இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 ஜூலை, 2014

ஊடகங்களின் இரட்டை நிலை ஏன்?

= லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஹிட்லரும் ஹிரோஷிமா நாகசாகி மீது அணுகுண்டு வீசி கோடிக்கணக்கான மக்களை அழித்தும் அங்கஹீனர்களாக்கவும் செய்த அமெரிக்காவும்.....
= போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலும் அன்று கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்....
= நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc..
= FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம் அல்லாதவர்களே
இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையையோ மதத்தையோ நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.

ஆனால் தங்கள் சொந்த நாட்டை ஆக்கிரமித்து மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடும் ஆப்கானிய, ஈராக்கிய மக்களையும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் பாலஸ்தீன மக்களையும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் கூறிவருவதைக் காண்கிறீர்கள்.
 தீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது' என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை? இவ்வாறு உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்?
அப்படியொரு வெறுப்பு ஏன் உலகெங்கும் உண்டாக்கப்படுகிறது?
அதற்கு முக்கியமான காரணம் உள்ளது.... அது என்ன?
அநியாயங்களுக்கு எதிரி இஸ்லாம்!
இன, நிற, மொழி, நாடு, போன்ற வரம்புகளைக் கடந்து இஸ்லாம் மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் படுவதால் உலகெங்கும் இக்கொள்கை அதிவேகமாக பரவுகிறது என்பதோடு அதர்மத்துக்கும் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரான இஸ்லாத்தின் உறுதியான நிலைபாடே இதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள இஸ்லாம் என்ற இந்த சீர்திருத்தக் கொள்கையின் அடிப்படைகளை அறிந்தாக வேண்டும்.

இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல்
என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது
இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம்
மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம்
முன்வைக்கும் தத்துவமாகும்.
அதாவது இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு
கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப்
பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது.
எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச்
செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம்
அல்லது அதர்மம் என்பது. யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு
அதன்படி வாழ்கிறாரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில்
முஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.

இக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி
வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ
இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும்
அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு
அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கொட்பாட்டைத்தான்
மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இன்று இறுதி
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில்
மறு அறிமுகம் செய்யப் பட்டது.

=  யாரெல்லாம் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு - அதாவது
நன்மைகளைச் செய்து தீமைகளில் இருந்து விலகி வாழ்கின்றார்களோ
அவர்கள் மறுமை வாழ்வில் சொர்க்கத்தை அடைகிறார்கள். யார்
இறைவனையும் அவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டையும்
உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள்
நரகத்தை அடைகிறார்கள்.

= இக்கோட்பாட்டின் முக்கியமான அடிப்படை என்னவென்றால்
இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் மட்டுமே
வணக்கத்திற்கு உரியவன். அவனால்லாத எவரையும் அது
மிகப்பெரிய மனிதர்கள் ஆனாலும் சரி, அரசர்கள் ஆனாலும் சரி,
ஆன்மீகத் தலைவர்கள் அனாலும் சரி அவர்களைக் கடவுள் என்று
சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. இறந்துபோன
மனிதர்களின் சமாதிகளையோ அல்லது உருவச்சிலைகளையோ
கற்களையோ மரங்களையோ மனிதன் வணங்கக் கூடாது. இறைவனை
நேரடியாக எந்த இடைத் தரகர்களும் இன்றி நேரடியாக
வணங்கவேண்டும்.

=  இக்கோட்பாட்டின் இன்னொரு அடிப்படை மனிதர்கள் அனைவரும்
ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப்
பெருகியவர்களே. மனிதர்கள் அனைவரும் - அவர்கள் எந்த
மதத்தவர் ஆனாலும் எந்த நாட்டைச்சேர்ந்தவர்கள் ஆனாலும், எந்த
மொழியைப் பேசினாலும், எந்த நிறத்தவர் ஆனாலும் - ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே. எனவே அனைவரும்
சமமே! அவர்களுக்கிடையே நாடு, இனம், மொழி, குலம், ஜாதி
போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கக்
கூடாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் உயர முடியும் என்கிறது
இஸ்லாம். இக்கொட்பாட்டின்படி இதனை ஏற்றுக்கொண்டவர்கள்
இவ்வுலகில் இறைநம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல்
நன்மையை செய்யவும் ஏவவும் வேண்டும் தீமைகளிலிருந்து
விலகியிருக்கவும் வேண்டும், தீமைகளைக் கண்டால் எவ்வாறு
இயலுமோ அவ்வாறெல்லாம் தடுக்கவும் வேண்டும்.

இப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏன் இஸ்லாம் என்ற
இக்கொள்கை எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்று!

=  தர்மம் பரவும்போது அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள்
வெகுண்டெழுகிறார்கள்.

= இறைவனை நேரடியாக அணுக முடியும் என்று மக்கள்
உணரும்போது இடைத்தரகர்களை அது அமைதி இழக்கச் செய்கிறது!
மூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக்
கொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு
இக்கொள்கை பரவுவது பிடிக்காது!

=  நிறத்தின் இனத்தின் மொழியின் ஜாதியின் மேன்மைகளைக் கூறி
மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து
வாழ்வோருக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்க வாய்ப்பில்லை.

= மனிதனை இக்கொள்கை சுயமரியாதை உணர்வோடு வாழத்
தூண்டுவதால் அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க
சக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள்
நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை
போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.

இவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு
இக்கொள்கை வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. எனவேதான்
அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக்
கொண்டு செயல்படுகிறார்கள்.

ஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக
மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும்
தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:
'
தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)
அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால்
இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை
பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)

 
ஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள
வேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ
அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக உலகெங்கும் தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்டி அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள். அதைத்தான் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இம்மார்க்கத்தின் வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

வெள்ளி, 11 ஜூலை, 2014

ரமலான் - இறைவனுக்கு நன்றிகூறும் மாதம்!

Image result for ramadan
இதோ மீண்டும் புதுப்பொலிவோடு ஒரு ரமலான் மாதம்! இவ்வுலகில் இறைவனை நம்புவோருக்கு இது ஆன்மீக வசந்த காலம்! உள்ளங்களில் குதூகலமூட்டி அவர்களின் நம்பிக்கைக்குப் புத்துணர்வூட்டிச் செல்கிறது இந்த இனிய மாதம்!
உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய நான்கில் ஒருவர் இம்மாதம் முழுக்க பகலில் உண்ணா நோன்பு இருந்து புலன்களைக் கட்டுப்படுத்தி கொண்டு கழிப்பதை அறிவீர்கள். அத்துடன் தொழுகை, தானதர்மங்கள் இவற்றை கூடுதல் சிரத்தையுடன் அவர்கள் நிறைவேற்றுவதையும் காண்கிறீர்கள். மாதம் நிறைவடைவதை ‘ஈகைத் திருநாள்’ என்ற பெயரோடு அவர்கள் கொண்டாடுவதையும் ஒவ்வொரு வருடமும் காண்கிறீர்கள். இந்த ரமலான் மாதத்திற்கு அப்படியென்ன சிறப்பு?
ஆம், அதற்கு ஒரு மிகச்சிறந்த காரணம் இருக்கிறது! அது என்ன? ... இந்த மாதத்தில்தான் மனிதகுலம் எது நன்மை எது தீமை என்று தெளிவாகப்  பிரித்தரிவிக்கக் கூடியதும் முழுமையான வாழ்வியல் வழிகாட்டியுமான  திருக்குர்ஆனை பரிசாகப் பெற்றது. ஆம், இந்த மாதத்தில்தான் இவ்வேத வரிகள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மூலமாக பூமியில் வாழும் மக்களை நோக்கி வரத் துவங்கின. திருமறைக் குர்ஆனின் வெளிப்பாட்டின் துவக்கத்தைக் கொண்டாடும் விதமாகவே இம்மாதம் உலகெங்கும் கண்ணியப்படுத்தப் படுகிறது. உயிரோடிருக்கும்போது இம்மாதத்தை அடையும் ஒவ்வொருவர் மீதும் பகலில் விரதமிருப்பது படைத்த இறைவனால் கடமையாக்கப் பட்டுள்ளது.  அந்தக் கட்டளையைத் தாங்கி வரும் வசனம் இதோ:
ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது, ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும், ......,, (திருக்குர்ஆன் 2:185)
திருக்குர்ஆன் எதற்கு வழிகாட்டுகிறது?
மனிதன் அடிக்கடி மறந்துவிடும் மூன்று முக்கியமான உண்மைகளை திருக்குர்ஆன் நினைவூட்டுகிறது. இவை ஒன்றும் புதிதல்ல, மாறாக திருக்குர்ஆனுக்கு முன்னதாக இறைவனால் அனுப்பப்பட்ட இறை வேதங்களும் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களும் தத்தமது மக்களுக்கு போதித்தவையே அவை:
1. ஒன்றே குலம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.  
''மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ........நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 4:1)
 (அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குரிய ஒரே இறைவன்என்று பொருள்)
2. ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவனது தன்மைகளை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் - அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.”  (திருக்குர்ஆன் 112: 1-4)
படைத்த இறைவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. அவனுக்கு பதிலாக படைப்பினங்களை  வணங்குவதோ அவற்றைக் கடவுள் என்று அழைப்பதோ மிகப்பெரிய பாவமாகும். இச்செயல் இறைவனைச்  சிறுமைப்படுத்துவதோடு உண்மையான இறையச்சத்தை மக்கள் மனங்களில் இருந்து களைந்து விடுவதால் சமூகத்தில் பாவங்கள் பெருகக் காரணமாகிறது. மேலும் மனிதகுலத்தைக் கூறுபோட்டுப் பிளவுபடுத்துவதும் ஆகும் என்பதாலும் இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாததாகும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
3. வினைகளுக்கு விசாரணையும் மறுமை வாழ்க்கையும்:    இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்படும். மீணடும் அனைத்து மனிதர்களும் அவர்கள் தம்  வாழ்நாளில் செய்த வினைகளுக்கு கூலிகொடுக்கப் படுவதற்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். இவ்வுலகில் இறைகட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த நல்லோருக்கு சொர்க்கமும் கீழ்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தீயோருக்கு நரகமும் அன்று விதிக்கப் படும்.
'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.' (திருக்குர்ஆன் 3:185)     
  மேற்கண்ட முக்கிய போதனைகள் போக திருக்குர்ஆன் மனித வாழ்க்கை சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நம்மைப் படைத்தவனே தரும் மிக மிகப் பக்குவமான தீர்வுகளை தாங்கி நிற்கிறது. தனி நபர் ஒழுக்கம், ஆண்-பெண் பிரச்சினைகள், இல்லறம், திருமணம், குழந்தை வளர்ப்பு, தூய்மை, உடல் நலம் தொடங்கி வியாபாரம் பொருளாதாரம், கொடுக்கல்-வாங்கல், பாகப்பிரிவினை, குற்றவியல், நீதித்துறை அரசியல் என மனிதனின் தனி நபர் வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் அழகிய  தீரவுகளை வழங்குகிறது  திருக்குர்ஆன்!
நன்மை – தீமைகளை ஏன்  பிரித்தறிய வேண்டும்?
நாம் ஒரு சமூகமாக இணக்கத்தோடு வாழ்வதற்கு நல்லொழுக்க வரைமுறைகளும் அனைவரையும் கட்டுப்படுத்தும் சட்டதிட்டங்களும் இன்றியமையாததாகும். நம்மில் பலரும் பல மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவர்களாக உள்ளோம். ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பாவபுண்ணியங்களை எவ்வாறு தீர்மானிப்பது? யார் தீர்மானிப்பது? .... இக்குழப்பத்தில் இருந்து மனிதனை விடுவிக்க இவ்வுலகின் உரிமையாளனே வழங்கிய  நன்மை தீமைகளை தெளிவாக்கும் அளவுகோல்தான் திருக்குர்ஆன்!
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவனே மனிதனையும் அவனது தேவைகளையும் அவன் பூமியில் செய்யவேண்டிய கடமைகளையும் அவனது உரிமைகளையும் அதிபக்குவமாக அறிந்தவன் என்பதாலும் அவனே மறுமையில் நம் பாவ புண்ணியங்களை விசாரிக்க உள்ளான் என்பதாலும்  அவன் வழங்கும் அளவுகோலே மனிதகுலம் பின்பற்றுவதற்கு ஏற்றது. அவ்வாறு பின்பற்றினால் அதன்மூலம் அவர்களது இம்மை வாழ்வும் அமைதி மிக்கதாக அமையும். அவர்களது மறுமை வாழ்வும் சொர்க்கத்தில் அமையும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
இம்மாதத்தில் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டுள்ளது?
நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக  இம்மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
விசுவாசங் கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது, (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2: 183)
இறைவனுக்கு பயந்து, அவன் ஏவியவைகளை செய்தும், தடை செய்தவைகளை
தவிர்த்தும் நடப்பதுதான் இறையச்சமாகும். அதற்கு உரிய  பயிற்சியை நோன்பு கொடுக்கின்றது. பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளை கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (ஆதாரம்: நபிமொழி நூல் புகாரி)
ஈகைத் திருநாள் என்பது என்ன?

 இம்மாதத்தின் நிறைவை கொண்டாடும் நாளே ‘ஈதுல் பித்ர்’ அதாவது ஈகைத் திருநாள். அந்நாளை ஏழைகளும் நலிந்தோரும் உட்பட அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் உண்ணும் உணவு தானியங்களை தன்னைச் சூழவுள்ள ஏழைகளை கண்டறிந்து கட்டாயமாக வழங்கிவிட்டே வசதி உள்ளோர் கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்துகிறது இஸ்லாம்! இதனாலேயே இந்நாள் ஈகைத் திருநாள் என்று அறியப்படுகிறது.

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

புதன், 2 ஜூலை, 2014

பெண் இனத்தின் பாதுகாப்பிற்கே இஸ்லாம்

மனித குலத்தை ஆண் பெண் என்ற அடிப்படையில் நேர் எதிரான குணங்களோடு படைத்த இறைவனே அவர்கள் இரு சாராரும் இணக்கத்தோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அவனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் வழங்கி வந்துள்ளான். அவர்களுக்கான உரிமைகளையும் கடமைகளையும் நிர்ணயித்து அவற்றை செவ்வனே நிறைவேற்றி வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியைக் காணலாம், மறுமையிலும் அமைதிப் பூங்காவான சொர்க்கத்தில் நுழையலாம் என்று காலாகாலமாக அறிவுறுத்தி வந்துள்ளான். அவனது தூதர்களும் நேர்மையாக ஆன்மீகத்தோடு இல்லறத்தை இனிதே பேணி முன்னுதாரணமாக வாழ்ந்தும் காட்டிச் சென்றார்கள். 
ஆனால் ஷைத்தானின் தூண்டுதலின் காரணமாக அந்த தூதர்களின் வழிகாட்டுதல்கள் பிற்காலங்களில் புறக்கணிக்கப்பட்டன, பிற்காலங்களில் அந்த வழிகாட்டுதல்களைத் திரித்து கடவுளின் பெயராலேயே பற்பல மூடநம்பிக்கைகள் மக்களிடையே புகுத்தப்பட்டன. ஒருபுறம் துறவறமும் மறுபுறம் விபச்சாரமும் ஆன்மீகத்தின் பெயராலேயே புகுந்தன. இறைவன் பெண்ணுக்கு வழங்கிய உரிமைகளை மறுப்பதோடு மட்டுமல்லாமல் அவளை ஆன்மீகத்தின் பெயராலே அவள் மீது ஆதிக்கம் செலுத்தி அனுபவித்தனர்.
1)    பெண் பிறந்தாலே இழிவென்று கூறி அவளை கருவிலே கொன்றனர். மீறிப் பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றியும் அரிசிமணியை வாயில் நிரப்பியும் இன்னும் கொடூரமாக கொன்றனர்.
2)    அவளுக்கு கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை, சம்பாதிக்கும் உரிமை, சொத்துரிமை போன்றவை மறுக்கப்பட்டன.
3)    திருமணத்தில் பெண்ணின் சம்மதம் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவளது விருப்பம் ஒரு பொருட்டாக்கப் படவில்லை.
4)    திருமணம் என்ற தன்னை அற்பணிக்கும் ஒப்பந்தத்திலும் கூட அநீதிக்கு உள்ளானாள். வரதட்சணைக் கொடுமை காரணமாக நீண்ட நாள் கன்னியாகவே வாழவும் அவ்வாறே மரணிக்கவும் நேர்ந்தது அவளுக்கு!
5)    கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கட்டியவனால் கொடுமைப்படுத்தப்பட்டாலும் அவனோடு வாழ கட்டாயப்படுத்தப்பட்டாள். மணவிடுதலை மறுக்கப்பட்டது.
6)    அவள் பெற்றது பெண்ணென்றால் அதற்கும் அவளே சபிக்கப்பட்டாள்!
7)    மாதவிடாய் காலங்களில் ஒரு சிலரால் தீட்டு என்று ஒதுக்கி வைக்கப் பட்டாள். வேறு சிலரால் அந்த உபாதைக்கு நடுவிலும்
8)    கணவன் அல்லது தந்தையரின் சூதாட்டங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அவளது கற்பு விலைபேசப்பட்டது.
9)    கணவன் இறந்துபோனால் உடன்கட்டை ஏறும் நிர்பந்தத்துக்கும் ஆளானாள்.
10) விதவை மறுமணம் என்பது மறுக்கப்பட்டது, அவளைக் காண்பது கூட அபசகுனம் என்று அவமானப்படுத்தப்பட்டாள்.
11) முதுமை அடைந்துவிட்டால் அவளது சொந்த மக்களாலேயே அடிமையாக நடத்தப்பட்டாள் அல்லது புறக்கணிக்கப்பட்டாள். இன்னும் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டாள் அல்லது கொலையும் செய்யப்பட்டாள்.
12) பெண்ணுக்கு ஆன்மா என்பது உண்டா என்று சந்தேகம் கிளப்பி அவள் அவமதிக்கப்பட்டாள்.
13) முதல் பாவத்துக்கு பெண்ணே மூலகாரணம் என்று தூற்றப்பட்டாள்.
14) முதலாளித்துவத்திற்கு தன்னுடைய கடைச் சரக்கை விற்க அவள்  கவர்ச்சிப் பொருளாக மட்டுமல்ல கடைச் சரக்காகவும் மாற்றப் பட்டாள்.
15) இந்த சூழ்ச்சிக்கு ஒத்துழைக்காவிட்டால் அவள் பத்தாம் பசலி என அழைக்கப்பட்டாள். அவ்வாறு கடைச்சரக்காக, காட்சிப் பொருளாக மாறாவிட்டால் அவளது திறமைகள், பட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன.
இன்னும் இவை போன்ற இழிவுகளையும் அவமானங்களையும் கொடுமைகளையும் எல்லாம் பெண்ணினம் அனுபவிக்கக் காரணம் என்ன?
பாதிக்கப்படும் பெண் இனத்தின் பலவீனமும் அறியாமையும் ஆதிக்கம் செலுத்தும் ஆண்களின் சுயநலமும் மூர்க்கத்தனமும் காரணங்களாக இருந்தாலும் இந்நிலைமைக்கு முக்கியமான காரணம் இறைவன் வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை மனிதன் புறக்கணித்து தன் மனம்போன போக்கில் வாழ முற்பட்டதனால்தான்.
ஒருபுறம் முன்னோரின் வழக்கங்களை கண்மூடித்தனமாக சரிகண்டு இறைவன் அனுப்பிய வழிகாட்டுதல்களை மக்கள் புறக்கணித்தும் ஏளனம் செய்தும் வந்தனர். மறுபுறம் ஆதிக்க சக்திகளும் இடைததரகர்களும் சேர்ந்துகொண்டு பாமரர்களையும் பெண்களையும் உண்மையான இறைவழிகாட்டுதல்கள் சென்றடைய விடாமல் சுயநல நோக்கோடு செயல்பட்டனர்.
இதை சீர்திருத்த வழியுண்டா?
உண்டு, அந்த வழியும் எளிதானது..... ஏற்கனவே கூறப்பட்டவாறு இறைவனின் வழிகாட்டுதல்களின் பக்கம் மீள்வதே அது! இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் அவன் மனிதனுக்காக தயாரித்து வழங்கும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று அதன்படி ஒழுகி வாழ்வதே பெண்ணுக்கு மட்டுமல்ல அதுவே ஆணுக்கும் அனைத்து சமூகத்துக்கும் வாழ்வளிக்கும் வழியாகும்.
தனிமனிதர்களும் குடும்பங்களும் சமூகமும் அமைதியாக வாழ அங்கு ஆண் பெண் உறவுகளும் அவர்களின் உரிமைகளும் கடமைகளும் மிக நேர்த்தியான முறையில் வரையறுக்கப்பட்டு அவர்களுக்கு போதிக்கப் படவேண்டும். அவற்றை பேணுவதற்கு அவர்களுக்கு ஊக்குவித்தலும் உந்துதலும் பேணாவிட்டால் அல்லது மற்றவர்களின் உரிமைகள் மீறப்பட்டால் ஏற்படும் விபரீதங்கள் மற்றும் தண்டனைகள் பற்றிய அச்சமும் சமூகத்தில் ஏற்பட்டால் மட்டுமே சமூகத்தின் அங்கத்தினர்களுக்கு இடையே பொறுப்புணர்வு உண்டாகும்.

ஒவ்வொரு மனிதனும் தன் வினைகளுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வை மக்களிடையே வளர்ப்பதன் மூலமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள உரிமைகளையும் கடமைகளையும் நேர்த்தியாக வரையறுத்து அவற்றை வாழ்வியல் சட்டமாக்குவதன் மூலமாகவும் மேலே கூறப்பட்ட பெண்ணுரிமை மீறல்களை தடுத்து இம்மைக்கும் மறுமைக்கும் அமைதி தரும் வாழ்வைக் காண வழி வகுக்கிறது இஸ்லாம். ஆம், அந்த அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்! 

http://quranmalar.blogspot.com/2014/06/blog-post_19.html