இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஜனவரி, 2013

பெண்களுக்கு எதிரான முதல் குற்றம்!



இவ்வுலகில் மனிதன் அமைதியாக இனிமையான வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக இங்கு ஆணுக்குத் துணையாக பெண்ணையும் படைத்து அவர்களுக்கு தன் புறத்தில் இருந்து நேர்வழிகாட்டுதலையும் தந்தருளியுள்ளான் இறைவன். ஆனால் மனிதனின் குறுகிய மற்றும் சுயநலம் வாய்ந்த செயல்பாட்டின் காரணமாக அவனது வழிகாட்டுதலைப் புறக்கணித்து தான்தோன்றித்தனமாக வாழ விழைந்ததன் காரணமாக பல துன்பங்களை மனித இனம் அனுபவிக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது. இன்று பெருகிவரும் பாலியல் வன்முறைகளாக ஆங்காங்கே நடப்பவை அதன் ஒரு சிறிய வெளிப்பாடுதான். இந்த பாலியல் வன்முறைகள் பெருகுவதற்கு ஒன்றல்ல இரண்டல்ல பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் குறைந்து வரும் ஆண் – பெண் விகிதம். அதாவது பெண்களின் எண்ணிக்கைத் தட்டுப்பாடு! இன்று காண்பது இதன் தொடக்கம்தான். இது முழுமையாக பரிணமிக்கும்போது என்னென்ன நடக்கும்! கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. எங்காவது ஒரு வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்று தெரிந்தால் அதை மோப்பம் பிடித்து அந்த வீட்டை சுற்றி நாய்கள் காத்துக் கிடப்பதைப் போல ஆண்களின் கூட்டம் காத்துக் கிடக்கும் ஒரு சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை!
இதைப் புரியவைக்க ஆதாரங்கள் ஒன்றும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அந்த அளவுக்கு இது வெட்ட வெளிச்சம்! இருந்தாலும் அதையும் சிறிது முன்வைத்து விட்டு தொடருவோம்.
It is alarming fact that male female ratio in India is dropping every year. There are only 914 females for every 1000 male as per the 2011 Census statistics. This is an alarming ratio and it is time to understand the implications and take action to set that right.  (http://realbharat.org/tag/female-infanticide/)

அதிகரிக்கும் ஆண்-பெண் குழந்தை விகிதம் - உருவாகும் ஆபத்துக்கள்என்ற தலைப்பில் திண்டிவனத்தைச் சேர்ந்த இரா. முருகப்பன் அவர்கள் சேகரித்த தகவல்களின் சுருக்கம் : (பார்க்க: http://iramurugappan.blogspot.in)

