இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 2 ஜூலை, 2022

#பக்ரீத்_பண்டிகையும்_ஜீவகாருண்யமே!

 #பக்ரீத்_பண்டிகையும்_ஜீவகாருண்யமே!

இரவல் தந்தவன் கேட்கின்றான்..
அனைத்து மனித குலமும் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியில் இருந்து உருவானதே என்பதை நிறுவி மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உலகில் நிலைநாட்டும் மார்க்கம் இஸ்லாம். நமது மனித குலத்தை நேர்வழி நடத்த அனுப்பப்பட்ட அனைத்து இறைத் தூதர்களையும் நாம் ஏற்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் இருந்து நன்மையான வாழ்வியல் பாடங்கள் கிடைக்கப் பெறின் அவற்றை தயக்கமின்றி பின்பற்றவும் வலியுறுத்துகிறது இறைமார்க்கம் இஸ்லாம்.

அந்த வகையில் சுமார் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இறைத் தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் - அவர்மீது இறைவனின் சாந்தி உண்டாகுக) அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து பாடம் பெறும் நாளே பக்ரீத் எனும் தியாகத்திருநாள்!

அவரிடம் இறைவன் கேட்டது ஆச்சரியமான ஒன்று!
ஆம், அவர் தள்ளாத வயதில் அற்புதமாகப் பெற்றெடுத்த மகனையல்லவா இறைவன் தனக்காக தியாகம் செய்யுமாறு கேட்டான்! அதுவும் அந்த ஆருயிர் மகனை அறுத்துப் பலியிடுமாறு இறைவன் பணித்தான்! அதையும் எவ்விதத் தயக்கமும் இன்றி நிறைவேற்றத் துணிந்தார் இப்ராஹீம்(அலை) அவர்கள். உடனேயே இறைவன் அவரது பரீட்சையில் அவர் வெற்றிபெற்று விட்டதை அறிவித்து அதற்குப் பகரமாக இரு ஆடுகளை அறுத்துப் பலியிடுமாறு பணித்தான்.

இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் இவ்வாறு கூறப்படுகிறது:
= என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார்.

என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். இதுதான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது இறைசாந்தி உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். (திருக்குர்ஆன் 37 : 100-111)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

அந்த தியாகச் செம்மலின் இச்செயலை உலகுள்ளவரை மனிதகுலம் என்றும் நினைவு கூர வேண்டும் அதிலிருந்து இறைவனுக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கும் பாடத்தை அவர்கள் பெறவேண்டும் என்பதற்காகவே வருடத்தில் ஒருமுறை அந்நாளைத் தியாகத் திருநாளாகக் கொண்டாடும்படி பணித்தான்.

#தியாகத்தின்_ஆண்டுவிழா_பக்ரீத்:
இத்தியாகத்தின் ஆண்டுவிழாவைக் கொண்டாடும் முகமாக வசதியுள்ள அனைத்து இறைவிசுவாசிகளும் தங்களால் இயன்ற ஒரு ஆட்டையோ மாட்டையோ ஒட்டகத்தையோ பலிகொடுத்து அதன் இறைச்சியை உறவினர்களோடும் ஏழைகளோடும் பங்கிட்டு உண்ணுமாறு பணித்துள்ளான் இறைவன். மாட்டை அல்லது ஒட்டகத்தை ஏழு பேர் சேர்ந்து கூட்டாகவும் பலி கொடுக்கலாம்.

இன்று செல்வ வளமுள்ள நாடுகளில் இவ்வாறு பலி கொடுக்கப்பட்ட கால்நடைகளின் இறைச்சி பதப்படுத்தப் பட்டு ஏழை நாடுகளில் உள்ள மக்களிடையே விநியோகம் செய்ய அனுப்பி வைக்கப்படுகிறது. ஏழைகளின் உணவுத் தேவை நிறைவேறுதல், சகோதர உணர்வு பகிர்தல் உறவினர்களோடு உறவைப் புதுப்பித்தல், நாட்டில் விவசாயிகள் நலன் பாதுகாக்கப் படுதல் என்பன போன்ற பல நன்மைகளை இந்நாள் தாங்கி வந்தாலும் இறைவன் முக்கியமாக பார்ப்பது நம் இறையச்ச உணர்வைத்தான்.
இதோ தனது திருமறையில் கூறுகிறான்:
= அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 22 : 37)

ஆக, இந்த தற்காலிக உலகம் என்ற பரீட்சைக் கூடத்தில் நம்மைப் பரீட்சிப்பதற்காக நம்மிடம் அமானிதமாகத் தரப்பட்டுள்ளவையே நமது உயிரும், உடலும், உறவுகளும், உடமைகளும். இவற்றின் உண்மை உரிமையாளன் இறைவன் மட்டுமே என்ற உண்மையை நம்மில் ஆழமாகப் பதியவைக்கிறது தியாகத் திருநாள்!

மேலும் இப்ராஹீம்(அலை) அவர்கள் தனது ஆருயிர் மகனை இறைக் கட்டளைக்காக பலி கொடுக்கத் துணிந்தை நினைவூட்டி நாம் குறைந்த பட்சம் நம் தேவை போக மேல்மிச்சமாக நம்மிடம் முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை இறைவன் கற்பிக்கும் தான தர்மங்களுக்காக அர்பணிக்கவும் தூண்டுகிறது இந்நாள்!

உயிர்பலி பற்றிய ஐயங்களும் தெளிவும்:
#உணவுக்காக_உயிர்களைக்_கொல்வது_பாவமா?
கீழ்கண்ட உண்மைகளை கருத்தில் கொண்டால் இதுபற்றிய நமது ஐயம் விலகக் கூடும்:

1. உயிரினம் இன்றி உணவு இல்லை: உலகில் வாழும் எந்த ஒரு உயிரினத்துக்கும், உணவு என்பது பொதுவாகவே மற்றொரு உயிரினம்தான். நாம் அன்றாடம் உட்கொள்ளும் தாவர உணவு அல்லது குடிநீரில் உள்ளடங்கியுள்ள பாக்டீரியாக்கள் உட்பட அனைத்தும் உயிரினங்களே என்பதும் அனைத்துக்கும் உணர்வுகள் உள்ளன என்பதும் அறிவியல் உறுதிப்படுத்தும் உண்மைகள்!

2. #உணவுச்சங்கிலி: பொதுவாகவே பலமான உயிரினங்கள் பலவீனமான உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. புழுபூச்சிகள் அவற்றைவிட சிறிய உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. புழு பூச்சிகளைத் தவளைகள் உண்கின்றன. தவளை பாம்புகளுக்கு உணவாகிறது. பாம்புகளை கழுகுகள் பதம் பார்க்கின்றன. கழுகுகள் இறந்தால் அவற்றின் உடல்கள் நுண்கிருமிகளுக்கு உணவாகின்றன. இப்பூமியை உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீர்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவு சங்கிலிதான். இந்த உணவு சுழற்சியில் ஏதாவது ஒன்று நின்று போனாலே உலகம் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் கோடிக்கணக்கில் ஒரு நாளில் மனிதனால் உணவுக்காக வெட்டப்படுகின்றன. மனிதன் இவற்றை சாப்பிடாமல் இருந்தால் இந்த இனங்கள் அதிகம் பெருகி சுற்று சூழலுக்கு மிகக் கேடாக முடியும்.

உதாரணமாக, காடுகளில் முயல், மான், வரிக் குதிரை போன்ற மிருகங்களை சிங்கம் புலி போன்றவை அடித்து சாப்பிடுவதால்தான் காட்டின் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. இல்லை என்றால் இலை தழைகளை சாப்பிடும் இந்த மிருகங்கள் பெருகி முழு காட்டையும் சாப்பிட்டே அழித்து விடும். இலைதழைகளும் மரங்களும் அழிந்தால் மழை பெய்வது நிற்கும். தொடர்ந்து வறட்சியும் பஞ்சமும் என பூமி வாழ்க்கை ஸ்தம்பித்து விடும்.

