இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 நவம்பர், 2012

இஸ்லாம் வழங்கும் சுதந்திரம்

படைத்த இறைவனுக்குக் கீழ்படிந்து வாழுதலையே அரபு மொழியில் இஸ்லாம் என்கிறோம். அவ்வாறு கீழ்ப்படிந்து வாழ்பவர் யாராகினும் அவருக்கே முஸ்லிம் (அதாவது கீழ்படிபவர்) என்று கூறப்படும். ஏக இறைவனை மட்டும் வணக்கத்துக்கு உரியவனாக ஏற்று அவன் வழங்கும் வேதத்தையும் அவனது தூதரையும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டால் மனித வாழ்வில் மாபெரும் புரட்சிகள் ஏற்ப்படும். மனித சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் நிகழும். மனித உரிமைகள் மீட்டப்பட்டும், அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப் பட்டு மனிதன் சுதந்திரக் காற்றை சுவாசிப்பான். 
மட்டுமல்ல, மானிட சமத்துவத்தையும் அனுபவிப்பான்.
மனித சமூகத்தில் அன்று புரையோடிப் போயிருந்த அடிமைத்தளையிலிருந்து மனிதனை எவ்வாறு மெல்லமெல்ல விடுவித்தது என்பதை கீழ்க்கண்ட ஒரு உதாரணத்தின் மூலம் உணரலாம்:
மஃரூர் என்பார் ஒரு நபித்தொழரைப் பற்றிக் கூறுகிறார் :
'
நான் நபித்தோழர் அபூதர் (ரலி) அவர்களை மதீனாவிற்கு அருகிலுள்ள 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் ஆச்சரியமுற்றவனாக அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" .[ஆதாரம் : புஹாரி எண் 30 ]
 அதாவது ஏஜமானனையும் அடிமையையும் ஒரேவிதமான ஆடையில் அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. விசாரித்ததில் நபிகளாரின் கண்டிப்பும் உபதேசமுமே அதற்குக் காரணம் என்பதை அவர் அறிய வருகிறார். நபிகளாரின் உபதேசத்தில் கவனிக்க வேண்டிய உண்மைகள்:
= அடிமைகளும் இறைவனால் படைக்கப் பட்ட மனிதர்களே – அவர்கள் உங்கள் சகோதரர்களே!
= அந்த இறைவன்தான் அவர்களை உங்கள் ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவந்துள்ளான்.
= எனவே அந்த இறைவனின் பொருத்தம் உங்கள் மீது உண்டாக வேண்டுமானால் நீங்கள் அவர்களை உங்கள் சகோதரர்களாகவே பாவித்து நீங்க அனுபவிக்கும் சுகங்களை அவர்களும் அனுபவிக்கச் செய்யவேண்டும்.
= அவர்களுக்கு சிரமமான பணிகளைக் கொடுத்தால் கூடவே உதவவும் செய்ய வேண்டும்.
மேற்படி சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. இஸ்லாம் என்ற சீர்திருத்த இயக்கம் இவ்வாறுதான் சரித்திரத்தில் பல புரட்சிகளைச் செய்து வந்தது. தொடர்ந்து செய்து வருகிறது! எங்கெல்லாம் இக்கொள்கை நுழைகிறதோ அங்கெல்லாம் மனித உரிமைகள் மறுமலர்ச்சி பெறுகின்றன. மானிட சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும் நிலைநாட்டப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக