இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 மே, 2018

tதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2018 இதழ்

பொருளடக்கம் 
பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும் -2
அழகிய முறையில் கண்டிப்பு! -9
மனிதர்களுக்கு இறைவனின் தெளிவான பிரகடனம் -11
தேனீக்களின் பாதை அறியும் திறன்! -12
திருக்குர்ஆன் பற்றிய நபிமொழிகள்- 14
உங்கள் எதிர்காலம் உங்கள் தேர்வில் - 17
அநீதிகள் அடங்குவது எப்போது?- 20
நபிகளார் பரிந்துரைத்த பார்லி -22
உயிர்த்தியாகி மாஷித்தாவின் கைக்குழந்தை -23
எண்பது யானைகளை விட பழுவான மேகங்கள்

வெள்ளி, 11 மே, 2018

தீக்கிரையாக்கும் கொடூர நிகழ்வுகள் !


Related image
ஆதிக்க வெறிகொண்ட கொடுங்கோலர்கள் அப்பாவிகளை தீக்கிரையாக்கும் நிகழ்வுகள் மனித வரலாற்றில் பல்வேறு காலகாட்டங்களில் நடந்துள்ளன. இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
= தங்களைத் தாங்களே கடவுள் என்று அறிவித்துக்கொண்ட சில அரசர்கள் அவர்களை வணங்க மறுத்தவர்களையும் எதிர்த்தோரையும் இவ்வாறு தண்டித்தார்கள். சில அரசர்கள் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வழிபாட்டு வந்த தெய்வங்களை வணங்க மறுத்தோரை இவ்வாறே தண்டித்தார்கள்.
= தங்களின் ஆணவத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் சதித்திட்டங்களுக்கும் எதிராக நின்றோரை தண்டிப்பதற்கும் பலவீனர்களை அல்லது நலிந்தோர்களை அச்சுறுத்தி அடக்குமுறை செய்வதற்கும்  சில ஆட்சியாளர்கள் இதைக் கையிலெடுத்தார்கள்.
= காலனி ஆதிக்க பயங்கரவாத சக்திகள் தங்களின் ஆயுதபலத்தால் அவர்கள் கைப்பற்றிய கண்டங்களில் அல்லது நாடுகளில் அங்கு வாழ்ந்த பூர்வ குடியினரை கூட்டம் கூட்டமாக இனம் இனமாக கொன்று குவித்தார்கள். அந்நாட்டு இயற்க்கை வளங்களையும் நிலத்தடி வளங்களையும் கொள்ளையடிப்பதற்காகவும் தங்கள் வெள்ளை இனத்தாரைக் குடியேற்றுவதற்காகவும் அப்பாவிகள் மீது பயன்படுத்திய தண்டனை முறைகளில் தீக்கிரையாக்குதலும் ஒன்று.
= காலனி ஆதிக்க சக்திகளின் மறு பரிணாமமான வல்லரசு ஏகாதிபத்திய சக்திகள் இன்று தங்கள் கைப்பாவை அரசர்கள் அல்லது ஆட்சியாளர்கள் மூலம் அவர்களை எதிர்த்தோரையும் விடுதலை வீரர்களையும் மனித உரிமைப் போராளிகளையும் தண்டிக்க கையாளும் முறைகளில் கொடுமையானது மக்களை தீக்கிரையாக்குதலே.
= இன்று அரசியல் கட்சிகளும் வகுப்புவாத சக்திகளும் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையாகவும் எச்சரிப்பதற்காகவும் இதைக் கையாள்கிறார்கள்.
அன்றைய காலத்தில் வலுவான தீக்குண்டங்களை உருவாக்கி அதில் அப்பாவிகளை அவற்றில் எறிந்து எரித்துக் கொன்றார்கள். இன்று அப்பாவி மக்களை அவர்கள் வாழும் குடிசைகளுக்குள் வைத்து உயிரோடு கொழுத்துகிறார்கள். அல்லது அவர்கள் வாழும் சேரிப்பகுதிகளை சுற்றிவளைத்து அவற்றை தீக்கிரையாக்குகிறார்கள்.
இறைவன் ஏன் இவற்றைத் தடுப்பதில்லை? 
ஒரு மனிதனை தீயிட்டுக் கொழுத்துவதுதான் வேதனைகளிலேயே மிகப்பெரிய வேதனை. அதுவும் ஒரு அப்பாவி இவ்வாறு அவன் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்படும்போது இதையெல்லாம் கண்டுகொண்டிருக்கும் இறைவன் ஏன் அதைத் தடுக்காமல் நின்று வேடிக்கை பார்க்கிறான்? இக்கேள்வி பெரும்பாலான மக்களுக்குள் எழுவது இயல்பே.
உண்மையில் அணு முதல் அண்டசராசரங்கள் வரை அனைத்தையும் அதிபக்குவமாகப் படைத்து அற்புதமான முறையில் இயக்கி வரும் இறைவன் நாடினால் இக்கொடுமைகளை நடக்கும் முன்னரே தடுக்க முடியும். ஆனால் இவ்வுலகைப் படைத்தவன் இந்தக் குறுகிய நம் வாழ்வை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்குரிய பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ளான் என்ற உண்மையை நாம் உணரும்போது இக்கேள்வி பற்றிய தெளிவு ஏற்படும்.
ஒரு பரீட்சைக் கூடத்தில் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏதேனும் மாணவன் தவறாக விடைஎழுதிக் கொண்டிருப்பதைக் கண்ட ஒரு மேற்பார்வையாளர் உடனே குறுக்கிட்டு அந்த மாணவனைத் திருத்தினாலோ அல்லது அவனை உடனேயே தண்டித்தாலோ அங்கு பரீட்சையின் நோக்கம் நிறைவேறுமா? அதைப்போன்றதுதான் இறைவன் நடத்திவரும் பரீட்சையும்! இறைவன் இவ்வுலகு என்ற பரீட்சைக் கூடத்திற்கு ஒரு தவணையை நிச்சயித்துள்ளான். அக்கூடத்திற்குள்  வந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு தவணைகளை நிச்சயித்துள்ளான். அனைவருக்கும் அதை முழுமிக்க வாய்ப்பளிக்கிறான். ஒருசிலர் அவசரப் படுவதுபோல இறைவன் விரைந்து ஏன் தண்டிப்பதில்லை என்ற கேள்விக்கு  இறைவனே தன் திருமறையில் பதில் கூறுகிறான்:
= மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை இறைவன் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டுவைக்க மாட்டான்மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான்அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம்  பிந்தவும் மாட்டார்கள்முந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 16:61)
இயேசுவைப் பின்பற்றியோருக்கு வந்த சோதனை!
திருமறைக் குர்ஆனின் 85 –வது அத்தியாயம் ஓரிறைக் கொள்கைவாதிகள் தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வை மையமாகக் கொண்டுள்ளது. நபிகளாரின் வருகைக்கு முன்னர் வந்த இறைத்தூதர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ்ந்த மக்களுக்கு நேர்ந்த சம்பவம் அது.  இயேசு கிறிஸ்து (அவர்மீது இறைசாந்தி உண்டாவதாக) போதித்த ஏக இறைக்கொள்கையை பலமாகப் பின்பற்றி வாழ்ந்தார்கள் நஜ்ரான் தேசத்து மக்கள்.  கி.பி. 523ம் ஆண்டில் யமன் நாட்டை ஆட்சி செய்த ‘தூ நுவாஸ்’ என்ற யூதக் கொடுங்கோலன் அந்த நஜ்ரான் வாசிகள் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்தான். அவர்களை பலவந்தமாக இயேசுவின் மார்க்கத்திலிருந்து மாற்றிட முனைந்தான். அவர்கள் மறுத்ததன் காரணமாக பெரும் அகழ்களைத் தோண்டி நெருப்புக் குண்டத்தை வளர்த்து, அதனுள் அவர்களை வீசி எறிந்தான்.
இது போன்று கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களோடும் இன்று நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களோடும் இனி எதிர்காலங்களில் நடக்கவிருக்கும் சம்பவங்களோடும் தொடர்புடைய அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் அமைந்துள்ளன இந்த அத்தியாயத்தின் வசனங்கள்.
“ஒ கொடுங்கோலர்களே, அக்கிரமக்காரர்களே, ஆதிக்கசக்திகளே, அகங்காரிகளே நீங்கள் இந்த பூமியின்மீது  நிகழ்த்திய அக்கிரமங்களுக்கான தண்டனைகளை அனுபவிக்கத்தான் போகிறீர்கள். நீங்கள் நிகழ்த்திய கொடுமைகளுக்கான எதிர்வினையை உங்கள் வாழ்நாளில் அனுபவிக்காமலே தப்பித்திருக்கக்கூடும். ஆனால் நீதிமானான இறைவனின் நீதிமன்றம் மறுமையில் கூட இருக்கிறது. அதுவே இறுதித்தீர்ப்பு நாள்! அது உறுதியான ஒன்று. இன்று வானங்களையும் பூமியையும் எவ்வாறு உறுதியாகக் காண்கிறீர்களோ அதைவிட உறுதியான – தவிர்க்க முடியாத -நிகழ்வுதான் மறுமை விசாரணை என்பது. அந்நாளில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பபட்டு நீங்கள் விசாரிக்கப்பட உள்ளீர்கள்.” எனும் எச்சரிக்கையை பலமாக முன்வைக்கின்றன அவை:
85:1உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின் மீது சத்தியமாக!
85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
அக்கிரமக்காரர்கள் தாங்கள் நிகழ்த்திய அல்லது நிகழ்த்திக் கொண்டிருக்கும் கொடுமைகளுக்கு சாட்சிகள் காலப்போக்கில் அழிந்து போகலாம் அல்லது பலவந்தமாக அழிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் மறுமை நாளன்று அவை அனைத்துமே உயிர்பெற்று வர உள்ளன.
சாட்சிகளுக்குப் பஞ்சமில்லை
சற்று சிந்தித்தாலே உண்மை விளங்கும். பூமியானது தனது அச்சின் மீது தன்னைத்தானே சுழன்று கொண்டு சூரியனை சுற்றி வருவதும் சூரியன் தன் குடும்பத்தோடு அது சார்ந்த பால்வெளி அண்டத்தின் மையத்தை சுற்றி வருவதும் நாமறிந்தவையே. இவ்வாறான நம் பயணப் பாதையில் – விண்வெளியில் நாம் கடந்து செல்லும் பாதையில் ஆயினும் சரி, பூமியில் நம் இருப்பிடங்களில் ஆயினும் சரி  - நமது  உடல் வெளிப்படுத்தும் அகச்சிவப்பு கதிர்கள் (infrared rays) போன்றவையும்  நாம் வெளிப்படுத்திய ஒலி, ஒளி, வாசம் போன்றவை மூலம் உண்டான மின்காந்த அலைகளும் (electromagnetic waves) அவற்றிற்குரிய பதிவை அக்கம்பக்கத்தில் ஏற்படுத்தாமல் செல்வதில்லை என்று அறிவியல் கூறுகிறது. மேலும் மனித மூளை நமது செயல்களை இடையறாது பதிவு செய்கிறது என்பதை நாம் அனுபவபூர்வமாகவே அறிவோம். ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும் ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும் அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும் இன்றைய அறிவியல் நமக்கு  சொல்லித் தருகிறது. இன்று நாம் காணும் cctv கேமராக்களை விட பன்மடங்கு உயர்வான தொழில்நுட்பத்தைக் கொண்டவை நமது கண்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
அக்கிரமக்காரனே முதல் சாட்சி 
இவ்வாறு எந்த ஒரு அக்கிரமம் நிகழ்ந்தாலும் அதற்கு முதல் சாட்சியாக அதை நிகழ்த்துபவனே திகழ்கிறான். அடுத்து அக்கிரமத்திற்கு உள்ளாபவர்களும் சுற்றுப்புறங்களும் பூமியும் விண்வெளியும் சாட்சிகளாக நிற்கின்றன. அழிக்கமுடியாத அனைத்துவிதமான சாட்சிகள் மீதும் சத்தியம் செய்து நெருப்புக்குண்டத்தார் சபிக்கப்பட்டு விட்டனர் என்கிறான் இறைவன்.
தொடர்ந்து அந்த நெருப்புக் குண்டத்தைப் பற்றியும் அந்த காட்சியையும் பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
85:5. (அது எத்தகைய தீக்குண்டமெனில்) அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் எரிபொருள் இருந்தது.,
85:6,7  அவர்கள் அதன் ஓரத்தில் அமர்ந்திருந்து நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள்.
ஆம், எந்தக் கண்களைக் கொண்டு அக்காட்சியை இரசித்துக் கொண்டிருந்தார்களோ அந்தக் கண்களே அவர்கள் நிகழ்த்தும் கொடுமைக்கு மறுமையில் சாட்சிகூற உள்ளன என்ற உண்மையை உணராமலேயே அன்று இருந்தார்கள்!
எதற்காக தண்டித்தார்கள்?
85:8. அந்த இறைநம்பிக்கையாளர்களிடம் இவர்கள் பகைமை பாராட்டியதற்குக் காரணம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை: யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே புகழுக்குரியவனுமான அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதுதான்!
85:9. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனும் அந்த இறைவனே. மேலும், அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்லாஹ் என்றால் ‘வணக்க்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் மட்டுமே எங்கள் வணக்கத்திற்குரியவன், அவனல்லாது எதையும் எவரையும் நாங்கள் வணங்கமாட்டோம் என்ற ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்ததனால்தான் அந்த அப்பாவிகள் தீக்குண்டத்தில் எறியப்பட்டார்கள். இந்த ஓரிறைக் கொள்கை எதனால் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஆம், ஓரிறைக் கொள்கை என்பது மனிதனை இனம், இடம், நிறம், மொழி போன்றவற்றின் பெயரால் கற்பிக்கப்படும் அடிமைத்தளைகளில் இருந்தும் வரம்புகளில் இருந்தும் விடுவித்து பரந்த மனப்பான்மை கொண்டவனாகவும்  அவனை சுயமரியாதை உள்ளவனாகவும் ஆக்குகிறது. இந்த வரம்புகளுக்கப்பால் சகமனிதனை சகோதரனாகவும் சமமானவனாகவும் பார்க்கும் பண்பை அவனுக்குள் உண்டாக்கி விடுகிறது. இக்கொள்கை சுயமரியாதை உணர்வைத் தூண்டுவதால் மக்கள் விழிப்புணர்வு பெற்று தங்களுக்கு எதிராக அணிதிரள்வார்கள் என்று ஆதிக்க சக்திகள் அஞ்சுகிறார்கள். இறைவனை இடைத்தரகர் இன்றி நேரடியாக வணங்கச் சொல்வதால் கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளைப் பரப்பி குடிமக்களைச் சுரண்டும்  இடைத்தரகர்களும் ஆதிக்க வர்க்கத்தினரும் அச்சம் அடைகிறார்கள். எனவே தங்கள் ஆதிக்கத்திற்கு வேட்டு வைக்கும் இந்த ஓரிறைக் கொள்கை மக்களிடையே பரவாமல் தடுக்க அதை ஏற்றுக்கொண்ட மக்களை அடியோடு துடைத்தெறிவதே ஒரே வழி என்று கருதினார்கள் அவர்கள். அதனால்தான் இந்தக் கொடூர தண்டனை!
இஸ்லாம் சந்தித்துவரும் ஓயாத தாக்குதல்கள்
இன்றும் உலகெங்கும் இஸ்லாமியர்கள் ஒன்றன்பின் ஒன்றாக  தாக்குதல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாகி வருவதை அறிவீர்கள். சமீபத்திய உதாரணம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்.  இவற்றுக்குக் காரணம் இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளதனால்தான். ஒன்றே மனிதகுலம், ஒருவன் மட்டுமே இறைவன், அவனிடமே நமது மீளுதலும் விசாரணையும் உள்ளது, மறுமையில் சொர்க்கமும் நரகமும் உள்ளன என்பனவற்றை  இஸ்லாம் அடிப்படையாக போதித்து மக்களை இறையச்சம் உள்ளவர்களாக ஆக்குகிறது.
எங்கெல்லாம் இஸ்லாம் பரவுகிறதோ அங்கெல்லாம் அதர்மத்திற்கு எதிராக மக்களை விழித்தெழச் செய்கிறது.   உலகில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் அநியாயங்களும் மனித உரிமை மீறல்களும் தடுக்கப்படவேண்டும். ஏட்டளவில் பேச்சளவில் என்று இல்லாமல் இஸ்லாம் நடைமுறையில் மக்களை அதற்கு வழிநடத்துகிறது. நன்மையை எவுவதையும் தீமையைத் தடுப்பதையும் இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகவே கற்பிக்கிறது இஸ்லாம்.
 மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)
 இதன் காரணமாக மக்கள் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் அவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எதிராகத் திரும்புகிறார்கள்.   இவ்வாதிக்க சக்திகளின் அடிமைத்தளையில் இருந்து தங்கள் நாடுகளை விடுவிப்பதற்காக அவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசுகளுக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார்கள்.
அக்கிரமக்காரர்களுக்கு இறைவனின் எச்சரிக்கை
இதுவரை அப்ப்பாவிகள் மீது நடந்த அத்துமீறல்களுக்கும் சரி, தற்போது நடந்து கொண்டிருக்கின்றவற்றிற்கும் சரி, இனி எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்ற அத்துமீறல்களுக்கும் சரி கண்டிப்பாக இறைவனின் விசாரணையும் தண்டனையும் நிறைவேற உள்ளது  என்பதை எச்சரிக்கின்றது அடுத்த வசனம்:
85:10. இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மீது எவர்கள் கொடுமைகள் புரிந்தார்களோ, பிறகு அதற்காக மன்னிப்புக் கோரி மீளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயம் நரகவேதனை இருக்கிறது. மேலும், சுட்டெரிக்கும் தண்டனையும் உண்டு,
தொடரும் வசனங்கள் இறைநம்பிக்கை கொண்ட நன்மக்களுக்கு தன்னம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளன. நீர்க்குமிழி போல மின்னி மறையும் இந்தக் குறுகிய பரீட்சை வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும்  சித்திரவதைகளும்  உயிர் மற்றும் உடமைகளின் இழப்புகளும் தற்காலிகமானவையே.. சர்வவல்லமை கொண்ட இறைவனின் கண்காணிப்பின் கீழேயே அவை அனைத்தும் நடைபெறுகின்றன. அவையில் எதுவும் வீண்போவதில்லை. மாறாக  இறுதித்தீர்ப்பு நாளன்று அவை ஒப்பிலா வெகுமதிகளை பெற்றுத்தர உள்ளன. நித்திய வாழ்வும்  நிரந்தர இன்பங்கள் கொண்ட சுவனங்களும் அவர்களுக்கு பரிசாகக் காத்திருக்கின்றன என்ற உண்மைகளை நினைவூட்டுகின்றன:
85:11. எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இதுவே பெரும் வெற்றியாகும்.
85:12உண்மையில், உம் இறைவனின் பிடி மிகக் கடுமையானது.
85:13திண்ணமாக, அவனே முதன் முதலாகப் படைக்கின்றான். அவனே மீண்டும் படைப்பான்.
85:14மேலும், அவன் அதிகம் மன்னித்தருள்பவனாகவும், அன்பு செலுத்துபவனாகவும் இருக்கின்றான்.
85:15,16. . அர்ஷின் (அனைத்துலகங்களின் ஆட்சிபீடத்தின்) உரிமையாளனாகவும், மேன்மை மிக்கவனாகவும், தான் நாடுகின்றவற்றை செயல்படுத்துபவனாகவும் இருக்கின்றான்.
------------------------
இஸ்லாம் என்றால் என்ன?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html

அநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்

http://quranmalar.blogspot.com/2016/11/blog-post_30.html

திங்கள், 7 மே, 2018

பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்


 இங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பாகும். சுருங்கக் கூறின், மனித வாழ்க்கையின் நோக்கம், இறைவனின் உள்ளமை மற்றும் தன்மைகள், அவனோடுள்ள தொடர்பு, எவ்வாறு இந்த தற்காலிக பரீட்சை வாழ்க்கையில் மனிதன் நடக்க வேண்டும், நன்மை, தீமை, பாவம், புண்ணியம், நியாயம், அநியாயம், இறுதித்தீர்ப்பு நாள், மறுமை, சொர்க்கம், நரகம் போன்றவற்றை உரியமுறையில் எடுத்துரைத்து மனிதனை நெறிப்படுத்துவதே திருக்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கமாகும். திருக்குர்ஆன் அறிவியல்(science) நூலல்ல. ஆனால் மனித ஆய்வுக்கான சான்றுகளைத் (Signs) தாங்கி நிற்கும் நூலாகும்.
ஒப்புவமையில்லா இறைவன் அற்ப ஜீவியான மனிதனோடு உரையாடும் வாசகங்களே திருக்குர்ஆன் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக கடலில் வாழும் மீனோடு  கரையில் வாழும் நாம் கருத்துப் பரிமாற நாடினால் அந்த மீனின் புரிதலுக்கு உட்பட்டவாறுதானே உரையாடுவோம்? அதேபோல நம் புரிதலுக்கும் ஆய்வுக்கும் ஏற்றவாறு திருக்குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பதை நாம் காணலாம். 
மட்டுமல்ல மனிதன் என்பவன் நாளுக்கு நாள் அறிவு வளர்ச்சி பெறுபவன் எனபதையும் அறிவோம். அன்று வாழ்ந்த பாலைவனத்து மக்களும் பூமியின் பிறபகுதியில் வாழ்ந்த மக்களைப் போன்றே பூமி தட்டையானது என்றும் வானம் வீட்டின் கூரை போன்ற ஒரு முகடு என்றே நம்பிக்கொண்டு இருந்தார்கள். காரணம் அறிவியல் அன்று அவ்வளவே வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால் இன்று அறிவியல் வளரவளர வானம் என்றால் விண்வெளி (space) என்றும் பூமியும் சூரியன் சந்திரன் போன்று கோளவடிவானது என்பதும் இந்தப் பிரபஞ்சத்தின் விரிவும் விசாலமும் எல்லாம்  தெளிவாகி வருகின்றன. அன்றைய பாமர மக்களுக்கும் அதே போல இன்றைய அறிவியல் வளர்ச்சி பெற்ற காலத்து மக்களுக்கும் பொருத்தமான வகையில் அமைந்திருக்கும் அற்புதத்தை திருக்குர்ஆனின் வசனங்களில் நாம் காணலாம்.
 = (நபியே!) வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை (குர்ஆனை) இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 25:6)

அறிவியல் கண்டறிந்த பிரபஞ்சத்தின் துவக்கம்
'காலம்' (Time), 'இடம்' (Space) ஆகிய இரண்டுமேயில்லாத ஒரு இடத்தில், நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்யமுடியுமா? இந்தக் கேள்வியே எவ்வளவு அபத்தமாக இருக்கிறது பாருங்கள். 'இடம்' இல்லாத ஒரு இடத்தில் எப்படி இருக்க முடியும்? சரி, இந்தக் கேள்வியை இப்படிப் புரிந்து கொள்வோம். உங்கள் வீட்டில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். உங்கள் வீடு சென்னையில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சென்னையிலிருக்கும் வீட்டில் நீங்கள் இருப்பதை உங்களால் கற்பனை பண்ண முடியுமல்லவா? சென்னை, இந்தியாவில் இருக்கிறது. இந்தியா பூமியிலும், பூமி சூரியக் குடும்பத்திலும் இருக்கிறது. சூரியக் குடும்பம் பால்வெளிமண்டலத்திலும், பால்வெளிமண்டலம், பேரண்டத்திலும் இருக்கிறது. இப்பொழுது யோசித்துப் பாருங்கள். இந்தப் பேரண்டத்தில் எங்கோவொரு மூலையில் நுண்ணியதொரு புள்ளியாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்பது புரியும். திடீரென ஒருகணத்தில், பேரண்டமே காணாமல் போய்விடுகிறது. பூமி மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது. பூமியைத் தவிர எங்கும், எதுவும் இல்லை. இந்த நிலையைக்கூட, உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும். இப்போது பூமியும் படிப்படியாக மறையத் தொடங்குகிறது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே மறைந்து போகின்றன. இறுதியில் உங்கள் வீடும், நீங்கள் நிற்கும் தரையும் இல்லாமல் போகின்றது. ஆனால் நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றியோ, மேலேயோ, கீழேயோ எதுவுமில்லை. எதுவுமில்லையென்றால், எதுவுமேயில்லை. முழுமையான வெற்றிடம். அதை வெற்றிடம் என்று கூடச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அங்கு வெற்றிடம் என்ற ஒன்று இருக்கிறது என்றாகிவிடும். அதனால் வெற்றிடம் கூட அங்கில்லை. அது என்ன நிலையென்றே சொல்ல முடியாத ஒரு நிலை. அந்த நிலையில் நீங்கள் நிற்கிறீர்கள். எந்தச் செயலையும் செய்ய முடியாத ஒரு உறைந்த நிலையாக அது இருக்கும். நீங்கள் நடக்க முடியாது. நடப்பதற்குத்தான் இடமில்லையே! பார்க்க முடியாது. பார்ப்பதற்கு ஒளியுமில்லை, பொருட்களுமில்லை. பேச முடியாது. பேச்சைக் கடத்தும் காற்று அங்கில்லை. அதேபோல, எதையும் கேட்கவும் முடியாது. மொத்தத்தில் எதுவும் செய்ய முடியாது. அங்குக் காலம் (நேரம்) என்பது கூட இல்லை. காலம் என்பதற்கான எந்த அர்த்தமும் அங்கில்லை. இப்போது முதலில் நான் கேட்டிருந்த கேள்வியை மீண்டும் பாருங்கள். காலம், இடம் இரண்டுமில்லாத ஒரு நிலையில் நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லையல்லவா? ஆனால் கற்பனையே பண்னமுடியாத அப்படியானதொரு நிலை உண்மையில் இருந்துதானிருக்கிறது என்கிறது அறிவியல்.

நாம் இன்று வாழ்ந்துகொண்டு இருக்கும் பேரண்டத்தின் துவக்கம் அங்கிருந்துதான். அந்த நிலையில் பேரண்டம், ஒரு அணுவைவிடச் சிறிய புள்ளியாகச் சுருங்கி இருந்திருக்கிறது. பேரண்டம் சிறுபுள்ளியாகச் சுருங்கியிருந்த நிலையை 'ஒருமை நிலை' (Singularity) என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அவ்வாறு மிகமிகச்சிறியதொரு புள்ளியாக ஒடுங்கியிருந்த ஏதோவொன்று, ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது. வெடிப்பு என்றால் வெடிப்பு. மனிதனால் கற்பனையே பண்ணிக் கொள்ள முடியாதவொரு பெருவெடிப்பு. கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து வெடித்தது போல இருந்த அந்தப் பெருவெடிப்பைத்தான் 'பிக்பாங்க்' (Bigbang) என்கிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே அது பேரண்டமாக விரிவடைந்தது. மிகச் சிறியதொரு புள்ளி ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்துக்குள் பேரண்டமாக விரிவடைந்தது.


=  (அன்றி) அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் எதைப் படைக்கக் கருதினாலும் அதனை "ஆகுக!" எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடுகிறது. (திருக்குர்ஆன் 2:117) 
அறிவியல் ஆய்வுகளின் படி ஒவ்வொரு நிகழ்வுகளும் கட்டங்களும் ஒரு குறிப்பிட்ட கால அளவைக்குள் நடப்பதாக கண்டறியப்படுகின்றன. ஆனால் காலத்தையும் இடத்தையும் படைத்தவன் இந்த விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவன். அவனைப் பொறுத்தவரையில் ‘ஆகு’ என்ற ஒரு கட்டளை போதுமானது. (இதையே “வார்த்தை’ என்கிறது பைபிள்). அனைத்துப் பக்குவங்களோடும் பின்னணிகளோடும் அது ஆகிவிடுகிறது.

பெருவெடிப்பு பற்றிய குறிப்பை இறைவேதம் திருக்குர்ஆனில் காணலாம்:
= நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் சத்தியமறுப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (திருக்குர்ஆன் 21:30) 

தொடரும் பிரபஞ்ச விரிவாக்கம்
பெருவெடிப்பின் வீரியத்தால் விரிவடையத் தொடங்கிய பேரண்டம் இப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதை 1929ம் ஆண்டில் 'எட்வின் ஹபிள்' (Edwin Hubble) என்பவர் கண்டுபிடித்தார். தொலைநோக்கிக் கருவியினால் விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்த ஹபிள், அண்டத்தின் எல்லையில் காணப்பட்ட 'காலக்ஸிகள்' (Galaxies) ஒன்றையொன்று விலகிச் செல்வதை அவதானித்தார். பலூன் ஒன்றில் பேனாவின் மூலம் சுற்றிவரப் புள்ளிகளையிட்டுப் பின்னர் அந்தப் பலூனைப் படிப்படியாகப் பெரிதாக ஊதும்போது, அதில் உள்ள புள்ளிகள் எப்படி ஒன்றை ஒன்று விட்டு விலகிச் செல்லுமோ அப்படி, அண்டத்தின் எல்லைகளில் இருக்கும் காலக்ஸிகளும் விலகிச் செல்கின்றன என்று கண்டுபிடித்தார்.
 மிகத் தொலைவிலிருந்து வரும் ஒளி, நம்மை நோக்கி வந்தால் அது நீலநிறமாகவும், விலகிச் சென்றால் சிவப்பு நிறமாகவும் ஒளிப்பிரிகையடையும் என்னும் கருதுகோள் ஒன்று உண்டு. அதைச் 'செந்நிற விலகல்' (Red Shift) என்று சொல்வார்கள். ஹபிள், நட்சத்திரக் கூட்டங்களை அவதானித்தபோது, அவை சிவப்பு நிற ஒளியுடன் விலகுவது தெரிந்தது. தற்கால விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளும் இதைச் சுப்பர் நோவாக்களின் (Supernova) விலகலை வைத்து உறுதிசெய்து கொண்டார்கள்.

தொடரும் விரிவாக்கமும் அதிர்ச்சியும்
அண்டம் இன்றும் விரிவடைந்து செல்வதற்கு ஆரம்பப் பெருவெடிப்பின் வீரியம்தான் காரணம் என்று நம்பி வந்த விஞ்ஞானிகளுக்குப் பேரதிர்ச்சியொன்று காத்திருந்தது. பெருவெடிப்பின் வீரியம் எந்த அள்வு பெரிதாக இருந்தாலும், என்றாவது ஒருநாள் அது பூச்சியமாக வந்துதான் ஆக வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஒரு கிரிக்கெட் பந்தை என்னதான் பலம் கொண்ட அளவுக்கு மேல்நோக்கி எறிந்தாலும், புவியீர்ப்புவிசைக்கெதிராக மேலே செல்லும் பந்து, ஒரு குறித்த இடம்வரை சென்று, மீண்டும் ஈர்ப்புவிசையால் கீழே விழ ஆரம்பிக்கும். அதுபோல, பெருவெடிப்பினால் ஏற்பட்ட விரிவும் ஒரு நாள் தன் எல்லையை அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்பினார்கள். அதன்பின்னர், அண்டத்தில் உள்ள காலக்ஸிகளின் ஈர்ப்புவிசையினால், அவை ஒன்றையொன்று இழுக்க, மீண்டும் அண்டம் சுருங்க ஆரம்பிக்கும். அப்படிப் படிப்படியாகச் சுருங்கி மீண்டும் ஆரம்பப் புள்ளியின் நிலையை அண்டம் அடையும் என்று கருதினார்கள். இதற்குப் 'பெரிய சுருக்கம்' (Big Crunch) என்று பெயரும் வைத்திருக்கிறார்கள்.
விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த ஆச்சரியம்
 நவீன தொலைநோக்கிக் கருவிகள்மூலம் பெருவெடிப்பின் விரிவு நடந்த காலங்களைப் படிப்படியாக ஆராய்ந்து கொண்டு வந்த போதுதான் அந்த ஆச்சரியத்தை விஞ்ஞானிகள் கண்டுகொண்டனர்.  பெருவெடிப்பின் பின்னர் உருவான கோடிக்கணக்கான காலக்ஸிகளெல்லாம் அண்டத்தின் விரிவால் விலகிச் சென்ற போதும், காலக்ஸிகளுக்குள் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் தமக்குள் விலகாமல், ஒரு ஈர்ப்புவிசையுடன் பிணைக்கப்பட்டு. ஒன்றாகவே இருந்து வந்தன. அப்படியொரு விலகல் ஏற்படுமேயானால், பூமி எப்போதோ சூரியனை விட்டு விலகிச் சென்றிருக்கும், அல்லது சூரியன் வேறு நட்சத்திரத்துடன் மோதியிருக்கும். ஆனால், ஒவ்வொரு காலக்ஸியையும் ஒன்றாக இணைத்தும், அதை விண்வெளியுடன் சேர்த்தும், ஏதோ ஒரு சக்தி வைத்திருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். அந்தச் சக்தி எதுவென்றே ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத கருமையான ஒரு சக்தியாகவே, அந்தச் சக்தி இருப்பது மட்டும் புரிந்தது. இந்த நேரத்தில்தான் ஐன்ஸ்டைன் கண்டுபிடித்துச் சொல்லிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு உதவியது. விண்வெளியில் இருப்பவைகளின் ஈர்ப்புவிசையின் பலத்தினால், ஒளிகூட வளையும் என்று சொல்லியிருந்தார். இதைக் 'ஈர்ப்பு வில்லை' (Gravitational Lensing) என்பார்கள். இதை வைத்துக் கொண்டு விண்வெளியை ஆராய்ந்தபோது, கறுப்பு நிறத்திலான ஏதோ ஒன்று காலக்ஸிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதைக் கண்டு கொண்டார்கள். அந்தக் கருப்பு நிறப்பொருளையே 'கரும்பொருள்' (Dark Matter) என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பேரண்டம் முழுவதும் 23% அளவில் இந்தக் கருப்பு சக்தி பரவியிருப்பதை இப்போது கணித்திருக்கிறார்கள். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மோட்டார் வாகனத்துக்குப் பயன்படுத்தும் டீசல் எண்ணெய்யை ஊற்றிவிட்டு, அதன் மேற்பரப்பில் மரத்தூளை நீங்கள் தூவினால், எப்படிக் கருத்த டீசல் எண்ணெய் அந்த மரத்தூள்களை சேர்த்து வைத்திருக்கிறதோ, அப்படிக் கரும்பொருளும், காலக்ஸிகளை தன்னுடன் இழுத்து வைத்தபடி இருக்கின்றது. நவீன தொலைநோக்கிகள்மூலம் அவதானித்தபோது, பெருவெடிப்பின் பின், இந்த டார்க் மாட்டரானது காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்து அண்டத்தைச் சீராக விரிவடையச் செய்துகொண்டிருந்தது. ஆனால், இந்தச் சீரான விரிவு 9 பில்லியன் ஆண்டுகள் வரைதான் இருந்தது. அதன் பின்னர் நடந்தது இன்னுமொரு பேராச்சரியம்.
விண்வெளி விரிவதை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் பெரும் ஆச்சரியத்தைத் திடீரெனக் கண்டுகொண்டார்கள். அண்டத்தின் எல்லையில் உள்ள காலக்ஸிகள் சிலவற்றில் காணப்பட்ட சுப்பர்நோவா நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள தூரங்களை அளந்து எடுத்துக் கொண்டார்கள். அவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் அளந்து கொண்டு வந்தபோது, அந்த ஆச்சரியம் உறுதிசெய்யப்பட்டது. அதாவது, பேரண்டமானது ஒரு குறித்த வேகத்தில் விரிவடைவதற்குப் பதிலாக வேகவளர்ச்சியுடன் (Acceleration) கூடிய மிகை வேகத்துடன் விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பந்தை, வானத்தை நோக்கி எறிந்தால், அந்தப் பந்தின் வேகம் படிப்படியாகக் குறைந்து பூச்சியமாக வேண்டுமல்லவா? அதற்கு மாறாக, அந்தப் பந்து மேலும் மேலும் வேகவளர்ச்சியடைந்து மேல் நோக்கிச் சென்று கொண்டேயிருப்பது நம்பமுடியாத ஒன்றல்லவா? தொலைநோக்கிக் கருவிகள்மூலம் இதை ஆராய்ந்து பார்த்தபோது, கடந்த நான்கு பில்லியன் வருடங்களாகத் திடீரென இந்த வேகவளர்ச்சி அண்டத்தில் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அது எப்படி? எது இந்த வேக வளர்ச்சியைக் கொடுக்கிறது? 'டார்க் மாட்டர்' காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமொரு சக்தி அவற்றை வேகவளர்ச்சியுடன் விலகச் செய்கிறதே! இந்த ஆச்சரியத்துக்கு என்ன காரணம்? யாருக்குமே இன்றுவரை விடை தெரியாத மர்மம் இது.
பிரபஞ்ச விரிவு பற்றி படைத்தவன் கூற்றை நாம் இங்கு நினைவு கூருவோம்.
= மேலும், நாம் வானத்தை (நம்) சக்தி கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாக்கும் ஆற்றலுடையவராவோம்.  (திருக்குர்ஆன் 51:47) 

