இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 நவம்பர், 2012

செய்நன்றி கொன்றோர்க்கு நரகமே!


 இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன்தான் இறைவன். அவன் ஒரே ஒருவனே. அவனைத் தவிர வேறு யாரும் வணங்குவதற்க்குத் தகுதியானவர்கள் கிடையாது. இது மிகத் தெளிவான உண்மை. இதைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவையில்லை. இவ்வுலகில் அந்த இறைவன் படைத்துள்ள அவனது படைப்பினங்களை சற்று நோட்டமிட்டாலே பாமரர்களும் புரிந்துகொள்ள முடியும் சத்தியம் இது.
 ஆனால் இந்த நிதர்சனமான உண்மை மக்களில் பலராலும் மறுக்கப் படுகிறது அல்லது திரித்துக் கூறப்படுகிறது. அவனால்லாத பலவற்றையும் கடவுள் என்று சொல்லி வணங்கி வருகிறார்கள். இறைவனை நேரடியாக வணங்குவதற்கு பதிலாக ஒருசிலர் இறந்துபோன சில பெரியார்களின் சமாதிகளையும் வேறு சிலர் இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த இறைத்தூர்கள் மற்றும் சான்றோர்களின் உருவச்சிலைகளையும் இன்னும் சிலர் இறைவனின் படைப்பினங்களான மிருகங்கள், ஊர்வன பறப்பன,  சூரியன், நட்சத்திரங்கள் போன்றவற்றையும் வணங்குகின்றனர்.
  என் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று இவர்களைக் கேட்டால், இது எங்கள் குடும்ப வழக்கம் அல்லது நாட்டு வழக்கம் அல்லது முன்னோர்களின் வழக்கம் இதை நாங்கள் மாற்றிக் கொண்டால் எங்கள் வாழ்வில் குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படும்” என்பதுதான் இவர்களின் பதில்.

 ஆனால் அந்த இறைவனின் தயவில்தான் நாம் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் அவன் தரும் பிச்சை அவன் எப்போது திரும்ப அழைக்கிறானோ அப்போது நாம் இவ்வுலகை விட்டுப் போயே ஆகவேண்டும், அதைத் தட்டிக்கழிக்க தலைகீழாக நின்றாலும் முடியாது என்பதெல்லாம் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால் ஷைத்தான் இவற்றை மறக்கடித்து விடுகிறான். இவற்றை மக்களுக்கு நினைவூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் வேதங்களையும் அனுப்பினான். அந்த வரிசையில் இன்று வாழும் மக்களுக்காக இறைவன் அனுப்பிய வேதம்தான் திருக்குர்ஆன்.
 அந்த இறைவனுக்குச் சொந்தமான பூமியில் அந்த இறைவனுடைய அருட்கொடைகளை அனுபவித்துக் கொண்டு அவனுக்கு செய்நன்றி கொல்லும் செயல்தான் இறைவனுக்கு இனைவைத்தல் என்பது. என்றென்றும் வாழ்பவனும் ஈடு இணை இல்லாதவனும் ஆகிய அந்த இறைவனுக்கு பதிலாக உயிரும் உணர்வும் இல்லாத பொருட்களைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று அழைப்பதும் மனம்போன போக்கில் அவனுக்கு கற்பனை உருவங்களைச் சமைப்பதும் அவனை இழிவுபடுத்தும் செயல் ஆகும். இப்பாவம் இறைவனால் அறவே மன்னிக்கப்பட முடியாத பாவம் என்று இறைவன் எச்சரிக்கிறான்.
' .....நிச்சயமாக இறைவனுக்கு இணைவைத்தல் மாபெரும் பாவமாகும்......            (திருக்குர்ஆன் 31:13)

 'நிச்சயமாக இறைவன் ; தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்¢ இதைத்தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் இறைவனுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.' (திருக்குர்ஆன் 4:48)

இந்தப் பாவத்தைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை நிரந்தர நரகம் என்றும் இறைவன் எச்சரிக்கிறான்.
இறைவனுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை இறைவன்  விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை(திருக்குர்ஆன் 5:72)
இறைவனால் படைக்கப்பட்டு பரிபாலிக்கப் பட்டு வரும் நாம் இறைவனுடைய பூமியில் இறைவனுக்கு கீழ்படிந்து வாழக்  கடமைப்பட்டுள்ளோம். அவனுக்கு கீழ்படியாமல் அவனுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவோமேயானால் அவனது தண்டனைக்கு உள்ளாவோம் என்பது உறுதியான ஒன்று. நம் முன்னோர்கள், அல்லது நமது குடும்பத்தார் அல்லது நாட்டுமக்களைக் காரணம் காட்டி நேர்வழியை மறுப்போமேயானால் அது தற்கொலை செய்துகொள்வதைப் போன்றது. நரகமாம் நெருப்புக் கிணற்றில் நாமே குதிப்பது போன்ற ஒரு செயல் இது. இதோ இறைவன் சிந்திக்கச் சொல்கிறான்:  
      மேலும்,'இறைவன் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ''அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்'' என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (திருக்குர்ஆன் 2:170)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக