கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிந்தோம்.

 இந்த விபரீதத்தைத் தடுக்கவே இஸ்லாம் ஹிஜாப் எனும் ஆடை ஒழுக்கத்தை கற்பிக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாத சமூகம் ‘இஸ்லாம் பெண்ணடிமைத்தனத்தை போதிக்கிறது’ என்ற தவறான விமர்சனத்தை முன்வைக்கிறது.

=================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?