2011-ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  இந்தியாவில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் ஆயிரத்துக்கு 914  ஆகவும். தமிழகத்தில் இந்த பாலின விகிதம் 946 ஆகவும் உள்ளது. அதிலும் குறிப்பாக கடலூர், அரியலுர் மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையானது 900-த்திற்கும் குறைவாகவே உள்ளது.
2001 முதல் 2011 வரையிலான பத்து ஆண்டுகால இடைவெளியில் அகில இந்திய அளவில் 31,33,281 பெண் குழந்தைகளையும்; தமிழக அளவில் 19,848 பெண் குழந்தைகளையும் காணவில்லையென இப்புள்ளி விபரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் 16 மாவட்டங்களில் 952 - க்கும் குறைவாகவே பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். அரசு இந்த பெண்சிசுக் கொலையைத் தடுக்க போடப்பட்ட சட்டங்கள் அதிகாரிகளாலும் மக்களாலும் மதிக்கப்படாமல் இக்கொடுமை இன்னும் தொடர்கின்றது என்கிறார் திரு இரா. முருகப்பன்.
குழந்தை பிறப்பு என்பது உலகில் இயற்கையானது. ஆனால் மனிதன் தான் பெற்ற குழந்தை தன் உணவில் பங்கு கேட்குமோ என்றும் தன் ஆடம்பரம் மற்றும் வசதிகள் குறைந்துவிடுமோ என்றும்  பயந்து தன் சுயநலம் மற்றும் பொறுப்பின்மை மேலிட தான் பெற்ற குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தான். எந்த விலங்குகளும் கூட செய்யத் துணியாத அந்த கருணையற்ற அற்ற செயலை  குடும்பக் கட்டுப்பாடு என்று அழகிய பெயர் சூட்டி சமூகமும் ஆமோதித்தது, நாட்டு வளங்களை முறைப்படி கையாளத்  திறமையில்லாத சுயநல அரசியல் வாதிகளும் அதைத் தங்கள் குறைகளை மறைக்கக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர். ஊழலால் நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் மக்கள் தொகைப் பெருக்கமே நாடு முன்னேறாததற்குக் காரணம் என்று மக்களுக்கு மூளைச்சலவை செய்தனர்.
‘நாமிருவர் நமக்கு ஒருவர்’’ என்னும் போது அந்த ஒருவர் பெண்ணாய் வந்துவிட்டால் என்ன நடக்கும்? அனைவருக்கும் தெரிந்ததே! ஆம், பெண் இனம் பல்வேறு விதமாக கொன்றொழிக்கப்பட்டது. பிறக்கும் முன்பே  மருத்துவ மனைகளில் அவளைக் கொன்றார்கள், தப்பித் தவறி பிறந்துவிட்டால் கள்ளிப் பாலும் அரிசிமணிகளும் அவளைப் பதம் பார்த்தன!  இவ்வாறு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இந்த கூட்டக் கொலை பாரதம் எங்கும் நிறைவேறியது. இன்னும் நிறைவேறிக் கொண்டுவருகிறது. நாட்டில் வனவிலங்குகளும் கால்நடைகளும் அழிவது கண்டு முதலைக்கண்ணீர் வடித்த “மனிதாபிமானிகளுக்கு’ தன் இனம் அழிவது கண்டு அழுகை வரவில்லை! என்ன ஆச்சரியம்!
சமூகத்தில் மனித உணர்வுகளை, ஆசாபாசங்களை, பாச நேசங்களை சமநிலைப்படுத்த  இறைவன் வழங்கிய பெண்மை என்ற ஒரு மாபெரும் பொக்கிஷத்தை அறியாமையின் காரணமாக தொலைத்துகொண்டு நிற்கிறது மனித இனம்!
பெண்களை ஒருபுறம் கொன்றோதுக்கி விட்டு  மறுபுறம் பெண்ணுக்கு உரிமை வேண்டுமாம்! அவளுக்கு இவ்வுலகில் நுழைவதற்கே தடை விதித்துவிட்டு வாய்கிழிய முழக்கமிடும் பெண்ணுரிமைவாதிகளும் மாதர் சங்கங்களும் யாருக்காகப் போராடுகிறார்கள்? தொடரும் இக்கொடுமைக்கு எதிராக அவர்களின் குரல்கள் மௌனமாகும் மர்மம என்ன? பெண்ணின் முதல் உரிமை அவளுக்கு பிறக்கும் உரிமை! இதைப் பெற்றுத்தர என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறார்கள் அவர்கள்?
யார் எப்படி செயல்பட்டாலும் சரி, செயல்படாவிடினும் சரி, இறைவனை நம்பி அவனுக்கு அடிபணிந்து வாழ தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நன்மைக்கள் இத்தீமை இனியும் சமூகத்தில் பரவாமல் தடுக்க ஆவன செய்யவேண்டும். இறைவன் கூறும் வாழ்க்கை நெறியைப் பின்பற்றுவோரிடம் இத்தீமை நடைபெறுவதில்லை! இன்று வாழ்வோரையும் இனி வரும் தலைமுறகளையும் இக்கொடுமையின் ஆபத்து பற்றி உரிய முறையில் எச்சரிப்பது நமது கடமை.
இது இறைவனுக்கு சொந்தமான உலகம். இதை ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக இறைவன் படைத்துள்ளான். இதில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பதிவாகின்றன. அவற்றுக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று விசாரணையும் உண்டு. இவ்வுலகில் நாம் இறைவனுக்குக் கீழ்படிந்து வாழக் கடமைப்பட்டுள்ளோம். இதில் தான்தோன்றித்தனமாக வாழவோ சட்டங்கள் இயற்றவோ இறைவன் மனிதனுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்பதை நாம் அடிப்படையாக உணரவேண்டும். அவன் விதித்த கட்டளைகளை மீறி வாழ்ந்ததன் விளைவுகளே இன்று நாம் கண்டுவரும் கொடுமைகள். ஒருவேளை நாம் இவ்வுலகில் நம் அத்துமீறல்களுக்கான தண்டனையைப் பெறாவிட்டாலும், மறுமை வாழ்வில் அதைப் பெற்றேயாக வேண்டும்.
= கண்ணுக்குத் தெரியும் உயிராயினும் தெரியாத உயிராயினும் சரி பெரிதாயினும் சிறிதாயினும் அவற்றை அநியாயமாக நோவினை செய்தாலோ அல்லது கொன்றாலோ அது இறைவனிடம் பாவமே! மறுமை நாளில் அதற்கான விசாரணை உண்டு. அந்த வகையில் சிசுக்கொலைகளுக்கும் தண்டனை உண்டு என்று இறைவன் எச்சரிக்கிறான்
17:31  .நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
இன்று பெண்குழந்தைகள் என்றால் ஸ்கேன் செய்து பார்த்து கொல்லும் பெற்றோர்கள் நாளை மறுமை நாளில் தண்டனைக்குள்ளாவார்கள். அவர்களால் கொள்ளப்பட்ட குழந்தைகளே அவர்கள் செய்த குற்றத்திற்கு சாட்சியாக நிற்பார்கள்
81:7-9 .உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?'' என்று-

வெள்ளி, 18 ஜனவரி, 2013

குற்றவாளிகள் யார்? – கழுகுப்படை ஆய்வு!


அண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தனக்கு எது குற்றமாகத் தெரிகிறதோ அதைச் செய்தவர்களை அல்லது அதற்குக் காரணமாக இருப்பவற்றை நோக்கி விரல் நீட்டுகிறார்கள், வசை பாடுகிறார்கள். இவர்களில் யார் சரி? யார் தவறு? என்பது இன்னும் முடிவு செய்யப் படாமல் தொடர்கிறது.
உண்மை அறிய எங்கள் கழுகுப்படை அந்த சம்பவம் நடக்கப் போவது அறிந்து உடனே களத்தில் இறங்கியது. அந்த பஸ்ஸை நெருங்குவதற்குள் அந்த சம்பவம் நடந்துவிட்டிருந்தது. 
அந்த சம்பவத்தை நிகழ்த்திய அந்த அறுவரையும் பேட்டி கண்டாம்..
‘ஏன் நீங்கள் இதைச் செய்தீர்கள்?’
கேள்வியைக் கேட்டதுதான் தாமதம். பதில்கள் சரமாரியாக வந்து விழுந்தன.
= நாங்கள் இளைஞர்கள். எங்களுக்கு எங்கள் உணர்வுகளைத் தீர்க்க வேண்டும் என்று தோன்றியது. அதற்கான சூழ்நிலை அமைந்து வந்ததால் அவ்வாறு செய்தோம்.
= பெண் என்பவள் ஆணின் இச்சையைத் தீர்க்கத்தானே படைக்கப் பட்டிருக்கிறாள். அவளாகவே இணங்கியிருந்தா விபரீதமான ஏதும் நிகழ்ந்திருக்காது.
= அந்தப் பெண்ணின் ஆடை எங்களைத் தூண்டியது. அவ்வளவு செக்ஸியாவா டிரெஸ் உடுத்துவது. அதுவே எங்களை அழைப்பது போல இருந்துச்சு . அழைப்பை ஏற்றது  தப்பா சார்?
= அவள் வேறு ஒரு பையன்கூட  கொஞ்சும்போது எங்களுக்கும்  இணங்கினா என்ன தப்பு சார்?
= டேக் இட் ஈசி சார், இது என்ன நாட்டில நடக்காத ஒண்ணா? ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறதுதானே!
= நாட்டில பரவலா சினிமாவிலும் டிவியிலும் பூங்காக்களிலும் பொது இடங்களிலும் தினமும் ‘டெமோ’ செய்து காட்டுகிறாங்களே அதையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா? என்ன கேள்வி சார் இது?
= சின்ன வயசுலே இருந்து தேக்கி வெச்ச ஆசைகளை பின்னே எப்போதுதான் நிறைவேற்றுவது?
நாம் அடுத்த கேள்வியைக் கேட்டோம்.
ஏம்பா, ஏன் அடுத்தவன் பெண்ணை நாடுகிறீர்கள்? இந்த வயதில் திருமணம் செய்து விட்டு அமைதியாக அனுபவித்து விட்டுப் போகவேண்டியதுதானே!”
அதற்கும் முண்டியடித்துக் கொண்டு பதில் சொன்னார்கள் அவர்கள்.
= இந்த விலைவாசியில் கல்யாணமா? யோசிக்கவே முடியாதே!
= பொண்ணுக எல்லாம் வேலைக்குப் போறாங்க. படிப்பு ஜாஸ்த்தி. திமிர் ஜாஸ்த்தி. அவங்களுக்கு அடங்கி நடக்க முடியுமா?
= கல்யாணம் பண்ணினால் இந்தக் காலத்திலே அவங்க விசுவாசமா நடப்பங்களா? யாருடைய பிள்ளைக்கோ நான் தந்தையாகணுமா?
= எனக்கு ஆசைதான். எங்க அம்மா அப்பா பண்ணி வைக்கலேன்னா வேறு என்ன சார் வழி?
=எங்க அக்காவுக்கு இன்னும் கலியாணம் ஆகல. அவளுக்கு ஆகணும்னா வரதட்சணைக்கு ஒரு லட்சமாவது வேணும். எங்கே போக?
= எனக்கு ரொம்பநாளா பொண்ணு தேடறாங்க. இப்பெல்லாம் பொண்ணு கிடைக்கறதே ரொம்ப கஷ்டம், அப்படியே கிடைத்தாலும் ஏன் படிப்பு இல்லாட்டி வருமானம் அவங்களுக்கு பத்தமாட்டேங்குது.
= பொண்ணுகளும் எதுக்கு கல்யாணம்னு சொல்லி அலையறாங்க. கல்யாணம் பண்ணினா குழந்தை குட்டின்னு வரும், எதுக்கு ரிஸ்க்? இப்படியே பாய் பிரேண்டோட சுத்திகிட்டே இருந்தாப் போதும்னு நினைக்கறாங்க!
நம் அடுத்த கேள்வி:
உங்களுக்கும் அக்கா, தங்கச்சி எல்லாம் இருக்காங்களே, அவங்க நினைப்பெல்லாம் வரவில்லையா?
= எனக்கு அக்கா தங்கை யாரும் கிடையாது
= எங்க அக்காவுக்கு எப்பவோ கல்யாணம் ஆகி மச்சானோடு இருக்காங்க.
= மத்த பொண்ணுகளைப் பார்க்கும்போது அவங்க நினைப்பெல்லாம் வராது.
நீங்கள் செய்த இந்தக் குற்றத்துக்கு பயங்கரமான தண்டனை காத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?
= என்ன பெரிய தண்டனை சார்? மீறி மீறி போனா ஜெயில்லே தானே போடுவாங்க. எல்லோரும் போயிட்டும் வந்துட்டும்தானே இருக்காங்க!
= எங்களை விட பெரிய தப்பு செய்பவனேல்லாம் வெளிலே தானே இருக்காங்க? நாட்டையே ஆண்டுகிட்டு வர்றாங்க.
= உள்ளே போனா பட்டினி ஏதும் போட மாட்டங்கதானே! வெளிலே கஷ்டப் பட்றதுக்கு உள்ளேயே இருந்துட்டு வரலாம்.
= உள்ளே போனாதான் என்ன? எங்கப்பா காசு கொடுத்து வெளிலே கொண்டு வந்து விடுவாங்க!
= நல்ல ஒரு வக்கீல வெச்சா கேஸ் இல்லாம செய்திடலாம்!
= நம்ம இந்தியாலே எது சார் முடியாது?
= கொஞ்ச நாள் தலை மறைவாகி விட்டால் எங்களைப் பிடிக்க முடியாது.
பலவாறு வந்தன பதில்கள். சொல்லித் தீரவில்லை அவர்களுக்கு!

