ஆன்மீகமும் அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆக்கபூர்வமான அறிவியலுக்கும் மனிதகுல நன்மைக்கும் வழிவகுக்கக் கூடும்.
அறிவியல் என்பது மனிதன் தனக்கு வழங்கப் பட்டுள்ள புலன்கள், பகுத்தறிவு, உபகரணங்கள் போன்றவற்றைக் கொண்டு பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற இரகசியங்களில் சிலவற்றைத் துருவித்துருவி ஆராய்ந்து அறியும் முயற்சி. அவ்வாறு பெற்ற அறிவை மனிதனின் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியும் அறிவியலில் அடங்கும்.
ஆன்மிகம் என்பது இவ்வுலகைப் படைத்த இறைவன் அவனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இறைவன், மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு, மனித வாழ்க்கையின் நோக்கம், வாழவேண்டிய முறை, சரி, தவறு, நியாயம் அநியாயம் என்பதற்கான அளவுகோல், மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை இவை போன்ற விடயங்கள் அவற்றில் அடங்கும். இறைவனைப்பற்றிய உணர்வை மனித மனங்களில் விதைத்து அவனை நெறிமுறைப்படுத்துவதும் சமூகத்தில் தர்மத்தை நிலைநாட்டுவதும் ஆன்மீகத்தின் நோக்கமாகும்.
ஆன்மீகத்தை உறுதிப்படுத்தும் அறிவியல்
அறிவியலாளர்கள் தம் வழியில் எதையாவது ஆராய்ந்து கண்டுபிடித்து அறிவிக்கும்போது அவை பற்றிய குறிப்புகள் தாங்கள் ஏற்கனவே படித்த இறைவேதங்களில் காணப்படும்போது ஆன்மீகவாதிகளை அது வியப்படைய வைக்கிறது. ஆன்மீகத்தின் பார்வையில் வேதங்கள் என்பவை இவ்வுலகைப் படைத்த இறைவனின் வார்த்தைகள். வேதங்கள் மூலம் அவன் கூறும் சில பிரபஞ்ச ரகசியங்களை அறிவியல் கண்டுபிடித்து உறுதிப் படுத்தும்போது ஆன்மீகவாதிகள் தங்கள் வேதங்களின் நம்பகத்தன்மையை உணர்கிறார்கள் அவர்களது இறைநம்பிக்கையை அது வலுப்படுத்துகிறது. இறைவனின் உள்ளமையையும் வல்லமையையும் அவர்கள் உணர்கிறார்கள். இறைவன் கூறும் வாழ்வின் நோக்கமும் அவன் பரிந்துரைக்கும் வாழ்வியலும் மறுமை வாழ்க்கையும் சொர்க்கமும் நரகமும் எல்லாம் உண்மை என்பதை வலுவாக உணர்கிறார்கள்.
இவ்வாறு ஆன்மீக வெளிப்பாடுகளை அறிவியல் கண்டுபிடிப்புகள் உறுதிப் படுத்தும்போது சமூகத்தின் நன்னடத்தை மேம்படவும் வழிகோலுகிறது.
மறுபக்கம் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு எதிராக வரும்போது அவை எதிர்மறை விளைவுகளை உண்டாக்கவும் செய்கின்றன. உண்மைக்குப் புறம்பான ஆன்மீக கருத்துக்களும் உண்மைக்குப் புறம்பான அறிவியல் கருத்துக்களும் ஊகங்களும் சமூகத்தில் பரவும்போது குழப்பங்களுக்கும் கலவரங்களுக்கும் வித்திடுகின்றன என்பதும் உண்மையே. இன்னும் ஆன்மீகத்தோடு தொடர்பில்லாமல் உண்டாகும் அறிவியல் வளர்ச்சிகள் மனிதகுலத்தின் ஆக்கபூர்வமான பயன்பாடுகளுக்கு பதிலாக அழிவுக்கே துணைபோகும் என்பதை நாம் அனுபவபூர்வமாகவே அறிவோம்.
ஆன்மீகமும் அறிவியலும் கைகோர்த்தால்..?
ஆம், உண்மையில் அறிவியலின் கைபிடித்து அதற்கு நடைபழக்கியது ஆன்மீகமே என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? முடியாவிட்டாலும் நம்பியே ஆக வேண்டும். ஏனெனில் உண்மை அதுவே!
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு பாலைவனப் பெருவெளியில் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் எப்படிப்பட்ட சிந்தனை இருந்திருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் கவலையெல்லாம் உணவைப் பற்றியும் அதை சம்பாதிப்பதைப் பற்றியும் மட்டுமே இருந்திருக்கும்! ஆனால் அப்படிப்பட்ட அரபு மண்ணில்தான் இன்றைய அறிவியல் புரட்சிக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த விஞ்ஞானிகள் உருவானார்கள்.
ஐரோப்பா அன்று இருண்ட காலத்தில் வாழ்ந்தபோது அந்த மண்ணில் இருந்துதான் அறிவியலின் அடிப்படைகள் உருவாகி வளர்ந்தன. பிற்காலங்களில் சிலுவை யுத்தங்களுக்குப் பிறகு அவை ஐரோப்பியர்களால் கைப்பற்றப் பட்டு அவர்கள்தான் அறிவியலின் முன்னோடிகள் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்த காலனி ஆதிக்க சக்திகளும் இந்த உண்மைகளை மறைத்து வைப்பதில் பெரும் பங்காற்றின. ஆயினும் சில மறைக்கப்படாத விடயங்கள் இன்றும் தலைகாட்டவே செய்கின்றன. உதாரணமாக அல்ஜிப்ரா, ஆல்கஹால், அல்கெமியா போன்ற அறிவியல் பதங்கள் அரபு முஸ்லிம்களிடம் இருந்து அறிவியல் அடிப்படைகள் உருவாகின என்பதற்கு சாட்சி பகர்ந்து கொண்டு இருக்கின்றன.
இது குறித்து பேராசிரியர் Stanislas Guyand அவர்கள் தனது Encyceopadie des science religieusus என்ற ஜெர்மனிய நூலில்,
= ‘மத்தியகால வரலாறுகளிலேயே இஸ்லாத்தின் வரலாறு நாகரிகத்தின் வரலாறாகவே விளங்குகிறது. புறக்கணிக்கப்பட்ட கிரேக்க விஞ்ஞானத்தையும் தத்துவ சாத்திரங்களையும் அழிவிலிருந்து பாதுகாத்து, மேற்குலகை எழுச்சிபெறச் செய்து அறிவியக்க வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களாக இருந்ததற்காக நாம் முஸ்லிம்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். ஏழாம் நூற்றாண்டில் பழைய உலகம் மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது அரேபியர்கள் பெற்ற வெற்றி இந்த உலகில் புதிய குருதியைப் பாய்ச்சியது.’ என்று குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்டதொரு கூற்றல்ல.
இதே கருத்தை C.E. Storss என்ற அறிஞர் Many Greeds -One cross என்ற நூலில்,
= ‘இருள் அடைந்திருந்த யுகத்தில் விஞ்ஞானம், தத்துவம் போன்ற ஒளிச்சுடர்களை உயரப்பிடித்திருந்த பெருமை அரேபிய முஸ்லிம்களையே சாரும். அவர்களே அரிஸ்டோட்டில், பிளேட்டோ, இயுக்லித் தொலமி ஆகியோரின் நூல்களை அறபு மொழியில்பெயர்த்து பாதுகாத்தனர். அவர்களாலேயே இந்நூல்களை மறுமலர்ச்சிக்காலத்தில் ஐரோப்பியரும் தத்தம் மொழிகளில் பெற்றுக்கொள்ள முடிந்தது’ என்று குறிப்பிடுகின்றார்.
பகுத்தறிவு கொண்டு அறிவாய் படைத்தவனை!
இந்த சிந்தனைப் புரட்சி அந்தப் பாலைவன மணலில் துளிர்விடக் காரணமாக அமைந்தவை அன்று இறைவேதம் திருக்குர்ஆன் தூவிய விதைகளே! அந்தப் பாலைவன வாசிகளைத் திருக்குர்ஆன் வானத்தையும், பூமியையும் மலைகளையும் விலங்கினங்களையும் பற்றி சிந்திக்கத் தூண்டியது. பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் அந்த மண்ணில் இறங்கிய இறைவசனங்களில் சிலவற்றைப் பாருங்கள்:
= (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும், இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும், இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) (திருக்குர்ஆன் 88:17-20)
= நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (திருக்குர்ஆன் 3:190)
நபிகளாரின் சத்திய அழைப்பு:
நபிகள் நாயகம் அன்று மக்காவில் இவ்வுலகைப் படைத்த இறைவனைப் பற்றியும் இந்த உலக வாழ்வின் நோக்கம் பற்றியும் இறுதித்தீர்ப்பு நாள் பற்றியும் மறுமையைப் பற்றியும் நல்லொழுக்க வாழ்க்கை வாழவேண்டியதன் அவசியம் பற்றியும் போதித்து இஸ்லாம் என்ற இறைநெறிக்கு மக்களை அழைத்தார்கள். அந்த சத்தியப் பிரச்சாரத்தின்போது கடவுள் கடவுள் என்று முன்னோர்கள் கற்பித்த உருவங்களையும் படைப்பினங்களையும் விட்டுவிட்டு இவ்வுலகைப் படைத்த இறைவனை நேரடியாக வணங்க மக்களை அழைத்தார்கள். அவனை பகுத்தறிவு பூர்வமாக அறிய படைப்பினங்களைப் பற்றி ஆராயத் தூண்டினார்கள். அவரது பிரச்சாரத்துக்கு உறுதுணையாக இறைவன் புறத்திலிருந்து திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டன. அவற்றில் ஒரு சிலவற்றைத்தான் இங்கே காண்கிறீர்கள்.
