சிறைவாசிகளை சீர்திருத்திடும் இறைநம்பிக்கை!
சிறைச்சாலைகள் சமூகப் பாதுகாப்பிற்காக
அவசியமானவை. ஆனால் அவை தண்டனை வழங்கும் இடங்களாக மட்டுமே செயல்பட்டால், குற்றங்கள் குறையாது. ஒரு
மனிதன் உண்மையில் திருந்த வேண்டும் என்றால்,
அவனுக்குள் மனமாற்றம் (inner transformation) நிகழ வேண்டும். அந்த மனமாற்றத்தை உருவாக்கும் சக்தியாக இஸ்லாமிய
இறைநம்பிக்கை செயல்படுகிறது.
- மனிதனை அல்ல, தீய தூண்டுதலையே
எதிரியாகப் பார்க்கும் பார்வை
இஸ்லாம் மனிதனை பிறவியிலேயே கெட்டவன் என்று
பார்க்கவில்லை.
அவனை தவறுக்கு தள்ளுவது ஆசை, கோபம், பேராசை மற்றும் ஷைத்தானின் தூண்டுதல் என விளக்குகிறது.
“நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குத்
தெளிவான எதிரி.”
(குர்ஆன் 35:6)
இந்த அணுகுமுறை சிறைவாசியின் மனதில் “நான் கெட்டவன்” என்ற
அவநம்பிக்கையை உடைத்து, “நான்
திருந்த முடியும்” என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. இதுவே
சீர்திருத்தத்தின் முதல் அடித்தளம்.
பகுத்தறிவு பூர்வமான இறைநம்பிக்கை
இஸ்லாமிய இறைநம்பிக்கை கண்மூடி நம்பிக்கை அல்ல. மனிதனை
சிந்திக்க, ஆராய, தன் செயல்களின் விளைவுகளை புரிந்து கொள்ள அழைக்கிறது.
என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப்
பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்;
இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” (குர்ஆன் 6:80)
இதனால் சிறைவாசி தன் வாழ்க்கைத் தவறுகளுக்கு வெளிப்புற
சூழலை மட்டுமே குறை கூறாமல், தன் தேர்வுகளுக்குப் பொறுப்பு எடுத்துக்கொள்ளும் நிலைக்கு
வருகிறான்.
உள்ளார்ந்த கண்காணிப்பு (Inner moral surveillance) –
‘யாரும் பார்க்கவில்லை’ என்ற மாயை உடைபடும் இடம்
சிறையில் காவலர் கண்காணிப்பு இருக்கலாம். ஆனால்
அது மனிதனை
வெளிப்புறமாக மட்டுமே கட்டுப்படுத்தும். இஸ்லாமிய இறைநம்பிக்கை
மனிதனுக்குள் ஒரு வலுவான உள்ளார்ந்த கண்காணிப்பை உருவாக்குகிறது.
“அவன் கண்களின் மோசடியையும் உள்ளங்களில்
மறைந்ததையும் அல்லாஹ் அறிகிறான்.” (குர்ஆன் 40:19)
“தன்னை ஒருவரும்
பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?” (குர்ஆன் 90:7)
“அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?” (குர்ஆன் 90:8)
இந்த வசனங்கள் “யாரும் பார்க்கவில்லை; எனவே
நான் விரும்பியது செய்யலாம்” என்ற மனித மனநிலையை பகுத்தறிவு கேள்வியால்
உடைக்கின்றன.
இந்த உணர்வே தனிமையிலும் தவறு செய்யாமல் வாழ வைக்கும் உண்மையான
கட்டுப்பாடு.
பாவமன்னிப்பு (தவ்பா) – நம்பிக்கையுடன்
கூடிய புதிய தொடக்கம்
இஸ்லாம் குற்றம் செய்த மனிதனை நம்பிக்கையற்றவனாக
மாற்றவில்லை.
தவ்பா (பாவத்திலிருந்து திரும்புதல்) என்ற
வாய்ப்பை எப்போதும் திறந்தே வைத்துள்ளது.
“என் அடியார்களே! அல்லாஹ்வின்
கருணையை நம்பிக்கை இழக்காதீர்கள்.”
(குர்ஆன் 39:53)
இந்த நம்பிக்கை சிறைவாசியின் மனச்சுமையை
குறைத்து, புதிய
வாழ்க்கையைத் தொடங்கும் தைரியத்தை அளிக்கிறது.
ஒழுக்கப் பயிற்சி – நடைமுறை
சீர்திருத்தம்
தொழுகை,
நோன்பு, துஆ போன்ற இஸ்லாமிய வழிபாடுகள் வெறும்
ஆன்மிகச் சடங்குகள் அல்ல.
- ஐவேளைத்
தொழுகை → வாழ்க்கையில் ஒழுக்கமும் ஒழுங்கும்
பேண வைக்கிறது
- நோன்பு
→ தன்னடக்கப் பயிர்ச்சி
- துஆ → மன அமைதி, தன்னம்பிக்கை, இறைநெருக்கம்
இவை அனைத்தும் சிறைவாசியின் கோபம், அவசரம், அசட்டுத்தனத்தை
கட்டுப்படுத்தி, ஒரு ஒழுக்கமான வாழ்க்கைக்குத் தயாராக்குகின்றன.
அனுபவ சாட்சி – அமெரிக்க சிறைகள்
அமெரிக்க சிறைகளில் இஸ்லாமைத் தழுவிய பல கைதிகள்
வன்முறை குறைந்தவர்களாக, ஒழுக்கம் கொண்டவர்களாக மாறியுள்ள சம்பவங்கள்
பரிசோதனையாகப் பார்க்கப்பட்டுள்ளன.
மால்கம் எக்ஸ் ஒரு குற்றவாளியாக சிறையில்
அடைக்கப்பட்டவர். ஆனால் இஸ்லாமை அறிந்தபின் அவர் சிந்தனையாளர், சமூக மாற்றக் குரல் ஆக
மாறினார்.
அவர் வாழ்க்கை ஒரு உண்மையைச் சொல்கிறது:
சிறை மனிதனை சீர்கெடுக்கவும் முடியும்; அல்லது சரியான இறைநம்பிக்கை
இருந்தால் அவனை சீர்திருத்தவும் முடியும். உத்தமன் ஆக்கவும் முடியும்.
ஆக, இஸ்லாமிய இறைநம்பிக்கை சிறைவாசியை பயத்தால் கட்டுப்படுத்தவில்லை.
அறிவு, பொறுப்பு, நம்பிக்கை மூலம் அவனை மாற்றுகிறது.
“நீ கெட்டவன் அல்ல. நீ தவறிழைத்தாய். ஆனால் நீ திருந்த முடியும்.”
இந்தக் கோட்பாட்டை சிறைச் சீர்திருத்தத்தின்
மையமாக்கினால், சிறைச்சாலைகள்
தண்டனை மையங்களாக அல்ல; மனிதனை
மீட்டெடுக்கும் உண்மையான சீர்திருத்த மையங்களாக மாற முடியும்.
=============

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக