இரவு ஆழ்ந்த உறக்கம்.... காலையில் விழிப்பு வருகிறது
ராஜாவுக்கு..... கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான்.... என்ன இது, இன்னும் இரவு
போலவே தெரிகிறதே.... ஆச்சரியமாக இருந்தது ராஜாவுக்கு.. ‘என்ன நடந்தது எனக்கு?
வீட்டில் எல்லோருமே எழுந்து விட்டார்கள்... அதோ மனைவி சமையல்
பார்த்துக்கொண்டிருக்கும் சப்தம் கேட்கிறது. பிள்ளை பள்ளிக்குப் போக ஆயத்தமாகிக்
கொண்டிருக்கிறான்... ஏன் எனக்கு மட்டும் ஒன்றுமே தெரிவதில்லையே... இன்னும் உறக்கம்
தெளியவில்லையா? இது கனவா? கையைக் கிள்ளிப் பார்த்தான் ... ஒ.வென்று கதறி அழத்
தோன்றுகிறது, துக்கம் தாளாமல்... ஆ... என் கண்பார்வை போய்விட்டதே!’... உச்சஸ்தாயியில்
கதறியே விட்டான்! நேற்று உறங்கும்முன் கண்கள் நன்றாகத்தானே இருந்தது!.... நீண்ட நேரம்
டிவி பார்த்துவிட்டுத்தானே உறங்கினேன்.... என்ன நடந்தது எனக்கு?.. தட்டுத்தடுமாறி
நடந்து பொய் முகத்தைக் கழுவிப் பார்த்தான், மனைவி ஏதேதோ சொட்டு மருந்தை எல்லாம் ஊற்றிப்
பார்க்கிறாள்... ஊஹூம்... எதுவுமே பலிக்கவில்லை!.. இனி எப்படி வேலைக்குப் போவேன்? வாழ்க்கை
நடத்துவேன்? இனி இப்படியே குருடனாகவே வாழ்நாளைக் கழிக்கவேண்டுமா?...துக்கம்
தொண்டையை அடைக்க ‘கடவுளே காப்பாற்று!’ தாங்கமுடியாமல் கதறி அழுதான் ராஜா.
----------------------------
இப்போது விஷயத்துக்கு வருவோம். இன்று ராஜாவுக்கு
நேர்ந்தது நமக்கும் நேரலாம். எப்போதும் நேரலாம். நமக்கு ஐம்புலன்களைக் கொடுத்தவன்
எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவற்றைத் திரும்ப எடுக்கவும்
செய்யலாம். யாரும் மறுக்கமுடியாத உண்மை. இது இந்த தற்காலிக உலக வாழ்வில் ராஜாவுக்கு
நடந்த ஒரு நிகழ்ச்சி. இதை எப்படியோ சமாளித்துவிடலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் இறைவேதங்களும் இறைத்தூதர்களும் கூறும் மறுமை வாழ்க்கையில் அப்படி நடந்தால்
எப்படியிருக்கும்?
இதோ இறைவனின்
இறுதிவேதமாம் திருக்குர்ஆன் இறுதித் தீர்ப்புநாளின் போது மனிதன் மீண்டும்
உயிர்கொடுத்து எழுப்பப்படும்போது நடக்கும் நிகழ்வை படம்பிடித்துக் காட்டுகிறது:
ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக இவ்வுலகைப்
படைத்த இறைவன் தன் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்வோருக்கு சொர்க்கத்தையும் கீழ்ப்படியாமல்
தான்தோன்றிகளாக வாழ்வோருக்கு நரகத்தையும் வழங்க இருக்கிறான். இந்த பூமிக்கு வந்த
முதல் மனிதரான ஆதம் முதற்கொண்டு வழிவழியாக வந்த இறைதூதர்கள் மூலமாக எப்படிக்
கீழ்படிவது என்ற தன் உபதேசங்களை வழங்கி வருகிறான். அவற்றைப் புறக்கணிப்போரின் நிலையைப்
பற்றிதான் பின்வரும் வசனங்களில் அவன் விவரிக்கிறான்:
20:124. ''எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்'' என்று கூறினான்.
20:125. (அப்போது
அவன்) ''என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே!
என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?'' என்று கூறுவான்.
20:126.(அதற்கு
இறைவன்,) ''இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன் அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்'' என்று கூறுவான்.
20:127.ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.
ஆம், இது மறுமையின் தொடக்கம்தான். தொடர்ந்து
நடக்கப்போகிற வேதனைகள் இதைவிடக் கடினமானவை. பகுத்தறிவு என்பது இறைவனைப் பற்றியும்
மறுமையைப் பற்றியும் ஆராய்ந்து அறிவதில்தான் உள்ளது. கண்மூடித்தனமாக இவற்றை மறுப்பதில்
அல்ல! தொடர்ந்து இறைவன் கூறுகிறான்:
20:128.
இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது
அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக