இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 பிப்ரவரி, 2014

இஸ்லாம் என்ற மனமாற்றம்!

அண்மையில் யுவன் ஷங்கர் ராஜா தனது நீண்ட ஆய்வுக்குப் பின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளானார். சில காலங்களுக்கு முன் பகுத்தறிவு பீரங்கி மறைந்த டாகடர் பெரியார்தாசன் தனக்கே உரிய  நீண்ட ஆய்வுகளுக்குப் பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபோதும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.  இவ்வாறு மக்கள் இஸ்லாம் என்ற மனமாற்றத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? அதற்கு அறியும் முன்......
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல்
என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது
இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம்
மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம்
முன்வைக்கும் தத்துவமாகும்.
அதாவது இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு
கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப்
பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது.
எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச்
செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம்
அல்லது அதர்மம் என்பது. யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு
அதன்படி வாழ்கிராரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில்
முஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.

. இக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி
வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ
இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும்
அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு
அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கொட்பாட்டைத்தான்
மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இன்று இறுதி
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில்
மறு அறிமுகம் செய்யப் பட்டது.

% யாரெல்லாம் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு - அதாவது
நன்மைகளைச் செய்து தீமைகளில் இருந்து விலகி வாழ்கின்றார்களோ
அவர்கள் மறுமை வாழ்வில் சொர்க்கத்தை அடைகிறார்கள். யார்
இறைவனையும் அவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டையும்
உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள்
நரகத்தை அடைகிறார்கள்.

% இக்கோட்பாட்டின் முக்கியமான அடிப்படை என்னவென்றால்
இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் மட்டுமே
வணக்கத்திற்கு உரியவன். அவனால்லாத எவரையும் – அது
மிகப்பெரிய மனிதர்கள் ஆனாலும் சரி, அரசர்கள் ஆனாலும் சரி,
ஆன்மீகத் தலைவர்கள் அனாலும் சரி – அவர்களைக் கடவுள் என்று
சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. இறந்துபோன
மனிதர்களின் சமாதிகளையோ அல்லது உருவச்சிலைகளையோ
கர்களையோ மரங்களையோ மனிதன் வணங்கக் கூடாது. இறைவனை
நேரடியாக எந்த இடைத் தரகர்களும் இன்றி நேரடியாக
வணங்கவேண்டும்.

% இக்கோட்பாட்டின் இன்னொரு அடிப்படை மனிதர்கள் அனைவரும்
ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப்
பெருகியாவர்களே. மனிதர்கள் அனைவரும் - அவர்கள் எந்த
மதத்தவர் ஆனாலும் எந்த நாட்டைச்சேர்ந்தவர்கள் ஆனாலும், எந்த
மொழியைப் பேசினாலும், எந்த நிறத்தவர் ஆனாலும் - ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே. எனவே அனைவரும்
சமமே! அவர்களுக்கிடையே நாடு, இனம், மொழி, குலம், ஜாதி
போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கக்
கூடாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் உயர முடியும் என்கிறது
இஸ்லாம். இக்கொட்பாட்டின்படி இதனை ஏற்றுக்கொண்டவர்கள்
இவ்வுலகில் இறைநம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல்
நன்மையை செய்யவும் ஏவவும் வேண்டும் தீமைகளிலிருந்து
விலகியிருக்கவும் வேண்டும், தீமைகளைக் கண்டால் எவ்வாறு
இயலுமோ அவ்வாறெல்லாம் தடுக்கவும் வேண்டும்.

இப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏன் இஸ்லாம் என்ற
இக்கொள்கை எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்று!

% தர்மம் பரவும்போது அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள்
வெகுண்டெழுகிறார்கள்.

% இறைவனை நேரடியாக அணுக முடியும் என்று மக்கள்
உணரும்போது இடைத்தரகர்களை அது அமைதி இழக்கச் செய்கிறது!
மூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக்
கொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு
இக்கொள்கை பரவுவது பிடிக்காது!

%  நிறத்தின் இனத்தின் மொழியின் ஜாதியின் மேன்மைகளைக் கூறி
மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து
வாழ்வோருக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்க வாய்ப்பில்லை.

% மனிதனை இக்கொள்கை சுயமரியாதை உணர்வோடு வாழத்
தூண்டுவதால் அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க
சக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள்
நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை
போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.

இவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு
இக்கொள்கை வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. எனவேதான்
அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக்
கொண்டு செயல்படுகிறார்கள்.

ஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக
மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும்
தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)
அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால்
இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை
பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)

 ஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள
வேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ
அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக தர்மத்தை நிலைநாட்டி
பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால்
எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின்
காவலர்களாக மாறுவார்கள். அதைத்தான் இன்று அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் இம்மார்க்கத்தின் வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

சனி, 22 பிப்ரவரி, 2014

காதலை வெல்வோம்!


மரணம் என்ற உண்மை நிகழ்வு நம் அனைவரையும் காத்திருக்கும் ஒன்றாகும். இன்று நாம் வாழும் வாழ்க்கையும் தற்காலிகமானது
இந்த உலகும் தற்காலிகமானது இது ஒருநாள் அழியும் என்பதும் இதில் ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு விதிக்கப்பட்ட ஒரு குறுகிய தவணையில் இங்கு வந்து போகிறான் என்பதும் அனைவரும் புரிந்துகொண்டே இருக்கிறோம்.
 இவ்வுலகை நமக்கு ஒரு பரீட்சைக்களமாகப் படைத்துள்ள இறைவன் இறுதித் தீர்ப்புநாள் அன்று தன் ஏவல் - விலக்கல்களை பேணி நடந்தோருக்கு  வெகுமதியாக சொர்க்க வாழ்வையும் பேணாமல் தான்தோன்றிகளாக நடந்தோருக்கு தண்டனையாக நரகத்தையும் வழங்கவுள்ளான். திருமறைக் குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

ஆக இந்த பரீட்சையில் வெல்ல வேண்டுமானால் நாம் இறைவன் நமக்கு வைக்கும் சோதனைகளில் தளராது நின்று எதிர்கொள்ளவேண்டும். அவன் எவற்றை நமக்கு செய் என்று சொல்கிறானோ அவற்றை செய்யவேண்டும். எவற்றை செய்யாதே என்று விலக்குகிறானோ அவற்றில் இருந்து விலகியும் இருக்கவேண்டும். நமது மனோ இச்சைகளுக்கு எதிராக இருந்தாலும் அவற்றை நாம் பேணியே ஆகவேண்டும்.

இவ்வுலக வாழ்வில் ஆணுக்கு பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவதும் காதல் ஏற்படுவதும் காம உணர்வுகள் பொங்குவதும் எல்லாம் இந்த தற்காலிக வாழ்வு என்னும் பரீட்சையின் பாகங்களே. உதாரணமாக அழகிய கன்னிப்பெண் ஒருத்தி தன் கடைக்கண் பார்வையால் காதலுக்கு அழைப்பு விடுத்தாலோ அல்லது அரைகுறை ஆடையில் பெண்ணொருத்தி உங்களை காமத்துக்கு அழைத்தாலோ அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான் உங்களுக்கு அங்கு வைக்கப்படும் பரீட்சை. வாழ்வு முழுக்க இவற்றை நீங்கள் சந்திக்க நேரிடும். சூழ்நிலைக்குத் துணை போகும் விதத்தில் உங்கள் இளமை, அழகு, தனிமை, நட்பு போன்றவையும் தூண்டலாம்.

 ஒரு உண்மையான இறைவிசுவாசி அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இவ்வுலகில் தனது நிலை உணர்ந்து ஷைத்தானின் இந்த சூழ்ச்சி வலைகளில் இருந்து தப்பித்துக் கொள்வான். இறைப் பொருத்தத்திற்காக தன் உணர்வுகளையும் உடல் இச்சைகளையும் கட்டுப்படுத்திக் கொள்வான். இறைவன் கூறுகிறான்:
3:14. பெண்கள், ஆண் மக்கள், பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள், அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. இறைவனிடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
3:15. (நபியே!) நீர் கூறும்; ''அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?  பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் இறைவனின் திருப்பொருத்தமும் உண்டு. இறைவன் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.

ஆனால் அதேவேளையில் இந்த இயற்கையான உணர்வுகளைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்ள இறைவன் கூறவில்லை. பாலியல் உணர்வுகளை முறைப்படி வடிகாலிட திருமணம் என்ற ஏற்பாட்டை புனிதமாக்கியுள்ளது இஸ்லாம். பொறுப்புணர்வோடு இல்லறத்தை அனுபவிப்பதை வழிபாடு என்று சொல்லி  வழிகாட்டுகிறது இஸ்லாம். காதலையும் காமத்தையும் திருமண உறவு மூலம் அனுபவித்து அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளை பொறுப்புணர்வோடு வளர்த்து வலுவான சமூக அமைப்பை கட்டியெழுப்ப வழிவகை செய்கிறது இறைவனின் மார்க்கம்.

ஆனால் அதேவேளையில் இறைவன் விதித்த வரம்புகளை மீறி காதலுக்கும் காமத்துக்கும் உடல் இச்சைக்கும் தங்களைப் பறிகொடுப்பவர்கள் சமூகத்தில் பல சீர்கேடுகள் உண்டாக காரணமாக அமைகிறார்கள். திருமண உறவுக்கு அப்பாற்பட்டு உண்டாகும் காதல் முற்றி காமத்தில் முடியும்போது அதில் ஈடுபட்டோரின் குடும்பங்களில் உண்டாகும் குழப்பங்களுக்கும் கலகங்களுக்கும் சமூக சீர்கேடுகளுக்கும் அதன்மூலம் உண்டாகும் விளைவுகளுக்கும் இவர்கள் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். உதாரணமாக அதில் உண்டாகும் சிசுக்கள் கொலை செய்யப்பட்டாலும் அனாதைகளாக சமூகத்தில் வாழ்ந்தாலும் இவர்களின் பாவம் இவர்களை இறுதி நாள்வரை விடுவதில்லை. அப்பாவம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரியே!

99:7,8 (இறுதித்தீர்ப்பு நாளன்று) எவர் அணுவளவு நன்மை செய்தாலும் அவர் அதனை கண்டுகொள்வார், அணுஅளவு தீமை செய்தாலும் அதனைக் கண்டுகொள்வார்.
எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் காதலையும் காமத்தையும் கட்டுப்படுத்தி கவனமாக  செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.

78:21  நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
=============== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

வியாழன், 20 பிப்ரவரி, 2014

காதலுக்கும் காமத்துக்கும் வரம்புண்டா?


பசி, ருசி போன்ற உணர்வுகளை மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்கு உணவையும் பானங்களையும் அதை ஜீரணிப்பதற்கு உடல் உறுப்புக்களையும் படைத்துள்ளான். அதே போலவே எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காதல், காமம் போன்ற உணர்வுகளை மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்குரிய அவையவங்களையும் மனித உடலில் அமைத்துள்ளான். எனவே இந்த உணர்வுகளை மனிதன் தான் விரும்பியவாறு தணித்துக்கொள்வதில் தவறேது?
. இந்த கேள்வியில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளது? இதை நாம் ஆராய்ந்தே ஆக வேண்டும். காரணம் நாம் ஒரு சமூகமாக வாழ இது பற்றிய தெளிவு மிகமிக முக்கியம். இது தெளிவாகாத வரை தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் குழப்பமும் அமைதியின்மையும்தான் மிஞ்சும். அதைத்தான் இன்று நாம் கண்டுகொண்டு இருக்கிறோம்.
பசி மற்றும் தாகம் இவற்றை தணிப்பது போன்றதல்ல பாலியல் உணர்வுகளை தணித்துக்கொள்வது என்பதை நாம் உணர வேண்டும். பசி தாகம் இவற்றை தணிக்கும்போது உண்டாகும் விளைவுகள் அந்த மனிதனை மட்டும் பாதிக்கும். ஆனால் பாலியல் உணர்வுகளைத் தணிக்கும் போது உண்டாகும் விளைவுகள் அப்படிப்பட்டவை அல்ல. அவை முதலில் இன்னொரு நபரை மட்டுமல்ல, அவ்விருவர் சார்ந்த குடும்பத்தையும் சூழவுள்ள சமூகத்தையும் கண்டிப்பாக பாதிக்கும் என்பதை நாம் அறிவோம். அது சம்பந்தப்பட்ட இருவரின் இசைவோடு நடந்தேறியாலும் சரியே!
தனி மனிதனுக்கு நிச்சயமாக ஒரு சில செயல்பாடுகளில் – அதாவது பிறரை பாதிக்காதவற்றில் - தனி சுதந்திரம் இருப்பது உண்மையே. ஆனால் மனிதனின் பெரும்பாலான செயல்பாடுகள் மற்ற மனிதர்களையும் சமூகத்தையும் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த பாலியல் தொடர்புள்ள செயல்பாடுகளும்!
உதாரணமாக கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம் வழங்கப் பட்டால் குடும்ப அமைப்பு என்பது சின்னாபின்னமாக சீர்குலையும். கணவன், மனைவி, தாய், தந்தை, பிள்ளை உறவுகள் அர்த்தமற்றவையாகிப் போகும். பரஸ்பர நம்பிக்கை, பொறுப்புணர்வு, மரியாதை போன்றவை மறைந்து அங்கு நம்பிக்கை மோசடி, பொறுப்பின்மை, காட்டுமிராண்டித்தனம் போன்றவை உடலெடுத்து மனிதன் வாழவே வெறுத்துவிடும் நிலை ஏற்படும். அங்கு பெண்கள் அநியாயமாக கற்பத்தை சுமந்து கைவிடப் படுவார்கள். சிசுக்கொலைகள், அனாதைகள், தந்தைகள் இல்லாப் பிள்ளைகள், பொறுப்புணர்வு இல்லா பெற்றோர்கள் போன்றோர் அதிகரிக்க அதிகரிக்க சுயநலமும் கொலையும் கொள்ளையும் மலிந்து அறவே ஒழுக்கமில்லாத சமூக சூழல் அமையும்.
எனவே நாம் வாழும் சமூகத்தில் அமைதி வேண்டும் என்று விரும்புவோமேயானால் அங்கு பாலியல் தொடர்பான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவு. நமது குடும்பங்களில் அல்லது சமூகத்தில் தீய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தெளிவான விதிமுறைகளும் தேவைப்படுகின்றன, அவை முறையாக பின்பற்றப்படவும் வேண்டும்.
சரி, இந்த விதிமுறைகளை எங்கிருந்து பெறுவது? இவற்றை எவ்வாறு நிர்ணயிப்பது? யார் நிர்ணயிப்பது?
ஆண் பெண்  உடற்கூறுகளையும் அவற்றின் இயற்கையையும் அவர்களின் பருவ மாற்றங்களையும் அவற்றுக்கேற்ற தேவைகளையும் உளவியலையும் அவர்களது வாழ்வின் நோக்கத்தையும் இருபாலார்க்கும் சமூகத்தில் அவர்களது பங்கு, கடமைகள், பொறுப்புக்கள்,  போன்றவற்றை முழுமையாக அறிந்த ஒருவரால்தான் இவ்விதிகளை நிர்ணயிக்க முடியும். அப்போதுதான் அவை குறைகள் இல்லாததாக இருக்கும். இவற்றைப் பற்றி அரையும்குறையுமாக அறிந்தவர்களும் அறவே அறியாதவர்களும் சட்டங்கள் இயற்றினால் அவற்றின் விளைவுகள் கண்டிப்பாக விபரீதமாகவே இருக்கும்.
 சரி, இப்பொறுப்பை தனி நபரிடமோ ஒரு குடும்பத்திடமோ அல்லது இனம், மொழி, நிறம், தொழில், மற்றும் இன்னபிற அடிப்படையிலான சங்கங்களிடமோ குழுக்களிடமோ கட்சிகளிடமோ அல்லது ஒரு ஊர் நிர்வாகத்திடமோ அல்லது நாட்டை ஆள்பவர்களிடமோ விட்டால் என்ன ஆகும்? அறியாமையும் அதிகாரமும் ஒருசேரப் பெற்றவர்கள் சட்டங்கள் இயற்றினால் அதன் விளைவுகள் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! அவற்றில் சிலதைத் தான் இன்று நாம் இங்கு அனுபவித்து வருகிறோம்.
ஆக, இந்த சட்டங்களை இயற்றும் தகுதி இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனான இறைவனுக்கே உண்டு என்பதை அறியலாம். இறைவன் மட்டுமே அவனது படைப்பினங்களையும் அவர்களின் தேவைகளையும் பரிபூரணமாகவும் மிகமிக நுணுக்கமாகவும் அறிந்தவன். முக்காலத்தையும் முழுமையாக உணர்ந்தவன். யாருக்கு எவ்வளவு உரிமைகளைக் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழு ஞானம் அவனுக்கு மட்டுமே உள்ளது, அந்த சர்வஞானமும் சர்வ வல்லமையும் கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆன இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்களே மிகமிகப் பக்குவமானவை. அறவே குறைகள் அற்றவை.
ஆக, ஆண் பெண் உறவுகள் விடயத்தில் மட்டுமல்ல வாழ்வின் எல்லா விடயங்களிலும் அவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.  அவற்றை பின்பற்றி நடைமுறைக்கு கொண்டுவந்தால் மட்டுமே இவ்வுலக வாழ்வு அமைதி மிக்கதாக அமையும். அந்த வாழ்க்கைத் திட்டமே அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது. அவ்வாறு நம் இறைவனின் பரிந்துரைக்கேற்ப வாழ்வோருக்கு அதற்கு பரிசாக மறுமையில் சொர்க்கமும் வழங்கப்படுகிறது.

சரி, இவற்றை பின்பற்றாவிட்டால்......?
இவ்வுலக வாழ்வை மேற்கூறப்பட்ட விபரீதங்களுக்கு மத்தியில் அல்லல்பட்டு கழிக்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல. அந்த இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை புறக்கணித்து வாழ்ந்ததன் காரணமாக மறுமை வாழ்வில் தண்டனையையும் அனுபவிக்க நேரும்.
5:48.மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்;  அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

(அல்லாஹ் என்றால்  வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

காதல் புனிதமானதா?

காதல் என்பது புனிதமானதுதான், அது முறைப்படி திருமணம் செய்து கொண்ட கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும்வரை சரியே! ஆனால் அந்த வரம்புக்கு அப்பாற்பட்டு யாருக்கு இடையில் ஆனாலும் அது கள்ளக் காதலே! ..... அது தண்டனைக்குரிய பாவமே! – இது வெறும் வெற்றுப் பேச்சு அல்ல. இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் தனது வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் விடுக்கும் எச்சரிக்கை இது!
காதல் என்றவுடன் இளகும் மனது பெரும்பாலோருக்கும் உண்டு. அதனால்தான் சினிமா நாடகங்கள் ஊடகங்கள் போன்றவை காதலோடு காமத்தையும் கலந்து காட்டி மக்களின் நேரத்தையும் செல்வத்தையும் கறப்பதோடு பெரும் கலாச்சார சீரழிவையும் சமூகத்தில் பரப்புகிறார்கள். சமூகத்தில் குடும்ப உறவு முறிவுகள், அனாதைகள் மற்றும் தந்தைகள் இல்லாத குழந்தைகள் உருவாக வழிவகுக்கிறார்கள்.
இப்போக்கு சரியா அல்லது தவறா என்பதை நாமே முடிவு செய்ய  கீழ்கண்ட கேள்விகளை நமக்கு நாமே கேட்டுப் பார்ப்போமே!
=  நம் தங்கையையோ அக்காவையோ ஒருவன் காதல் என்ற பெயரில் விபச்சாரம் செய்தால் ........ நாம் அனுமதிப்போமா?
= நம் மகள் அல்லது நம் உறவுக்காகார பெண்களிடம் ஒருவன் காதல் என்ற பெயரில் விபச்சாரம் செய்தால் ........ நாம் அனுமதிப்போமா?
= காதல் என்ற பெயரில் நம் குடும்பப் பெண்களை..... பார்க்,பீச், சினிமா,ஹோட்டல் இன்னும் இதுபோன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றால் ....... அதை நாம் அனுமதிப்போமா?
= காதல் என்ற பெயரில்- நம் குடும்ப பெண்களிடம் ஒருவன் பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்தால் ..... அதை நாம் அனுமதிப்போமா?
= காதல் என்ற பெயரில்- நம் குடும்பப் பெண்களிடம் ஒருவன் கொஞ்சி குலாவினால்....  அதை நாம் அனுமதிப்போமா..?
= நமது தாயாரிடம் அல்லது தந்தையிடம் யாரேனும் இவ்வாறு நடந்து கொண்டால்..... சிந்திக்கவே அருவருப்பாக இருக்கிறதல்லவா?

இப்போது காதல் என்ற இவ்விபரீதத்தில் ஈடுபடுவோரிடமும் அதை ஊக்குவிப்போரிடமும் நாம் சொல்ல விரும்புவது இதுதான்.....  
நீங்கள் காதலிக்கும் பெண்...
ஒருவனின் சகோதரியாய்....
ஒருவனின் மகளாய்...
ஒருவனின் தாயாக அல்லது
ஒருவனின் உறவுக்கார பெண்ணாய் இருப்பாள்...

நீங்கள் உங்க குடும்பத்துக்கு மேற்கண்ட விஷயத்தை விரும்பாதது போலதானே ... அவர்களும் தாங்கள் குடும்ப பெண்களுக்கு "காதல் என்ற பெயரில் நடக்கும் அசிங்கத்தை விரும்ப மாட்டார்கள்...????

நபி ஸல் அவர்களிடம் ஒருவர் "தான் விபச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டு வரும்போது.... மேற்கண்ட கேள்விகளைத்தான் நபி ஸல் அவர்கள் கேட்டு, அவருக்கு புரிய வைத்தார்கள்... என்று ஹதீஸ் சொல்கிறது...!
சரி, நீங்கள் இதைப் பற்றி கவலைப் பட்டாலும் சரி, படாவிட்டாலும் சரி, நமது கண்களின் முன்னால் இந்தத் தீமை கட்டுத்தீ போல பரவுகிறது என்ற காரணத்தால் இறைவிசுவாசிகளாகிய நாம் இதற்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இறைவனின் இறுதித் தூதர் நமக்கு இடும் கட்டளை இதுவே:
உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)
இந்த வளரும் தீமையைக் கையால் தடுக்க இயலாதபோது குறைந்தது நாவினாலாவது தடுக்க நாம் முயற்சிக்க வேண்டும். அந்த அடிப்படையில் இத்தீமைகளை விதைப்போரும் அதற்குத் துணைபோவோரும் தங்களைத் திருத்திக் கொள்ளாமலே மரணிப்பார்களானால் இவர்கள் மறுமையில் சந்திக்க இருக்கும் தண்டனைகள் பற்றி எச்சரிப்பது நமது கடமை. எந்த தண்டனைகளை பயந்து இன்று நாம் இந்தத் தீமைகளில் இருந்து விலகி நிற்கிறோமோ அவற்றைப் பற்றிய செய்திகளை மனிதாபிமான உணர்வோடு இன்றே இவர்களோடு பகிர்ந்து கொள்வோம்:
ஆம், சம்பந்தப்பட்டவர்களே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்!
இன்று நாம் வாழும் உலகின் அதிபதி நம்மைப் படைத்த இறைவன் ஆவான். அவனது அருட்கொடைகளை அனுபவித்துவரும் நாம் அவனுக்குக் கீழ்படிந்தே வாழவேண்டும். அதாவது அவன் எவற்றைச் செய் என்று சொல்கிறானோ அவற்றை செய்தாக வேண்டும் அவையே புண்ணியங்கள் என்று அறியப்படுகின்றன. எவற்றை செய்யாதே என்று தடுத்துள்ளானோ அவற்றைக் கண்டிப்பாக செய்யக்கூடாது. அவையே பாவங்கள் எனப்படுகின்றன. இந்தத் தற்காலிகமான உலகை ஒருநாள் இறைவன் முழுமையாக அழிப்பான். அதன்பிறகு மீண்டும் ஒருவர் விடாமல் அனைவரையும் எழுப்பி விசாரணை செய்து அதன்பின் பாவிகளுக்கு தண்டனையாக நரகத்தையும் புண்ணியவான்களுக்குப் பரிசாக சொர்க்கத்தையும் வழங்கவுள்ளான். அதுதான் நம்முடைய நிரந்தர இருப்பிடம். (மேலதிக விளக்கங்களுக்கு அவனது இறுதிவேதமான திருக்குர்ஆனைப் படிக்கவும்).

சரி, இப்போது நீங்கள் செய்தும் பரப்பியும் வருகின்ற பலதும் குற்றங்களாக இருந்தாலும் விபச்சாரம் என்ற குற்றத்தைப் பற்றி மட்டும் இங்கு உதாரணமாக எடுத்துகொண்டு எச்ச்சரிப்போம்.
இவ்வுலகுக்கு அதிபதியாகிய இறைவன் விதித்த சட்டப்படி, ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட.ஒன்றாகும். தாம்பத்தியம் அல்லது உடலுறவு  என்பதை  திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் அதுவும் எவர் கண்ணிலும் படாமல் ரகசியமாக செய்வதற்கு மட்டுமே அவன் அனுமதித்துள்ளான். அதை....
=  ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் செய்வது தண்டனைக்குரிய பாவம்.
= அதைப் பிறர் பார்க்கச் செய்வது அதைவிடப் பாவம்.
= அதைப் பதிவு செய்வது அதைவிடப் பாவம்.
= அந்தப் பதிவை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதும்
= அதைக்கொண்டு சம்பாதிப்பதும் வயிறு வளர்ப்பதும்
= அவற்றை வருணிப்பதும் விமர்சிப்பதும்
= அவற்றைக் காண்பதும் ரசிப்பதும் என அனைத்துமே பாவமாகும்.

இவற்றை இங்கு செய்துவிட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்து எறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நீங்கள் நடந்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் மூளையிலும் அதன் பதிவைக் காணலாம்! இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று உங்களுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும்.
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
99:7,8.. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.
அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.
78:21-30. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
18:29  .....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். 
எந்த முகத்தைக் கொண்டு சுவரொட்டிகளில் சிரித்துக்கொண்டு நின்றீர்களோ அதன் கதி நாளை இதுதான்! இது நூறு சதவீத உண்மை! இது வேண்டுமா? சிந்தியுங்கள்! இன்றே திருந்தி உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள்! பரிகாரம் தேடுங்கள்!
நம்மைப் படைத்து பரிபாலிக்கும் இறைவன் பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்துள்ளான். திருந்தி மீள்வோரை நேசிக்கிறான்!
39:53. தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! இறைவனின்  அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
----------------------------------------------------------
இறைசட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் அமையுமானால் சமூகத்தை சீரழிவில் இருந்து பாதுகாக்க அங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இப்பாவத்திற்கு இதுதான் இறைவன் பரிந்துரைக்கும் தண்டனை:


விபச்சாரியும், விபச்சாரனும்  இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள், மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், இறைவனின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம், இன்னும் அவ்விருவரின் வேதனையையும் இறைவிசுவாசிகளில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்’ (குர்ஆன் 24:2) 

புதன், 12 பிப்ரவரி, 2014

நபிகளார் மக்களை எதன்பால் அழைத்தார்கள்?

தனது நாற்பதாவது வயதில் சத்தியப் பிரச்சாரத்தை தான் பிறந்த மக்கா நகரில் துவங்கினார்கள் முஹம்மது நபி அவர்கள். (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) 

அன்று அவரைச் சுற்றி வாழ்ந்த மக்கள் பலவிதமான  மூடநம்பிக்கைகளிலும் மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள். மக்காவில் இன்று காணப்படும் சதுர வடிவான கஅபா என்ற இறையில்லம் சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் இப்ராஹீம் (ஆப்ரஹாம்) என்ற இறைத் தூதரால் ஏக இறைவனை வழிபடுவதற்காக கட்டப்பட்ட ஒன்றாகும். ஆனால் காலப்போக்கில் அதற்குள் 360 சிலைகள் நிறுவப்பட்டு  தினம் ஒரு சிலைக்கு வழிபாடு என்றவாறு நடத்திக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் படைத்தவர்களும் பலம் வாய்ந்தவர்களும் இடைத்தரகர்களும் சேர்ந்து கடவுளின் பெயரால் மக்களை அடிமைப் படுத்தியும் கொடுமைப் படுத்தியும் வந்தனர். குலவேற்றுமையும் இனவேற்றுமையும் ஆழமாய் வேரூன்றியிருந்த காரணத்தால் அவர்களுக்குள்ளே சண்டைகளுக்கும் கலகங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.   பெண்ணடிமைத்தனமும் மூடநம்பிக்கைகளும் காரணமாக அவர்கள் பெண்குழந்தைகள் பிறந்தாலே இழிவு என்று கருதி அவர்களை உயிரோடு புதைக்கவும் செய்து வந்தார்கள். இன்னும் இவைபோன்ற பல அனாச்சாரங்களும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன.

 தன்னைச் சுற்றி இவையெல்லாம் நடந்துகொண்டிருக்க இவற்றுக்கான தீர்வுகளுக்காக அவரது மனம் ஏங்கிக கொண்டிருந்த வேளையில்தான் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகளாருக்கு இறைவன் புறத்திலிருந்து வேதவசனங்களும் இறைகட்டளைகளும் வழிகாட்டுதல்களும் வரத் துவங்கின.  இறைவன் வகுத்து வழங்கும் வாழ்க்கை நெறியின் பால் மக்களை அழைக்குமாறு இறைவனால் பணிக்கப் பட்டார்கள். அந்த வாழ்க்கை நெறியே  இஸ்லாம் (இறைவனுக்குக் கீழ்படிதல்) என்று அறியப்படுகிறது.

நபிகளார் எதன்பால் மக்களை அழைத்தார்கள்?

 நபிகள் நாயகம் (ஸல்) மக்களை ஒரு புதிய மதத்திற்கோ அல்லது ஒரு புதிய கடவுளை வழிபடச் சொல்லியோ அழைக்கவில்லை. தான் மக்களுக்குச் செய்த சமூக சேவைகளைக் காட்டி தன்னை ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியோ அழைக்கவில்லை. மாறாக அனைத்து மக்களுக்கும் பயன்படக் கூடிய ஒரு சீர்திருத்தத் திட்டத்தின்பால்தான் அழைத்தார்.

= ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சகோதரர்களே. குலமோ, இனமோ மொழியோ நிறமோ இடமோ உங்களைப் பிரித்துவிடக் கூடாது. உங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும்  சுரண்டிக் கொண்டும் மோசடி செய்தும் அமைதி இழந்து தவித்துக் கொண்டிருக்கும் என் சமுதாயமே! வாருங்கள் இதற்கொரு முடிவு கட்டுவோம்! ஒரு இனிய புதிய விடியலை நோக்கிப் பயணிப்போம்! இந்த குறிக்கோளை அடைய நீங்கள் மறந்துபோன சில உண்மைகளை நினைவூட்டி அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி அழைக்கவே நான் இறைவனால் அனுப்பப் பட்டுள்ளேன்.
மறுக்கமுடியாத உண்மைகள் 
= நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய முதல் உண்மை எதுவெனில் இவ்வுலகத்தை படைத்த இறைவன் ஒரே ஒருவனே என்பதும் அவன் மட்டுமே நம் வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதுதான். அவன்தான் நமக்கு தன் புறத்திலிருந்து எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கி நம்மை பரிபாலித்துக் கொண்டிருக்கிறான். அவன் மட்டுமே நம் நன்றிக்கும் வணக்கத்திற்கும் தகுதியானவனும் நம் பிரார்த்தனைகளை ஏற்பவனும் ஆவான். அவனைத் தவிர மற்ற அனைத்துமே அவனது படைப்பினங்களே. அவற்றை வணங்குவதும்  உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுள் என்று அழைப்பதும் எல்லாம் இறைவனை சிறுமைப் படுத்தும் செயலும் வீணும் மோசடியும் ஆகும். எனவே பொய்யான தெய்வங்களை விட்டுவிட்டு உங்களைப் படைத்தவன்பால் வாருங்கள்.
= அடுத்த உண்மை – இவ்வுலகம் தற்காலிகமான ஒரு பரீட்சைக்கூடம் போன்றது. இதில் நீங்கள் இறைவனின் வழிகாட்டுதல்படி அவன் கூறும் நன்மைகளைச் செய்தும் அவன் கூறும் தீமைகளில் இருந்து விலகியும் வாழ்ந்தீர்களானால் உங்கள் தனி நபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதியைக் காண முடியும். அவ்வாறு நீங்கள் படைத்தவனுக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்தீர்களானால் அதற்குப் பரிசாக அவன் மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்கத்தில் உங்களைப் புகுத்துவான். மாறாக அவனுக்குக் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தீர்களானால் அதற்கு தண்டனையாக மறுமையில் நரகத்தையும் வைத்துள்ளான்.
 = இந்த மறுக்கமுடியாத சத்தியங்களை ஏற்றுக் கொண்டு இறைவனிடம் திரும்புங்கள். அவன் நமக்காக வகுத்துத் தந்துள்ள அழகிய வாழ்க்கைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். பூமியை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம் வாருங்கள்.
எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இப்படிப்பட்ட ஒரு சீர்திருத்தத் திட்டத்தின் பால்தான் நபிகள் நாயகம் (ஸல்) மக்களை அழைத்தார்கள்.
ஆனால் என்ன நடந்தது?
புரிந்து கொண்டவர்கள் இந்த உயர்ந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். முழுமூச்சாக அண்ணலாரோடு இணைந்து பாடுபட்டார்கள். கொண்ட கொள்கைக்காக தங்களின் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் துணிந்தார்கள். படைத்த இறைவனுக்காக அனைத்தையும் இழந்தாலும் நஷ்டம் ஏதும் இல்லையல்லவா? மறுமையில் சொர்க்கமல்லவா காத்திருக்கிறது!
ஆனால் இக்கொள்கையின் அருமையைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் பெரும்பான்மையாக இருந்தார்கள். இந்த இயக்கம் வெற்றி பெற்றால் அனைவரும் சுபிட்சமாக வாழலாம் என்பதைப் புரிந்து கொள்வதிலிருந்து சிலரை அவர்களுடைய தற்பெருமையும் சிலரை சுயநலமும் சிலரை ஆதிக்கபலமும் தடுத்தது. பெரும்பாலோரை முன்னோர்கள் எது செய்தாலும் சரியே என்ற குருட்டு நம்பிக்கை தடுத்தது! 
தொடர்ந்த சித்திரவதைகள்
இயக்கம் தொடங்கி பதிமூன்று வருடங்கள் தொடர் சித்திரவதைகளுக்கு மத்தியில் கழிந்தது. ஒரு கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள கணவாய்க்கு நபிகள் நாயகத்தையும், அவர்களது சகாக்களையும் விரட்டியடித்து சமூகப் புறக்கணிப்பும் செய்தனர். பல நாட்கள் இலைகளையும், காய்ந்த சருகுகளையும் மட்டுமே உணவாகக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். ' நபிகள் நாயகத்துடன் யாரும் பேசக் கூடாது; அவருடன் யாரும் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது' என்றெல்லாம் ஊர்க் கட்டுப்பாடு போட்டார்கள்.

