இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 பிப்ரவரி, 2017

ஊழலை ஒழிக்க வாரீர்! - நீதிபதிகள்

Image result for jayalalitha verdict judge amitava roy

"சமூகத்துக்கு கேடு விளைவித்து மூச்சுத் திணறக் கூடிய அளவுக்கு குரல்வளையை நெரிக்கும் இந்தக் கொடிய நிலை மாறி, சுதந்திரமான சமூக ஒழுங்கு தற்போதைய சூழலில் நிலவ வேண்டுமானால், அனைவரும் கூட்டுச் சேர்ந்து, ஈடுபாட்டுடனும் துணிச்சலுடனும் இதுபோன்ற கொடூரத்தை (ஊழல்) எதிர்க்க வேண்டும். சுதந்திரமான, தனித்தன்மை வாய்ந்த இந்தியா மலர வேண்டுமானால், நமது முன்னோர்கள் வகுத்துச் சென்ற பாதையில் ஊழலுக்கு எதிரான நிலையான புனிதத் தன்மையுடன் கூடிய இயக்கத்தில் ஒவ்வொரு குடிமகனும் பங்குதாரராக வேண்டும்" என்று நீதிபதி அமிதவா ராய் கூறியுள்ளார்.

(ஊழலை ஒழிப்பதில் குடிமகனின் பொறுப்பு என்ன-ஏழு பக்க தீர்ப்பில் நீதிபதி விளக்கம்- தினமணி, 15 பிப்ரவரி 2017)

-------------------  
ஊழலுக்கும் அநீதிக்கும் எதிரான இயக்கம்
 ‘ஊழலுக்கு எதிரான நிலையான புனிதத் தன்மையுடன் கூடிய இயக்கத்தில் ஒவ்வொரு குடிமகனும் பங்குதாரராக வேண்டும்’ என்ற நீதிபதி அமிதவா ராய் அவர்களின் கூற்று நாட்டு நலனில் அக்கறைகொண்ட அனைத்துக் குடிமக்களின் எண்ணத்தையும் ஏக்கத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு இயக்கம் உருவாக வேண்டுமானால் நாம் அடிப்படையில் இருந்து தொடங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இலஞ்ச ஊழலை மட்டுமல்ல அனைத்து தீமைகளையும் ஒழிக்கவும் மக்கள் இயக்கமாக சேர்ந்து தீமைகளுக்கு எதிராகப் போராடவும் வேண்டுமானால் தனிமனித நல்லொழுக்கமும் சகமனிதன் சகோதரனே என்ற உணர்வும் அடிப்படைத் தேவைகளாகும். இந்த அடிப்படைகளை மக்களுக்கு பயிற்றுவித்து அதற்கான பயிற்சியும் கொடுத்து வளர்த்தால் மட்டுமே இனம் , நிறம் , மொழி, இடம், ஜாதி, மதம் போன்ற காரணங்களால் பிளவுண்டு கிடக்கும் சமூகத்தை ஒருங்கிணைக்கவும் அநியாயத்திற்கு எதிராகப் போராட இயக்கமாக உருவெடுக்கவும் முடியும். இந்த அடிப்படை இல்லாது போனால் நீதிபதி அவர்களின் கூற்று ஒரு தூரத்துக் கனவாகவே நிற்கும்.
உண்மையில் நம்மைப் படைத்த இறைவனே தனிநபர் நல்லொழுக்கத்திற்கும் மனித சமத்துவத்திற்கும்  சகோதரத்துவத்திற்கும் ஆன அடிப்படைப் பயிற்சியை மனித இனம் பூமியில் தோன்றிய காலம் தொட்டே அவ்வப்போது தனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் கொடுத்து வந்துள்ளான். அந்த தூதர்கள் பரம்பரையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி அவர்கள். அவர்கள் மூலமாக அனுப்பப்பட்ட வேதமே திருக்குர்ஆன். படைத்தவனின் எவல்விலக்கல்களை ஏற்று அதன்படி வாழும் வாழ்க்கை நெறியே இன்று இஸ்லாம் என்று அறியப்படுகிறது.
இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:

= மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான் பின்னர் இவ்விரு வரிலிருந்துஅநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ..... நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1) 
அதாவது ஒன்றே மனித குலம்ஒருவனே இறைவன்அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம் நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்பவே இஸ்லாம் விழைகிறது.

இந்த முக்கியமான நம்பிக்கைகளை பகுத்தறிவு பூர்வமாக மனித மனங்களில் விதைப்பதன் மூலம்  தனி நபர் ஒழுக்கம், மனித சமத்துவம், உலகளாவிய சகோதரத்துவம், இவற்றை நிறுவுகிறது. அநியாயத்தால் ஒடுக்கப்பட்ட மக்களை அவர்களின் அடிமைத் தளைகளில் இருந்தும் அடக்குமுறைகளில் இருந்தும் விடுதலை செய்கிறது. 

உலெகெங்கும் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும்  அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டப் பாடுபடுவோருக்கு அவர்களுக்கு அமைப்புகள் இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி அரசாட்சி இருந்தாலும் சரி இல்லாவிடினும் சரி உரிய முறையில் ஊக்கமும் விவேகமான வழிகாட்டுதல்களும்  இங்கு கிடைக்கின்றன.
அநீதியாளர்களும் அநீதிக்கு உள்ளானோரும் சக மனிதர்களே சகோதரர்களே என்ற உணர்வும் மனிதன் மனிதனுக்கு எதிரியல்ல, ஆனால் அவர்களை ஆட்கொள்ளும் ஷைத்தான்தான் உண்மையான எதிரி என்ற உணர்வும் போராடுவோர் மனதில் விதைக்கப் படுவதால் அங்கு தனிமனித மற்றும் இனம்சார்ந்த  பழிவாங்குதல்களும் வீண் உயிர்சேதங்களும் பொருட்சேதங்களும்  தவிர்க்கப் படுகின்றன. போரின் அல்லது போராட்டத்தின் நோக்கம்  சகமனிதனை தண்டிப்பதோ அழிப்பதோ அல்ல, மாறாக அவனை சீர்திருத்துவதே என்ற அடிப்படைக் கொள்கையை இஸ்லாம் கற்பிப்பதால் கடினமான எதிரிகளையும் தன்வயப்படுத்தும் தனித்தன்மையோடு இஸ்லாம் என்ற சீர்திருத்த இயக்கம் உலகெங்கும் வெகு வேகமாகப் பரவி வருகிறது.

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post.html 
இறைவழி நின்று இலஞ்ச ஊழல் ஒழிப்போம்
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2017 இதழ்.

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் இதழ்.
இதன் மின் பதிப்பை கீழ்கண்ட இணைப்பிலும் வாசிக்கலாம்.
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusZElFTnhISlprYjQ/view?usp=sharing

இந்த இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd0eJoK-4rkWA4uGmphYlofufkXsItcGvyrvcoEQOsTvVJ2rA/viewform?usp=sf_link

புதன், 22 பிப்ரவரி, 2017

திருக்குர்ஆனில் எறும்புகள் பள்ளத்தாக்கு

Related imageRelated image

இயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள் வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆராய ஆராய தன்னுள் அடங்கியுள்ள பிரபஞ்ச இரகசியங்களை வெளிப்படுத்தும் சான்றுகளாகத் திகழ்கின்றன. இரண்டையுமே திருக்குர்ஆன் ஆயத்(சான்று)கள் என்று குறிப்பிடுகிறது. இந்த வசனங்கள் அன்று பாலைவனத்தில் ஒட்டகங்களை மேய்த்துக்கொண்டிருந்த பாமரர்களையும்  இறைவனைப்பற்றி  சிந்தித்துணர வைத்தன. அறிவியல் முன்னேற்றம் கண்டுள்ள இன்று வாழும் மனிதனையும் அதற்கேற்ப சிந்திக்க வைப்பதை ஆராய்வோர் அறியலாம்.
உண்மையில் நவீன விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் இறைவனின் படைப்பினங்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்போதுதான் திருக்குர்ஆன் உள்ளடக்கி வைத்திருக்கும் அறிவின் புதையல்களும் பிரபஞ்ச  இரகசியங்களும் நமக்குப் புலப்படுகின்றன. அதற்கான ஒரு உதாரணமே எறும்புகள் பற்றிய திருக்குர்ஆன் வசனங்கள்.
= அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது. 
= அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!'' என்றார்.  (திருக்குர்ஆன் 27:18-19)
மேற்குறிபிட்ட வசனம் எறும்புகளின் உலகம் குறித்த சில அறிவியல் உண்மைகளை உணர்த்துகிறது. 

எறும்புகளின் பள்ளத்தாக்கு
மேற்படி வசனத்தில் இறைவன் எறும்புகளின் இருப்பிடத்தை குறிக்க  ‘வாதில் நம்ல்’ – (எறும்புகளின் பள்ளத்தாக்கு) என்ற சொல்லை பயன்படுத்துகிறான். எறும்புகள் குறித்து இந்நூற்றாண்டில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் எறும்புகளின் புற்றுகளின் அடியில் ஒரு நகரமே அமைந்திருப்பதாக கூறுகின்றன. மேலும் அந்த நகரத்தில் தோட்டங்கள், சாலைகள், உணவு கிடங்குகள் என்று பல பகுதியாக பிரிக்கப்பட்டு திறம்பட பயன்டுத்துவதற்கு எதுவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெளிவான வீடியோ ஆவணப்படம் பெர்ட் ஹால்டாப்லர் (Prof. Bert Holldobler) என்ற அறிவியலாளர் வழங்கியுள்ளார்.




லூயிஸ் ஃபோர்ஜ் என்பவரின் தலைமையில் எறும்பின் இருப்பிடம் குறித்த அகழ்வாராய்ச்சி குறித்த அவணப்படத்தின் பகுதிதான் அது. தரையின் அடியில் உள்ள இருப்பிடத்தின் வார்ப்பை பாதுகாக்க கிட்டத்தட்ட 10டண் சிமெண்ட் எறும்பின் புற்றினில் ஊற்றப்பட்டது. ஒருமாதத்திற்கு பிறகு அந்த பகுதி அகழப்பட்டது. அந்த அகழ்வாராய்ச்சியின் முடிவில் எறும்பின் பள்ளத்தாக்கு வெளிப்பட்டது.  
அதில் பூன்சை தோட்டங்களும், சேமிப்பு கிடங்குகளும், நெடுஞ்சாலைகளும்  என அனைத்து விதமான வசதிகளும் அமையப்பெற்றதாக இருந்தது என்று அந்த ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. இந்த நகரமானது 50 சதுர மீட்டர்  பரப்பளவும், 8 மீட்டர் ஆழம் கொண்டதாகவும், அதாவது ஒரு சிறிய பள்ளதாக்காக இருப்பதை அந்த ஆவணத்தில் காணமுடிகிறது. கிட்டத்தட்ட 40 டன் மண்ணை அந்த எறும்புக்கூட்டம் வெளியே எடுத்துள்ளது.


நன்றி: http://scienceprovesquran.blogspot.in 
================= 

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மாறியது நெஞ்சம்.. மாற்றியது குர்ஆன்!

Image result for soldier sword
மக்காவில் நபிகள் நாயகம் அவர்கள் பலத்த எதிர்ப்புகளுக்கும் எதிரிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு இடையேயும் சத்தியப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த வேளை இஸ்லாத்திற்கு கடுமையான எதிரிகளில் ஒருவராக இருந்தவர் உமர்.  நல்ல வலிமையும் கம்பீரமான இயல்பும் உடையவராக இருந்தார்.  பல வகையான தொந்தரவுகளை, எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக முஸ்லிம்கள் அவர் மூலம் அனுபவித்து வந்தனர்.
ஒருநாள் நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்த அளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட எண்ணி வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் என்பவரை உமர்  வழியில்  சந்தித்தார்.
 உமரே நீ எங்கு செல்கிறாய்?” என்றார் நுஅய்ம்
  நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்.
 நீ முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம், ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ்வது எங்ஙனம்?” என்று அச்சுறுத்தினார் நுஅய்ம்
 ஓஹோ, நீயும்  உனது மார்க்கத்தை விட்டுவிட்டு அவரது மார்க்கத்திற்கு சென்று விட்டதாகவே தெரிகிறதே
நுஅய்ம் கலவரப்படாமல் கூறினார்,  உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. உனது தங்கையும் உனது மைத்துனனும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர். தெரியுமா உனக்கு?
இதைக் கேட்டதுதான் தான் தாமதம்... உமரின் பாதை மாறியது..
“அப்படியா? முதலில் இவர்களின் கதையை முடிக்கிறேன்.. அப்புறம் முகம்மதை கவனிக்கிறேன்..”
தங்கையின் இருப்பிடம் நோக்கி விரைந்தார் உமர்...
அங்கு ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றிருந்த கப்பாப் (ரழி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள தாஹாஎனத் தொடங்கும் திருக்குர்ஆனின் 20 ஆவது அத்தியாயத்தின்  வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமரின் வருகை உணர்ந்த  கப்பாப் (ரழி) வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் தங்கையும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரழி) கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார்.
வீட்டினுள் நுழைந்தார் உமர்.
 உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?” என்று கேட்டார்.
 நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை
 சரி, நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?” என்று கேட்டார் உமர்.
 உமரே! சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?”  மைத்துனர் மெதுவாகக் கேட்டார்.
மைத்துனரின் இந்தக் கேள்வி உமரை  கடுஞ்சினம் கொள்ளவைத்தது. மைத்துனர் மீது ஒரே பாய்ச்சலாகப்  பாய்ந்து அவரை பலமாகத் தாக்கினார். கீழே விழுந்தவரை ஏறி  மிதிக்கவும் செய்தார். தனது கணவரைக் காக்க  உமரின் தங்கை குறுக்கிட்டார். கணவனை விட்டும் உமரை விலக்கினார். அவரையும் விடவில்லை உமர்..
சினங்கொண்ட வேங்கை தங்கையையும் தாக்கியது.  தங்கையின் கன்னத்தில் கடுமையாக அறைந்து அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார் உமர்.
இப்போது கோபம் பொங்கியேழுந்தது தங்கைக்கு..
“அண்ணா, உனது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமாஅதை ஏற்றுக் கொள்ளக்கூடாது? நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்.. இதோ நான் கூறுவதைக் கேட்டுக்கொள்... அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்என்று கண்டிப்பான குரலில் முழங்கினார் தங்கை.
தங்கையின்  உறுதி உமரை நிலைகுலைய வைத்தது. ஆடிப்போனார் உமர்.. ஒரு புறம் நிராசை.. மறுபுறம் தங்கைக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும், வெட்கமும் ஏற்பட்டது. கோபமுள்ள இடத்தில்தான் குணம் இருக்கும். குணம் மெல்லமெல்ல தலை தூக்க ஆரம்பித்தது..
“உங்களிடமுள்ள அந்த ஏட்டை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும்”
 முடியாது, அதற்கான சுத்தம் இல்லை உன்னிடம்.. போய் குளித்துவிட்டு வா”
பணிந்தது வேங்கை.  குளித்து விட்டு வந்தார் உமர்.  வந்தவுடன் திருமறைக் குர்ஆன் பதியப்பட்ட அந்த ஏட்டை கையில் வாங்கிப் படிக்க ஆரம்பித்தார்.
 பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்” (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் பெயரால்) என்று வாசிக்கத் துவங்கினார் உமர்.  ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்என்று கூறி, தொடர்ந்து தாஹாஎன்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதி முடித்துவிட்டு இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! உடனே எனக்கு முஹம்மதைக் காண வேண்டும்.! என்றார் உமர்.
அடிவிழுந்த இடங்களில் ஆனந்தம் பொங்கியது தங்கைக்கும் கணவருக்கும். கண்கள் எல்லாம் குளங்களாயின..  உலக வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு அங்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.
உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரழி). அதுவரை பதுங்கி இருந்தவர்  வெளியே வந்தார்.
 உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு, “இறைவா! உமர் அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாத்திற்கு  உயர்வைக் கொடு!என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்என்றார் கப்பாப்.
------------------------------

.  உமர் தனது வாளை அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார். அப்போது ஸஃபா மலையில் உள்ள இல்லத்தில் அவரது சிறிய தந்தை ஹம்ஜா மற்றும் தோழர்களோடு இருந்தார்கள் நபி (ஸல்) அவர்கள். உமர் வந்த வேளையின்போது இறைச்செய்தி (வஹி) இறங்கிக்கொண்டிருக்கும் நேரமாக இருந்தது. வீட்டின் உட்பகுதியில் இருந்தார்கள் நபிகளார்.  உமர் கதவைத் தட்டியபோது தோழர் ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக உமரை வாள் அணிந்த நிலையில் கண்டார்.   செய்தி பரவியது. அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள். அனைவர் உள்ளங்களிலும்  திகில். என்ன நடக்கப்போகிறது எனபதை யாரும் அறிந்திருக்கவில்லை.
 அங்கிருந்த  நபிகளாரின் சிறிய தந்தையான ஹம்ஜாவும் உமரைப் போலவே ஒரு மாவீரர். மூன்று நாட்களுக்கு முன்தான் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்.  ஹம்ஜா கூறினார்,. ஓ! உமரா வந்திருக்கிறார்? அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!.
உமரைக் கண்ட நபிகளார் அவரை நெருங்கி வந்தார்கள். அவர்கள் உமரின் சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும், தண்டனையும் இறைவன்  உன்மீதும்  இறக்க வேண்டுமா?” என்றார் நபிகளார். பிறகு கூறினார்கள், “இறைவா! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். இறைவா! உமரால் இஸ்லாத்திற்கு உயர்வைக்கொடு!என்று கூறினார்கள். புளகாங்கிதம் உமரைப் பொதிந்தது. ‘இந்த மாமனிதரையா நான் எதிர்த்து வந்தேன். இறைவா என்னை மன்னித்துவிடு’ மனம் இறைவனிடம் மண்டியிட்டது.
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, நீங்கள்தான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்” சற்றும் தாமதியாமல் அந்த உறுதி மொழியை அங்கே முழங்கினார் உமர்..

உலகுள்ளவரை மொழியப்படும் அந்த உறுதியான உறுதிமொழியை மொழிந்து உமர் என்ற மாவீரர் இஸ்லாத்தைத் தழுவினார். நபிகளாரும் தோழர்களும் உமரை ஆரத் தழுவினார்கள். வல்லோன் இறைவனை புகழ்ந்தன நாவுகள். ஆத்மார்த்தமான அந்த தழுவல்கள் மனித சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் உலகெங்கும் வளர்க்க அடித்தளமாக அமைந்ததை நாம் அறிகிறோம்... ஆனால் அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

மரணம் அடைந்தவர் நிரபராதியா?

Related image

இன்றைய செய்திகளும் இறைவனின் தீர்வுகளும்

புது தில்லி:  சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.  சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட மூவரும் உடனடியாக சரணடையுமாறும், இறந்துவிட்டதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் தெரிவித்திருந்தனர். (தினமணி செய்தி பிப்ரவரி 14)
-------------------
இறந்தவரைப் பொறுத்தவரையில் தண்டனையில் இருந்து விடுவிக்கபடுகிறார். மற்றவர்கள் தண்டனைக்கு உள்ளாகிறார்கள். இவ்வுலகத்தின் இயல்பில் இறந்தவர் அவர் சொத்துக் குவிப்பு அல்ல அதை மீறிய எத்தனையோ குற்றங்களும் கொடூரங்களும் செய்தவராயிருப்பினும் அவரை தண்டிக்க வழியே இல்லை என்பது தெளிவு. ஆனால் நீதியின் வேட்கை இங்கு நிறைவடையாமல் போவதைக் காணலாம். நாட்டில் ஒரு அசைக்கமுடியாத செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட ஒரு குற்றவாளி தான் வாழும்போது எத்தனயோ மக்களின் உரிமைகளையும் உடமைகளையும் மானத்தையும் மரியாதையையும் ஏன் பல உயிர்களைக் கூட பறித்திருக்கலாம். ஆட்சியையும் அதிகாரமும் கொண்டவராக குற்றவாளி இருந்தால் சட்டங்களை மட்டுமல்ல நீதித்துறையையும் காவல்துறையையும் கூட வளைத்து குற்றவாளி தப்பிக்க வழிவகைகள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு வழக்கைத்தான் கடந்த 20 வருடங்களாக நாம் கண்டு வருகிறோம். இறுதியில் என்ன நடந்துள்ளது? முக்கியக் குற்றவாளியை தண்டிக்க முடியாமல் போய் விட்டது! இக்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும் பரிகாரமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் யாருக்கும் இல்லை.
இந்த வழக்கு நாட்டுநடப்புக்கு ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்ற மற்றும் இன்னும் இதைவிடக் கொடுமையான குற்றங்கள் செய்த மற்றும் செய்து கொண்டிருக்கின்ற பல குற்றவாளிகள் சட்டத்தின் கைகளுக்கு அகப்படாமலும் அகப்பட்டாலும்  தண்டிக்கப்படாமலும் தப்பிக்கின்ற விந்தையை நாம் காலாகாலமாக கண்டு வருகிறோம். இதற்கான முக்கிய காரணங்களாக நாட்டு மக்களிடையே இறையச்சம் என்ற பொறுப்புணர்வு இல்லாமை, தனிநபர் நல்லொழுக்கம் பேணப்படாமை, மனிதர்களால் இயற்றப்பட்ட மிகவும் பலவீனமான சட்டங்கள், ஆசைகாட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் வளைந்து கொடுக்கும் நீதித்துறை காவல்துறை, ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம், மக்களின் அப்பாவித்தனம், தனிநபர் வழிபாடு, அறியாமை என பல விஷயங்களைப் பட்டியலிடலாம்.
 இவற்றையெல்லாம் சீர்படுத்தினாலும் குற்றவாளிகளை முழுமையாக தண்டிப்பது என்பது இவ்வுலகில் அசாத்தியமே. முழுமையான தீர்ப்பும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சரியான பரிகாரமும் மறுமையில்தான் சாத்தியப்படும் என்பதை பகுத்தறிவு கொண்டு சிந்தித்தால் உணர முடியும்.
உதாரணமாக ஆயிரம் கொலைகளைச் செய்த ஒரு குற்றவாளிக்கு ஒருமுறை மட்டுமே இவ்வுலகில் மரணதண்டனை விதிக்கமுடியும். ஆனால் நீதியின் வேட்கை தணிய வேண்டுமானால் செய்த கொலைகளின் அளவுக்காவது குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உரிய பரிகாரமும் வழங்கப் படவேண்டும்.
என்று தணியும் நீதியின் வேட்கை?
அதிபக்குவமாக இவ்வுலகைப் படைத்துள்ள இறைவன் நீதி செலுத்துவதிலும் பக்குவமானவன் என்பதை பரந்த நோக்கோடும் பகுத்தறிவோடும் ஆராய்பவர்கள் கண்டறிவார்கள். இந்தக் குறுகிய வாழ்வை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்குரிய பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ள இறைவன் இந்த பரீட்சையின் முடிவுகளை அறிவிக்கும் நாள்தான் இறுதித்தீர்ப்பு நாள்.

ஆம், இப்பரீட்சைக்கூடம் ஒருநாள் மூடப்படும். அதற்குப்  பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது இப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகும். அன்று முதல்மனிதன்  முதல் இறுதிமனிதன் வரை அனைவரும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள். அன்றுதான் இறுதித் தீர்ப்புநாள் ஏற்படுத்தப் படுகிறது. யார் பரீட்சையில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு சொர்க்கமும் தோல்வியுறுவோருக்கு  நரகமும் விதிக்கப்படும். 
= ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
 (திருக்குர்ஆன் 3:185..)
ஆம்
, அன்றுதான் நீதியின் வேட்கை முழுமை பெறும். அன்று இவ்வுலகில் செய்யப்பட்ட அனைத்து அநீதிகளும் மோசடிகளும் மனித உரிமை மீறல்களும் ஒன்றுவிடாமல் வெளிப்படும். அவை யாருமே பார்க்க முடியாது என்று நினைத்து இரகசியமாக செய்யப்பட்டவையானாலும் சரியே. தட்டிக் கேட்பதற்கு யாருமே இல்லை என்ற மமதையில் அதிகாரம் கொண்டவர்கள் பலவீனமானவர்கள் மீது தொடுத்த அத்துமீறல்கள் ஆனாலும் சரியே. அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அனைவருக்கும் அவரவர் உரிமைகள் முழுமையாக மீட்டப்படும். எந்த அளவுக்கு என்றால் ஒவ்வொரு சின்னஞ்சிறு உரிமைமீறல்களும் கணக்கு தீர்க்கப்பட்டுவிடும். 
நியாயத் தீர்ப்பு நாளில்
 (பறித்த) உரிமைகளை உரியவர்களிடம் நீங்கள் வழங்கியாக வேண்டும். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆட்டிடம் கணக்குத் தீர்க்கப்படும் என்பது நபிமொழி.
(நூல்:
 முஸ்லிம் 4679)

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

வெறுங்கையோடு கல்லறைக்கு....

Related image
அன்று பொன்னும் புகழும் சேர்க்க  நாடி மக்களைக் கொன்றோடுக்கி நாடுகளை வென்றெடுத்த மன்னாதி மன்னர்களின் இன்றைய நிலை பற்றி அறிவோம். இன்று 113 க்கு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சொத்துக்களை தனது ஆதிக்கத்தில் வைத்திருந்து கல்லறையை அடைந்துள்ள ஒரு ஆட்சியாளரின் நிலை பற்றியும் அறிவோம். இவர்களைப்போலவே பலர் இந்த பூமியிலிருந்தே வெளிப்பட்டு மீண்டும் பூமிக்கே திரும்பி அடங்கியிருப்பதை நாம் அறிவோம்.
 இவர்களில் ஒரு சாரார் தங்கள் உடலுக்குள் உயிர் என்ற ஒன்று இருந்தபோது தாங்கள் பெற்ற ஆதிக்கத்தால் மற்ற மக்களை தங்களுக்கு முன் மண்டியிட வைப்பதிலும் நாட்டுமக்களின் ஆர்ப்பரிப்பிலும் மகிழ்ச்சியுற்றார்கள். தங்கள் புகழ் மக்களுக்கு முன் பாடப்படுவதில் அகமகிழ்ந்தார்கள். தங்கள் ஆதிக்கத்தை தக்கவைக்க அராஜகங்களையும் அக்கிரமங்களையும் தயக்கமின்றி கையாண்டார்கள். அனைத்தும் கைவந்தபோதும் செல்வத்தை சேர்க்கவேண்டும் என்ற போதை இவர்களை விட்டு அகலவில்லை.... எதுவரை? அந்த உயிரானது இவர்களின் கூடுவிட்டு பறந்து செல்லும்வரை!
-வெறுங்கையோடு வந்த நாம் வெறுங்கையோடுதான் திரும்பிச்செல்ல உள்ளோம் என்பதையும்
-மரணம் என்ற திடீரென குறுக்கிடும் ஒன்று தனக்காக காத்திருக்கிறது என்பதையும்
-தன்னைப் படைத்த இறைவனுக்கு முன்னால் நிற்கவேண்டும் என்பதையும்
-தன் சம்பாத்தியத்தின் நியாய அநியாயங்களைப் பற்றியும் அவற்றை செலவு செய்தது பற்றியும் விசாரணை உள்ளது என்பதையும்
-தொடர்ந்து அதற்கேற்ப தண்டனை அல்லது பரிசு போன்றவை காத்திருக்கின்றன என்பதையும்
இவர்கள் உணராத நிலையிலேயே இவர்களை விட்டுவிட்டு அந்த உயிரானது அற்கான கெடு முடிந்துவிட்டதால் பறந்து சென்றது..
மன்னாதி மன்னர்கள் தொட்டு சாதாரண மனிதர்கள் வரையிலும் இந்நிலை வெவ்வேறு மட்டங்களில் தொடர்வதை அறிவோம்.
இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

102:1, 2  செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (இறைவனின் நினைவை விட்டும்) பராக்காக்கி விட்டது-......நீங்கள் உங்கள் புதைகுழிகளைச் சந்திக்கும் வரை.
ஆம், செல்வத்தை சேர்க்கும் உங்கள் ஓட்டப்பந்தயத்தின் இடையே ஒருநாள் நீங்கள் இந்த சமாதிக்குள் வந்து விழத்தான் போகிறீர்கள் என்று எச்சரிக்கிறான் இறைவன்.

102:3. அவ்வாறில்லைவிரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.  பின்னர் அவ்வாறல்லவிரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

 உண்மைகளை மறந்த உங்கள் பணவெறியின் பலனை நீங்கள் அனுபவிக்கத்தான் போகிறீர்கள் என்பதை ஆணித்தரமாக மனிதனுக்கு உறைக்கும் வண்ணம் மேற்படி வசனங்களில் எடுத்துரைக்கிறான் இறைவன்.

102:5. அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
 மாறாக, சற்று நிதானித்து இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வோ குறுகியது, நீர்க்குமிழி போன்றது, நமது உண்மையான உலகம் இதுவல்ல, இறைவன் இதை ஒரு பரீட்சைக் கூடம் போல அமைத்துள்ளான், இந்த செல்வம் இறைவனுக்கு சொந்தமானது, இங்கு நான் பெற்ற செல்வமும் ஆதிக்கமும் என்னைப் பரீட்சிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதுஎன்ற சிந்தனை உங்களை மேலிடுமானால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள்.

