இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 மே, 2015

அழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை!

இன்றைய அவசர உலகில் எதையும் சிந்திப்பதற்கோ நிதானித்து வாழ்வதற்கோ நேரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்..  வியபாரமானாலும் சரி தொழிலானாலும் சரி. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டும் வங்கிக்கணக்கில் இருப்புத் தொகை அதிகரிக்க வேண்டும் நான்கைந்து தலைமுறைகளுக்கும் தேவையான சொத்துக்கள் தன்வசம் இருக்கவேண்டும் என்னும் குறிக்கோளோடு இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்களில் பலர்!
  இப்படிப்பட்ட கண்ணை மூடிய ஓட்டப்பந்தயத்தில் வாழ்வின் உண்மைகளை மனிதன் மறந்துவிடுகிறான். மரணம் என்ற திடீரென குறுக்கிடும் ஒன்று தனக்காக காத்திருக்கிறது என்பதையும் தன்னைப் படைத்த இறைவனுக்கு முன்னால் நாளை தன் சம்பாத்தியத்தின் நியாய அநியாயங்களைப் பற்றியும்  மற்றும் அவற்றை செலவு செய்தது பற்றியும் விசாரணை உள்ளது என்பதையும் தொடர்ந்து அதற்கான தண்டனை அல்லது பரிசு போன்றவை காத்திருக்கின்றன என்பதையும் உணராத நிலையிலேயே மனிதன் வாழ்வைக் கழித்துக்கொண்டு இருக்கிறான்.
இதையே இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

102:1, 2  செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (இறைவனின் நினைவை விட்டும்) பராக்காக்கி விட்டது-......நீங்கள் உங்கள் புதைகுழிகளைச் சந்திக்கும் வரை.
ஆம், செல்வத்தை சேர்க்கும் உங்கள் ஓட்டப்பந்தயத்தின் இடையே ஒருநாள் நீங்கள் இந்த சமாதிக்குள் வந்து விழத்தான் போகிறீர்கள் என்று எச்சரிக்கிறான் இறைவன்.

102:3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.  பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

 உண்மைகளை மறந்த உங்கள் பணவெறியின் பலனை நீங்கள் அனுபவிக்கத்தான் போகிறீர்கள் என்பதை ஆணித்தரமாக மனிதனுக்கு உறைக்கும் வண்ணம் மேற்படி வசனங்களில் எடுத்துரைக்கிறான் இறைவன்.

102:5. அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
 மாறாக, சற்று நிதானித்து ‘இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வோ குறுகியது, நீர்க்குமிழி போன்றது, நமது உண்மையான உலகம் இதுவல்ல, இறைவன் இதை ஒரு பரீட்சைக் கூடம் போல அமைத்துள்ளான், இந்த செல்வம் இறைவனுக்கு சொந்தமானது, இங்கு நான் பெறும் செல்வம் என்னைப் பரீட்சிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது’ என்ற சிந்தனை உங்களை மேலிடுமானால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள்.
 
ஒருமுறை நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 'மனிதன் “எனது செல்வம்; எனது செல்வம்'' என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?'' 
இச்செய்தியை  நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்  (முஸ்லிம் 5665 )
: இங்கு சொல்லப்படுவது போல அவசரமாக தான் சேர்க்கும் பொருளில் தனது உண்மைப் பங்கு எவ்வளவு என்று சிந்தித்து அறிந்தால் மனிதன் நிதானத்தை அடைவான். மறுமையில் நிரந்தர உலகத்திற்கு எது தேவையோ அதற்காக தன் உழைப்பையும் செல்வத்தையும்  செலவிடுவான்.

பணவேட்டையின் சாதனைகள்
  இன்று நடக்கும் மூர்க்கத்தனமான பணவேட்டையின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்? அதுதான் கொழுந்துவிட்டு எரியும் நரகம் என்பது! தன்னை மறந்து, தனக்கு அனைத்தையும் தந்த இறைவனையும் மறந்து வெறும் பணம், சொத்து, புகழ் என்று வெறிகொண்டு அலையும் மனிதனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இறைவன் கடுமையாக எச்சரிக்கிறான்.:

102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

102:7. பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
  நிதானம் இழந்து வாழும் இந்த அறிவீனர்களுக்கு புதைகுழிக்கு அடுத்தபடியாகக் காத்திருப்பது நரகம் என்ற பாதாள எரிகிடங்குதான். அந்த நியாயத் தீர்ப்பு நாளில் எந்த சந்தேகங்களுக்கும் இடமில்லாதவாறு உறுதியாக மனிதன் தன் கண்களால் அதைக் கண்டுகொள்வான். 

102:8. பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
  அந்நாளில் உண்மைகள் வெட்டவெளிச்சமாகத் தென்படும். இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து அருட்கொடைகளும் பட்டியலிடப்பட்டு எடுத்துக்காட்டப்படும். இன்றைய அவசர உலகில் செல்வம் சேர்க்கும் போதையில் அவன் எதையெல்லாம் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தினானோ, சிறிதும் பெரிதுமான அனைத்து அருட்கொடைகளையும் இறைவன் அன்று நினைவுபடுத்துவான். எதையுமே அவனால் நிராகரிக்க முடியாது. அவற்றிற்கு இவ்வுலகிலேயே நன்றி பாராட்டி அவற்றைத் தந்த இறைவனுக்கு அடிபணிந்தவனாக வாழ்ந்திருந்தால் அவன் அன்றைய நாளில் இறைவனின் தண்டனைகளில் இருந்து காப்பாற்றப்படுவான். மாறாக நன்றிகொன்று தன் மனோ இச்சைகளின் படி தான்தோன்றித்தனமாக வாழ்ந்திருந்தால் அவனுக்கு இறைவனின் தண்டனைகள் காத்திருக்கின்றன.
வாழ்வின் போக்கை மாற்றுவோம்!
  இவையெல்லாம் நாளை நடக்க இருக்கும் சம்பவங்கள். இவற்றை இன்றே நினைவுறுத்தி நிதானத்தோடு சிந்தித்து நம் வாழ்வின் போக்கை திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான் கருணையுள்ள இறைவன்.

 திருமறையின் இந்த நினைவூட்டலை ஏற்று வாழ்வைத் திருத்திக் கொள்வோருக்கு நாளை மறுமையில் கவலைகள் இல்லை என்பது மட்டுமல்ல, இவ்வுலகிலும் அவர்கள் பலவிதமான மனஉளைச்சல்களில் இருந்தும் இழிவுகளில் இருந்தும் காப்பாற்றப்படுகிறார்கள். இன்று நம்மைச் சுற்றி நடப்பவைகளை சற்று நோட்டமிட்டாலே இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளலாம். 
பொருளாசை என்ற போதை விளைவுகள்

பொருளாசை என்ற போதை

பொருளாசை என்ற போதை தலைக்கேறிய பலர் இரவுபகலாக வியாபாரங்களிலும் தொழிலிலும் தங்கள் சக்திக்கு மீறி உழைப்பதைப் பார்க்கிறோம். அந்த போதையில் இறைவனைப் பற்றியோ மறுமை வாழ்வு பற்றியோ சற்றும் இவர்கள் சிந்திப்பதில்லை. இறைவன் அவர்களுக்கு விதித்த கடமைகளை நிறைவேற்றவும் மறந்துவிடுகின்றனர். தன் உடலுக்கு, தன் மனைவிக்கு, தன் குழந்தைகளுக்கு, தன் பெற்றோருக்கு, தன் உறவினர்களுக்கு, சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகளும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய உரிமைகளும் இப்படிப்பட்டவர்களால் புறக்கணிக்கப்படுகின்றன. பண போதையில் கண்மூடித்தனமாக இவர்கள் சேர்த்த செல்வங்கள் இவர்களின் வாரிசுகளுக்குக் கைமாறப் போகிறது என்பதை சற்றும் உணராமலேயே இவர்களின் வாழ்க்கை கழிகிறது.

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண் தன் மனைவி மக்கள் விஷயத்தில் பொறுப்பாளன் ஆவான். பெண் தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: ‪#புகாரி 5200

வாரிசுகளின் வஞ்சனை

இறையச்சம் - அதாவது தன் செயல்களுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு – பெற்றோருக்கும் இல்லை. குழந்தைகளுக்கும் இல்லை. இறை உணர்வை பெற்றோரும் போதிப்பது இல்லை, கல்விக்கூடங்களும் போதிப்பது இல்லை. அவர்களின் கவலையெல்லாம் குழந்தைகள் பெரிதாகி உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே! அவர்களிடம் மனிதத்துவம் நிலைக்க வேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கு சற்றும் கவலயே இல்லை!
ஸ்ரீ நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வலியுறுத்தியுள்ளோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.' (அல்குர்ஆன் 31:14)
இது நம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் இறைவனின் அறிவுரை. இதுபற்றி சிறுவயது முதலே குழந்தைகளுக்கு உணர்த்தி வளர்க்க வேண்டும்.
இவ்வாறு பொறுப்[புணர்வோடு வளர்க்கப்படாத காரணத்தால் பொருள் படைத்த பெற்றோரின் குழந்தைகள் சோம்பேறிகளாக மாறுவது மட்டுமல்லாமல் தங்கள் பெற்றோர்களை சற்றும் மதிப்பதும் இல்லை. பெற்றோர்களை தரக்குறைவான வார்த்தைகளால் ஏசுகிறார்கள். பெற்றோரைத் தங்களுக்கு பெரும் இடையூறாகவும் கருதுகிறார்கள். இரக்கம் என்பது இல்லாது போகும்போது பெற்றோரை முதியோர் இல்லங்களிலும் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்கள் சேர்த்துக் குவித்த சொத்துக்களை விரைவில் அடைவதற்காக சிலர் “கருணைக் கொலை” என்ற பெயரில் கொன்றுவிடவும் செய்கிறார்கள். (உசிலம்பட்டியில் நடக்கும் இக்கொடுமை பற்றி மார்ச் மாத இதழில் குறிப்பிட்டிருந்தோம்)


இன்னும் சிலரைப் பார்க்கிறோம். கணவனும் மனைவியும் இரவுபகலாக உழைத்துப் பொருள் சேர்த்து தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். மேல்படிப்புக்காக பிள்ளைகளை அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். அவர்கள் அங்கு தன் மனம் விரும்பிய காதலனோடு அல்லது காதலியோடு உல்லாசமாக இருப்பார்கள் பெண்ணுக்கு கர்ப்பம் முற்றும்போது நிர்பந்தத்தால் அந்த கண்றாவியையே மனம் முடித்து காலகாலமும் சென்ற இடத்திலேயே செட்டில் ஆகியும் விடுகிறார்கள். பெற்றோர்களைத் திரும்பியும் பார்ப்பதில்லை! இதற்காகத்தான் அப்பெற்றோர்கள் உழைத்தார்களா?
சரி, அப்படியே சென்ற இடத்தில் கைநிறைய சம்பாதித்து தாய்நாடு வந்து பெற்றோர் நிச்சயித்த நபரை மணமுடித்து மீண்டும் வெளிநாடு திரும்பியவர்களின் நிலைதான் என்ன? அங்கு குழந்தை பிறந்துவிட்டால் குழந்தையைப் பராமரிக்க, மலஜலம் சுத்தம் செய்ய ஆள் கிடைப்பது கடினம். அப்போதுதான் இவர்களுக்கு தாயின் ஞாபகம் வரும்! ‘தாய்ப்பாசம்’ பொங்கும்! தாயை அழைத்து தங்களோடு தங்க வைப்பார்கள் பேரப்பிள்ளையின் மலத்தை சுத்தப்படுத்த!

