இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 நவம்பர், 2017

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் இதழ்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் இதழ்
பொருளடக்கம் :
நீங்கள் தோன்றியபோது நிகழ்ந்த அதிசயங்கள்!-2
நோய் இறை அடியானுக்கு வரம் -6
கருவியலைத் திருத்திய குர்ஆன் வசனங்கள்-7
வாசகர் எண்ணம் -10
தாய்ப்பாசம் என்ற இறை அற்புதம் -11
பாசத்தலைவன் பசியாறுவது எப்போது? -13
நமது சம்பாத்தியம் அனுமதிக்கப்பட்டதா இல்லையா?- 15
இறைவன் அல்லாதவற்றை வணங்குவோரின் நிலை -16
மனம்திருந்துவோருக்கு மன்னிப்புண்டு-18
மக்கள் சேவையின்றி மகேசனை அணுகமுடியாது-19
அண்டை  வீட்டாரின்  உரிமைகள்-21
அண்டை வீட்டாருக்கு தொல்லை தருதல் கூடாது -23

செவ்வாய், 21 நவம்பர், 2017

பாசத்தலைவன் பசியாறுவது எப்போது?

Related image
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே  உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அதிகமான நபர்கள் உளமாற நேசிக்கிறார்கள் என்றால் அவர் எப்படிப்பட்ட மாமனிதராக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். பதினான்கு நூற்றாண்டுகளாக உலகெங்கும் மக்கள் தங்களைப் பிணைத்திருந்த இனம் நிறம் ஜாதி போன்ற அடிமைத்தளைகளிலிருந்து விடுபட்டு  சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அனுபவிப்பதற்கும் காரணமாக அமைந்தவர் அவர் என்றால் அவர்மீது இவ்வளவு மக்கள் நேசம் கொள்வது இயற்கையான ஒன்றுதானே. இவ்வுலகைப் படைத்த இறைவனே அவருக்கு சான்றிதழ் வழங்குகிறான்:
68:4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
நிலைமை இப்படியென்றால் அவரைக் கண்ணால் கண்டு அவரோடு வாழ்ந்தவர்கள் எவ்வாறு நேசித்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த நற்குண நாயகர் அவர்களின் சுகதுக்கங்களில் பங்கு கொண்டார். அவர்கள் கவலைப் படுவது கண்டு துயரமுற்றார். அதேபோல அந்த மக்களும் அவரது உயிருக்குயிராக நேசித்தார்கள். தங்கள் பாசத்தலைவனின் துன்பம் கண்டு துயரமுற்றார்கள். அக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வைத்தான் இங்கு காண இருக்கிறோம்.

பசியறிந்து பரிமாற நினைத்த தோழர்
பசியும் பஞ்சமும் ஏழைகளை வாட்டிய காலம் அது. அன்று சிறுவராக இருந்த நபித்தோழர்  அனஸ் இப்னு மாலிக்(ரலி) அந்த சம்பவத்தைக் கூறுகிறார்கள்:
என் தந்தை அபூ தல்ஹா (ரலி) தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், 'நான் நபி(ஸல்) அவர்களின் குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள்எனவே, உம்மு சுலைம்(ரலி) வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்தார்கள். பிறகு, உம்மு சுலைம் அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி என்னுடைய கைக்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள்.
பிறகு என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்' என்று சொன்னேன். 'உணவுடனா அனுப்பியுள்ளார்?' என்று அவர்கள் கேட்க, நான் 'ஆம்' என்றேன்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், 'எழுந்திருங்கள்' என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத் தெரிவித்)தேன்.
உடனே அபூ தல்ஹா(ரலி) என் தாயாரிடம் 'உம்மு சுலைமே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!' என்று கூறினார்கள். என் தாயார் உம்மு சுலைம்(ரலி), 'இறைவனும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று கூறினார்கள்உடனே அபூ தல்ஹா(ரலி) தாமே நபி(ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப் போய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அபூ தல்ஹா அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
அண்ணலார் மூலம் அற்புதம்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!' என்று கூறினார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம்(ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைக் கூறினார்கள். பிறகு 'பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியுங்கள்' என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, 'மேலும் பத்துப் பேருக்கு அனுமதியுங்கள்' என்று கூற, அபூ தல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த மக்கள் எண்பது பேர் ஆவர்.
(ஆதாரம்: புஹாரி எண்; 5381)
ஆம் மக்களின் பாசத்தலைவன் தன் பசியை ஆற்றும் முன் தம் மக்களைப் பசியாறச் செய்தார்கள். தன் நேசத்துக்குரிய தன் தூதருக்கும் அவர்தம் நேசர்களுக்கும் அகிலம் படைத்த இறைவன் அற்புதமான முறையில் அற்ப அளவில் இருந்த அந்த உணவிலும் அருள்வளம் செய்து  அவர்களுக்கு உதவினான். இதுபோன்ற அற்புத நிகழ்வுகள் அண்ணலாரின் வாழ்வில் பல சந்தர்பங்களில் நிகழ்ந்துள்ளன. இவ்வுலகம் என்ற அற்புதக் குவியலுக்கு முன்னால் இந்த அற்புதங்கள் அற்பமானவையே என்பதை சிந்திப்போர் அறியலாம்.
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (திருக்குர்ஆன் 2:117)

 எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது. (திருக்குர்ஆன் 36:82)

திங்கள், 6 நவம்பர், 2017

தாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்


இறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்? கடவுளை எப்படியாவது மறுக்க வேண்டும் என்ற பிடிவாதத்தின் காரணமாக எவ்வளவு உண்மைகளை அவர்கள் மறுக்கவேண்டி உள்ளது பாருங்கள்! உயிரின் உருவாக்கம், உயிரினங்களோடு பின்னிப்பிணைந்து காணும் உணர்வுகள், அன்பு, பாசம், கோபம் போன்ற பலவற்றுக்கும் காரணம் கற்பிக்க எவ்வளவு அறிவுக்குப் பொருந்தாத ஊகங்களை கற்பனை செய்து புனைய வேண்டி உள்ளது அவர்களுக்கு!   
ஒரு மனிதத் தாய் தன் குழந்தையோடு காட்டும் பாசமாயினும் சரி ஒரு தாய் மிருகம் அல்லது பறவை தன் குஞ்சோடு காட்டும் பாசமாயினும் சரி நாத்திகக் கண்ணோட்டப்படி புதிர் மிக்கது. ஒரு பழுவான, தொடர்ந்து இடையறாது தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு வஸ்துவை பலகாலம் வயிற்றில் சுமந்து கொண்டிருந்த யாராயினும் அது வெளியில் வந்ததும் அதனை தூரமாக வீசிஎறிந்துவிட்டு வேறு வேலை பார்க்கவே விரும்புவார்கள். ஆனால் பிறப்பு என்று வரும்போது அங்கு நடப்பது நேர் முரணானது! தாய் ஜீவி தன் வயிற்றிலிருந்து வெளிவந்த அந்த வஸ்துவை வாரி அரவணைக்கிறது! பாதுகாத்துப் பரிபாலிக்கிறது! இவ்வாறு தன் குஞ்சின் மீது காட்டப்படும் பாசத்தை அந்த தாய்க்குள் யார் விதைத்தது? இந்தத் தாய்ப்பாசம் மட்டும் தாய்க்குள் விதைக்கப் படாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு தாயும் தன் குஞ்சை வீசியெறிந்து விட்டு அதைவிட்டும் அகன்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? இனப்பெருக்கம் ஆரம்பம் முதலே தடைபெற்றிருக்கும்!
உலகம் உருவானதும் தற்செயல், அதில் உயிரின் உருவாக்கமும் தற்செயல், உயிர்களிடையே விதைக்கப்பட்டுள்ள தாய்ப்பாசமும் தற்செயல் என்பன போன்ற அறிவுக்குப் பொருந்தாத வாதங்களுக்கு எப்படித்தான் இவர்கள் பகுத்தறிவுச் சாயம் பூசுகிறார்களோ தெரியவில்லை!
இறைவன் விதைத்ததே தாய்ப்பாசம்
ஆம், இறைவனின் உள்ளமையையும் தன் படைப்பினங்கள் மீது அவன் கொண்ட அளவிலாக் கருணையையும் பறைசாற்றுவதாக தாய்ப்பாசம் விளங்குகிறது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய நம் இறைவனின் கருணையின் வெளிப்பாடே தாய்ப்பாசம் என்பது. இறைவன் விதைத்ததே தாய்ப்பாசம் என்பது.
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 இறைவன் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது பாகங்களைத் தன்னிடமே வைத்துக்கொண்டான். (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றன் மீதொன்று பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடுவோமா என்ற அச்சத்தால் பிராணி தனது குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது.
இதை நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 5311 )

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்பின் நூறு பாகங்களும் இறைவனுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை மனிதன், ஜின்,மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை இறைவன் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி5312) 

 = இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 16:18)
 = என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய கருணையில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 39:53)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)