முக்கியமான சில உண்மைகளைப் பற்றி சிந்தித்தாலே பாமரர்களும் இதைப் புரிந்துகொள்ள முடியும்:
= நாத்திகக் கொள்கையின் அடிப்படையாக கூறப்படுவது பரிணாமக்கொள்கை.
ஒரு உயிரினத்தில் இருந்து இன்னொரு உயிரினம் உருவானது என்பது
அறிவியல் உண்மை அல்ல. இதுவரையில் அறிவியலால் எந்த வகையிலும் நிரூபிக்கப் படாதது. எலேக்ட்ரோன் மைக்ரோஸ்கோப்புகள்
கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் உயிரினங்களின் வெளித்தோற்றத்தையும் வெளிப்படையாக
தோன்றும் குணாதிசயங்களையும் அடிப்படையாகக் கொண்டு “அறிவியலாளர்” டார்வின்
உருவாக்கிய ஒரு ஊக சித்தாந்தம் அது. கடவுள் மறுப்பாளர்களால் அதற்கு அறிவியல் சாயம்
பூசப்பட்டு தூக்கி நிறுத்தப்படுகிறது. பாடப்புத்தகங்களில் திணிக்கப்படுகிறது.
= ஜீவராசிகளின் உடலமைப்பில் - உதாரணமாக ஜீரணம், சுவாசம், இரத்த
ஓட்டம், நரம்பு மண்டலம் போன்றவற்றுக்கான கட்டமைப்புகள் - ஆரம்பம் முதலே பக்குவமான
முறையில் உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டு இயங்கினால் மட்டுமே உயிர்வாழ்தல் என்பது
சாத்தியம். இவற்றில் ஏதேனும் சிறிய அளவு குறைபாடும் உயிரைப் போக்கிவிடும். அந்த
வகையில் மில்லியன் கணக்கில் வருடங்கள் காத்திருந்து ஒவ்வொரு உறுப்பாக பரிணமித்தது
என்பதும் ஒரு உயிரினத்தில் இருந்து இன்னொரு உயிரினம் உருவானது என்பதும் அப்பட்டமான
கற்பனைக் கதைகள். அதாவது ஒரு அதிபக்குவமான படைப்பாளனும் பரிபாலகனும் இல்லாமல்
உயிர்கள் உருவாவதும் தொடர்ந்து அவை உயிர்வாழ்வதும் அறவே சாத்தியமில்லை என்பது
தெளிவு!
= டிஎன்ஏ எனப்படும் உயிரினங்களின் க்ரோமோஸோம்களில் பதியப்பட்ட மரபணு
தகவல்கள் அதிநுட்பம் வாய்ந்தவையும் அதிதீவிர சிக்கல்கள் நிறைந்தவையும் ஆகும்.
இவற்றைப் பதிவது என்பது அதிநுட்பமும்
நுண்ணறிவும் கொண்ட படைப்பாளன் இன்றி சாத்தியமில்லை என்பதும் தெளிவு!
= (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! அவன்
எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; அவைகளை ஒழுங்குபடுத்தினான். மேலும்
(படைப்பினங்களுக்குரிய) விதியை நிர்ணயித்தான்; பிறகு வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)
நாத்திகத்தால் சமூகத்திற்கு ஏதேனும் பயனுண்டா?
நாத்திகர்களைப் பற்றிய மறுக்கப்படாத உண்மைகள் இவை: .
1. நாத்திகர்களிடம் ஒரு உறுதியான அடிப்படையோ ஒருங்கிணைந்த
கொள்கையோ அறவே கிடையாது. காரணம் ஒவ்வொரு தனிமனிதனும் என்ன நினைக்கிறானோ அதுதான்
நாத்திகத்தின் அடிப்படை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சுத்தமான
தான்தோன்றித்தனம்!
2. தான்தோன்றித்தனம் ஒருபோதும் தனிநபர்
நல்லோழுக்கத்திற்கான அடிப்படையோ சித்தாந்தமோ தரமுடியாது என்பது தெளிவு. மனிதன் ஏன்
ஒழுக்கம் பேணவேண்டும் என்ற கேள்விக்கு பதில் கிடையாது.
3. இனம், மொழி, நிறம், இடம் ஆகியவற்றால் இயல்பாகவே பிரிந்து கிடக்கும் மக்களை
இணைக்கும்படியான எந்த தத்துவமும் கிடையாது. எனவே ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு
என்று சொல்லி தியரி பேசமுடியுமே தவிர நடைமுறைத் தீர்வுகளை நாத்திகவாதிகள்
தரமுடியாது.
4. சரி எது தவறு எது நீதி எது அநீதி எது என்று வரையறுக்க
ஒரு அளவுகோல் (criterion)
கிடையாது.
எனவே அனைவருக்கும் பொதுவான தீர்வுகளோ சட்டங்களோ நாத்திகம் தரமுடியாது.
5. சமூக பிரச்சினைகளுக்கு நடைமுறை சாத்தியமான தீர்வுகள்
கிடையாது. உதாரணமாக பெண்சிசுக்கொலை, வரதட்சணை, சாதிக் கொடுமைகளை எந்த அளவுக்கு நடைமுறையில் தீர்த்து
உள்ளார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காது.
6. வாழ்கையின் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு
நாத்திகர்களிடம் பதில் கிடைக்காது. நோக்கம் இல்லையென்றால் கஷ்டப்பட்டு வாழ்வதற்கு
பதிலாக ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது? அதில் தவறு என்ன? என்ற கேள்வி அவர்களை
டென்ஷன் ஆக்கிவிடும்.
7. இந்த வாழ்க்கைக்குப் பிறகு மறுமை வாழ்க்கை என்று
எதுவுமில்லை என்ற நம்பிக்கையின் காரணமாக இந்த வாழ்க்கையை எப்படியாவது
அனுபவித்துவிட வேண்டும் என்ற சுயநல எண்ணமே இவர்களிடம் மிகைத்திருக்கும். ஆதிக்க
சக்திகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக இவர்கள் போராட்டங்களை மேற்கொண்டாலும்
இவர்களின் தலைவர்கள் எளிதில் விலைபோக வாய்ப்பு உண்டு.
= எவர்கள் தாங்களும் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டு, மற்றவர்களையும்
இறைவனின் வழியில் செல்ல விடாமல் தடுக்கின்றார்களோ அவர்களுக்கு நாம் வேதனைக்கு மேல்
வேதனையை அளிப்போம் உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த குழப்பங்களுக்குப் பகரமாக!
(திருக்குர்ஆன் 16:88)
====================