ஒன்று இரண்டல்ல, பதிமூன்று வருட காலம் தொடர்ச்சியாக சித்திரவதைகளை அனுபவிக்க எவ்வாறு இவர்களால் முடிந்தது? கொடுமையாளர்களுக்கு எதிராக இவர்கள் ஏன் ஒன்றுமே செய்யவில்லை? எண்ணிக்கைப் பெருகும் போதும் எதிர்த்து நிற்க எது தடை செய்தது?......... இதைத்தான் நாம் முக்கியமாக கவனிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
பொறுமை என்ற ஆயுதம்
ஆம், தன்னை மக்கள் தாக்கியபோதும் நபிகளார் பொறுமையுடன் தாங்கிக் கொண்டார்கள். தன் சகாக்கள் தாக்கப்பட்ட போதும் பொறுமையை மேற்கொள்ளுமாறு பணித்தார்கள். இறைவனின் கட்டளைகளை அவர்களுக்கு நினைவூட்டினார்கள்.
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும் உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (திருக்குர்ஆன் 41 : 34)
அவர்கள் சகித்துக் கொண்டதாலும், நன்மையின் மூலம் தீமையைத் தடுத்ததாலும், அவர்களுக்கு நாம் வழங்கியதை (நல்வழியில்) செலவிட்டதாலும் அவர்களுக்கு இரண்டு தடவை அவர்களின் கூலிகள் வழங்கப்படும்.”  (திருக்குர்ஆன் 28 :54)
அதர்மவாதிகள் தங்கள் பயங்கரவாதத்தால் தர்மம் வேரூன்றுவதைத் தடுக்க முழுமூச்சாக முற்பட்டாலும் தர்மத்தின் காவலர்கள் எதிர் நடவடிக்கைகளிலோ தாக்குதல்கள் நடத்துவதிலோ ஈடுபடவில்லை. தங்கள் இலக்கு எதிர்போரையும் அவர்களின் உடமைகளையும் அழிப்பதல்ல, மாறாக அவர்களைத் திருத்துவதுதான் என்பதைத் தெளிவாகப் புரிந்திருந்தார்கள். அதன் காரணமாக பொறுமையையும் மன்னிப்பையும் இறைஉதவியையுமே தங்கள் ஆயுதங்களாக எடுத்துக் கொண்டார்கள். அதர்மவாதிகள்  நாளடைவில் தோல்வியே கண்டார்கள். 

இவ்வாறு உலகம் தொடங்கிய நாள் முதல் ஆரம்பித்த தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயான போராட்டம் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இறுதிநாள்வரை இது தொடரும். இதில் தர்மத்தைக் காக்கப் போராடியவர்களுக்குப் பரிசாக மறுமையில் சொர்க்கம் கிடைக்கும். அதர்மத்தை வளர்ப்பதற்காகப் போராடியவர்களுக்கு நரகமும் கிடைக்கும். 

மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?