இந்த வலைப்பதிவில் தேடு

மூடநம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூடநம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 மார்ச், 2021

முஹம்மது நபி அவர்களின் வாழ்வும் போதனைகளும்

 பிறப்பும் சூழலும்:

சவுதி அரபியாவில் மக்கா நகரில் அன்றைய உயர்குலம் ஒன்றில் கிபி 670 இல் பிறந்தார்கள். சிறுவயதிலேயே வளர்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது நாற்பது வயது வரை  சாதாரண மனிதராகவும், ஒரு வியாபாரியாகவும்தான் இருந்தார்கள்.   ஆனால் தாம் வாழ்ந்த மக்களிடையே உண்மைக்கும் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர்பெற்றவர்களாக இருந்தார்கள். மக்கள் அவரை அல் அமீன் (நம்பிக்கைக்கு உரியவர்)) என்ற பட்டப்பெயர் கொண்டு மதிப்போடு அழைத்தார்கள்.


 ஆனால் அவரைச் சுற்றி வாழ்ந்த மக்கள் பலவிதமான  மூடநம்பிக்கைகளிலும் மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள். மக்காவில் இன்று காணப்படும் சதுர வடிவான கஅபா என்ற இறையில்லம் சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் இப்ராஹீம் (ஆப்ரஹாம்) என்ற இறைத் தூதரால் ஏக இறைவனை வழிபடுவதற்காக கட்டப்பட்ட ஒன்றாகும். ஆனால் காலப்போக்கில் அதற்குள் 360 சிலைகள் நிறுவப்பட்டு  தினம் ஒரு சிலைக்கு வழிபாடு என்றவாறு நடத்திக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் படைத்தவர்களும் பலம் வாய்ந்தவர்களும் இடைத்தரகர்களும் சேர்ந்து கடவுளின் பெயரால் மக்களை அடிமைப் படுத்தியும் கொடுமைப் படுத்தியும் வந்தனர். குலவேற்றுமையும் இனவேற்றுமையும் ஆழமாய் வேரூன்றியிருந்த காரணத்தால் அவர்களுக்குள்ளே சண்டைகளுக்கும் கலகங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது. 
பெண்குழந்தைகளை உயிரோடு புதைத்தல்:
  பெண்ணடிமைத்தனமும் மூடநம்பிக்கைகளும் காரணமாக அவர்கள் பெண்குழந்தைகள் பிறந்தாலே இழிவு என்று கருதி அவர்களை உயிரோடு புதைக்கவும் செய்து வந்தார்கள். பெண்களை வெறும் போகப்பொருளாக பயன்படுத்தி வந்தனர். இன்னும் இவைபோன்ற பல அனாச்சாரங்களும் அங்கே தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன.

இறைத்தூதராக நியமிக்கப்படுதல்

 தன்னைச் சுற்றி இவையெல்லாம் நடந்துகொண்டிருக்க இவற்றுக்கான தீர்வுகளுக்காக அவரது மனம் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். தனிமையில் இறை நினைவில் நாட்களைக் கழித்தார்கள். இப்படிப்பட்ட வேளையில்தான் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகளாருக்கு இறைவன் புறத்திலிருந்து வேதவசனங்களும் இறைகட்டளைகளும் வழிகாட்டுதல்களும் வரத் துவங்கின.

முதன் முதலாக இறைவன் புறத்திலிருந்து இறங்கிய வசனங்கள் இவையே:

 (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான். (திருக்குர்ஆன் 96:1-5)

இவற்றைத் தொடர்ந்து வந்த இறைக் கட்டளைகளின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்று மக்களிடையே பிரகடனம் செய்தார்கள். இறைவன் புறத்திலிருந்து தான் பெறும் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

மக்களுக்கு செய்த போதனைகள்:

= இந்த உலகம் இறைவனால் படைக்கப் பட்டது. இங்கு வாழும் மனிதர்கள் யாவரும் இறைவனுக்கு கீழ்படிந்து வாழக் கடமைப் பட்டுள்ளார்கள் . அவ்வாறு வாழ்ந்தால் மட்டுமே இவ்வுலகில் நீதியும் அமைதியும் ஏற்படும். மறுமையிலும் நீங்கள் மோட்சத்தை அடைய முடியும். அவ்வாறு இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்தலே இஸ்லாம் எனப்படுகிறது.

= ஒருநாள் இவ்வுலகம் முற்றாக அழிக்கப்படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை பிறப்பிக்கப் படும்போது இவ்வுலகின் மீது வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். அன்று ஒவ்வொரு மனிதர்களும் இப்பூமியின் மேல் செய்த ஒவ்வொரு பாவமும் புண்ணியமும் எடுத்துக்காட்டப்பட்டு விசாரிக்கப் படுவார்கள். விசாரணைக்குப் பிறகு புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப் படும். எனவே இறைவனின் கட்டளைகளை ஏற்று அவன் ஏவியவற்றைச் செய்யுங்கள். தடுத்தவற்றில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.

= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

= இறைவனின் கட்டளைகளில் முக்கியமானது அந்த ஏக இறைவன் மட்டுமே வணங்குவதற்குத் தகுதியானவன் என்று ஏற்றுக் கொள்வதாகும். அவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வணங்க வேண்டும். அவன் அல்லாத எதையுமே கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. அவனுக்கு பதிலாக சிலைகளையோ உருவங்களையோ வணங்குதல் பெரும் பாவமாகும்.

