எந்த நேரம் நம்மைத்
தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு பரபரப்பான விஷயம் மரண நேரம்.
இறைவனும் அவனது தூதரும் கூறிய மறைவான
விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும் பரபரப்பான தருணமே மரண நேரம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'(தவறான) ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) - நூல்:திர்மிதி
உலகில் மனிதன் தான் விதைத்து வந்ததின் பலாபலன்களின் தராதரத்தை உணர்த்தும் ஆரம்பக் காட்சிகளின் அரங்கேற்றமே மரண நேரம்.
உற்றார், உறவினர், நண்பர்கள் என எத்தனையோ பேர் புடைசூழ இருந்தாலும் நேரத்தை அடைந்த அந்த மனிதனுக்கு மட்டுமே சூட்சும உலகின் தரிசனம் தரப்படுகிறது.
எல்லோரும் அருகிலிருந்தும் எவரையும் அவன் துணைக்கு அழைக்க முடிவதில்லை. அல்லது தான் காணும் காட்சியை தன்னுடன் இருப்பவர்களுக்குக் காட்டவோ, விளக்கிக்கூறவோ கூட அவனால் முடிவதில்லை.
56:83-85 மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக்
குழியை அடையும் போது - அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள்
பார்க்கிறீர்களில்லை.
75:26-30. அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்)
தொண்டைக்குழியை அடைந்து விட்டால், ''மந்திரிப்பவன் யார்?'' எனக் கேட்கப்படுகிறது. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். உம் இறைவன் பால்
அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.
தன்னந்தனியனாக, தன்னைப்படைத்த இரட்சகனின் மறைவான ஞானங்களின் உண்மையை சந்திக்க வேண்டியவனாக மனிதன் இருக்கிறான்.
மெய்யான இறைநம்பிக்கையும், அதையொட்டிய செயல்பாடுகளும் அந்த நேரத்தில் மனிதனை பாதுகாக்கும் பயன்மிகு ஆயுதங்களாக இருக்கும்.
ஏனைய கொள்கைகளும் சிந்தனையும் அந்நேரத்தில் உதவாதது மாத்திரமல்ல மனிதனுக்கு அவைகள் பாவச் சுமைகளாக மாறி விடும் அபாயங்களாக இருக்கின்றன.
அச்சுமைகளை கழற்றி விடவோ அல்லது பரிகாரம் தேடவோ முடியாத நேரமாகும். எனவே, மனித இனம் எச்சரிக்கப்படுகிறது!. நமக்கு இறுதி நேரம் வருவதற்கு முன் நமது நம்பிக்கைகளையும் செயல்களையும் சீர்திருத்திக் கொள்ள இறைவனின் இறுதிவேதமாம் திருக்குர்ஆனின் வழியில் இன்றே முனைவோம்.!
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக