இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 ஜனவரி, 2015

மத நல்லிணக்கம் எவ்வாறு?

Sabka Ghar in Delhi is setting example for building communal ... இந்திய அரசியல் சாசனம் ஒருவர்  தன்னுடைய மதத்தை பின்பற்றுவதையும் பிறருக்கு எடுத்து வைப்பதையும், பிரச்சாரம் செய்வதையும்  தடுக்கவில்லை, ஆனால் வலுக்கட்டாயமாக பிறர்மீது திணிப்பதைதான் கண்டிக்கிறது. மத நல்லிணக்கம் உண்டாவதற்கு அனைத்து மதத்தவரும் இதனை கட்டாயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒரு மனிதர் தனது மதமல்லாத வேறொன்றை பின்பற்றுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை வெறுப்பது, அவரிடம் நீதமின்றி நடந்து கொள்வது எந்த ஒரு மதத்தின் மரபுகளுக்கும் எதிரானதாகும். ஒன்றே மனித குலம் ஒருவனே நம் அனைவருக்கும் இறைவன் என்பது இஸ்லாம் கற்பிக்கும் அடிப்படைக் கொள்கையாகும். அந்த அடிப்படையில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னும்போது சக மனிதர்களின் கொள்கைகளோடு முரண்பாடு உள்ளமைக்காக அவர்களை வெறுப்பது என்பது மிகப்பெரும் தவறே!
           
முஸ்லிம் எப்படி மத நல்லிணக்கம் பேண  வேண்டும்?
முஸ்லிம் என்றால் இறைவன் கற்பிக்கும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்பவர். அவரைப் பொறுத்தவரையில் வணக்கத்திற்கு உரியவன் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் மட்டுமே என்பதைக் கொள்கையாகக் கொண்டவர். நபிகள் நாயகத்தை தன வாழ்க்கை முன்மாதிரியாக அவர் ஏற்றுக்கொண்டவராக இருந்தாலும் அவருக்கு முன்வந்த அனைத்து இறைத் தூதர்களையும் இறைவேதங்களையும் மதித்தே ஆகவேண்டும். (அவை பிற்காலங்களில் சிதைந்து காலாவதியாகி விட்டது வேறு விஷயம்)
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நபிகளார்தான் முன் மாதிரி. நபிகளார் வாழ்ந்த காலத்திலும் அவருடய இரத்த சொந்தங்கள் அறியாமையினாலும், மனோ இச்சையினாலும் மனம் போன முறையில் பல தெய்வங்களையும், சிலைகளையும் வணங்கி வந்தனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கண்ணியமான முறையில் படைத்த  இறைவனை வழிபட வேண்டிய அவசியத்தையும், அதை மறுக்கும் பட்சத்தில் மறுமையில் நடக்கும் விளைவுகளையும் எடுத்து சொன்னார்களே தவிர, யாரையும் நிர்பந்திக்கவோ, மிரட்டவோ இல்லை.
  தன்னை வளர்த்த பெரிய தந்தை மரணப் படுக்கையில் இருக்கும் போது  இறந்தபின் அவர் நரகத்திற்கு சென்றுவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில் அவரிடம் கெஞ்சிதான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள கூறினார். நபிகளார் துக்கத்தில் மிகவும் உழன்ற போது, "நபியே உமது பணி இறைச்செய்தியை எடுத்துச் சொல்வது மட்டும்தான்." என எச்சரிக்கையும் விடுத்தான் இறைவன் என அறிகிறோம். 
= (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 2:256) 

நபிகளார் வாழ்வில் நடந்த சில உதாரணங்கள்:

ஒரு யூதனின் பூத உடல் அடக்கம் செய்வதற்காக வீதியில் செல்லும் போது, நபிகள் நாயகம் மரியாதைக்காக எழுந்து நின்றார் என்பது வரலாற்று பதிவு.

கிருஸ்தவ பாதிரிமார்கள் ஒரு வேலை நிமித்தம் பள்ளி வாசலில் தங்கி இருந்போது அவர்களின் வணக்க வழிபாடுகளை செய்வதற்கு அனுமதி அளித்தார். 

இரு சமூகத்துக்கு இடையே ஏதேனும் காரணத்துக்காக போர் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றால் அப்போதும் கூட மற்ற சமூக குருமார்களை தாக்குவதையோ, வழிபாட்டு தலங்களை இடிபதையோ நபிகளார் தடுத்திருக்கின்றார்கள். இதுவெல்லாம்தான் மத நல்லிணக்க செயல்கள். இங்கே மத துவேசம், மத வெறி போன்றவற்றிற்கு இடம் இல்லை. பிற மதங்களின் மீதுள்ள ஒருவருக்குள்ள  மன வெறுப்பை நீக்குவதே மத நல்லிணக்கத்தின் முதல் படியும், முக்கிய படியும் ஆகும். 

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வோம்:
ஒரு ஹிந்து நண்பரோ, புத்த நண்பரோ விருந்துக்கு வருகின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவரது உணவு சைவம்தான் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவைத் தயாரித்து அதைப் பரிமாறுகின்றோம். இது போன்று நமது நிலைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் அவர்களுக்கு முன்பே கூறியிருப்போமென்றால் அவர்கள் நிச்சயமாக நம்முடன் அதற்கேற்பத்தான் நடந்துகொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உதாரணமாக இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஏக இறைவன் அல்லாதவற்றுக்காக  படைக்கப்பட்டவையும் இறைவனின் பெயர் கூறி அறுக்கபாடாத பிராணிகளின் மாமிசங்களும் பன்றி மாமிசமும் தடை செய்யப்பட்டவை என்பதை நாம் அறிவோம். இதை நம் மாற்றுமத நண்பர்களுக்கு முன்பே தெரியப்படுத்தினால் அவர்கள் தங்கள் பண்டிகைகளின் போது இந்தவகையான உணவுகளை நமக்கு வழங்குவதைத் தவிர்ப்பார்கள்.

இதன் படி நம் சகோதர சமூகத்தவருக்கு நமது கொள்கைகளைப்பற்றி அவர்கள் உணர்ந்து கொள்ள செய்வதன் மூலமும், அவர்களின் கொள்கைகளை நாம் அறிந்து கொள்வது மூலமாகவும் சமூகத்தில் மத நல்லிணக்கம் பேண முடியும். இந்த புரிந்துணர்வு இல்லாத பட்சம் சுயநல அரசியல்வாதிகளும் சமூகவிரோதிகளும் மத  துவேஷத்தை மக்களுக்கிடையில் விதைத்து பகைமை மூட்டி கலவரங்களும் அதன்வழி தங்கள் சுயநல வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

எம்மதமும் சம்மதமா?
அதேவேளையில் மேற்படி புரிந்துணர்வை உண்டாக்க முயற்சிக்காமல் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் கொண்ட மதங்களையும் கொள்கைகளையும் எல்லாமே ஒன்று அனைத்துமே சம்மதம் என்று போலியாகக் கூறுவது நயவஞ்சகத்தையும் குழப்பங்களையுமே விளைவிக்கும். மதநல்லிணக்கத்திற்கு ஊறுதான் விளைவிக்கும்.

நன்றி: நியாஸ் அஹமது, USA
=========== 
எம்மதமும் சம்மதமா?
https://www.quranmalar.com/2012/11/blog-post_9814.html
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html

பிறர்நலம் விழையும் ஜீவராசிகள்

Image result for ant
பிறர்நலம் விழையும்  ஜீவராசிகள்
ஐந்தறிவு ஜீவிகளிடம் இருந்தும் மனிதன் பெறவேண்டிய பல பாடங்களை  திருக்குர்ஆனில் இறைவன் இடம்பெறச்செய்துள்ளான்.
= எறும்பிடம் காணும் சமூகப் பொறுப்புணர்வு!
 இறைவன் தனது தூதர்களில் ஒருவரான சுலைமான் (சாலமன்) (அலைஹிஸ்சலாம் – அவர் மீது சாந்தி உண்டாவதாக) அவர்களுக்கு ஒரு சிறப்பு அருட்கொடையாக மாபெரும் அரசாட்சியும் பறவைகள், எறும்புகள் போன்ற ஐந்தறிவு ஜீவிகளின் மொழிகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் வழங்கியிருந்தான். மட்டுமல்ல இவற்றையும், காற்று, ஜின் இனம் போன்றவற்றின் மீது தனி ஆற்றலையும் அவருக்கு வழங்கியிருந்தான்.
ஒருமுறை சுலைமான்(அலை) அவர்கள் தன் பட்டாளத்துடன் போகும் போது நடந்த சம்பவம் பின்வருமாறு திருக்குர்ஆன் கூறுகிறது:
27:18. இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி;) ''எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸூலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)'' என்று கூறிற்று.

27:19.
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், ''என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!"" என்று பிரார்த்தித்தார்.
இந்த சம்பவம் மூலம் ஓர் எறும்பு தனது மற்றைய எறும்புகள் அழிந்துவிடக்கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறையை உணரமுடிகிறது. எறும்புகளிடம் வெளிப்படையாகவே காணப்படும் கூட்டுறவு, சுறுசுறுப்பு, உணவு சேமிப்பு, பகிர்ந்து உண்ணுதல் போன்ற பல பழக்கங்கள் அமைதியை விரும்பும் மனிதர்கள் கற்கவேண்டிய பாடங்களாகும். இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து அவன் வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தில் திருப்தி கண்டு வாழும் சமூகத்திற்கு எறும்புகளின் கூட்டமைப்பு ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆகத் திகழ்கின்றது. இத்தகைய கீழ்படிதலுக்கே அரபு மொழியில் இஸ்லாம் என்று கூறுகிறோம்.
மேற்படி சம்பவம் ஆபத்து என்று வரும்போது தனது சமூகத்தை எச்சரிப்பதும் அதற்காக மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பகிர்ந்து கொள்ளவேண்டியதும் நாம் இங்கு பெறும் பாடமாகும்.
--------------------------------
= மனித நிலை கண்டு கவலை கொண்ட மரங்கொத்தி!
இதே அத்தியாயம் மற்றுமொரு நிகழ்ச்சியைக் கூறுகின்றது. சுலைமான் (அலை) அவர்கள் தனது படையை பார்வையிட்டுக் கொண்டு வருகிறார்கள். அங்கே ஹுத் ஹுத் என்ற மரங்கொத்திப் பறவையைக் காணவில்லை. அது தாமதித்து வந்தது. இந்தப் பறவை தாமதித்து வந்ததற்கான காரணத்தை  வினவிய போது அந்தப்பறவை சுலைமான் நபியிடம் பின்வருமாறு கூறியதை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
27:22. (ஹுது ஹுது பறவையைக் காணாத சுலைமான்) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று; ''தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். 'ஸபா"விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.""

27:23. ''
நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.

27:24. ''
அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸூஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழயிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

27:25. ''
வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸூஜூது செய்து வணங்க வேண்டாமா?

27:26. ''
அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்"" (என்று ஹுது ஹுது கூறிற்று).
இந்தச் செய்தியை கேட்டபின், அந்தப் பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் சத்தியத்திற்கு அழைப்பு விடுத்த பின்னர் அவர் இஸ்லாத்தில் இணைந்ததாக திருக்குர்ஆன் கூறுகின்றது.
ஒரு நாட்டு மக்கள் அவர்களைப் படைத்த இறைவனை வணங்குவதை விட்டுவிட்டு அவனது படைப்பினங்களில் ஒன்றான சூரியனை வணங்குவதை கண்டு ஒரு பறவை கவலை கொண்டு அதைத் திருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதை மேற்படி சம்பவத்தில் நாம் காண்கிறோம்.
= இவ்வுலகைப் படைத்த இறைவனே மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக சூரியனையும் சந்திரனையும் இன்ன பிற கோள்களையும் உரிய முறையில் படைத்து பரிபாலித்து வருபவன். அனைத்துக்கும் முழுமுதற் காரணமான அவன் ஒருவன் மட்டுமே நமது வணக்கத்திற்கு உரியவன். நமது பிரார்த்தனைக்கு பதில் அளிக்கக்கூடியவன்.  என்பதை ஐந்தறிவு ஜீவிகள் வரை உணர்ந்துள்ளன என்பது இங்கு நாம் பெறும் முதல் பாடமாகும்.
= மக்களை உரியமுறையில் இறைவன்பால் வழிகாட்ட வேண்டும் என்ற கவலை ஒவ்வொரு இறைத்தூதர்களுக்கும் இருந்துள்ளது. அதே கவலை  அந்த இறைத்தூதரின் சேவகனாகப் பணிபுரியும் அந்த ஜீவிக்கு கூட அதே கடமை உணர்வு இருந்திருப்பது கவனிக்கத்தக்கது.

நோயும் மருந்தும் ஈயில் உண்டு!

நோயும் மருந்தும் ஈயில் உண்டு!
ஈயைப்பற்றிய இரண்டாவது அறிவியல் உண்மையை நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
உங்களில் ஒருவரது பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கி அமிழ்த்தட்டும் பிறகு அதை வெளியில் எடுத்துப் போட்டு விடவும்; ஏனெனில் ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும், மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது.” -அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). புஹாரி.3320.
பொதுவாக ஈயானது அசிங்கமான, சுகாதாரக்கேடான இடங்களிலும் கழிவுப் பொருள்கள் தேங்கும் இடங்களிலும் அதிகம் இருக்கும். கிருமி தாக்குதலுக்குறிய இடங்களில் வசித்தாலும் அவைகளினால் ஈக்கள் இறப்பதில்லை. மேலும் ஈயினால் சுமார் 100 வகையான நோய்கள் (Pathogens) பரவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஆனாலும் ஈக்களின் உடலிலேயே இறைவன் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வைத்திருப்பதால் அவைகள் பாக்டீரியா, மற்றும் வைரஸ் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை.
ஆக, ஈயானது நோயை கொண்டு செல்லும் அதே நேரத்தில் அந்நோய்க்கான பரிகார நிவாரணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இருந்து பெற்ற செய்தி மூலம் அன்றே குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வுண்மையை இன்றைய நவீன அறிவியல் ஆய்வுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதம், வார அறிவியல் (22,oct.2014) இதழ்களில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டனர். அதாவது ஈயின் மரபணு முழுவதையும் ஆராய்ந்து பார்த்ததில் மனிதர்களை நோய் தாக்குவதிலிருந்து காப்பாற்றும் நோய் எதிர்ப்பு வழிமுறை ஈயின் மரபணுவில் இருப்பதாக அறிவித்தனர்.
“House fly genome offers clue to human sickness”-By Michelle Roberts Health editor, BBC News online-16 oct.2014.
“House fly genome reveals expanded immune system”- By Krishna Ramanujan
CORNEL CHRONOCLE-Cornel University. October 22, 2014
http://www.sciencedaily.com/releases/2014/…/141014170843.html
இதுவரை அறியப்பட்டுள்ள மனித நோய்களின் மரபணுகளில் நான்கில் மூன்று பங்கு மரபணுக்கள் இந்த ஈயின் மரபணுக்களுடன் ஒத்துள்ளன. இந்த ஈக்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் உறங்கச் செல்கின்றன; மயக்க மருந்துக்கு மனிதர்களைப் போலவே எதிர்வினையாற்றுகின்றன. அனைத்துக்கும் மேலாக மிக விரைவாக இனப்பெருக்கம் செய்கிறது. ஒரு பதினைந்து நாட்களுக்குள் முற்றிலும் புதியதொரு தலைமுறையை உருவாக்குகிறது.
அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம், ஆறு பெண் ஈக்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அவைகளின் 15345 ஜீன்களை பிரித்து வகைப்படுத்தினர். இவற்றுள் நோயை பரப்பும் ஜீன்கள் (animal pathogens) மற்றும் நோய் எதிர்ப்பு ஜீன்களை (Immune system & Detoxification genes) ஆய்வு செய்தனர். வீட்டு ஈயின் குடும்பத்தைச் சார்ந்த பழ ஈ (Fruit Fly) ன் நோய் எதிர்ப்பு ஜீன்களைக்காட்டிலும் வீட்டு ஈயின் நோய் எதிர்ப்பு ஜீன்கள் மிக அதிகளவில் இருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
Detoxification என்று சொல்லப்படும் (cytochrome P450 genes) ஜீன்கள் பழ ஈயில் 85 மட்டுமே உள்ளது. நமது வீட்டு ஈயில் இந்த ஜீன்கள் 146 உள்ளது. அது மட்டுமல்லாமல் அளவில் ஐந்து மடங்கு மிகப்பெரியதாகவும் இருந்தது. ஈயின் நோய் எதிர்ப்பு ஜீன் மற்றும் விஷமுறிவு ஜீன்களை தனியாக பிரித்தெடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு வரக்கூடிய நோய்களை தடுப்பதற்கும் மற்றும் சுகாதாரக் கேடான இடங்களில் உருவாகும் கிருமிகளை கட்டுப்படுத்தவும் இவை பெரிதும் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். (http://genomebiology.com/2014/15/10/466)
இறைவனின் தூதர் அன்று சொன்னது இன்று அறிவியல் அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு ஈ உண்ணும் முறையை அதாவது உணவுப்பொருளை நீர்ம கூழாக்கி நேரடியாக வயிற்றுக்கு அனுப்பும் செய்தியையும், அதன் உடலில் நோய் எதிர்ப்பு மற்றும் விஷமுறிவு நிவாரணியும் உள்ளது என்பதை படைத்த இறைவனைத் தவிர வேறு எவரும் அறிவிக்க முடியாது.
நிச்சயமாக இரவும்,பகலும் மாறி வருவதிலும், வானங்களிலும்,பூமியிலும் இறைவன் படைத்துள்ள அனைத்திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.” – (திருக்குர்ஆன்.10:6)

நன்றி: எஸ்.ஹலரத் அலி.

ஈயிடம் இழந்ததை மீட்க வழியண்டா?

ஈயிடம் இழந்ததை மீட்க வழியண்டா?
இறைவனின் படைப்பினங்கள் ஒவ்வொன்றும் இறைவனின் உள்ளமையையும் அவனது வல்லமையையும் எடுத்துக்கூறும் அத்தாட்சிகளாக விளங்குகின்றன. அவை ஒவ்வொன்றும் தன்னகத்தே பற்பல அற்புதங்களையும் திட்டங்களையும் செயற்திறனையும் தாங்கி நிற்கின்றன. நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி, போன்ற சிறு உயிரினங்களும் இதற்கு விலக்கல்ல. அப்படிப்பட்ட ஓர் உயிரினமான ஈயை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான் இந்த வசனத்தில்...
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது; இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும்,தேடப்படுவோனும் பலஹீனர்களே!(திருக்குர்ஆன்.22:73)
திருக்குர்ஆன் என்பது இவ்வுலகைப் படைத்த இறைவன் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக தனது தூதர் மூலம் கற்றுத்தரும் அறிவுரைகளின் தொகுப்பாகும். மனிதனை சிந்திக்கவைத்து அவன் உண்மைகளைப் பகுத்தறியட்டும் என்பதற்காக அவனது படைப்பினங்களின் உதாரணங்கள் பலவற்றை திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான். பாமரர்களையும் படித்தவர்களையும் அவரவர் பாணியில் சிந்திக்கவைத்து உண்மைகளை உணரத்தூண்டுவது திருக்குர்ஆனின் மற்றொரு சிறப்பாகும்.
கற்றோரும் கல்லாதோரும் சிந்திக்காத காரணத்தால் செய்துவரும் ஒரு – போலிதெய்வ வழிபாடு என்ற - பாவத்தை அவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் அமைந்த இந்த வசனம் நவீன அறிவியல் கண்டுபிடித்த ஒரு உண்மையைத் தாங்கி நிற்கிறது.
ஈ பற்றிய உண்மைகள்
சிக்கல் நிறைந்த (complicated) உடலமைப்புக் கொண்ட ஈயைப் பற்றிய விபரம் திருக்குர்ஆன் இறங்கிய ஆறாம் நூற்றாண்டு மக்களுக்கு நிச்சயமாக தெரிய வாய்ப்பில்லை. அது எவ்வாறு உணவு உட்கொள்கிறது என்பதும் எவருக்கும் தெரியாது. இந்த ஈக்களில் சுமார் 30,000 வகைகள் உள்ளன.
ஒரு ஜோடி இறக்கைகொண்ட ஈயானது நொடிக்கு 1000 தடவை தன் சிறகை அடிக்கும் தன்மை கொண்டது. மணிக்கு 5 கி.மீ. பறக்கும் திறனுடையது. அதன் ஒவ்வொரு கூட்டுக் கண்களிலும்(compound eye) சுமார் 4000 லென்ஸ்கள் உள்ளன. தன்னுடைய நுகரும் தன்மையைக்கொண்டே உணவுகளைத் தேடுகின்றன. ஈக்களுக்கு உணவை மென்று அரைத்துத் தின்னும் பற்கள் கிடையாது. ஆகவே ஈயானது திட உணவுப்பொருள்களை நேரடியாக வாயில் வைத்து மென்று தின்ன முடியாது.
திரவ நிலையில் உள்ள உணவுகளை தனது வாயில் உள்ள (Proboscis) ஸ்பான்ஜ் போன்ற உறுப்பால் ஒற்றி உறிஞ்சிக்கொள்ளும். திட உணவாக இருப்பின் தனது உமிழ்நீரை அப்பொருளில் உமிழ்ந்து அதைக்கரைத்து நீர்ம நிலையில் உறிஞ்சி நேரடியாக வயிற்றுக்குள் அனுப்புகிறது. இந்த அறிவியல் உண்மைகள் எல்லாம் பொருள்களை பெரிதாக்கிக்காட்டும் மைக்ராஸ்கோப் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்ததன் பின்னரே அறிய முடிந்தது.
ஈ எவ்வாறு திட உணவுப் பொருள் திரவமாக மாற்றி எடுத்துக்கொள்கிறது என்பதை இன்றைய அறிவியல் நமக்கு தெளிவாக விளக்குகிறது. ஈ ஒரு உணவுப்பொருளில் அமர்ந்து ஒரு வித (நொதியை) எச்சிலை உமிழ்ந்து திடப்பொருளை திரவமாக்கி உறுஞ்சி, நேரடியாக வயிற்றுக்கு அனுப்பி விட்டால் நாம் அப்பொருளை மீண்டும் கைப்பற்ற முடியாது. இதைத்தான் இறைவன் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது;” என்று கூறுகிறான்.

ஆறாம் நூற்றாண்டின் பாலைவனத்துப் பாமர மக்களுக்கும் இந்த நூற்றாண்டின் அறிவியல் முன்னேற்றம் கண்டு நிற்கும் அறிவு ஜீவிகளுக்கும் ஒரே வசனம் மூலம் அவரவர் அறிவுமுதிற்சிக்கேற்ப சிந்திக்க வைக்கிறதென்றால் இதனை இயற்றியவன் இறைவனன்றி வேறு யார்?

வியாழன், 22 ஜனவரி, 2015

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிப்ரவரி2015 இதழ் PDF


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிப்ரவரி 2015 PDF

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிப்ரவரி 2015 PDF 
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusa0JDUFc2MXdOSEk/view?usp=sharing
பொருளடக்கம்:
தாய்மதம் திரும்புதல் என்றாலென்ன?
மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தோர்
ஈயிடம் இழந்ததை மீட்க முடியுமா?
நோயும் மருந்தும் ஈயில் உண்டு
பிறர்நலம் விழையும் ஜீவராசிகள்
மறுமைக்காக உழைக்க விரும்புவோருக்காக...
மதநல்லிணக்கம் எவ்வாறு?
பிரார்த்தனைப் பலகை
ஐ எஸ் ஐ எஸ் இயக்கம் யாருடையது?
வாரிசுகளாலேயே கொல்லப்படும் வயதான பெற்றோர்
வாசகர் எண்ணம்
நபிகளாரின் நற்பண்புகள் 

வெள்ளி, 16 ஜனவரி, 2015

தாய்மதம் அறிவோமா?


ஒன்றே மனித குலம்
மனிதர்கள் அனைவரும் ஒரு  ஆண் ஒரு பெண்ணில் இருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்பதே உண்மை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் பிறப்பால் சமமானவர்களே என்பதையும் நவீன அறிவியலும் இன்று நிரூபித்து நிற்கிறது. ஆனாலும் இவ்வுண்மை சக மனிதர்கள் மீது நிறத்தின் குலத்தின் இனத்தின் மேன்மையைக் கூறி ஆதிக்கம் செலுத்துவதற்காக சில சுயநல சக்திகளால் அவ்வப்போது மறைத்து வைக்கப்படுகிறது. இந்த சக்திகள் இந்த ஆதிக்கத்தின் மூலம் சகமனிதர்களை ஆன்மீக ரீதியாக அடிமைப்படுத்தி அவர்களின் பொருளாதாரங்களையும் உழைப்பையும் சுரண்டுவதோடு அவர்களில் பிரிவினை விதைக்கிறார்கள். நலிந்தவர்களை தீண்டத்தகாதவர்களாக ஏனைய சமூகங்களில் இருந்து விலக்கி வைக்கிறார்கள்.
 இந்த அடிமைத்தளையை உடைத்தெறியும் முகமாக இவ்வுலகையும் மனிதர்களையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் தனது வேதத்தில் எச்சரிக்கிறான்:.
''மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ........நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.' ( திருக்குர்ஆன் 4:1)
 (அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குரிய ஒரே இறைவன் என்று பொருள்)

மனிதகுலம் பூமிக்கு வந்ததன் பின்னணி
முதல் மனித ஜோடியைப் படைத்து அவர்களை சொர்க்கத்தில் குடியமர்த்திய பின் அதன் அருமைபெருமைகளை உணராத காரணத்தினால் அவர்கள் செய்த ஒரு தவற்றின் காரணமாக அங்கிருந்து பூமிக்கு அனுப்பப் பட்டார்கள். உரிய முறையில் உழைத்தபின் மீண்டும் சொர்க்கத்தைப் பரிசாக அடையும் முகமாக இந்த பூமியை ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக அமைத்துள்ளான் நம் இறைவன். அந்த நிகழ்வைப் பற்றி அவன் தன் இறுதி வேதத்தில் இவ்வாறு கூறுகிறான்: 
20:123. ''இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவே யிருப்பார்கள்; அப்பொழுது நிச்யமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.
இவ்வசனத்தில் கூறப்படும் நேர்வழியே இன்று இஸ்லாம் என்று அரபுமொழியில் அறியப்படுகிறது. இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் நமக்கு கற்றுத்தரும் கட்டுப்பாடான வாழ்வை (disciplined life)  மேற்கொண்டு வாழ்தலே இஸ்லாம் என்பதாகும். அவ்வாறு வாழ்ந்தால்  இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் சொர்க்கம் சென்றடையலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்
   முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். அதாவது மேற்படி இறைவன் கற்பிக்கும் கட்டுப்பாடான வாழ்வை மேற்கொள்பவர்களுக்கே முஸ்லிம்கள் என்று கூறப்படும்.
ஆக, இந்த அடிப்படையில்  இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ,அவர்கள் எந்த மதத்தவருக்குப் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி.......  மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே!
மனித குலத்தின் ஆரம்பத்தில் அருளப்பட்ட அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் நம் குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது.  அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. நபிகள்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" எல்லாக் குழந்தைகளும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டும் திருப்பி) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்."  (நூல்: புகாரி எண் 4775)
ஆக, தாய்மதம் என்பது இந்த இயற்கை மார்க்கம் இஸ்லாமே என்பது தெளிவாகிறது. இதை இதன் அடிப்படைக் கொள்கைகள் யாவை?

தாய்மதத்தின் அடிப்படைகள்
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் : தாய்மதத்தின் முக்கிய அடிப்படை உலகில் காணும் அனைத்து மனிதர்களும் பாகுபாடுகள் இன்றி ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதும்  நம் அனைவருக்கும் இறைவன் ஒரே ஒருவனே என்பதும் நாம் அனைவரும் அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம் என்பதும் ஆகும். (மேலே கூறப்பட்ட திருக்குர்ஆன் 4:1 வசனம் காண்க)
இங்கு இறைவன் என்றால் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் எவனோ அவனை மட்டுமே அது குறிக்கும். அவன் மட்டுமே நாம் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்தவன். அவனல்லாத அனைத்தும் அவனது படைப்பினங்களே. அந்த எல்லாம்வல்ல இறைவனுக்கு பதிலாக அவனது படைப்பினங்களை வணங்குவது வீணும் பாவமும் ஆகும் என்பதை முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்கள் இறைவனை வெவ்வேறு விதமாகக் கற்பனை செய்து வெவ்வேறு கடவுளர்களை ஏற்படுத்திக் கொண்டதே மனிதகுலம் பிளவுபடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
 மேலும் உயிரும் உணர்வுமற்ற பொருட்களையெல்லாம் காட்டி கடவுள் என்று சித்தரிக்கும்போது மனித மனங்களில் உண்மையான இறையுணர்வு  சிதைக்கப்படுகிறது. இதன் காரணமாக இறைவன் தன்னைக் கண்காணிக்கிறான், நான் அவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு மனித மனங்களில் நின்று அகன்று போகிறது. இவ்வாறு பூமியில் பாவங்கள் அதிகரிக்க இது ஒரு முக்கிய காரணமாகிறது.
இறைவனின் பண்புகளை இவ்வாறு கூறுகிறது திருக்குர்ஆன்:
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.”  (திருக்குர்ஆன் 112: 1-4)
ஏகனான, ஆதியும் அந்தமும் இல்லாத, தனக்குவமை ஏதும் இல்லாத, சர்வவல்லமை கொண்ட இறைவனை இடைத்தரகர்களும் வீண் சடங்கு சம்பிரதாயங்களும் இன்றி நேரடியாக வணங்கி வாழச் சொல்கிறது நமது தாய் மார்க்கம்.
*(நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், ""நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால், அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன்''  (திருக்குர்ஆன் 2:186)
மறுமை வாழ்வு:. இறைவனின் கண்காணிப்பு என்றால் இவ்வுலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பதிவாகின்றன என்பதும் அவை முழுமையாக இறைவனின் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப் பட உள்ளன என்பதாகும். இவ்வுலகில் இறைவனது வழிகாட்டுதல் படி வாழ்ந்தோர் சொர்க்கத்தையும் மறுத்தவர்கள் நரகத்தையும் அடைகிறார்கள் என்கிறது தாய்மார்க்கம்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)


