இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 3 ஜூலை, 2021

மண்ணறை என்ற வாழ்விடம்!

 கண்ணியம் மிகுந்த இரட்சகன் அல்லாஹ் தன் திருமறையில் கூறகின்றான்:

நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே (அல்குர்ஆன்: 4:78)
மனிதர்கள் அனைவரும் ஒரு நாள் மரணத்தை அடைந்தே தீர வேண்டும். மன்னாதி மன்னராக இருந்தாலும் சரி! சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி ஒரு நாள் மரணித்துத் தான் ஆக வேண்டும். 
அவ்வாற மனிதன் மரணித்தப்பிறகு, அம்மனிதனை தாய் என்றோ, தந்தை என்றோ, குழந்தைகள் என்றோ, கணவன், மனைவி என்றோ அல்லது ஊரின் முக்கிய பிரமுகர் என்றோ யாரும் தங்களின் வீட்டுக்குள் வைத்துக் கொள்வதில்லை. 
மாறாக இறப்பதற்கு சற்று முன்பு வரை பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர், மய்யித் என்றோ அல்லது பிரேதம் என்றோ தான் அழைக்கப்படும். பின்னர் எவ்வளவு சீக்கிரம் அடக்கம் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அடக்கம் செய்து விட்டு வந்து விடுவார்கள். 
இவ்வுலகில் வாழ்ந்திருந்த காலமெல்லாம் அவ்வுயிர் தாய், தந்தை, மனைவி மக்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் புடைசூழ வாழ்ந்தவர், மரணித்தபின் யாரும் துணைக்கில்லாத தன்னந்தனி ஆளாக மண்ணறையில் வைத்து அடக்கம் செய்யப்படுவார். 
அவ்வாறு அந்த மய்யித் அல்லது பிரேதம் மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டபின், அது சந்திக்கும் நிகழ்வுகள் என்னவென்பதை இஸ்லாமிய மார்க்கம் அழகாக போதனைச் செய்கின்றது. 
அதாவது இவ்வுலகில் தான் வாழ்ந்துக் கொண்டிருந்த காலமெல்லாம் தன்னை சுற்றியிருந்த சக மனிதர்களுக்கு எல்லா வழிகளிலும் தீமைகளையும், துன்பங்களையும் தந்து தன் வாழ்க்கைகயை தீமையின் பால் அமைத்துக் கொண்ட மனிதன் தான் இறக்கும் தருவாயில் எதை சந்திப்பான் என்பதை திருமறை குர்ஆன் தெளிவாக விளக்குகின்றது.
(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! (அல்குர்ஆன்: 8:50)
அதேப்போன்று இறைவன் வகுத்து தந்த சட்டங்களை அதன் வழிமுறைகளை பின்பற்றி தன்னால் இயன்ற அளவிற்கு மனிதகுலத்திற்கு நன்மைகளை தான் வாழும் போது செய்த நல்லமனிதன் தன்னுடைய மரணத்தை முகமலர்ச்சியுடன் சந்திப்பான் என திருமறை குர்ஆன் கூறுகிறது.
நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறுவார்கள் (அல்குர்ஆன்: 16:32)
அவ்வாறு இறந்து விட்ட மனிதனை குளிப்பாட்டி, அவனுக்கு ஆடையிட்டு அவனை அடக்கம் செய்ய உறவினர்கள் சுமந்து செல்லும்போது அம்மய்யித் தான் எங்கு கொண்டு செல்லப்படுகின்றோம் என்பதையும் தனக்கு என்ன நேரவிருக்கின்றது என்பதையும் உணர்ந்துக் கொள்ளும். 
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜனாஸா வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் சுமந்துச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும். அது தீயசெயல்கள் புரிந்ததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான். (அபுஸயித் அல்குத்ரி(ரலி) புகாரி 1314, 1316)
மண்ணறை நிகழ்வுகளை சந்திப்பதற்கு முன், அந்த மனிதன் தான் இறக்கும்போதே தன்னுடைய இருப்பிடம் எப்படி இருக்கும் என்பதையும் அறிந்துக் கொள்கின்றான்.
இவ்வாறு மனிதன் மரணித்தபின் அவனை மண்ணறையில் அடக்கம் செய்து விட்டு அவனின் குடும்பத்தினர்கள், நண்பர்கள் அவனை விட்டு அகன்று போனவுடன் அவன் அங்கே சில நிகழ்வுகளை சந்திக்கின்றான். 
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்;:
ஒரு நாள் நபி(ஸல்)அவர்கள் தொழுகைக்காகப் பள்ளி வாசலுக்கு வருகை தந்தார்கள். சிலர்; உரக்க சப்தமிட்டு இடிச்சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர். இன்பங்களை ஒழித்துக் கட்டிவிடும் மரணத்தை நீங்கள் அதிகமாக நினைவு கூர்வீர்களேயானால் அது உங்களை சிரிப்பதிலிருந்து தடுத்து விடும். 