நமது கழுகுப் படை சம்பவத்துக்கு முன்னதாக அந்தக் கல்லூரி மாணவியையும் அவள் நண்பனையும் பேட்டி கண்டிருந்தது.
நீங்கள் திருமணத் தம்பதிகளா?
= இல்லை நண்பர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம்,
ஏன் திருமணம் செய்து கொள்வது தானே?
= எதற்கு செய்ய வேண்டும்? இப்படியே இருப்பதில் என்ன தவறு கண்டீர்கள்?
விரும்பும்போது சேர்ந்து கொள்வோம். இல்லையென்றால் பிரிந்து விடுவோம்.
 உங்களுக்கு கருத்தரித்தால் என்ன செய்வீர்கள்?- பெண்ணைப் பார்த்துக் கேட்டோம். பையன் முந்திக் கொண்டு பதில் மழை பொழிந்தான்.
= அது அப்போது பார்க்கலாம். இப்போ நாங்க ஹாப்பியா இருக்கோம். அது உங்களுக்கு பிடிக்கலையா? இருக்கவே இருக்கிறது மருத்துவ மனைகள்! முடிந்த அளவு இல்லாமல் ஆக்கிவிடுவோம். மீறி மீறிப் பிறந்தாலும் அரசுத் தொட்டில்கள் இல்லையா? அனாதைக் காப்பகங்கள் இல்லையா?
உங்கள் பெற்றோர் உங்களிடம் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். உங்களுக்காக மாடாய் உழைக்கிறார்கள். அவர்கள் சம்பாத்தியத்தில் நீங்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளலாமா?
= எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் என் பாய் பிரெண்டை அறிமுகப்படுத்தி இருக்கேன். நாங்க இப்படி ஊர்சுற்றுவது அவங்களுக்கு நல்லாவேத் தெரியும். நான் எப்படிப் போனா அவங்களுக்கு என்ன?
பெண்ணின் பெற்றோரையும் நாம் பேட்டி கண்டோம்
உங்கள் பெண் ஒரு பையனோடு சுற்றிக்கொண்டு இருப்பது தெரியுமா?
= தெரியும் சார், அந்தப் பையனைக் கூட்டிகொண்டு வந்திருந்தாள். இவன்தான் என் பாய் பிரெண்ட்ன்னு சொன்னாள். பார்க்க நன்றாகத்தான் இருந்தான்.
 நீங்க ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?
= எப்படி எதிர்த்துப் பேச முடியும்? ஏதாவது கேட்டுவிட்டால் வீட்டுக்கே வரமாட்டாள். எதுக்கு வம்புன்னு ஏதும் கேட்கவில்லை என்றாள் தாய்.
= இந்தக் காலத்திலே இதெல்லாம் சகஜம்தானே. அவளும் மெச்சுர் ஆன பெண். படு கூலாக சொன்னார் தந்தை.
பின்விளைவுகளைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லையா?
= கவலையாத்தான் இருக்கு. நாளைக்கு அவ ஏதாவது குழந்தையைப் பெத்துட்டு வந்தா நாங்கதான் கவனிக்கணும். – தாய்
= எதுக்கு அந்தக் கவலை? முதல்லே குழந்தை உண்டாகாம இருக்கத்தான் பார்ப்பாங்க. அவளுக்கு அந்த அளவுக்கு மெச்சூரிட்டி இல்லையா? மீறிமீறிப் பிறந்தாலும் அனாதைக் காப்பகங்கள் இல்லையா? – தந்தை
இன்னும் பேட்டி காண வேண்டிய நபர்கள் பலர் இருந்தாலும் பேட்டிகளைத் தற்காலிகமாக முடித்துவிட்டு திரும்பியது கழுகுப் படை. இதுவரை பேட்டி கண்டவரையில் எல்லோரும் ஏறக்குறைய கவலை இல்லாமல்தான் இருக்கிறார்கள். யாருக்கும் எந்த குற்ற உணர்வும் கிடையாது. எதையும் தாங்கும் இதயத்தோடுதான் இருக்கிறார்கள். பிறகு நாடு ஏதோ கொந்தளித்துப் போய் இருப்பதாகக் கூறுகிறார்களே!... அதுதான் இன்னும் புரியாமல் இருக்கிறது..... ஒருவேளை அதுவும் அடங்கி விட்டதோ?.... சிறைச்சாலைகளும் நீதிமன்றங்களும் எதற்கு? அரசாங்களும் அலுவலகங்களும் சட்ட சபைகளும் பாராளுமன்றங்களும் எதற்கு?... ஒருவேளை அவற்றை மூடிவிட்டால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஆரம்பித்துவிடுமோ? ஒன்றுமே புரியவில்லை!
எங்கோ பஸ்சில் போகும்போது வழியில் படித்தது ஞாபகம் வந்தது....

செவ்வாய், 15 ஜனவரி, 2013

மாட்டுப்பொங்கல் சிந்தனைகள்....



இவ்வுலகையும் அவற்றில் உள்ள அனைத்தையும் படைத்தவனும் பரிபாலித்து வருபவனும் ஆகிய இறைவன் ஒரே ஒருவனே! நாம் அனுபவித்து வரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறி அவனுக்கு கீழ்படிந்து வாழ நாம் கடமைப்பட்டுள்ளோம். நம் வணக்கத்திற்குத் தகுதியானவனும் நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக் கூடியவனும்   அவன் ஒருவன் மட்டுமே! அவனால்லாத அனைத்துமே அவனது படைப்பினங்களே! அவன் தயவில் வாழ்பவையும் வாழ்ந்து மரித்தவையுமே! இவற்றை எல்லாம் கடவுள் என்பதற்கோ இவற்றை வணங்குவதற்கோ எந்த முகாந்திரமும் கிடையாது! படைத்த இறைவனை நேரடியாக- இடைத் தரகர்கள் இன்றி - வணங்குவதற்கு பதிலாக படைப்பினங்களை வணங்கும் செயல் பல பாவங்களுக்கு வித்திடுகிறது. இறைவனைப் பற்றி மனித உள்ளத்தில் பலவீனமான கருத்தை இது உண்டாக்குவதால் இறையச்சம் அகன்று போகிறது. அதனால் பாவங்கள் மலிகின்றன. இடைத் தரகர்கள்  கடவுளின் பெயரால் மக்களை சுரண்டவும், மூட நம்பிக்கைகளை நாட்டில் பரப்பவும் ஏதுவாகிறது. மனித கற்பனைகளுக்கேற்ப கடவுளை சித்தரிப்பதால் அவற்றை வணங்குவோர் தனித்தனி குழுக்களாகி ஒரே மனித இனம் இணைக்க முடியாதவாறு துண்டு போடப்படுகிறது. ஆனால் இவ்வுலகைப் படைத்த இறைவன் இச்செயலை மன்னிக்க முடியாத பாவம் என்றும் இதற்கு தண்டனை நரகமே என்றும் தனது இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் எச்சரிக்கிறான்.  வருடமெல்லாம் நமக்காக உழைத்த மாடுகளையும் பசுக்களையும் மக்கள் மகிழ்விக்கும் இந்நாளில் அவற்றை நமக்கு வசப்படுத்தித் தந்த இறைவனை மறக்கலாகாது.
மனிதர்களை அவர்கள் சிந்தித்து உணருமாறு இறைவன் கூறும் வசனங்கள் இந்நாளுக்குப் பொருத்தமானவை:
36:71. நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.

36:72. மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.

36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

36:74.எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
36:75. ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாக (மறுமை நாளில்) கொண்டுவரப்படும்.

