இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 ஜூன், 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2019 

பொருளடக்கம்: 
உலக பயங்கரவாதமும் உண்மைகளும் -2
வட்டி உண்பவர்கள் உஷார்! -3
பணம் வந்த கதை -4
கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயங்களும் நோட்டுகளும் -9
நம்பிக்கை துரோகம் என்ற பெருங்குற்றம் -10
வங்கி என்ற பேராயுதம் -12
பணவேட்டையும் விசாரணையும் -14
உலகளாவிய வங்கி ஆதிக்கக் கொடுமை! -15
பணவேட்டையை முடித்துவைக்கும் புதைகுழி! -18
கட்டை ராஜாவின் சாம்ராஜ்ஜியம் -20
காலனி ஆதிக்கம் என்ற ரவுடி சாம்ராஜ்ஜியம் -21
ஆயுத விற்பனைக்காக உருவாக்கப்படும் போர்முனைகள் -23

இறைவனின் விளையாட்டு பொம்மைகளா நாம்? -24

சனி, 15 ஜூன், 2019

பணம் வந்த கதை

#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_1
Related image


இன்று உலக
 மக்கள்குறிப்பாக நடுத்தர  மக்களும் நலிந்தவர்களும்   அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீது வஞ்சகமாக சுமத்தப்படும் பொருளாதார நெருக்கடி ஒரு மிக முக்கியமான காரணியாகும். இயற்கையாகவே பற்பல வளங்களும் செழிப்பும் நிறைந்த இந்த பூமியில் ஒரு சில மக்களின் அளவுக்கதிகமான பொருளாசை காரணமாக நலிந்த மக்களின் மீது வறுமையும் நோய்களும் போர்களும் தொடர்ச்சியாக திணிக்கப்படுகின்றன. நல்லிணக்கத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வோடும் மக்கள் வாழ முற்பட்டாலும் அவர்களைப் பிரித்து அவர்களுக்கிடையே வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் விதைத்து அவர்களைப் பிரித்தாண்டு தங்கள் சுயநல வேட்கைகளைத் தீர்த்துக் கொள்கிறது அந்தக் கொடியோர் கூட்டம். அவர்கள் உலகின் மீது எவ்வாறு இந்த ஆதிக்கத்தை அடைந்தார்கள்? அதை அறிய நீங்கள் பணம் வந்த வரலாற்றை தெரிந்தாக வேண்டும்.

கதையல்ல, நிஜம்... மறைக்கப்படும் நிஜம்!
பணம் வந்த கதையை ஒரு கதைதானே என்று நாம் அலட்சியம் செய்வதற்கில்லை. இது பள்ளிக்கூட பாடநூல்கள் மூலமாக கட்டாயமாக போதிக்கப்பட வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. குறைந்தபட்சம் கல்லூரிகளிலாவது கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் பாமரர்களைப் போல படித்தவர்களும் பட்டதாரிகளும் இதுபற்றிய அறியாமையிலேயே நீடிப்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும். நாளும் பொழுதும் நாம் தவறாமல் புழங்கிவரும் இந்தப் பணத்தின் பின்னணி என்ன? இதை யார் விநியோகிக்கிறார்கள்? இதன் மதிப்பு என்ன? இதைக் கட்டுப்படுத்துவது யார்? இதுபோன்ற அடிப்படை உண்மைகளை நம்மால் எவ்வாறு அலட்சியம் செய்ய முடிகிறது? நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
 இந்த அறியாமையிலும் அலட்சியத்திலும் உலகமக்கள் நீடிக்கும் வரை உலகம் இன்று அனுபவித்துவரும் பொருளாதார அடிமைத்தனத்திற்கு விடிவே கிடையாது என்று சொல்லலாம்.

பண்டமாற்று முறை
பண்டைக் காலத்தில் மக்கள் பண்டமாற்று முறையில்தான் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தனர் என்பதை அறிந்திருப்பீர்கள். அதாவது ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்குத் தேவையான பொருட்களை தாங்களே தயாரித்துக் கொள்வர். உழவு, தையல், தச்சு, குயவர், பொற்கொல்லர் இன்னபிற தொழில்களில் ஈடுபட்டு அந்த உற்பத்தியில் தங்கள் தேவைக்குப்போக மீதமானவற்றை மற்றவர்களிடம் கொடுத்து பண்டமாற்று செய்து கொள்வர்.
மாதமொருமுறை குறிப்பிட்ட இடத்தில் சந்தை கூடும்போது அந்த இடம் மிகவும் கலகலப்பானதாக இருக்கும். ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் மிகுதியான பொருட்களை கூவிக்கூவி விளம்பரப் படுத்திக் கொண்டு, தங்களுக்குத் தேவையான மாற்றுப் பொருள் எதுவும் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே இருப்பார்கள்.  மக்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். சொல்லப்போனால், மாதமொருமுறை வரும் அந்த சந்தை நாளை அவர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்தனர் என்றே சொல்லலாம். தங்கள் பொருட்களை பரிமாறிக் கொள்வதுடன் உறவினர்களை, நண்பர்களை ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ளும் வசதியும் இருந்தது. ஆனால் யாருடனும் சாவகாசமாக நின்று பேசவோ அளவளாவவோ அவகாசம் கிடையாது. சந்தை நேரம் முடியுமுன் தங்கள் விற்பனையையும் கொள்முதலையும் செய்து முடிக்க வேண்டுமே!
பண்ட மாற்று சந்தையில் சிக்கல்கள் 
மாதம் ஒருமுறை கூடும் சந்தையில் தங்கள் விளைபொருட்களை விற்பதிலும் தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதிலும் பல சிக்கல்களை மக்கள் சந்தித்தார்கள். தங்கள் பொருட்களை தங்களுக்குத் தேவையான பொருட்களோடு மாற்ற முடியாமை, பொருட்களின் மதிப்பீடு மற்றும் பிற பொருட்களோடு இவற்றின் ஒப்பீடு சிக்கல்கள், தீராத பேரங்கள், விற்காத பொருட்கள் அழுகி வீணாகுதல் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இப்பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன. 
நாணயங்களுக்கு வந்த சிக்கல்கள்
மக்கள் சந்தை கூடும் நாட்களில் தங்கள் விளைபொருட்கள் மற்றும் தேவையான நாணயங்களோடு சந்தைகளுக்கு வந்து கொடுக்கல் வாங்கல்களை முன்னைவிட எளிதாக செய்யத் துவங்கினார்கள். ஆனால் நாணயங்களின் பாதுகாப்பு ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது. தூரத்தில் இருந்து சந்தைக்கு வருவோர் வழிப்பறித் திருடர்களின் கொள்ளைக்கு இலக்காயினர். மேலும் அதிகமான எடையில் இந்த நாணயங்களை தூக்கிக்கொண்டு அலைவதும் சிரமமுள்ளதாக கருதப்பட்டது.
பெட்டகக்காரர்கள் சேவை
மேற்படி சிக்கல்களைத் தொடர்ந்து ஓரிரு செல்வந்தர்கள் முன்வந்து பெரும் பாதுகாப்புப் பெட்டகங்களை நிறுவினார்கள்.
மதிப்புமிக்க தங்க நாணயங்களைப் பாதுகாப்பது உங்களுக்குச் சிரமமாக இருந்தால் எங்களிடம்  வாருங்கள். நாங்கள் நிறுவியுள்ள இரும்புப் பெட்டகங்களில் உங்கள் நாணயங்களை வைத்துச் செல்லுங்கள். உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது வந்து அதை எடுத்துச் செல்லுங்கள்.  இந்தச் சேவைக்காக ஒரு சொற்பமான சேவைக் கட்டணம் செலுத்தினால் போதும்”.
இதன் பின்னால் உள்ள ஆபத்தை உணராமலேயே மக்கள் அந்தச் சேவையை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவ்வாறு பொற்காசுகளைக் கொண்டு வந்து தருபவர்களிடம்இன்னாருடைய இவ்வளவு பணம் என்னிடம் இருக்கிறது’ என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதி கையெழுத்து போட்டு (அல்லது கைநாட்டு வைத்து)க் கொடுத்தார்கள் பெட்டக உரிமையாளர்கள்.
வியாபாரிகள் கொள்முதலுக்குச் செல்லும்போது பெட்டகக் காரர்களிடம் வந்து நாணயங்களை எடுத்துச் செல்வதும் விற்பனையில் கிடைக்கும் நாணயங்களை மீண்டும் வந்து அவர்களிடம் ஒப்படைப்பதும் வாடிக்கையானது. பெட்டகக் காரர்கள் இந்த நடைமுறையையும் எளிதாக்கினார்கள்.. “மக்களே நீங்கள் இனி அதிகமாக அலையவேண்டாம். கொள்முதலுக்குப் போகின்றபோது நாணயங்களைத் தூக்கிக்கொண்டு போவதற்குப் பதிலாக நங்கள் தரும் ரசீதையே  அந்த வியாபாரியிடம் கொடுங்கள். அவர் அந்த ரசீதை எங்களிடம் கொண்டு வரும்போது அதை வாங்கிக் கொண்டு அவருக்குச் சேர வேண்டிய நாணயங்களை நாங்களே கொடுத்து விடுகிறோம்.” மக்களுக்கு இதுவும் பிடித்திருந்தது. அவர்களுக்கு மேலும் வசதி செய்து தருவதற்காக பெட்டகக் காரர்கள் பெரும் தொகைகளுக்கு மட்டுமல்ல, சில்லறைத் தொகைகளுக்கும் ரசீதுகளை எழுதிக் கொடுத்தார்கள். எனவே கொடுக்கல் வாங்கல் மிகவும் எளிதானது.
கடைக்காரர்களுக்கும் இந்த நடைமுறை எளிதாக இருந்தது. பெட்டகக்காரர்கள்  கையெழுத்திட்ட ரசீதுகளை எப்போது வேண்டுமானாலும் அவர்களிடம் கொடுத்து நாணயங்களைப் பெற்றுக் கொள்ளலாம், அல்லது தம் கொள்முதலுக்காக அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறாக இந்த ரசீதுகள் கைமாறி கைமாறி பயணிக்க ஆரம்பித்தன. வியாபாரப் பரிவர்த்தனைகளுக்காக தங்க நாணயங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக பெட்டகக்காரர்களின் ரசீதுச்சீட்டுகளையே மக்கள் பயன்படுத்தும் நிலைஉருவானது.
பெட்டக உரிமையாளர்களின் சதித்திட்டம் துவக்கம்: 
நம்பிக்கை துரோகம் ஒன்று
பெட்டக உரிமையாளர்கள் கையெழுத்திட்ட துண்டுச் சீட்டுகளையே தங்களின் வியாபாரப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி வந்த மக்கள், அதற்குண்டான தங்க நாணயங்கள் பெட்டகங்களில்  இருக்கின்றன என்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்டார்கள்தங்கள் கையெழுத்திட்ட காகிதங்கள் மூலம் நாட்டில் எதையும் வாங்க முடியும் என்பதை பெட்டகக் காரர்கள் உணர்ந்தார்கள். எனவே தங்களுக்கு விருப்பப்பட்ட பொருட்களை அல்லது சொத்துக்களை வாங்க அவற்றை பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களால் அவை கவனிக்கப்படப் போவது கிடையாது என்பதையும் உணர்ந்தார்கள். அவ்வாறு செய்தால் சுழற்சியில் இருக்கும் ரசீதுப் பத்திரங்களின் மதிப்பு குறையுமே என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் தங்களுக்கு விருப்பமானவற்றை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார்கள்.
நம்பிக்கை துரோகம் இரண்டு
 பெட்டக உரிமையாளர்களில் ஒருவர் இவ்வாறு சிந்தித்தார்...
 ‘நம் பெட்டகத்தில் பாதுகாப்பதற்காக தரப்பட்ட ஆயிரக்கணக்கான தங்க நாணயங்கள் வெறுமனே தூங்கிக் கொண்டிருக்கின்றனஇந்த நாணயங்களெல்லாம் எனது கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன. இவற்றை நான் ஏன் மக்களுக்குக் கடனாகக் கொடுத்து வட்டி ஈட்டக் கூடாது? அவ்வாறு கொடுத்தால் அந்த நாணயங்களின் உரிமையாளர்களுக்கு தெரியவா போகிறது? அப்படியே தெரிந்து அத்தனை பேரும் ஒரே நேரத்தில் வந்து நாணயங்களைத் திரும்பக் கேட்டால்தான் ஆபத்துஆனால் அதெல்லாம் ஒரு காலத்திலும் நடக்க வாய்ப்பில்லை’  இவ்வாறு தனது  வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முனைந்தார் அவர். 
உடனடியாக அந்த சதித் திட்டத்தை நிறைவேற்றவும் செய்தார். .
என்ன நடந்தது?.... அவ்வாறு கடன் பெற்றவர்களும் தங்க நாணயங்களை வாங்கிச் செல்வதை விட அந்தப் பெட்டகக் காரரின் ரசீதுப் பத்திரங்களையே கேட்டு வாங்கிச் சென்றார்கள். ஏனென்றால் ஊரெங்கும் மக்கள் ரசீதுப் பத்திரங்களுக்குப் பழகிவிட்ட பிறகு தங்க நாணயப் புழக்கத்தை இனி யார்தான் விரும்புவார்கள்? கடன்தொகை ரசீதுப் பத்திரங்களாலேயே வழங்கப்பட்டது. கடன்காரர்களும் விரும்பிய எண்ணிக்கையில் மொத்தமாகவும் சில்லறைகளாகவும் ரசீதுப் பத்திரங்களைப் பெற்றுச் சென்றார்கள். தங்க நாணயங்களைப் பாதுகாப்புக்காக அடகுவைத்தவர்களுக்கும் காகித ரசீது! கடன் வாங்குவோருக்கும் அதே ரசீது! பெட்டகக்காரருக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி!
இந்த சதியை  எப்படியோ மற்ற பெட்டகக் காரர்களும் மோப்பம் பிடித்து அறிந்தார்கள். பாம்பின் கால் பாம்பறியாமலா இருக்கும்? விரைவிலேயே அவர்களும் இதை செயல்படுத்தினார்கள்.
பெட்டகக்காரர்கள் கூட்டணி
தங்கள் ‘வணிக இரகசியம்’ பொதுமக்களிடையே அம்பலமாகாமல் இருக்க பெட்டகக் காரர்கள் இரகசியமான கூட்டணி அமைத்து தங்கள் திட்டங்களை செயல்படுத்தினார்கள். நாட்டின் அனைத்து பெட்டகங்களையும் இணைத்து “வலுவான பெட்டகம்” அமைத்து ஏகபோக உரிமை கொண்டாடினார்கள். தங்களின் கையெழுத்திட்ட ரசீதுப் பத்திரங்கள் மூலம்தான் இனி நாட்டில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும் என்று ஆகிவிட்ட நிலையில் அனைத்து அதிகாரங்களும் அவர்களின் காலடியில் வந்து சேர்ந்தன. இவர்களுக்கு என தலைசிறந்த குண்டர் படையும் வைத்திருந்தார்கள். தங்களின் திட்டங்களுக்கு குறுக்கே நிற்கும் தடைகளை “கவனிக்க வேண்டிய” முறையில் கவனித்தார்கள். ‘பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்’ என்று அறியாமலா சொன்னார்கள்?
மக்களின் தேவை அதிகரிக்க அதிகரிக்க பெட்டக உரிமையாளர்கள் ரசீதுப் பத்திரங்களை தரமான தாள்களில் தேவையான மதிப்புகளுக்கு அச்சடித்து விநியோகிக்கத் தொடங்கினார்கள். 
நாட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேரே இவர்கள் கைவசம் என்று ஆகிவிட்ட நிலையில் அரசாங்கத்திற்கும்  ஆட்சியாளர்களுக்கும் மேலான நிலையை இவர்கள் அடைந்தார்கள். மட்டுமல்ல, அவர்களைசிறப்பான” முறையில் கவனித்துக் கொள்ளவும் செய்தார்கள்.  தொடர்ந்து தங்களின் பெட்டகத்திற்கு அரசின் அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் பெற்றார்கள். இதனால் இவர்கள் பயந்து கொண்டிருந்த இன்னொரு பிரச்சினையும் தீர்வு கண்டது. ஆம், இனி யாரும் இவர்கள் மீது சந்தேகம் கொண்டு தங்கள் தங்கநாணயங்களை திரும்பப்பெற வேண்டும் என்று படையெடுக்க மாட்டார்கள்!
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் அந்தப் பெட்டகங்களின் பரிணாமமே நாடுகளின் தலைமை வங்கிகள். அந்த ரசீதுகளின் பரிணாமமே பணத்தாள்கள் அல்லது கரன்சிகள்! 
இதுதான் சுருக்கமாக பணம் வந்த கதை!
மேற்படி கதைப்படி நம் நாட்டைப் பொறுத்தவரை நாம் புழங்கும் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடும் இந்திய ரிசர்வ் வங்கிதான் நமது நாட்டு தலைமை வங்கி என்பது உண்மையே. ஆனால் நமது ரிசர்வ் வங்கிக்கு யார் தலைமை? நாம் பயன்படுத்தும் ரூபாய் நாட்டுக்கு நிகரான தங்கம் அல்லது மதிப்புப் பொருட்கள் எங்கே சேமிக்கப்படுகிறது? எங்காவது சேமிக்கத்தான் படுகிறதா? இல்லை இது நம் மீது திணிக்கப்படும் வெறும் வெற்றுக் காகிதம்தானா? போன்ற கேள்விகளை உங்கள் ஆராய்ச்சிக்காக விட்டுவிடுகிறோம்.
--------------------------
தொடர்புள்ள ஆக்கங்கள் :
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2016/11/blog-post_30.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html