இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 மே, 2022

நாத்திகப் பேராசிரியருக்கு நேர்ந்தது என்ன?

டாக்டர் ஜெப்ரி லேங் (Dr.Jeffrey Lang), அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைகழகத்தில் (University of Kansas) கணிதத்துறை பேராசிரியராய் இருப்பவர். தன் பதினாறு வயதிலிருந்து தன் 28 ஆவது நாத்திகராக இருந்தவர்.  இவருக்கு நேர்ந்த மனமாற்றத்தை அவரே கூறுவதைக் கேட்போம்:

ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது, புதிதாக படிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்போது, மேசையில் இருந்த குரான் கண்ணில் பட்டது. 

வீட்டில் போரடிக்கும் போது, ஒரு வார இதழை எடுத்து நாலு பக்கங்களை புரட்டி பின்னர் வைத்துவிடுவோமே, அதுபோல நினைத்துதான் குரானைத் திறந்தேன். 

குர்ஆனில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை, அவ்வளவுதான். இது மற்றுமொரு புத்தகம், அவ்வளவே...      
முதல் அத்தியாயத்தை பார்த்தேன், அல் பாத்திஹா என்றிருந்தது. அதில் ஏழு வசனங்கள். நல்ல அழகான, கோர்வையான வசனங்கள். முஸ்லிம்கள் குரானை இறைவேதமென்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அது மனிதரால் எழுதப்பட்டது. அதனால், இந்த புத்தகத்தை எழுதியவர் நல்ல இலக்கியவாதி என்று பாராட்டினேன். நல்ல புத்திசாலி என்றும் நினைத்தேன், படிப்பவர்களை துவக்கத்திலேயே நன்றாக கட்டிப்போடுகிறாரே...

அதில் ஒரு வசனம்

தீர்ப்பு நாளின் அதிபதி --- (திருக்குர்ஆன் 1:3)  

என்ன தீர்ப்பு நாளா?, இவரே மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பாராம், இவரே தீர்ப்பு சொல்லுவாராம் என்று கோபப்பட்டேன்...

முதல் சூரா என்னை மேற்கொண்டு படிக்க தூண்டியது. அடுத்த அத்தியாயம், சூரத்துல் பகரா...

அதன் இரண்டாது வசனம்

இது திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும். --- Qur'an 2:2

என்ன ஒரு அதிகார தோரணை என்று வியந்தேன். நிச்சயமாக இந்த புத்தகத்தை எழுதியவர் அறிவாளிதான். அதுமட்டுமல்லாமல் ஒரு அறிவுசார்ந்த விவாதத்திற்கு தயார்படுத்தின அந்த வசனங்கள்.   

படித்துக்கொண்டே வந்தேன். அந்த சூராவின் முப்பதாவது (30) வசனம் ஒரு கனம் என்னை திக்குமுக்காட செய்தது. ஏனென்றால் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்வி அங்கு கேட்கப்பட்டிருந்தது. 

ஏன் கடவுள் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்என்ற கேள்விதான் அது...   

என்னுடைய கேள்வியை இங்கே வானவர்கள் கேட்கின்றனர்.     

இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.          --- Qur'an 2:30            

இந்த ஒரு வசனம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 
நான் நாத்திகனாக மாறியதில் இந்த ஒரு கேள்விக்கு நிச்சயம் முக்கிய பங்குண்டு. 

வானவர்கள் கேட்பது நியாயம்தானே?. அவர்களோ தவறு செய்யாதவர்கள், இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களையே பூமியில் வாழ வைத்திருக்கலாமே? ஏன் இந்த அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? வானவர்களின் கேள்வி மிக நியாயமானது...இதற்கு என்ன பதில் என்று ஆர்வமுடன் மேற்கொண்டு படித்தேன். 

அதே வசனத்தின் இறுதியில்

அவன் " நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான் --- Qur'an 2:30. 

என்ன நீ அறிவாயா? ஏன் பாவம் செய்யக்கூடிய மனிதர்களை படைத்தாய் என்று கேட்டால், அதற்கு அனைத்தையும் நீ அறிவாய் என்பதுதான் பதிலா

இப்போது குரானுடன் நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் (சிரிக்கிறார்), இந்த குரானை முழுமையாக படித்து என் மற்ற கேள்விகளுக்கும் என்ன பதிலளிக்கிறது என்று பார்த்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.   

நாலு பக்கங்கள் மட்டுமே திருப்பலாம் என்றிருந்தவனை இந்த குரான் மென்மேலும் படிக்க தூண்டிக்கொண்டே இருந்தது, என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றாய் பதிலளிக்கப்பட்டு கொண்டே வந்தன.          

என் அனுபவங்களை முழுமையாக சொல்ல இந்த நேர்க்காணல் நேரம் போதாது. ஆனால் நான் சொல்ல விரும்புவதெல்லாம், குரானை முழுமையாக படித்த பிறகு, தனிப்பட்டமுறையில் என் கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன. 

குரானின் வசனங்கள் ஆணித்தரமானவை, ஆழ்ந்த கருத்துக்களை கொண்டவை. 

பிறகு, என் இருபத்தி எட்டாவது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். 

ஒருமுறை என் மகள் கேட்டாள்

"சரி dad, குரான் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டது. ஆனால், உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு புத்தகம் பதிலளித்து விட்டால் மட்டும் இறைவன் இருக்கிறானென்று ஆகிவிடுமா, அல்லது அந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்துவிட்டதாக தான் நீங்கள் நினைத்துவிட முடியுமா?" 

இது என்னிடம் பலரும் கேட்க நினைக்கக்கூடிய அர்த்தமுள்ள கேள்வி.  

நான் குரானை மென்மேலும் படிக்க படிக்க, என் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க துவங்கின. பதில்கள் கிடைக்க கிடைக்க நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.    

நான் எந்த அளவு குரானை மேற்கொண்டு படித்தேனோ அந்த அளவு நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன். 

நான் கடவுள் இல்லை என்பதில் மிக உறுதியாய் இருந்தவன், யார் எப்படி விளக்கினாலும் கடவுள் இல்லை என்பதில் நின்றவன். 
ஆனால் குரான், அதனைப்பற்றி நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது. 

அதுமட்டுமல்லாமல், குரானைப் படித்து முடித்ததும் என் மனதில் ஏற்பட்ட அமைதி இருக்கிறதே, இதுநாள் வரை என் வாழ்வில் அனுபவிக்காதது. இறைவனின் அன்பு என்பது இதுதானோ? சில நேரங்களில் அந்த உணர்வு பத்து, பதினைந்து நிமிடங்கள் கூட நிலைத்திருக்கும். என் மனம் அமைதியடைந்தது, ஒரு அற்புதமான உணர்ச்சி அது.  

என் வாழ்நாளில் கஷ்டங்களை அதிகம் பார்த்தவன், அந்த அற்புத மன அமைதி எனக்கு பதிலளித்துவிட்டது, இறைவன் இருக்கிறானென்று, இது இறைவேதமென்று. 
குரானை ஓதும்போது பலமுறை கண்கலங்கியிருக்கிறேன், அன்பு என்றால் என்னவென்று புரியவைத்தது குரான் தான்.
பலரும் என்னிடம் கேட்பார்கள், "இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்கள் வாழ்வில் என்ன திருப்பம் வந்துவிட்டது" என்று.
நான் இப்போது சக மனிதர்களை அதிகம் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் இஸ்லாம் எனக்கு கற்றுகொடுத்த முதல் பாடம்.

தற்போது மனைவி, மூன்று குழந்தைகள் என்று ஒரு நிறைவான வாழ்வை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.  

இஸ்லாத்தை ஏற்ற புதிதில், விடியற்காலை தொழுகைக்கும், மாலை நேர தொழுகைகளுக்கும் பள்ளியில் சென்று தொழுது வருவேன். குரான் ஓதப்படுவதை கேட்பது ஒரு மிக அழகான உணர்வு.
ஒருமுறை ஒருவர் என்னிடம் கேட்டார், "டாக்டர் லேங், உங்களுக்கு அரபி புரிகிறதா?" என்று,

நான் சொன்னேன், "ஒரு குழந்தை தன் தாயை எதிர்க்கொள்கிறதே, அதுபோல தான்" என்று...

வாழ்வின் அர்த்தங்களை தேடி கொண்டிருப்போருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்று தான். நீங்கள் தேடுவதை தொடருங்கள், ஆனால் நேர்மையாய், திறந்த மனதுடன் தேடுங்கள். 

உங்களை என் மார்க்கத்தை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்தி நான் என் மார்க்கத்தை விற்க விரும்பவில்லை. முஹம்மது (ஸல்) அவர்களுக்கே அந்த உரிமையை இறைவன் வழங்கவில்லை. எடுத்து சொல்வது மட்டும்தான் எங்கள் கடமை, உங்களை நேர்வழியில் செலுத்துவதெல்லாம் இறைவனின் நாட்டம். 

அதனால் தேடுவதை தொடருங்கள்...."

நன்றி:www.ethirkural.com

------------------------------ 

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

சனி, 21 மே, 2022

சமூக சீர்திருத்தத்தில் பாங்கோசையின் பங்கு


அல்லாஹு அக்பர்அல்லாஹு அக்பர் 

அல்லாஹு அக்பர்அல்லாஹு அக்பர் 

ஒரு நாளைக்கு ஐந்து முறை, உங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். இதை அரபு மொழியில் அதான் என்பார்கள். தமிழ் இஸ்லாமிய வழக்கில் இது ‘பாங்கு’ என்று சொல்லப்படும். ஐவேளைத் தொழுகை இஸ்லாத்தில் கடமை என்பதையும் அவற்றை இஸ்லாமியர்கள் அந்தந்த நேரங்களில் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களில் கூட்டாக நிறைவேற்றுவதையும் அறிவீர்கள். உண்மையில் அதான் அல்லது பாங்கு என்பது பள்ளிவாசலில் நடைபெற உள்ள அந்த நேரத் தொழுகைக்கான அழைப்பே.

அதான் எப்படி தொடங்கியது?

இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில், தொழுகைக்கு மக்களை எப்படி அழைப்பது என்பது குறித்து தன் தோழர்களோடு கலந்தாலோசனை நடத்தினார்கள்.  நபித்தோழர்கள் பலரும் பல ஆலோசனைகளை முன்வைத்தார்கள்.  சிலர் மணி அடிக்க வேண்டும் என்றும், சிலர் சங்கு ஊதலாம் என்றும், சிலர் தீ மூட்டி மக்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனைகள் தந்தனர். இறைவனின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து நபிகளார்  மனித குரலைதொழுகைக்கான அழைப்பிற்கு  பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தார். 

நபிகளார் மனிதக் குரலை விட அதிக சத்தமாக ஒலிக்கும் மணியையோ, சங்கையோ அல்லது தூரத்தில் இருந்தே கண்ணிற்கு தெரியும் நெருப்பையோ தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நீங்கள் இங்கு கவனிக்கலாம். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார் என்று நீங்கள் கேட்கக்கூடும். மனிதக் குரல் மூலம் கொடுக்கப்படும் தொழுகைக்கான அழைப்பு என்பது அதைச் சொல்பவருக்கும் (அழைப்பவருக்கும்)  அதைக் கேட்பவருக்கும் (அழைக்கப் படுபவருக்கும்) ஒரு மிகப் பெரிய ஆன்மீக அனுபவமாக அமைவதை நீங்கள் பார்க்கலாம்.

பாங்கு வாசகங்களின் பொருள்:

  1. அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் (நான்கு முறை)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பதை அறிவீர்கள்)

கீழ்கண்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் இருமுறை சொல்லப்படும்:

  1. அஷ்ஹது  அன் லா இலாஹ இல்லல்லாஹ் -  வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.
  2. அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - முஹம்மது இறைவனின் இறுதித்தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்
  3. ஹய்யா அல்-ஸலாஹ் - தொழுகைக்கு வாருங்கள்
  4. ஹய்யா அல் ஃபலாஹ் - வெற்றிக்கு வாருங்கள்
  5. அல்லாஹு அக்பர் – இறைவன் மிகப்பெரியவன்.
  6. லா இலாஹ இல்லல்லாஹ்- வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவன் அல்லாஹ் மட்டுமே. – (இந்த வாசகம் ஒரு முறை மட்டுமே சொல்லப்படும்)

பாங்கின் முக்கியத்துவம்:

பாங்கின் முக்கியத்துவம் அறிய சமூகத்தில் தொழுகையை நிலைநாட்டுவதன் அவசியம் பற்றி அறிவது நலம்.

இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை என்றும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடம் என்றும் இஸ்லாம் கற்பிக்கிறது. இதில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு இந்த உலக வாழ்கையும் அமைதிகரமாக அமைகிறது. மறுமையில் அவர்களுக்கு சொர்க்கமும் பரிசாகக் கிடைக்கிறது. இதை மறுப்பவர்களுக்கு இவ்வுலகில் அமைதியின்மையும் மறுமையில் நரகமும் வாய்க்கிறது என்பது இஸ்லாமிய போதனை.

அந்த வகையில் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ முற்படுபவர்களுக்கு இறைவன் ஐந்து வேளைத் தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளான். அந்தத் தொழுகைகளை முடிந்தவரையில் கூட்டாக நிறைவேற்றவும் இஸ்லாம் பரிந்துரைக்கிறது. இதன்மூலம் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் பற்பல  நன்மைகள் உண்டாகின்றன.

  1. தனி நபர்களை ஆன்மீக அடிப்படையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் பேணுபவர்களாக ஆக்குகின்றன.
  2. நேரக்கட்டுப்பாடு (punctuality) உணர்வுடன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை முன்னதாகவே திட்டமிட முடிகிறது.
  3. கூட்டாகத் தொழும்போது சகோதரத்துவ மற்றும் சமத்துவ உணர்வு வலிமையாகத் தூண்டப்படுவதால் தீண்டாமை நிறபேதம், இனபேதம் மொழி பேதம் போன்றவை அடியோடு ஒழிகின்றன.
  4. சமூகத்தில் ஏழைகளும் பணக்காரர்களும் அன்றாடம் ஓரணியில் சங்கமிப்பதால் ஏழைகளின் துயர் துடைப்பு, இன்ன பிற நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.
  5. தொழுகை பேணும் சமூகம் உருவாகும்போது மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகள் அங்கு வேரூன்ற விடாமல் தடுக்கப்படுகின்றன.
  6.  இவைபோக குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வி, நீதிபோதனை போன்றவற்றை வழங்கும் மதரசாக்கள் பள்ளிவாசல் வளாகத்திலேயே செயல்படுகின்றன. பள்ளிவாசல் இமாம்கள் இக்கல்வி வழங்கும் பணியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இதன் மூலம் இளைய தலைமுறை ஒழுக்கம் பேணி வளர வாய்ப்பாகிறது.

இன்னும் இவை போன்ற ஆன்மீக மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தொழுகை ஆணிவேராகத் திகழ்வதை நீங்கள் காணலாம். அந்தத் தொழுகைகளை முறைப்படி அந்தந்த நேரங்களில் நிறைவேற்ற சமூகத்திற்கு விடுக்கப்படும் அழைப்பே இந்த பாங்கு. இந்த பாங்கின் வாசகங்கள் மூலம் இறைவனின் மகத்துவம், இஸ்லாத்தின் கொள்கைப் பிரகடன வாசகங்கள், தொழுகையே வாழ்கையின் உண்மை வெற்றிக்கான வழி போன்ற உண்மைகள் அவ்வப்போது சமூகத்திற்கு நினைவூட்டப்படுகின்றன.

========================== 

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

வியாழன், 12 மே, 2022

மீண்டும் கஷ்டங்களை அனுபவிக்கத் தயார்!


from the group AMERICAN MUSLIMS a Muslim Sister writes

அமெரிக்க முஸ்லிம்கள் என்ற குழுவிலிருந்து ஒரு முஸ்லிம் சகோதரி எழுதுகிறார்...
நான் ஸ்வீடனைச் சேர்ந்தவள்... நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்
இஸ்லாமை நோக்கிய எனது பயணம் எளியது அல்ல. அது வலியும் வேதனையும் நிரம்பியது. பல தடைகளைக் கடந்து இஸ்லாத்திற்கு வந்துள்ளேன். ஆனால், நான் இத்தடைகளை மீண்டும் கடக்க வேண்டி வருமென்றால் மீண்டும் அனைத்தையும் கடக்கத் தயார் என்பதை தயக்கமில்லாமல் சொல்வேன்! அந்த அளவுக்கு நான் இஸ்லாத்தை நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் பொக்கிஷத்தை நான் இழப்பதற்கு தயார் இல்லை!
என் வளர்ப்பும் குழந்தைப் பருவமும்:
நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்தேன். அவர்கள் மிகவும் இனவெறியர்களாக இருந்தார்கள். அந்நிய இனத்தவர்களின் எதையும், எவரையும் அவர்கள் வெறுத்தார்கள். குறிப்பாக முஸ்லிம்களைக் கண்டாலே ஆகாது. நான் குழந்தையாக இருந்தபோது டிவியில் ஏதேனும் முஸ்லீம் தோன்றும் போதெல்லாம் டிவியை நோக்கி என் தந்தை காறி துப்பியது எனக்கு ஞாபகம் இருக்கிறது.
என் பெற்றோர்கள் என்னையும் என்னையும் என் சகோதரிகளையும் வெறுப்புடனேயே வரத்தார்கள். மது மற்றும் போதை வெறியில் வெளிப்படும் கோபத்தை எல்லாம் எங்கள் மீதே காட்டி தீர்த்துக் கொள்வார்கள். பெண்குழந்தைகளையும் வெறுத்தே வந்தார்கள் போலும். வளரும் பருவத்தில் அன்பு பாசம் என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்ந்தோம். ஒரு பெற்றோரின் அன்பையும் அக்கறையும் என்றும் உணர்ந்ததே இல்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் பயம் மற்றும் வலிகள் மட்டுமே.
தேவாலய சேர்க்கை:
நான் 14 வயதில் தேவாலயத்தில் சேர்க்கைக்காக நடத்தப்படும் கிறிஸ்தவ உறுதிப்படுத்தல் - Christian confirmation at church- ( சடங்குக்கான என் முறை வந்தது. அதற்காக நான் நிறைய படிக்கவும் ஆராயவும் வேண்டியிருந்தது. அப்போதுதான் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. கடவுள் எப்படி மூன்றாக இருக்க முடியும்? எப்படி ஒருவருள் கடவுளும், குமாரனும், பரிசுத்த ஆவியும் இருக்க முடியும்?

அதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் பாதிரியார்களிடம் கேட்டேன், யாராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கத்தை அளிக்க முடியவில்லை. அதனால் நானே உண்மையை தேட ஆரம்பித்தேன். நூலகத்தில் நான் நிறைய புத்தகங்கள் வாசித்தேன். சுயமாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டேன்.
கிறிஸ்தவம் பற்றிய புரிதல்கள்:
இன்றைய துருக்கியில் உள்ள நிகேயாவில ஒரு தேவாலயக் கூட்டத்தில் முதல் சபை, முழு வேதத்தையும் பைபிளையும் மாற்றிவிட்ட விஷயத்தை நான் அறிந்துகொண்டேன். அது மனிதர்களின் கைகளால் அவர்களுடைய சொந்த ஆசைகள் மற்றும் நம்பிக்கைகளின்படி ஒன்று சேர்க்கப்பட்ட ஒன்று என்ற விவரம் எனக்கு கிடைத்தது.
பேரரசர் கான்ஸ்டன்டைனால் (emperor Constantine) நடத்தப்பட்ட அந்த கூட்டத்தில் இயேசு தீர்க்கதரிசி அல்ல, அவர் கடவுளின் குமாரன் என்றும் பரிசுத்த ஆவி என்றும் முடிவு செய்யப்பட்டது. இயேசுவை தீர்க்கதரிசி என்றும் ஒரு மனிதன் என்றும் விவரித்த ஒவ்வொரு வேதநூலும் அழிக்கப்பட்டது.

எனவே இதைக் கண்டறிந்த பிறகு நான் என் மனதில் உறுதி கொண்டேன். நான் இனி ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக இருக்கப்போவதில்லை என்று முடிவு செய்தேன். மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதத்தை நான் நம்ப மறுத்தேன். ஒரு பேரரசரை திருப்திப்படுத்த ஒன்று சேர்க்கப்பட்ட ஒன்றை நான் எப்படி நம்புவது?
உண்மையைத் தேடுதல்:
எனவே பிறகு நான் உண்மையைத் தேட ஆரம்பித்தேன். கடவுள் கண்டிப்பாக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும், எங்கோ இருக்க வேண்டும் என்பதை என் மனம் உறுதியாக நம்பியது.
அப்போது முதல் நான் வெவ்வேறு மதங்களைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டேன். பின்னர் நான் ஸ்வீடிஷ் மொழிபெயர்ப்பில் திருக்குர்ஆனைக் கண்டேன். அதை நான் முழுமையாகப் படித்தேன். அது என் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தது மற்றும் அதைவிட அதிகமாக. திருக்குர்ஆனில் உள்ள அறிவும் அற்புதங்களும் என்னை அழ வைத்தன. நான் படித்து முடித்த பிறகு கடவுளின் முன் என் "ஷஹாதா"வை (கொள்கைப் பிரகடனம்) மொழிந்தேன். அப்போது எனக்கு வயது 17. ஆனால் அது பலத்த சோதனைகளைக் கொண்டுவரும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை!
சத்திய சோதனைகள்:
நான் முஸ்லிம் ஆகிவிட்ட தகவல் அறிந்ததும் என் குடும்பத்தார் பைத்தியம் பிடித்ததைப் போல் ஆகிவிட்டார்கள். என்னை மிக மோசமாக அடித்து துன்புறுத்தினார்கள். என் குடும்ப வீட்டை விட்டு என்னை வெளியேற்றினார்கள் அன்றிலிருந்து நானாகவே என்னை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. பத்து வருடமாக என் குடும்பமும் நண்பர்களும் என்னிடம் பேசவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் நான் இறந்து விட்டேன். அவர்கள் பார்வையில் நான் ஒரு துரோகி!

நான் இப்போது என் உடல் முழுவதும் உள்ள வடுக்களையும் நிரந்தர காயங்களையும் பார்க்கும்போது, நான் புன்னகைக்கிறேன், ஏனெனில் அவை மதிப்பு மிக்கவை. அனுபவித்த கஷ்டங்கள் எதற்காகவும் நான் வருத்தப்படவில்லை. மீண்டும் நான் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்ற ஒரு நிலை வந்தால், மீண்டும் அனைத்தையும் செய்வேன்.
ஆம், நான் சத்தியத்தை அறிந்து கொண்டேன். இறைவன் என்னோடு இருக்கிறான். எனக்கு எப்போதும் தேவை அதுதானே!
------------------
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!