இறைவனின் உள்ளமையும் இறைமார்க்கம் கூறும் இறுதிநாள் விசாரணையும் மறுமை வாழ்வும் எல்லாம் உண்மையே என்பதைப் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணர இறைவனின் படைப்பினங்களை கூர்ந்து நோக்கவும் ஆராயவும் இறைவன் கூறுவதை இவற்றில் காணலாம்
= 38:29. (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
= 32:27. அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?
= 56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
= 56:63. (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
= 56:68. அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
= 56:71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
அறிவியல் புரட்சிக்கு அடித்தளமான ஆன்மீகம்
இன்னும் இவைபோன்ற ஏராளமான இறைவசனங்களை நாம் திருக்குர்ஆனில் காணலாம். அறிவைத் தேடுவதும் இறைவனின் படைப்பினங்களைப் பற்றி ஆராய்வதும் புண்ணியம் தரும் செயலே என்பதை இறைவேதத்தை அன்றாடம் ஓதும் மக்கள் உணரத் தொடங்கினார்கள். படைப்பினங்களைப் பற்றிய ஆய்வுகளை முக்கியமான கடமையாக மேற்கொள்ளத் துவங்கினார்கள். இவ்வாறுதான் நாம் இன்று காணும் – அனுபவிக்கும் – அறிவியல் புரட்சியின் வேர்கள் அடித்தளமிடத் துவங்கின. இஸ்லாம் வளர வளர இஸ்லாமிய ஆட்சியும் வெகுவாக விரிவடைய அறிவியல் ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட்டன. அறிவைத் தேடிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அறிவியல் வளர்ச்சிக்கான தளங்கள் அமைக்கப்பட்டன. மருத்துவம், கணிதம், வானவியல், புவியியல், இரசாயனவியல் போன்ற பல துறைகளும் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தன.
படைப்பின் இரகசியங்களை தாங்கி நிற்கும் அற்புத வேதம்
= நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் சத்தியத்தை மறுப்போர் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (திருக்குர்ஆன் 21:30)
= நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன். (திருக்குர்ஆன் 35:41)
திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்ட காலம்
முதல் தொடர்ந்து பாமர மக்களையும் படித்தவர்களையும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம். ஒருபுறம் அறிவியலுக்கு அடிப்படையான தூண்டுதலை வழங்குகிறது. மறுபுறம் பல ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விடயங்கள் பால் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது . உதாரணமாக இக்கட்டுரையில் நாம் எடுத்தோதியுள்ள வசனங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இவை விலங்கியல் (zoology), புவியியல் (geology), வானவியல் (astronomy) போன்ற துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளத் தூண்டுபவையாக உள்ளதைப் பாருங்கள்.
அதேபோல பிற்காலங்களில் நவீன அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட பல உண்மைகள் திருக்குர்ஆன் வசனங்களில் புதைந்து கிடப்பதையும் நாம் காணமுடிகிறது. உதாரணமாக மேற்கூறப்பட்ட வசனங்களில் - மலைகள் பூமியில் முளைகளைப் போல் ஆழமாக நாட்டப்பட்டுள்ளன என்ற உண்மை, பெருவெடிப்புக் கொள்கை (bigbang theory), உயிர்களின் தோற்றம் நீரிலிருந்தே (aquatic origin), கோள்களுக்கு இடையே புவிஈர்ப்பு விசை (gravitational force) போன்ற உண்மைகள் புதைந்திருப்பதைக் காணமுடிகிறது.
---------------------