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

2012 –இல் உலகம் ஏன் அழியவில்லை? – பாகம் ஆறு



  மறுமை நாள் எப்படி சாத்தியமாகும்?
    நபி (ஸல்) காலத்து மக்கள் மறுமை நாளைப்பற்றி ஐயம் கொண்டிருந்தனர். அதுபற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பி வந்தனர்.
    மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகி விடுகிறான். அவனது எலும்புகள் உட்பட அனைத்தும் அழிந்து பின்னர் அவன் எப்படித் திரும்பவும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான்? இதை எங்களால் நம்ப முடியவில்லையே? மறுமை நாள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றது.
    நாங்கள் எலும்புகளாகவும், மக்கிய பொருட்களாகவும் ஆன பின்பு புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன் 17:49, 17:98, 23:82, 37:15, 37:53, 56:47)
    ''நிச்சயமாக நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆனபின்னர் நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப் படுவீர்கள்' என்று அவர் உங்களை எச்சரிக்கிறாரா? நீங்கள் எச்சரிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்!! நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாம் வாழ்ந்து மடிகிறோம். மீண்டும் நாம் எழுப்பப் படப்போகிறவர் அல்லர்' (எனக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 23:35,36,37)
    இறந்தவன் உயிர்பிக்கப்படுவதும் அவன் விசாரிக்கப்படுவதும் சாத்தியமே இல்லை என்று அவர்கள் கருதியதால் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். இந்த கேள்விக்கு மனிதன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணரும்வண்ணம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது.
 ஒருமுறை நபிகளாரிடம் மக்கிப்போன மனித எலும்புகளைக் கொண்டு பொடித்துக் காட்டி அதை ஊதிச் சிதறடித்து இவையெல்லாம் மீண்டும் உயிர்பெற்று வரும் என்றா போதிக்கிறீர் என்று ஏளனமாகக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் இறைவன் கீழ்கண்ட குர்ஆன் வசனங்களை அருளினான்
 36:77-83. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு பபடைப்பையும் அறிந்தவன்'' என்று நபியே கூறுவீராக!
 அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள். வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அனைத்தும் அறிந்தவன்.
ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும். எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
    மக்கிப்போய் ஒன்றுமில்லாமல் ஆன பின் எப்படி உயிர்ப்பிக்கப்பட முடியும்? என்பது உங்கள் கேள்வி என்றால் ஒரு காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுமில்லாமல் இருக்க வில்லையா? இன்ன பொருளாக இருந்தோம். இந்த இடத்தில் இருந்தோம். என்றெல்லாம் கூறமுடியாத நிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் இருந்ததில்லையா?
    ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தான் நீங்கள் ஆரம்பமாகப் படைக்கப்பட்டீர்கள்! ஒன்றுமில்லாமல் இருந்தால் கூட படைக்கப்பட முடியும் என்பதை இது உணர்த்த வில்லையா? ஒன்றுமில்லாத நிலையிலிருந்து முதன் முதலில் படைப்பது ஆச்சரியமானதா? ஒரு முறை படைத்து பின்னர் அழித்து அதையே மறுபடியும் படைப்பது ஆச்சரியமானதா? என்றெல்லாம் சற்று சிதித்தால் இதற்கான விடை காணலாம் என்கிறது திருக்குர்ஆன்.
22: 5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
மீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்
75:3. 4  (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
உங்களைச் சுற்றுமுள்ள அத்தாட்சிகளைப் பாருங்கள்:
நம் புலன்களுக்கு எட்டும் தகவல்களைக் கொண்டு எட்டாத விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என்பது. அவ்வாறு பகுத்தறிவால் ஆராயச் சொல்கிறான் இறைவன்
41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.  
மரணத்தையும் உயிர்தெழுதலையும்  ஒவ்வொருநாளும் அனுபவிக்கிறீர்கள்!
தினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது? உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம்.  திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம். இந்த உண்மையைப் பின்வரும் வசனம் மூலமாக நினைவூட்டுகிறான் இறைவன்
39:42     .அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன.   
 இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டால், அந்த இறைவன் எல்லாவிதமான பலவீனங்களிலிருந்தும் தூயவன் என்பதையும் அறிந்து கொண்டால், அவனது அதிகாரத்திற்கும், ஆற்றலுக்கும் எந்த எல்லையும் கிடையாது என்பதை விளங்கிக் கொண்டால், தனது வல்லமையை உலகறியச் செய்யும் வகையில் அவன் படைத்து வைத்திருக்கின்ற அதியசயங்களைப் பற்றி சிந்தித்தால் 'எப்படி உயிர்ப்பிக்க முடியும்' என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள். எப்படி என்பதைச் சிந்திப்பதை விட இதைச் செய்யக் கூடியவன் எத்தகையவன் என்பதை சிந்தியுங்கள்! அவ்வாறு சிந்தித்தால் மனிதன் மண்ணோடு மண்ணாக மக்கி ஒன்றுமற்றுப் போனாலும் அந்த வல்லவனால் மீண்டும் அவனை உருவாக்க முடியும் என்பதை ஐயமற உணர்வீர்கள் என்கிறது திருக்குர்ஆன்!