இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 ஜூன், 2014

இயற்கையில் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் இல்லை! -ஏன்?

பெண் சிசுக்கொலை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்முறை, உடன்கட்டை,  விதவை இழிவு, முதுமையில் புறக்கணிப்பு  போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நம்மோடு இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பிராணிகளிடமும், பறவைகளிடமும் மீன்களிடமும் இன்ன பிற ஜீவிகளிடமும் காணமுடிவதில்லை. அவைகளில் ஆண் இனங்கள் தங்கள் பெண் இனங்களிடம் ஆதிக்க வெறி காட்டுவதோ பெண் இனங்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்துவதோ இல்லை. ஆண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதும் இனப்பெருக்கத்தின் சுமைகளை தாங்குவதும் குஞ்சுகளை பராமரிப்பதும் அங்கு பெண் இனங்களே. இரு பாலாரின் செயல்பாடுகளில் ஏற்றதாழ்வுகள் இருந்தாலும் அவை என்றும் இணக்கமாக வாழ்வதையே நாம் காண்கிறோம். இந்த இணக்கம் அவைகளிடம் எவ்வாறு சாத்தியமாகிறது?
உண்மை இதுதான்.... இயற்கையில் மனிதனைத் தவிர நாம் காணும் அனைத்து ஜீவிகளும் இறைவன் வகுத்து தந்துள்ள பாதையில் அடிபிறழாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இறைவன் தங்களுக்கு கொடுத்த இயற்கையிலும் அமைப்பிலும் இன்ன பிற விடயங்களிலும் திருப்தி கண்டு வாழ்கின்றன. எதிர் பாலாரின் மேன்மை கண்டு பொறாமைப் படுவதும் இல்லை அவர்களின் தாழ்மை கண்டு அகங்காரம் கொள்வதும் இல்லை. தங்கள் இயற்க்கைக்கு மீறிய எதையும் அடைய வேண்டும் என்று ஆசைப் படுவதும் இல்லை. அவை அவற்றைப் படைத்த இறைவனைப் பொருந்தி அவனது கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்கின்றன என்பதை நாம் காணலாம். இப்படிப்பட்ட கீழ்படிதலே அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது.
ஆம், அவ்வாறு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்வதன் மூலம் பெறப்படும் அமைதிக்கே இஸ்லாம் என்று பெயர்.
   இஸ்லாம் என்ற அரபு மொழி வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்  
முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் அல்லது கீழ்படிபவள் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர். பெயர், உடை, தோற்றம் போன்ற வெளி அடையாளங்களை வைத்து யாரையும் முஸ்லிம் என்று கூற முடியாது.
இயற்கையில் நாம் காணும் மரம், செடி, கொடி, சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்........ என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு  – அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே! மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்..... என அனைத்தும் முஸ்லிம்களே! காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது!  எப்போது அவன் மனதார இறைவனுக்கு கீழ்படிந்து வாழ உறுதிமொழி பூண்டு அவ்வாறு வாழ ஆரம்பிக்கிறானோ அப்போதுதான் முழுமையான முஸ்லிம் ஆகிறான்.
ஆம் அவ்வாறு உண்மையான முஸ்லிமாக ஆணும் பெண்ணும் வாழுபோது அவர்களால் மற்றவர்களின் உரிமைகளை மதிக்காமலோ நிறைவேற்றாமலோ வாழமுடியாது. இறைவன் தங்களுக்கு வழங்கிய இயற்கையிலோ அதற்கேற்ப விதித்த கடமைகளிலோ மாற்றாருக்கு அவன் வழங்கிய உரிமைகளிலோ உடமைகளிலோ அவர்கள் அதிருப்தியுற மாட்டார்கள். அவ்வாறு வாழும்போது ஏற்படும் இழப்புகளையும் வேதனைகளையும் இறைவனின் பொருத்தம் கருதி பொறுத்துக் கொள்வார்கள்

வியாழன், 19 ஜூன், 2014

பெண்குழந்தை என்ற அருட்கொடை


= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
:
ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே (பயன் தராமல்) நின்று விடுகின்றன.
1. நிலையான தர்மம். 2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி. 3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள். (முஸ்லிம் 3358)
குழந்தைகளை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால்நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்கண்ணியமும் மகத்துவமும் மிக்க இறைவன்,சொர்க்கத்தில் ஒரு அடியானின் தகுதியை உயர்த்துவான். “இறைவா, இது எனக்கு எப்படி கிடைத்தது? என்று அவன் கேட்கும் போதுஉனக்காக உன் குழந்தை பாவ மன்னிப்பு கேட்டது அதனால்தான், என்று இறைவன் விடையளிப்பான். (அஹ்மத் 10202)
அத்தகைய பாக்கியம் நமக்கு கிடைப்பதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தாலே போதும். அதற்கு குழந்தைகள் நமக்கு கிடைத்த பாக்கியமாக நாம் கருத வேண்டும். அதிலும் பெண்குழந்தை என்றால் அது பெரும் பாக்கியம்!
குழந்தைகளைக் கொல்வது பாவம்
பொருளாதார சுமை அதிகரிக்கும் என்று எண்ணி கூட நமது குழந்தைகளை கொன்று விடகூடாது.
இறைவன் இவ்வாறு எச்சரிக்கிறான்: வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் (திருக்குர்ஆன் 17:31)

இந்த எச்சரிக்கையோடு சேர்த்து நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு இறைவன் பொறுப்பு என்கிற வாக்குறுதியையும் தருகிறான்.
ஆணும் பெண்ணும் அவன் தருவதே! யாரையும் குறை காணகூடாது
இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் இறைவன் நாடியவாறு தான் நாடியோருக்கு பரீட்சைகளை அமைக்கிறான். அதற்கேற்ப உறவுகளை அமைக்கிறான்...
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் குழந்தைகளை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் குழந்தைகளை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (திருக்குர்ஆன் 42:49,50)
(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
பெண் குழந்தைகளை வெறுப்பது குற்றம்!
தாங்கள் பெற்ற பெண் குழந்தைகளை கண்டு வெறுப்பு அடைகிற பெற்றோர்களை இறைவன் கடுமையாக சாடுகிறான்.
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும்இறைவன் பெயரால் இட்டுக் கட்டிஇறைவன் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்;வழி கெட்டனர்நேர்வழி பெறவில்லை. (திருக்குர்ஆன் 6:140)

என்று கண்டிக்கிற இறைவன்இன்னொரு வசனத்தில் கூறுகிறான்:

அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்கு கூறப்பட்ட கேட்ட செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து வாழ்கிறான்.இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்). கவனத்தில் கொள்ளுங்கள் அவன் தீர்பளிப்பது மிகவும் கேட்டது. (திருக்குர்ஆன் 16:58)

பெண் குழந்தைகளை வெறுப்பதோ அதனால் கவலைப்படுவதோஅதை இழிவானதாக கருதுவதோஅதை கொலை செய்வதோ இறைவனிடத்தில் மிகப்பெரிய பாவமான காரியமாக இருக்கிறது.

பெண்குழந்தை வரவு ஓர்  நற்செய்தி

மேற்படி வசனத்தில் பெண் குழந்தை பிறந்த செய்தியை பற்றி சொல்கிறபோது அது ஒரு நற்செய்தி என்கிறான் அவளைப் படைத்தவன்! பெண் குழந்தைகளை வெறுப்பவர்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் நமக்கு பாரமாக இருக்கும் என்றால்இறைவன் அதை நற்செய்தி என்று சொல்வானா?
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 "ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு அல்லாஹ் வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள்: "வீட்டில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" பின்னர் அக்குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள். மேலும் அதன் தலை மீது கரங்களால் தடவியவாறு கூறுகின்றார்கள் "இது ஒரு பலவீனமான ஆன்மாவாகும் இக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமைநாள் வரையில் இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்" அறிவிப்பாளர்:  நபித்இப்னு ஷுரைத் (ரலி)  ஆதாரம்: அல்முஅஜமுஸ் ஸகீர் 243
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோஅவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் முஸ்லிம் 5127
= இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 5995


பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே இம்மையில் தொடர்ந்து இறை உதவி கிடைப்பதற்கும் மறுமையில் நாம் சொர்க்கத்திற்கு செல்வதற்கும் காரணமாகி விடுகிறது என்பதை புரிந்து கொண்டு அதன்படி செயல்படுபவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்!

ஞாயிறு, 8 ஜூன், 2014

இத்தனைக் கடவுள்கள் ஏன்? - தினமலர் கட்டுரை

விவாதங்களைப் படிக்க கமெண்ட்ஸ் ஐ க்ளிக் செய்யுங்கள் ....

ஞாயிறு, 1 ஜூன், 2014

இஸ்லாம் ஏன் பயங்கரவாதத்தோடு முடிச்சு போடப்படுகிறது?

இஸ்லாம் என்றால் கீழ்படிதல் என்றும் அமைதி என்றும் பொருள் உண்டு. இறைவனுக்கு கீழ்படிவதோடு பூமியில் நன்மைகளை ஏவுதலும் தீமைகளைத் தடுத்தலும் இம்மார்க்கத்தை ஏற்றோருக்கு கடமையாக வலியுறுத்துகிறது இஸ்லாம். அப்போதுதான் பூமியில் தர்மத்தை நிலைநாட்ட முடியும்.



மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் இறைவன்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. (திருக்குர்ஆன் 3:110)

  தர்மத்தை நிலை நாட்டும் பணியில் நல்லோர்கள் ஈடுபடும்போது அது அதர்மத்தை முதலீடாக வைத்து மக்களை ஏய்த்துப் பிழைக்கும் தீயோரால் முழுமூச்சாக எதிர்க்கப்படும் என்பதை நாமறிவோம்.. அவர்களால்  அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்க முடியாது. ஏனெனில் தர்மம் வளர்ந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று விடுவார்கள். மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டால் பிறகு தங்களின் மோசடித் தொழிலும் சுரண்டல் வியாபாரங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் எனபதையும் தங்களின் ஏகாதிபத்தியம் ஆட்டம் காணும் என்பதையும் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் அக்கொடியோர்கள்.

தர்மம் பரவும்போது என்ன நடக்கும்?
மக்கள் ஏக இறைவனை மட்டுமே தங்களுடைய வணக்கத்திற்கு உரியவனாக ஏற்றுக் கொள்வார்கள். அந்த இறைவனின் கட்டளைகளுக்கு உட்பட்டு பூமியில் நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் பாடுபடுவார்கள்.. பூமியில் மானிட சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டவும் கலகங்களும் குழப்பங்களும் அற்ற அமைதிமிக்க வாழ்வை நிலைநிறுத்தவும் தன்னலம் கருதாது ஈடுபடுவார்கள். இம்முயற்சியில் தங்கள் உயிர்களையும் அர்ப்பணிக்கத் தயங்க மாட்டார்கள்.
தர்மம் பூமியில் நிலைநாட்டப் பட்டால்...
=  அங்கு இனம் மொழி, நிறம் இவற்றின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் மறைந்து மனித சகோதரத்துவம் நிலைபெறும். இழந்து போன மனித உரிமைகள் மீட்டுக் கொடுக்கப்படும்.
= கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி, இலஞ்சம், ஊழல், சூதாட்டங்கள் பதுக்கல். கலப்படம் போன்றவை ஒழியும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இனி யாரும் பிழைப்பு நடத்த முடியாது.
= மது, போதை, விபச்சாரம், கள்ளக்காதல்கள், பெண்ணடிமைத்தனம்  போன்றவை ஒழியும். ஒழுக்கம் நிறைந்த குடும்ப வாழ்வும் ஆரோக்கியமான மற்றும் அமைதியான சமூக வாழ்வுமுறையும் அங்கு உடலேடுக்கும்.
=, கடவுளின் பெயரால் பாமரர்களைச் சுரண்டும் இடைத்தரகர்கள் ஒழிவார்கள். செலவற்ற எளிமையான இறைவழிபாட்டு முறை அமுலுக்கு வரும். மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழியும்.
= இடைத்தரகர்களும் நாடாள்வோரும் இணைந்து கடவுளின் பெயராலோ அல்லது மூடநம்பிக்கைகளின் பெயராலோ மக்களை கொள்ளையடிப்பதும் நாட்டு வளங்களை அபகரிப்பதும் வீண்விரயம் செய்வதும் நிற்கும். அவை ஆக்கபூர்வமான வழிகளில் செலவிடப்படும். 
= வல்லரசு நாடுகள் தங்கள் இராணுவ வல்லமையைக் காட்டி நலிந்த நாடுகளின் வளங்களைக் கொள்ளை அடித்து அவர்களை அடிமைகளாக நடத்தும் கொடுமை முற்றுப்பெறும். அரசு பயங்கரவாத அராஜகங்கள் அழிந்துவிடும்.
= இன்னும் அணுஆயுதம் அறிவியல், ஊடகங்கள் இவற்றின் மேன்மையை பயன்படுத்தி நலிந்த நாடுகளிக்கிடையே போர் மூட்டுவதும் உலகின் இயற்கை வளங்களில் நஞ்சூட்டி கொள்ளைகள் அடிப்பதும் இன்னும் இதுபோன்ற பல கொடுமைகள் முடிவுக்கு வரும்.

இப்போது நீங்களே கூறுங்கள், தர்மத்தை  நிலைநாட்ட யாரேனும் பாடுபட்டால் அதை கொடுங்கோலர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் இதை முழுமூச்சாக எதிர்ப்பார்கள். எப்படியெல்லாம் முடியுமோ அனைத்து வழிகளையும் தந்திரங்களையும் உபயோகித்து தர்மம் வளர்வதை முடக்கிப்போடும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
அதுதான் இன்று நடந்துகொண்டு இருக்கிறது. 
உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும்  இன்னபிற இராணுவத் தளவாடங்கள்  இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன.
ஆயுதங்களை  உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைவதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். இவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்)

   அதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்த்க்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை! இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.
 இப்போது கூறுங்கள், யார் பயங்கரவாதிகள்? இவர்களா?  இல்லை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தங்களது நாட்டை மீட்பதற்காகப் போராடுபவர்கள்களா? அல்லது தங்களது மனைவி மக்களையும் உற்றார் உறவினர்களையும் இவர்களின் சூழ்ச்சிகளினால் பறிகொடுத்துவிட்டு தங்கள் உரிமைகளை மீட்பதற்காக போராட்டங்கள் நடத்துபவர்களா? அல்லது தங்களது நாடுகளில் இவர்களின் கைப்பாவை அதிபர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து நாட்டையும் நாட்டின் வளங்களையும் காப்பாற்றுவதற்காக முனைபவர்களா?
ஆனால் என்ன நடக்கிறது? இன்று ஊடகங்களின் ஆதிக்க பலத்தினால் உலகளாவிய முறையில்  கொடுங்கோலர்கள் சமாதானப் பிரியர்களாகவும் இழந்த உரிமைகளையும் உடமைகளையும் மீட்பதற்காகவும் சமாதானத்தை நிலைநாட்டவும் போராடுபவர்கள் பயங்கர வாதிகளாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். 

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - வாசகர் விண்ணப்பப்படிவம்