கரும்சக்தி மற்றும் கரும்பொருள்
அண்டத்தை வேகமாக விரிவடையச் செய்யும் அந்தச் சக்தியைத்தான் 'கரும்சக்தி' (Dark Energy) என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கரும்சக்தி, அண்டம் எங்கும் பரவி, அண்டத்தை நினக்கவே முடியாத அளவு பெரிதாக்கி, முடிவிலியை நோக்கி விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. இந்தச் சக்தியின் விரிவும் ஒரு நாள் முடிவடைந்து மீண்டும் குறைவடையுமா? அல்லது மேலும் மேலும் விரிவடைந்து கொண்டு போய், ஒரு நிலையில் அந்த விரிவைத் தாங்க முடியாமல், அண்டம் மீண்டும் கட்டுடைந்து உறைந்து போகுமா? எதுவும் தெரியவில்லை. இப்படி விரிவடைந்து கொண்டு சென்று ஒருநாள் அதன் தாக்கம் தாங்க முடியாமல் உருக்குலைந்து போவதை, 'பெரும் குளிர்ச்சி' (Big Chill) என்கிறார்கள்.
  கரும்பொருள், கரும்சக்தி ஆகிய இரண்டுமே இன்றைய விஞ்ஞானிகளுக்குச் சவால் விடும் இரண்டு சக்திகள், இதுவரை இவை எவையென மனிதனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதுவாக இருக்கலாம், இதுவாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் மட்டும்தான் உள்ளனவேயொழிய, உன்மையில் இவை என்னவென்று தெரியவே தெரியாது. இன்றுள்ள கணிப்பின்படி, அண்டம் முழுவதும் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், காலக்ஸிகள், கருந்துளைகள், க்வேஸார்கள் இன்னபிற பொருட்களெல்லாம் சேர்ந்து, அண்டத்தின் 4% அளவும், கரும்பொருள் என்னும் டார்க் மாட்டர் 23% அளவும், கரும்சக்தி எனப்படும் டார்க் எனர்ஜி 73% ஆகக் காணப்படுகின்றன.
 = நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன். (திருக்குர்ஆன் 35:41)
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)

No automatic alt text available.ஜப்பானில் உள்ள டோக்கியோ வானியல் ஆய்வுக்கூட இயக்குனர் யுஷிதி கூஷன் (Yushidi Kusan) அவர்களின் கூற்று இங்கு கவனத்திற்குரியதே:
குர்ஆனில் வானியல் தொடர்பான உண்மைகள் இருப்பதைக் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். கவரப்படுகிறேன். நவீன வானியல் ஆராய்ச்சியாளர்களாகிய நாங்கள் இப்பிரபஞ்சத்தின் மிகச்சிறிய பகுதியைத்தான் ஆராய்ந்து வருகிறோம். ஒரு சிறிய பகுதியைப் புரிந்துகொள்வதன்மீதுதான் நாங்கள் எங்கள் முயற்சிகளையெல்லாம் குவிக்கிறோம். ஏனெனில் தொலைநோக்கிகள் வழியாக வானத்தின் ஒரு சில பகுதிகளைத்தான் எங்களால் பார்க்க முடியும். முழு பிரபஞ்சத்தையும் பற்றியெல்லாம் நினைக்கவே முடியாது. குர்ஆனைப் படிப்பதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் காணுவதன் மூலமும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய எனது ஆராய்ச்சியின் எதிர்கால வழியை என்னால் காணமுடியும் என்று கருதுகிறேன்.
-------------------------------- 
இங்கு இடம்பெற்ற அழகிய தமிழ் அறிவியல் தகவல்கள் அண்ணன் ராஜ்சிவா அவர்களின் http://writerrajsiva.blogspot.in வலைத்தளத்தில் இருந்து பெறப்பட்டவை. இறைவன் அவருக்கு அருள்வானாக!