இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 நவம்பர், 2012

பொதுப்பணத்தை சுருட்டாத ஆட்சியாளர்!

Image result for throne

உலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள், வேண்டியவர்களுக்கு முறைகேடாக வழங்கி விட்டார்கள்என்பது தான்.

இத்தகைய முறைகேடுகளில் ஆட்சியாளர்கள் ஈடுபடுவதை சாதாரண மக்கள் விரும்பாவிட்டாலும் இதிலிருந்து விடுபட்ட ஒரே ஒரு ஆட்சியாளரைக் கூட இன்றைய உலகில் காண முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
மாதம் ஒன்றுக்கு சில ஆயிரம் ரூபாய்கள் மட்டும் சம்பளம் வாங்கும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், முதல்வர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இப்பதவிகளைப் பெற்ற பின் பல ஆயிரம் மடங்கு வளர்ந்துள்ளனர் என்பதற்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை. பொதுப்பணத்தில் குறைவாகச் சுருட்டியவர்கள் தாம் நேர்மையானவர்கள் என்று கருதப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதை இன்று நாம் காண்கிறோம்.
இந்த மாமனிதரின் அற்புத வரலாற்றைப் பாருங்கள், படிக்கும் போதே கண்கலங்குகிறது! நம்மையறியாமல் ஊர்ப்பணத்தில் கொழுத்தவர்கள் மேல் ஆத்திரம ஏற்படுகின்றது! இந்த மாமனிதர் போன்ற ஒரு ஆட்சியாளர் இந்த உலகத்தை ஆளக் கூடாதா என்று ஏக்கம் மேலிடுகிறது! இந்த வரலாற்றுத் துணுக்கை இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் அந்த மாமனிதரைப் பற்றிய மதிப்பு பல்லாயிரம் மடங்கு அதிகமாகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா நகரை அடைந்து அங்கே இஸ்லாம் பரவப்பரவ மக்களின் ஆதரவு பெருகி ஒரு ஆட்சியையும் நிறுவினார்கள். அந்த ஆட்சியை செவ்வனே நிறைவேற்றுவதற்காக ஏழைகளுக்கும் கடனாளிகளுக்கும் அடிமைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் அறப்போரில் பங்கெடுப்போருக்கும் உதவுவதற்காக ஸகாத் எனும் வரியைச் செல்வந்தர்கள் மீது விதித்தார்கள். இப்பணத்தின் மூலம்தான் இந்தப் பணிகளை அவர்கள் செய்து வந்தனர்.
ஆட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவர்களிடம் ஸகாத் நிதி வந்து குவியும். ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள், தங்கம், வெள்ளி மற்றும் தானியங்கள் அரசுக் கருவூலத்தில் சேரும்.
இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும் பல தகுதிகள் நபிகள் நாயகத்திற்கு இருந்தன. அவர்கள் ஏழையாக இருந்தார்கள். கடனாளியாக இருந்தார்கள். அறப்போரில் பங்கெடுப்பவராக இருந்தார்கள். இந்த நிதியை நிர்வாகம் செய்பவர்களாகவும் இருந்தார்கள். இந்த நிதியில் தமக்குத் தேவையானதை அவர்கள் எடுத்துக் கொண்டால் மன சாட்சிப்படியும், அவர்கள் போதித்த கொள்கைப்படியும் அதில் எந்தத் தவறுமில்லை. மக்களில் யாரும் அதைத் தவறாக விமர்சிக்கப் போவதுமில்லை.
இந்த மாமனிதர் ஸகாத் நிதியைத் தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் உலக முடிவுநாள் வரை வரக்கூடிய தமது வழித்தோன்றல்களுக்கும் ஹராம் (பயன்படுத்தக் கூடாது) என்று பிரகடனம் செய்கிறார்கள். ஆட்சியாளர் என்ற அடிப்படையில் சம்பளமாகக் கூட அதை எடுக்கக் கூடாது என்று தமக்குத் தாமே தடை விதித்துக் கொள்கிறார்கள்.
அவர் ஆட்சிக்கட்டிலில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பாருங்கள்:
நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) என்பார் கூறுகிறார்:  
     பேரீத்தம் பழம் காய்க்கும் பருவத்தில் (ஸகாத் எனும் பொது நிதியாக) ஒவ்வொருவரும் பேரீத்தம் பழங்களைக் கொண்டு வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே பெரும் குவியலாகப் பேரீத்தம் பழங்கள் சேர்ந்து விடும். நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோர் அப்பேரீத்தம் பழங்களை எடுத்து விளையாடுவார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் ஒரே ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அவரது வாயிலிருந்து அதை வெளியேற்றி விட்டு முஹம்மதின் குடும்பத்தினர் ஸகாத் எனும் பொது நிதியில் எதையும் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்கள். (நூல்: புஹாரி 3072)
தமது பேரர்களில் ஒருவர் பொது நிதியைச் சேர்ந்த ஒரே ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்ததைக் கூட அந்த மாமனிதர் பொறுத்துக் கொள்ளவில்லை. ஹஸன் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டிலும் ஹுஸைன் நான்காம் ஆண்டிலும் பிறந்தனர். நபி (ஸல்) அவர்கள் மரணித்த வருடத்தில் இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் பேரர்களின் வயது ஏழு அல்லது எட்டுத்தான் இருக்கும்.
ஏழு அல்லது எட்டு வயதிற்கும் குறைந்த சிறு குழந்தைகள் செய்யும் தவறுகளை யாரும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. இஸ்லாத்திலும் கூட இது தவறாகக் கருதப்படுவதில்லை. இந்த மாமனிதரோ தம் குடும்பத்தில் உள்ள சிறுவர்களும் கூட பொதுநிதியைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து விட்டார்கள்.
மனைவி, மக்கள், பேரன், பேத்திகள் என்ற உறவு முறைகள் தாம் தவறான வழியில் பொருளீட்டுவதைத் தூண்டுகின்றன. இந்தப் பாசத்தின் காரணமாகவே இளமையில் இலட்சியம் பேசுவோரெல்லாம் முதுமையில் இலட்சியத்தைத் தொலைத்து விடுகின்றனர்.
நபிகள் நாயகத்துக்கு இதுபோன்ற பாசம் இருந்ததில்லையா? நிச்சயமாக இருந்தது. மற்றவர்களை விட அதிகமாகவே இருந்தது. நபிகள் நாயகம் தொழும் போது கூட அவர்கள் மேல் இந்தப் பேரக் குழந்தைகள் சவாரி செய்ததுண்டு. குடும்பத்தின் மீது அவர்கள் வைத்திருந்த பாசம் அவர்களின் இலட்சியத்தையோ கொள்கையையோ பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டார்கள்.
இதன் காரணமாகத்தான் பச்சிளம் பாலகன்தானே என்றும் பார்க்கவில்லை. ஒரேயொரு பேரீத்தம் பழம்தானே என்று போலிச் சமாதனமும் கூறவில்லை. வாயில் போடுவதை வெளியில் எடுத்து வீசுவதால் யாருக்குப் பயன்படப் போகிறது என்று நினைத்து அதை அனுமதிக்கவுமில்லை. பொது நிதியை என் குடும்பத்து உறுப்பினர்கள் தொடக்கூடாது என்றால் தொடக் கூடாதுதான். அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள்.
வருங்காலத்தில் நபிகள் நாயகம் அவர்களின் பரம்பரையினர் என்று கூறிக் கொண்டு தம் குடும்பத்தினர் பொது நிதியில் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக அன்றும் இன்றும் என்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் ஸகாத் எனும் பொது நிதியிலிருந்து ஒரு பைஸாவும் பெறக் கூடாது என்ற கடுமையான தடையையும் விதித்து விட்டார்கள்.
ஒவ்வொருவனும் தனது வழித் தோன்றல்கள் இவ்வுலகில் வசதியுடன் வாழ வேண்டும் என்பதற்காகப் பாடுபடுகிறான். அந்த மாமனிதரோ உலகம் உள்ளளவும் மற்ற ஏழைகளுக்கும் வறியோருக்கும் அனுமதித்ததைத் தமது வழித் தோன்றல்களுக்கு மட்டும் ஹராமாக்கி (தடுத்து) விட்டார்கள்.
நபிகள் நாயகம் ஒரு முறை தொழுது முடிந்ததும் வேகமாக வீட்டுக்குச் சென்று விட்டு வேகமாகத் திரும்பி வந்தார்கள். வந்ததும் ஒரு வெள்ளிக் கட்டி ஸகாத் நிதியாக வந்தது. அது ஒரு இரவுப் பொழுதுகூட என் வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே இதை விநியோகிக்குமாறு கூறவே விரைந்து சென்றேன்என்றார்கள்.
நூல்: புஹாரி
பொது நிதியை தம் வீட்டில் வைத்த நிலையில் இறந்து விட்டால் குடும்பத்தினர் எடுத்துக் கொள்ளக் கூடுமோ? தேவைப்பட்டவர்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் விநியோகம் செய்யாத குற்றம் வந்து சேருமோ? என்றெல்லாம் அஞ்சி, தொழுதவுடன் வேகமாகச் சென்று விநியோகம் செய்யச் சொல்கிறார்கள். ஒரு இரவு கூடத் தம் வீட்டில் இது இருக்கக் கூடாது என்று கூறியதை மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
ஊர்ப்பணத்தை அடித்து உலையில் போடும் அயோக்கியர்களைத் தலைவர்களாகக் கருதும் மக்கள் இந்த மாமனிதரின் வாழ்க்கையைப் பார்க்கட்டும்! அப்பழுக்கற்ற பரிசுத்தமான வரலாற்று நாயகரைப் பார்க்கட்டும்! தாம் கொண்ட மார்க்கம் உண்மையானது என்பதற்குச் சான்றாக தமது வாழ்வைத் திறந்த புத்தகமாக வைத்து விட்டுச் சென்ற அந்த மாமனிதரின் வழிகாட்டுதல் மட்டுமே உலகை உய்விக்கச் செய்ய முடியும் என்பதை உணரட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக