இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 நவம்பர், 2012

ஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்?

Image result for unity of mankind
   ஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பரவி உள்ளோம். ஆனால் இன்று  நாட்டின் பெயராலும், இனத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் ஜாதிகளின் பெயராலும் ஒருவரை ஒருவர் பயங்கரமான முறைகளில் தாக்கிக் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொண்டு வருகிறோம்.
இந்நிலைமை ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மனிதனிடம் குடிகொண்டுள்ள குழப்பம் நிறைந்த கடவுள் கொள்கைகளும் மூட நம்பிக்கைகளுமே!
பூமியில் மீணடும் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் மனித இதயங்களில் கடவுளைப் பற்றியும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும்  தெளிவான மற்றும் அறிவார்ந்த நம்பிக்கை விதைக்கப் பட வேண்டும்.
அதாவது என்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவன் உள்ளான். அவன் சர்வ வல்லமை உள்ளவன். இந்த தற்காலிக வாழ்க்கையை முடித்துக் கொண்டு அவனிடமே நான் திரும்ப வேண்டியுள்ளது. அவன் நான் செய்த புண்ணியங்களுக்கு பரிசு தருவான். அதே போல் நான் பாவங்கள் செய்தால் தண்டிக்கவும் செய்வான் என்ற அடிப்படை உணர்வு ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் ஆழமாக விதைக்கப் பட வேண்டும். அப்போதுதான் மனிதன் பாவம் செய்யாமல்  இருப்பான், புண்ணியங்கள் செய்வதற்கு ஆர்வம்  கொள்வான்.
  இந்த அடிப்படையை மக்களுக்கு போதிக்க இறைவன் அவ்வப்போது தனது தூதர்களை அனுப்பினான். ஒவ்வொரு காலத்திலும் இவ்வுலகின் பல பாகங்களுக்கும் இறைவன் புறத்திலிருந்து வந்த இறைத்தூதர்கள் மிகத்தெளிவான கடவுள் கொள்கையையே போதித்தார்கள். இவ்வுலகைப் படைத்து உங்களைப் பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே. அவனை மட்டுமே வணங்குங்கள். அவனை விட்டு விட்டு படைப்பினங்கள் எதையும் வணங்காதீர்கள். அவன் அல்லாத எதையும் இறைவன் என்று சொல்லாதீர்கள், அவனுக்கு உருவங்கள் எதையும் சமைக்காதீர்கள், ஏனெனில் அவனைப் போல் எதுவுமே இங்கு இல்லை. அவனை யாரும் நேரடியாக அணுகலாம். அவனை வணங்குவதற்கு இடைத் தரகர்கள் தேவை இல்லை.

 படைப்பினங்களைப் பாருங்கள். பகுத்தறிவைப் பயன்படுத்தி படைத்தவனை உணருங்கள். அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள். அவனது கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழுங்கள். அவ்வாறு வாழ்ந்தால் அதற்குப் பரிசாக மறுமை வாழ்க்கையில் சொர்க்கத்தை வழங்குவான். நீங்கள் செய்நன்றி கொன்று அவனுக்கு மாறு செய்தால் அதற்க்கு தண்டனையாக உங்களை நரகத்தில் நுழைவிப்பான் என்றெல்லாம் போதித்தார்கள்    

  ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் ஷைத்தானின் தூண்டுதலால் அவர்களின் போதனைக்கு மாற்றமாக இறைத்தூதர்களுக்கும் மற்ற புண்ணியவாங்களுக்கும் நினைவுச் சின்னங்கள் எழுப்பினார்கள். நாளடைவில் அவற்றையே வழிபடவும் ஆரம்பித்தார்கள். இவ்வாறு மக்கள் உயிரற்ற உணர்வற்ற ஜடப் பொருட்களை எல்லாம் கடவுள் என்று நம்பத் துவங்கியதால் உண்மையான இறை உணர்வும் பயபக்தியும் சிதைக்கப்பட்டு மக்கள் தயக்கமின்றி பாவங்கள் செய்யத் தலைப்பட்டனர். இவற்றோடு கடவுள் பெயரால் மக்களைச் சுரண்டிப் பிழைக்க இடைத்தரகர்களும் அவர்கள் அவிழ்த்துவிட்ட மூடநம்பிக்கைகளும் என பல தீமைகளும் சேர்ந்து பூமியில் அதர்மத்தை அக்கினிக் குண்டம்போல் வளர்த்தன.
   இவ்வாறு அதர்மம் பரவிய போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக மீண்டும்மீண்டும் இறைத் தூதர்கள் அனுப்பப் பட்டனர். அவர்கள் மேற்கண்ட அதே அடிப்படை போதனைகளை மக்களுக்கு நினைவூட்டி சத்தியத்தின்பால் அழைத்தனர். அதர்மத்தை வைத்து மக்களை ஏய்த்துப் பிழைப்பவர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புகளையும் தாக்குதல்களையும் பொறுமையோடு எதிர்கொண்டனர். இறுதியில் இறைவனின் உதவி கொண்டு மீண்டும் உண்மையான தர்மத்தை நிலை நாட்டிவிட்டுச் சென்றனர். 
அந்த இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவரும் தனது வாழ்நாளில் அதே அடிப்படையில் தர்மத்தை நிலை நாட்டிவிட்டுச் சென்றார்!

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்... இன்று பற்பல மதங்களும் பரவியுள்ள நிலையில் உண்மையான தர்மம் எது என்பதை எப்படி அடையாளம் காண்பது?

அது எளிது. உண்மையான தர்மம் ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் அவனிடமே மீளுதல் (அதாவது மறுமை வாழ்க்கை) என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லும். தர்மம்  இறைவனுக்கு கீழ்படிதல் என்ற பண்புப் பெயரால் அறியப்படும்!  ஆனால் அதர்மமோ  அந்தந்தக் காலத்து இறைதூதர்களின் அல்லது நாட்டின் அல்லது வமிசத்தின் பெயரால் மதமாக அறியப்படும். 

   இன்று அதர்மம் தனது உச்சக்கட்டத்தில் பரவிக் கிடக்கிறதே, இனி ஒரு இறைத்தூதர் வருவாரா?
   இல்லை, நிச்சயமாக இல்லை. ஏனெனில் உலக அழிவின் அண்மையில் உள்ளோம். முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் இறுதித்தூதர் என்று அவர் மூலமாக அனுப்பப்பட்ட இறுதி வேதமாம் திருக்குர்ஆனில் இறைவன் அறிவித்தும் விட்டான். நூற்றாண்டுகள் பதினான்கு கடந்துவிட்டாலும் திருக்குர்ஆனும் இறுதித்தூதரின் போதனைகளும் முன்மாதிரிகளும் அற்புதமான முறையில் அப்படியே பாதுகாக்கப் பட்டு வருகின்றன.   
   இனி தர்மத்தை மீணடும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு நம் கையில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அதற்கு இறுதி வேதம் குர்ஆனையும் இறுதித்தூதரின் முன்மாதிரியையும் நாம் கைகொள்ள வேண்டும். அதில் அதிமுக்கியமாக திருக்குர்ஆன் கற்றுத்தரும் கடவுள் கொள்கையை நாம் மக்கள் மனங்களில் விதைக்க வேண்டும். இன்று` காணும் மாசுபடுத்தப் பட்ட கடவுள் கொள்கைகளை மக்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். உயிரற்ற உணர்வற்ற பொருட்களை எல்லாம் காட்டி இவற்றை எல்லாம் கடவுள் என்று நம் சிறார்களுக்கு கற்பிப்பதை நாம் நிறுத்த வேண்டும். இதனால் ஒருபுறம் அவர்களின் கடவுள் உணர்வைச் சிதைத்து பாவம் செய்ய  அஞ்சாத தலைமுறைகள் உருவாக வித்திடுகிறோம். மறுபுறம் இதையெல்லாம் கண்டுகொண்டிருக்கும் சர்வ வல்லமையும் ஞானமும் கொண்ட இறைவனைச் சிறுமைப் படுத்துவதால் அவனது கடும் கோபத்திற்கும் ஆளாகிறோம்.
    இறைவனை அவன் எவ்வாறு அறிமுகப் படுத்துகிறானோ அவ்வாறே விளங்கிக் கொள்ள வேண்டும். அது அல்லாமல் நம் கற்பனையில் உதித்தவற்றை எல்லாம் கடவுள் என்று கற்பித்தால் ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் உருவாகி ஒவ்வொன்றையும் வணங்குவோர் தனித்தனி குழுக்களாகவும் ஜாதிகளாகவும் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகிறது. ஆனால் இறைவனை அவன் எவ்வாறு கற்றுத்தருகிறானோ அவ்வாறு புரிந்துகொண்டு வணங்கும் போது மொழி, இனம், நிறம், மாநிலங்கள், நாடுகள் போன்ற தடைகளைக் கடந்து மனித சமத்துவமும் உலகளாவிய சகோதரத்துவமும் உருவாகிறது.
    இதை நீங்கள் இந்த சத்திய இறைமார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடையே நிதர்சனமாகக் காணலாம். உதாரணமாக, நமது நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாய மக்களைப் பாருங்கள். இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்தோ அல்லது துருக்கியிலிருந்தோ வந்தவர்கள் அல்ல. இவர்களின் முன்னோர்கள் ஒரு காலத்தில் இந்துக்களாகவோ கிருஸ்துவர்களாகவோ இருந்து இம்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான். இன்று இவர்கள் தீண்டாமை மறந்து பள்ளிவாசல்களில் ஒரே வரிசையில் தோளோடு தோள் சேர்ந்து அணிவகுப்பதையும் ஒரே தட்டில் உணவு உண்பதையும் காண்கிறீர்கள்.

தன்னை இறைவன் எவ்வாறு அறிமுகப்படுத்துகிறான்? இதோ அவனது இறுதி மறை மூலமே அதனை அறிவோமே!

படைத்த இறைவனுக்கு திருக்குர்ஆன் அரபிச் சொல்லான அல்லாஹ் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அதன் பொருள் வணக்கத்திற்கு உரிய இறைவன் என்பதே.  முஸ்லிம் அல்லாத மக்களில் பெரும்பாலானோர் அல்லாஹ் என்றால் அது ஓர் முஸ்லிம்களுடைய கடவுள் அல்லது அரபு மக்களின் குலதெய்வம் என்று தவறாக நம்பி வருகின்றனர். முஸ்லிம்களில் அறியாமையில் உள்ள சிலர் கூட ஒவ்வொரு மதத்தவருக்கும் வெவ்வேறு கடவுள்கள் இருப்பதைப் போல அல்லாஹ் என்றால் தமது மதத்தின் கடவுள் என்று தவறாகக் கருதி வருகின்றனர். ஆனால் இவ்விரண்டு நம்பிக்கைகளுக்கும் மாறாக அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏகனாகிய இறைவனைக் குறிக்கும் சொல்லே அல்லாஹ் என்பது.

2:255 அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை,
•     அவன்என்றென்றும் ஜீவித்திருப்பவன்,
•     என்றென்றும் நிலைத்திருப்பவன்,
•     அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா,
•     வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன,
•     அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?
•     (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்,
•     அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது,
•     அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது,
•     அவிவிரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை
•     அவன் மிக உயர்ந்தவன், மகிமை மிக்கவன்.

112:1 (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
----------------- 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக