இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 ஜூலை, 2013

உணவு என்ற இறை அற்புதம்!


    நாம் அன்றாடம் 3வேளை, 4வேளை, 5வேளை என பலவிதமாக உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். ஒரு வேளையாவது அந்த உணவின் பக்கம் அதை எவ்வாறு பெற்றோம்? எங்கிருந்து பெறுகிறோம்? வேறு எந்தக் கோள்களிலும் இல்லாத ஒன்று - இதை யார் நமக்கு வழங்குகிறார்கள்? அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த பசி, அதை சுவைக்க நாக்கு, ஜீரணிக்க வாய், வயிறு, குடல்கள்... அதிலிருந்து சத்தை உறிஞ்சி சக்தியாக்கும் உடற்கூறுகள் என இவற்றை எல்லாம் வழங்கி நமக்கு ஓயாது இன்ப்மூட்டிக் கொண்டிருக்கும் நம் இரட்சகனை நன்றி உணர்வோடு என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? நம் மீது இவ்வளவு நேசமும் பாசமும் கொண்ட அவனிடம் நாம் நேசம் பாராட்டுகிறோமா?
'நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள  பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம'  ( திருக்குர்ஆன் 17:70 )
இந்த உணவு என்பது எவ்வளவு பெரிய அருட்கொடை என்பது மட்டுமல்ல, அதில் அடங்கியுள்ள நம் இறைவனின் வல்லமையை எடுத்துச்சொல்லும் அற்புதங்களைப் பற்றி நாம் சிந்தித்தோமா? மண்ணிலிருந்து உருவாகி மீண்டும் மண்ணுக்கே சென்றடையும் வரை இந்த உணவு பயணிக்கும் பாதை நிறைய எவ்வளவு அற்புதங்கள்? விதை, முளை, செடி,கொடி, மரம், பூ, காய், பழம், தானியம்.........என்று ஒருபுறம்! ருசி, பசி,தாகம், வாய், நாக்கு, பற்கள், உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல், சுரப்பிகள், மலக்குடல், குதம், சிறுநீர், மலம்..... என நம் உடலோடு தொடர்புடையவை ஒருபுறம்! அந்த உணவிலிருந்து பெறப்படும் சக்தி, ஆற்றல், தெம்பு, ஊக்கம், வீரம், வேகம், உழைப்பு......... என உலகையே இயக்கும் விந்தை ஒருபுறம்!
இதில் எதைத்தான் நம் மறுக்க முடியும்? ஒவ்வொரு கவளம் உணவு நாம் உண்ணும் போதும்,
  • "இதைத் தந்த என் இறைவனுக்கு நான் நன்றி செலுத்தி விட்டேனா?
  • நான் இன்று வணங்குவது அவனையா?
  • அல்லது இதில் எந்தப் பங்களிப்பும் செய்யாத மற்றும் எதையுமே உணராத படைப்பினங்களையா? உருவங்களையா? சமாதிகளையா?
  • முன்னோர்கள் அதைச் செய்து வந்தார்கள் என்று நம் செயலுக்கு நியாயம் கற்பிப்பது முறைதானா?"
என்று நம்மை நாமே கேட்க கடமைப்பட்டு உள்ளோம்.
நம்மைப்படைத்த இறைவன் தன்  இறுதி மறையில் நினைவூட்டுவதைப் பாருங்கள்:
''எனவே, மனிதன்  தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். 
•  நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
•  பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-  
•  பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
•    திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
•   அடர்ந்த தோட்டங்களையும்.
•   பழங்களையும், தீவனங்களையும்-
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,' (திருக்குர்ஆன் 80: 24- 32)
பிறிதோரிடத்தில் இவ்வாறு நம்மை சிந்திக்கச் சொல்கிறான். இன்று நீங்கள் உண்ணும் உணவை உங்களுடைய தொழில் நுட்பமோ தொழிற்சாலைகளோ உண்டாக்கவில்லை. அந்த உணவு என்பது இறந்து கிடக்கும் பூமியில் இருந்து உருவாகி வெளியாவதை அன்றாடம் பார்க்கிறீர்கள்.. உண்கிறீர்கள்... இருந்தும் இவற்றை உங்களுக்காகவே உருவாக்கிய உங்கள் இரட்சகனைப் பற்றி நீங்கள் சிந்திப்பதும் இல்லை. அவனுக்கு நன்றி கூறுவதும் இல்லை...

'அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்சை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?'          (திருக்குர்ஆன் 36 : 33-35)

கால்நடைகள் 
மேலும் கால்நடைகளிருந்து நமக்கு உணவும் மற்ற பயன்களும் கிடைக்கின்றன. நமக்காக அவற்றை படைத்து வசப்படுத்தி தந்தவன் அவன் . ஆனால் அவற்றின் மீது உரிமை கொண்டாடுவது நாம்! மேலும் ஒரு சைக்கிளையோ, காரையோ அல்லது ஏதாவது வாகனத்தையோ வடிவமைத்து தயாரிக்க எவ்வளவு தலைமுறைகளின் அறிவாற்றல், அனுபவம், உழைப்பு, காலம் என பலதும் விரயமாகி உள்ளது என்பதை ஒரு கணம் சிந்தித்தாலே இறைவன் நமக்கு வசப்படுத்தி தந்துள்ள கால்நடைகளின் அருமையை எளிதாய் உணர முடியும். அவற்றை நினைவூட்டி இவற்றுக்கெல்லாம் நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா? என்று கேட்கிறான்:
நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
•     அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
•     மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்;
• ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது;
•      இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
•  மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன,
 இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
 (திருக்குர்ஆன் 36 : 71- 73)
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (திருக்குர்ஆன்  6:142) 
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
ஆனால் இவற்றுக்கெல்லாம் நன்றி மறந்து இறைவன் அல்லாதவற்றை வழிபடும் மாந்தரைப் பார்த்து இறைவன் எச்சரிக்கிறான்
= அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான், பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான். அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன், அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன். (திருக்குர்ஆன் 30:40)
= நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன், பலம் மிக்கவன், உறுதியானவன். (திருக்குர்ஆன்  51:58)
இறந்து கிடக்கும் பூமியில் இருந்து தாவரங்கள் உயிர்பெற்று வெளியாவதைப் போன்று மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் படுவார்கள்.
= எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும். (திருக்குர்ஆன்  36:74-75)
        நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
        பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
        பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட்கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன்  102: 6-8)

1 கருத்து: