இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 மார்ச், 2020

கொள்ளை நோயின்போது இறை வழிகாட்டுதல்


Image result for pandemicஇந்த வாழ்க்கைப் பரீட்சையின் ஒரு அங்கமாக நோயையும் படைத்துள்ள இறைவன் அந்த சோதனையின்போது எவ்வாறு இறை விசுவாசிகள் நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றிய வழிகாட்டுதல்களை தனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவுறுத்தி உள்ளான். 

நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை 
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்:
= "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள் ' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பு: அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) - புகாரி)
= “வியாதி பீடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள்”
(அறிவிப்பு: அபூ ஹுரைரா (ரலி) – புகாரி)
இரவில் பாத்திரங்களை மூடிவைத்தல் 
= இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடி வையுங்கள். ஏனெனில் ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. மூடி இல்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடி வைக்காத தண்ணீர் பையையும் கடந்துசெல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை. 
(அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் நூல்: முஸ்லிம்
இரவு தொழுகை 
=  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . "இரவுத் தொழுகையை தொழுது வாருங்கள், அவ்வாறு தொழுவது உங்களுக்கு முன்வாழ்ந்த நல்லடியார்களின் பண்பாகும். மேலும் இரவில் நின்று வணங்குவது அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத் தரக்கூடியதாகவும், பாவங்களை விட்டு விலக்கக் கூடியதாகவும், தவறுகளுக்கு பரிகாரமாகவும் மற்றும் உடலிலிருந்து நோயை அகற்றக் கூடியதாகவும் இருக்கின்றது. (அறிவிப்பு: பிலால் (ரலி) - நூல் திர்மீதி)
தொற்றுநோய் வரும் முன் பிரார்த்தனை 
= நபி ஸல் அவர்கள் கூறினார்கள் “யார் மூன்று முறை
பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷையுன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ்ஸமாயி வஹுவஸ் ஸமீஉல் அலீம் என்று கூறுகிறாரோ அவர் காலைபொழுதை அடையும் வரை தீடீரென்று பிடிக்கக்கூடிய எந்த தொற்றும் அவரை தீண்டாது . இவ்வாறே காலையில் கூறுவாரேனில் மாலைவரை அவரை தீடீரென்று பிடிக்கக்கூடிய எந்த தொற்றும் நெருங்காது. (அபூ தாவூது)
(பொருள்: யாருடைய திருநாமம் கூறி செய்யப்படும் எந்தச் செயலுக்கும் வானம் பூமியிலுள்ள எதுவும் இடையூறு செய்யாதோ அந்த அல்லாஹ்வுடைய திருநாமத்தின் பொருட்டால் (காவல் தேடுகின்றேன்) )
நபிகளார் கற்றுத் தந்த இன்னொரு பிரார்த்தனை
= அஊதுபிகல்லாஹும்ம மினல் பரஸி வல் ஜுனூனி வல் ஜுதாமி வமின் ஸய்யியில் அஸ்காம்
(பொருள்: வெங்குஷ்டம்,பைத்தியம், தொழு நோய், மற்றும் பிற கொடிய நோய்கள் அனைத்தை விட்டும்-யா அல்லாஹ் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். (நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ)
தாங்க முடியாத கடுமையான சோதனையிலிருந்து பாதுகாப்பு கோருவது 
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
"நீங்கள் அல்லாஹ்விடத்தில் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தேடிவாருங்கள்” (அறிவிப்பு: அபூஹுரைரா ரலி) ஸஹிஹ் புகாரி)
============
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html

செவ்வாய், 24 மார்ச், 2020

நோய் என்ற சோதனையை சாதனையாக்க...


இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட  கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்கு பகரம் வழங்குவாயாக! என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான் (நூல்: முஸ்லிம்)  

நோய் வரும்போது பொறுமையைக் கடைப்பிடித்து இறைவனை நினைவுகூர்ந்து துதித்தால் நமது ஆரோக்கியத்தை முன்பிருந்ததைவிட இறைவனே செம்மைப் படுத்துகிறான்! இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டு அவனை விசாரிக்க வருவோரிடம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பானாயின், இறைவன் என் அடியான் மீது எனக்கு கடமை இருக்கிறது. அவனை நான் இறக்க வைப்பின் அவனை சொர்க்கத்தில் நுழைய வைப்பேன். அவனை நான் குணப்படுத்தினால் அவனுடைய சதையை விட சிறந்த சதையையும் அவனுடைய இரத்தத்தை விட சிறந்த இரத்தத்தையும் மாற்றி அவனுடைய தீமைகளை அவனை விட்டும் அப்புறப்படுத்தி விடுவேன் என்று கூறுவான். (நூல் : முஅத்தா)
சொர்க்கவாசியான ஒரு பெண்மணி
= நபித்தோழர்  இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம், ‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்; (காட்டுங்கள்)என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, ‘நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
(அறிவிப்பு: அதாஉ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்). நூல்: புஹாரி)
நோய்நிவாரணம் தாமதமானால்?
இவ்வாழ்க்கை என்பது பரீட்சை என்பதால் சில வேளைகளில் நோய் நிவாரணம் தாமதமாகும். அப்போதும் நாம் பொறுமையை இழக்காமல் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால் அதுவும் நமக்கு நன்மையை தாங்கி வருகிறது என்பதே! எப்படி? நம்மை இறைவன் மேலும் மேலும் நம் பாவங்களை விட்டு  தூயமைப்படுத்த விரும்புகிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காய்ச்சலை நீங்கள் ஏசாதீர்கள், காரணம், நெருப்பு இரும்பை தூய்மைப் படுத்துவது போல அது உங்கள் பாவங்களை போக்கிவிடும்.
மரணம் நெருங்கினால்.. ?
முறைப்படி மருத்துவம் மேற்கொண்ட பிறகும் பொறுமை மேற்கொண்ட பிறகும் போகப் போக நோய் நம்மை மரணத்தின் விளிம்புக்கும் கொண்டு செல்லலாம். அப்போதும் நாம் பொறுமையையும் நம்பிக்கையையும் கைவிடக்கூடாது. ஆனால் சோதனைகள் எவ்வளவுதான் அதிகமானாலும் பொறுமையை இழந்து மரணத்தைத் தா என்று இறைவனிடம் அவசரப்பட்டு பிரார்த்திக்கக் கூடாது. தற்கொலை அல்லது கருணைக்கொலை என்று எதையும் நாடக்கூடாது. மரணத்துக்கு முன்னதாக சோதனைகள் அதிகரித்தால் இறைவன் தன் அடியானை அவனது பாவங்கள் முழுமையாக கழுவப்பட்ட நிலையில் அவனது உயிரைக் கைப்பற்ற விரும்புகிறான் என்று பொருள். இதுவும் நபிகளாரின் கூற்றே!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் உங்களுக்கு ஏற்படும் சோதனை காரணமாக மரணத்தை விரும்பி பிரார்த்திக்க வேண்டாம். அவ்வாறு நிர்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு கேளுங்கள்: இறைவா எனக்கு வாழ்வு நல்லதாக இருக்கும் வரை என்னை வாழ வை. மரணம்  நல்லதென்றால் என்னை மரணிக்கச் செய்வாயாக!’”( நூல் : புஹாரி)
ஆக, எந்நிலையிலும் நிதானம் இழக்காமல் இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு செயல் பட்டால் இவ்வுலகில் ஏற்படும் சோதனைகளை மறுமை சாதனைகளாக மாற்றலாம்!
=============== 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

அல்லாஹ் என்றால் யார்?
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

கருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை


Image result for worryகொடிய நோய்கள் பாதிக்கும்போது ஒரு நோயாளி தன்னம்பிக்கை இழப்பதற்கும் நிராசை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணம் தான் அதுவரை இவ்வுலகில் அனுபவித்த சொத்து, சுகம், உறவு, ஆதரவு இவை அனைத்தும் கைவிட்டுப் போகிறதே என்ற கவலை. இது மன அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அதேவேளையில் நம்மைப் படைத்து அயராமல் பரிபாலித்து வரும் இறைவனைப்பற்றி அறிந்தவர்களின் மனோ நிலை இதற்கு நேர் மாற்றமாக இருக்கும். அவர்கள் அந்த இறைவனை சந்திக்கப் போகிறோம் என்ற உணர்வில் ஆறுதலும் பேரானந்தமும் அடைவார்கள். அதைத்தான் இறைவன் இவ்வாறு கூறுகிறான்:
ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.' (திருக்குர்ஆன் 2:156,157)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
கருணையின் உறைவிடமே இறைவன்  
இன்று நம்மோடு உறவாடிக்கொண்டிருக்கும் மனிதர்களில் யார் நம்மோடு அன்பு மிக்கவர்கள் என்று கேட்டால் நாம் யாருமே தமது பெற்றோரையே அதிலும் குறிப்பாக தாயார்தான் என்றுதான் கூறுவோம்.
தொடர்ந்து, “அந்தத் தாயைப் படைத்தது யார்? தாய் உள்ளத்தில் என்றும் வற்றாத தாய்ப் பாசம் என்பதை விதைத்தவன் யார்? தாயின் மாரில் நமக்காக தாய்ப் பாலை சுரக்கச் செய்தவன் யார்?” என்று கேட்டுப்பாருங்கள்.
இந்தக் கேள்விகளுக்கு விடைதேடும்போதுதான் இறைவன் என்பவன் எத்துணைக் கருணைமிக்கவன் என்பதை உணர்கிறோம்.
இவை அனைத்தும் நம்மீது கொண்ட அன்பின் காரணமாகவே என்பதை நாம் உணரும்போது அவனை நேசிக்காமல் இருக்க முடியுமா?
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அன்பின் நூறு பாகங்களும் இறைவனுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை மனிதன், ஜின்,மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை இறைவன் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.” (அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி) (புகாரி) )

அப்படியென்றால் அந்த இறைவனின் கருணையை நினைத்துப் பாருங்கள். இதன் காரணமாகவே அவனை அளவற்ற அருளாளன் (அர்ரஹ்மான்) என்றும் நிகரற்ற அன்புடையவன்(அர்ரஹீம்) என்றும் கூறுகிறோம். அதாவது இவ்வுலகில் அனைவருக்கும் பொதுவாக அருள்புரிபவனும் அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தவர்களுக்கு மாத்திரம் மறுமையில் அருள்புரிபவனும் என்பது இதன் பொருள்.
= அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். நியாயத் தீர்ப்புநாளின் அதிபதி (திருக்குர்ஆன் 1: 3, 4)
= அவனே அல்லாஹ்வணக்கத்திற்குரியவன்அவனைத் தவிர வேறு நாயன் இல்லை மறைவானதையும் பகிரங்கமானதையும் அறிபவன்அவனே அளவற்ற அருளாளன்நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 9:22 )   
  
இறைவனின் தன்மைகள்
இறைவனைப்பற்றிய தவறான சித்தரிப்புக்களே மக்களிடம் இறைநம்பிக்கை இல்லாமல் போவதற்கும் அவன் மீது அவநம்பிக்கை ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது. பலவீனமான படைப்பினங்களை எல்லாம் காட்டி அவற்றையெல்லாம் கடவுள் என்று சித்தரிக்கும் போது உண்மை இறைவனைப்பற்றிய மரியாதை உணர்வு மனித மனங்களில் இருந்து அகன்று போய் விடுகிறது.
மாறாக இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் அவற்றில் உள்ளவற்றையும் அப்பாற்பட்டவற்றையும் படைத்து பரிபாலித்து வருபவனே அந்த இறைவன் என்றும் அவன் நம்மீது அளவிலா கருணை கொண்டவன் என்றும் மிக நெருக்கமானவன் என்றும் மக்களுக்கு கற்பித்தால் உண்மை இறைநேசமும், இறையச்சமும், தன்னம்பிக்கையும் அவர்களுக்கு உண்டாகும்.
அப்படிப்பட்ட பண்புகளைத்தான் இறைவேதம் திருக்குர்ஆன் நமக்குக் கற்பிக்கிறது:
= நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல்  அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
இறைவனின் அழைப்பு:
= (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
 = என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய கருணையில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 39:53)

அடியார்களை நெருங்கக் காத்திருப்பவன்
இறைவன் தன்னைப்பற்றி இவ்வாறு கூறியதாக நபிகளார் கூறினார்கள்:
 என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்
இதை அபூஹுரைரா(ரலி) அறிவித்தார் (புகாரி 2224) .
 ================= 
இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?
https://www.quranmalar.com/2012/09/blog-post_12.html
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

ஞாயிறு, 22 மார்ச், 2020

நோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்!


Image result for paradise beautiful flower gardens waterfallsநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள்  எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள்ளது என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறார்கள்.
= 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.' (திருக்குர்ஆன் 2:155-157)  
 இது ஒரு தற்காலிகமான சோதனைக்கூடம் என்பதால் இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளும் வசதிகளும் கொடுக்கப் படுகின்றன. சிலருக்கு செல்வமும் சிலருக்கு வறுமையும் சிலருக்கு ஆரோக்கியமான உடல்கட்டும் சிலருக்கு உடல் ஊனமும் என மாறி மாறி கொடுக்கப்பட்டு இங்கு மனிதர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து இருப்பதால் மற்றவர்களைப் பார்த்து அவர்கள் பொறாமைப் படுவதுமில்லை. தங்களுக்கு வாய்த்த நோய் குறித்தும் ஏழ்மை குறித்தும் பலவீனம் குறித்தும் அளவுக்கு மீறி கவலைப் படுவதுமில்லை.
மறுக்க முடியாத உண்மைகள் சில...
= நமது உண்மையான மற்றும் நிலையான முடிவில்லாத வாழ்க்கை என்பது மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கைதான். அது ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும். இவை இரண்டும் அல்லாத வேறு ஒரு வாழ்க்கை கிடையாது.
= இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை என்ற வாய்ப்பு ஒரே ஒரு முறை கிடைப்பது. மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது கிடையாது. அதுவும் அவரவரது மரணம் வரை மட்டுமே இவ்வாய்ப்பு நீடிக்கும்.
= எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் மனோ இச்சைகளுக்கு இடம் கொடாமல் நம்மைப் படைத்தவன் வழங்கும் வாழ்க்கை வழிகாட்டுதல் படி வாழ்ந்தால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். அந்த வாழ்க்கைத் திட்டமே இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது.
மறுமை சாத்தியமா?
சாதாரண ஒரு இந்திரியத் துளியில் இருந்து உருவாகி இன்று பூமியில் நடமாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்தாலே சொர்க்கம் நரகம் என்பது கற்பனையோ மாயையோ அல்ல என்பதை நாம் உணரலாம். இம்மை என்பது எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் மறுமை என்பது.  இதை நடத்திக் கொண்டிருக்கும் இறைவனுக்கு நம்மை மீண்டும் படைப்பது என்பது கடினமானது அல்ல.
இறுதித்தீர்ப்பு நாளின்போது ஒவ்வொரு மனிதனும் இப்பூமியின் மீது செய்த புண்ணியங்களும் பாவங்களும்  எடுத்துக்காட்டப் படும். புண்ணியங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு சொர்க்கம் விதிக்கப்படும். பாவங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு நரகம் விதிக்கப்படும்.
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அளவற்ற இன்பங்களும் முறையாக அனுபவிக்கும் வாழ்விடமே சொர்க்கம். அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இராது!
= “வல்லமையும் மாண்பும் மிக்க இறைவன், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) இறைவன் உங்களுக்கு அறிவித்ததுள்ளது சொற்பமே!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பு  : அனஸ்(ரலி)  நூல்: முஸ்லிம்)
இதோ தனது திருமறையில் இறைவன் கூறுகிறான்:
= நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர்வழி காட்டுவான். இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். (திருக்குர்ஆன் 10:9)
= பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன.  இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.) (திருக்குர்ஆன் 43:71)
= பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (திருக்குர்ஆன் 47:15)
கழிவுகள் இல்லா ஆரோக்கியமான உடல்
= இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். மலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சிறுநீர் கழிக்கவுமாட்டார்கள். அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று, ஏப்பமாக வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்.”

அறிவிப்பு: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி)
================
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

உங்கள் பரீட்சைக் கூடத்தை அறிந்து கொள்ளுங்கள்


Image result for exam hallஉங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய – அரசாங்கத் தேர்வை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன செய்வீர்கள்? அது நடக்கக்கூடிய இடத்தை முன்கூட்டியே அடைவீர்கள். அங்கு பேணவேண்டிய ஒழுங்குகளை அறிந்து அதில் கவனமாக இருப்பீர்கள். பரீட்சை நேரத்தின் வரையறைக்குள் உங்கள் முழு கவனமும் பரீட்சையை எப்படியாவது வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டும் என்பதிலேயே இருக்கும் அல்லவா?
இப்போது இந்த தற்காலிக உலகம் என்ற பரீட்சைக் கூடத்தை சற்று நினைத்துப்பாருங்கள். மரணத்திற்குப் பிறகு வர உள்ள உங்கள் எதிர்காலம் – அதுவும் முடிவில்லா வாழ்விடம் - சொர்கத்திலா அல்லது நரகத்திலா என்பதைத் தீர்மானிக்கும் பரீட்சைக் கூடம் இது.
=  "இறைவன் மீது ஆணையாக! மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது உங்களில் ஒருவர் தம் ஆட்காட்டி விரலைக் கடலில் நுழைப்பதைப் போன்றதாகும். பின்னர் (கடலிலிருந்து எடுக்கும் போது) அந்த விரல் எந்த அளவுக்கு (தண்ணீரை) எடுத்துக் கொண்டு வருகிறது என்பதைக் கவனிக்கட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஸ்தவரித் (ரலி)  நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ இப்னுமாஜா
அப்படியானால் இந்த விடயத்தில் அலட்சியம் காட்டமுடியுமா?
பரீட்சைக் கூடத்தின் இயல்புகள்
உங்களை மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் இந்த பூமி என்ற பரீட்சைக் கூடத்தில் நுழைவிக்கப்பட்டு உள்ளீர்கள். உங்களைக் கேட்காமலே இதிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். இதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அனுபவப்பூர்வமாகவே இதை அன்றாடம் காண்கிறீர்கள். எனவே உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கீழே சொல்லப்படும் விடயங்களை உண்மை என புரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கைப் பரீட்சை வெற்றிகரமாக அமையும். மறுத்தால் அதன் கொடிய விளைவுகளுக்கு ஆளாகவும் நேரிடும்.
மரணம் வாழ்வும் இந்தப் பரீட்சைக்காகவே
= உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன்மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2 ) 
இறுதி வெற்றி எது?
 = ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்  அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில்தான் உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்.  இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
ஷைத்தான் பரீட்சையின் அங்கம்:
= இங்கு நேரான பாதையை மக்களுக்குக் காட்டித்தர இறைவன் தனது தூதர்களையும் தன் வேதங்களையும் அனுப்புகிறான். அதே நேரத்தில் இது ஒரு பரீட்சை என்ற காரணத்தால் இதில் ஷைத்தான் என்ற ஒரு கெட்ட சக்திக்கும் நம்மோடு வாழ அனுமதி வழங்கியுள்ளான்.
மதிப்பெண்கள் இறைவன் இடுவதே:
= இங்கு இறைவன் எதை செய் என்று சொல்கிறானோ அதுவே நன்மை அல்லது புண்ணியம் ஆகும். எதை செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே தீமை அல்லது பாவம் ஆகும். அவற்றை இறைவனின் வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் அறிகிறோம்.
ஏற்றதாழ்வுகள் முரண்பாடுகள் இங்கு நியதி:
= இங்கு நல்லவையும் தீயவையும்  நியாயமும் அநியாயமும் செல்வமும்  வறுமையும்  நம்  முன் மாறிமாறி வரும்.  நல்லோர்களுக்குத் துன்பமும் கஷ்டமும் தீயோர்களுக்கு   இன்பமும்  மகிழ்ச்சியும் கிடைப்பதெல்லாம்  இங்கு சகஜம். அவ்வாறு நன்மை செய்வதற்கும் தீமை செய்வதற்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் இடமே இவ்வுலகம்.
பரீட்சை அவனது டிசைன்
= யார் எவ்வாறு வேண்டுமானாலும் எதைக்கொண்டு வேண்டுமானாலும் பரீட்சிக்கப்படலாம். அவற்றின் நியாயம் அநியாயம் என்பது நமது சிற்றறிவுக்கு எட்ட வேண்டும் என்பது இல்லை. நீர்க்குமிழிகள் போல் வாழ்ந்து மறையும் மனிதர்களின் தீர்ப்புக்காக இறைவன் காத்திருக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை.
அதிபக்குவம் வாய்ந்த பரீட்சையாளன்
= இந்த பரீட்சையை எவ்வளவு பக்குவமாக நடத்துவது என்பதை மிக நுணுக்கமாக அறிந்தவன் இறைவன். அவனது அறிவுநுணுக்கமும் அளவிலா ஆற்றலும் நம்மைச்சுற்றி உள்ள படைப்பினங்களின் பக்குவமான அமைப்பிலும் அவற்றின் குறையற்ற இயக்கத்திலும் அது பிரதிபலிப்பதைக் காண்கிறோம். அற்பஜீவிகளான நம்முடைய சிற்றறிவுக்கு அறவே புலப்பட வாய்ப்பில்லை.
அற்பமானதே மனித அறிவு
= அவன் எதுவரை அனுமதிக்கிறானோ மற்றும் எவற்றை நமக்கு அறிவித்துத் தருகிறானோ அவை மட்டுமே நமது அற்ப அறிவு என்பது. அதை வைத்துக்கொண்டு அந்த இறைவனின் அறிவையும் ஆற்றலையும் எடைபோடுவதும் அவனது திட்டத்தில் குறைகாண்பதும் மனிதனின் அறியாமையின் வெளிப்பாடே! மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட அற்பமான தவணையில் தோன்றி மறையும் அற்பத்திலும் அற்பமான மனிதன்  ஆதியும் அந்தமும் இல்லாதவனும் அளவிலா அறிவும் ஆற்றலும் கொண்டவனும் ஆன இறைவனுக்கு அவன் ஏற்பாட்டுக்கு மாற்று ஒன்றைப் பரிந்துரைப்பது அகங்காரத்தின் உச்சகட்டம் என்பதை நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