3.படைத்தவன் தீர்மானிப்பதே பாவமும் புண்ணியமும்:
#பாவம்_எது_புண்ணியம்_எது என்பதைப் பிரித்தறிய அனைத்து மனிதர்களுக்கும் படைப்பினங்களுக்கும் பொதுவான ஒரு அளவுகோல் நமக்குத் தேவை. மனிதனின் குறுகிய அறிவு கொண்டோ பெரும்பான்மை மக்களின் வாக்கெடுப்பு மூலமாகவோ முன்னோர்களின் பழக்கவழக்கங்களின் அடிப்படையிலோ அந்த அளவுகோலை நிர்ணயிக்க முடியாது. ஆனால் இவ்வுலகின் உரிமையாளனும் அனைத்து படைப்பினங்களையும் அதிபக்குவமாக அறிந்தவனும் முக்காலத்தையும் உணரக்கூடியவனும் ஆகிய அந்த இறைவனுக்கு மட்டுமே அந்த அளவுகோலைத் தர முடியும். மேலும் நாளை இறுதித் தீர்ப்புநாளின்போது நம் பாவ - புண்ணியங்களை விசாரித்து அதன் அடிப்படையில் நமக்கு சொர்க்கத்தையோ நரகத்தையோ வழங்க இருப்பவனும் அவனே. எனவே அவன் எதைச் செய் என்று ஏவுகிறானோ அதுவே புண்ணியம் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பதை நாம் அறியவேண்டும்.

4. உணவுக்காக உயிர்களைக் கொல்வது இறைவன் பார்வையில் பாவமல்ல:
மனிதர்களைப் பொறுத்தவரை அவர்கள் எதை உண்ணவேண்டும் உண்ணக்கூடாது என்பதை அவர்களைப் படைத்த இறைவன் தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் அறிவித்து வந்துள்ளான்.
= 'கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கதகதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.' (திருக்குர்ஆன் 16:5)
= 'நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.' * (திருக்குர்ஆன் 23:21)
உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை இறைவன் அனுமதித்து உள்ளான் என்பதை திருக்குர்ஆன் மூலம் மட்டுமல்ல முந்தைய வேதங்கள் மூலமும் அறிகிறோம்.
# நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
(ஆதியாகமம் 9 அதிகாரம்)

# மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.’

இந்த அனுமதியின் பின்னால் உள்ள உண்மைகளையும் நுணுக்கங்களையும் திட்டங்களையும் அவன் மட்டுமே முழுமையாக அறிவான். அவனது திட்டங்களுக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை பரிந்துரைக்கும் நிலையில் நாம் இல்லை என்பது உறுதி.

5. #இரக்க_உணர்வுக்கும்_நற்கூலி_உண்டு:
இறைவனின் பார்வையில் இது பாவமல்ல என்பதை அறிகிறோம். இருந்தாலும் உயிரினங்கள் அறுபடும்போதும் துடிக்கும்போதும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லையே! ஆம், இறைவன் இதை வாழ்க்கை என்ற பரீட்சையில் ஒரு சோதனையாக அமைத்துள்ளான். அப்போது ஏற்படும் நம் உள்ளத்தில் ஏற்படும் இரக்க உணர்வுக்கும் நமக்கு கூலி வழங்கப் படுகிறது என்கிறார்கள் நபிகளார். அந்த இரக்க உணர்வை நம் உள்ளத்தில் விதைத்த அந்தக் கருனையாளனே உணவுக்காக கால்நடைகளைக் கொல்ல அனுமதிக்கவும் செய்துள்ளான், அதை பலி என்ற முறையில் நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகவும் ஆக்கியுள்ளான்.

6. #விவசாயிகளுக்கு_மறுவாழ்வு_தரும்_பக்ரீத்:
பால்தரும் பசுவும் நிலத்தை உழும் மாடும் வயதாகி விட்டால் அவற்றை விற்று இளம் பசுவையோ மாட்டையோ வாங்கினால்தான் விவசாயிகள் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை பெறமுடியும். வயதான மாட்டை அல்லது பசுவை இறைச்சிக் கடைக் காரர்கள்தான் உரிய விலை கொடுத்து வாங்குவார்கள். குறிப்பாக பக்ரீத் பண்டிகை காலத்தில் இவை அதிகமாக விற்றுப் போகும். உண்மையில் இது அதற்கான சீசன். அந்த வகையில் விவசாயிகளைப் பொறுத்த வரையில் இளம் பசு அல்லது மாட்டைக் கொண்டு தங்கள் தொழிலைப் புதுப்பித்துக் கொள்ள பக்ரீத் உதவுகிறது.

7. #கொல்லாமை_விளைவிக்கும்_குழப்பம் !
மேற்படி உதாரணத்தில் உயிர்வதை பாவம் என்று சொல்லி பசுவை அல்லது மாட்டை விற்பதை தடை செய்தால் விவசாயியின் தொழில் தடைபடும். வயதான உதவாத மாட்டை அவிழ்த்துவிட்டால் ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவார். தீனி கொடுக்காமல் கட்டிவைத்து பட்டினி போட்டால் பசிக்கொடுமையால் அது அணுவணுவாக சாகும்.
அதனால் உண்டாகும் விளைவுகளுக்கு கண்டிப்பாக இறுதித்தீர்ப்பு நாளன்று குற்றம் பிடிக்கப்படுவோம்.
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

= நீங்கள் ஒரு விஷயத்தை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு விஷயத்தை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) இறைவன் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:216)
----------------
#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
#இஸ்லாம்_என்றால்_என்ன?
==================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திங்கள், 27 ஜூன், 2022

திருக்குர்ஆன் நற்செய்திமலர் - ஜூலை 2022 இதழ்


திருக்குர்ஆன் நற்செய்திமலர் – ஜூலை 2022 - மாத இதழ்

பொருளடக்கம்:
இளமையை எவ்வாறு கழித்தாய்? -2
இறையச்சம் இல்லா இளைஞர்களின் கதி? -4
இளைஞர் சீர்திருத்தம் எவ்வாறு?-6
இளம் மனங்களில் இறையச்சம் விதைப்போம்-8 8
இறைவனைக் கற்பித்தலே சீர்திருத்தத்தின் முதல்படி -9
ஏனிங்கு வாழ்கிறோம் என்றறிவது அவசியம்!-1 2 12
தனிமையிலே  இனிமை  காணும்  நேரமா?-15
பாவம்  செய்தாயிற்று.. இனி  என்ன  நடக்கும்? -1 17
பெரியார்தாசனைத் திசை மாற்றிய கேள்வி! 18
மனம்போன போக்கில் மனிதன் போவதில் தவறுண்டா? - 19
நாத்திகம் அறியாமையும் வழிகேடுமே! -22
நாத்திகத்தால்  சமூகத்திற்கு  ஏதேனும்  பயனுண்டா?-23
இறை தண்டனைக்குள்ளாக்கும் ஓரினச்சேர்க்கை – 24

புதன், 15 ஜூன், 2022

நபிகளாரைப் பரிகசித்தோர் நிலை- அன்றும் இன்றும்!

அன்று மக்காவில் பரிகசித்தவர்கள் நிலை: 

இஸ்லாம் என்பது ஒரு இறைதந்த வாழ்வியல் கொள்கை. அண்ணல் நபியவர்கள் இஸ்லாத்தைத் தான் பிறந்த மக்கா மண்ணில் மக்களிடையே போதித்த போது சத்தியத்தைப் புரிந்து கொண்டவர்கள் இந்த உயர்ந்த கொள்கையில்  தங்களை இணைத்துக் கொண்டார்கள். முழுமூச்சாக அண்ணலாரோடு இணைந்து பாடுபட்டார்கள். கொண்ட கொள்கைக்காக தங்களின் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் துணிந்தார்கள். படைத்த இறைவனுக்காக அனைத்தையும் இழந்தாலும் நஷ்டம் ஏதும் இல்லையல்லவா? மறுமையில் சொர்க்கமல்லவா காத்திருக்கிறது!

ஆனால் இக்கொள்கையின் அருமையைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் அங்கு பெரும்பான்மையாக இருந்தார்கள். இந்த கொள்கை வெற்றி பெற்றால் அனைவரும் சுபிட்சமாக வாழலாம் என்பதைப் புரிந்து கொள்வதிலிருந்து சிலரை அவர்களுடைய தற்பெருமையும் சிலரை சுயநலமும் சிலரை ஆதிக்கபலமும் தடுத்தது. பெரும்பாலோரை முன்னோர்கள் எது செய்தாலும் சரியே என்ற குருட்டு நம்பிக்கை தடுத்தது! தங்கள் ஆதிக்கம் பறிபோய்விடும் என்று பயந்த குறைஷித் தலைவர்கள் நபிகளாரை நேரடியாகப் பரிகசிக்கவும் தாக்கவும் முற்பட்டனர்.

நபிகளாரின் மீது ஒட்டகக் கழிவை கொட்டுதல்

நபிகளார் கஅபா ஆலய வளாகத்தில் சென்று தொழுவது வழக்கம். ஒருநாள் நபியவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது, இன்று முஹம்மதுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள் எதிரிகள். நபியவர்கள் நெற்றியை தரையில் வைத்து சாஷ்டாங்கம் செய்தபோது (இதை ஸஜ்தா என்று இஸ்லாமிய வழக்கில் கூறப்படும்) தாங்கள் மறைத்து வைத்திருந்த பாரமான ஒட்டகக் குடலை நபியவர்களின் பிடரியின் மீது போட்டு எள்ளிநகையாடினர்.  இந்த சம்பவத்தை நேரடியாக கண்டு நின்ற இளவயது நபித்தோழர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறக் கேட்போம்:

  நபி (ஸல்) அவர்கள் இறை இல்லம் கஅபாவில் தொழுது கொண்டிருந்தபோது இஸ்லாத்திற்கு பெரும் விரோதியாக இருந்த அபூஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து "இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப் பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும் போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?' என்று கேட்டனர்.

அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால் அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த சத்தியமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள்.

அப்போது தகவல் அறிந்த ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள்.

பொறுமையும் பிரார்த்தனையுமே ஆயுதங்கள்:

பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி "யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள்.

அவர்களுக்குக் கேடு உண்டாக வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், "அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்' என அவர்களும் நம்பியிருநார்கள்.

 பின்னர் நபி (ஸல்) அவர்கள்  (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, "யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!' என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன்.

என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல) அவர்க்ள குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் "கலீப்' என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்''  என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

(நூல்: புகாரி )

(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)

இன்றைய நாள் எதிரிகளுக்கும் இறை எச்சரிக்கை

அண்ணல் நபிகளாரை இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனே தனது தூதராக அனுப்பி உள்ளான். பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி! அந்த மாமனிதரை கேலி செய்தவர்கள் உடனடியாக இல்லாவிட்டாலும் இவ்வுலகிலேயே தண்டனையை அடைகிறார்கள் என்பது நபிகளாரின் வாழ்நாள் நிகழ்வுகளில் இருந்து தெளிவாகிறது. இறைவனையும் அவன் வழங்கிய நேர்வழியை மறுத்ததற்கும் அதைப் பரவ விடாமல் தடுத்ததற்கும் இன்னும் கொடிய தண்டனைகளை மறுமையில் கண்டிப்பாக அவர்கள் அடைந்தே தீருவார்கள் என்கிறது திருக்குர்ஆன்:

= இன்னும் கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், இறைவனைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான். (அவன்) இறைவனின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம். (திருக்குர்ஆன் 22: 8- 9)

 = எவர்கள் சத்தியத்தை மறுத்துக் கொண்டும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக்கொண்டும், இருந்தார்களோ அவர்களுக்கு - (பூமியில்) குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்ததற்காக - நாம் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்போம். (திருக்குர்ஆன் 6:88)

 தண்டனை ஏன் உடனடியாகக் கொடுக்கப்படுவது இல்லை?

இந்த வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவுமே இறைவன் படைத்துள்ளான். ஒரு பரீட்சைக் கூடத்தில் தவறான விடை எழுதிக் கொண்டு இருக்கும் மாணவனை ஆசிரியர் உடனடியாக தண்டித்தால் அது பரீட்சையின் நோக்கத்திற்கு எதிரானது. எனவேதான் தவறிழைக்கும் குற்றவாளிகள் விட்டுவைக்கப் படுகிறார்கள். பரீட்சை முடிந்ததும் அவர்கள் அவர்களின் குற்றத்திற்கான தண்டனையை அடைவார்கள்.

= உம் இறைவன் பெரும் மன்னிப்பாளனும் கருணையுடையோனுமாய் இருக்கின்றான். இவர்கள் சம்பாதித்த தீவினைகளுக்காக இவர்களை அவன் தண்டிக்க நாடியிருந்தால் வேதனையை விரைவில் இவர்களுக்கு அனுப்பிவைத்திருப்பான்! ஆனால் இவர்களுக்கென வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதை விட்டுத் தப்பி ஓடுவதற்கு எந்த வழியையும் இவர்கள் காண மாட்டார்கள். (திருக்குர்ஆன் 18:58)

= இவ்வாறு அவர்களை நாம் (உடனடியாகத் தண்டிக்காமல்) விட்டு வைப்பது தங்களுக்கு நன்மையாகும் என நிராகரிப்பவர்கள் எண்ணிவிட வேண்டாம்! அவர்களை நாம் விட்டு வைப்பதெல்லாம் பாவச் சுமையை அவர்கள் அதிகமாக்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான்! பின்னர் அவர்களுக்கு இழிவு மிக்க வேதனை இருக்கிறது. (திருக்குர்ஆன் 3:178)

 ========================= 

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html       

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

செவ்வாய், 14 ஜூன், 2022

மனிதகுலத்தையே பாதுகாக்கும் மாமனிதர்!

 


அண்ணல் நபிகளாரின் இலக்கு அனைத்துலக மக்களையும் அவர்கள் இவ்வுலகில் அவர்களைப் பீடித்துள்ள அடிமைத்தளையில் இருந்தும், அவர்கள் படும்  துன்ப துயரங்களில் இருந்தும் சீர்கேடுகளில் இருந்தும் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அதேவேளையில் மறுமையில் நரகத்தில் இருந்து மீட்டு அவர்களை சொர்க்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. அதாவது  அவர்களின் இம்மையும் மறுமையும் செம்மையாக அமையவேண்டும் என்பதே இலக்கு! அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறையே இஸ்லாம் என்ற இறை மார்க்கம். இதை மக்களுக்கு போதிக்கவே அவர் இறைத் தூதராக அனுப்பட்டார்.  

எதிலிருந்தெல்லாம் பாதுகாப்பு?

கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக அவரைப் பின்பற்றியவர்களும் சரி இன்று பின்பற்றிக்கொண்டு இருக்கக்கூடிய உலகின் நான்கில் ஒரு பங்கு மக்களும் சரி கீழ்கண்ட தீங்குகளில் இருந்து பாதுகாக்கப்பட்டார்கள் அல்லது பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் அறியலாம்:

= படைத்தவனை நேரடியாக வணங்கக் கற்றுக் கொண்டதால் கடவுளின் பெயரால் மக்களை சுரண்டும் இடைத்தரகர்களின் தீமையில் இருந்து பாதுகாப்பு.

= இஸ்லாம் கற்றுத்தந்த மனித சமத்துவக் கொள்கையை பின்பற்றுவதால் குல மேன்மை இன மேன்மை பாராட்டும் சுயநல ஆதிக்கவாதிகளின் தீங்கிலிருந்தும் தீண்டாமைக் கொடுமையில் இருந்தும் விடுதலை.

= அனைத்து மனிதகுலமும் ஒரு ஆண்-பெண் ஜோடியில் இருந்து உருவானதே என்று நம்புவதால் நிறவெறி, இன வெறி, மொழிவெறி, ஜாதிவெறி இவற்றில் இருந்து விடுதலை! இவற்றின் காரணமாக உண்டாகும் சண்டைகளில் இருந்து பாதுகாப்பு!

= வரதட்சணைக் கொடுமை, கட்டாயத் திருமணம், பெண்ணுரிமைகள் மறுப்பு, பெண் சிசுக்கொலை, பெண் கருக்கொலை, சொத்துரிமை மறுப்பு போன்றவற்றில் இருந்து பெண்ணினத்திற்கு பாதுகாப்பு..

= குடும்ப அமைப்பு பேணுதல், ஆடைக் கட்டுப்பாடு, அந்நிய ஆண்-பெண் கலந்துறவாடத் தடை போன்ற கட்டுப்பாடுகள் மூலம் பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு.. சமூக சீரழிவில் இருந்து பாதுகாப்பு.

= வட்டி, ஊக வாணிபம், மோசடி வியாபாரம் போன்றவற்றின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு! ஜகாத் மூலம் வறுமையில் இருந்து விடுதலை!

= இறைவனையும் மறுமையையும் பற்றிய நம்பிக்கைகள் ஆழமாக விதைக்கப்படுவதால் தனி நபர் ஒழுக்க சீர்கேடு, மது மற்றும் போதைப்பொருள், விபச்சாரம் போன்ற தீங்குகளில் இருந்து பாதுகாப்பு. 

மனித மனங்களை சீர்திருத்தி அவர்களின் கரங்களைக் கொண்டே நடத்தப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் இவை. மற்ற சித்தாந்தங்களைப் போல் மக்களின் மீது ஆதிக்கம் பெற்று அரசாட்சியைக் கைப்பற்றி நடத்தப்படும் சமூக மாற்றங்களல்ல இவை.

இறைவன் இந்த தூதரைப்பற்றி திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்:

= எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர் அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.  (திருக்குர்ஆன் 7:157)

மக்களின் துன்பப்படுவது கண்டு வருந்துபவர்:

அகிலத்தின் அருட்கொடையாக வந்த அந்த அண்ணல் மக்களின் உணர்வுகளோடு உணர்வுகளாகக் கலந்தவர். அகிலத்தின் இறைவனே சான்று வழங்குவதைக் காணுங்கள்:

= (இறை விசுவாசிகளே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் இறைநம்பிக்கையாளர்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். (திருக்குர்ஆன் 9:128) 

======================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html       

ஞாயிறு, 12 ஜூன், 2022

இறைத்தூதர்கள் ஏன் வரவேண்டும்?


இறைத்தூதர்கள் ஏன் வரவேண்டும்? - 
இக்கேள்விக்கு விடை அறிய மனித வாழ்க்கைக்கு இறை வழிகாட்டல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிய வேண்டும்.

  1. ஒழுங்கின்றி அமையாது மனித வாழ்க்கை!

ஏதேனும் ஒரு பெரிய நகரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு சாலை விதிகளை யாரும் பேண வேண்டியதில்லை, எவ்வளவு பெரிய ஆக்சிடென்டை நீங்கள் அந்த இரண்டு மணி நேரத்தில் செய்தாலும் உங்கள் மீது எந்த வழக்கும் போடப்படமாட்டாது என்ற அறிவிப்பு செய்யப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்...... என்ன நடக்கும்?

விளைவை நாம் அனைவரும் அறிவோம். பலரும் பயம் காரணமாக வாகனத்தையே வெளியில் எடுக்க மாட்டோம். ஏன்,  சாலையில்கூட  நடமாட மாட்டோம். எவ்வளவுதான் அவசர வேலை இருந்தாலும் அந்த இரண்டு மணி நேரம் முடியக் காத்திருந்து விட்டே புறப்படுவோம். ஆம்புலன்ஸ் உட்பட எதுவும் வீதியில் ஓடாது! அனைத்துமே ஸ்தம்பித்துவிடும்! இது எதை நமக்கு உணர்த்துகிறது?

ஆதிமுதலே இருந்தது ஒழுங்கு!

சட்டம், ஒழுங்கு, பரஸ்பர புரிதல் போன்றவை இல்லையென்றால் ஒரு சமூகம் மட்டுமல்ல ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து வாழ்வதும் அந்த வாழ்க்கை நீடிப்பதும் சாத்தியமில்லை என்பதைத்தானே அறிகிறோம். எனவே முதல் மனித ஜோடி இங்கு வாழத் துவங்கிய நாள்  முதலே அவர்களுக்கு ஒழுங்கும் வாழ்க்கை வழிகாட்டுதல்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியமும் கற்பிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது திண்ணம். மாறாக சட்டம் ஒழுங்கு வரையறைகள் என்பவை செயல்களின் விளைவுகளைக் கண்டு பாடம் படித்தல் (trial and error) மூலம் உருவானவை அல்ல என நாம் புரிந்து கொள்ளலாம். ஆக ஆதி முதலே மனிதர்களைப் படைத்தவன் அவர்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்ததனால்தான் உலகம் உயிர்வாழ்கிறது!

ஒரு மனிதனுக்குள் தன் வினைகளுக்கு மறுமையில் கேள்விக் கணக்கும் விசாரணையும் உள்ளது என்ற உணர்வு வளர்க்கப்பட்டால் அங்கு ஒழுங்கும் (order)   கட்டுப்பாடும்(discipline)  உண்டாகும். இந்த இறையச்சம் குறையும்போது அல்லது அறவே இல்லாமல் ஆகும்போது அங்கு தான்தோன்றித்தனமும் குழப்பமும் மட்டுமே பெருகும். இப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற போக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்குமானால் உலகம் என்றோ அழிந்துபோயிருக்கும்.

2.  படைத்தவனே பயன்பாடு அறிவான்: 

இன்று உலகில் நாம் காணும் அல்லது புழங்கி வரும் இயந்திரங்களோடு ஒப்பிட்டால் மனித உடலே அனைத்திலும் அதி நவீனமான தொழில் நுட்பமும் சிக்கல்களும் கொண்ட இயந்திரம்  என்பதை மறுக்க மாட்டோம். ஏனைய இயந்திரங்களுக்கு இல்லாத அறிவாற்றலும், உணர்ச்சிகளும் மனிதனுக்கு உள்ளன. அந்த இயந்திரங்களின் விடயத்தில் அவற்றின் தயாரிப்பாளர் கூறுவதை அப்படியே பின்பற்றுவது இன்றியமையாதது என்பதை அறிவோம். உதாரணமாக நாம் பயன்படுத்தும் ஸ்கூட்டர் அல்லது காரின்  டயருக்கு காற்றடிக்கும் போது, அந்த வாகனத்தை தயாரித்தவர் எவ்வளவு காற்றழுத்தம் இருக்க வேண்டும்  என்று சொல்கிறாரோ அந்த அளவிற்குத்தான் நாம் காற்றடிப்போம். மாறாக, நம் வாகனம் என்பதற்காக, நம் இஷ்டம் போல காற்றடிப்பதில்லை. இப்படி ஒரு சாதாரணமான விடயத்திற்கே வாகனத்தை தயாரித்தவரின் வழிகாட்டல் தேவைப்படுகிறது என்றால், எண்ணற்ற சிக்கல்களும் நுட்பமும் நிறைந்த மனிதன் என்ற இந்த  இயந்திரத்திற்கு அதை உண்டாக்கியவனின்  வழிகாட்டல் தேவையில்லை என்று எண்ணுவது பகுத்தறிவாகுமா? நாம் சொந்தம் கொண்டாடும் ஒரு பொருளையே நம் விருப்பப்படி உபயோகிப்பது சரியல்ல எனும்போது நமக்கு இரவலாகத் தரப்பட்ட பொருளை அவ்வாறு பயன்படுத்த முடியுமா? சிந்தியுங்கள்.

3. சட்டம் ஒழுங்கு உருவாக இறைவழிகாட்டுதல் அவசியம்:

மனிதர்களிடையே நிறம், இனம், நாடு, மொழி போன்ற பல்வேறு வேற்றுமைகள் இயல்பானவை. ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சமூகமாக வாழ்வதற்கு அங்கு சட்டங்களும் ஒழுங்குகளும் நிலைநாட்டப்படவேண்டும். அதற்கு சரி எது தவறு எது, நியாயம் எது அநியாயம் எது, பாவம் எது புண்ணியம் எது என்பதைப் பிரித்தறிவிக்கும் ஒரு பொதுவான அளவுகோல் இருந்தால்தான் அனைவருக்கும் பொதுவான சட்டங்களை இயற்ற முடியும். இப்பிரபஞ்சத்தில் மிகவும் அற்பமான அறிவும் ஆயுளும் கொண்ட மனிதர்கள் சொந்த அறிவை அல்லது அனுபவத்த்தை வைத்துக்கொண்டு இயற்றும் சட்டங்கள் ஒருதலைப்பட்சமானதாகவும் குறைகள் உள்ளவையாகவும் இருக்கும்.

மாறாக இவ்வுலகையும் அதில் உள்ளவற்றையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு மட்டுமே தனது படைப்பினங்கள் பற்றிய முழுமையான அறிவு உள்ளது. மனிதனுக்கும் மனித குலத்துக்கும் மட்டுமல்ல மற்ற அனைத்து ஜீவாராசிகளுக்கும் படைப்பினங்களுக்கும் எது நல்லது எது கெட்டது என்பதை மிக மிகப் பக்குவமாக அறிபவன் அந்த இறைவன் மட்டுமே. அவன் வழங்கும் அளவுகோல் அல்லது சட்டங்கள் மட்டுமே மிகவும் உன்னதமானவை. எனவே இந்த விடயத்திலும் இறைவழிகாட்டுதல் மிகவும் அவசியமானது என்பதை அறியலாம்.

இறைவனே இதைக் கூறுகிறான்:

''நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது. அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.'  (திருக்குர்ஆன் 92:12-13)

இறுதி இறைத்தூதரே முஹம்மது (ஸல்)

அந்த இறைவழிகாட்டுதலை தங்கள் வாழ்க்கை முன்னுதாரணம் மூலம் மக்களுக்கு போதித்து அவர்களை நல்வழிப்படுத்த வந்தவர்களே இறைத்தூதர்கள்! அவர்கள் மூலம் அனுப்பப்படுபவையே இறைவேதங்கள். அந்த இறைத்தூதர்களின் வரிசையில் இந்த பூமிக்கு இறுதியாக வந்தவரே நபிகள் நாயகம் என்று அறியப்படும் முஹம்மது நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் – பொருள்: அவர் மீது இறைசாந்தி உண்டாவதாக). அவர் மூலம் அருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்று அறியப்படுகிறது. 
================ 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!