இயேசுவிடமிருந்து முஸ்லிம்கள் கற்கும் பாடங்கள் - 2
உள்ளத் தூய்மையோடும் உயர்ந்த நோக்கத்திற்காகவும் இறைவனிடம் செய்யும்
முறையீடுகள் (பிரார்த்தனைகள்) எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இயேசுவின்
பாட்டியின் மூலம் நாம் கற்றுக்கொண்டோம்.
3:37 அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்.
அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா
ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும்
அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், ''மர்யமே! இ(வ்வுணவான)து
உனக்கு எங்கிருந்து வந்தது?'' என்று அவர் கேட்டார். ''இது அல்லாஹ்விடமிருந்து
கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்''
என்று அவள்(பதில்)
கூறினாள்
மேற்படி வசனத்தில் இருந்து குழந்தையை –அதாவது மரியாளை – வளர்க்கும் பொறுப்பை ஒரு இறைத்தூதரே ஏற்றுக் கொள்ளும்படி
செய்கிறான் கருணையாளன் இறைவன் என்பதையும் அறிகிறோம். அது மட்டுமா ஒரு
பிரார்த்தனையின் விளைவாக மேலும் என்ன நடக்கிறது பாருங்கள். வரர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா
அவர்கள் ஏற்றாலும் மரியாளுக்கு உணவளிக்கும் பொறுப்பை வல்ல இறைவனே முன்வந்து
ஏற்றுக் கொள்கிறான்.
ஜகரிய்யா பொறுப்புதாரியாக்கப்பட்டார் என்பதிலிருந்து மரியாளின் தாயார் மரியாளை
பெற்றவுடன் மரணித்து இருக்கக் கூடும் என்பதை யூகிக்கலாம். தாயாரின் மறைவுக்கு பிறகு
அவரை வளர்ப்பது யார் என்ற பிரச்சனையும் அவர் குறித்த சர்ச்சையும் கிளம்பியதாக
இறைவன் 3:44 வசனத்தில் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர் தனித்துவம் வாய்ந்த பெண்ணாக
வளர்ந்துள்ளார் என்பதை விளங்கலாம்.
பிற்காலத்தில் இறைவனால் ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்கு அவரை மனோவியல்
ரீதியில் தயார் படுத்துவதற்காக அவரை வளர்க்கும் பொறுப்பை இறைவன் இறைத்தூதர்
ஜகரிய்யா அவர்களிடம் ஒப்படைக்கிறான். மரியாளை பொறுப்பேற்று வளர்க்கும் போது
ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. வயதானாலும் குழந்தைக்காக ஏங்கும் இதயம்
மட்டும் அவர்களுக்கு ஓயவில்லை. மரியாளை குழந்தைக்கு குழந்தையாக வளர்த்து வணக்க
வழிபாட்டின் மூலம் அவர்களை பக்குவப்படுத்திக் கொண்டிக்கும் வேளையில் தான்
மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் வழங்கப்படுவதை ஜகரிய்யா அவர்கள்
பார்க்கிறார்கள்.
இது எப்படி உனக்கு கிடைத்தது? என்ற கேள்விக்கு கணக்கின்றி கொடுக்கும் ஆற்றல் உள்ள இறைவன் தான் இதை எனக்கு
கொடுக்கிறான் என்று மரியாளிடமிருந்து பதில் வருகிறது. இதுதான் மனிதகுலம்
மரியாளிடமிருந்து பெரும் மிகப்பெரிய பாடமாகும். எல்லாப் படைப்பினங்களுக்கும்
உணவளிப்பவன் இறைவனே என்ற நம்பிக்கையும்
இயற்கை விதிகளைக் கடந்து தான் நாடுவதை நிறைவேற்றக் கூடியவனே இறைவன் என்ற
நம்பிகையும் பொதுவாக சாதாரண மனிதர்களால்
உள்வாங்கிக்கொள்ள முடியாதவை. இதை மரியாள் (அலை) மூலம் மனித குலத்துக்கு
போதிக்கிறான் வல்ல இறைவன். ஏன், ஒரு பெரும் இறைத்தூதர் கூட இதிலிருந்தல்லவா பாடம் பெறுகிறார்கள்!
எதற்கும் ஆற்றல் உள்ள இறைவன் தனக்கு ஏன் ஒரு வாரிசை - மகனை கொடுக்க மாட்டான்
என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், 'இறைவா உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையை கொடுத்தருள்'
என்று
பிரார்த்திக்கிறார்கள்.
இறைவன் அதை ஒப்புக் கொள்கிறான்.
இறைவன் ஒப்புக் கொண்டாலும் ஜகரிய்யா அவர்களால் இதை நம்ப முடியவில்லை ஏனெனில் அவர்
தள்ளாத முதுமையை அடைந்து விட்டார்கள். அவர்களின் மனைவியும் குழந்தைப்பேறைப் பெறும்
மாதவிடாய் தகுதிகளையெல்லாம் இழந்து மலடு தட்டி விடுகிறார்கள். குழந்தை
உருவாவதற்கான இயற்கை விதிகள் கடந்து போயிருந்தாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம்
கிடைக்கின்றது. யஹ்யா என்ற மகனை 'இறைத்தூதரை'ப் பெற்று எடுக்கிறார்கள்.