ஒருமுறை நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 'மனிதன் எனது செல்வம்; எனது செல்வம்'' என்று கூறுகின்றான். மனிதா! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?'' 
இச்செய்தியை  நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்  (முஸ்லிம் 5665 )
இங்கு சொல்லப்படுவது போல அவசரமாக தான் சேர்க்கும் பொருளில் தனது உண்மைப் பங்கு எவ்வளவு என்று சிந்தித்து அறிந்தால் மனிதன் நிதானத்தை அடைவான். மறுமையில் நிரந்தர உலகத்திற்கு எது தேவையோ அதற்காக தன் உழைப்பையும் செல்வத்தையும்  செலவிடுவான்.

பணவேட்டையின் சாதனைகள்
  இன்று நடக்கும் மூர்க்கத்தனமான பணவேட்டையின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்? அதுதான் கொழுந்துவிட்டு எரியும் நரகம் என்பது! தன்னை மறந்து, தனக்கு அனைத்தையும் தந்த இறைவனையும் மறந்து வெறும் பணம், சொத்து, புகழ் என்று வெறிகொண்டு அலையும் மனிதனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இறைவன் கடுமையாக எச்சரிக்கிறான்.:

102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

102:7. பின்னும்நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
  நிதானம் இழந்து வாழும் இந்த அறிவீனர்களுக்கு புதைகுழிக்கு அடுத்தபடியாகக் காத்திருப்பது நரகம் என்ற பாதாள எரிகிடங்குதான். அந்த நியாயத் தீர்ப்பு நாளில் எந்த சந்தேகங்களுக்கும் இடமில்லாதவாறு உறுதியாக மனிதன் தன் கண்களால் அதைக் கண்டுகொள்வான்.  அந்த நரகம் எப்படிப்பட்டது? தொடர்ச்சியாக வேதனையை அனுபவிக்கும் இடம் அது. உதாரணமாக,
18:29  (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது¢' ஆகவே விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்¢ மிகக் கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.

102:8. பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
  அந்நாளில் உண்மைகள் வெட்டவெளிச்சமாகத் தென்படும். இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து அருட்கொடைகளும் பட்டியலிடப்பட்டு எடுத்துக்காட்டப்படும். அவன் மன்னாதி மன்னனாக இருந்தாலும் சரி, மந்திரிகள் பரிவாரங்கள் புடைசூழ மக்கள் ஆர்ப்பரிக்க வலம் வந்த நபர்களாயினும் சரி, அன்றைய நாள் அனைவரும் இவ்வுலக நாதனின் முன்னாள் மண்டியிட்டே ஆகவேண்டும்.
செல்வம் சேர்க்கும் போதையில் அவன் எதையெல்லாம் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தினானோ, சிறிதும் பெரிதுமான அனைத்து அருட்கொடைகளையும் இறைவன் அன்று நினைவுபடுத்துவான். எதையுமே அவனால் நிராகரிக்க முடியாது. அவனது கண்களும் காதுகளும் தோல்களுமே அவற்றுக்கு சாட்சி கூறுபவையாக இருக்கும்.. அவற்றிற்கு இவ்வுலகிலேயே நன்றி பாராட்டி அவற்றைத் தந்த இறைவனுக்கு அடிபணிந்தவனாக வாழ்ந்திருந்தால் அவன் அன்றைய நாளில் இறைவனின் தண்டனைகளில் இருந்து காப்பாற்றப்படுவான். மாறாக நன்றிகொன்று தன் மனோ இச்சைகளின் படி தான்தோன்றித்தனமாக வாழ்ந்திருந்தால் அவனுக்கு இறைவனின் தண்டனைகள் காத்திருக்கின்றன.
10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர்வழி காட்டுவான். இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?

இவையெல்லாம் நாளை நடக்க இருக்கும் சம்பவங்கள். இவற்றை இன்றே நினைவுறுத்தி நிதானத்தோடு சிந்தித்து நம் வாழ்வின் போக்கை திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான் கருணையுள்ள இறைவன். திருமறையின் இந்த நினைவூட்டலை ஏற்று வாழ்வைத் திருத்திக் கொள்வோருக்கு நாளை மறுமையில் கவலைகள் இல்லை என்பது மட்டுமல்ல, இவ்வுலகிலும் அவர்கள் பலவிதமான மனஉளைச்சல்களில் இருந்தும் இழிவுகளில் இருந்தும் காப்பாற்றப்படுகிறார்கள். இன்று நம்மைச் சுற்றி நடப்பவைகளை சற்று நோட்டமிட்டாலே இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளலாம்.