இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 ஏப்ரல், 2013

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா?இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் எந்த ஜாதியில் இருந்தார்களோ அந்த ஜாதியை இஸ்லாம் ஒழித்துவிட்டாலும் வேறுவிதமான ஜாதி முறைகள் இஸ்லாத்திலும் உள்ளன என்பதும் மாற்று மதத்தினரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.
மிகவும் பரவலாக அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற ஷியா, சன்னி போன்ற பிரிவுகளையும் தக்னி,லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற பிரிவுகளையும் இவர்கள்தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களின் குடும்பத்தில் பெண் எடுப்பதோ கொடுப்பதோ இல்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதை நாம் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு இஸ்லாத்திலும் ஜாதிகள் இருப்பதாக வாதிடுவதைத்தான் நாம் மறுக்கிறோம்.
முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பது அவர்களது அறியாமையினால் அல்லது புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறுகளால் உருவானதாகும்.
இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக உள்ள திருக்குர்ஆனிலும் நபிகள்நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளிலும் இத்தகைய பிரிவுகள் பற்றிக் குறிப்பிடவில்லை.
நீங்கள் அனைவரும் ஒரு சமுதாயம்தான் (அல்குர்ஆன்21:92)
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் இறைவனிடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (அல்குர்ஆன் 49:13)
எல்லா மக்களுக்கும் மூலபிதா ஒருவர்தான். எல்லா மக்களுக்கும் மூலஅன்னையும் ஒருவரே என்று திட்டவட்டமாக இஸ்லாம் பிரகடனம் செய்துவிட்டது. இஸ்லாத்தின் போதனைகளை மறந்து விட்டதன் காரணத்தால்தான் இவ்வாறு பிளவுபட்டு விட்டார்களே தவிர இஸ்லாம் பிளவுபடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அடுத்ததாக, ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் ஒருவனுக்குக் கிடைக்கும் தகுதியாகும். ஒரு சாதியில் பிறந்தவன் இன்னொரு சாதிக்காரனாக மாறவே முடியாது. இதுதான் சாதிக்குரிய இலக்கணம். முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் இந்தபிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் உருவானதன்று.
ஷியா, சன்னி போன்ற பிரிவுகள் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதில் கருத்துவேறுபாடு கொண்டதால் ஏற்பட்ட பிரிவாகும்.
ஷியா பிரிவின் குடும்பத்தில் பிறந்தவன் அவர்களது கொள்கையை நிராகரித்து விட்டு மற்ற எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்.
இது பிறப்பின் அடிப்படையில் வருவதன்று. ஒருவன் விரும்பித் தேர்வு செய்வதால் ஏற்படுவது. யாரும் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் எனும்போது இந்தப் பிரிவை சாதியுடன் சேர்ப்பது எந்தவகையிலும் ஏற்புடையதாகாது.
மரைக்காயர், லெப்பை, இராவுத்தர் போன்ற பிரிவுகளும் அக்காலத்தில் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் உருவானதாகும்.
குதிரையைப் பயிற்றுவிப்பவர் இராவுத்தர் எனப்படுவார். அன்றைய முஸ்லிம்களில் ஒருபகுதியினர் அரபுநாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்து குதிரைகளுக்குப் பயிற்சி அளித்து விற்று வந்தனர்.
இந்தத் தொழில் காரணமாக அவர்கள் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டார்களே தவிர பிறப்பின் அடிப்படையிலோ, உயர்வு தாழ்வு கற்பிக்கும் அடிப்படையிலோ இவ்வாறு அழைக்கப்பட்டதில்லை.
மரக்கலத்தில் சென்று வணிகம் செய்த முஸ்லிம்கள் மரக்கலாயர் என்று அழைக்கப்பட்டனர். இதுவே மரைக்காயர் என்று ஆனது.
அரபு நாட்டைத் தாயகமாகக் கொண்ட சிலர் இங்கே வந்து குடியேறினார்கள். அவர்கள் லெப்பை என்று அழைக்கப்பட்டனர்.யாரேனும் அழைத்தால் என்று நாம் மறுமொழி அளிப்போம். அன்றைய அரபுநாட்டில் லப்பைக் என்று மறுமொழி கூறிவந்தனர்.
இங்கு வந்து குடியேறிய அரபு முஸ்லிம்களும் அந்த வழக்கப்படி அடிக்கடி லப்பைக் என்று கூறிவந்ததால் அவர்கள் லப்பை என்றே குறிப்பிடப்பட்டனர்.
உயர்வு, தாழ்வு கற்பிப்பதற்காக இவ்வாறு அழைக்கப்படவில்லை.
எனவே இதையும் காரணமாக வைத்துக் கொண்டு இஸ்லாத்தில் ஜாதிகள் உள்ளன எனக்கூறுவது ஏற்க முடியாத விமர்சனமாகும்.
அடுத்தப்படியாக, கொள்கை மற்றும் தொழில் காரணமாக இவ்வாறு பல பெயர்களில் முஸ்லிம்கள் பிரிந்து கிடந்தாலும் இதன் காரணமாக தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை.வேறு பிரிவினரிடம் திருமண சம்பந்தம் கூட செய்து கொள்கின்றனர்.
இதனைச் சாதியாக முஸ்லிம்கள் கருதியிருந்தால் ஒருவர் மற்ற பிரிவில் பெண் எடுக்கவோ கொடுக்கவோ மாட்டார். எனவே இந்தக் காரணத்தினாலும் இஸ்லாத்தில் ஜாதி கிடையாது என அறிந்து கொள்ளமுடியும்.
உருது, தமிழ் என்பது போன்ற பிரிவுகளுக்கிடையே சகஜமாகத் திருமணங்கள் நடப்பதில்லை என்பது உண்மைதான்.
இதற்குக் காரணம் சாதிஅமைப்பு அல்ல. தம்பதிகள் தமக்கிடையே நல்லுறவை வளர்த்து இல்லறத்தை இனிதாக்கிட ஒருமொழியை இருவரும் அறிந்திருப்பது அவசியமாகும். ஒருவரது மொழி மற்றவருக்குத் தெரியாத நிலையில் அவர்களது இல்லறம் சிறக்கும் எனச் சொல்ல முடியாது.
இது போன்ற காரணங்களுக்காகத் திருமண சம்பந்தத்தைச் சிலர் தவிர்க்கின்றனர். உயர்வு தாழ்வு கற்பிப்பதற்காக இல்லை. தமிழ் முஸ்லிம் உயர்ந்தவன் இல்லை. உருது முஸ்லிம்தான் உயர்ந்தவன் என்ற அடிப்படையில் திருமண சம்பந்தத்தைத் தவிர்த்தால்தான் அதைச் சாதியாகக் கருதமுடியும்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தெரியாத சில முஸ்லிம்கள் தம்மை உயர்ந்தவர்களாகக் கருதிக்கொண்டு திருமண உறவுகளைத் தவிர்க்கின்றனர். இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
இது போன்ற பிரிவுகளையும் கூட தவிர்ப்பது இத்தகைய விமர்சனங்களைத் தடுக்கும் என்பதை முஸ்லிம்களும் உணர்ந்து இதைக் கைவிடவேண்டும். என்பதையும் முஸ்லிம்களுக்கு நாம் அறிவுரையாகக் கூறிக்கொள்கிறோம்.
அவர்கள் கைவிடாவிட்டாலும் அதையும் சாதியாகக் கருதுவது முற்றிலும் தவறாகும்.
நன்றி :பிஜே

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

ஜாதிகள் எவ்வாறு உருவாகின?

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று உலகறியப் பாடினாலும் சரி, ‘ஜாதி ஒழிக மனிதம் வாழ்க!’ என்று வானுயர முழங்கினாலும் சரி, இயக்கங்கள் அமைத்து இரவுபகலாகப் போராடினாலும் சரி ஜாதிகள் அழிவதில்லை என்பது அனுபவம் நமக்குச் சொல்லும் பாடம். பிறகு என்னதான் வழி?
வழி தேடும் முன் இன்று நாம் காணும் மதங்களும் ஜாதிகளும் எப்படி உருவாகின என்பதை நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து அறிய முற்படுவோம்.
ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியதே மனித குலம் என்பதை நாம் அறிவோம். இவர்களுக்கு இறைவனைப் பற்றியும் இவ்வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியும் எடுத்துரைத்து நேர்வழி நடத்த இவர்களில் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களைத் தூதர்களாக இறைவன் நியமிக்கிறான்
,உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நாட்டுக்கு ஒரு இறைத் தூதர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம் . அவர் அந்நாட்டு மக்களுக்கு தான் இறைவனிடமிருந்து பெற்ற செய்திகளை எடுத்துரைக்கிறார்.
•    மக்களே உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவனே அவனுக்கு நன்றி உள்ளவர்களாக வாழுங்கள். அவனையே வணங்குங்கள்.அவன் மட்டுமே உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியவன். அவனை விடுத்து படைப்பினங்களை ஒரு போதும் வணங்காதீர்கள். அவ்வாறு செய்தால் பிரிந்து விடுவீர்கள்.
•    இன்று நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்காலிக உலகம் ஒருநாள் அழிக்கப்படும். இறுதித்தீர்ப்பு நாள் ஏற்படுத்தப்படும். அன்று நல்லோருக்கு சொர்க்கமும் தீயோருக்கு நரகமும் விதிக்கப்படும். எனவே இறை கட்டளைகளைப் பேணி வாழுங்கள்.சொர்க்கத்தை அடையலாம். மாறாக ஷைத்தானுக்கும் மனோ இச்சைகளுக்கும் அடிபணிந்தால் நரகத்தை அடைவீர்கள்.
மேலும் அவர் மக்களுக்கு பாவம் எது புண்ணியம் எது என்பதை விளக்கிக் கூறுவதோடு ஒரு முன்மாதிரி புருஷராகவும் மக்களிடையே வாழ்ந்து காட்டுகிறார். இவ்வாறு அவர் அவ்வூரில் .மக்களோடு இணைந்து தர்மத்தை நிலை நாட்டுகிறார். மக்களும் கலப்படமில்லாத ஏக இறைவழிபாடு மூலம் ஒன்றிணைந்த நல்லொழுக்கமுள்ள சமூக வாழ்வில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் அமைதியையும் அனுபவிப்பார்கள்.
இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் இறைத்தூதர் மரணம் அடைகிறார். நிலை நாட்டப்பட்ட தர்மத்தின் தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். ஆனால் நாள் செல்லச் செல்ல என்ன நடக்கிறது?
பிற்கால மக்களில் சிலர் இறந்து போன இறைத் தூதருக்கு அஞ்சலி என்ற பெயரில் அவருக்கு ஒரு ஓவியத்தை வரைந்து மரியாதை செய்ய ஆரம்பிப்பார்கள். நாள் செல்லச் செல்ல ஷைத்தானுடைய தாக்கத்தால் அந்த இறைத்தூதருக்கு சிலை வடிக்கப் படுகிறது! மக்கள் அந்த இறைத்தூதரையே வணங்க முற்படுகிறார்கள் ! என்ன விபரீதம்! ‘படைத்தவனை மட்டுமே வணங்குங்கள் , மனிதர்களையோ, புனிதர்களையோ, சிலைகளையோ எதையுமே வணங்காதீர்கள்’ என்று மக்களிடையே பிரச்சாரம் செய்து தர்மத்தை நிலை நாட்டியவருக்கே சிலை வடிக்கப்பட்டு அவரையே வணங்கும் மடத்தனம்! , இல்லை இல்லை அவரது சிலையை வணங்கும் மடத்தனம்! நாளடைவில் அவருக்காக கோவிலும் கட்டப்படுகிறது.
(இதை உங்களால் நம்ப முடியவில்லையா? ஓர் அண்மை உதாரணத்தைப் பாருங்கள். ‘கடவுளே இல்லை’ என்று சிலைகளை உடைத்த பெரியாருக்கே தாங்கள் பகுத்தறிவு வாதிகள் என்று மார் தட்டிக்கொள்பவர்களே சிலை எடுத்தது மட்டுமல்ல தவறாமல் மாலை இடவும் செய்கிறார்கள்!)
உயிரற்ற உணர்வற்ற ஒரு செதுக்கப்பட்ட பொருளை இப்பேரண்டத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு ஒப்பாக்கும் ஒரு மாபெரும் மூட நம்பிக்கைக்கு மக்கள் இடம் கொடுத்ததைத் தொடர்ந்து என்ன நடக்கிறது?
•    பல மூட நம்பிக்கைகள் உடலேடுக்கின்றன.
•    கடவுளுக்கு நாங்கள் தான் நெருங்கியவர்கள் , எங்கள் மூலமாகத்தான் கடவுளை நெருங்க முடியும் என்று கூறிக்கொண்டு இடைத்தரகர்களும் புரோகிதர்களும் உருவாகிறார்கள்.
•    கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஒரு கூட்டம் புறப்படுகிறது.
•    அந்நாட்டு அரசனையும் செல்வந்தர்களையும் தன கைக்குள் கொண்டு வந்து புரோகிதம் நாட்டை ஆள்கிறது.
•    பாமரர்களுடையதும் சாமானியர்களுடையதும் உரிமைகள் கொள்ளை போகின்றன.
•    கல்லையும் மரத்தையும் காட்டி கடவுள் என்று கற்பிக்கப் படுவதால் மக்களின் உள்ளத்தில் கடவுளைப்பற்றிய பயம் போய் விடுகிறது.
•    தன செயல்களுக்கு கடவுளிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது.
•    பாவங்கள் மலிந்து விடுகிறது.
•    அநியாயமும் அக்கிரமங்களும் கொலைகளும் விபச்சாரமும் பெருகி வழிகின்றன.
இவ்வாறு அதர்மம் பரவி நாட்டை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக புதிய தூதர் ஒருவர் அனுப்பப்படுகிறார். அவர் மீண்டும் மக்களுக்கு முந்தைய இறைத்தூதர் போதித்த அதே அடிப்படை உண்மைகளை நினைவூட்டி மக்களை மீண்டும் படைத்தவனை வணங்குமாறு அழைப்பார்.அவர்கள் செய்து கொண்டிருக்கும் மூட பழக்கவழக்கங்களை எடுத்துரைப்பார். இப்போது என்ன நடக்கிறது? சிந்திக்கும் மக்கள் இவரது போதனைகளால் நல்லுணர்வு பெற்று இவரை பின் தொடர ஆரம்பிப்பார்கள். மற்றவர்களோ 'இல்லை ,எங்கள் மூதாதையர்கள் எதில் இருந்தார்களோ அதுவே சரி, உங்கள் போதனை எங்களுக்குத் தேவை இல்லை' என்று மறுத்து எதிர்ப்பார்கள்.அதர்மத்தையும் அக்கிரமங்களையும் மூலதனமாக கொண்டு வயிறு வளர்போரும் அரசியல் நடத்துவோரும் இம்மக்களை முழு மூச்சாக இறைத் தூதருக்கும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டோருக்கும் எதிராக முடுக்கி விடுவார்கள். ஆனால் காலப்போக்கில் இறை அருள் கொண்டு தருமம் மறுபடியும் வெல்கிறது! .
தொடர்ந்து புதிய இறைத்தூதரும் அவருடைய பிற்கால மக்களால் வணங்கப்படுகிறார். அவருக்கும் சிலைகளும் கோவில்களும் எழுப்பப்படுகின்றன.அந்த அதர்மமானது அவரது பெயரைச் சூட்டி ஒரு மதமாக உருவெடுக்கிறது. மீண்டும் ஒரு புதிய தூதர்.......என மீண்டும் அதே கதைத் தொடர்கிறது. இவ்வாறு வந்த தூதர்களின் வரிசையில் கடைசியாக வந்த இறைத் தூதர்தான் முஹம்மது நபி அவர்கள். அவருக்கு முன்னதாக வந்து சென்றவர்தான் இயேசு கிருஸ்து அவர்கள். இந்த தொடர் சரித்திரத்தில் என்ன நடக்கிறது? அதர்மம் அந்தந்தக் காலத்து இறைதூதர்களின் அல்லது நாட்டின் அல்லது வமிசத்தின் பெயரால் மதமாக அறியப்படும். ஆனால் தர்மமோ ‘இறைவனுக்கு கீழ்படிதல்’ என்ற பண்புப் பெயரால் அறியப்படும்!
இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் ஒரே மனித குலமாக இருந்த நமக்குள்ளே எப்படி பிரிவினைகள் உருவாயின என்று! இங்கு மதங்கள் உருவாவது மக்களின் அறியாமையினால் என்பது தெளிவு. அந்த அறியாமையைத் தக்கவைத்துக் கொள்ளவும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டவும் பிற மனிதர்களின் உரிமைகளை பறித்திடவும் இடைத்தரகர்களும் சுயநல சக்திகளும் கற்பிப்பவையே சாதிகள் என்பதை நாம் அறியலாம்.
எனவே ஜாதிகளை ஒழித்து பிரிந்துகிடக்கும் நம் குடும்பத்தை ஒன்றிணைக்க ஒரே வழி நம்மைப் படைத்தவனை மட்டுமே வணங்குவோம் என்ற கொள்கையை ஏற்பது மூலம் மட்டுமே! சிந்திப்போம், சீர் செய்வோம், செயல்படுவோம்!


வியாழன், 18 ஏப்ரல், 2013

சாதிகள் ஒழித்திடடி பாப்பா!


'சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்றார் பாரதி. 
பாடியோர் பலர். ஓடியாடி உழைத்தோர் பலர். நாடியது நடக்காமல் நம்பிக்கையிழந்தோர் பலர். 
நீண்ட காலமாக நம் நாட்டை பீடித்துள்ள சாதிக் கொடுமைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் வேரறுக்க வேண்டும் என்று பலரும் இடையறாது பாடுபடுவதை நாம் கண்டு வருகிறோம். பெரியார், அம்பேத்கர் போன்ற பழம்பெரும் தலைவர்களும் தங்கள் வாழ்நாளையே இதற்காக தியாகம் செய்து போராடிச் சென்றதையும் நாம் கண்டோம்.
 இன்றும் அவர்களைத் தொடர்ந்து அவர்களின் தொண்டர்களும் சீடர்களும் பல இயக்கங்களை உருவாக்கி அவையும் பல குழுக்களாக நாடெங்கும் செயல்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இந்த ஜாதிக் கொடுமைகளும் தீண்டாமைக் கொடுமைகளும் ஜாதிச்சண்டைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. காரணம் என்ன? நாட்டின் நலன் கருதி நாம் இதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

அதேவேளையில் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களும் அவர்களின் தலைமுறையினரும் ஒருகாலத்தில் தங்களை பீடித்திருந்த ஜாதிக் கொடுமைகளில் இருந்தும் தீண்டாமைக் கொடுமைகளில் இருந்தும் தங்களைத் தாங்களே எளிதாக விடுவித்துக்கொண்டுள்ளனர். இன்னும் தொடர்ந்து இது நடந்துகொண்டே இருக்கிறது. இதற்காக இவர்கள் யாரிடமும் முறையிடுவதும் இல்லை. யாரையும் உதவிக்கு அழைப்பதும் இல்லை. எந்தப் பொருட்செலவும் இல்லை! இதற்காக இவர்கள் செய்வதெல்லாம் என்னவெனில், ஒரு சில அடிப்படை உண்மைகளை உணர்ந்து அதன் அடிப்படையில் தங்கள் வாழ்க்கை நடைமுறைகளை மாற்றிக் கொள்வதுதான்! அது என்ன?

அதை அறியும் முன் கவிக்குயில் சரோஜினி நாயுடு அம்மையார் அதைப்பற்றிக் கூறுவதைக் கேட்போம்:
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒருகுடிஅரசுஎப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார்.

டாக்டர் அம்பேத்கர் இது பற்றி என்ன கூறினார்? இதோ,
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.”
இது பற்றி தந்தை பெரியாரின் கூற்றும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே:
“இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து!”
இவர்களெல்லாம் கூறுவதில் உண்மை உள்ளதா?.... ஆராய்வோம் வாருங்கள்.
தொடரும் இப்புரட்சியின் துவக்க கட்டத்திற்குச் செல்வோம்.
நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்னர் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள்  முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர்,  நிறவெறி,  கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நபிகள் நாயகம் அவர்களது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப் படுகிறார்கள். அங்கே இஸ்லாம் என்ற சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன்பால் மக்களை அழைத்தார்கள். ஒன்றே மனித குலம், அனைத்துலகுக்கும் ஒருவன் மட்டுமே இறைவன், அவன் மட்டுமே வணக்கத்துக்குரியவன். அனைவரும் அந்த இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள், மறுமை வாழ்வே உண்மையானது, அங்கு நரகத்தில் இருந்து விடுபட்டு சொர்க்கம் செல்லவேண்டுமானால் இங்கு நன்மைகளை செய்யவேண்டும், தீமைகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உண்மைகளை பகுத்தறிவு பூர்வமாக எடுத்துரைத்து இஸ்லாத்தை வளர்த்தார்கள்
பகுத்தறிவை முறையாக பயன்படுத்தி அதன்மூலம் நேர்வழியை அடைவதற்குரிய வழிமுறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதனால் அவர்களது உள்ளங்கள் அமைதி பெற்றன. இஸ்லாம் என்ற ஒரே கோட்பாட்டின் கீழ் அவர்கள் ஒன்றிணைந்தார்கள். வெறும் போதனைகளோடு நின்றுவிடாமல் தொழுகை ஜக்காத் போன்ற அன்றாட நடைமுறைகள் மூலம் சமூக இணைப்பை உறுதிப் படுத்தினார்கள்.
= படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன், அவனை நேரடியாக அணுகலாம்  என்ற கோட்பாட்டை ஏற்ற மாத்திரத்திலேயே அவர்கள் மூடநம்பிக்கைகளில் இருந்தும் இடைத் தரகர்களின் சுரண்டல்களில் இருந்தும் ஆதிக்கசக்திகளின் கொடுமைகளில் இருந்தும் விடுதலை பெற்றார்கள்.
= மனிதகுலம் அனைத்தும் ஒரே தாய் ஒரே தந்தையில் இருந்து உருவாகிப் பல்கிப் பெருகியவர்களின் சந்ததிகளே என்ற உண்மையை உணர்ந்த மாத்திரத்தில் தங்களை இதுகாறும் கட்டிப்போட்டு வைத்திருந்த குலம், கோத்திரம், நிறம், இனம் போன்ற மாயைகளையும் ஏற்ற தாழ்வுகளையும் தீண்டாமை உணர்வுகளையும் மறந்தார்கள். தன் அருகில் இருப்பவன் தன் சகோதரனே, தன் குடும்பத்தைச் சார்ந்தவனே என்ற உணர்வு மேலீட்டால் ஆரத்தழுவிக் கொண்டார்கள்.
= இவ்வுலக வாழ்வு தற்காலிகமானது, ஒரு பரீட்சை போன்றது மறுமையே நிலையானது என்பதை ஆராய்ந்து அறிந்த மாத்திரத்திலேயே தங்களின் இம்மை நலனை விட மறுமை நலனே பெரிதென உணர்ந்தார்கள். அது அவர்களை சுயநலத்தை விட பொது நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வைத்தது. இறைபொருத்தத்திற்காக எந்த விதமான தியாகங்களையும்  மேற்கொள்ளவும் இலட்சியத்தை அடையும் வழியில் ஏற்படும் இன்னல்களை தாங்கிக்கொள்ளவும் முன்வந்தார்கள். கோத்திர வெறி மற்றும் உலக ஆசைகள் இவைபோன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பகரமாக இறைநம்பிக்கை அடிப்படையிலான சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள். ஐவேளைத் தொழுகைகளில் தோளோடு தோள் சேர்த்து அணிவகுத்து நின்றார்கள். தங்களிடம் இருந்த செல்வத்தை சகோதர அடிப்படையில் பகிர்ந்து கொண்டார்கள். அதே கோட்பாட்டின் கீழ் அனைவருமே ஒன்றிணைந்து செயற்பட்டார்கள்! இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசை ஏற்படுத்துகின்ற அளவிற்கு மிகப்பெரும் வெற்றியையும் பெற்றார்கள்!
இன்று அந்த மாமனிதர் நம்மிடையே இல்லை. ஆனாலும் அவர் கற்றுக் கொடுத்த அந்த கல்வியின் புரட்சியின் தாக்கம் காலங்களைக் கடந்து எல்லைகளைக் கடந்து தொடர்கிறது. உலகெங்கும் மக்களை சீர்படுத்தும் புரட்சியை அது தொய்வின்றி செய்து வருகிறது. இஸ்லாம் என்பது ஒரு சுய சீர்திருத்தத் திட்டம். இதை யாரும் ஏற்றுக்கொண்டு எளிமையாக செயல்படலாம். இதை ஏற்பதன் மூலம் இன இழிவு, தீண்டாமை, நிறபேதம், இனபேதம், சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை மறைவதோடு தனிநபர் ஒழுக்கம், சகோதரத்துவம், குடும்ப மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்ற நற்பண்புகள் நிறைந்த ஆரோக்கியமான சமூகம் அங்கு உடலெடுக்கிறது.
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? 
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 
http://quranmalar.blogspot.com/2016/09/blog-post_12.html

புதன், 17 ஏப்ரல், 2013

மனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை!

Image result for equality and brotherhood in islam

நபிகளாரிடம் அந்த அந்தகர் வந்தபோது......
மனித வரலாற்றை திருத்தி எழுதிய நிகழ்வு அது! உண்மையில் அதுவே வரலாற்றின் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையும் கூட!
மனிதன் சக மனிதனைப் பார்க்கும் பார்வையை மாற்றி அமைத்த நிகழ்வு அது!
உலகெங்கும் மானிடப் பூங்காக்களில் சமத்துவப் பூக்கள் துளிர்விடத் துவங்கிய நாளேன்றே அந்நாளைக் கூறலாம்!
இனம், நிறம், மொழி, குலம், கோத்திரம் ஜாதி இவற்றின் பெருமைகளைக் கூறி மனிதர்களின் மத்தியில் வேறுபாடுகளை விதைத்து அதன் மூலம் பிற மனிதர்களின் உரிமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு இருந்த தீய பழக்கத்திற்கு சாவுமணி ஒலிக்கத் துவங்கியது அதற்குப் பிறகுதான்!
இஸ்லாம் என்பது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழுதல் என்ற கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை. இதை நோக்கியே ஒவ்வொரு காலகட்டங்களிலும் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் வந்த இறைவனின் தூதர்கள் தத்தமது மக்களை அழைத்தார்கள். இதை இறுதியாக மறுஅறிமுகம் செய்ய வந்தவரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
நபிகளார் பிறந்த மண்ணான மக்கா நகரம் அன்று எவ்வாறு இருந்தது?
 அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள்  முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர்,  நிறவெறி,  கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நபிகள் நாயகம் அவர்களது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப் படுகிறார்கள்.
அமைதியின்மை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்த அந்நாட்டில் நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாம் என்ற சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன்பால் மக்களை அழைத்தார்கள்.
இக்கொள்கையின் முக்கிய போதனை படைத்த இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதும் அவனை நேரடியாக இடைத் தரகர்கள் இன்றியும் வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றியும் வணங்க வேண்டும் என்பதும் ஆகும். அது மட்டுமல்ல இறைவன் அல்லாத எதனையும் அதாவது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ அல்லது உயிரும் உணர்வுமற்ற கற்களையோ உருவங்களையோ வணங்குவதும் அவற்றைக் கடவுள் என்று அழைப்பதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பெரும் பாவமாகும் என்றும் இக்கொள்கை கூறுவதை நபிகளார் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
ஆனால் முன்னோர்களின் பழக்கவழக்கங்களே  சரி என்று மூடமாக நம்பியிருந்தவர்களும் கடவுளின் பெயரால் மக்களைச்  சுரண்டிக் கொண்டிருந்தவர்களும் இதைப் பொறுத்துக்கொள்வார்களா? கற்பனை செய்து பாருங்கள்! ஆம், நபிகளாரும் அவரோடு  சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களும் பயங்கரமான எதிர்ப்புகளையும் சித்திரவதைகளையும் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் இறைவனின் உதவியாலும் நபிகளாரின் துவளாத பிரச்சாரத்தினாலும் கொள்கை உறுதிப்பாட்டினாலும் இஸ்லாம் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது.
இஸ்லாத்தின் கொள்கைகளை தங்களின் சூழ்ச்சிகளால் வென்றெடுக்க இயலாது என்பதை மக்கத்து (இறை) நிராகரிப்பாளர்கள் உணர்ந்தே இருந்தனர்.  முஹம்மது (ஸல்) அவர்கள் இறைசெய்தி என்று கூறுவது அனைத்தும் அவர்களின் சொந்த கருத்தல்ல மாறாக அனைத்துலகையும் படைத்த இறைவனால் அருளப்படும் இறைச்செய்தியே என்பதை அறிந்து கொண்ட அக்குறைஷித் தலைவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒரு நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். நிபந்தனை என்னவெனில் அக்குறைஷித் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்றபின் அவர்கள் இருக்கும் அவையில் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் அவர்களோடு அமர்ந்துவிடக்கூடாது என்கின்றனர். முதலில் இந்நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அக்குறைஷித் தலைவர்களை இஸ்லாத்தை ஏற்கச்செய்யலாம், பின்னர் இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளை அறிந்தபின் தங்களின் நிபந்தனையின் தவறை தாங்களாகவே உணர்ந்து விளங்கிக் கொள்வார்கள் என்ற முடிவு நபி (ஸல்) அவர்களின் எண்ண ஓட்டத்தில் இருந்தது.

அந்த தருணத்தில் குறைஷிகளின் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றிருந்த  அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) என்ற கண்பார்வையற்ற ஒரு நபித்தோழர் அந்த அவைக்கு வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைக்கிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் போன்றவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் சபைக்கு வரக்கூடாது என்ற நிபந்தனையைப் பற்றித்தானே குறைஷித்தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறனர். இந்த நேரத்தில் இவர் அவைக்கு வருகிறாரே என்று முகம் சுளிக்கின்றனர்.
உதாரணமாக, நாட்டின் ஜனாதிபதியிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு இனப்போராளித் தலைவனை அந்நேரம் பார்த்து ஓர் அடிமட்டத் தொண்டன் தொடர்ந்து செல்பேசியில் அழைத்தால் அத்தலைவனின் நிலையை நீங்கள் கற்பனை செய்யமுடியும். இங்கு நபிகளார் சுயலாபத்துக்கான பேச்சுவார்த்தை அல்ல. பொது நலனுக்கான ஒரு சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் நடந்த இந்த எதிர்பாராத குறுக்கீடு நபிகளாரை அதிருப்தி கொள்ள வைத்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்தது கண்பார்வையற்ற அந்நபித்தோழருக்கு தெரியாது. இருப்பினும் இறைவன் புறத்திலிருந்து கடுமையான வாசகங்களோடு எச்சரிக்கை வருகிறது. 'அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்' என்று துவங்கும் ‘அபஸ’ என்ற 90 ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை இறைவன் உடனடியாக அருளினான். அக்குறைஷித் தலைவர்களுக்காக ஒரு பாமர இறைவிசுவாசியிடம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறீர். இஸ்லாத்தை புறக்கணிக்கும் அந்நிராகரிப்பாளரை நேசங்கொண்டு ஒரு இறைவிசுவாசியை புறக்கணிக்கிறீர் என்று நபி (ஸல்) அவர்களைக் கண்டிக்கிறான். தங்களின் திட்டத்தை உடனடியாகக் கைவிடுகிறார்கள் நபிகளார்! அன்று முதல் மனித உறவுகளில் புது நடைமுறை அமுலுக்கு வருகிறது. மனித வரலாற்றை திருத்தி எழுதிய அந்த திருமறை வசனங்கள்
இவையே:
80: 1,2. தன்னிடம் அந்தக் குருடர் வந்தற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.
80:3. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்.
80:4. அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.
80:5,6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.
80:7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.
80:8,9,10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.
80:11. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை.
80:12. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார்

இந்த சம்பவம் மூலமாக இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தின் உறுதியான தெளிவான நிலைப்பாடு உலகறிய பறைசாற்றப் படுகின்றது. இது உலகைப் படைத்தவன் வழங்கும் வாழ்க்கைத் திட்டம். கெஞ்சிக்கூத்தாடி இதை யார் காலடியிலும் சமர்பிக்க வேண்டியதில்லை. எந்த ஒரு மனிதனுக்காகவும் குலத்துக்காகவும் நாட்டுக்காகவும் தலைவர்களுக்காகவும் இஸ்லாம் என்ற கொள்கை வளைந்து கொடுக்காது. சந்தர்பவாதத்திற்கு இங்கு இடம் கிடையாது! இதை ஏற்போர் ஏற்கட்டும். மறுப்போர் மறுக்கட்டும். இனம், நிறம், குலம், ஜாதி, செல்வம், செல்வாக்கு, ஆதிக்கம் போன்ற எந்த அடிப்படையிலும் மனிதன் பிற மனிதனை விட உயர்வு பெற முடியாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் மற்றவரை விட உயர முடியும் என்கிறான் இறைவன்!

மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (குர்ஆன் 49: 13)
இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டில் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி எவ்வாறு உறுதியாக உள்ளதோ அது போன்றே ஒன்றே குலம்என்பதிலும் அது உறுதியாக உள்ளது. ஏற்றத் தாழ்வை உருவாக்கும் அனைத்து வழிகளையும் அது அடைத்து விடுகின்றது. சமயக் கோட்பாடுகளின் சந்து பொந்துகளில் ஒளிந்துகொண்டு பேதம் வளர்க்கும் அனைத்து முயற்சிகளையும் அது முறியடித்து விடுகின்றது.

படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம் ஆகும்  (நபிமொழி)

கருப்பரை விட வெள்ளையரோ வெள்ளையரை விட கருப்பரோ சிறந்தவர்கள் அல்லர். அரேய்பியரை விட அரபி அல்லாதவரோ , அரபி அல்லாதவரை விட அரேபியரோ சிறந்தவர்கள் அல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்என்றார் நபிகள் நாயகம் அவர்கள்.
(இஸ்லாம் என்பது நபிகளார் தோற்றுவித்த மதம் அல்ல என்பதும் திருக்குர்ஆன் நபிகளாரின் வார்த்தைகள் அல்ல என்பதும் அவை முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகளே என்பதும் இந்த சம்பவத்தில் இருந்து வெளிப்படும் வேறு விடயங்கள்)

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html