இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 செப்டம்பர், 2012

இறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்கள்


முந்தைய வேதங்கள் கூறும் ஆதாரங்கள்
இறுதி வேதத்தில் சொல்லப்பட்டவாறே முந்தைய வேதங்களிலும் இறைவனுக்கு இணைவைத்தல் வன்மையாகக் கண்டிக்கப்படுவவதை நாம் காணலாம்.
இதற்கான ஆதாரங்களை காணலாம்.
·  யாருடைய அறிவு உலகாசையால் களவாடப்படுகிறதோ அவர்களே போலிதேய்வங்களை வணங்குகிறார்கள். (பகவத் கீதை ௭:௨௦)
·  அந்தம் தமஹ பிரவிசந்தி யா அசம்பூதி முபாசதே - (பொருள்: யார் இயற்கை வஸ்த்துக்களைகாற்று நீர், நெருப்பு போன்றவை) வணங்குகிறார்களோ அவர்கள் அறியப்படாத இருளில் மூழ்குகின்றனர்.) - யஜுர்வேதம்  Yajurveda, Chapter 40, Verse 9
·   யார் மனிதர்களால் படைக்கப்பட்ட பொருட்களை (மேஜை,நாற்காலி, சிலைகள் போன்றவை) வணங்குகிரார்களோ அவர்கள் இன்னும் ஆழமான இருளில் மூழ்குகின்றனர் என்று தொடர்ந்து கூறுகிறது யஜூர் வேதம்  
பைபிளின் கூற்று:
இன்னும் பழைய ஏற்பாட்டிலே , யாஸ்ராகாமத்திலே 1 முதல் 5 வரை உள்ள வசனங்கள் கூறுகின்றன:
எகிப்து தேசம்! அடிமைத்தள வீடாகிய எகிப்து தேசத்தில் இருந்து உங்களை பிறப்படப் பண்ணிய கர்த்தராகிய நானே தேவன். என்னையல்லாது வேறு ரட்சகனில்லை. மேலே வானத்திலேயும், கீழே பூமியிலேயும், பூமியின் கீழ் தண்ணீரிலேயும் கர்த்தருக்கு இணையாக யாதொரு சொரூபத்தையும், யாதொரு விக்ரகத்தையும் நீர் எடுத்துக் கொள்ள வேண்டாம். கர்த்தர் அதை வெறுக்கிறார் என்று கூறுகிறது.
 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும்  நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (தீமோத்தேயு 6:16) 
     பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கின்றவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானே அல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் பிரவேசிப்பதில்லை.   (புதிய  ஏற்பாடு மத்தேயு 7:21)
          ஏசு சொல்கின்றபடி ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அதை விடுத்து ஏசுவையே வணங்கச் சொல்வது, ஏசு சொன்னதற்கு மாற்றமாகும். ஏசுவின் பெயரைச் சொல்லி இல்லாத காரியம் பண்ணுகிறவர்களை ஏசு மிகவும் எச்சரிக்கிறார். இதோ,
          அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே  தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா…? உமது நாமத்தினாலேயே  அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா…? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லைஅக்கிரமச் செய்கையாரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்.
(மத்தேயு 7:21)
இவை எல்லாம் எதை நமக்கு எடுத்துரைக்கின்றன?....
 தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும், அவனை விடுத்து மற்றவற்றை வணங்குவது மாபெரும் பாவம் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார்கள் என்பதைத்தானே?
 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ  (இறை வெளிப்பாடு) அறிவிக்காமலில்லை.  (திருக்குர்ஆன் 21:25)
எனவே இறைவனுக்கு இணைவைத்தல் என்பது இறைவன் வன்மையாகத் தடுக்கும் காரியமும்,  மன்னிக்கப்படாத பாவமும் ஆகும். மேலும் இப்பாவத்துக்கான தண்டனை மறுமையில் நிரந்தர நரகமாகும் என்பதைத் தெளிவாக அறிகிறோம்.
  'நிச்சயமாக வேதக்காரர்களிலும் இணைவைப்பாளர்களிலும்; எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள்  இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள';. (திருக்குர்ஆன் 98:6)
ஆக, இந்த இணைவைக்கும் பாவத்தை யார் எந்த வடிவில் செய்தாலும் அது பாவமே! 

இறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது?

இணைவைத்தல் என்றால் என்ன?
- படைத்த இறைவனை வழிபடுவதற்கு பதிலாக மனிதர்கள், சூரியன், சந்திரன், மரம், விலங்கினங்கள், போன்ற இன்ன பிற படைப்பினங்களை வணங்குவது மற்றும் பிரார்த்திப்பது  
- இவ்வுலகிலிருந்து மறைந்துவிட்ட மனிதர்களின் உருவச்சிலைகள்,, சமாதிகள் (தர்காக்கள்), அல்லது வேறு கற்பனை உருவங்களை வணங்குவது அல்லது அவர்களிடம் பிரார்த்திப்பது
- இறைவன் அல்லாத எதனையும் இறைவன் என்றோ கடவுள் என்றோ அழைப்பது மற்றும் பிரார்த்திப்பது
- ஏகனான இறைவனுக்கு இல்லாத மக்களையும் மனைவிமார்களை எல்லாம்   கற்பித்து அவர்களை வணங்குவது.
- இன்னும் இவைபோன்ற செயல்களுக்கு இறைவனுக்கு இணைவைத்தல் என்று கூறப்படும்.

பாவங்கள் பெருக மூல காரணம் இது : மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக கடவுளைப் பற்றிய பயம் வேண்டும். அதாவது என்னைப்  படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான்.  உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வந்ததன் விளைவு மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. ஆக, இந்த  இறைவனுக்கு இணை வைக்கும் செயல்தான் இன்று நாட்டில் காணப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் குழப்பங்களுக்கும் மூல காரணம் அல்லது ஊற்றுக் கண் என்றுணரலாம். அப்படிப்பட்ட கடவுள் பயமற்ற தலைமுறைகள் உருவாகும் போது  பாவங்கள்  கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன.
மூடநம்பிக்கைகளும், மோசடிகளும் உருவாகின்றன.
அகில உலகத்தையும் அண்ட சராசரங்களையும்  படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு உயிரற்ற உணர்வற்ற பொருட்களை ஒப்பாக்குவது என்பது  அவனை இழிவுபடுத்தும் செயலாகும் .மட்டுமல்ல, இது ஒரு மிகப்பெரிய உண்மையை மறைத்து பரப்பப்படும் பெரும்பொய்யும் ஆகும்.
இந்த மாபெரும் பொய்யை மையமாக வைத்து மிகப்பெரிய மோசடி அரங்கேறுகிறது. கண்டதெல்லாம் கடவுள் என்று மக்கள் நம்பத் தலைப்படும் போது அதைச்சுற்றி இடைத் தரகர்கள் உருவாகிறார்கள். பின்னர் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றாகிறது. அவர்கள் தம் மனம் போனபடி மக்களை ஏய்த்து தம் வயிற்றை நிரப்பிக் கொள்ள பாவ பரிகாரம், தோஷ பரிகாரம் என்றெல்லாம் பெயர் சொல்லி பாமரர்களின் சம்பாத்தியங்களையும் செல்வங்களையும்  கொள்ளை  அடிக்கிறார்கள்.  உண்மையில் படைத்த  இறைவனை வழிபடுவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை. அவனை நேரடியாக வணங்குவதற்க்குத்தான் இறைத்தூதர்கள் கற்றுத்தந்தார்கள். அவனை அழைப்பதற்கோ, நம் தேவைகளை கேட்பதற்கோ நமக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தரகர்களும் தேவை இல்லை.எந்த வித வீண் சடங்குகளுக்கும் அங்கு இடமில்லை. ஆனால் படைத்தவனை விட்டு விட்டு போலி தெய்வங்களை வணங்க முற்படும்போது இறைவழிபாடு என்பது கடினமாக்கபடுகிறது. வீண் சடங்குகளும் மூட நம்பிக்கைகளும்  இடைத்தரகர்களும் இடையே நுழைந்து இது  மாபெரும் வியாபாரமாக்கப் படுகிறது. மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்கான எளிமையான மார்க்கமாக இது மாறிவிடுகிறது.
மனித குலத்தை பிளவு  படுத்தும் கொடிய பாவம்.
 ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எல்லா காலத்திலும் போதிக்கப்பட்ட கொள்கை. ஆனால் அந்த ஏக இறைவனை விட்டு படைப்பினங்களை வணங்கத் தலைப்படும் போது மனித குலமும் அவரவர்களின் கடவுள் கொள்கையைப் பொறுத்து கூறுபோடப் படுகிறது. உதாரணமாக, நமது நாட்டின் ஜாதி அமைப்புக்களைப் பாருங்கள். எந்த ஜாதியைச் சேர்ந்தோரானாலும் நாம் அனைவரும் மனிதர்களே. ஒரே இரத்தம்,, ஒரே மாமிசம் ஒரே உடலமைப்பு  என எல்லாம் ஒன்றாக இருந்தும் ஒரு ஜாதி மக்கள் இன்னொரு ஜாதி மக்களோடு கலப்பதில்லை. இதில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள் என பல கூறுகள்! என்ன காரணம்? ஒவ்வொரு ஜாதியும் தங்களுக்கு வெவ்வேறு தெய்வங்கள் இருக்கின்றன என்று நம்புகிறார்கள். அவற்றை குலதெய்வம் என்று சிறப்பு செய்கிறார்கள். இவை மட்டுமல்ல, ஊர்களையும் எல்லைகளையும் பிரிக்கும் காவல் தெய்வங்களும் எல்லைச்சாமிகளும் மனிதர்களுக்கிடையே மேலும் பிளவை வலுப்படுத்துகின்றன.
இஸ்லாம் என்ன சொல்கிறது என்றால், இந்த கற்பனை தெய்வங்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுங்கள். இவற்றால் எந்த பயனும் கிடையாது. அனைவரும் உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த ஒரே இறைவன் பக்கம் மீளுங்கள் என்கிறது.
இவ்வாறு எல்லா பாவங்களுக்கு தாயாக இது விளங்குவதால் இப்பாவத்தை  மன்னிக்கவே முடியாத பெரும் பாவம் என்கிறான்  இறைவன்
    
திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு இப்பாவத்தைக் கண்டிக்கிறது:
பாவங்களிலேயே மிகப்பெரும் பாவம்
' .....நிச்சயமாக இறைவனுக்கு இணைவைத்தல் மாபெரும் பாவமாகும்...... (திருக்குர்ஆன் 31:13)
 'நிச்சயமாக இறைவன் ; தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்¢ இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் இறைவனுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.'  (திருக்குர்ஆன் 4:48)
 இது மிகப்பெரிய நன்றி கேடாகும்.
 மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்? .(திருக்குர்ஆன் 35:3)
(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள் )
''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40)
இணை வைப்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை!
"நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதையாவது அவை படைத்துள்ளனவா அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் : 46:4)
அல்லாஹ்வுக்கு இணையாக்கப்படுபவற்றின் பலஹீனம்!
 மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈடைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (திருக்குர்ஆன் 22:73)
இடைத் தரகர்களுக்கு இடமில்லை
  தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (இணைவைப்பாளர்கள் ) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள் 'இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை' என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; 'வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்' என்று கூறும். (திருக்குர்ஆன் 10:18)
இணைவைப்போருக்கு தண்டனை நிரந்தர நரகம்

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ்விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதிஇழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம்புகுவார்.
அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

முந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்



·  ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!  ( திருமந்திரம்)
·  தனக்குவமை இல்லாதான் தாள் பணிந்தோர்க்கல்லால்     மனக்கவலை மாற்றல் அரிது (திருக்குறள்)
·  ஏகம் ஏவாதித்யம் ( (அவன் ஒருவனேஅவனுக்குப் பிறகு எவருமில்லை) - சாந்தோக்ய உபநிஷத்- Chandogya Upanishad, Chapter 6, Section 2, Verse 1
·  நா சாஸ்ய கஸ்சி ஜனித ந கதிபா (அவனுக்கு மேல் பெற்றோர்களோ கடவுளோ இல்லை) - ஸ்வேதஸ்வதாரா  உபநிஷத்-Svetasvatara Upanishad, Chapter 6, Verse 9
·  நா சாஸ்ய கஸ்சி ஜனித ந கதிபா (அவனுக்கு மேல் பெற்றோர்களோ கடவுளோ இல்லை) நாதஸ்ய ப்ரதிம அஸ்தி ( அவனைப்போல் எதுவுமில்லை)ஸ்வேதஸ்வதாரா  உபநிஷத் மற்றும் யஜூர் வேதம்-  Svetasvatara Upanishad, Chapter 4, Verse 19 & Yajurveda, Chapter 32, Verse 3
·  யா ஏக இத்தமுஸ்துஹி (நிகரில்லாதவனும் தனித்தவனும் ஆகிய அவனைத் துதிப்பீராக) ரிக் வேதம்- Rigveda, Book No VI, Hymn 45, Verse 16
·  மேலும், 'ஏகம் ஸத்வம் பஹூதா கல்பயந்தி' (இறைவன் ஒருவன்தான், அவனை ஞானிகள் பல பெயரிட்டு அழைக்கிறார்கள். - ரிக் வேதம் (1:164:46) -Rigveda, Book No.1, Hymn No. 164, Verse 46
'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்பது இஸ்லாத்தின் மூலமந்திரம்-
வணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் தவிர வேறு  யாருமில்லை' என்பது இதன் பொருள்.

இதை எந்த ஒரு கருத்துச் சிதைவும் இல்லாமல் 'பிரம்ம சூத்திரம்' சொல்லித்தருவதைப் பாரீர்:
ஏகம் பிரஹம் தவித்யே நாஸ்தே நஹ்னே நாஸ்தே கின்ஐன்.

பொருள்: இறைவன் ஒருவனே வேறு இல்லை. இல்லவே இல்லை

பைபிளில் இறை ஏகத்துவம்
ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் பழைய ஏற்பாடு: -
கர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள்.       (பழைய ஏற்பாடு எரேமியா 10:10)
·  இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (உபாகமம் 6:4)
·  நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை (ஏசாயா 43:10-11)
·  நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்” (ஏசாயா 44:6)
ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் புதிய ஏற்பாடு: -
·  அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே” (மத்தேயு 19:16-17)
·  ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3)
·  அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்” (மத்தேயு 4:10)
·  இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29)
·  தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே” (I தீமோத்தேயு 2:5)

வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே!