பிள்ளைகளை மேற்படிப்பு படிக்கவைப்பதற்காக வீட்டை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்கிய பெற்றோரும் உள்ளனர். இவர்களின் பிள்ளைகள் வளர்ந்து ஆளானதும் அவர்களின் காதல் கூட்டாளிகளோடு ஓடிப்போனதால் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தெருவுக்கு வந்த பெற்றோரும் உள்ளனர்.
இவையெல்லாம் இவ்வுலகில் சந்திக்கும் இழிநிலைகள்! மறுமை இவர்களுக்கு என்ன மிஞ்சுகிறது? நரகம் அல்லாமல் வேறு என்ன?
எல்லாம் எதனால்? .... இறைவனையும் மறுமை என்ற உண்மையையும் மறந்து பொருளீட்டியதற்காக!
அழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை!

வெள்ளி, 15 மே, 2015

இறைசட்டங்கள் எப்படி இன்றைக்குத் தீர்வாகும்?

நாட்டில் நீதியும் நியாயமும் கேலிக்குரியதாவதற்கு முக்கிய காரணம்  சரி எது, தவறு எது அல்லது நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதைப் பற்றி தெளிவான அறிவில்லாமல் மனிதன் தன் மனம்போன போக்கில் இயற்றும் சட்டங்களே! பலதரப்பட்ட மக்களும் பல்வேறு விதமான ஜீவராசிகளும் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் இவ்வுலகில் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன. அவற்றை நீதமாகப் பங்கிடக் கூடிய அதிகாரமும் அறிவும் ஆற்றலும் இவ்வுலகின் அதிபதியாகிய இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பது தெளிவு!
அந்த இறைவன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை. அதுவே நமது இம்மைக்கும் மறுமை வாழ்வுக்கும் நன்மை பயப்பது. அந்த அடிப்படையில் இறைவன் நமக்கு தொகுத்து வழங்கும் சட்டங்களுக்கே இறை சட்டங்கள் அல்லது ஷரீஅத் என்று வழங்கப்படும்.

இறைவனின் வேதம் மற்றும் அவனது தூதரின் முன்மாதிரி செயல்முறை விளக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுவதே ஷரீஅத். 

ஷரீஅத்தின் நோக்கம் என்ன
  1. மனித வாழ்வில் நன்மைகளை - அதாவது மனித குலத்துக்கு தொன்று தொட்டு எவையெல்லாம் நன்மையானவையாக, நலம் பயப்பவையாக இருந்து வந்துள்ளதோ அந்த நன்மைகள், சிறப்புகள், வளங்கள், நலங்கள் எல்லாவற்றையும் -  நிலை நிறுத்துவது
  2. மனித வாழ்விலிருந்து தீமைகளை – அதாவது  மனித குலத்துக்கு  தொன்றுதொட்டு எவையெல்லாம் தீமையானவையாக, தீங்கிழைப்பவையாகக் இருந்து வந்துள்ளதோ அந்தத் தீமைகள், அவலங்கள், அழுக்குகள், கசடுகள் எல்லாவற்றையும் -அகற்றித் தூய்மைப்படுத்துவது.
  
 ஷரீஅத் அளிக்கின்ற வரையறைகளும் சட்டங்களும் நமது தனிப்பட்ட வாழ்வையும், குடும்ப வாழ்வையும் வாழ்வின் எல்லாத் துறைகளையும் தழுவி இருக்கின்றன.
 வணக்கங்கள், தனிநபர் நடத்தை, ஒழுக்கம், பழக்க வழக்கம், நடையுடை பாவனை, குடும்ப வாழ்வு, உண்ணுதல், பருகுதல், சமூகத் தொடர்புகள், பொருளாதார நடைமுறைகள், குடிமக்களின் உரிமைகள், நீதித்துறை, அரசியல் என எல்லாத் துறைகளுக்கும் நெறிமுறைகளை வகுத்துத் தருகிறது ஷரீஅத்.

ஷரீஅத் தொடாத வாழ்வியல் துறையே இல்லை எனலாம். எல்லாத் துறைகளுக்குமே எது நன்மையானது, எது தீமையானது என்பதையும், எது இலாபத்தை தரக் கூடியது, எது இழப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதையும், எது தூய்மையானது எது தூய்மையற்றது என்பதையும் ஷரீஅத் தெள்ளத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் கோடிட்டுக் காட்டி விளக்கி இருக்கிறது. ஒரு தூய்மையான வாழ்வுக்கான வரைபடத்தை அது நமக்குத் தருகிறது.
இன்று நம் நாட்டை அலைக்கழிக்கும் சட்டங்கள் மனிதர்களால்  இயற்றப்பட்டவையும் பலமுறை திருத்தப்பட்டவையும் ஆகும். ஆனால் இறைவன் வழங்கும் சட்டங்கள் தொலைநோக்குள்ளவையும் மனிதகுலத்தின் அனைத்து அங்கங்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் படைப்பினங்களுக்கும் பொருத்தமானவையும் ஆகும். அவை நுண்ணறிவாளனும் நீதிமானுமான இறைவனால் வழங்கப்படும் சட்டங்கள் ஆகும்.

உதாரணமாக இறைசட்டங்கள் நடைமுறைக்கு வந்தால்....
§  சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு அளிக்காத பொருளாதார திட்டங்கள் நடைமுறைக்கு வரும். நாட்டின் செல்வம் செல்வந்தர்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அனைவரிடையேயும் புழங்கும் வண்ணம் பொருளாதாரம் சீரமைக்கப்படும்.
§  செல்வந்தர்களிடம் நீதமான முறையில் ஜகாத்(ஏழைவரி) தவறாமல் வசூலிக்கப்படும். அது ஏழைகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கே விநியோகம் செய்யப்படும். இன்று நாட்டில் நிலவிலுள்ள 40% வருமான வரி விதிப்பின் விளைவாக உண்டாகும் கருப்புப்பணம், சுவிஸ் வங்கிகளில் பதுக்குதல் போன்றவை ஒழிந்து உள்நாட்டிலேயே அந்த பணம் புழங்க வழிவகை உண்டாகும். (செல்வந்தர்கள் இறைப் பொருத்ததிற்காக தானாகவே முன்வந்து ஜகாத்தை வழங்குவார்கள் என்பது வேறு விஷயம்)
§  . வட்டியில்லா பொருளாதாரம் நடைமுறைக்கு வரும். வெற்றுப்பணம் குட்டிபோடுவதும் வங்கிகள் வெற்றுக்காகிதங்களை புழக்கத்தில் விட்டு லாபம் சம்பாதிப்பதும் நிற்கும். அதனால் பணத்துக்கு உண்மையான மதிப்பு உண்டாகி, பணவீக்கம், ஊக வாணிபம், மோசடிகள் ஒழிக்கப்படும். பணக்காரர்களை மேலும் பெரிய பணமுதலைகளாகவும் ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றும் இன்றைய பொருளாதார அமைப்பு மாறி முனைவோர் அனைவருக்கும் தக்க வாய்ப்பளிக்கும் திட்டங்கள் அமுலுக்கு வரும்.
மேற்கூறப்பட்ட விடயங்கள் நடைமுறைக்கு வந்து விட்டாலே நாட்டின் வறுமை ஒழிந்து நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து விடும் என்பதை சிந்திப்போர் அறியலாம்.
§  நிலச்சுவான்தார்கள் தமது சொத்துக்களை முடக்கியபடி இருக்க அனுமதிக்கப் படாது.  ஒரு நிலம் மூன்றுவருடத்திற்கு மேல் தரிசாக கிடக்க அனுமதிக்காது. குத்தகை  முறை தடை செய்யப்படும்.  அவ்வாறு இருக்குமாயின்  அரசு அதனை  உள்வாங்கி  பிரித்துக் கொடுக்கும்.
§   சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டு மதம், ஜாதி, மொழி, இடம் அடிப்படையிலான பாகுபாடுகள் இல்லாமல்  மக்கள் எல்லாருக்கும் சமமான வேலை வாய்ப்பும், தொழில் மற்றும் வணிக வாய்ப்பும், கல்வி உரிமையும் வழங்கப்படும். சட்டங்கள் மூலம் குறிப்பிட்ட பிரிவினரின் நலன்களை மட்டும் உறுதிப்படுத்தும் நிலை மாறி மக்கள் எல்லாருக்கும் எல்லாவித உரிமைகளும் வாய்ப்புகளும் பாரபட்சமின்றி வழங்கப்படும்.
§   சமூகத்தில் ஏழைகள், முதியவர்கள், தேவையுள்ளவர்கள், அனாதைகள், விதவைகள், நாதியற்றவர்கள் போன்ற நலிவுற்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பைத்துல்மால் - (அரசுக் கருவூலம்) அமைப்பு திறம்படச் செயல்படும். பஞ்சம், பட்டினி, இயற்க்கைச் சீற்றங்கள் போன்ற ஆபத்தான சூழலில் அனைத்து மாநிலங்களின் வளங்களும் உரிய முறையில் அதிகாரப்பூர்வமாக திருப்பப்படும்.
§  பண்புள்ள குடிமக்களை உருவாக்க பயனுள்ள கல்வியும் ஆளுமையை வளர்க்கத் தேவையான பயிற்சிகளும் இளம் பருவத்தில் இருந்தே புகட்டப்படும். நன்மை - தீமை நியாயம் - அநியாயம் போன்றவை பற்றிய விழிப்புணர்வு கற்கும் கல்வியோடு இணைந்து ஊட்டப்படுவதால் மாணவர்கள் கற்கும் கல்வி ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படும். அவை அழிவுகளுக்கு பயன்படாது.
§  கற்பனை பாத்திரங்களின் பெயராலும் மதங்களின் பெயராலும் நாட்டுவளங்களும் அரசு இயந்திரங்களும் வீணடிக்கப்படுவதும் மக்கள் அச்சுறுத்தப்படுவதும் முடிவுக்கு வரும்.
§  தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோருக்கு உரிய கூலி முறையாக தாமதமின்றி கொடுக்கப்படும். பொதுவாக இதுபோன்ற மனித உரிமைகள் அனைத்தும் முறைப்படி பேணப்படும். வரம்பு மீறல்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
§  குடும்ப உறவுகளையும்  அமைதியையும் சீர்கெடுக்கும் விபச்சாரம் மது போதைப்பொருட்கள், சூதாட்டம்  போன்றவை தடை செய்யப்படும்.
§  கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்குற்றங்களில் ஈடுபடுவோரை திருத்த முதற்கண் உரிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கப்பாலும் மீறுவோர் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.
§  பெண் இனத்தைப் பாதுகாக்க அவர்களுடைய கல்வி பெறும் உரிமை, மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, மஹர் என்னும் மணக்கொடை பெறும் உரிமை, சொத்துரிமை, போன்றவை சட்டரீதியாக வலுவாக்கப்படும். வரதட்சணை சட்டவிரோதமாகும்.
§  சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அவதூறு மற்றும் வதந்திகளைப் பரப்பும் மனிதர்களும் ஊடகங்களும் தங்கள் குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து தப்ப முடியாது. ஊர்ஜிதம் செய்யாமல் பரபரப்புக்காக பரப்பபடும்  செய்திகளுக்கு பரப்பியவர்கள் மீது சட்டம் பாயும்.

இன்னும் இவை போன்ற பல புரட்சிகளும் அங்கு உடலெடுக்கும். ஷரீஅத் என்பது நீதி, நியாயம் மட்டுமல்ல அதை நடைமுறைப்படுத்தும் போது நாட்டின் செழிப்புக்கான  வழிகள் அங்கு தானாகவே திறக்கின்றன. சட்டம் ஆளும் என்பதை விட மனித மனங்களின் ஒருமைப்பாடும் ஈடுபாடும் நாட்டு மக்களின் பொறுப்புணர்வும் அங்கு ஆட்சி செய்யும் என்பதே உண்மை!