நோயும் கஷ்டங்களும் இந்த பரீட்சையின் பாகங்களாக வரும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளான். அவற்றைப் பொறுமையோடு எதிர்கொள்ளும் புண்ணியவான்களுக்கு சொர்க்கம் காத்திருக்கிறது என்பதையும் இறைவன் தெளிவுபடுத்தியுள்ளான்.
= 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.' (திருக்குர்ஆன் 2:155-157) 
============= 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
அல்லாஹ் என்றால் யார்?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூன்று!

அங்கத்தூய்மை செய்யும் வரிசைக்கிரமம்:
1.இறை நாமத்தில் தொடங்குதல் 2.மூன்று முறை இரு முன்கைகளையும் கழுவுதல். 3.  மூன்று முறை வாய் கொப்பளித்தல். 4. இதில் ஒருமுறை மூக்கில் நீரிழுத்து சீற்றுதல். 5.  மூன்று முறை முகம் கழுவுதல் 6. மூன்று முறை முழங்கை வரை இரு கைகளையும் கழுவுதல். 7. ஈரக்கையால் ஒருமுறை தலை தடவுதல் 8. அதே ஈரக் கையால் காதுகளை துடைத்தல் 9. மூன்று முறை  கால்களை கணுக்கால் வரைக் கழுவுதல்
Image result for islamic ablutionமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூன்று! 
-------------------------------------------------
1. தினசரியும் ஐவேளைத் தொழகைகளுக்கு முன் அங்கத் தூய்மை செய்து கொள்வது இஸ்லாமியர் மீது கடமையாகும். கொரொனோ மட்டுமல்ல எந்த ஒரு தொற்றும் நம்மை அண்டாமலிருக்க உதவும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இது இருப்பதால் இது இஸ்லாமியருக்கு மட்டுமல்ல, மாற்று மத அன்பர்களுக்கும் இது நல்லதே!

2. கூடவே ஒவ்வொரு அங்கத் தூய்மைக்குப் பின்னும் அந்த நேரத் தொழுகையையும் நீங்கள் நிறைவேற்றினால் உங்களுக்கு உங்களைப் படைத்த இறைவனோடு உரையாடவும் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு உண்டாகிறது. அதனால் உடல் நலத்தோடு மன நலமும் மேம்படும்!
3. மேற்கண்ட நடவடிக்கைகளை கீழ்கண்ட கொள்கை முழக்கத்தோடு- அதை மனமார உணர்ந்து உச்சரித்தால் -அது உங்களுக்கு இம்மையிலும் அமைதியான வாழ்க்கையைத் தரும். மறுமையில் சொர்க்கத்தையும் பெற்றுத் தரும். நரகத்தில் இருந்து பாதுகாக்கும்!
"லா இலாஹா இல்லல்லாஹ்- முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" (பொருள்: வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் அல்லாஹ் மட்டுமே- முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் )
- ஆம், அன்பர்களே இதுதான் இஸ்லாம் என்பது. அனைத்து மனிதகுலத்திற்கும் சொந்தமான வாழ்வியல் கொள்கை!
இதை நீங்கள் பின்பற்ற ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறக்கவேண்டும் என்பது இல்லை. தொப்பியோ தாடியோ லுங்கியோ புர்காவோ அணிந்தவராக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. கண்ணியமான -வரம்பு பேணிய- ஆடை அணிந்தவராக இருந்தால் போதுமானது.
==============
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ?

நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ?
இறைவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன்னால் நாம் நமது நிலையைப் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்....
-    இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு துகள் போன்றவர்கள் நாம்.
Image result for corono virus image-    இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு இல்லை.
-    மட்டுமல்ல நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.
-    நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் நம் விருப்பப்படி நடப்பது அல்ல.
நம்மை மீறிய நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது. அந்த சக்தியையே இறைவன் அல்லது கடவுள் என்று அழைக்கிறோம்.
எனவே முதலாவதாக அவனே எஜமானன் நாமோ அடிமைகள் என்பதால் அவனைக் கேள்விகள் கேட்கவோ அவனது திட்டங்களுக்கு மாற்றாக வேறு ஒன்றைப் பரிந்துரைக்கவோ நமக்கு துளியும் அதிகாரமும் இல்லை அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் நம்வசம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.
அர்த்தமுள்ளதே வாழ்க்கை
 அடுத்ததாக நமக்கு வழங்கப்பட்டுள்ள அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது  இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இறைவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
= நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்;  இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்;   வானத்திற்கும்,  பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 2:164)  
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப்  படைக்கப் பட்டிருப்போமாஇதையே இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் கேட்கிறான்:
 = நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (திருக்குர்ஆன் 23:115)
அவ்வாறு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும்.  இறைத்தூதர்களும்  இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை  என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாகப் படைத்துள்ளான்  என்பது.  இதில் நமது  செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. அங்குதான் அறவே நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அளவிலா இன்பங்களும் எல்லாம் வழங்கப்படும். யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.
இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு   விதிக்கப்பட்ட   தவணையில்   வந்து போகிறோம். இங்கு  இறைவனின் கட்டளைகளுக்குக்   கீழ்படிந்து  செய்யப் படும்  செயல்கள்   நன்மைகளாகவும் கீழ்படியாமல்   மாறாகச்  செய்யப்படும்   செயல்கள்  தீமைகளாகவும்   பதிவாகின்றன.  இவ்வாறு  ஒவ்வொருவருக்கும்  நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும்  வாய்ப்பும் அளிக்கப்படும்  இடமே  இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்!
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறதுபரீட்சைக்காக கெடுதியையும்நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35) 
இந்தப் பரீட்சை வாழ்வின் ஒரு பாகமாகவே இங்கு நோய் வருகிறது.
= 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:155)
அவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:
'(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.' (திருக்குர்ஆன் 2:156-157) 
=================
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html