நமக்கோ குழந்தைகளுக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ திடீரென நோய் வந்து விட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. நிம்மதியை இழந்து விடுகிறோம். சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மனதில் இருத்தி அதன்படி செயல்பட்டால் நோயும் குணமாகும், அந்த நோய் கொண்டுவரும் உடல்ரீதியான, மனரீதியான, மற்றும் பொருள் ரீதியான இழப்புகளில் இருந்தும் நாம் நம்மை சுதாரித்துக் கொள்ளலாம்.
திருக்குர்ஆன் ஒளியில் நோய் நிவாரணம்:
இறைவனின் இறுதிவேதமான திருக்குர்ஆன் நோயின்போது நாம் கட்டாயம் மனதில்
கொள்ள வேண்டிய கீழ்கண்ட உண்மைகளை நினைவூட்டுகிறது:
1. 1. நோய் ஒரு எச்சரிக்கை
மனிதன் தனது
அவசரமான வாழ்க்கை ஓட்டத்தின் இடையே அவனைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைப் பற்றியும் மனித வாழ்க்கையின் உண்மை
நோக்கத்தைப் பற்றியும் சிந்திக்க மறந்து விடுகிறான். அப்படிப்பட்ட மனிதனை
நிதானப்படுத்த இறைவன் விடுக்கும் எச்சரிக்கையே நோய் என்பது!
2. படைத்தவனை அறிவோம்:
நோய் வரும்போது
நாம் மிகமிக முக்கியமாக நம்மைப் படைத்தவன் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்து அவன்பால்
மீள வேண்டும். திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றிக் கூறுகிறான் :
= நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை
அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)
(அல்லாஹ் என்ற வார்த்தையின் பொருள் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பதாகும்.)
அதாவது இறைவன் அவனது படைப்பினங்களைப் போலல்லாது ஏகனாக தனித்தவனாக, எதையும்
சார்ந்து இராதவனாக, பிறப்பு, இறப்பு, ஆதி, அந்தம், பிள்ளைப்பேறு போன்ற அனைத்துக்கும்
அப்பாற்பட்டவனாக, ஈடிணையற்றவனாக, தனக்குவமை இல்லாதவனாக உள்ளான்.
3. இறைவனிடமே நேரடியாக பிரார்த்திக்க வேண்டும்
=
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான்
அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான்
பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும்.
(திருக்குர்ஆன் 2:186)
இறைவனின்
தன்மைகளை மேற்கண்டவாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண்
சடங்கு சம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல் அவனை
நேரடியாக வணங்கவும் பிரார்த்திக்கவும் வேண்டும் என்று கற்பிக்கிறது திருக்குர்ஆன்.
நமக்கு வாய்த்துள்ள கஷ்டங்களையும் குறைகளையும் நீக்குமாறு அவனிடமே முறையிட
வேண்டும். நோயிலிருந்து விரைவில் நிவாரணம் நல்குமாறு கோர வேண்டும்.
4. படைத்தவன் அல்லாதவை பயன் தராது
= 'அவனே என்னைப் படைத்தான்;. பின்னும் அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான். அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே என் தாகம் தீர்க்கிறான். நான் நோயுற்ற காலத்தில் அவனே என்னைக் குணப்படுத்துகிறான். மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்.; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.' (குர்ஆன் 26:78-81)
படைத்தவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. ஒப்புவமை இல்லாத இறைவனை விட்டு விட்டு அற்பமான அவனது படைப்பிங்களை கடவுளாக பாவிப்பது அவனை சிறுமைப்படுத்துவதும் பாவமும் ஆகும். அவற்றை வணங்குவதும் அவைகளிடம் பிரார்த்திப்பதும் நமக்கு எந்த பயனையும் தராது. அதனால் நமது நோயும் குணமாகாது மாறாக இறைவனது கோபத்தையே அது பெற்றுத்தரும். எனவே நோய் நிவாரணம் பெற நம்மைப் படைத்தவனிடமே உதவி தேட வேண்டும்.
5. வாழ்க்கை ஒரு பரீட்சை என்ற உண்மை
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே
ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு
நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி
பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து
பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக
வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி
வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவது இந்த தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு
பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைக்கப்பட்டுள்ளது என்று
திருக்குர்ஆன் கூறுகிறது. இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை
வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து
எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த
சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக
வழங்கப்படும். தாயின் கருவறையில் அற்பமான இந்திரியத்
துளியில் இருந்து உருவாக்கி நம்மை வடிவமைத்து பரிபாலித்து வரும் இறைவனே நம்மை
மறுமையில் மீண்டும் உருவாக்கி நம் செயல்பாடுகளை விசாரிக்க இருக்கிறான் என்பதை
சிந்திப்போர் அறியலாம்.
6. சொர்க்கமும் நரகமுமே நம்
நிரந்தர இருப்பிடங்கள்
சொர்க்கம் என்பது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு
கவலை, தீமை,
பகை, சோர்வு, நோய்,
முதுமை, பஞ்சம், போன்ற
எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.
தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க
கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்
சொர்க்கம். அதேவேளையில் இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக
வாழ்ந்தோருக்காக நரகமும் உள்ளது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே
மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத் தீர்க்க உணவாக முட்செடிகளும்
கொதிநிலை அடைந்த பானங்களும் நரகத்தில் உண்டு.
சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய பல வருணனைகள் திருக்குர்ஆனில் காணப்படுகின்றன. உதாரணமாக:
= பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள
சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு.
(இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து,கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்)
குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (திருக்குர்ஆன் 47:15)
= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத்
தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!......
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.! (திருக்குர்ஆன் 78:21)
7. பரீட்சை வாழ்க்கையின் பாகமே நோய்!
= 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள்
ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால்
பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! அவர்களுக்குத் துன்பம்
ஏற்படும் போது 'நிச்சயமாக நாம்
அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம்
அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான்
அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும்
இவர்கள்தாம் நேர்வழியை அடைந்தவர்கள்’ (திருக்குர்ஆன் 2:155,156)
அதாவது வாழ்வில் நோய் உட்பட சோதனைகள் வருவது சகஜம் என்பதை அறியவேண்டும். அப்போதெல்லாம்
நாம் பதற்றம் அடையாமல் மறுமையை நினைத்து பொறுமையை மேற்கொள்ள வேண்டும். நோய்
வரும்போது நம் இரட்சகன் நம்மோடு உள்ளான் என்பதை நினைவு கூர்ந்து “நாம் இறைவனுக்கு
உரியவர்கள், அவனிடமே
திரும்பிச்செல்ல உள்ளவர்கள்” என்ற கூறுவது மாபெரும் ஆறுதல் அளிக்கும் செயலாகும். அது
ஆரோக்கியம் முன்பிருந்ததைவிட செம்மைப் படவும் வழிவகை செய்கிறது! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
= “சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட
கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம்
இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று
கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட
மேலானதைக் கொண்டு இதற்கு பகரம் வழங்குவாயாக!” என்று
பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான்” (நூல்: முஸ்லிம்)
8. பாவநிவாரணம்
பெறுதல்
நோய் நிவாரணத்துக்காக
பிரார்த்திப்பதற்க்கு முன்பு நமது பாவங்களில் இருந்து மீளவேண்டும். இறைவனிடம்
பாவமன்னிப்பு கோரவேண்டும். பிரார்த்தனைகள் ஏற்கப்படுவதற்கு நமது உணவும் உடையும் உடைமைகளும்
தூய்மையான முறையில் சம்பாதிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.
9. மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்:
மேற்கண்ட வாழ்வின் அடிப்படை உண்மைகளை நினைத்து
மனதை உறுதிப்படுத்தி மேற்கொண்டு நோய்க்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முயற்சிக்க
வேண்டும். நோயை வாழ்வின் சோதனையாக ஏற்படுத்திய இறைவனே அதற்கு மருத்துவம்
மேற்கொள்ளவும் பணிக்கிறான்.
=
“மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற
எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)
10. திருக்குர்ஆனும்
நோய்நிவாரணியே
நோயின்போது மருத்துவம் பார்ப்பதோடு திருக்குர்ஆன் வசனங்களையும் ஓதிப்
பார்க்கலாம். அவற்றிலும் நிவாரணம் உண்டு. அதை இறைவனே கூறுகிறான்:
“இது (திருக்குர்ஆன்) நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நிவாரணியகவும் இருக்கும் என்று (நபியே!) நீர்
கூறுவீராக…” (திருக்குர்ஆன் 41:44)
திருக்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயத்தை பொருளுணர்ந்து ஓதி
நோய்வாய்ப்பட்டவர் மேல் ஓதி ஊதலாம். படைத்தவன் மட்டுமே வணக்கத்திற்கு
உரியவன் என்ற நம்பிக்கையோடு ஒதுவோருக்கு இது பலனளிக்கும்:
1. (B)பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம் 2. அல்ஹம்து லில்லாஹி ர(B)ப்பில் ஆலமீன்.3. அர்ரஹ்மானிர்
ரஹீம்.4. மாலிகி யவ்மித் தீன் 5. இய்யாக்க நஉ(B)புது வஇய்யாக்க
நஸ்தஈன். 6. இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்த்தகீம் 7. ஸிராத்தல்லதீன அன்
அம்த அலைஹீம் அய்ரில் மக்லூ(B)பி அலைஹீம்
வலழ்ழால்லீன் –
ஆமீன்
பொருள்: (1. அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன் 2. அனைத்துப் புகழும்
அனைத்து உலகையும் படைத்து பரிபாலித்து வரும்
அல்லாஹ்வுக்கே உரியது. 3. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
4. இறுதித் தீர்ப்பு
நாளின் அதிபதி. 5.
உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். 6. எங்களை நேரான
வழியில் நடத்துவாயாக 7.
நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியில் நடத்துவாயாக,. அது உன்
கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியும் அல்ல. ஆமீன் - எங்கள்
பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக)
மறைவான தீங்குகளில் இருந்து
பாதுகாக்கும் வசனங்கள்
(B)பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம் 1. குல் அஊது (B)பி ர(B)ப்பில் (F)பலக். 2.மின் ஷர்ரி
மா ஹலக் 3. வமின் ஷர்ரி ஆசிகின் இதா வகப். 4 வமின் ஷர்ரின் ன(F)பாசாத்தி (F)பில் உகத் 5. வமின்
ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத். (திருக்குர்ஆன் அத்தியாயம் 113
பொருள் :அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்) 1. சொல்வீராக: “விடியலின் இறைவனிடம்
நான் பாதுகாவல் தேடுகிறேன். 2. அவன் படைத்த வற்றின் தீங்குகளில்
இருந்து. 3. இருள் பரவிய நேரத்தில் அந்த இருளின் தீங்கை விட்டு.
4. முடிச்சுக்களில் மந்திரித்து ஊதும பெண்களின் தீங்கை விட்டும். 5.
பொறாமைக்காரன் பொறாமை கொண்ட நேரத்தில் அவனது தீங்கை விட்டும் (நான் காவல்
தேடுகிறேன்)”
(B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 1. குல்
அஊது (B)பி ர(B)ப்பின் நாஸ். 2. மாலிக்கின்
நாஸ். 3. இலாஹின் நாஸ். 4. மின் ஷர்ரில் வஸ்வாஸில் ஹன்னாஸ் 5. அல்லதீ யுவஸ்விஸு (F)பீ சுதூரின்னாஸ் 6. மினல்
ஜின்னத்தி வன்னாஸ் (திருக்குர்ஆன் அத்தியாயம் 114)
பொருள் : அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்) 1. சொல்வீராக:
“மனிதர்களின்
இறைவனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன், 2. அவன் மனிதர்களின் அரசன்.
3. மனிதர்களின் வணக்கத்துக்கு உரியவன். 4. பதுங்கியிருந்து
வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (நான் காவல் தேடுகிறேன்.)
5. அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
6. (இத்தகையோர்) ஜின் மற்றும் மனித வர்க்கங்களில் இருக்கின்றனர்.
ஆக, படைத்தவன் மட்டுமே நாம் வணங்குவதற்குத் தகுதியான இறைவன்
என்று உறுதிபூண்டு அவனை கலப்படமற்ற முறையில் பிரார்த்திப்போருக்கு நோய்நிவாரணம்
எளிதாகிறது... மன உளைச்சல்களின் இருந்து பாதுகாப்பு பெறுகிறார்கள்... மறுமையில்
சொர்க்கத்தையும் பரிசாகப் பெறுகிறார்கள்! சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது என்பது
இதுதான்!
-------------------------
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?