இறை ஏகத்துவம்:
அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே! அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் மட்டுமே பிரார்த்தனைகளை ஏற்கக்கூடியவன். அவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். அவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்பினங்களே. அவை அனைத்தும் அழியக்கூடியவையே. தன்னிகரில்லாத மற்றும் தனக்கு உவமையே இல்லாத இறைவனுக்கு கற்பனை உருவங்கள் சமைப்பதோ அல்லது உயிரும் உணர்வும் அற்ற பொருட்களைக்  காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ பெரும் பாவமும் வீணும் வழிகேடும்  ஆகும்.
ஏகத்துவத்தை என் பேணவேண்டும்?
 இறைவனின் ஏகத்துவத்தை போதிப்பதே இறைத்தூதர்களின் அடிப்படைப் பணியாக இருந்தது. ஏனெனில் இதுதான் பூமியில் தர்மத்தை நிலைப் நாட்டுவதற்கான அடித்தளம். மனிதன் பாவங்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால் கடவுளைப் பற்றிய முறையான எண்ணமும் நம்பிக்கையும் அவனுள் விதைக்கப்பட வேண்டும். அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னைக் கண்காணிக்கிறான், நான் குற்றம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு அவனுள் சதா இருக்க வேண்டும். 
அந்த அடிப்படையில் இந்த பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் தத்தமது மக்களுக்கு கீழ்கண்டவாறு கடவுள் கொள்கையை போதித்தார்கள்:
·  இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே.  அவன் மட்டுமே உங்கள் வணக்கத்துக்கும் பிரார்த்தனைக்கும் உரியவன்.
· அவனை நேரடியாக வணங்க வேண்டும்.  அவனுக்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை. சடங்கு சம்பிரதாயங்களும் தேவை இல்லை.
·  அவனுக்கு ஓவியங்களோ உருவங்களோ சமைக்ககூடாது ஏனெனில் அவனைப்போல் எதுவுமே இல்லை
·  நாங்கள் அவனுடைய தூதர்கள் மட்டுமே. அவனுக்கு பதிலாக எங்களையோ எங்கள் சமாதிகளையோ உருவங்களையோ வணங்கக் கூடாது.
· படைத்தவனுக்கு பதிலாக படைப்பினங்களையோ உருவங்களையோ நீங்கள் வணங்குவீர்களாயின் உங்களுக்குள் பிரிவினைகளும் குழப்பங்களும் ஏற்படும்.
என்றெல்லாம் போதித்தார்கள். அத்துடன் அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து இறைவனின் போதனைகளின் படி பாவ புண்ணியங்கள் எவை என்பவற்றை கற்பித்தது மட்டுமல்லாமல் முன்மாதிரி புருஷர்களாகவும் வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் மெல்லமெல்ல  இக்கட்டளைகளை மீறினார்கள். ஷைத்தானின் தூண்டுதலால் இறைத்தூதர்களின் நினைவுக்காக அவர்களுக்கு  படங்களை வைக்க ஆரம்பித்தார்கள். நாளடைவில் அவற்றைச் சிலைகளாக வடித்து பின்னர் அவற்றை வழிபட ஆரம்பித்தார்கள். உண்மை இறைவனை மறந்தார்கள்! அதன் விளைவு?.....இறையச்சம் மக்களில் இருந்து அகல அகல, இடைத்தரகர்களும் மூடநம்பிக்கைகளும் பெருகப் பெருக......  கடவுளின் பெயராலேயே சுரண்டல்களும் அக்கிரமங்களும் நடந்தேறின. இவ்வாறு பூமியில் அதர்மம் பரவிப் படர்ந்தது..

இவ்வாறு பூமியில் அதர்மம் பரவும் போதெல்லாம் மீணடும் தர்மத்தை நிலைநாட்ட மீண்டும்மீண்டும் தூதர்களை இறைவன் அனுப்பினான். அவர்கள் மீணடும் இறை ஏகத்துவத்தைப் போதித்து தர்மத்தை நிலைநாட்டிச் சென்றார்கள்  ஆனால் பிற்கால மக்கள் அந்தத் தூதர்களையும் கடவுளாக்கினார்கள். இவ்வாறு கடவுளர்களின் எண்ணிக்கைப் பெருகப்பெருக மனிதகுலம் கூறுபோடப் பட்டு இன்று நாம் பல்வேறுபட்ட மதங்களில் நின்று கொண்டு நமக்குள் பகைமை பாராட்டிக்கொண்டு வாழ்கிறோம்!  ஆம் அன்பர்களே, இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  நம்மைப் பிரித்து வைத்திருப்பதும் நம்மை ஒருவருக்கொருவர் அண்ட விடாமல் தடுப்பதும் நாம் கொண்டிருக்கும் முரண்பட்ட கடவுட்கொள்கைகளே! ஆக, நமக்குள் பகைமை மறந்து
நாம் மீணடும் சகோதர பாசத்தோடு இணைய வேண்டுமானால் ஒரே இறைவனைப் பற்றி நாம் கொண்டிருக்கும் முரண்பாடுகளைக் களைந்தே ஆக வேண்டும்.
இறைவனை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?
     இறைவனை அவன் எவ்வாறு அறிமுகப் படுத்துகிறானோ அவ்வாறே விளங்கிக் கொள்ள வேண்டும். அது அல்லாமல் நம் கற்பனையில் உதித்தவற்றை எல்லாம் கடவுள் என்று கற்பித்தால் ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் உருவாகி ஒவ்வொன்றையும் வணங்குவோர் தனித்தனி குழுக்களாகவும் ஜாதிகளாகவும் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகிறது. ஆனால் இறைவனை அவன் எவ்வாறு கற்றுத்தருகிறானோ அவ்வாறு புரிந்துகொண்டு வணங்கும் போது மொழி, இனம், நிறம், மாநிலங்கள், நாடுகள் போன்ற தடைகளைக் கடந்து மனித சமத்துவமும் உலகளாவிய சகோதரத்துவமும் உருவாகிறது.
இறைவேதங்களில் தன்னை இறைவன் எவ்வாறு அறிமுகப்படுத்துகிறான்? இதோ, அவனது இறுதி வேதமாக அறியப்படக்கூடிய திருக்குர்ஆன் கூறுவதைப் பார்த்து விட்டு முந்தைய வேதங்களையும் பாப்போம்.
அல்லாஹ் என்றால் யார்?
 படைத்த இறைவனைத்  திருக்குர்ஆன் அரபிச் சொல்லான அல்லாஹ் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏகனாகிய இறைவனைக் குறிக்கும் சொல்லே அல்லாஹ் என்பது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்! எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தைக்கு ஓரிரு தனிச் சிறப்புக்கள் உள்ளன:
  இவ்வார்தையின் உண்மைப்பொருள் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்பது.
 இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.
 உதாரணமாக ஆங்கில வார்த்தை God – Gods , Godess  அல்லது கடவுள் கடவுளர்கள் என்றும் பகவான் பகவதி என்றும் பன்மைக்கும் பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் சிதைவதில்லை.
இப்படிப்பட்ட சிறப்புக்களின் காரணத்தால் உலகெங்கும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கின்றனர். மாறாக அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ நினைத்து விடாதீர்கள்.
அந்த இறைவனைப் பற்றி மனித மனங்களில் எழக்கூடிய சந்தேகங்களுக்கெல்லாம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது:
இறைவன் ஒருவனைத்தவிர வேறில்லை
 முதலில் இறைவன் ஒருவன் மட்டுமே என்பது பற்றி நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது?
ஒரு பள்ளிக்கூடத்திற்கு இரண்டு முதல்வர்கள் அல்லது ஒரு பேருந்துக்கு  இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் இருந்தால் அது எவ்வாறு பெரும் குழப்பம் , கலகம் அல்லது விபத்தில் கொண்டு சேர்க்குமோ அதுபோல இவ்வுலகம் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் என்றோ அழிந்துபோய் இருக்கும் எனபதை நமது சாமானிய அறிவு கூட நமக்குச் சொல்கிறது.
திருக்குர்ஆனும் இவ்வாறு கூறுகிறது:
'(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
இறைவன் ஒருவனே என்பது பற்றியும் அவனது தன்மைகள் பற்றியும் இதோ திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
59:22        அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
59:23        அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
59:24        அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.
வணக்கத்துக்கு உரியவன் யார்?

 மனிதர்களே! நீங்கள் உங்களையும்  உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம்.  (அல்குர்ஆன் 2:21)

அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன்  3:6).
 இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. 
இறைவனை எவ்வாறு அறிவது?
 கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத  தெளிவான கொள்கை இருந்தால் மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான். திருக்குர்ஆன் அதற்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுகிறது. அதனால் மனிதனுக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகிறது.
 நம்மைச்சுற்றி உள்ள படைப்பினங்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து இறைவனை அறியுமாறு இறைவன் நம்மை அறிவுறுத்துகிறான்.
2:164      நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும் காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும் கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. 
அப்படிப்பட்ட இறைவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விளித்துப் பிரார்த்திக்குமாறு இறைவன் தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் கற்பிக்கிறான். இன்று இறுதிவேதம் திருக்குர்ஆன் வலியுறுத்துவது போலவே இறைவனின் முந்தைய வேதங்கள் என்றும் புனித நூல்கள் என்றும் மக்களால் பரவலாக நம்பப்படும் நூல்களிலும் இவ்வுண்மை வலியுறுத்தப் படுவதைக் காணலாம். 


கதவைத் தட்டும் முன் திறந்து வை!


ஆம், அந்த என்ற அழையா விருந்தாளி திடீரென நம்மிடம் வருவான். எப்போது வருவான் என்பதை அவன் சொல்லிக்கொண்டு வருவதில்லை.

வந்தால் அவன் ஒரு கணமும் காத்திருப்பதில்லை. நாம் நம் வீடுகளில் இருந்தாலும் சரி, வீதிகளில் இருந்தாலும் சரி, ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தாலும் சரி, தொழிலில் அல்லது வியாபாரத்தில் அல்லது படிப்பில் நாம் முனைப்பாக இருந்தாலும் சரி, அவன் நம்மை விடுவதில்லை.

வெடுக்கென்று நம்மை இழுத்துச் சென்று விடுகிறான்.
நாளை நமக்காக பல விஷயங்கள் காத்திருக்கின்றன..... பல கடமைகள், தீர்க்க வேண்டிய கடன், முக்கியமான ஒரு வர்த்தகப் பேச்சுவார்த்தை, ஒரு திருமண விருந்து, மாலை வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் மகனை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருதல்..... எனப் பற்பல விஷயங்கள்......... இந்த விருந்தாளிக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

அவனுக்கு நமது உறவுகளும் உணர்வுகளும் உடமைகளும் எதுவுமே தென்படுவதில்லை. சட்டென்று வந்து வெட்டொன்று துண்டு இரண்டு என நம்மை இவ்வுலகிலிருந்துப் பிரித்து விடுகிறான்.

யார் அவன்? ........அவன் வேறு யாருமல்ல. ......
#மரணம்_உடன்பிறப்பு!
ஆம், அவன்தான் நம் உடன்பிறப்பான மரணம்!

அவன் வரும் முன் நாம் முக்கியமாகத் திறந்து வைக்கவேண்டிய ஒன்று உள்ளது.....
அதுதான் நம் மனக்கதவு!

முன்னோரின் பழக்கவழக்கங்கள், வறட்டு கவுரவம், மூடநம்பிக்கைகள், மனோஇச்சை போன்றவற்றால் பூட்டு போடப்பட்டு அடைந்து கிடக்கும் அந்த மனக்கதவைத் திறந்து வைத்தால்தான் சத்தியம் நமக்குள் நுழையும்.

அந்த மரணம் நம்மைச் சந்தித்த பின் நம் நிலை என்ன?

ஆம்,அதைப்பற்றி தான் நாம் கவலைப் பட வேண்டியவர்களாக உள்ளோம். அவனை சந்திப்பதற்கு நாம் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் என்ன? அதை இப்போதே ஆராய வேண்டும் அதன்படி செயல்பட வேண்டும்.

"இறைநம்பிக்கை கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 59:18)
(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குரிய ஒரே இறைவன் என்று பொருள்)

நேற்று கருவறை, நாளை கல்லறை.. நடுவில் இது என்ன அறை?

மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?