மண்ணறை ஒவ்வொரு நாளும் கூறுகின்றது. நான் பயணவீடாவேன். நான் தனிமை சிறையாவேன். புழுபூச்சிகளின் இருப்பிடமாவேன். இறைநம்பிக்கையுடைய மனிதன் ஒருவன் மண்ணறையில் புதைக்கபடும்போது மண்ணறை அவனை வரவேற்று பின்வருமாறு கூறுகிறது. 
நீ என்முதுகின் மீது நடந்தோரிலேயே எனக்கு அனைவரை விட அன்புக்குரியோனாக திகழ்ந்தாய். இன்று நீ என் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு விடும்போது நான் உன்னிடம் எவ்வளவு நன்றாக நடந்துக் கொள்கின்றேன் என்பதை நீ காண்பாய்! 
பி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அந்த இறைநம்பிக்கையுடைய மனிதருக்காக அவரது மன்ணறை கண்ணுக்கெட்டும் தூரம் வரை வரிவானதாய் ஆகிவிடுகின்றது. அவருக்காக சுவனத்தின் பக்கம் ஒரு கதவு திறந்து விடப்படுகின்றது. தீயச் செயல்புரியும் ஒரு நிராகரிப்பாளன் புதைக்கப்படும் போது அவனது மண்ணறை அவனை வரவேற்பதில்லை. அது அவனை நோக்கி, நீ என்மீது நடந்து செல்பவர் களிலேயே அனைவரையும்விட அதிகமாக எனக்கு வெறுப்புக்குரியவனாய் இருந்தாய். இப்போது நீ என்னிடம் வந்து விட்டாய். நான் உன்னிடம் எவ்வளவு மோசமாக நடந்துக் கொள்கிறேன் என்பதை நீ காண்பாய்! பின்னர் கூறினார்கள், அம்மண்ணறை அவனுக்காக குறுகி விடும். நெருக்கமாகி விடும். எந்தளவுக்கென்றால், அவனது விலா எலும்புகள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொள்ளும்! என்று தமது ஒரு கரத்தின் விரல்களை மற்றொரு கரத்தின் விரல்களுக்குள் பதிந்து காட்டினார்கள். பின்னர் கூறினார்கள்: அவன் மீது எழுபது பாம்புகள் சாட்டப்பட்டு விடும். ஒவ்வொன்றின் நச்சுத்தன்மையும், பூமியில் அது ஊதினால், அதன் நஞ்சின் பாதிப்பால் எதுவுமே முளைப்பிக்கத் தகுதியற்றதாக அப்பூமி ஆகி விடும். பின்னர் அந்த பாம்புகள் அனைத்தும் அவனை தீண்டும். காயப்படுத்தும். இவ்வாறே தொடர்ந்துக் கொண்டிருக்கும். இறுதியில் மறுமைநாள் வந்து விடும். அவன் அங்கு கொண்டு வரப்படுவான் என்று கூறிவிட்டு, கூறினார்கள், மனிதனுக்கு மண்ணறையில் சுவன தோட்டங்களில் ஒரு தோட்டம் அமைகின்றது! அல்லது நரகக்குழிகளிலிருந்து ஒரு குழி அமைகின்றது.(அபுஸயித் அல் குத்ரி (ரலி) திர்மதி):
மேலும், ஒரு அடியான் கப்ரில் செய்யப்பட்டு அவனது தோழர்கள் திரும்பி செல்லும்போது அவன் அவர்களது காலடி ஓசையை செவியுறுவான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து, அவனை எழுப்பி உட்கார வைத்து இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய் என்ற நபி(ஸல்) அவர்கள் குறித்து கேட்பார். அவர் மூஃமினாக இருந்தால் இவர் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார் என்று கூறுவார். அவனிடம் நரகத்தில் உள்ள உன்னிடத்தைப் பார் என்று கூறப்படும். பின்னர் அல்லாஹ் இதை மாற்றி உனக்கு சொர்க்கத்தை ஏற்படுத்தியுள்ளான் என்று கூறுவார். பின்னர் அவனின் கப்ர் 70அடி விசாலமாக்கப்படும்.அவன் இதைப்பற்றி தன் குடும்பத்தாரிடம் சொல்லி விட்டு வருவதாக கூறும்போது புதுமாப்பிள்ளையைப் போல் உறங்கு என்று கூறப்படும். தீயவனாக இருந்தால் பதில் சொல்ல தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பான். உடனே நீ அறியாதவன் குர்ஆனை ஓதாதவன் என்று கூறி இரும்பு சம்மட்டிக் கொண்டு கடுமையாக அடிக்கப்படுவார்கள். இரண்டு விலா எலும்புகள் சேரும் அளவுக்கு கப்ர் நெருக்கப்படும். அவனது சப்தத்தை மனிதர்கள் மற்றும் ஜின்களை தவிர அனைத்தும் செவியுறும். (அனஸ்(ரலி) புகாரி1374, அஹ்மத், அபுதாவூத்)
மேலும் மண்ணறையில் மனிதன் பெரும் பாவங்களுக்காக வேதனை செய்யப்படுவதில்லை. இதெல்லாம் ஒரு பாவமான செயலா? என மனிதர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் சாதாரண தவறுகளுக்காகவும்வேதனை செய்யப்படுகிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய மண்ணறைகளை கடந்து நபி(ஸல்) அவர்கள் சென்ற போது, இந்த (மண்ணறைவாசிகள்) இருவரும் வேதனைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகப்பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்பட வில்லை. அவர்களில் ஒருவன் கோள் சொல்லிக்  திரிந்து கொண்டிருந்தவர். இன்னொருவன் சிறுநீர் கழிக்கும் போது அதனை மறைக்காமல் இருந்தவர் எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்சை மட்டையை இரண்டாக பிளந்து, ஒவ்வொரு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள்.அப்போது சஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்டதும், இவ்விரண்டின் ஈரம் காயும்வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்  என்று கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 1361)
மரணத்தை நினைவு கூற வேண்டுமென்பதற்காக மண்ணறைகளுக்கு நாம் சென்று வர வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாமியர் களுக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். 
உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைகளுக்குச் சென்றால் கப்ரில் வழங்கப்படும் தண்டனைகளை எண்ணி அழுவார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைகளுக்குச் சென்றால் தமது தாடி நனையுமளவிற்கு அழுவார்கள். அப்போது அவர்களிடம், சொர்க்கம் நரகத்தைப் பற்றி சொல்லப்படும்போது நீங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறைகளுக்கு வந்தால் அழுகின்றீர்களே? எனக் கேட்கப்பட்டபோது, அவர்கள் கூறினார்கள், மண்ணறை என்பது மறுமையின் நிலைகளில் முதல் படியாகும். இதில் அடியான் தப்பித்து விட்டால் இதற்குப் பின்னுள்ள நிலை இதை விட இலகுவாக இருக்கும். இதில் அவன் வெற்றி பெறவில்லையானால் இதற்குப் பிறகுள்ள நிலை இதைவிட கடுமையாக இருக்கும். மண்ணறைகளில் நடக்கும் காட்சிகளை விட மோசமான எந்தவொரு காட்சியையும் நான் பார்க்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹானி திர்மிதி 2230)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மக்களின் அச்சப்பட்டு கதறி அழும்  அளவிற்கு மண்ணறை வேதனையைப் பற்றி பேசுவார்கள் என்றால் எந்தளவுக்கு மிகவும் சோதனையானதொரு நிலைமை என்பதை உணர்ந்து அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும். 
ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போது மக்கள் அச்சத்தால் கதறி விட்டார்கள் (அஸ்மா பின்த் அபுபக்கர்(ரலி) புகாரி 1373)
உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கமும், நரகவாசியாக இருந்தால் நரகமும் காட்டப்படும். மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்ற வரை இதுவே(கப்ரே) உனது தங்குமிடம் என்றும் கூறப்படும். (அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) புகாரி 1379)
மேலும் இந்த மண்ணறை வேதனையில் இருந்து நபி(ஸல்) அவர்கள் பாதுகாப்பு தேடாமல் இருந்ததில்லை என்பதையும் விளங்கி நாமும் அதிகமாக பாதுகாப்பு தேட வேண்டும்.
ஒரு யூதப்பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்பானாக! எனக் கூறினாள். பிறகு இதைப் பற்றி ஆயிஷா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது, ஆம்! மண்ணறை வேதனை உள்ளது என்றார்கள். பின்னர் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள், அதற்குப் பிறகு, நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடாமல் இருந்ததேயில்லை. (மஸ்ரூக் புகாரி 1372)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தங்களது  ஒவ்வொரு தொழுகையிலும்  அத்தஹியாத்தில் பின்வரும் துவாவை ஓதாமல் இருந்ததில்லை.
அல்லாஹூம்ம இன்னி அவூதுபிக்க மின் அதாபில் கப்ரி, வமின்னாரி, வமின் ஃபித்னத்தில் மஹ்யாய வல் மமாத்தி வமின் ஃபித்னத்தில் மஸீஹூத் தஜ்ஜால் (நான் மண்ணறை வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை மஜிஹூத் தஸ்ஜாலின் குழப்பம் ஆகியவற்றிலிருந்து இறைவா உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்) என்று கூறுவார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி 1377) 
ஆகவே ஒவ்வொரு தொழுகையிலும் மேலேயுள்ள துவாவை ஓதி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மண்ணறை வேதனையில் பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும்.
thanks - http://www.labbaikudikadutntj.com/2014/08/mannarai-nigalvugal.html