இந்த தாய்மதத்தில் இருந்து மக்கள் ஏன் பிரிந்தார்கள் ?
இறைவனின் தூதர்கள் படைத்த இறைவன் ஒருவனையே வணங்கி வரவேண்டும் என்றும் அவனல்லாது எந்த படைப்பினங்களையும் வணங்கலாகாது என்றும் கண்டிப்பான முறையில் தத்தமது மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அதனடிப்படையில் ஆங்காங்கே தர்மத்தையும் நிலைநாட்டினார்கள். ஆனால்
இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் ஷைத்தானின் தூண்டுதலால் அவர்களின் போதனைக்கு மாற்றமாக இறைத்தூதர்களுக்கும் மற்ற புண்ணியவான்களுக்கும் நினைவுச் சின்னங்கள் எழுப்பினார்கள். நாளடைவில் அவற்றையே வழிபடவும் ஆரம்பித்தார்கள். இவ்வாறு மக்கள் உயிரற்ற உணர்வற்ற ஜடப் பொருட்களை எல்லாம் கடவுள் என்று நம்பத் துவங்கியதால் உண்மையான இறை உணர்வும் பயபக்தியும் சிதைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மக்கள் தயக்கமின்றி பாவங்கள் செய்யத் தலைப்பட்டனர். இவற்றோடு கடவுள் பெயரால் மக்களைச் சுரண்டிப் பிழைக்க இடைத்தரகர்களும் அவர்கள் அவிழ்த்துவிட்ட மூடநம்பிக்கைகளும் என பல தீமைகளும் சேர்ந்து பூமியில் அதர்மத்தை வளர்த்தன.

   இவ்வாறு அதர்மம் பரவிய போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக மீண்டும்மீண்டும் இறைத் தூதர்கள் அனுப்பப் பட்டனர். அவர்கள் மேற்கண்ட அடிப்படை போதனைகளை மக்களிடையே விதைத்து மீண்டும் தர்மத்தை நிலை நாட்டிவிட்டுச் சென்றனர். அந்த இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள். 
அதர்மம் அந்தந்தக் காலத்து இறைதூதர்களின் பெயரால் அல்லது நாட்டின் பெயரால் அல்லது வமிசத்தின் பெயரால் மதமாக அறியப்படும். ஆனால் தாய்மதமோ இறைவனுக்கு கீழ்படிதல்என்ற பண்புப் பெயரால் அறியப்படும்!
தாய்மதத்தின் முக்கிய இலக்கணங்கள்
= ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்பதை அசைக்கமுடியாத அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதன் மூலம் தனிமனித நல்லொழுக்கத்துக்கு வழிகோலும்.
= மானிட சமத்துவத்தையும் உலக சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும். அவற்றை நிலைநாட்டும். பிரிவினை வாதங்களுக்கு துணை போகாது.
= மனித இனத்தை பீடித்திருக்கும் சமூகத் தீமைகளில் இருந்தும் அடிமைத்தளைகளில் இருந்தும் விடுவிக்க தீர்வுகள் காணும். ஆன்மிகம் மட்டும் கூறிக்கொண்டு இராமல் மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக் கூடியதாக இருக்கும்.

= இடைத்தரகர்களுக்கும் கடவுளின் பெயரால் சுரண்டல்களுக்கும் துறவறத்துக்கும் இடமளிக்காது எளிமையான செலவில்லாத நடைமுறை சாத்தியமான வழிபாட்டைக் கற்பிக்கும். 
=================== 
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html
இறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்!