இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 ஜூன், 2015

கல்லறைக்குப் பின்னும் தொடரும் பயணம்!

  
புலன்களுக்கு எட்டும் தகவல்களை (sensible data) சேகரித்துக் கொண்டு எட்டாதவற்றை (insensible) ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். நம்மை மீறிய மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் நாம் கருவறையில் இருந்து கல்லறை வரை வாழ்வின் பல கட்டங்களைக் கடந்து வருகிறோம் என்பதைத் தெளிவாக அறிகிறோம். கருவறைக்கு முந்தைய கட்டத்தைப் பற்றி சிறிதும் நாம் அறியோம். கருவறைக்குள் நாம் இருந்தபோது நமக்கு நடந்த நிகழ்வுகள் பற்றி எந்த ஞாபகமும் கிடையாது. நமது அவையவங்கள் அங்குதான் உருவாயின. நாம் வடிவமைக்கப்பட்டதும் அங்கேதான். ஆனால் இன்று கல்லறையிலும் கல்லறைக்குப் பின்னும் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது என்று இறைவேதங்களும் இறைத்தூதர்களும் சொல்லும்போது அவற்றை எப்படி அப்பட்டமாக மறுக்க முடியும்? அது பகுத்தறிவுக்கு இழுக்கில்லையா?
மேலும் இவற்றை மறுப்பதும் அலட்சியம் செய்வதும் நாளை நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறப்படும்போது இதுபற்றி ஆராயாமல் இருக்க முடியுமா?
 நம் வாழ்க்கைப் பயணத்தின் அடுத்த கட்டங்களைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உணரும் வண்ணம் அறிவுபூர்வமான வாதங்களை முன்வைக்கிறது திருக்குர்ஆன்.
படைத்தவனை மறுக்க முடியுமா?
= படைத்தவனை மறுப்பவர்களைப் பார்த்து அவன் கேட்கிறான்:
52:35,.36 .எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களாஅல்லது அவர்களே படைக்கக்கூடியவர்களாஅல்லது வானங்களையும்பூமியையும் அவர்களே படைத்தார்களாஅவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்
நாம் இவ்வுலகுக்கு வருவதும் போவதும் நம் கட்டுப் பாட்டில் இல்லை. இவற்றை இயக்குபவன் கேட்கிறான்:
= 2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்;மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.

(திருக்குர்ஆன் இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது. அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுளோ முஸ்லிம்களின் குலதெய்வமோ  அல்ல. வணங்குவதற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது இவ்வார்த்தையின் பொருள்.)
= 56:57-59    .நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களாஅதை நீங்கள் படைக்கிறீர்களாஅல்லது நாம் படைக்கின்றோமா?

வாழ்வும் மரணமும் அவன் கைவசமே!
= 57:2  .வானங்களுடையவும்பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையதுஅவனே உயிர்ப்பிக்கிறான்மரிக்கும்படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை
= 44:8  .அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்அவனே மரிக்கச் செய்கிறான்அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
= 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
இக்குறுகிய வாழ்வு ஒரு பரீட்சையே!
= 67:2  .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன்மிக மன்னிப்பவன்.
ஒவ்வொரு உயிரும் மரணத்தைத் தழுவும்!
= 21:35 .ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறதுபரீட்சைக்காக கெடுதியையும்நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்,நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

இவ்வுலகு அழியும் , மீணடும் உயிர்பெறும்!
= 39:68 ஸூர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்;பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து எதிர் நோக்கி நிற்பார்கள்.
நேரம் குறிக்கப்பட்ட நாள் அது!
அது என்று நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இறைவனிடம் அது நிச்சயிக்கப்பட்ட நாள்.
= 78:17    .நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள்நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். இன்னும்வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும். மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
இன்று நம் வினைகள் பதிவாகின்றன!
= 36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.  
நம் வினைகள் முழுமையாக விசாரிக்கப்படும்!
= 99:6-8 .அந்நாளில்மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டுபல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும்அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
= 36:65 .அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
நல்லோர் சொர்க்கத்தில் நுழைவர்!
= 4:57  (அவர்களில்) எவர்கள் இறைநம்பிக்கைகொண்டுநன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம்அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
தீயோர் நரகில் நுழைவர்!
= 78:21-26    நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
உண்மை இதுவே, மற்றவை ஊகங்களே!

நம்மைப் படைத்தவன் நம் எதிர்காலத்தைப் பற்றி என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உறுதியான உண்மை! மற்றவை அனைத்தும் மனித ஊகங்களும் கற்பனைக் கதைகளும் ஆகும்.

வெள்ளி, 12 ஜூன், 2015

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்.
இந்த குறளில் கூறப்படும் ஒழுக்கத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பது எளிதாகப் புரிந்துவிடும். இன்று தனி நபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒழுக்கம் என்பது இல்லாமல் போனதால் நாட்டில் தீமைகள் கட்டுக்கடங்காமல் பெருகுவதையும் அதனால் பெரும்பாலான மக்கள் விரக்தியின் விளிம்புக்கே சென்றிருப்பதையும் நாம் அறிவோம். இன்று நாம் அனைவரும் விடைதேடிக் கொண்டிருக்கும் கேள்வி இதுவே:
மனித வாழ்வில் அந்த ஒழுக்கத்தை எவ்வாறு உண்டாக்குவது?
மனிதனை நல்லொழுக்கம் உள்ளவனாக ஆக்கவேண்டுமானால் முதலில் அவன் தன் மனோஇச்சைகளைக்  கட்டுப்படுத்திக் கொண்டு வாழ முன்வர வேண்டும். அதற்கான உந்துதல் அவனுள் எழவேண்டும். அடுத்ததாக அவன் இவ்வுலகின் சொத்தக்காரனான இறைவன் எதை எவுகிறானோ அதை அவன் செய்ய வேண்டும். அதுவே புண்ணியம் என்பது. அவன் எதை விட்டும் தடுக்கிறானோ அவற்றில் இருந்து விலகி வாழ வேண்டும். அதுவே பாவம் என்பது.. தொடர்ந்து இந்த செயல்பாட்டில் நிலைத்திருக்க வேண்டும். இதற்கு துணைபோகும் வண்ணம் ஒரு வாழ்க்கைத் திட்டம் தேவை.
ஆம், இதைத்தான் வழங்குகிறது இஸ்லாம்!
இஸ்லாம் என்றால் என்ன?
. இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்
  அதாவது இறைவன் கற்பிக்கும் கட்டுப்பாடுகளை(discipline)ப் பேணி வாழ்வதால் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்! இவ்வாறு கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ்ந்ததற்குப் இறைவன் புறத்திலிருந்து மறுமையில் வழங்கப்படும் பரிசே நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம்!
இஸ்லாம் கீழ்கண்ட மூன்று நம்பிக்கைகளை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதன் மூலம் மனிதனை பாவங்களில் ஈடுபடுவதில் இருந்து தடுத்து கட்டுப்பாடு மிக்கவனாக ஆக்குகிறது. மேலும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுகிறது.
  1. ஒன்றே குலம்:
 மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அதாவது நிறம், இனம், நாடு, மொழி, செல்வம், கல்வி, அந்தஸ்து, பதவி போன்றவை மூலம் உண்டாகும் வேற்றுமைகளைத் தாண்டி சக மனிதன் தன் சகோதரனே என்பதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பூமியில் உரிமைகள் உள்ளன என்றும் அவற்றை அனைவரும் மதித்து வாழவேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
2.. ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல்  அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
படைத்தவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி – அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம். இச்செயல் இறைவனைச்  சிறுமைப்படுத்துவதுடன் மனித மனங்களில் இறைவனைப்பற்றி அலட்சியப் போக்கை உண்டாக்கி விடுகிறது. அதனால் மேற்கூறியவாறு நல்லொழுக்கத்தைப் பேணுவதற்கு மிகப்பெரும் தடையாகிறது. சமூகத்தில் பாவங்கள் பெருக காரணமாகிறது. மேலும் இவ்வாறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக கடவுளைக் கற்பனை செய்து வணங்க முற்படும்போது ஒரே மனித குலம் பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாய்வது, இடைத்தரகர்கள் இறைவனின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பது என்பனவும் நிகழ்கின்றன. பல குழப்பங்களுக்கும் தீமைகளுக்கும் காரணமாகும் இப்பாவத்தை மட்டும் இறைவன் மன்னிப்பதே இல்லை என்கிறது திருக்குர்ஆன்.
3.  இறைவனின் நீதிவிசாரணையும் மறுமை வாழ்வும்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும்.
 ஆக இந்த தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைக்கப்பட்டுள்ளது என்பதே இஸ்லாம் நினைவூட்டும் உண்மையாகும். இதை மறந்து வாழ்வதே மனித குலத்தின் அமைதியின்மைக்குக் காரணமாகும்.
நடைமுறை வழிகாட்டுதல்
மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலமும் வழங்கியுள்ளான் இறைவன். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுபவையாக அவை அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம்.
இறைவன் கூறும் இந்த வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று வாழ்பவர்களுக்கே அரபு மொழியில் முஸ்லிம்கள் (பொருள்: கீழ்படிபவர்கள்) என்று வழங்கப்படுகிறது. அவ்வாறு வாழ முற்படுபவர்களுக்கு ஐவேளைத் தொழுகை, ஜகாத் எனும் கட்டாய தானம், நோன்பு, ஹஜ்ஜ் போன்றவைக் கடமையாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் சமூக நல்லொழுக்கத்தை வலுப்படுத்துவதை நீங்கள் காணலாம்.
ஒருவர் இஸ்லாத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தானின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டும். அதற்கு சதா இறைவனின் தொடர்பும் நினைவும் வேண்டும். உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் இறை நினைவும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது.  இதைப் பள்ளிவாசல்களில் கூட்டாக வரிசைகளில் அணிவகுத்து நிறைவேற்றும்போது சகோதரத்துவமும் சமத்துவமும் இயற்கையாகவே பேணும் பண்பு வந்துவிடுகிறது. மக்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அங்கு ஏற்படுவதால் சமூக உறவு வலுப்படுவதோடு சமூகத்தின் குறைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கும் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகள் உருவாகின்றன. நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது, அது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ்ஜ் என்ற கடமை!

