இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 நவம்பர், 2012

பெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்?


இவ்வாழ்கை என்ற பரீட்சையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான வாய்ப்புகளும் சோதனைகளும் இறைவனால் வழங்கப்படுகின்றன. நமக்கு வாய்த்த சூழ்நிலையில் எவ்வாறு அதை எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். அதை இறைவனுக்குப் பொருத்தமான முறையில் எதிர்கொண்டால் நமக்கு பரீட்சையில் வெற்றி! அவனுக்கு பொருத்தமற்ற அல்லது அவன் தடுத்த முறையில் அதை எதிர்கொண்டால் அதுவே தோல்வியில் முடிகிறது! 
நமது வாழ்கை பரீட்சையின் ஒரு இன்றியமையாத அங்கமாக நம்மோடு வருபவர்கள் பெண்கள். குழந்தைகளாக அவர்கள் நமக்கு வழங்கப் பட்டால்.........! இன்று பலரும் நிம்மதி இழப்பது அதனால் தான் என்பதை கண்டு வருகிறோம்! வரதட்சனைக் கொடுமை, அவர்களை வளர்ப்பதிலுள்ள சிக்கல்கள், அவர்களின் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட பிரட்சனைகள்...... என பலவற்றையும் கருதி 'எதற்கு வம்பு?' என்று கருவில்  இருக்கும் போதே பெண்குழந்தைகளை கொன்று வருவதையும்,…… மீறி பிறந்துவிட்டால் குப்பைத் தொட்டியிலோ அரசு தொட்டிலிலோ அவர்களை எறிந்து விடுவதையும் நாம் கண்டு வருகிறோம். 
ஆனால் தூய இறைவன் தன்னை நம்புவோருக்கு  இப்பிரட்சினைகளை  அழகான முறையில் அணுக தன் திருமறை மூலமும் தன் திருத்தூதர் மூலமும் வழிகாட்டுகிறான். அடிப்படையாக சில உண்மைகளைப் புரிய வைப்பதன் மூலம் நமது மனதை வீண் சஞ்சலங்களிளிருந்தும் அதன் மூலம் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்தும் காத்தருள்கிறான்.: 
1. சோதனையாக வழங்கப் படுபவையே குழந்தைகள்:
'நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன¢ நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு' என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)
    2. 2. ஆணும் பெண்ணும் அவன் தீர்மானிப்பதே. அதற்காக உங்களுக்குள் சண்டை வேண்டாம்
அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்¢ ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்¢ தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்¢ மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்.  அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன். பேராற்றலுடையவன். (குர்ஆன்42:49 50)
     3. 3. ஆண்குழந்தை ஆனாலும் பெண்குழந்தை ஆனாலும் அதை  இறைவனின்  அருட்கொடையாக  வரவேற்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அவற்றை  உதாசீனம் செய்யவோ கொலை செய்யவோ கூடாது. உணவளிப்பவன்  அவனே.

      'நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்¢ அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்'.(17:31 )  
    
எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ¢ இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ அவர்கள் வழிகெட்டு விட்டனர் நேர்வழி பெற்றவர்களாக இல்லை. (6:140)

  4. 4. அவ்வாறு குழந்தைகளை கொலை செய்பவர்களுக்கு மறுமையில் தண்டனை  உண்டு
(இறுதித் தீர்ப்பு நாளின்போது)  உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
'எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?' என்று-(81:7 -9)

5.  அவர்களை ஒழுக்க சீலர்களாகவும் வெட்க உணர்வு மிக்கவர்களாகவும் கட்டிக்காத்து அழகிய (இஸ்லாமிய) முன்மாதிரி மிக்க பயிற்சி வழங்கினால் நல்ல மனிதர்களுடன் சுவர்க்கம் செல்ல முடியும்.
இதை பின்வரும் நபி மொழிகள் உணர்த்துகின்றன 
நபி மொழிகளில் பெண் மக்களின் சிறப்பு:
·  ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: ஒரு ஏழைப் பெண் இரண்டு பெண் பிள்ளைகளுடன் என்னிடத்தில் வந்தாள். அவர்களுக்கு மூன்று பேரீத்தம் பழத்தை நான் உண்ணக் கொடுத்த போது இரண்டு பிள்ளைகளுக்கும் அத்தாய் ஒவ்வென்றாக கொடுத்தாள். (தாய்) மூன்றாவதை உண்ண தனது வாயின் பால் உயர்திய போது அதனையும் அவ்விரு பிள்ளைகளும் கேட்டார்கள், அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்து விட்டாள். இது என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. இச்செய்தியை நபிகளாரிடத்தில் நான் சொன்ன போது, நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நிச்சயமாக அப்பெண்ணுக்கு சுவர்க்கம் கடமையாகிவிட்டது. அப்பெண் பிள்ளைகள் மூலமாக (அத்தாய்) நரகத்திலிருந்து விடுதலை பெற்று விட்டாள் எனறார்கள்.’ (ஆதாரம் முஸ்லிம்).
·  நபிகளார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் யார் ஒருவர் இரண்டு அடிமைப் பெண்களை அவர்கள் பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கின்றார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று, தனது இரண்டு விரல்களையும் ஒன்றாக இணைத்துக் காட்டினார்கள’ (அறிவிப்பவர் அனஸ் (ரழி), ஆதாரம் முஸ்லிம்).
·  எவரொருவர் தனக்கு இரண்டு பிள்ளைகளிருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவரும் (தந்தையும்) இரு பிள்ளைகளுடனும் அன்பாகப் பழகி பிள்ளைகளும் தந்தையுடன் அன்பாகப் பழகினால் அவ்விரு பெண் பிள்ளைகளும் அவரை சுவர்க்கத்திலே நுழைவித்து விடுவார்கள்என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி). ஆதாரம் இப்னு மாஜாஹ்).
·  எவருக்கு மூன்று பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லது இரண்டு பிள்ளைகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ இருந்து அவர்களுடன் அன்புடன் நடந்தால் அந்த பெண்பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் அம்மனிதரை சுவர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்’. (அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி (ரழி), (ஆதாரம் திர்;மிதி).
·  எவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சுவர்க்கம்  கடமையாகி விட்டதுஎன்று நபிகளார் சொன்ன போது தோழர்கள கேட்டார்கள், இரண்டு பெண் மக்கள் இருந்தாலுமா?” :ஆம் இரண்டு இருந்தாலும்!” என்றார்கள். தோழர்கள கேட்டார்கள், ஒரு பிள்ளை இருந்தாலும் என்று சிலர்       கூறுகிறார்களே! என்ற உடன், ஆம், ஒன்று இருந்தாலும் அவருக்கும் சுவர்க்கம் கிடைக்கும் என்றார்கள் நபிகளார் (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர் ஜாபிர் (றழி), ஆதாரம்: அஹ்மத்.)
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் பெண்மக்களை நேசித்து வளர்க்ககூடிய  நன்மக்களாக ஆக்கி அருள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக