இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 ஜூன், 2017

கன்றின் தாயே உன் கதை என்ன?


இந்த நாட்டில் வாயில்லா ஜீவன்கள் பலர் வாழ்கிறார்கள்..... அவை பசுக்கள் அல்ல... ஆனால் அவற்றைக் கொண்டு தன் வயிற்றை கழுவி வாழும் ஏழை குடியானவர்கள்... இவர்களுக்கு சங்கங்கள் கிடையாது.. இவர்களின் உரிமை கேட்டு போராடவோ இவர்களுக்காக குரல் கொடுக்கவோ எந்த அரசியல் கட்சிகளும கிடையாது. மிகவும் திக்கற்றவர்கள் இவர்கள்! இவர்களை மனதில் வைத்துக்கொண்டு பின்வரும் பசுவின் கதையை கொஞ்சம் கேளுங்கள்... (நன்றி: சகோ. Mohamed Ashik)
பெண்பால் மாடு... பசு எனப்படுகிறது.
சிறுவயதில் பெண்பால் மாட்டுக்கு பெயர் கன்றுக்குட்டி.
கன்றுக்குட்டி பால் தராது.
ஆனால், பின்னர் ஒரு நாள் அது வயசுக்கு வரும்.
காளை மாட்டுடன் உடலுறவு கொள்ளும்.
அதாவது, காளை மாட்டை உடலுறவு கொள்ள அனுமதிக்கும்.
அதன் பின்னர் பெண்பால் மாடு கருவுறும். சினை கொண்ட பெண்பால் கன்றுக்குட்டிக்கு இனி #பசு என்று பெயர்.
இதன் பின்னர், பசு கன்று ஈனும், அதன் பின்னர் அதிகமதிகம் பசுவின் மடியில் பால் சுரக்கும். ஈன்ற கன்றுக்கு வயிறு நிரம்ப பால் புகட்டியது போக... பசுவின் மடியில் மிக அதிகமாகவே பால் சுரந்து இருக்கும். இது... மனித குலத்துக்கு இறைவனின் அருட்கொடை. அந்த எக்சஸ் மில்கை...... மனிதன் கறந்து பாலாக காய்ச்சி... அப்படியேவோ.... அல்லது தேயிலை சேர்த்தோ... காப்பி பொடி போட்டோ குடிக்கிறான். ஊட்டச்சத்து பெறுகிறான்.
இப்படியாக பால் கொடுக்கும் வரைக்கும் பசு அனைவராலும் போற்றப்படும். கோமாதா என்று ஹிந்துக்களால் சாமியாக கும்பிடப்படும்.
இந்த பால் கொடுக்க ஆரம்பித்த பசுதான்... சந்தையில் அதிக விலைக்கு போகும். மாடுதன் ஆயுளில்... இப்போதுதான் அதன் விலை உச்சத்தில் இருக்கும். வயது மற்றும்... முதல் கன்று ஈன்ற பருவம்... மற்றும் மடியில் பால் வரத்தின் அடிப்படையில் பசு 30,000 ரூபாய் தாண்டி எல்லாம் சர்வசாதாரணமாக சந்தையில் விலை போகும்.
இந்நேரத்தில்... நிறைய தீவனம் போட்டு அதிக பால் கறக்கும் பால் பண்ணை காரர்களை தவிர வேறு யாரும் அவ்வளவு விலை கொடுத்து பசுவை வேறு எந்த நோக்கத்துக்காகவும் வாங்க மாட்டார்கள். மனிதன் முட்டாள் அல்ல.
வயது ஆக ஆக பால் சுரத்தல் பசுவுக்கு குறையும். பின்னர் ஒரு நாள் அந்த கிழப்பசு அறவே பால் தராது. ஆனால், தீவனம் மட்டும் தின்னும். ஏனென்றால் பசு உயிர் வாழ அதற்கு உணவு அவசியம். 
#பால்_தராத_பசுக்கு எந்த பால் பண்ணை காரரும் #தீவனம்_மட்டும் போட்டு உயிர் காப்பாற்றி பண்ணையில் ஊட்டமாக காட்டி மியூசியம் போல வைத்து இருந்து நஷ்டப்பட விரும்ப மாட்டார்.
இவர்தான் ஏற்கனவே பால் வரத்து அதிகமாக இருந்த காலத்த்தில் அதிக பால் கறந்து அதிக இலாபம் பார்த்து விட்டாரே.
எனவே, ஒரு பசு குறைவாக பால் தரும் போதே, பசுவின் வயதை கண்டு பிடிக்க தெரியாத ஏதாவது இளிச்ச வாய அனுபவமற்ற சிறு குறு சைக்கிள் பால்காரரிடம் பாதி விலைக்கோ அல்லது வந்த வரை இலாபம் என்றோ ரூபாய் 10,000 க்கு கூட விற்றுவிடுவார்.
அப்படி அந்த பசுவை குறைந்த விலைக்கு வாங்கியவர்... தினமும் சில லிட்டர் பால் கறந்து... அந்த பசு சுத்தமாக ஒருநாள் சொட்டு பால் கூட தராமல் போனதும்... அவருக்கும் அதே நிலை. நஷ்ட நிலை. என்ன செய்வார்...? தீவனம் போடாமல்... 'எங்காவது புல்லு மேய்ஞ்சு உயிர் வாழ்ந்துக்கட்டும்' என்று பசுவை - கோமாதாவை - அடித்து துரத்தி விட வேண்டும். இது அவருக்கு நஷ்டம் அல்லவா..? இப்படி எந்த முட்டாளும் செய்ய மாட்டார்.
அல்லது... இறைச்சிக்காக கசாப்பு கடையில் ஒரு நல்ல தொகைக்கு விற்க வேண்டும். விற்றால்... அடுத்த பசு வாங்க அது மூலதனமாக அமையும். இது இலாபம். இது மட்டுமே இப்போது அந்த பால் தராத பசுவால் வரும் இலாபம். இப்படித்தான் எல்லா மனிதர்களும் எல்லா நாட்டிலும் செய்வர்.
பொதுவாக குறைவான அடிமாட்டு விலைக்கே இந்த பால் தராத பசு இறைச்சி கடையில் விற்கப்படும். அதாவது, இரண்டு மூன்று ஆடுகளின் எடைக்கு எடை நிகராக உள்ள பால் தரா பசு... ஒரு ஆட்டின் விலைக்குத்தான் போகும். ஏனென்றால்... ஆட்டிறைச்சி = கிலோ 450 ரூபாய் என்றால்... மாட்டிறைச்சி கிலோ 200 க்கும் சற்று குறைவுதான் என்பதால்... அதிக பட்சமாக 5000 - 6000 ரூபாய் வரை தான் பால் தரா கிழப்பசு விலை போகும். அவ்ளோதான் என்று விற்க வேண்டும்.
இஸ்லாம் என்ற இறை அருட்கொடை:
இந்த இடத்தில் இஸ்லாம் என்ற இறைமார்க்கம் ஏழைக் குடியானவர்களுக்கு அவர்களை அறியாமலேயே அவர்களின் துயர் துடைக்கும் காரியத்தை செய்து வருகிறது என்பதை கவனியுங்கள். இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாள் என்றும் அழைக்கப் படுகிறது. படைத்த இறைவனுக்காக இப்ராஹீம் என்ற இறைத்தூதர்  தான் பெற்ற மகனையே தியாகம் செய்யத் துணிந்த அந்த நிகழ்வை நினைவு கூரும் வண்ணம் வருடாவருடம் கொண்டாடப்படும் நாளே தியாகத் திருநாள். அந்நாளன்று மனிதர்களால் வழக்கமாக உணவுக்காக அறுக்கப்படும் நாற்கால் கால்நடைகளில் ஒன்றை பலியிட்டு அதன் இறைச்சியை குடும்பத்தினரோடும் சமூகத்தில் ஏழைகளோடும் பகிர்ந்துண்பது  வசதிவாய்ப்புள்ளவர்கள்  மீது  கடமையாகப்பட்டுள்ளது. இதற்கு குர்பானி என்று இஸ்லாமிய வழக்கில் கூறப்படும். ஆடு என்றால் ஒரு குடும்பத்திற்கு ஒன்று பலியிடலாம். மாடு, பசு அல்லது ஒட்டகம் என்றால் ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு பிராணியை பலியிடலாம் என்பது இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள வரைமுறையாகும்.
பக்ரீத் காலத்தில் சந்தை நிலவரம் 
 மற்ற நாளில் 5,000 - 6,000 ரூபாய் விற்கும் ஆடு...  பக்ரீத் பண்டிகை சமயம் என்றால் மட்டும்... குர்பானிக்கு ஆடு விலை சந்தையில் கிட்டத்தட்ட  இரட்டிப்பு ஆகி விடும். ஆடு என்றால் ஒரு நபர் மட்டுமே குர்பானி தரவேண்டும் என்றும் சட்டம் இருப்பதாலும்... காளை மாடு எப்போதுமே அதற்குரிய அதிக விலையில் தொய்வு அடையாமல் உள்ளதாலும்... பால் தராத பசுவுக்கு வருஷத்தில் இந்த ஒரு நேரத்தில் மட்டுமே சந்தையில் கிராக்கி ஏறுகிறது.
அதாவது, முஸ்லிம்கள் பெரும்பாலானோர் ஆடுதான் குர்பானி தருவார்கள். அதிக வசதி உள்ளவர்கள் ஏழு பேர் சேர்ந்து  ஒட்டகம் பக்கம் குர்பானி கொடுப்பார்கள்.  அதுவே, காளை மாடு, பசு மாடு இவற்றில் ஏழு பேர் கூட்டு சேர்ந்து குர்பானி தரலாம் என்பதால்  குறைந்த வசதி உள்ளவர்கள்தான் மாடு பக்கம் போவார்கள்.
எனவே, வருஷத்தில் ஒருமுறை குர்பானி சந்தையில் பால் தராத பசு மற்ற நாளை விட சற்று அதிகமாக விலை போகும் என்பதால், பால் தராத பசுவை பக்ரீத் சீசன் வரை இழுத்துப்பிடித்து  கஷ்டப்பட்டு புறம்போக்கு நிலங்களில் மேய விட்டு அரவணைத்து வளர்க்கிறார்கள் ஏழை விவசாயிகள். பக்ரீத் சீசன்  வந்ததும் அவர்கள் முஸ்லிம்களிடம்தான் தேடி தேடி விற்பார்கள்.
அப்புறம், முஸ்லிம்களும்... ஒரே ஒருவர் குர்பானி தரும் ஆடு விலையே 8000... 10,000... எனும் போது... 'ஏழு பேர் சேர்த்து மாடு குர்பானி தரலாம்' என்ற சலுகை சட்டம் உள்ள... ஒட்டகம் காளை மாடு எல்லாம் அதிக விலை என்பதால்... பால் தராத பசுவை ஏழு பேர் சேர்ந்து குர்பானி தரலாம் என்பதால்...10,000 - 12,000 வரை அதிக விலை தந்து வாங்கி இந்த ஏழை விவசாயிகள் நஷ்டம் அடையாமல் காப்பாற்றுவார்கள். அதுவோ அவர்களுக்கு நல்லதொரு மூலதனம்! அதாவது... இரு தரப்புக்கும் இங்கே இலாபம்..! உலகெங்கும் இப்படித்தான் பால் தரா பசுவின் இறுதி கதை போகிறது.
இந்த நடைமுறை தடுக்கப்பட்டால்?
பசுவதைத் தடைச் சட்டம் என்ற பெயரில் இதை நாம் தடுத்தால் என்ன நடக்கும்? அந்த ஏழை விவசாயியின் பிழைப்பில் அநியாயமாக மண்ணைப் போடுகிறோம். அவருக்கே உணவுக்கு திண்டாட்டமாக இருக்கும்போது அந்த மாட்டுக்கு அவரால் உணவளிக்க முடியுமா? அவர் அதைப் பராமரிக்க முடியாத நிலையில் கட்டவிழ்த்து விட்டால் அடுத்தவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இரையாகிறார். வேறுவழியின்றி கட்டிப்போட்டால் அது பசியால் துடிதுடித்து படிப்படியாக இறக்கிறது. இதுதான் பசுபக்தியா? இவ்வாறு ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர் விபரீதங்களுக்கு நாம் காரணமாகிறோம். 
ஈவிரக்கமில்லா கும்பலிடம் நாடு 
ஒரு ஏழை பால்கார குடியானவனின் இடத்தில் தம்மை வைத்து  சிந்தித்தால் மட்டுமே  
அவனுடைய கையறுநிலை புரியவரும்.  ஆனால் எந்தவித மனிதாபிமானமோ  ஈவிரக்கமோ இல்லாத ஒரு கும்பலிடம் நாடு - அதுவும் ஒரு ஜனநாயக நாடு- சிக்கிக்கொண்டு தவியாய் தவிக்கிறது. 
பசுபக்தி என்ற பெயரில் பசுவதைத் தடைச் சட்டம் என்று அநீதியான சட்டத்தை நாட்டுமக்கள் மீது திணித்து விவசாயிகள் மாடுகளை உள்நாட்டு சந்தைகளில் விற்கவிடாமல் தடுக்கிறார்கள். அதேவேளையில் மறுபுறம் இவர்களின் பினாமிகளால் நடத்தப்படும் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள் இந்த பசுக்களையும் மாடுகளையும் மலிவு விலைக்கு வாங்கிக் கொண்டு  கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்கிறார்கள். 

பசுக்காவலர்கள் என்ற ஒரு கைக்கூலிப் படையினரை ஏவிவிட்டு அப்பாவிகளைக் கொன்றும் தாக்குதல் நடத்தியும் நாட்டு மக்களிடையே பயத்தையும் விரக்தியையும் விதைக்கிறார்கள். நல்லிணக்கத்தோடு வாழும் சமூகங்களிடையே வெறுப்பை விதைத்து அதன்மூலம் குழப்பங்கள் விளைவிக்கத் துடியாய் துடிக்கிறார்கள். 

இறைவனின் எச்சரிக்கை: 

இறை விசுவாசிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இவ்வுலக வாழ்க்கை ஒரு பரீட்சை போன்றது என்று நம்புவதால் வேதனைகளை இறைவனின் சோதனைகளின் பாகமாக எடுத்துக் கொள்கிறார்கள். மறுமையில் அவற்றுக்கான பரிசாக சொர்க்கம் வாய்க்க உள்ளது என்று நம்புகிறார்கள். 
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். 
 (திருக்குர்ஆன் 2:155 - 157)
ஆனால் அதேவேளையில்  யாரெல்லாம்  இறைவனின் பூமியில் அவனது ஏற்பாடுகளில் குழப்பத்தை விளைவித்தும் அப்பாவிகளைக் கொன்றும் துன்புறுத்தியும் வருகின்றார்களோ அவர்கள் இறைவனின் தண்டனைகளில் இருந்து தப்ப முடியாது என்பதையும் இறைவன் எச்சரிக்கிறான்:
எவர்கள் சத்தியத்தை மறுத்துக் கொண்டும், இறைவனின் பாதையை விட்டும் தடுத்துக்கொண்டும், இருந்தார்களோ அவர்களுக்கு - (பூமியில்) குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்ததற்காக - நாம் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்போம். (திருக்குர்ஆன் 16:88.

நிச்சயமாக, எவர்கள் விசுவாசிகளான ஆண்களையும், விசுவாசிகளான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், பாவமன்னிப்பு கோரி மீளவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.( திருக்குர்ஆன் 85:10) 

வியாழன், 22 ஜூன், 2017

சகோதரனின் மாமிசம் இலவசமா?


குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பல குழப்பங்களுக்கு வித்திடும் பாவங்களில் ஒன்று புறம் பேசுதல். இதுபோன்ற மனித மனம்சார்ந்த பாவங்களைத் தடுக்கவோ சமூகத்தில் பரவாமல் தடுக்கவோ என்ன செய்யலாம் என்று கேட்டால் நாத்திகர்களிடம் இதற்கு பதில் கிடைக்காது. காரணம் அவர்களுக்கு இறைநம்பிக்கையும் கிடையாது. மரணத்திற்குப்பின் நம் வினைகளுக்கு விசாரணை உண்டு என்ற நம்பிக்கையும் கிடையாது. இந்த அப்பட்டமான உண்மைகளை மறுப்பதனால் சமூக சீர்திருத்தம் என்பதை அவர்களால் வாயளவில் பேசத்தான் முடியுமே தவிர நடைமுறை சாத்தியமான எந்த தீர்வுகளையும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கவும் முடியாது. மேலும் இதுபோன்ற பாவங்களை சட்டம்போட்டும் தடுத்துவிட முடியாது. இதுபோன்ற பாவங்களை மனிதமனங்களை சீர்திருத்துவதன் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். திருக்குர்ஆனும் நபிமொழிகளும் பகுத்தறிவு பூர்வமான இறைநம்பிக்கையையும் மறுமை நம்பிக்கையையும் கற்பிப்பதால் இறையச்சம் என்ற பொறுப்புணர்வை மனித மனங்களில் விதைக்கின்றன. இறைவன் தன்னைக் கண்காணிக்கிறான் என்ற உணர்வு விதைக்கப்படுவதால் யாரும் காணாதபோதும் பாவங்களில் ஈடுபடுவதில் இருந்து அவை மனிதனைத் தடுக்கின்றன.

புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து இறைவனும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு சமாதியிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் நாம் அவசியம் கைவிட வேண்டும்.
புறம் பேசுதல் என்றால் என்ன?
“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்)  அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்” என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள்,  “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவதுதான் புறம்  என்றார்கள். “நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள்
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

புறம்பேசுதல் இறைவன் தடுத்த பாவமாகும்
இறைவன் கூறுகிறான்:-
= இறைநம்பிக்கையாளர்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்.இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
அதாவது புறம் பேசுதலை இறந்துவிட்ட ஒரு சகோதரனின் மாமிசத்தைப் புசிக்கும் கொடுமைக்கு ஒப்பாக்குகிறான் படைத்த இறைவன்!
புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும்(சமாதியிலும்) மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -
சமாதியில்  கிடைக்கும் தண்டனைகள்: -
நபி(ஸல்) அவர்கள் இரண்டு சமாதிகளைக் கடந்து சென்ற போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சமாதியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.

மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: -
1) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -
புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)
2) தங்களைத் தாங்களே கீறிக் கொள்வார்கள் : -
மிஃராஜின் (விண்ணேற்றத்தின் போது) நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார்என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்என்று விளக்கமளித்தார்கள்.அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.
(மிஃராஜ் நபிகளாருக்கு தன் வாழ்நாளிலேயே விண்ணுலகக் காட்சிகளைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்ட பயணம்.) 
பாவபரிகாரம் எவ்வாறு?
இறைவனும் அவனது தூதரும் தடுத்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும். கடந்த காலத்தில் இப்பாவத்தைச் செய்திருந்து அதன் விளைவுகளில் இருந்து மறுமையில் தப்பித்துக்கொள்ள யாரேனும் விரும்பினால் அவர் அதற்கான பரிகாரத்தைத் தேட வேண்டும். அதாவது ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். ஏனெனில் அவர்கள் மன்னிக்காதவரை இறைவன் அப்பாவத்தை மன்னிப்பதில்லை. பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி இறைவனிடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.
இறைவன் கூறுகிறான்:-
 = என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், இறைவனின் கருணையில்  அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக இறைவன் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 39:53)

= ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன்பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. (அல்-குர்ஆன் 39:53-54)

செவ்வாய், 20 ஜூன், 2017

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூலை 2017 இதழ்


இந்த இதழை கீழ்கண்ட இணைப்பிலும் நீங்கள் வாசிக்கலாம்:
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusMTY3eXlvY2s1OUk/view?usp=sharing

பொருளடக்கம்
சமூகத்தில் குழப்பங்களுக்கு வித்திடும் பெரும்பாவம் -2
பலவீனமான தங்குமிடம் -4
வணக்கசாலிக்கு நரகமா? -5
அற்ப ஜீவிகளும் அற்புதப் படைப்பும் -6
மனித மாமிசம் இலவசமா? -9
மக்கள் சேவை என்ற இறைவழிபாடு -11
இவற்றுக்கும் ரமலானுக்கும் என்ன தொடர்பு? -12
உறங்க முடியா இரவுகளில் ஒன்று! -14
துறவறம் இறைவனுக்கு ஏற்புடையதல்ல! -16
அவர்தான் அண்ணல் நபிகளார்! -17
உழைப்பதின் சிறப்பும் உழைப்போர் குணமும்  -19

மனிதனை நினைக்க கடவுளை மறக்கவேண்டுமா? -21
----------------------- 
இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர கீழ்கண்ட எண்ணுக்கு உங்கள் முகவரியை குறுஞ்செய்தியாக (SMS) அனுப்புங்கள்: 
9886001357

மனிதனை நினைக்க கடவுளை மறப்பதா?

Image result for equality
‘நாத்திக நண்பர்கள் ஆத்திகர்களைப் பார்த்து அடிக்கடி சொல்லும் வாசகம் ஒன்று உண்டு... “கடவுளை மற, மனிதனை நினை!” என்பதுதான் அது.

அன்றாடம் உண்பதற்கு உணவில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் வாடும்போது கோவில் உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் போடப்படுகின்றன. சிலைகளுக்கு பாலாபிஷேகமும் நெய்- அபிஷேகமும் நடக்கின்றன. திருமணத்திற்கு சிறு நகைக்குக் கூட வழியிலாத கோடிக் கணக்கில் ஏழைப் பெண்கள் தவிக்கும்போது சிலைகளும், கலசங்களும், தேர்களும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. சுற்றுமுள்ள ஏழைகளை சற்றும் கவனிக்காமல் செல்வந்தர்கள் இதற்காக வாரி வழங்குகின்றனர். இப்படிப்பட்ட கடவுளால் என்ன பயன்? என்பது அவர்களின் வாதம்.
தேவையுள்ள மனிதர்களுக்குச் செலவிடாமல் எந்தத் தேவையுமற்ற கடவுள்களுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படும் மனித நேயமற்ற காரியங்களைப் பார்க்கும் சிந்தனையாளர்கள் மதங்கள் அர்த்தமற்றவைஎன்று கருதுகின்றனர்.

இஸ்லாத்தின் நிலைப்பாடு
உண்மையில் இஸ்லாம் என்பது ஒரு மதமும் அல்ல. பலர் கருதுவது போல சில சடங்குகளின் தொகுப்பும் அல்ல. மாறாக அது ஒரு முழுமையான வாழ்வியல் நெறி. மனிதவாழ்வின் அனைத்து துறைகளையும் தழுவி நிற்கிறது. மேற்கூறப்பட்டவாறு கடவுளின் பெயரால் பொருளாதாரத்தை வீணடிக்கும் காரியங்களை அறவே இஸ்லாம் மறுக்கிறது. ஆனால் மனிதனுக்கு சேவை செய்ய கடவுளை மறக்கவேண்டும் என்ற வாதத்தை அறவே மறுக்கிறது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் மனிதனை நினை அவனை ஒருபோதும் மறக்காதே என்று நினைவூட்டிக்கொண்டிருப்பதே கடவுள்தான்! ஆம், இஸ்லாம் கற்பிக்கும் அனைத்து வழிபாடுகளும் மனித நலனையே மையம் கொண்டுள்ளன. ஐவேளைத் தொழுகைகள் ஒருபுறம் தனிமனித நல்லொழுக்கத்திற்கு வித்திடுகின்றன. மறுபுறம் இத்தொழுகைகளைக் கூட்டாக வரிசைகளில் அணிவகுத்து பள்ளிவாசல்களில் தொழும்போது அங்கு மனித சமத்துவமும் சகோதரத்துவமும் பேணப்படுகின்றன. சக மனிதனின் பசியை செல்வந்தர்களுக்கு உணர்த்துகிறது  ரமலான் மாதங்களில் கடைப்பிடிக்கப்படும் நோன்பு என்ற வழிபாடு. ஜகாத் என்ற கட்டாய தர்மம் ஏழைகளின் துயர்துடைக்கும் புரட்சியை நடத்துகின்றது.  சுயநலத்தால் மனிதன் சகமனிதனை மறந்து போகின்ற உலகில் சகமனித நலனுக்காக செய்யப்படும் அனைத்து சேவைகளையும் வழிபாடுகள் என்று கற்பிக்கிறது இஸ்லாம். மட்டுமல்ல மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக வழிபாட்டுத்தலங்களுக்கு காணிக்கை செலுத்தச் சொல்லவில்லை இஸ்லாம். மாறாக அப்படிப்பட்ட காணிக்கைகளையும் நேர்த்திக்கடன்களையும்  ஏழைகளுக்காக செலவிடக் கற்பிக்கிறது அது.
உதட்டளவு மனித நேயம் அல்ல!
நாத்திகர்களும் நாத்திக இயக்கங்களும் உதட்டளவில் ‘மனிதனை நினை’ வாசகத்தை மொழியும்போது இஸ்லாம் மனிதனை நினைத்தால் மட்டும் போதாது, அவனை தன் சகோதரனாக, சமமானவனாக பாவிக்க வேண்டும் என்றும் இஸ்லாத்தைப் பின்பற்றுவோருக்குக் கட்டளையிடுகிறது. அவனது உரிமைகளைப் பேணவேண்டும் என்றும் அவற்றை மீறுதல் தண்டனைக்குரிய குற்றம் என்றும் எச்சரிக்கிறது. உலகெங்கும் மனித உரிமைகளை மீட்க உந்துசக்தியாக திகழ்கிறது இஸ்லாம்.
திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான் :
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்!  அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான்.அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும்(அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அதாவது அனைத்து மனிதகுலமும் ஆதித் தந்தை மற்றும் ஆதித் தாயின் சந்ததிகளே, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் நம் அனைவருக்கும் ஒரே இறைவனே என்பதையும் அடிப்படையாக வலியுறுத்தி  உலகளாவிய சகோதரத்தையும் சமத்துவத்தையும் நிறுவுகிறது திருக்குர்ஆன். தொடர்ந்து நாம் அனைவரும் அந்த இறைவனின் பரிபாலனத்திலும் கண்காணிப்பிலும் உள்ளோம் என்பதை உணர்த்தி நம் செயல்களுக்காக இறைவனால் மறுமை வாழ்வில் விசாரிக்கப்பட உள்ளோம் என்றும் எச்சரிக்கின்றது இந்த இறைவசனம். அதாவது இறைகட்டளைகளைப் பேணி வாழ்வோருக்கு சொர்க்கமும் பேணாதவர்களுக்கு நரகமும் வாய்க்க உள்ளன என்ற உண்மையையும் உள்ளடக்கி நிற்கிறது இவ்வசனம்.
சமூக சீர்திருத்தங்கள்
எங்கெல்லாம் இஸ்லாம் என்ற இந்த வாழ்வியல் கொள்கை திருக்குர்ஆனும் அவரது போதனைகளும் எங்கெல்லாம் சென்றடைகிறதோ அந்த இடங்களிலெல்லாம்
=
மனித உரிமை மீட்பு, 
=
இனவெறி ஒழிப்பு, 
=
ஜாதி ஒழிப்பு,
=
நிறவெறி ஒழிப்பு,
= சுயமரியாதை மீட்பு, 
=
மனித சமத்துவம் நிலைநாட்டல், 
=
மனித சகோதரத்துவம் நிலைநாட்டல்,
=
பெண்ணுரிமைகள் மீட்பு, 
=
பெண்சிசுக்கொலை ஒழிப்பு, 
=
வரதட்சணை ஒழிப்பு,
=
பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு 
=
விபச்சார ஒழிப்பு
=
குடும்ப அமைப்பின் பாதுகாப்பு,
=
குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம் 
=
தனிநபர் நல்லொழுக்கம்,
=
மது, போதை தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு 
=
வட்டி ஒழிப்பு 
=
வறுமை ஒழிப்பு, 
=
வழிபாட்டு உரிமை மீட்பு 
=
இடைத்தரகர் ஒழிப்பு 
=
மூடநம்பிக்கை ஒழிப்பு 
=
ஆன்மீகத்தின் பெயரால் ஆதிக்கம் ஒழிப்பு,
=
ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல் ஒழிப்பு,

போன்ற பற்பல சமூகப் புரட்சிகளை உண்டாக்காமல் இருப்பதில்லை. மனித மனங்களை சீர்திருத்தி அவர்களின் கரங்களைக் கொண்டே நடத்தப்பட்டு வரும் புரட்சிகள் இவை. மற்ற சித்தாந்தங்களைப் போல் மக்களின் மீது ஆதிக்கம் பெற்று அரசாட்சியைக் கைப்பற்றி நடத்தப்படும் சமூக மாற்றங்களல்ல இவை. 
நாத்திகர்களின் நிலைப்பாடு

நாத்திகர்கள் கூறுவதுபோல கடவுளை மறந்தால் மேற்கண்ட சமூகப் புரட்சிக்கள் உலகில் நடக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவு. மேலும் கடவுளை மறப்பதோடு மனிதனையும் மறக்கடிக்கச்  செய்கிறது நாத்திகம் என்பதே உண்மை. அவர்களிடம் இனம், நிறம், மொழி, இடம் என இயல்பாகவே பிரிந்து கிடக்கும் மக்களை ஒருங்கிணைக்க வலுவான கொள்கை எதுவும் கிடையாது. சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை வரையறுக்க அளவுகோல் (criterion) எதுவும் கிடையாது. கடவுளையும் மறுமை வாழ்வையும் மறுப்பதால் அவர்களுக்கு கொள்கை உறுதிப்பாடு உண்டாக வாய்ப்பே இல்லை. எந்த சமூகத் தீமைகளுக்கும் எதிராகப் போராட நிலையான ஒரு இயக்கத்தை உருவாக்கவோ நடைமுறை சாத்தியமான திட்டங்கள் வகுக்கவோ முடிவதில்லை. உதாரணமாக பெண் சிசுக்கொலை, தீண்டாமை, தனிநபர் ஒழுக்க சீர்கேடு போன்றவற்றை ஒழிப்பதில் அல்லது சீர்திருத்துவதில் நாத்திகக் கொள்கைவாதிகளின் பங்கு என்ன என்பதை ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.

வெள்ளி, 16 ஜூன், 2017

பலவீனமான தங்குமிடம்இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அருளிய வேதவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன். அந்த வேதத்தில் இறைவன் அல்லாதவற்றை வணங்கும் மக்களின் அறியாமை குறித்து குறிப்பிடும்போது சிலந்தியை தொடர்பு படுத்தி பின்வருமாறு கூறுகிறான்: .

எவர்கள் இறைவனை விட்டுவிட்டு மற்ற பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்களின் உவமை தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளும் சிலந்திப்பூச்சியாகும். திண்ணமாக, வீடுகளிலேயே மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடாகும். அந்தோ! இவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! (திருக்குர்ஆன் 29:41)

சிலந்தி தன் வலையில் சிக்கும் சிறு புழு பூச்சிகளை அதைக் கொண்டே கட்டிவைத்து அவற்றைக் கொல்கிறது. அதுவே அதன் நீண்டநாள் உணவாக சேமிக்கப்படுகிறது. சிலந்தி தான் விரும்பியபோது உணவுண்டு பசியாறவும் செய்கிறது. சிலந்தியைப் பொறுத்தவரையில் தான் பின்னிய வலைவீடு சக்திவாய்ந்த ஒன்றாக இருந்தாலும் அது எவ்வளவு நிலையற்ற பலவீனமான ஒன்று என்பதை நாமறிவோம். நம் கைவிரல் கொண்டோ சற்று பலமாக காற்றை ஊதுவதைக் கொண்டோ எளிதில் சிலந்தியின் ‘கோட்டையைக்’ கலைத்து விடலாம். அவ்வாறு கலைக்கப்ப்படும்போது அதன் சேமிப்பும் காணாமல் போய்விடுகிறது. தங்குமிடம் இல்லாமல் தவிக்கும் நிலையும் உண்டாகிறது. ஆபத்தில் சிலந்தி அழிந்துபோகவும் வாய்ப்புண்டாகிறது.

படைத்த இறைவனை விடுத்து அவனது படைப்பினங்களையும் மனிதர்களையும் இன்ன பிற பொருட்களையும் அவற்றுக்கு தெய்வ சக்தி உண்டு என்றும் அவை மனிதன் சந்திக்கக்கூடிய ஆபத்துகளில் இருந்து தங்களைக் காப்பாற்றும் என்று நம்பி அவற்றை வணங்கவும் காணிக்கைகள் செலுத்தவும் செய்யும் மனிதர்களின் நிலையும் அதுவே என்று இறைவன் மேற்படி வசனம் மூலம் தெரிவிக்கிறான்.
உண்மையில் படைத்த இறைவனை வணங்கி அவனது எவல்-விலக்கல்களை பேணி வாழும் நன்மக்களுக்கு இவ்வுலகில் அமைதியும் இறைவனின் பாதுகாப்பும் கிடைக்கிறது. அவர்கள் செய்யும் நல்லறங்கள் ஒவ்வொன்றும் அழியாத செல்வங்களாக இறைவன்பால் சேமிக்கப்படுகின்றன. இறுதியில் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டு மறுமை வாழ்க்கைக்கு செல்லும்போது அந்த சேமிப்புகள் புண்ணியங்களாக வருகின்றன. அதன் பலனாக மறுமையில் முடிவுறாத இன்பங்கள் நிறைந்த நிரந்தரமான  வாழ்விடமும் – அதாவது சொர்க்கமும் - கிடைக்கிறது.
அதேவேளையில் இறைவன் அல்லாதவற்றை வணங்கி அவை தம்மைப் பாதுகாக்கும் என்று நம்பி வாழ்வோரின் கட்டமைப்பு தற்காலிக இன்பங்களை மட்டுமே தரும். அது மேற்படி இறைவசனம் கூறும் சிலந்தியின் வீட்டைப்போல மிக எளிதில் அழியக்கூடியதாகும். தவறான இறைநம்பிக்கை கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் செய்த நல்லறங்கள் சிலந்தி வீட்டில் சேமிப்பைப் போல காணாமல் போய்விடுகின்றன. படைத்த இறைவனுக்கு செலுத்த வேண்டிய வணக்கத்தை நன்றியை அவன் அல்லாதவற்றுக்கு செலுத்தியதான் இறைவனின் கோபத்திற்கும் தண்டனைக்கும் அவர்கள் ஆளாகிறார்கள். அவர்கள் நிரந்தர வேதனைகள் கொண்ட நரகத்திலும் நுழைகிறார்கள்.


= “இந்த உவமைகளை மக்களுக்காகக் கூறுகிறோம். அறிவுடையோரையன்றி வேறு எவரும் இதனை புரிந்து கொள்ள மாட்டார்கள்” (திருக்குர்ஆன் 29:43) 

புதன், 14 ஜூன், 2017

சலீம் – சசி உரையாடல்உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக........
தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தான் சசிதரன்.
ஆமாம் எல்லாம் உனக்காகத்தான்.. ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நீ இருப்பது எதற்காக சசி?” என்று கேட்டவாறே ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்தான் சலீம்.
ஏதோ பழைய பாடல்...... ரொம்பப்பிடிக்கும்..  பாடிக்கொண்டிருந்தேன்.....
ஆனால் அர்த்தமுள்ள பாடல். என் கேள்வியும் அர்த்தமுள்ளதுதான், எல்லாமே உனக்காகத்தான் என்றால் நீ எதற்காக? ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? அதைத்தான் நான் கேட்கிறேன்....
...............
"ஆம், சசி இன்று நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பூமியின் அமைப்பையும் அதனைச் சுற்றி உள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்களின் கட்டுக்கோப்பான அமைப்பையும் பார். உதாரணமாக, இப்பூமி தனது அச்சில் சுற்றிக் கொண்டு சூரியனில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஒரு வட்ட வடிவப் பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவாய்.  இந்த தூரம் சற்று குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா?
ஆமாம் சலீம், நாம் எல்லாம் தாங்க முடியாத வெப்பத்தினால் சுட்டுப் பொசுக்கப்பட்டு விடுவோம்.
தூரம் சற்று கூடினால் என்ன ஆகும்?
தெரிந்த விஷயம் தானே ..... நாம் தாங்க முடியாத குளிரில் உறைந்துபோய் மடிந்துவிடுவோம்!
அதேபோல் பூமியின் சுழற்சி வேகம் திடீரென்று கூடினால்....?
நிலநடுக்கமும் சுனாமியும்தான்!... அப்படி ஒன்று நடந்தால் பூமியின் மேல் ஒன்றும் இருக்காது, எல்லாம் தரைமட்டமாகி விடும்.
அதேபோல் இப்பூமியைப் பொதிந்திருக்கும் காற்றுமண்டலத்தின் அழுத்தத்தை எடுத்துக் கொள்...... இதன் அளவு சற்று கூடவோ குறையவோ செய்தால் என்ன ஆகும்?
தாங்க முடியாத புயல்காற்றினாலும் அலைக்கழிக்கப்படலாம், மனிதன் சுவாசிக்க காற்று இல்லாமையாலும் அலைக்கழிக்கப்படலாம். நீ சொல்ல வருவது புரிகிறது சலீம், ஆக மொத்தம் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி வைக்காவிட்டால் மனித வாழ்வே இங்கு சாத்தியமில்லைதான்!
இவை மட்டுமல்ல சசி , இவற்றைப்போல் எத்தனையோ அளவைகளை சமநிலையில் நிலைநிறுத்தி வைத்திருப்பதைப் பார்த்தால் மனித வாழ்வு என்பது சர்க்கஸில் கயிற்றில் நடப்பது போல் உள்ளது. இந்த சமநிலைகளில் எங்காவது ஒரு பிசகு நேர்ந்தாலும் மனித வாழ்க்கை அதோகதிதான்!
உண்மைதான்
மேலும் உனக்குள்ளே நடக்கும் எண்ணற்ற அதிசயங்களைப் பார். உதாரணமாக நீ உண்ணும் உணவு எவ்வளவு எளிதாக சக்தியாகவும், இரத்தமாகவும், வியர்வையாகவும் மாறுகிறது? உன்னை ஆரோக்கியத்தோடு வாழவைக்க எவ்வளவு விஷயங்கள் சமநிலையில் நிறுத்தப் படுகிறது தெரியுமா உனக்கு?
நான் அதைப் பற்றி எல்லாம் யோசித்ததில்லை சலீம்
ஆச்சரியம்தான், நீ பிறந்தது முதல் உனக்குள்ளே அன்றாடம் நடக்கக்கூடிய அற்புதங்களைப் பற்றி யோசிக்காமல் இவ்வளவு வருடங்களைக் கடத்தி வந்திருக்கிறாய்."
நான் மட்டுமல்ல சலீம், பலரும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஏதாவது நோய் வரும்போதுதான் நம் உடலின் அருமையை உணர்கிறோம்.
ஆமாம் சசி, டாக்டரிடம் போனால் அவர் நாடி, இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் என பலதையும் பரீட்சிக்கிறார். சர்க்கரை, கொலஸ்ட்ரால் போன்றவற்றை பரிசோதிக்க வைக்கிறார், ஸ்கேனிங், எண்டோஸ்கோபி மூலம் உடலுக்குள்ளே உள்ளவற்றை ஆராய்கிறார். எல்லாம் நார்மல், நார்மல் என்று வரும். ஏதாவது ஒன்று ஒரு குறிப்பிட்ட ரேஞ்சில் இருந்து கூடினாலோ அல்லது குறைந்துவிட்டாலோ அதை வைத்து இன்ன நோய் என்று கண்டுப்பிடிக்கிறார். இங்கு யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் டாக்டர் பரிசோதனைக்கு உட்படுத்திய விஷயங்களும் உட்படுத்தாத எண்ணற்ற விஷயங்களும் சமநிலையில் நிறுத்தப் படுவதால்தான் நீ இன்று உயிரோடு உள்ளாய், என்பதுதான்!
உண்மைதான் சலீம், கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம் இது. நீ சொல்ல வருவது புரிகிறது. இந்த உலகம் இயங்குவதும் எனக்காகத்தான் என் உடல் இயங்குவதும் எனக்காகத்தான், அப்படித்தானே?
அத்துடன் முடியவில்லை. அதற்குமேல்தான் நீ சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளாய்.
ஒரு விஷயம் எனக்குப் புரிய வருகிறது. அதாவது நம்மை மீறிய ஒரு அபாரமான சக்தி ஒன்று இவற்றையெல்லாம் சமநிலையில் இயக்கி வருகிறது. அவனைத்தான்  கடவுள் என்கிறோம், இல்லையா சலீம்?
நிச்சயமாக, மிகச் சரியாகச் சொன்னாய் சசி. அவன் உன் மீது எவ்வளவு அக்கறை கொண்டவன் எனபதை யோசித்துப் பார்த்திருக்கிறாயா?
என் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் என் பெற்றோர்கள் என்றுதான் நான் அறிவேன். அதிலும் குறிப்பாக என் தாய் என் மீது உயிரையே வைத்துள்ளாள்
சரி சசி, உன் தாய் உன்னை என்று முதல் கவனிக்கத் தொடங்கினார்? சொல்
நான் பிறந்த நாள் முதல்.
அதற்கு முன் யார் உன்னை கவனித்துக் கொண்டிருந்தது? நீ உன் தாய் வயிற்றினுள்  பத்து மாதங்களாக குடியிருந்தபோது எந்தக் கவலைகளும் அறியாமலே இருந்தாய். உனக்கு அவ்வளவு பக்குவமாக மெத்தை அமைத்து, உணவூட்டி, சீராட்டி கண்ணும் கருத்துமாக வளர்த்தது யார்?
“ஒப்புக்கொள்கிறேன் அது கடவுள்தான்
நீ பிறந்து வந்தபோது அழுவதைத் தவிர உனக்கு வேறு எதையுமே சுயமாகச் செய்யத் தெரியாது. அப்படிப்பட்ட பலவீனமான நிலையில் இருந்த உன்னை வரவேற்று உபசரித்து கவனித்துக் கொள்வதற்கு தாயையும் தந்தையையும் ஏற்பாடு செய்தவன் யார்? தாய்ப்பாலைச் சுரக்க வைத்தவன் யார்?
உண்மைதான் சலீம், கடவுள் தான்.
உன்  தாயின் உள்ளத்தில் பாசம் என்பது மட்டும் கடவுள் விதைத்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் தெரியுமா?
சரிதான் சலீம், நான் பத்து மாதம் தாய் வயிற்றினுள் இருந்து அவளுக்குக் கொடுத்த சித்திரவதைகளில் இருந்து விடுதலை என்று சொல்லி என்னைக் குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு போயிருப்பாள் என் தாய்!
உனது தாயின் உள்ளத்தில் தாய்ப்பாசம் எனபதை ஏன் கடவுள் விதைத்தான் தெரியுமா? அவன் உன்னை நேசிக்கிறான் என்பதால்தான்.
கடவுளைப் பற்றி சொல்லும்போது அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  என்று  நீ அடிக்கடி சொல்வாயே. அது இப்போதுதான் புரிகிறது சலீம்.
நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள், இறைவன் தனது கருணையை நூறு பாகங்களாகப் பிரித்தான். அதில் ஒரு பாகத்தை மட்டுமே இப்பூமியின் உள்ளோர் மீது விதைத்தான். இங்கு நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பதும் அதனால்தான். ஒரு தாய்ப் பறவை தன் குஞ்சின்மீது காட்டும் பாசமும் அதன் காரணமாகத்தான், எந்த அளவுக்கேன்றால், தன் குஞ்சின்மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக தன் காலைத் தூக்கிக் கொள்கிறது தாய்ப் பறவை.என்று.
"அப்படியா சலீம்?"
“ஆமாம் சசி,  யோசித்துப்பார்...  மீதம் உள்ள 99 பாகங்களை அவன் வசமே வைத்துள்ளான் என்தாறுனே அர்த்தம்? அப்படியென்றால் அவன் நம் மீது காட்டும் அன்பும் பாசமும் கற்பனையால் கூட அளந்து பார்க்க முடியுமா? அப்படிப்பட்டவன் தான் நம் இறைவன்!"
 "கேட்ககேட்க மிக ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது சலீம்.
ஆம் சசி, இதை உணர்ந்து வாழ்வதில்தான் வாழ்கையின் வெற்றியே உள்ளது
சரி சலீம் .அந்தக் கருணையுள்ள இறைவன் எதற்காக நம்மைப் படைத்துள்ளான்?
மீணடும் நாம் பேச்சைத் தொடர்ந்தால் நேரமாகிவிடும். நாளை மீணடும் தொடர்வோம் இன்ஷாஅல்லாஹ் அதாவது இறைவன் நாடினால்......, அது வரை ஒன்று செய் ரவி, உன் கேள்விக்கான பதிலைப் பற்றி நீயும் யோசி. அதற்குத்தானே இறைவன் பகுத்தறிவைத் தந்திருக்கிறான்

(இன்ஷாஅல்லாஹ் தொடரும்)
================