இவ்வாறு இஸ்லாம் கூறும் நம்பிக்கைகளோடு இணைந்த நடைமுறைக்கு  மக்களை – குறிப்பாக குழந்தைகளைப் - பழக்கப் படுத்தினால் அவர்கள் பாவங்களில் இருந்து விலகி இருப்பார்கள். யாரும் காணாதபோதும் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவர்களை பாவச் செயல்களில் இருந்து தடுக்கும். உதாரணமாக அவர்கள் இணையம் செல்பேசிகள் தொலைக்காட்சிகள் இவற்றை தகுந்த முன்னெச்சரிக்கையோடு கையாள்வார்கள். இறை பொருத்தத்திற்க்காகவும் மறுமையில் வாய்க்க இருக்கும் இன்பங்களுக்காகவும் வாழ்வில் தானதர்மங்கள், தியாகங்கள், எளியோருக்கும் நலிந்தோருக்கும் உதவுதல், தீமைகளுக்கு எதிராகப் போராடுதல் என்பனவற்றை சுயமாக முன்வந்து செய்வார்கள். நல்லொழுக்கம் வாய்ந்த சமூகத்தை உலகெங்கும் கட்டியெழுப்புவார்கள்.

வியாழன், 11 ஜூன், 2015

மனமாற்றமும் குணமாற்றமுமே இஸ்லாம்

Image result for planets images kids
பிறப்பால் வருவதா இஸ்லாம்?
இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன் வைக்கும் தத்துவம் ஆகும்.
   முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.
   இயற்கையில்  காணும் மரம, செடி, கொடி , சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்........ என இவை அனைத்தும் எவ்வாறு இறைவனின் கட்டளைகளுக்கு அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டு  வாழ்கின்றனவோ அவ்வாறு வாழ்தலே இஸ்லாம்! அவ்வாறு வாழ்பவரே முஸ்லிம்! ஆம், இவ்வுலகில் மனிதனைத் தவிர மற்ற அனைத்தும் முஸ்லிம்களாகவே இருக்கின்றன.
சரி, ஒரு மனிதன் எப்போது அல்லது எவ்வாறு முஸ்லிமாக முடியும்?
எப்போது மனிதன் படைத்த இறைவனை ஏற்றுக்கொண்டு அவனது கட்டளைகளைப் புரிந்து கொண்டு அதன்படி வாழத் துவங்குகிறானோ அப்போதுதான் அவன் முஸ்லிமாக ஆகிறான். அதாவது படைத்தவனோடு இறைவா உன்னை என் வணக்கத்துக்குரியவனாக ஏற்றுக் கொள்கிறேன். நீ அனுப்பிய தூதரை ஏற்றுக் கொள்கிறேன். இன்று முதல் உன் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கிறேன். என்று ஒரு உடன்படிக்கை செய்து அதன்படி நிலைத்து நிற்கும்போதுதான் ஒரு மனிதன் முஸ்லிமாக ஆகிறான். அதாவது இறைவன் தரும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று அதன்படி வாழத் துவங்க வேண்டும்.
அது என்ன வாழ்க்கைத் திட்டம் ?
அதற்கு இஸ்லாத்தின் தூண்கள் என்று கூறப்படும். 
  1. கொள்கைப் பிரகடனம்: வணக்கத்துக்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்ற வாசகத்தை மனதார ஏற்று வாயால் மொழிதல்.
  2. ஐவேளைத் தொழுகை: இந்த வாழ்க்கைத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டுமானால் நாம் படைத்தவனோடு தொடர்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் தீமை செய்யத்தூண்டும் மன சஞ்சலங்களும் ஷைத்தானின் ஊசலாட்டங்களும் நம்மை வழி தவறச் செய்யாது. அதற்காக விடியற்காலை, மதியம், மாலை. சூரியனின் மறைவுக்குப் பிறகு, உறங்கும் முன் என ஐவேளைகளில் இறைவன் தன தூதர் மூலமாக கற்றுத் தந்த தொழுகைகளை நிறைவேற்றுதல்.
  3. கட்டாய தருமம்: பொருள் மற்றும் செல்வம் என அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானவையே. இவை நம்மை பரிசோதிப்பதற்காகத் தரப்படுபவையே. நமக்கு தரப்படுபவற்றில் ஒரு குறிப்பிட்ட பங்கு ஏழைகளுக்கு உரியது. எனவே அவற்றை கட்டாயமாகக் கொடுத்து விட வேண்டும்.
  4. ரம்ஜான் மாத விரதம்: திருக்குர்ஆன் இறங்கிய ரம்ஜான் மாதத்தில் பகலில் உண்ணுதல், பருகுதல், உடலுறவு இவற்றிலிருந்து தவிர்த்திருத்தல்.
  5. ஹஜ்ஜ் எனும் புனித யாத்திரை: பொருள் வசதியும் உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறை மக்க நகரிலுள்ள கஅபா என்ற இறையில்லத்தை தரிசிக்கச் செல்லுதல்.


 மேற்கூறப்பட்ட கொள்கையும் வாழ்க்கைத்திட்டமும் யாருக்கேனும் பிடித்து இருந்து அதைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்பினால் யாருடைய தயவும் அங்கு தேவை இல்லை. அது அந்த மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலானது.
ஆத்மார்த்தமாக மேற்கூறப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை இதயத்தில் உறுதி செய்து வாயால் மொழிந்தால் அந்த நொடியிலிருந்து அவர் முஸ்லிமாகி விட்டார்.  எந்த ஒரு மத குருவின் முன்னிலையோ யாருடைய சாட்சியமோ அல்லது ஒரு வழிபாட்டுத்தலத்தில் பதிவு செய்யும் அவசியமோ அங்கு இல்லை! அவர் தனது  பெயரை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் கூட அங்கு இல்லை!
ஆம், இம்மார்க்கத்தை ஏற்க  மன மாற்றமும் குண மாற்றமும் தவிர வேறு எந்த மாற்றங்களும் முக்கியம் இல்லை. ஆனால் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். மீணடும் படைத்தவன் அல்லாதவற்றை கடவுள் என்று சொல்வதோ கற்பனை உருவங்களை வணங்குவதோ தொழுகையை விடுவதோ தீமைகள் பக்கம் செல்வதோ கூடாது! நீங்கள் இக்கொள்கைப் பிரகாரம் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ அதுவரை மட்டுமே நீங்கள் முஸ்லிமாக இருக்கிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! அதே நிலையில் நீங்கள் மரணத்தைத் தழுவுவீர்களானால் உங்களுக்கு சொர்க்கம் உறுதி! இறைவன் தன் திருமறையில் கூறுகிறான் :

 ஓ, இறைவிசுவாசிகளே! நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணித்து விடாதீர்கள்!
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html 
நாம் ஏன் பிறந்தோம்?