= அனைத்து மனித இனமும் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியில் இருந்து உருவாகிப் பல்கிப் பெருகியவர்களே. மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப் போல் சமமானவார்களே. இனத்தாலோ, குலத்தாலோ, நிறத்தாலோ, மொழியாலோ யாரும் யாரையும் விட உயர்ந்தவர்கள் அல்ல.

மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்  கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில்உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (திருக்குர்ஆன் 49: 13)

= இறைவனின் பொருத்தத்தைப் பெற்று நாளை மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டுமானால் கொலை, கொள்ளை, வட்டி, சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருட்கள், பொய், பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றுதல், போன்ற எல்லாத் தீமைகளிலிருந்தும் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும். இறைவன் கற்பிக்கும் நற்காரியங்களை செய்யவும் பூமியில் தர்மத்தை நிலைநாட்ட ஒத்துழைக்கவும் வேண்டும்.

இவ்வாறு தான் இறைவனிடமிருந்து பெறும் செய்திகளை மக்கள் முன் எடுத்துரைத்து சத்தியப் பிரச்சாரத்தை துவங்கினார் நபிகள் நாயகம் (ஸல்).


புதன், 9 மார்ச், 2016

புகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்!


இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை  இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், "சூரியனும் சந்திரனும் இறைவனின் சான்றுகள் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை.எனவே, அவற்றை நீங்கள் கண்டால் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்;தொழுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: நபித்தோழர் முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 1043

நபியவர்களின் மகன் மரணித்த நேரமும், கிரகணம் தோன்றிய நேரமும் ஒன்றாக இருந்ததினால் மக்கள் நபியின் மகனின் மரணத்திற்குத்தான் கிரகணம் தோன்றியது என கூறிக்கொண்டிருந்தார்கள்.
 அப்போது  நபியவர்கள் தனது ஆழ்ந்த துக்க வேளையிலும் அதைப் பொருட்படுத்தாது மக்களிடம் வந்து 'கிரகணம் என்பது யாருடைய மரணத்துக்காகவும்நிகழ்வதில்லை, அது இறைவனின் ஏற்பாடு' என்பதை உணர்த்தி அவர்களின் மூடநம்பிக்கையை துடைந்தெறிந்தார்கள்.

இன்று கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பலர், இயற்கை நிகழ்வுகளைக் கூடத் தங்கள் அற்புதம் என்று சொந்தம் கொண்டாடுவதைப் பார்க்கிறோம்.
"நபியின் மகன் இறந்து விட்டான்; அதனால் கிரகணம் பிடித்து விட்டது" என்று மக்களேபேசிக் கொள்ளும்போது அதைக்கண்டு பெருமிதம் கொள்ளவோ தன புகழை உயர்த்திக்கொள்ளவோ செய்யவில்லை  நபிகளார்.

இதை அற்புதம் என்று வாதிடுவதற்கு எல்லாவாய்ப்புகளும் இருந்தும், மக்களே இதை அற்புதம் என்று சொன்ன போதும் நபியவர்கள் உண்மையான இறைத் தூதர் என்பதால் அவ்வாறு போலியான தகுதியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

அவ்வாறுதான் இறைத்தூதர்கள் யாருமே இயற்கையாக  நிகழும் அற்புதங்களாயினும் சரி, இறைவனின் அனுமதி கொண்டு அவர்களே நிகழ்த்தும் அற்புதங்களாயினும் சரி, அவற்றைக் காட்டி தங்களுக்கு தெய்வீகத் தன்மை உள்ளதாக வாதிடவில்லை.  இவற்றை நிகழ்த்துபவன் இறைவனே என்று கூறி அவனுக்கு நன்றி கூறி அவனுக்கு கட்டுப்பட்டு வாழுமாறு மக்களை அழைத்தார்கள்.  அவ்வாறு கட்டுப்பட்டு வாழுதலுக்கு அரபு மொழியில் 'இஸ்லாம்' என்று வழங்கப்படுகிறது.

நபிகளாருக்கு முன்னர் வந்த இறைத்தூதரான இயேசு நாதரும் (அவர்மீது இறைசாந்தி உண்டாவதாக) தன் வாழ்நாளில் பல அற்புதங்களை செய்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது:

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (இயேசுவை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) ‘நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது’ (என்று கூறினார்). (அல்-குர்ஆன் 3:49)
இயேசு அவர்களின் பிறப்பும் இவ்வுலகிலிருந்து அவரது மறைவும் எல்லாம் அற்புதமே! ஆயினும் ஒருபோதும் தனக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாகவோ தன்னை வணங்கச் சொல்லியோ இயேசு மக்களுக்குக் கூறவில்லை என்பதை ஆராய்வோர் அறியலாம்!
=================
இஸ்லாம் என்றால் என்ன?
https://www.quranmalar.com/2012/10/blog-post_25.html

நாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்!

https://www.quranmalar.com/2019/09/blog-post_23.html

இயேசு நாதரின் அற்புதப் பிறப்பு

https://www.quranmalar.com/2014/12/blog-post_15.html